Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, March 2, 2024
Please specify the group
Home > Featured > கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

print
லாம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. தேசமே கண்ணீரில் மூழ்கியிருக்கும்போது நாம் மட்டும் எம்மாத்திரம்? எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா? என்ற நிலையிலிருந்த ஒருவர், ‘எப்படி வாழவேண்டும்?’ என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா? இவரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

இது சில வாரங்களுக்கு முன்பு ‘ஆனந்த விகடன்’ இதழில் வந்தது தான். ஏற்கனவே இதை ஒரு தனிப் பதிவாக தருகிறோம் என்று சொல்லியிருந்தோம். கலாம் அவர்கள் நம் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த சூழலில், இந்த பதிவு பொருத்தமாக இருக்கும்.

வைரத்தை யாரேனும் தவறவிடுவார்களா? இந்தப் பதிவின் ஒவ்வொரு வரியும் வைர வரிகள். மிஸ் செய்யாமல் படியுங்கள். வழக்கமான பதிவுகளோடு விரைவில் சந்திப்போம்.

‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது. ஆனால், உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’

‘ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா… எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!’

Nick 3இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை.

1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி… ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடினாள். நர்ஸ்கள் அவளிடம் விஷயத்தைத் தயக்கத்துடன் சொல்ல, கணவர் போரிஸும் கண்ணீருடன் நிற்க, வெடித்து அழ ஆரம்பித்தாள் துஸிகா. நர்ஸ் ஒருத்தி, துணி சுற்றப்பட்ட குழந்தையை துஸிகாவின் அருகில் கொண்டுவந்து வைத்தாள். குழந்தை அழுதது. துஸிகா கதறினாள். ‘வேண்டாம். இவனை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். நான் இவனைப் பார்க்கவே மாட்டேன்.’

Tetra-Amelia Syndrome –  புரியும்படி சொல்வது என்றால், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தை. சில சமயங்களில் நுரையீரலோ, இதயமோ, வேறு சில பாகங்களோகூட முழு வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். சில கோடி குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி அரிதாகப் பிறக்கும். அப்படி பிறந்தவன்தான் நிக். பிறக்கும்போதே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லை. துஸிகாவும் ஒரு நர்ஸ்தான். 100 பிரசவங்களுக்கு மேல் பார்த்தவர். கர்ப்பத்தின்போது இருமுறை ஸ்கேன் பார்த்தபோதுகூட குறையொன்றும் இல்லை என்றுதான் மருத்துவர்கள் சொன்னார்கள். ‘பொய் சொல்லிவிட்டார்களோ? குறைகளின் மொத்த உருவமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறதே. கடவுளே, நாங்கள் செய்த பாவம்தான் என்ன?’ – துஸிகாவும் போரிஸும் சிந்திய கண்ணீருக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை. குழந்தை பிறந்தால், தாய்க்குப் பூங்கொத்துகள் குவியும். துஸிகாவுக்கு ஒரு பூங்கொத்துகூட வரவில்லை. குழந்தை, தூக்கத்தில் சிரித்தது. அந்தக் கணத்தில் மனம் சிலிர்க்க, துஸிகா புரிந்துகொண்டாள். எனக்குப் பிறந்திருப்பதே ஒரு பூங்கொத்துதான்.

Nick 2

கைகள், கால்கள் இல்லாதது தவிர, நிக்குக்கு வேறு எந்த உறுப்புகளிலும் பிரச்னை இல்லை. தவிர, இடது கால் மிகச் சிறிய அளவில் துருத்திக்கொண்டிருந்தது. அதில் இரண்டு விரல்கள் ஒன்று சேர்ந்துகிடந்தன. மருத்துவர்கள் அந்த விரல்களை மட்டும் பிரித்துவிட்டார்கள். பிற்காலத்தில் எதற்காவது அந்த இரு விரல்களும் உதவும் எனப் பெற்றோர் நம்பினார்கள். ஏதும் அறியாத வயது வரை நிக்குக்கு எதுவும் பிரச்னையாகத் தெரியவில்லை. மூன்று வயதிலேயே ஸ்கேட்டிங் போர்டில் படுத்துக்கொண்டு நகர ஆரம்பித்தான். தானியங்கி வீல்சேர் ஒன்றைத் தானாக இயக்கவும் கற்றுக்கொண்டான். இரு விரல்கள் உதவின. ஆனால், வெளி உலகம் தெரியத் தெரிய, அவனுக்குப் பிறகு ஒரு தம்பி, தங்கை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க, நிக் விக்கித்து நின்றான். ‘எனக்கு மட்டும் ஏன் கைகள், கால்கள் இல்லை?’ – தங்கள் மகன் அடிக்கடி கேட்க, பெற்றோர் சொன்ன ஒரே பதில், ‘கடவுளிடம் கேள்’!

nick-vujicic2

கண்ணீருடன் கடவுள் முன் உருகினான் நிக். ‘தேவனே… எனக்கும் கைகள், கால்கள் கொடு.’ கடவுள் அதிசயங்களை நிகழ்த்துபவராயிற்றே. விடியும்போது தனக்குக் கைகளும் கால்களும் முளைத்திருக்கும் என, இரவுகளில் கண் மூடினான். எந்த விடியலும் அவன் நம்பிக்கைக்கு வெளிச்சம் கொடுக்கவில்லை. ‘ஆண்டவரே… நீர் எனக்கு ஒரு கையை மட்டுமாவது கொடு. நான் உலகம் முழுக்கச் சென்று உம் அதிசயத்தைப் பரப்புகிறேன்’ என, கடவுளிடம் டீல் பேசிப் பார்த்தான். ம்ஹூம். சோகத்தினுள் அடிக்கடி தொலைந்தான் நிக்.

ஆஸ்திரேலியாவில் உடல், மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகள், இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க, சட்டம் அனுமதிக்காது. ஆகவே, நிக்குக்கும் ‘சிறப்புப் பள்ளி’யில்தான் இடம் கிடைத்தது. துஸிகாவுக்கு மனம் உறுத்தியது. உடலில் சில பாகங்கள் குறைவாக இருக்கிறதே தவிர, நிக் மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவனே. அவன் ஏன் இங்கே படிக்க வேண்டும்? போராடிப் பார்த்தார். சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே நிக் குடும்பத்தினர், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே நிக் இயல்பான பள்ளியில் படிக்கலாம், மருத்துவ வசதிகள் அதிகம், நெருங்கிய உறவினர்களும் இருக்கிறார்கள் என பல காரணங்கள். ஆனால், அமெரிக்கப் பள்ளிச் சூழலில் நிக்கால் ஒன்றவே முடியவில்லை. ஒவ்வொரு பீரியடுக்கும் வேறு வேறு அறைகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இன்னும் பல பிரச்னைகள். நிக், மேலும் சுருங்கிப்போக, பெற்றோர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே பெட்டி கட்டினார்கள். இந்த முறை பிரிஸ்பேன்.

1989-ம் ஆண்டு உடல் குறைபாடு உள்ளவர்களும், இயல்பான குழந்தைகளுக்கான பள்ளிகளில் படிக்கலாம் என ஆஸ்திரேலியாவில் சட்டத் திருத்தம் நிறைவேற, அதன்படி அனைவருக்குமான பள்ளியில் நிக் முதல் மாணவனாக அட்மிஷன் பெற்றான். தங்கை வீல்சேரைத் தள்ளிச் செல்ல, நிக் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் செய்தித்தாள்களில் வெளிவர, ஒரே நாளில் பிரபலமும் ஆனான். (1990-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் இளம் குடிமகன் விருது கிடைத்தது.) அப்போது நன்கொடைகள் குவிய, அவை நிக்கின் மருத்துவச் செலவுகளுக்கு உதவின. செயற்கைக் கைகள் பொருத்திப் பார்த்தார்கள். நிக்குக்குச் சரிப்படவில்லை. ‘நான், நானாகவே இருந்துகொள்கிறேன்’ என்றான்.

ஆனால், சமூகம் அப்படி இருக்கவிடவில்லை. ‘விநோத ஜந்து’போல பார்த்தார்கள் அல்லது பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டினார்கள். எப்போதும் யாருடைய உதவியாவது தேவைப்பட்டது. பள்ளி செல்லப் பிடிக்கவில்லை. ‘பல் துலக்குவது, குளிப்பது, உடை அணிவது… மற்றவர்கள் செய்யும் சாதாரண வேலைகளைக்கூட என்னால் சுயமாகச் செய்ய இயலவில்லை. சாப்பிடுவதுகூட விலங்குகள் போல வாயால் கவ்வி… ச்சே..!’ – நிக் மன அளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டான். ‘இப்படியேதான் வாழ வேண்டுமா? எனக்கு வருங்காலமே கிடையாதா?’ அவநம்பிக்கையும் விரக்தியும் சூழும் கணங்கள் அதிகரித்தன. 10 வயது நிக், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். ‘அதுவாவது என்னால் முடியுமா?’

Nick 4

ஒருநாள் மதிய வேளையில் துஸிகா, நிக்கைக் குளிப்பாட்ட பாத் டப்பில் வைத்தாள். ‘நான் பார்த்துக்கிறேன். வெளியே கதவைச் சாத்திட்டுப் போம்மா’ என்றான். அம்மா நகர்ந்தாள். நிக், தண்ணீர் நிரம்பிய பாத் டப்பினுள் மூழ்கினான். எதிர்மறை எண்ணங்கள் அவனை அழுத்தின. மூச்சை அடக்காமல் நீரைக் குடித்து உயிரைக் கரைக்கும் முயற்சி. கடைசி நொடிகளை எண்ணினான். 10, 9, 8… எதிர்காலமே இல்லாத இந்த வாழ்க்கையை இன்றோடு முடித்துக்கொள்ளலாம். 7, 6, 5… எல்லா வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 4, 3, 2… திடீரென மனக்கண்ணில் ஒரு காட்சி. தந்தையும் தாயும் அவனது கல்லறை முன் நின்று கண்ணீர்விடுவதாக… தம்பியும் தங்கையும் தன் பிரிவால் வாய்விட்டுக் கதறுவதாக. பதறி, திணறி, எகிறி நீருக்கு வெளியே வந்தான். சுவாசம் சீராக, சில நிமிடங்கள் பிடித்தன. கூடவே எண்ணங்களும். குடும்பத்தினர் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். எப்படி இவர்களைவிட்டுப் பிரிய நினைத்தேன்? நான் சுயநலவாதி.

அன்று இரவு தன் தம்பி ஆரோனிடம் நிக் சொன்னான்… ‘என் 21 வயதில் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ ஆரோன் புரியாமல் ‘எதற்கு?’ என்றான். ‘அப்போது நான் படித்து முடித்துவிடுவேன். ஆனால், எனக்கு வேலையோ, கேர்ள் ஃப்ரெண்டோ கிடைக்கப்போவது இல்லை. திருமணம் ஆகப்போவதும் இல்லை. அதன்பின் நான் எதற்காக வாழ வேண்டும்?’ ஆரோன், விஷயத்தை தந்தையிடம் சொன்னான். போரிஸ், மயில் இறகு வார்த்தைகளால் நிக்கின் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தார். ‘கடவுள் உன்னை பூமிக்கு இப்படி அனுப்பியிருக்கிறார் என்றால், அவரிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. முதலில் அது என்ன எனக் கண்டுபிடி. அதை நிறைவேற்று’ – தந்தையின் வார்த்தைகள் நிக்கை நேர்மறை எண்ணங்களில் நிலைத்து நிற்கச் செய்தன.

தன் உடலில் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை என உணர்ந்த நிக், தன் இயல்பை 180 டிகிரி மாற்றினான். குடும்பத்தினரும் நிக்கை ‘சாதாரணமானவனாக’ நடத்த ஆரம்பித்தனர். நிக், தன் தம்பி ஆரோனை அதிகம் வேலை வாங்கும் சமயத்தில் அவன் முறைத்தபடியே, ‘இதுக்கு மேல ஏதாவது வேலை சொன்ன, அந்த டேபிள் டிராயர்ல போட்டு அடைச்சு வெச்சுருவேன்’ என்பான். தங்கை மிச்சேல், ‘பசிக்குது, நிக் உன் குட்டிக்கால் சிக்கன் லெக்பீஸ் மாதிரி இருக்குது. அதையே சாப்பிட்டுரவா?’ என்பாள். நிக்கின் உறவுக்காரப் பையன்கள் அவனை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லும்போது, மக்கள் அவனை ஒருமாதிரி பார்த்தால், ‘ஆமா, இவன் வேற்றுக்கிரகவாசி. உங்களுக்கு வேணுமா?’ என கலாட்டா செய்வார்கள். இந்தக் கேலிப் பேச்சுகளுக்கு எல்லாம் நிக் வெடித்துச் சிரிப்பான். தன் வாழ்வின் தீராக் கசப்புச் சுவையை, நகைச்சுவையால் எட்டி உதைக்கக் கற்றுக்கொண்டான். மயக்கமா, கலக்கமா என தலைசுற்றிய பொழுதுகளில், உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப் பார்த்து மீண்டு வந்தான். உடல் குறைபாடுகளைப் புறம் தள்ளி, சிகரம் தொட்ட முன்னோடிகளின் வாழ்க்கைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான்.

சக்கி என்பவன், நிக்கின் பள்ளியில் படித்த புஜபல முரட்டு மாணவன். நிக்கிடம் அடிக்கடி  வம்பிழுத்தான். ‘ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?’ என ஒருமுறை அவன் கேட்க, நிக்கும் ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டான். மறுநாள் மதிய இடைவேளையில் மைதானத்தில் மாணவர்கள் குழுமி இருக்க, நிக்கும் சக்கியும் எதிர் எதிரே. நிக்குக்குள் பயம் நிரம்பித் ததும்பியது. ஆசிரியர்கள் யாராவது விஷயம் அறிந்து வந்து சண்டையைத் தடுத்துவிடுவார்கள் என நம்பினான். நடக்கவில்லை. ‘வீல்சேரில் இருந்து இறங்கு’ என்றான் சக்கி. ‘நீயும் முட்டி போட்டுத்தான் மோத வேண்டும்’ என்றான் நிக். சக்கி முட்டி போட்டான். நிக்கை அடித்துப் போட்டான். நிக்குக்கு உடலைப் புரட்டி, முன்நெற்றியை தரையில் பதித்து, அழுத்தி எழுந்து நிற்பதே சிரமமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அடி. நிக், சுருண்டு விழுந்தான். ‘அய்யோ வேணாம்’ என மாணவிகள் அழ ஆரம்பிக்க, தனக்காக யாரோ சிந்தும் கண்ணீரும், விழுந்த அவமானமும் நிக்கைச் சிலிர்த்தெழச் செய்தன. சிரமப்பட்டு மீண்டும் எழுந்து, தன் உடலைத் தரையில் ஊன்றி, ஓர் ஏவுகணைபோல பாய்ந்து, தன் தலையால் சக்கியின் முகத்தில் கடுமையாக மோதி விழுந்தான். சக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கூட்டம் ஸ்தம்பித்தது. பின் நிக்குக்காக ஆர்ப்பரித்தது. நிக்கோ பதறி, சக்கியிடம் மன்னிப்பு கேட்டான். சக்கி, அங்கே நிற்க முடியாமல் வெளியேறினான். பின் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக!

Dont-give-up-Nick-Vujicic

பயத்தை விழுங்கிவிட்டால் எந்த ஓர் அசாதாரணச் சூழலையும் சமாளிக்கலாம் என நிக்குக்குத் தைரியப் பாடம் கற்றுக்கொடுத்தது காணாமல்போன சக்கியே. அதேபோல லாரா என்கிற பள்ளித்தோழி கேட்ட ஒரு கேள்வி, நிக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தியது. ‘இப்படி எத்தனை காலம்தான் ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்களையே நம்பி இருப்பாய்?’- தோழியின் கேள்வியால் காயப்படாமல் ‘தான் சுதந்திரமாக இயங்கப் பழக வேண்டும்’ என உணர்ந்தான் நிக். பல் துலக்குவதில் இருந்து, குளிப்பது, கழிவறையை உபயோகிப்பது, உடை அணிவது, முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவது, இரண்டு விரல்களால் ரிமோட்டை இயக்குவது, கீபோர்டில் டைப் அடிப்பது, குட்டிக் காலை துடுப்பெனச் சுழற்றி நீச்சலடிப்பது என, தினம் தினம் புதிய விஷயங்களை கற்க ஆரம்பித்தான்.

‘அக்கவுன்ட்ஸ் படி. அது உன் வருங்காலத்துக்கு உதவும்’ என்றார் தந்தை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, டிகிரிக்காக நிக் எடுத்த பாடம் அக்கவுன்ட்ஸ் மற்றும் ஃபைனான்ஸ். ஆனால், அவன் மனதில் வேறு ஒரு லட்சியம் வேர்விட்டு இருந்தது. பள்ளியின் வாட்ச்மேனாக இருந்த அர்னால்டு என்பவர், தான் நடத்தும் இளைஞர்களுக்கான கூட்டங்களில் நிக்கைக் கட்டாயப்படுத்திப் பேசவைத்தார். ‘என்ன பேச மிஸ்டர் அர்னால்டு?’ ‘உன் சொந்தக் கதையைச் சொல். அதைப் போன்ற தன்னம்பிக்கை தரும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது!’

நிக் தட்டுத்தடுமாறிப் பேச, கிடைத்த பாராட்டுக்கள் அவனை நிமிர்த்தின. ஒருமுறை பள்ளிக்கு வந்து பேசிய அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ரெக்கி, ‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது. ஆனால், உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’ எனச் சொன்னது, நிக்கின் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.

Nick 1

‘சிறுவயதில் அதிசயங்கள் நிகழாதா எனக் காத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது. நானே ஓர் அதிசயம்தான். இத்தனை குறைகள் கொண்ட இவனே இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, நம்பிக்கையாக வாழ முடிகிறது என்றால், உனக்கு என்ன குறைச்சல் என, உலகத்துக்குப் புரியவைக்கத்தான் கடவுள் என்னை இப்படி அனுப்பியிருக்கிறார். என்னையே உதாரணமாக்கி, என் பேச்சால் எத்தனையோ பேருக்கு ‘நம்பிக்கை ஆக்ஸிஜன்’ ஏற்ற முடியும்’. நிக், ‘தன்னம்பிக்கைப் பேச்சாளராக’ தன் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடிவெடுத்தான்.

வார இறுதிகளில் சர்ச்களில் பிரசங்கம் செய்ய வாய்ப்பு அமைந்தது. ஆனால், தன்னை வெறும் மதபோதகராக அடையாளப்படுத்திக்கொள்ள நிக் விரும்பவில்லை. தன் 17-வது வயதில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் நோக்கம் பள்ளிகளில், கல்லூரிகளில், நிறுவனங்களில், வேறு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சென்று நம்பிக்கை உரையாற்றுவது. நிறுவனத்தின் பெயர்

Life without Limbs.  பள்ளிகளில் பேச அமைந்த ஆரம்ப வாய்ப்புகள் சொதப்பலாக முடிந்தன. பயத்தில், தொண்டை வறண்டு, வார்த்தைகள் வற்றிப்போயின. பெரிய கூட்டத்தைப் பார்த்தாலே, வியர்த்தது; குரலிலும் நடுக்கம்.

ஆனால், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என நிக், ரிவர்ஸ் கியர் தட்டவில்லை. கூட்டங்களின் மத்தியில் ஆங்காங்கே தன் நண்பர்களை உட்காரவைத்தார். அவர்களை மட்டும் பார்த்து நம்பிக்கையுடன் பேசினார். கடுமையான பயிற்சியால் வார்த்தைகளின் நெசவில் மேடைகள் வசமாயின. இருந்தாலும் ஒவ்வொரு மேடையிலும் ஆரம்ப நொடிகளில் பயம் கவ்வியது. முந்தைய பேச்சுக்குக் கிடைத்த கைத்தட்டல்களை நினைத்துக்கொண்டார். பயப்புயல் வலுவிழக்க, சொற்களால் இதயங்களைச் சூறையாட ஆரம்பித்தார்.

[pulledquote]

* சர்ஃபிங் செல்வது, சுறாக்கள் உள்ள பகுதியில் ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங்… எனப் பல சாகசங்களைச் செய்துள்ளார் நிக். கோல்ஃப், கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவது, டிரம்ஸ், கீபோர்டு வாசிப்பது எனச் சாதாரண மனிதர்கள் செய்யும் எதையும், தன் ஸ்டைலில் செய்துபார்ப்பதில் நிக்குக்கு அலாதி ஆர்வம்.

* தன் இரு விரல்களால் ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகளை டைப் செய்யும் திறன்கொண்டவர்.

* நிக் உரையாற்றி முடித்ததும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று அவரைத் தழுவிச் செல்வது வழக்கம். 2010-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 1,749 பேர் நிக்கைத் தழுவிச்செல்ல, அது கின்னஸ் சாதனையாகப் பதிவானது. இருந்தாலும், நிக் தனக்குக் கிடைத்த சிறந்த தழுவலாக நினைப்பது, 2009-ம் ஆண்டு இரண்டரை வயது ஆஸ்திரேலியச் சிறுமி ஒருத்தி, தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நிக்கை அவரது பாணியிலேயே கழுத்தாலும் தோள்பட்டையாலும் தழுவியதே!

* Life without Limits –  இது, நிக்கின் வாழ்க்கை வரலாறு புத்தகம். Limitless, Stand Strong, Love without  Limits ஆகியவை, நிக்கின் பிற புத்தகங்கள். அனைத்துமே விற்பனையில் சாதனை படைப்பவை. தவிர, No Arms, No Legs, No Worries  என்ற நிக்கின் வாழ்க்கையும் தன்னம்பிக்கை உரைகளும் அடங்கிய டி.வி.டி மிகப் பிரபலம். நிக் ஒருமுறை இந்தோனேஷியா சென்றபோது, அங்கு இருந்த நண்பர், நிக்கின் டி.வி.டி., போலி டி.வி.டி-யாக ஒன்றரை லட்சம் காப்பிகளுக்கும் மேல் விற்றுள்ளதாக வருத்தப்பட்டார். நிக் சிரித்தபடியே சொன்ன பதில், ‘நல்ல விஷயம் மக்களிடம் எந்த வழியில் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!’

[/pulledquote]

டென்த் கிரேடு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் ஒரு வாய்ப்பு. நிக், அங்கு இருந்த மேஜை மேல் நின்று பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே மாணவிகள் விசும்ப ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் கண்ணீரை மறைக்கத் தலைகுனிந்தனர். ‘எல்லோருமே அழகானவர்களே. நான்கூட’ என நிக் சொன்ன நொடியில், ஒரு மாணவி கண்ணீருடன் ஓடிவந்து நிக்கை அணைத்துக்கொண்டாள். ‘நான்கூட அழகுதான் எனப் புரியவைத்ததற்கு நன்றி’ என அவள் நிக் காதில் கிசுகிசுத்தாள். நிக் தன் தோற்றத்தின் வலிமையை, தன் பேச்சின் வீரியத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்ட நொடி அது.

டீன் ஏஜ் மாணவர்களின் பிரச்னைகளை முற்றிலுமாகப் புரிந்துவைத்திருந்த நிக், ஆஸ்திரேலியாவில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார். அந்த 0.99 மீட்டர் உயரம் உள்ள மனிதனைப் பார்த்ததுமே கூட்டம் உறைந்துபோகும். நிக், ‘யாராவது என்னுடன் கைகுலுக்க வருகிறீர்களா?’ எனச் சட்டெனச் சிரித்தபடியே கேட்டு, பார்வையாளர்களை இயல்பாக்குவார். அதற்குப் பின் தன் கடினமான வாழ்க்கையில் இருந்து தேவையான விஷயங்களை நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கூட்டம் நெக்குருகிப்போகும். அரங்கில் ஆக்ஸிஜனுக்குப் பதிலாக நம்பிக்கை நிறையும். இறுதியில் கண்ணீர் நிறைந்த தழுவல்கள். 2005-ம் ஆண்டு Young Australian of the Year  விருதுக்கு நிக் பரிந்துரைக்கப்பட்டார். விருது கிட்டவில்லை. ஆனால், வெளிநாட்டில் பேசும் வாய்ப்புகள் கிட்ட ஆரம்பித்தன.

உலகம் சுற்ற ஆரம்பித்தார் நிக். ஆரம்பத்தில் அதற்கும் பணத்தட்டுப்பாடு. ஸ்பான்ஸர்கள் கிடைக்கவில்லை. அப்போது நிக் நடித்த ஒரு குறும்படமும் நிக் பற்றி எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படமும் உலகை ஈர்த்தது. நிக்குக்கு எட்டுத் திசைகளில் இருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு – தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்குச் சென்று பேசினார். பேச்சின் நடுவே, ‘தோல்விகளில் இருந்து மீண்டு எழுவது எப்படி எனச் சொல்கிறேன்’ என அப்படியே கீழே விழுவார். கூட்டம் பதறும். தன் முன் நெற்றியால் உந்தித் தள்ளி மிகவும் பிரயத்தனப்பட்டு எழுவார். அரங்கம் சிலிர்க்கும். வெறும் பணத்துக்காக உலகம் சுற்றாமல், தென் அமெரிக்காவின் வறுமையும் வன்முறையும் பீடித்த பகுதிகள், கொடும் சிறைகள், சீனாவின் ஆதரவற்றோர் இல்லங்கள், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி, வேறு பல நாடுகளின் சேரிகள், இயற்கைச் சீரழிவு நிகழ்ந்த பகுதிகள், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்… என தேடித் தேடிச் சென்று, தன்னம்பிக்கை விதைக்கிறார் நிக். முதல்முறை தென் ஆப்பிரிக்கா சென்றபோது தன் சேமிப்பில் இருந்த 20 ஆயிரம் டாலரை அப்படியே கொடுத்துவிட்டுத் திரும்பினார். இன்னும் பல நல்ல காரியங்களைச் சத்தம் இல்லாமல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

2011-ம் ஆண்டு World Economic Forum சிறப்பு அழைப்பாளராகப் பேசினார் நிக். இன்னும் பல சர்வதேச மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று உலகில் Tetra-amelia  சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களில் டாப்மோஸ்ட் தன்னம்பிக்கைப் பேச்சாளர் நிக். உலகம் எங்கும் தன்னம்பிக்கை நிறைந்த, வலுவான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நிக்கின் நிரந்தரக் குறிக்கோள். இன்று உலகமே அதிசயித்துப் பார்க்கும் மனிதராக ஜொலிக்கும் நிக், ‘கடவுள் அதிசயம் நிகழ்த்துவார்’ என்ற தனது நம்பிக்கையையும் கைவிடவில்லை. ‘ஆம், நிச்சயம் அதுவும் நடக்கும். எனக்கும் கால்கள் முளைக்கும். அந்த நம்பிக்கையில்தான் ஒரு ஜோடி ஷூ வாங்கி அலமாரியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்’!

===========================================================

‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது?’

‘வாழ்க்கையில் தனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் அமையவே அமையாது’ என்ற கவலைதான், சிறுவயதில் நிக் தற்கொலை முயற்சி செய்ய முக்கியக் காரணம். 2010-ம் ஆண்டு டெக்ஸாஸின் ஓர் இடத்தில் உரையாற்றியபோது அவளைப் பார்த்தார் நிக். கண்டதும் காதல். அன்று மேடையில் வார்த்தைகள் தடுமாறின. அந்தப் பெண்ணின் பெயர் கேனே. அவளை எப்படியாவது காதலித்தே தீர வேண்டும் எனத் தோன்றியது.

Nick 5
தன் காதல் மனைவி மற்றும் குழந்தையுடன் நிக்

மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வலிய ஏற்படுத்தினார். நேசம் வளர்ந்தது. கொஞ்சம் டேட்டிங். ஒருநாள் கடலின் நடுவில் படகின் முகப்பில் ‘டைட்டானிக்’ ஜாக்கும் ரோஸுமாகத் தழுவி நின்றார்கள். அந்தப் பொழுதில் தன் காதலைச் சொல்லி, வாயால் மோதிரமும் அணிவித்தார் நிக். கேனே மகிழ்ச்சியில் திளைத்தார். ‘சில ஆண்களைப் பார்த்ததும் பாய் ஃப்ரெண்ட் ஆக்கிக்கொள்ளலாம் எனத் தோன்றும். ஆனால் நிக்கைச் சந்தித்த முதல் நொடியிலேயே இவரை கணவர் ஆக்கிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது’ என்பது கேனேவின் லவ் மொழி. இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2013-ம் ஆண்டு பரிபூரண ஆரோக்கியத்துடன் ஓர் ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

nick with child

அதற்குப் பின் ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் நிக்கிடம் கேட்ட கேள்வி, ‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது?’ நிக் பட்டெனக் கேட்ட பதில் கேள்வி, ‘குழந்தை பெற்றுக்கொள்ள கை, கால்கள் அவசியமா என்ன?’

Thanks : முகில் @ ஆனந்த விகடன்

===========================================================

Thiruvalluvarபொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள் 618)

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

யூ.எஸ். சென்று நிக் அவர்களை சந்தித்து நமது தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்தே தீரவேண்டும் என்கிற ஆசை அரும்பியிருக்கிறது. கலாம் அவர்கள் வழி நின்று, கனவு காண்கிறோம். நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

===========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===========================================================

Also check :

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !

தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

இது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=8

===========================================================

Also check other motivational articles of Rightmantra.com

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

===========================================================

[END]

 

6 thoughts on “கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

 1. வாவ் … எவ்வளவு அழகான தன்னம்பிக்கை நாயகனின் கதையை நம் தன்னம்பிக்கை தளத்தில் பதிவு செய்த தன்னபிக்கை ஆசிரியருக்கு (சுந்தர்) வாழ்த்துக்கள் பல. எந்த வித உடல் குறைகளுடன் இருந்தாலும் சாதனை செய்வதற்கு உடல் குறை ஒரு பொருட்டே அல்ல என்பதி நிக் நிரூபித்து விட்டார்.

  நிக் கடவுளுடன் பேசும் வரிகளைப் படிக்கும் பொழுது மனதிற்குள் ஒரு இனம் புரியாத அழுத்தம்… .. கண்கள் குளமாகின… நாம் எந்த கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் தற்கொலை எண்ணத்தை கை விட வேண்டும் என்ற எண்ணத்தை நிக்கிடம் கற்றுக் கொண்டேன்.

  தன்னம்பிக்கை பேச்சாளராக நிக் தன்னை மாற்றிகொண்ட விதம் அருமையோ அருமை.

  திருமதி கேனேவிற்கும் வாழ்த்துக்கள். திருமத்திற்கு ஊனம் தடை அல்ல இரண்டு உள்ளங்களின் சங்கமம் தான் திருமண பந்தம் என்பதை இருவரும் நிரூபித்து விட்டதற்கு அவர்கள் குழந்தை சாட்சி

  மிகவும் அழகிய பதிவை தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றிகள் பல

  நிக்கின் கனவு நனவாக வேண்டும்… கண்டிப்பாக ஆகும். இந்த பதிவின் ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழச் செய்தன …..

  தங்கள் அமெரிக்க பயண கனவும் வெற்றிகரமாக வெகு விரைவில் நனவாகும்

  வாழ்க …. வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 2. //கடந்த காலத்தை உன்னால் மாற்ற முடியாது.. எதிர்காலத்தை உன்னால் மாற்ற முடியும் /// என்பது இந்த பதிவின் வைர வரிகள்

  திருமதி கேனே யின் லவ் மொழி அழகோ அழகு. இந்தக் காலத்தில் எந்த பெண்கள் ஊனமுற்ற ஒருவரை காதலிக்கிறார்கள். தனது கணவரின் உள்ளத்தை கொள்ளை கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான கேனே விற்கு வாழ்த்துக்கள்/ கடவுள் நிக்கிற்கு ஒரு அழகிய மனைவியையும், குழந்தையையும் கொடுத்து இருக்கிறார். இதுவே அவரது வாழ்கையில் மிகப் பெரிய வெற்றி, மேலும் அவரது எண்ணம் ஈடேற இறைவன் கண்டிப்பாக அருள் புரிவார்.

  குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கை கால்கள் இல்லாதது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்திய திரு நிக்கிற்கு வாழ்த்துக்கள்

 3. An amazing person… as he rightly pointed out, fear is the biggest disability. We need to overcome & conquer that. If he can do amazing this in life, why can’t we?

  In his book “The Greatest Miracle in the world”, Og Mandino proclaims that “You are the Greatest Miracle in the world!!”. We truly are… Only if we realize how much blessed we are, how rare we are, how great is the “power of choice” bestowed upon us…. No one can stop us from realizing our dreams!!

 4. உலகம் முழுதும் சாதித்த 84 வயது இளைஞர் திரு.கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் தளத்தில் அவரும் அவரை பற்றிய பதிவுகளும் எங்களுக்கு மன காய மருந்தாக மட்டுமல்ல மூச்சாக உள்ளது.
  திங்கள் தொடங்கி இன்று வரை மனதின் பாரம் அதிகமாகுதே தவிர வேறில்லை.
  நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவில்லை.
  எந்த சோகமும் 8 மாதங்களாக என்னை பாதிக்கவில்லை . ஆனால் இந்த சோகம் நேரம் ஆக ஆக பாரமும் அதிகமாகிறது.
  எங்கோ பிறந்து உலகம் முழுதும் இளைய சமுதாயத்திற்கு மாணவர்களுக்கும் அவர் ஆற்றிய பணி என்று உலகம் முழுவதும் எல்லோரையும் கண்ணீர் விட அவருக்காக உலகத்தயே படைத்து சென்றுள்ளார்.
  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தயாரித்த இன்றைய பதிவு நாயகன் நிக் கதை மிக அருமை.
  என்றும் அன்புடன்
  நன்றி

 5. வணக்கம்……….. ஒரு மனிதன் குறைகளோடு பிறந்தாலும் எப்படி தன் வாழ்வை நிறைகள் நிறைந்ததாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு திரு.நிக் அவர்கள் ஒரு தலைசிறந்த உதாரணம்………அவருக்கு நம் வாழ்த்துக்கள்……….

  திரு.நிக் அவர்களை அமெரிக்கா சென்று பேட்டி காண வேண்டும் என்கிற நம் ஆசிரியரின் உள்ளக்கிடக்கை நிறைவேறவும் நமது வாழ்த்துக்கள்…..

 6. நான் எதற்காக வந்துள்ளேன் எனும் கேள்வி என்னை யோசிக்க வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *