Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, February 7, 2023
Please specify the group
Home > Featured > சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

print
ன்று ஆடி சுவாதி. சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் குரு பூஜை. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உள்ள சிறப்பு என்னவென்றால், இறைவனை தோழனாக பாவித்து பக்தி செலுத்தியவர். சுந்தரரின் வாழ்க்கை வரலாறு, அவர் புரிந்த அற்புதங்கள் ஓரளவு அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது பிறப்பின் ரகசியம் தெரியுமா?

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்…

கயிலையில் அலங்கார மண்டபத்தில் ஒரு முறை சிவபெருமான் தன்னை கண்ணாடியில் கண்டார். ஒரு கணம் அவர் அழகில் அவரே சொக்கிப் போய்விட்டார். நம்மில் சிலர் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை பார்த்து பேசுவதில்லையா? அது போல கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை நோக்கி, “அழகு சுந்தரா… கொஞ்சம் வெளியே வா!” என்று அழைத்தார்.

அழைப்பது யார்? காலத்தையே நிர்ணயிப்பவன் அல்லவா? அவரது வாக்கினின்று வெளிவருவது என்ன சாதாரண வார்த்தைகளா? வேதங்களைவிட புனிதமானவை ஆயிற்றே..! எனவே கண்ணாடியில் பார்த்து ரசித்த உருவம், உடனே நேரில் வந்துவிட்டது.

நிழல் நிஜமாகிவிட்டது…. பரமன் வாக்கிற்கு உள்ள வலிமை!!

Lord Siva in front of mirror
* நம் தள ஓவியர் ரமீஸ் அவர்கள் இந்த பதிவுக்காக வரைந்த பிரத்யேக படம் இது.

தன்னுடைய பிம்பத்திலிருந்து வந்த அந்த உருவத்திற்கு ‘சுந்தரர்’ என்று பெயரிட்டார். பெயர் சூட்டினால் போதுமா? ஏதாவது பணி தரவேண்டுமல்லவா? தன்னுடைய திருநீற்று பேழையை தாங்கும் பணியை கொடுத்தார். (நிழலுக்கு கிடைச்ச பாக்கியத்தை பார்த்தீங்களா? ஹூம்… நிழலாய் இருந்தாலும் நல்லோர் நிழலாய் இருக்கவேண்டும்!)

எப்போதெல்லாம் இறைவன் திருநீறு பூசவேண்டும் என்று கருதுகிறானோ அப்போதெல்லாம் திருநீறு கொண்டு போகும் பணியை செய்து வந்தார் நிழலில் இருந்து உருவான ‘சுந்தரர்’. அதாவது ஈசனின் நேரடி உதவியாளர். நந்திக்கும் கிடைக்காத பேறு இது.

தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவானது அல்லவா? அந்த விஷத்தின் வீரியத்தால் பலரது பார்வை பாதிக்கப்பட்டது. அனைவரும் சிதறி ஓடினர். கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்த இடம் கயிலை. ஈசன் உடனே தனது முதன்மைத் தொண்டர் சுந்தரரைத் அந்த விஷத்தை எடுத்து வரச் சொன்னார். சுந்தரரும் சென்று அந்த விஷத்தை திரட்டி ஒரு சிறிய நெல்லிக்கனி அளவாக ஆக்கினார். அதை கொண்டு வந்து ஈசனிடம் ஒப்படைத்தார். ஈசன், இதை வெளியே விட்டுவைத்தால் ஆபத்து என்று கருதி உடனே அதை தான் வாங்கி விழுங்கிவிட்டார். இதைக் கண்டு அன்னை பதறிப் போய, விஷம் உள்ளே இறங்காதவாறு, தொண்டையில் கை வைத்துப் பிடித்தாள். விஷம் அப்படியே நின்றது. அப்போது முதல் ஈசனுக்கு திருநீலகண்டம் என்று பெயர் ஏற்பட்டது.

விஷத்தை பார்த்தோர், அதை நுகர்ந்தோர், என அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில், சுந்தரருக்கு மட்டும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், அவர் தினசரி திருநீற்றுப் பேழையை தாங்கி வந்ததால் திருநீற்றுக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. விஷத்தை தாங்கி வந்ததால் சுந்தரருக்கு ஆலால சுந்தரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

சரி… இப்படி அணுக்கத் தொண்டராய் இருந்தவர் எப்படி பூவுலகில் பிறந்தார்?

கயிலையில் மிகப் பெரிய நந்தவனம் ஒன்று உண்டு. சிவபூஜைக்கு சிவகணங்கள் அங்கு தான் பூக்களை பறிப்பது வழக்கம். பார்வதி தேவியின் பணிப்பெண்களும் அங்கு தான் பூக்களை பறிப்பார்கள்.

ஒருமுறை சுந்தரர் அந்த நந்தவனத்தை கடந்து செல்ல முற்பட்டபோது, அப்போது அங்கு பூக்களை பறிக்க வந்த பார்வதி தேவியின் பணிப்பெண்கள் கமலினி, அனந்திதை என்ற இருவரையும் பார்த்தார். ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது. அவர்கள் பேரழகில் மயங்கினார். அவர்களும் ஆலால சுந்தரரின் அழகில் மயங்கினர்.

இது இறைவனுக்கு உடனே தெரிந்துபோனது.

“சுந்தரா… நீ புவலகில் சென்று பிறந்து எல்லாவித இன்பங்களையும் துய்த்துப் பின்னர் மீண்டும் கயிலை வந்தால் போதும்” என்றார்.

சுந்தரர் கலங்கிப் போனார்… “தேவ தேவா… தங்களை விட்டு இமைப் பொழுதும் என்னால் பிரிந்திருக்க முடியாதே… என்னை மன்னித்து நல்லருள் செய்யுங்கள் சுவாமி” என்று பல்வேறு விதமாக மன்றாடினார்.

“கவலை வேண்டாம்… உரிய நேரம் வரும்போது நாம் உன்னை தடுத்தாட்கொள்வோம்” என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநீலகண்டர்.

பூலோகப் பிறப்பு

ஈசனின் ஆணையின்படி, பூவுலகில் தமிழகத்தில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார்-இசைஞானியார் என்னும் சிவநெறி வழுவாமல் வாழ்ந்து வந்த தம்பதியர்க்கு மகனாக பிறந்தார் சுந்தரர். திருவாரூரில் உள்ள ஈசன் மீது அக்குடும்பத்தினர் பெரும் பக்தி கொண்டிருந்ததால் தங்கள் மகவுக்கு நம்பியாரூரர் என்று பெயரிட்டனர்.

பாலகனாயிருந்த நம்பியாரூரரின் அழகையும் தேஜஸையும் கண்டு வியந்த நரசிங்க முனையர் என்னும் குறுநில மன்னன், “இக்குழந்தை சம்பந்தரின் மறுபிறப்போ?” என்று எண்ணி வியந்து, நம்பியாரூரரின் பெற்றோரான சடையனார் – இசைஞானியார் இருவரின் அனுமதியையும் பெற்று தனது அரண்மனைக்கு கொண்டு சென்று, கல்வியும் ஞானமும் புகட்டி செல்லப் பிள்ளை போல வளர்க்கலானார். உரிய பருவம் வந்ததும் அவனுக்கு உபநயனம் செய்வித்து பல்விரு வித்தைகளையும் பயிற்றுவித்தார்.

அழகின் சிகரமாய் திகழ்ந்தார் இளைஞர் நம்பியாரூரர். அவருக்கு “நான்… நீ…” அனைவரும் போட்டிபோட்டு பெண்கொடுக்க முன்வந்தனர். புத்தூரைச் சேர்ந்த சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளுக்கு நம்பியாரூரை திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்து, திருமணம் நிச்சயத்தினர்.

சுந்தரருக்காக ஏற்கனவே கமலினியும் அனந்திதையும் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து காத்திருக்க, இவர் இப்பெண்ணை மணந்துகொண்டால் என்னாவது? மேலும் உரிய நேரத்தில் தான் தடுத்தாட்கொள்வோம் என்று ஈசன், சுந்தரரிடம் கயிலையில் வாக்கு கொடுத்திருந்தபடியால், இறைவன் ஒரு கிழவரைப் போல வேடந்தாங்கி  மணக்கோலத்தில் மங்கல நாண்  கட்ட தயாராக இருந்த சுந்தரரிடம் வந்து நின்றார்.

“நிறுத்து… நம்மிடையே ஒரு வழக்கிருக்கிறது. அதைத் தீர்த்த பிறகு உன் திருமணத்தை வைத்துக்கொள்” என்றார்.

பின்னர் சபையோரிடம், சுந்தரரின் பாட்டன், “நானும் எனது சந்ததியினரும் உனக்கு அடிமை” என்று எழுதி வைத்துச் சென்ற ஓலையை காண்பித்து சுந்தரர் தன் அனுமதியின்றி திருனமணம் செய்ய இயலாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருமணம் நின்றது. வெகுண்டெழுந்த சுந்தரர், அவர் கையிலிருந்த ஓலையை பிடுங்கி கசக்கி எறிந்து “போடா பைத்தியக்காரா” என்றார்.

“இது படி ஓலை தான். மூல ஓலை என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து பஞ்சாயத்து கூடி, சுந்தரர் முதியவருக்கு அடிமை என்றும் அவர் சொல்படியே கேட்கவேண்டும் என்று தீர்ப்பானது.

தொடர்ந்து முதியவர் சுந்தரரை அழைத்து திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் புகுந்து பின்னர் மாயமாகிப் போனார். சித்தம் கலங்கிய சுந்தரர் செய்வதறியாது திகைத்து நின்று பொது, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு காட்சி தந்து, சுந்தரருக்கு கயிலையில் நடந்த அனைத்தையும் நினைவூட்டி, உன் அவதார நோக்கத்தை நிறைவேற்றவே நாம் உன்னை தடுத்தாட்கொண்டோம். நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்றொண்டர் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலேயாம். ஆதலால், நம்மேலே தமிழ்ப்பாட்டுக்களைப் பாடு” என்று அருளிச்செய்ய சுந்தரர் அவரை ஏச பயன்படுத்திய “பித்தா என்ற வார்த்தையைக் கொண்டே முதல் பாடலை பாடியருளினார்.

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

Sundarar

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ‘திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101 மட்டுமே.

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை. சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார். இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இவர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள் ஒன்றா இரண்டா? அது பற்றி தனிப் பதிவு வெளியாகும்.

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

Also check similar articles and true incidents :

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

எது நிஜமான பக்தி?

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

================================================================

[END]

10 thoughts on “சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

 1. உங்கள் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. தினமும் புதிது புதிதாக, யாரும் அதிகம் அறிந்திராத செய்திகளை சுவாரிசயமாக சொல்லும் உங்கள் எழுத்துநடையும், கருத்துகளும் மிகவும் அருமை.

  இந்தப்பதிவில் பயன்படுத்தி இருக்கும் சிவபெருமான் கண்ணாடி புகைப்படம் யார் வரைந்தது அண்ணா. மிகவும் தத்ரூபம். அருமை.

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

  விஜய் ஆனந்த்

  1. * நம் தள ஓவியர் ரமீஸ் அவர்கள் இந்த பதிவுக்காக வரைந்த பிரத்யேக படம் இது.

 2. சுந்தரரின் வரலாறு பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் சிவபெருமான் கண்ணாடியில் பார்த்து மயங்கிய அவரது உருவமே சுந்தரராய் வடிவு கொண்டு பூமியில் ஜனனம் எடுததுமான விஷயம் எனக்கு புதிது. இனிய தகவலுக்கு நன்றி. வரைபடம் மிக நன்றாக இருக்கின்றது.

  ஓம் நம சிவாய.

 3. சுந்தரரின் வரலாற்றை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது . சுந்தரரின் கதை பின் பாதி படித்து இருக்கிறோம். முதல் கதை தெரியாத ஒன்று . சுந்த(ர)ர் பதிவு அருமை

  நாம் வாசகர்களுக்காக தெரியாத கதைகளை தொகுத்து அளிக்கும் தங்களுக்கு நன்றிகள் பல. காலையில் இருந்து இந்த பதிவை எதிர்பார்த்தேன். பிரார்த்தனை பதிவுடன் வரும் என நினைத்தேன். என் யுகம் தவறாகி விட்டது

  இன்று காலையில் எழுந்த பொழுது சுந்தரரை மானசீகமாக வணங்கி விட்டு தான் எழுந்தேன்.

  ஓவியர் ரமீசின் ஓவியம் அருமையோ அருமை. வாழ்த்துக்கள்

  நன்றி
  உமா வெங்கட்

 4. வணக்கம் சுந்தர்.எனக்கும் அந்த சந்தேகம் உண்டு .என்கிறந்து விஷயங்களை எடுக்கிறார்,அழகாக தொகுத்து தருகிறார் என்று தோன்றுவது உண்டு.ஒவொருநாளும் ஒரு புது கதை.உண்மை சம்பவம் என தருகிறேர்கள்.உழைப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  1. படிப்பதற்கும் கேட்பதற்கும் நேரம் ஒதுக்கினால் போதும். பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம். நான் உழைத்து நான் உணர்ந்து எழுதுவதே நிலையாக நிற்கும். நிறைய எழுதவேண்டியிருப்பதால் நிறைய உழைக்க வேண்டியுள்ளது. தற்போது மகாபாரதத்தை படித்து வருகிறேன்.

 5. சுந்தரரின் குரு பூஜை யொட்டிய பதிவு..உணர்வால் உணர்ந்தோம்..சுந்தரரின் வரலாற்று சிறப்பை சிறப்பாக சொல்லிவிட்டிர்கள். ஓவியரின் வண்ணபடமும் அருமை. அப்படியே ! கண்ணில் ஒற்றி கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

  தலைவரின் ரசிப்பில் பிறந்த சுந்தரர்! தலைவரின் ரசனைக்கே ஒரு அர்த்தம் என்றால்..அவருடைய மற்ற செயல்களுக்கு ? நினைக்கும் போதே ..தலை சுற்றுகிறது.இந்த பதிவினை படித்து நாங்கள் “சிவ புண்ணியம்” தேடி கொண்டோம் என்பதே சூட்சுமமான உண்மை.

  பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள் – பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் அண்ணா.

  சிவயோகம் என்ற ஒருமைநெறி – சுந்தரரால் உணர்த்தப்பட்டது எனலாம். மிக மிக முக்கியம் சிவயோகம் என்ற நெறி தோழமை நெறி என்றும் கூற சால பொருந்தும்..சுந்தரர் என்றாலே தோழமை..தோழமை என்றாலே சுந்தரர்.

  சுந்தரரின் வழியில் நாமும் இறைவனிடம் தோழமையோடு பக்தி செய்வோம். தோழமையோடு பக்தி செய்ய? அவரோடு நாம் பேச வேண்டும்..பேசி பேசி..நம் பிரார்த்தனையை தோழமையோடு சமர்பிப்போம்.சற்று கடினம் தான்..ஆனால் முயன்று பார்ப்போம்..

  இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரா
  னந்த மில்புக ழாலால சுந்தரன்
  சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
  வந்து பாடிய வண்ண முரைசெய்வோம்.

 6. சுந்தரரின் வரலாறு மிக அருமை. ஓவியர் ரமீஸ் வரைந்த சித்திரம் மிக மிக சூப்பர். வாழ்த்துக்கள் ரமீஸ்.

 7. ஓவியர் ரமீஸ் அவர்களுக்கு பிரத்யேக பாராட்டுக்கள்

  எம்பெருமானின் நிழலாக தோன்றி மாயையில் உழன்று , அதன் காரணமாக இப்போவுலகில் அவதரித்து, பின் நிஜத்தால் தடுத்தாட்கொள்ளப்பட்டு தேனினும் இனிய தேவாரத்தை இந்த உலகிற்கு அருளிய சுந்தரரின் வரலாறு படிக்க படிக்க தகட்டாதது

  திருவிளையாடல் பிரியரான எம்பிரான் தம் நிழலைக்கூட விட்டுவைக்கவில்லை என்கையில் நாம் எல்லாம் எம்மாத்திரம்

  சுந்தரர் வரலாறு
  சுந்தர் ஜி வாயிலாக – அடடா என்ன பொருத்தம்

  தோழமை பக்தியை நமக்கு அருளிய சுந்தரர் பதம் போற்றுவோம்
  எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் பதம் பணிவோம்

  திருசிற்றம்பலம் !!!

  1. பதிவைவிட உங்கள் பின்னூட்டம் சுவாரஸ்யம். நன்கு அனைத்தையும் உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள். சபாஷ். ஒரு பின்னூட்டம் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *