Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > ‘திருவண்ணாமலை கிரிவல மகிமை!’ – கண்டதும் கேட்டதும் (7)

‘திருவண்ணாமலை கிரிவல மகிமை!’ – கண்டதும் கேட்டதும் (7)

print
வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! படிக்க மட்டுமல்ல… பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி!

1) வாட்ச்மேன் முருகன்!

ல மாதங்கள் ‘அவரை தரிசிக்க வேண்டும்’ என்று சினிமா உலகிலும், எம்.ஜி.ஆர். உட்பட அனேக வி.ஐ.பி.க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள்.

Lord Murugaஅவரே ஒரு நாள் சாண்டோ சின்னப்பா தேவரை வரச்சொல்லியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின் அருட்பார்வை நம்மீது விழாதா என அனைவரும் ஏங்கி நின்றார்கள். தேவருக்கே முதல் அழைப்பு.

‘புனிதம்’ என்பதற்குரிய அர்த்தத்தை அவரை பார்த்த பின்பே புரிந்துகொண்டார் தேவர். திருப்பாதம்  விழுந்து தொழுதார். தம் குறையை சொன்னார்.

“உடம்பு முடியலீங்க சாமி… சர்க்கரை”

அவர் புன்னகை பூத்தார். உதயசூரியன் சிரித்தது போல இருந்தது. அவரின் தேஜஸில் கண்கள் கூசின தேவருக்கு. கைகூப்பி நின்றார்.

“நீ ஏன் கவலைப்படுறே? உனக்குத் தான் வாட்ச்மேன் மாதிரி முருகன் இருக்கானே”

எத்தனை பெரிய வார்த்தை. இந்தப் பாமர வியாபாரிக்கு தகுமா? கைகளை உயர்த்தி ஆசி கூறினார் காஞ்சி மகா பெரியவர். பொத்திய கரங்களை எடுக்க மனசில்லாமல் திரும்பினார் தேவர்.

மவுனம் தெய்வாம்சம். சத்தம் அசுரத் தாண்டவம்.

– பா.தீனதயாளன் @ சாண்டோ சின்னப்பா தேவர், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

2) யாருக்கு இங்கே ஊனம்?

மிழ்த் திரைப்படங்கள் பல, ஊனமுற்றவர்களை நகைப்புக்கு உரிய வர்களாகச் சித்திரிப்பதைப் பார்க்கிறோம். அப்படியான காட்சிகளைப் பார்க்கும்போது, நாம் நாகரிக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.

Thiruppor Krishnanநகைச்சுவைக் காட்சிகள் என்று வந்துவிட்டால், பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களுக்குக் கொண்டாட்டம்தான். திக்குவாய், கூன்முதுகு, வாய் பேச இயலாமை, காது கேளாமை, பார்வைக் கோளாறு என எந்த ஊனத்தையும் நகைச்சுவையாக்க அவை தயங்குவதே இல்லை. அத்தகைய படங்களை, ஊனமுற்ற நம் நண்பர்களோடு சென்று பார்க்க நேரும்போது, திரையரங்கில் நாம் அடையும் தர்மசங்கடத்துக்கும் வெட்கத்துக்கும் வேதனைக்கும் அளவேயில்லை.

இப்போது, ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று கௌரவமாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஊனமுற்றவர்கள் வேறொரு மாற்றுப் புலனில் அபாரமான திறன் பெற்றவர்களாக இருப்பதை நாம் காணலாம். உதாரணமாக, பார்வையற்றவர்களின் செவிப் புலன், நமது செவிப்புலனைவிடப் பல மடங்கு கூடுதல் திறன் பெற்றிருக்கும். நடந்து வரும் ஒலியில் உள்ள வேறுபாட்டைக் கொண்டே யார் வருகிறார்கள் என்று அவர்கள் துல்லிய மாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

சிவானந்தர் காலத்தில் வாழ்ந்த பார்வையற்றவர் ஒருவர், அபாரமான தொடு உணர்ச்சி பெற்றிருந்தார். விரல்களால் ஒரு துணியைத் தொட்டுத் தடவிப் பார்த்தே, அந்தத் துணி என்ன நிறம் என்று சொல்லிவிடுவாராம். இந்தத் தகவல், சிவானந்தர் எழுதிய ‘வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு வழி’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. கண்ணில்லாத ஒருவருக்கு விரலின் நகக்கண்ணே கண்ணாகி விட்ட அற்புதம் அது!

ஊனமுற்றோரின் சிரமங்களைப் பற்றி ஊனமில்லாதோர் முழுமை யாக உணர்வது என்பது சாத்தியமே இல்லை. விளக்கின் சுடரைத் தொட்டவர்க்கே அதன் சூடு தெரியும். ஊனமுற்றோர்தான் மற்ற ஊனமுற்றோரது சிரமங்களைச் சரிவர உணர இயலும்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் கால் ஊனமுற்றவருமான ஹெச்.ராமகிருஷ்ணன் ஒருமுறை சொன்னார்… ”ஒருவகையில், நான் என் தாயைவிட என் மனைவியைக் கூடுதலாக மதிக்கிறேன். அதற்கான காரணத்தைச் சொன்னதும், என் தாயும் ஒப்புக்கொண்டார். காரணம் இதுதான். என் தாய்க்கு சாய்ஸ் கிடையாது. வேறு வழியில்லை. நான் மகனாகப் பிறந்துவிட்டேன். என்னை வளர்த்தாக வேண்டியது அவள் கடமை. ஆனால், என் மனைவியின் நிலை அப்படியல்ல. அவளுக்குச் சாய்ஸ் இருந்தும், என்னை விரும்பி மணந்தாளே?”

திருமணம் உள்ளிட்ட பல மங்கலங்கள் பலருக்கு இயல்பாக இருக்கின்றன. ஆனால், ஊனமுற்றோருக்கு அப்படியல்ல; அவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஒரு சவால்தான். அதிக சிரமங்கள் இல்லாதிருந்தும் முன்னேறத் தயங்குகிற சராசரி மனிதர்கள் எங்கே? ஊனத்தைப் புறந்தள்ளி, கடின உழைப்பால் மாபெரும் சாதனைகள் புரியும் ஊனமுற்றோர் எங்கே?

அந்தச் சாதனையை மதிக்கத் தெரியாவிட்டாலும் போகிறது; அவர்களின் உடல் ஊனத்தைத் திரைப்படங்களிலும், பிற ஊடகங்களிலும் கேலி செய்யாதிருக்கும் பண்பாட்டையாவது நாம் பெற முயலவேண்டும்.

பிறரின் உடல் ஊனத்தைக் கேலி செய்பவர்கள், மன ஊனம் கொண்டவர்கள் என்பதல்லாமல் வேறென்ன?

– திருப்பூர் கிருஷ்ணன் @ ‘நாளை நமக்காக’ – சக்தி விகடன்

3) இடுக்கண் வருங்கால் நகுக!

வன் பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஜூனியர். அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் நாடகக் கம்பெனிகளில் பாட்டுப் பாடி நடிக்கிறவங்க. அவனுக்கு ஓர் அண்ணன். அவன் பெயர் சிட்னி.

ரெண்டு பேரும் ரொம்பப் பாவம். காரணம், அவங்க அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சுட்டாங்க. விவாகரத்துக்குப் பிறகு, ரெண்டு பேரையும் வளர்க்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டம். சார்லஸ் ஸ்கூலுக்கே போனது இல்லை.

அவன் என்ன செய்வான் தெரியுமா? வீட்டு மாடிப்படியின் அடியில் இருந்த சன்னல் வழியே சாலையில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே இருப்பான். அவனுக்கு அப்பப்போ உடம்பு சரி இல்லாமல் போயிரும். படுக்கையில் அவன் படுத்து இருக்கும்போது, அவனோட அம்மா அவனுக்காக வெளியில் நடப்பதைச் சொல்லி, அழகா நடிச்சுக் காட்டுவாங்க. அவன் அம்மா பேரு ஹெனா. ‘சார்லஸ் இவ்வளவு நோஞ்சானா இருக்கானே’னு வருத்தப்பட்டாங்க.

ஒரு நாள்… அம்மா வழக்கம்போல நாடக மேடையில் பாடி நடிக்கப் போனாங்க. அன்னைக்கு முதல் முறையா சார்லஸையும் கூட்டிக்கிட்டுப் போனாங்க. நாடகத்துக்கு சரியான கூட்டம். பாதி நாடகத்துல பாடிக்கிட்டு இருக்கும்போது அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே… திடீர்னு மயக்கம்போட்டு விழுந்துட்டாங்க. பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கலாட்டா. அந்த நேரம், திடீர்னு அந்தப் பாட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது. யார்னு பார்த்தா, நம்ம சுட்டி நாயகன் சார்லஸ்.

Charlie Chaplin

வீட்டில் அடிக்கடி அம்மா பாடுவதைக் கேட்டு மனசில் பதிச்சு இருந்தான். அந்தப் பாட்டை சூப்பராப் பாடிக்கிட்டே மேடையில் வந்து நின்னான். எல்லாரும் கைதட்டினாங்க. மயக்கம் தெளிஞ்ச அம்மாவும் அசந்துட்டாங்க. அப்போது சார்லஸ் வயசு 5.

அப்போ ஆரம்பிச்சதுதான். அம்மா அடிக்கடி உடம்பு சரியில்லாமல் கஷ்டப்படுவாங்க. அண்ணனும் தம்பியும் நடிக்கப் போவாங்க. ஆனால், சார்லஸுக்கு அந்த நாடகங்கள் வெறுப்பாக இருந்தன. அவன் கேட்டான், ”அம்மா ஏன் எப்பவும் அழவைக்கும் நாடகங்களையே நடத்துறாங்க? நிஜ வாழ்க்கைதான் கஷ்டமா இருக்கு, நாம் எல்லோரையும் சிரிக்கவெச்சா என்ன?” என்றான்.

அவன் மனசு முழுக்க ஒரே எண்ணம், ‘நாம் உலகையே சிரிக்கவைக்க வேண்டும்’ என்பதுதான்.

சார்லஸுக்கு ஏழு வயதாக இருந்தபோது, மன நோய் காரணமாக அவன் அம்மா ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டாங்க. அண்ணனும் தம்பியும் தனியாக விடப்பட்டாங்க. அண்ணனையும் பார்த்துக்கிட்டுத் தன்னையும் பார்த்துக்கும் அளவுக்கு சார்லஸ் திறமைசாலியா மாறி இருந்தான். தி எயிட் லாங்ஷையர் லேட்ஸ் (The Eight Lancashire Lads) என்ற நாடகத்தில் சிரிப்பு நடிகனாக மேடை ஏறியபோது அவனுக்கு வயசு 8. அவன் மேடையில் செய்த சேட்டைகளைப் பார்த்து எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சின்ட்ரெலா, ஜிம், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று எந்த வேடத்தில் நடித்தாலும் எல்லாரையும் சிரிக்கவைத்தான்.

ஒரு முறை ஊருக்குள் டேரா போட்ட சர்க்கஸில் ஜோக்கர் வேடம்போட்டு, குழந்தைகளை வயிறு வலிக்க சிரிக்கவெச்சான். ‘உலகையே சிரிக்கவைக்கும்’ சார்லி சாப்ளினாக, சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தான்.

‘உங்கள் வாழ்வில் சிரிக்காத நாள், வீணாக்கப்பட்ட நாள்’ என்பது சார்லி சாப்ளினின் பொன்மொழி.

– ஆயிஷா இரா.நடராசன் @ சுட்டி விகடன்

4) செய்ந்நன்றி கொன்ற மகற்கு ஏன் உய்வில்லை?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள் 110)

எந்தப் பாவத்துக்கும் பிராயச்சித்தம் உண்டு. ஆனால் நன்றி மறத்தலுக்கு மட்டும் இல்லை என வள்ளுவர் ஏன் நன்றி மறத்தலை குறித்து இவ்வளவு கடுமையாக கூறினார் தெரியுமா?

Thiruvalluvarஒருவரிடம் உதவி பெறும் ஒருவர், அந்த உதவியை மறந்து நன்றி கெட்டத்தனத்துடன் நடந்து கொண்டால் உதவி செய்பவருக்கு மேலும் மேலும் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் போய்விடும். அதன் மூலம் உதவிச் சங்கிலியானது அறுபட்டுவிடும். ஒருவர் இவ்வாறு செய்யும் தவறு மூலம் பலர் உதவி பெறும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். மேலும் தனக்கு செய்த உதவியை மறக்கும் பண்புடைய ஒருவர், நிச்சயம் பிறருக்கு உதவி செய்யும் குணத்தை பெற்றிருக்கமாட்டார்.எனவே தான் வள்ளுவர் நன்றி மறத்தலை கடுமையாக சாடியிருக்கிறார்.

சமீபத்தில் நம்மிடம் உதவி கேட்டு ஒருவர் வந்தார். இதற்கு முன்பு அந்த உதவியை அடியேன் செய்தவர்கள் எல்லாம் அந்த உதவியை பெற்றுக்கொண்டு பின்னர் நன்றி மறந்து நடந்துகொள்ளவே இந்த முறை நாம் சற்று யோசித்து தான் செய்தோம். நம்மால் இயன்ற உதவியை பிரதிபலன் எதிர்பாராது பிறருக்கு செய்யவேண்டும் என்ற சிந்தனை நமக்கு இருந்தாலும் அப்படி ஒரு தடுமாற்றம் நமக்கு ஏன் வந்தது என்று யோசித்தோம். நன்றி கெட்டு சிலர் நடந்துகொண்ட விதம் தான் அதற்கு காரணம் என புரிந்தது. அப்போது தான் வள்ளுவர் கூறிய இந்த குறள் நினைவுக்கு வந்தது.

சராசரி வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும்போது குறளின் பொருள் மிக மிக ஆழமாக விரிவடைந்துவிடுகிறது.

அணுவைத் துளைதேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

என்று ஒளவை சொன்னதன் காரணம் இது தான்.

4) மாவிளக்கு ஏந்திய தங்கமணி!

ர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி நடந்தது இது. நாய் ஒன்று மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்றது, வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது. ‘மெள்ள வா ராசா’ என்றை அதனை அன்புடன் வழிநடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர்.

gallerye_113923121_1284423

விசாரித்தபோது, “என் பெயர் தங்கவேலுங்க. ஓரு முறை சந்தைக்கு போயிருந்த போது சின்னக்குட்டியா இவன் கிடைச்சான், பார்த்த உடனேயே எனக்கு பிடிச்சு போச்சு துாக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எனக்கு இரண்டு பொம்பிளை பிள்ளைங்க இவனை பையனா நினைச்சு வளர்த்துட்டு வர்ரேன் மணின்னு பேர் வச்சுருக்கேன், எங்க குடும்பத்துல ரொம்ப முக்கியமான ஆளு இவன்.”

எனக்கு மணியும் மணிக்கு நானும் இருந்தா போதும் வேறே எதுவும் வேணாம் எங்களுக்குள்ள அப்படி ஒரு பாசம் ஏற்பட்டு போச்சு அவன் இல்லாம எனக்கு பொழுது விடியவும் செய்யாது முடியவும் செய்யாது. கேனை மட்டும் வண்டியில வச்சுட்டா போதும் மணி கரெக்டா கொண்டு போய் சொசைட்டியில பாலை சேர்த்துருவான் அங்க இருக்கிறவங்க பாலை எடுத்துக்கிட்டு திரும்ப வெறும் கேனை வச்சதும் அதே போல பத்திரமா திரும்ப கொண்டு வந்துடுவான்.

அம்மனுக்கு மாவிளக்கு ஏந்திச் செல்லும் தங்கமணி
அம்மனுக்கு மாவிளக்கு ஏந்திச் செல்லும் தங்கமணி

வழக்கம் போல வண்டியில போய் பாலைக்கொடுத்துட்டு திரும்ப வரும்போது தாறுமாற வந்த டெம்போ வாகனம் மணி மேலே மோதிருச்சு.ரத்த வெள்ளத்தில கிடந்த மணியை பார்த்துட்டு எல்லோரும் உயிர்போயிருச்சுன்னு நினைச்சு எனக்கு தகவல் கொடுத்தாங்க அழுது புடிச்சு ஒடிப்போய் பார்த்தேன், கண்ணுல மட்டும் ஜீவனோட என் மணி வலியில எழுந்திருக்கமுடியாம முனகிக்கிட்டே படுத்திருந்தான் என்னைப்பார்த்ததும் சந்தோஷத்தோட தன் சக்தியெல்லாம் திரட்டி எந்திரிக்க பார்த்தான்,அவனால முடியல அப்படியே படுத்துட்டான்.

டாக்டர்ட்ட காட்டினேன், அவரு முதலுதவி செஞ்சார் ஆனா நாயை காப்பாத்த முடியாது இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சு இது பிழைக்கிறதும் கஷ்டம் பிழைச்சாலும் நடக்கிறது கஷ்டம் போற வழியில குப்பையில போட்டுட்டு போயிடு ஒரு நாள்ல அதுவே செத்துரும் என்று சொல்லிட்டார். வேற டாக்டரா பார்த்தேன், அவர் நாயை காப்பாத்திரலாம் ஆனா ராஜ வைத்தியம் பண்ணணும் என்றார். எதுவா இருந்தாலும் நான் என் மணிக்காக செய்வேன் என்றதும் ஒரு நாளைக்கு மூன்று முறை வென்னீரால் மெதுவாக நீவி விடுவது போல குளிப்பாட்டணும் இரண்டு ஊசி போடணும் ஊசி விலை கொஞ்சம் கூடுதல்,நிக்க நடக்க பொறுமையா பயிற்சி கொடுக்கணும் நேரத்துக்கு மருந்து மாத்திரை கொடுக்கணும் ஒரு பச்சைக்குழந்தையா பார்த்துக்கணும் என்றபடி மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.

டாக்டர் சொன்னபடியெல்லாம் செய்த தங்கவேலு கூடுதலாக டாக்டர் சொல்லாததையும் செய்தார். அது ஊர் தெய்வமான மாரியம்மனிடம் என் மணி பழையபடி நடந்தா மணியே நடந்துவந்து மாவிளக்கு போடுவான்னு அவன் சார்பாக வேண்டிக்கொண்டார். மூன்று மாதங்கள் இப்படி மணியை மணியாக பார்த்துக்கொண்டதன் பலனாக மணி பழைய மணியாக கம்பீரமாக வலம் வந்தான். இரண்டு நாள் முன்பாக நடந்த திருவிழாவில் ஊரில் உள்ள பக்தர்கள் எல்லாம் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு மாவிளக்கு போட ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் தங்கவேலுவின் உதவியுடன் மணி ஒரு பக்தனாக தனது வண்டியில் வைத்து மாவிளக்கு எடுத்துப்போய் அம்மன் காலடியில் சேர்த்தபோது மணியை ஒரு பக்கமும் தாயன்புக்கு ஈடாக நாயின்மீது அன்பைக்காட்டி அதற்கு மறுஜென்மம் கொடுத்த தங்கவேலுவையும் மறுபக்கமும் பாராட்டினர்.

– முருகராஜ் @ நிஜக்கதை – தினமலர்

5) சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை – அந்த
ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படி இல்லை!

(ஒரே ஒரு ஊரிலே)

படிச்சிருந்தும் தந்தைதாயை மதிக்க மறந்தான்- ஒருவன்
படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்சமுயல் அத்தனைக்கும் மூன்று காலென்றாநொருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவலிருந்தான்

(ஒரே ஒரு ஊரிலே)

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்-அதைப்
பிளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்-அதன்
உள்ளத்திலே வீடுகட்டி தானுமிருந்தார்!

(ஒரே ஒரு ஊரிலே)

சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை-ஒரு
துணையில்லாமல் வந்தெல்லாம் பாரமுமில்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா – தம்பி
நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா…
நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா…

(ஒரே ஒரு ஊரிலே)

– கவியரசு கண்ணதாசன் @ ‘படிக்காத மேதை’

6) திருவண்ணாமலை கிரிவல மகிமை!

“அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்று, பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். அத்துடன் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் மகத்தான தானம் செய்த பலன் கிட்டும். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். வலமாக வைத்த ஓரடிக்கு முழுப் பலன்களும் சித்திக்கும். அருணாசலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும். வலம் வரவேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

Thiruvannamalai

அண்ணாமலையைத் தொழுது கிரிவலம் வந்தால் மது, மாது, சூது, கொலை, களவு என்ற பஞ்சமகா பாதகங்கள் தொலையும்” என்றெல்லாம் புராணங்கள் அருணாசல மலைவல மகிமை பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசுகின்றன. அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. காரணம் அன்றுதான், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியான அன்னை, அண்ணலாகிய அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள். அதுமட்டுமல்ல; அன்று சந்திரன் தனது பூரண கலைகளுடன் முழுமையான பலத்துடன் காட்சி தருகிறான்.

சிவபெருமான் நந்தியாகவும், லிங்கமாகவும் மாறி மாறிக் காட்சி கொடுக்கும் திருவண்ணாமலையில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாக நம்பிக்கை உள்ளது. மலை வலம் வருவதால் தங்கள் பிரச்னைகளும், நோய்களும் நீங்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலையைச் சுற்றும் பாதையின் நீளம் 14 கி.மீ. கிரிவலப் பாதையின் பல இடங்களிலிருந்து அண்ணாமலையைப் பார்க்கும் போது அது பல்வேறுபட்ட வடிவங்களில் காட்சியளிக்கின்றது. கோயிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது லிங்க வடிவிலும், பிற இடங்களிலிருந்து பார்க்கும்போது வேறு பல வடிவங்களிலும் காட்சி அளிக்கும் மலையாக அண்ணாமலை விளங்குகிறது.

பா.சு.ரமணன் @ ‘கிரிவலம்’ – புத்தகம் புதுசு, தினகரன்

7) ஏ.டி.எம். இயந்திரம் வந்த கதை!

ஸ்காட்லாந்தில் ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசு வழங்க, வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றார். ஆனால் கேஷ் கவுண்டரை நெருங்கும்போது, தைமாகிவிட்டது என்று கவுண்டரை மூடிவிட்டு ஊழியர் சென்றுவிட்டார். கையிலிருந்த காசில் சாக்லெட்டாவது வாங்கிக்கொண்டு போகலாம் என்று சாக்லேட் வெண்டிங் மெஷினில் காசைப் போடா, சாக்லேட் கொட்டியது.

நம் கணக்கில் பணமிருந்தும் பரிசுப் பொருள் வாங்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் நெஞ்சை அரித்தது. பூட்டிய கவுண்டரையும் சாக்லேட் வெண்டிங் மெஷினையும் மாறி மாறி அவர் கண் முன்னாள் தோன்ற, அதனால் பிறந்தது தான் ஏ.டி.எம். எந்நேரமும் பணமெடுக்க வழி இருந்தால் பிரச்சனை தீரும் என தீவிரமாக யோசித்ததால், உருவானது முதல் ஏ.டி.எம். 1969 இல் லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் முதல் ஏ.டி.எம். அமைக்கப்பட்டது.

காதல் மனைவிக்காக முதல் ஏ.டி.எம்.மை உருவாக்கிய ஜோன் ஷெப்பர்ட் 2010 ஆம் ஆண்டு மறைந்தார். இருந்தாலும் ஏ.டி.எம். உள்ளவரை அவர் புகழ் இருக்கும்.

– ம.நடராசன், சேலம் @ குமுதம்

(அப்புறம் நண்பர்களே… ATM என்பதன் விரிவாக்கத்தை நிறையே பேர், ANY TIME MONEY என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அல்ல. AUTOMATED TELLER MACHINE என்பதன் சுருக்கமே ATM!)

8) நல்லபுள்ள !

“பையன் எப்படி தரகரே?”

“வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர்னு எந்தப் பழக்கமும் இல்லாத பத்தரை மாத்து தங்கம் பையன்!”

– தூத்துக்குடி வி.சகிதாமுருகன் @ குமுதம்

******************************************************************************************
“விரும்பின க்ரூப்ல இடம் கிடைச்சிடுச்சுன்னு உங்க பையன் சந்தோஷமா சொல்லிட்டு போறானே… சயின்ஸ் க்ரூப்லயா மேத்ஸ் க்ரூப்லயா?”

“வாட்ஸ் அப் க்ரூப்ல!”

– ஜெயாப்ரியன் @ குமுதம்

******************************************************************************************

9) படித்ததில் பிடித்தது

சண்டைபோடும் போது இல்லாத கூச்சம், சமாதானம் ஆகும்போது வந்துவிடுகிறது.
– twitter.com/aiyswarya

பேயைப் பார்த்தேன்னு சொன்னாக்கூட பத்து பேர் நம்புறான். சாமியைப் பார்த்தேன்னு சொல்லிப் பாருங்க தெரியும் சேதி.
– twitter.com/mekalapugazh

work hard

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

‘ஆண்மை’ என்பது எது ? – கண்டதும் கேட்டதும் (6)

சாதனை என்பது சுலபமா? – கண்டதும் கேட்டதும் (5)

வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

===============================================================================

[END]

7 thoughts on “‘திருவண்ணாமலை கிரிவல மகிமை!’ – கண்டதும் கேட்டதும் (7)

  1. மாற்றுத் திறனாளர்களைக் குறித்தும் அவர்களிடம் இச்சமூகம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் தாங்கள் கூறியுள்ளது உண்மையே.
    திருவண்ணாமலையின் கிரிவலச் சிறப்புகளை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

  2. கண்டதும் கேட்டதும் பல சுவையான பழங்கள் சேர்ந்து செய்த பஞ்சாமிர்தம் போல் உள்ளது.

    மகா பெரியவர் சாண்டோவுக்கு அளித்த தெய்வ வாக்கே , அவர் குமரன் அவரை எந்த விதத்தில் தடுத்தாட் கொண்டுள்ளார் என்பதை சொல்லவும் வேண்டுமோ …

    ஊனமுற்றோரின் சிரமங்களை ஊனமில்லாதோர் கண்டிப்பாக உணர முடியாது என்பது 100/100 உண்மையான வரிகள்.

    ஒருவரிடம் உதவி பெறும்ஒருவர் கண்டிப்பாக தனக்கு ஒரு சிறிய உதவி ஆனாலும் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் . நானே நிறைய முறை நன்றியை எதிர்பார்த்து இருக்கிறேன். அது தவறு . இந்த attitude ஐ மாற்றினால் தான் நாம் மீண்டும் நன்றியை எதிர்பார்க்காமல் உதவி செய்ய தோன்றும். அவர்கள் அப்படித்தான் என்ற எண்ணம் ஏற்பட்டால் நாம் நன்றியை எதிர் பார்க்காமல் நாம் கடமையிலிருந்து தவற மாட்டோம்

    சார்லி சாப்பலின் பொன்மொழி FANtASTIC

    திருவண்ணாமலை கிரிவல மகிமை அருமை. ஒரு முறை என் கணவருடன் கிரிவலம் சென்று இருக்கிறேன். அவர் உயிர் பிரியும் பொழுது கடைசியாக சொன்ன வார்த்தை ‘அருணாச்சலம் ‘

    மாவிளக்கு ஏந்திய தங்கமணியை பற்றி ஏற்கனவே தினமலரில் படித்து மெய் சிலிர்த்தேன். மனிதர்களிடம் வைக்கும் பாசத்தை விட நாய்களிடம் வைக்கும் பாசமே மேல். நன்றி மறவாத உள்ளம் படித்தவை அவை. மனிதர்களிடம் வைக்கும் ” பாசம் ” வழுக்கி விடும்

    WORK HARD IN SILENCE LET SUCCESS MAKE THE NOISE – அருமையான வரிகள்

    வாழ்க ….. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. வணக்கம் சுந்தர்.நல்ல தொகுப்பு.நிஜகதை என்றாலும் இப்படி ஒரு அன்பு சாத்தியமா என்றே தோன்றுகிறது.என்ன பொறுமையாக கவனித்து கொண்டு இருக்கிறார் . வாழ்த்துக்கள். உதவி செய்பவர்களை ஏமாற்றுவது , மறப்பது, என் மக்கள் இருப்தால்தான் பலருக்கு உதவி செய்யும் எண்ணம் போய்விடுகிறது. எல்லாமே அருமை.நன்றி .

    1. தொடர்ந்து வருகை தந்து உங்கள் கருத்துக்களை தவறாமல் தெரியப்படுத்துவதற்கு நன்றி விஜி அவர்களே.

  4. டியர் சுந்தர்,

    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. இது தவிர நாம் வலிய உதவினால் கூட நம்மை இளிச்ச வாயர்கள் பட்டியலிலும் சேர்க்கிறார்கள். அது சமயம் நாம் ஏன் நல்லவர்களாக இருக்கின்றோம் என்று தோன்றும் அளவு செய்து விடுகிறார்கள்.

    தேவரின் பெருமையே பெருமை.

    மனிதர்களையே சரியாக நடத்தாத இந்த காலத்தில் வாயில்லா ஜீவன் மேல் இத்தனை அன்பு கொண்ட அவர் மிகவும் பாராட்டப்பட வேண்டியர்.

  5. அத்தனையும் முத்துக்கள். புதுப் புது தகவல்கள். மகா பெரியவரே தேவருக்கு ஆசி கூறி, முருகன் உன் வாட்சமேன் என்று கூறியிருக்கிறார் என்றால் அதைவிட வேறு என்ன வேண்டும்.

    ஊனமுற்றோர்ரை தமிழ் திரைப்படங்களில் கேலி செய்து நகைச்சுவை காட்சி அமைப்பது பற்றி திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது சரியான சவுக்கடி. செய்தி வாசிப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறிய கருத்துக்கள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன.

    சார்லி சாப்பில் மறக்க முடியாத ஒரு மாபெரும் கலைஞன். சொந்த வாழ்க்கையில் எத்தனையோ சோகங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்துக்கொண்டு, பிறரை கலகலப்பூட்டியவர். அவரைப் பற்றி நினைவூட்டியமைக்கு நன்றி.

    நன்றி மறத்தலை பற்றிய வள்ளுவரின் குறள் குறித்த உங்கள பார்வை நூற்றுக்கு நூறு சரி. உண்மை தான். நம்மிடம் உதவி பெற்றுக்கொண்டு நன்றி மறந்து நடந்துகொண்டால், மேற்கொண்டு யாருக்கேனும் உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணமே போய்விடுகிறது.

    மாவிளக்கு ஏந்திய தங்கமணி உண்மையில் நெஞ்சை நெகிழவைத்துவிட்டான். அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு தான் எத்தனை நம்பிக்கை… கடவுள் பக்தி. ஆறறிவு மிருகங்களுக்கு கூட இது இல்லையே…

    திருவண்ணாமலை கிரிவல மகிமை அற்புதம். உடனே கிரிவலம் செல்லவேண்டும் என்கிற ஆசை அரும்புகிறது.

    இறுதியில் அளித்த ஜோக்குகள் உண்மையில் கல கல ராகம்.

    அருமையான தொகுப்பு.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  6. கண்டதும் கேட்டதும் – ஒரு மலர் கண்காட்சிக்கு சென்ற அனுபவத்தை தருகிறது..ஒவ்வொரு தலைப்பும்,அதை ஒட்டிய செய்தியும் ..என்ன சொல்ல..சூப்பரோ சூப்பர்.

    திருவண்ணாமலை கிரிவல செய்தி – என்னை மேலும் ஈர்க்கிறது..ஈசனாரின் அருள்..எப்போது திருவண்ணாமலை தரிசனம் வாய்க்குமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *