Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > “நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

print
ன்று ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் பல கருத்துள்ள பாடல்களை இயற்றியிருக்கிறார். கம்ப ராமாயணத்திலும் பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

Kannadasanநாத்திகம் பேசிக்கொண்டிருந்த கண்ணதாசனை ஆத்திகத்தின் பக்கம் திருப்பிய பெருமை காஞ்சி மஹா பெரியவருக்கும் திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கும் உண்டு. தனது படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர் படம். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்! கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

(கண்ணதாசன் அவர்களை பற்றி நமது தளத்தில் பல பதிவுகள் வெளியாகியுள்ளன. கண்ணதாசனின் மகன் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களின் பேட்டியும் நமது ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவுகளின் முகவரி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

காஞ்சி மஹா பெரியவரின் பெருமைகளை கண்ணதாசன் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது அவர் தினமணியில் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ தொடர் எழுதும்போதே சொல்லிவிட்டார். அந்த தொடரின் பல அத்தியாயங்களின் மகா சுவாமிகளின் மகத்துவத்தை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். தற்போது ‘சேவையில் நிம்மதி’ என்கிற ஒரு அத்தியாயத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை மஹா சுவாமிகளின் அருமை பெருமைகளை குறிப்பிட்டு கூறுகிறார் பாருங்கள்…

கவியரசரின் பிறந்த நாளுக்கு இதைவிட சிறந்த பதிவை அளிக்க முடியுமா என்ன?

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” 

`பிறருக்குச் சேவை செய்வதே, பிறவி எடுத்ததன் பயன்’ என்பார்கள்.

நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டுவிட்ட ஞானிகளும், தலைவர்களும், இந்தப் பரத கண்டத்தில் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

சுயநலமும் இங்கேதான் அதிகம்; பொது நலமும் இங்கே தான் அதிகம்.

ஆதி சங்கரர், ராமானுஜர், மகாவீரர், புத்தர் ஆகிய சமய ஞானிகள்; காந்திஜி போன்ற தேசத்தலைவர்கள்; இவர்களெல்லாம் சேவைக்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

அந்த வரிசையில், நம் கண் முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்; பிஞ்சுப் பருவத்திலேயே தன்னை ஒழுக்கச் சேவைக்கு ஒப்படைத்துக் கொண்டவர்.

கொடிய நாத்திகன் கூட நாக்கிலே பல்லைப் போட்டு, அவர்கள் மீது ஒரு குற்றத்தைச் சுமத்த முடியாது.

ஒரே நாளில் கோடி ரூபாய் வேண்டுமென்றாலும், `செக்’கிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, அதை அவரையே நிரப்பிக் கொள்ளச் சொல்லக் கூடியவர்கள் இந்த நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

ஆனால், மறந்தும் கூட அவர் செல்வத்தை நினைத்து அறியாதவர்.

எந்தக் காரியத்துக்கும் பிறரை அண்டி அறியாதவர்.

தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்தை ஒருவகைக் `கறை’யும் இல்லாமல் காப்பாற்றியவர்.

இந்து சமயத்துக்கும் மனித குலத்துக்கும் அவர் ஆற்றியுள்ள சேவைகள் கணக்கிலடங்காதவை.

அண்மையில் தேனம்பாக்கம் குடிசையில், ஒன்பதரை மணிக்கு நான் அவரைச் சந்தித்தேன்.

இந்த நாட்டின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்திக்குக் கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்திரா காந்தி ஒரு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தும் கூட அவரோடு ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

ஆனால், நான் வந்திருப்பதாக ஜன்னல் வழியாகச் செய்தி சொல்லப்பட்டதும், தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்கள் அரிக்கேன் விளக்கை ஏற்றிக் கொண்டு எழுந்து வந்து விட்டார்கள்.

என்னை அழைத்துச் சென்றவர்கள், காஞ்சிபுரம் சங்கரபக்த ஜனசபாவைச் சேர்ந்த திரு.வைத்தியும், வைத்தாவும் ஆவார்கள்.

ஸ்ரீ பெரியவர்கள், தான் தங்கியிருக்கும் குடிலின் நிலைப்படியிலேயே ஒரு பாயைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்.

என்னோடு நாற்பத்தைந்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

குலசேகர ஆழ்வாரைப் பற்றியும், கொங்கு நாட்டைப் பற்றியும், மலையாள மொழியைப் பற்றியும் விவாதித்தார்கள்.

`எனக்கு ஆரோக்கியம் வேண்டும்’ என்று யாசித்தேன்.

`நல்ல சேவை செய்யிறே. நல்லா இருப்பே!’ என்று ஆசீர்வதித்தார்கள்.

`வர்றவா! எல்லாம் உன்னைப் பத்தித்தான் சொல்றா!’ என்றார்கள்.

அந்த முக்கால் மணி நேரத்தில், ஆண்டவனுடனேயே பேசிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

சேவை, சேவை; சேவையைத் தவிரத் தனது தேவை என்றே ஒன்றை அறியாத ஒரு மகாத்மாவின் முன்னால் நான் கைகட்டி மெய்மறந்து நின்றேன்.

அந்த முக்கால் மணி நேரத்தில், ஆண்டவனுடனேயே பேசிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. சேவை, சேவை; சேவையைத் தவிரத் தனது தேவை என்றே ஒன்றை அறியாத ஒரு மகாத்மாவின் முன்னால் நான் கைகட்டி மெய்மறந்து நின்றேன்.

இரவு வெகு நேரம் ஆகியும் கூட எனக்காக அவர்கள் எழுந்து வந்ததும், என்னிடம் மனம் விட்டுப் பேசியதுமே எனக்குக் கிடைத்த புது ஆரோக்கியமாகத் தோன்றியது.

அவர்களுடைய நிம்மதி நமக்கெல்லாம் இருந்தால் போதாதா?

நீண்ட காலத் தன்னலத் துறப்பும், சேவையுமே அவருக்கு நிம்மதியைத் தந்து, சமயத்து மக்களுக்கும் நிம்மதியைத் தந்திருக்கின்றன.

அவரைப் போல நாம் ஆக முடியாது.

Maha Swamigal

விஞ்ஞானத்தின் நாகரிக வசதிகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணெண்ணெய் விளக்கும், தன் கை விசிறியுமாய் அவர் வாழ்கிறார்.

சீடர்களைக் கூப்பிட்டுக் கை கால் பிடிக்கச் சொல்லும் பழக்கம் கூட அவருக்குக் கிடையாது.

காம, குரோத, லோப, மத, மாச்சரியங்கள் அனைத்தையும் துறந்தவர்.

சில பிராமண நண்பர்கள் அரசியலில் தேர்தலுக்கு நிற்பார்கள். ஸ்ரீ பெரியவர்களிடம் உள்ள ஈடுபாட்டின் காரணமாக அவரிடம் சென்று ஒரு ஸ்ரீ முகம் கேட்பார்கள். யாரையும் அவர் ஆதரிக்க மறுத்து விடுவார்.

அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளாத ஒரே பீடம், காஞ்சி காமகோடி பீடம்தான்.

அவர் லெளகீகத்தில் ஈடுபட்டவர் அல்ல என்றாலும், லெளகீகவாதிகள் எப்படி வாழ்வது என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

விலங்கு இருந்தால் தானே கால் வலிக்கும்; பணம் இருந்தால் தானே தூக்கம் கெடும்.

அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, பொதுச் சேவை.

முடிந்தால் பத்துப் பேருக்கு உதவு; இல்லையென்றால் தெருவிலே போகும் போது, கண்ணாடித் துண்டு கிடந்தால் அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போ.

சாலையில் காரில் அடிபட்டு ஒரு நாய் கிடந்தால் அதை எடுத்து அடக்கம் செய்.

அநாதைப் பிணத்துக்குத் தோள் கொடுத்துச் சுடுகாட்டுக்குத் தூக்கி கொண்டு போ.

ஆபத்தில் சிக்கிச் கொண்ட யோக்கியனுக்குக் கைகொடு.

சேவை செய்யும் போது பலனை எதிர்பார்க்காதே.

உயர்ந்த இடம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சேவை செய்யாதே.

தண்ணீரில் வாழுகின்ற மீன் அதை விட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது. வாழ முடியாது.

நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதன் பேர்தான் கவளம்.

`இது நமது கடமை’ என்று ஒரு சேவையைச் செய்.

ஊருக்குச் செய்ய முடியாவிட்டாலும் உன் குடும்பத்துக்குச் செய். அதன் பெயரும் சுய தர்மம்தான்.

பொதுச் சேவை என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு அதனால் பயன் இருந்தாலொழிய, எந்தத் தலைவனையும் நம்பி இறங்காதே.

வில்லங்கங்கள் இல்லாத சேவையில் ஒரு நிம்மதி இருக்கிறது.

மிக முக்கியமான சேவை, தாய்க்கு மகன் செய்யும் சேவையாகும்.

வங்காளத்து இந்துக்கள், காலையிலேயே தாயை வணங்குகிறார்கள். ஒரு தட்டிலே தன் தாயின் சுத்தமான காலை வைத்து, அதைக் கங்கா தீர்த்தத்தால் கழுவி, அந்தத் தண்ணீரையே குடிக்கிறார்கள்.

பெரும்பாலான வங்காள குடும்பங்களில், மாமியார் மருமகள் சண்டை பார்க்க முடியாது.

தாயைத் தெய்வமாகக் கருதி, அவளுக்குச் செய்யும் சேவையை முதற்சேவையாகக் கொள்ளவேண்டும்.

நல்ல மனைவி வாய்த்தவன், அந்த மனைவிக்கே கூடச் சேவை செய்வதில் தவறில்லை.

சேவை தாயிடம் தொடங்கி, தாய் நாடு என்று வளர்ந்து, தெய்வ சேவையில் முடிவடைகிறது.

இத்தகைய சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன், இருக்கின்ற ஆடைகளை அணிந்து கொள்ளுவான்; ஆனால் அதை அழுக்கில்லாமற் பார்த்துக் கொள்ளுவான்.

கிடைக்கின்ற உணவைச் சாப்பிடுவான். ஆனால், அது ஆரோக்கியமானதா என்பதை மட்டும் கவனிப்பான்.

எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம்.

இந்த நிலையை, `இயக்கத்தில் இயங்காமை’ என்பார்கள்.

அதாவது இயங்கிக் கொண்டே இயங்காமல் இருப்பது.

கடலின் மேற்பகுதி இயங்கும்போது அடிப்பகுதி இயங்காமல் இருக்கிறதல்லவா? அதுபோல.

ஒரு நாள் சமைக்க முடியாது என்று மனைவி படுத்து விட்டால், இவன் தானே சமையல் செய்வது என்று சந்தோஷமாக ஆரம்பிப்பான்; அதைப் பார்த்து அவளே வந்து சேர்ந்து கொள்வாள். நிம்மதி வந்து விடும்.

அடம் பிடிக்கின்ற பிள்ளையை அடிக்க மாட்டான்; அரவணைத்துக் கொண்டு போவான்.

துரோகம் செய்கின்ற நண்பர்களை மன்னித்து விட்டு, விலகி விடுவான்.

கூலியைக் குறைத்துக் கொடுக்கும் முதலாளிக்கு `கடவுள் கூலி கொடுப்பார்’ என்று நிம்மதியடைவான்.

நோய் வரும்போது, `இது கர்மவினை’ என்று ஆறுதல் அடைவான்.

கடன் வரும்போது, அமைதியாக அதனைச் சமாளிப்பான்.

தாயின் சேவையில் வாழ்வைத் தொடங்குகிறவன், தர்மம் தவறிப் போக மாட்டான்.

இறுதியில் தெய்வத்தோடு ஐக்கியமடைவான்.

உலகத்துக்கு அவனே தெய்வமாகக் காட்சியளிப்பான்.

இப்போதும் சேவையைப் பற்றி உங்களிடம் பேசுவதற்கு நான் காஞ்சிப் பெரியவர்களையே துணைக்கு அழைக்கிறேன்!

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லாப் பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே. சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டுமென்கிறேன்.

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவை வேறா என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவை வேறா என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

அதோடு கூட, `அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால் தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாய் பகவான் நிச்சயமாக நம்மைச் சொந்தக் கஷ்டத்திலிருந்து கை தூக்கி விடுவான். ஆனால், அதை இப்படி ஒரு லாப-நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும், நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்லுவோம்.

மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில், கால்நடைகளுக்காகவே குளம் வெட்டுவது, அவை உராய்ந்து தினவு தீர்த்துக் கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல் கொடுப்பதை `கோ க்ராஸம்’ என்று பெரிய தர்மமாகச் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. `க்ராஸம்’ என்றால் ஒரு வாயளவு. இங்கிலீஷில் புல்லை GRASS என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.

யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவசம், முதலியன இந்த உலகத்திலிருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகத்திலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும், நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியமான அவமானத்தையும் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிடவேண்டும்.

`வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுதுபோக்குவது ஒரு தப்பா’ என்று கேட்பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்: பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான்; வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகாரச் சேவையைத்தான் செய்தான். எத்தனை பேருடைய எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான். குன்றைத் தூக்கிப் பிடித்தது, விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால், கோபர்களைக் காப்பதற்காகவே அத்தனை பெரிய மலையைப் பாலகிருஷ்ணன் தூக்கினான்.

சின்னக்குழந்தை, விஷம் கக்கும் காளிங்கன் படத்திலே நர்த்தனம் செய்தது. வெளியில் பார்த்தால் விளையாட்டு; உண்மையிலேயே அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காகச் செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ சேவை. `அவனைப் போல் விளையாடியவனும் இல்லை; அவனைப் போல சேவை செய்தவனும் இல்லை’ என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லெளகீக சேவை மட்டும் இல்லை; ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளி கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான்; சிரித்துக் கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே, அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிடம் சிரிப்பும், சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும். தைரியம், ஊக்கம் இவற்றோடு.

பகவான் எடுத்த பல அவதாரங்களில், கிருஷ்ணாவதாரத்தில் தான் சேவை அதிகம். ராமாவதாரத்திலும் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து, நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுயநலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.

நமக்குத் `தீட்டு’ ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கி இருக்கிறோமல்லவா! அவ்விதமே உலகுக்கு உபயோகமாகச் சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்குத் தீட்டு நாள் என்று கருதி, அவரவர் தம்மாலான சேவைகளில் ஈடுபட வேண்டும்.

ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால், சகல பிராணிகளுக்கும் மாதா, பிதாவாக இருக்கப்பட்ட பரமேசுவரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர், திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறார்.

`நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாகக் கோயில் பகவற் கதாமே’.

இதற்கு அர்த்தம், `மக்களுக்குச் செய்கிற உதவி சாக்ஷாத் ஈசுவரப் பிரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்’ என்பது.

நன்றி : கவியரசு கண்ணதாசன் – ‘அர்த்தமுள்ள இந்துமதம்’  | www.rightmantra.com

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================’

Please check transcripts of our excl. interview with Thiru.Gandhi Kannadasan

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

===============================================================================

Also check :

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

கடவுள் சொல்லாத ஆறுதலை சொன்னவர் – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

===============================================================================

[END]

8 thoughts on ““நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

  1. கவியரசு கண்ணதாசனின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு பாடல்களும் காலத்தால் அழியாதவை. நம் மனம் சோர்வடையும் பொழுது அவரது பாடல் நமக்கு ஒரு மருந்து போல் நம் மனக் குறையை போக்கும்.

    மகா பெரியவருடன் அவருடைய 45 நிமிட சந்திப்பு எவ்வளவு பெரிய கொடுப்பினை கவிஞருக்கு. அவர் சேவையை பற்றி விளக்கும் ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.. மக்கள் சேவையே மகேசன் சேவை ….லோகா சமஸ்தா சுகினோ பவந்து ………

    அவர் இன்னும் சில காலம் நம்முடன் இருந்து இருக்கலாம். அவருடைய பாடலான , வாழ நினைத்தால் வாழலாம் … அத்திக்காய் காய் காய் காய் .. ,, அன்று வந்ததும் இதே நிலா … எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ..

    ///இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் , இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…./// இந்த உலகம் இருக்கும் வரை அவர் புகழ் நிலைத்து இருக்கும்.

    Lovely Article ……….

    நன்றி
    உமா வெங்கட்

  2. மிகவும் அருமை உங்கள் பதிவும் அதற்க்கான
    முயற்ச்சியும் அருமை
    வாழ்த்துக்கள் மேலும்
    தொடரட்டும் தங்களின்
    இந்த ஆன்மீக முயற்சிக்கு
    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் தங்களின்
    மேலான இறைப்பணி . மிக்க நன்றி..

  3. மஹா பெரியவா மலர் திருவடிகளை சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன். அவருடைய உபதேசங்கள்தான் எத்தனை! எத்தனை!

    நம் வாழ்வில் அவருடைய அறிவுரைகளை பின்பற்றினாலே நாம் சிறந்த மனிதர்களாக இருப்போம். திரு கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாகும். அவருடைய பிறந்த நாளான இன்று அவரை பற்றிய இந்த பதிவை வெளியிட்டதற்கு தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    ஓம் நம சிவாய.

  4. மகா பெரியவரை பற்றியும், சேவை பற்றியும் இவ்வளவு சிறப்பாக எடுத்துரைக்க கவியரசரை தவிர வேற யாராலும் இயலாது

    அற்புதமான பதிவு

    கவியரசரின் பிறந்த நாளுக்கு இதை விட சிறந்த மரியாதை வேறு ஏதும் இல்லை

    நன்றி

  5. It is immense a very great pleasure in reading Shri Kaviarasu Kannadasan’s meeting with Maha Periyava. While I am reading this article, I myself felt an eternal joy. In this article, I read about Mahaperiyava’s advise about services to others. Really FANTASTIC.

    Thanks to God. In this Janma I got a Maravallus Kaliyuaga Pokisham “Mahaperiyava”. There is no word in any language for describing about Mahaperiyava’s Mahima and Miracles. Even I am feeling an explicable eternal joy while I am writing this comment.

    Mahaperiyava, Mahaperiyava Mahaperiyava if I chant one crore time the eternal joy is increasing like any thing. I am finishing my comment by giving below Periyava’s Gayatheri

    KANCHI VASAYA VIDMAHE SANDHA ROOPAYA DEMAHI. THUNNUS CHANDRASEKHANRANDRA PRACHOTAYAT

    MAHA PERIYVA THIRUVADI CHARANAM

    YOURS MAHA PERIYAVA’S DEVOTEES’ SLAVE

    S. CHANDRASEKARAN

  6. அருமையான பதிவு!!

    திரு.கண்ணதாசன் அவர்களின் “அர்த்தமுள்ள இந்து மதம்” அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

    மஹா பெரியவா சரணம் சரணம்!! குரு சரணம் சரணம்!!

  7. மகிமை பொருந்திய பதிவு..சேவையின் உன்னதம் புரிந்தது..
    இந்த பதிவை படிக்கும் போதும், ஆண்டவனுடன் பேசுவது போல் தான் இருக்கிறது..ஒவ்வொரு இடத்திலும் சேவை..சேவை என்று சொல்லும் போது..இறைவனின் தன்மையும் அது தான் என்பது தெளிவு..

    மேலும் மேலும் நாம் சேவை புரிந்திட..மஹா பெரியவா நமக்கும் அருள் புரியட்டும்..

    காலத்தால் அழியாத கவிஞர் வாயிலாக காலத்தால் அழியாத இறை தன்மையை பற்றி எழுதியது – மிக நன்று..

    நன்றி அண்ணா..

  8. ஒரு சிறு திருத்தம் – அரசியல் சிக்கலில் மாட்டிக்கொள்ளாத ஒரே மடம் காஞ்சி மடம் (பெரியவா இருந்தவரை).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *