Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

print
இந்தப் பதிவை நேற்றே அளித்திருக்கவேண்டியது. தளத்தின் சர்வரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யவேண்டி பதிவுகள் அளிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. SCROLLING ANNOUNCEMENT கூட அளிக்க இயலவில்லை. இப்போது ஓரளவு சரிசெய்யப்பட்டுவிட்டது. இன்று மாலைக்குள் அப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம். நன்றி.

வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!

Vallalar1) வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன்!

திருவருட் பிரகாச வள்ளலாருக்கு நகைகளோ அணிகலன்களோ அணியும் வழக்கம் கிடையாது. இருப்பினும், அவருடைய திருமணத்தின்போது அவருக்கு காதில் கடுக்கண் அணிவித்திருந்தனர். வள்ளலார் திருவொற்றியூரில் தங்கியிருந்த காலத்தே ஒரு நாள் ஒரு சத்திரத்தில் திண்ணையில் தனது கை மீது தலைவைத்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

காதில் தங்கக் கடுக்கண் அணிந்து அவர் உறங்குவதை கண்ட, அவ்வழியே சென்ற கள்வன் ஒருவன், அதை கவர்ந்திட விரும்பி, மெல்ல அவர் அருகே சென்று அவரறியாமல் அதை கழற்ற முயற்சித்தான். வெற்றிகரமாக வலது காதில் இருந்த கடுக்கணை கழற்றியவன் இடது கைமீது வள்ளலார் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்ததால் அதை கழற்ற முடியாது தவித்தான். இதை அறிந்துகொண்ட வள்ளலார் தூக்கத்தில் புரண்டு படுப்பதை போல பாசாங்கு செய்து, திருடன் அவரது இடது காதில் அணிந்திருந்த கடுக்கண்ணையும் கழற்ற உதவினார்.

வள்ளலார் இப்படி செய்ய காரணம் என்ன தெரியுமா?

“என்ன கஷ்டமோ பாவம்… திருடுகிறான். (இந்தக் காலம் போல அல்ல அந்த காலம். அன்று பிழைக்க வேறு வழியில்லாமல் திருடுபவர்களே அதிகம். இன்றோ உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடுபவர்களே அதிகம்). ஒரு ஜோடி கடுக்கண்ணில் ஒன்றை மட்டும் அவன் விற்கச் சென்றால், அது திருட்டுப் பொருளென சந்தேகப்பட்டு, வாங்க மறுப்பார்கள். அப்படியே வாங்கினாலும் உரிய விலையை தரமாட்டார்கள். இரண்டையும் விற்றால் அவை நல்ல விலை போகும். திருட்டு பொருளென சந்தேகமும் வராது.”

திருடியபின் உடனே அங்கிருந்து வேகமாக வெளியேறிய கள்வனை அழைத்த வள்ளலார், “தம்பி நில்லப்பா. நீ திருடியது எனக்கு தெரியும். அதற்கு அவசியமே இல்லை. இவற்றை நான் உனக்கு தானமாக கொடுத்ததாக எண்ணிக்கொள். எனவே திருட்டுப் பொருள் போல, வந்தவரைக்கும் போதும் என்று எண்ணிக்கொண்டு அவற்றை குறைந்த விலைக்கு விற்காதே! நல்ல விலைக்கு விற்று உன் தேவையை நிறைவேற்றிக்கொள். இதை யார் உனக்கு கொடுத்தார்கள் என்றால் இராமலிங்கம் என்று என் பெயரைச் சொல். ஆனால், இன்று முதல் திருடுவதை விட்டுவிட்டு, உழைத்து வாழப் பழகு!” என்று கூறினார்.

இதைக் கேட்கும் உங்களுக்கே நெகிழ்ச்சியாக இருக்கிறதே அந்த கள்வனுக்கு எப்படி இருக்கும்? உடனே திரும்ப வந்து அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டதோடு அல்லாமல், “ஐயா… இனி திருடமட்டேன், நீங்கள் கூறியது போல் உழைத்து வாழ்வேன்” என்று அவரிடம் உறுதி கூறினான்.

ஆக… கள்வனையும் தனது அணுகுமுறையால் மாற்றினார் வள்ளலார். தயாள குணம் என்பது ஞானிகளுக்கு உதிரத்தில் ஊறிய ஒன்று.

2) விடுகதையா இந்த வாழ்க்கை…!

“முதன் முதலில் உள்ளே செல்ல பயமாகத் தான் இருந்தது. பிறகு இரண்டாவது நாளிலேயே சரியாகிவிட்டது. இப்போது சகஜமாகிவிட்டது.

Jayanthi உடலை உள்ளே கொடுத்து 2 மணி நேரம் கழித்து உள்ளே சென்று எலும்புகள் எரிந்துவிட்டதா என்று பார்த்து, எரியாவிட்டால் உடலை திருப்பி போடுவேன். முழுவதும் எரிந்து சாம்பல் வந்ததும் அந்த அஸ்தியை எடுத்து உறவினர்களிடம் கொடுப்பேன். சிறு வயதில் விபத்தில் இறந்து விடுபவர்களின் உறவினர்கள் கதறும் காட்சி என் கண்களை குளமாக்கும்! ‘ஒரு பிராமணப் பெண்ணாக பிறந்து, எம்.ஏ. படித்துவிட்டு இந்த தொழில் செய்றீயே’ன்னு சொல்வாங்க. சேவை செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் செய்வேன். அதுவும் ஒரு பெண்ணால் முடியாது என்று சொல்லும் தொழிலை விரும்பிச் செய்கிறேன்.”

தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் ஜெயந்தியை பார்க்கும் போது தலை வணங்கத் தோன்றுகிறது.

– நாமக்கல் நகராட்சியில் மின்சார சுடுக்காட்டில் பிணமெரிக்கும் பணியை செய்துவரும் ஜெயந்தி @ குமுதம்

3) யார் கர்மயோகி?

ஒரு வீட்டில் புருஷனும் ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒரு நாள் இரவில் புருஷன் வரும்போது ஸ்திரீ சமையல் செய்துகொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. Bharathi அந்த ஸ்திரீ தனக்கு உடம்பு கொஞ்சம் அசௌகரியமாய் இருக்கிறதென்று தனக்கு ஆகாரம் வேண்டாமென்று நிச்சயித்து புருஷனுக்கு மாத்திரம் சமைத்துக்கொன்டிருந்தாள்.

புருஷன் வந்தவுடன், ‘நான் இன்றிரவு விரதம் இருக்கப்போகிறேன். எனக்கு ஆகாரம் வேண்டாம்’ என்றான்.

உடனே அவள் பாதிக் கொதிக்கின்ற சோற்றை அப்படியே விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்து விடவில்லை. தங்களிருவருக்கும் உபயோகம் இல்லாவிடினும் மறுநாள் காலை வேலைக்காரிக்கு உபயோகமாய் இருக்கும் என்று நினைத்து அது நன்றாக கொதிக்கும் வரை காத்திருந்து வடித்து வைத்துவிட்டு நித்திரைக்கு சென்றாள்.

அது போலவே கர்மயோகி தான் ஒரு செயலை செய்யத் தொடங்கி இடையில் அது தனக்கு பயனில்லை என்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்திவிடமாட்டான். பிறருக்கு பயன் தருமென்பதைக் கொண்டு தான் எடுத்த வேலையை முடித்தே வேறு காரியத்தை தொடங்குவான்.

– மகாகவி பாரதியார்

4) “அவர் மூஞ்சியிலேயே எழுதியிருக்கே.. அந்தாளை நம்பாதே!”

காமராஜர் பற்றி பல கூட்டங்களில் பேசுகிறீர்கள். அவருடன் மிக நெருங்கிப் பழகியர் நீங்கள். அவருடைய குணாதிசயங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

Kamaraj kingmaker ‘துக்ளக்’ ஆசிரியர் சோ : ஒருத்தரை பார்த்தவுடனேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டு பிடித்துவிடுவார் காமராஜர். எமர்ஜென்சியின் போது மிக பலமான வடநாட்டு தலைவர் ஒருவரை நான் காமராஜரிடம் கூட்டிக்கொண்டு போனேன். (அந்தத் தலைவரின் பெயர் வேண்டாம்). காமராஜர் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. காமராஜருக்கு வந்தவரிடம் இண்ட்ரெஸ்ட் வருமாறு நான் பேசியும் பயனில்லை. நான் அவரைக் கொண்டு விட்டு மூன்று மணிநேரம் கழித்து காமராஜரை பார்க்கப் போனேன். ‘சோ, அவர் மூஞ்சியிலேயே எழுதியிருக்கே. அந்தாளை நம்பாதே’ என்றார். காமராஜர் சொன்னது போலவே அடுத்த பதினைந்து நாட்களுக்குள் இந்திரா காந்தியிடம் எழுதிக் கொடுத்துவிட்டு சரணாகதி அடைந்துவிட்டார் அந்த வடநாட்டு தலைவர்.

இன்னொரு சம்பவம்.

திருவான்மியூருக்கு அருகே காந்தி சிலை திறப்பு விழா. காமராஜரும் அதில் கலந்துகொண்டார். அந்த விழாவில் நானும் கலந்துகொண்டேன். சிலை திறப்பு விழாவில் பேச வந்த ஒருவர், காமராஜரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இது காமராஜருக்கு பிடிக்கவில்லை. ‘இது என்ன இது? காந்தியைப் பத்தி பேச வந்திருக்காங்களா? இல்லே என்னைப் பத்தி பேச வந்திருக்காங்களா?’ என்று முனுமுனுத்துக்கொண்டே பொறுமை இழந்துகொண்டிருந்தார். பேச்சாளர் காமராஜர் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். நாற்காலியைவிட்டு எழுந்த காமராஜர் ‘நிறுத்துங்க’ என்றார். மைக்கை தன் கையில் பிடித்தார். “நான் பெரிய தியாகி. எல்லாரும் புரிஞ்சிகிட்டீங்கல்ல. அது போதும்ணேன். இனிமே காந்தியைப் பத்தி பேசுவோம். என்னைப் பத்தி பேசவா கூட்டம் போட்டோம்?” என்று சொல்லி அந்த பேச்சாளரை உட்கார வைத்துவிட்டார்.

Thuglaq Cho

பெரும் கூட்டம். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதை எந்த தலைவராவது தடுத்து நிறுத்துவாரா? இந்திரன் சந்திரன் என்று சொல்வதைத் தானே எல்லாரும் விரும்புவார்கள்? விளம்பரத்தை துரத்திக்கொண்டு  அலையும் அரசியல்வாதிகளிடையே விளம்பரமே தன்னைத் தேடி வந்தபோதும் அதை துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்தார். காமராஜர் போன்ற அரசியல்வாதியை பார்ப்பது அரிது.

–  சமீபத்திய கலைமகள் 1000 மாவது இதழில் வெளியிடப்பட்டுள்ள ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களின் பழைய பேட்டி

5) பசி வந்தால் பறக்கும் பத்துக் குணங்கள்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். அந்தப் பத்தும் என்ன தெரியுமா?

மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

– ஒளவையார் @ நல்வழி

(1) பலரும் மதிக்க இருந்த பெருமை
(2) சிறந்ததாகிய குடும்பச் சிறப்பு
(3) வருந்திக் கற்ற கல்வியின் பயன்
(4) வறியராய் வந்தோர்க்கு கொடையளிக்கும் குணம்
(5) இயல்பாகவே சிறந்திருந்த நுண்ணறிவு
(6) தான் வகித்திருக்கும் பதவிப் பெருமை
(7) தெய்வத்தை பேணிச் செய்யும் தவம்
(8) தலைநிமிர்ந்து கம்பீரமாக இருந்தா உயர்வு
(9) புதிய புதிய துறைகளில் செய்யப்படும் தளராத முயற்சி
(10) தேனென இனிக்கப் பேசும் காதலி மேல் வைத்த காதல்

இவை தான் பசி வந்திடப் பறந்து போகும் பத்து!

6) மூல நூல்களை படிப்பதன் அவசியம்!

ராமாயணத்தில் லக்ஷ்மணன் கோடு கிழித்தது, ராவணன் சபையில் ஆஞ்சநேயர் வாலால் கோட்டை கட்டி அதன் மேல் அமர்ந்தது, மஹா பாரதத்தில் கர்ணன் செய்த புண்ணியங்களை எல்லாம் கண்ணன் பெற்றது முதலானவை வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், வியாச பாரதம் ஆகியவற்றில் இல்லை.

இது பற்றி கூறி குறைகளை சுட்டிக்காட்டும்போது ஹிந்துக்களுக்கு கோபம் வருகிறது. நாம் கோபப்படுவதில் அர்த்தமேயில்லை. நாம் ஒவ்வொருவரும் சமஸ்கிருதம் படிக்கவேண்டும். ஏறத் தாழ ஒரு வருடத்திற்குள் சமஸ்கிருதத்தை ஓரளவு படிக்க கற்றுக்கொள்ள முடியும். போன தலைமுறை வரை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் கூட சமஸ்கிருதத்தில் நல்ல பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் மூல நூலை நன்கு அனுபவித்து படிக்க முடியும்.

தமிழ் நூல்களில் இதே போல நந்தனார் வரலாற்றில் உள்ள தவறு இது.

சிதம்பரத்திற்கு போகவேண்டும் என்றார் நந்தனார். அவருடைய முதலாளியான ஆதனூர் வேதியன் நந்தனாரை போகவிடாமல் தடுத்தார் என்பதே மக்கள் மத்தியில் பரவியிருக்கும் கருத்து.

ஆனால், மூல நூலான சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. ‘ஆதனூர் வேதியன்’ என்ற கதாபாத்திரமே பெரிய புராணத்தில் கிடையாது.

ஆகவே தமிழிலும்  மூல நூல்கள் என்ன சொல்கின்றன என்று அறிவதற்காகவே மூலநூல்களை படிக்க வேண்டும்.

உங்கள் வசதிக்காக :

1) சைவர்கள் படிக்க வேண்டியவை : பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், பன்னிரு திருமுறைகள்

2) வைஷ்ணவர்கள் : விஷ்ணு புராணம், பாகவதம், நாலாயிர திவ்விய ப்ரபந்தம்

3) முருகனடியார்கள் : கச்சியப்பரின் கந்த புராணம், திருப்புகழ் முதலியன

4) அம்பிகை அடியார்கள் : தேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அம்மை பதிகம் ஆகியவை.

இந்த நான்கு பிரிவுகளுக்குள்ளேயே மற்ற தெய்வங்களை பற்றியும் உள்ளன.

– பி.என்.பரசுராமன் @ ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’

7) அன்னத்தில் எத்தனை வகைகள் உண்டு ?

Rice சுத்தன்னம் – சோறு
மத்வன்னம் – தேன் கலந்த சோறு
தத்யன்னம் – தயிர் கலந்த சோறு
பாயசன்னம் – அரிசி, பருப்பு கலந்த சோறு
கிருசாரன்னம் – நெய் முதலிய மணப் பொருட்கள் கலந்த சோறு
குளான்னம் – பால், வெல்லம் கலந்த சோறு
முற்கான்னம் – தேங்காய், பயறு கலந்த சோறு

– இரா.வேதநாயகம், வடமாதிமங்கலம் @ குமுதம் பக்தி

8) இரண்டு மெழுகுவர்த்தி & இரண்டு பேனா !

கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்.

Visweswaryya வேளாண்மையில் புதுமைகளை புகுத்தியவர். தானியங்கி மதகைக் கண்டுபிடித்த மாபெரும் வல்லுநர், நாட்டுக்காக உழைத்த நல்லவர். இவரது நேர்மையை பறைசாற்றும் விதமாக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சம்பவம் உண்டு.

விஸ்வேஸ்வரய்யாவின் மேஜை மீது இரண்டு மெழுகுவர்த்திகள், இரண்டு பேனாக்கள் இருக்கும். ஒரு நாள் அவரை காண வந்த ஒருவர், இது பற்றி அவரிடம் கேட்டார்.

“ஒரு பேனாவும் மெழுகுவர்த்தியும் அரசு பணத்தில் வாங்கியது. மற்றொரு பேனாவும் மெழுகுவர்த்தியும் என் சொந்தப் பணத்தில் வாங்கியது. அரசுப் பணிகளை செய்யும்போது, அரசுப் பணத்தில் வாங்கிய மெழுகுவர்த்தியையும் பேனாவையும் உபயோகிப்பேன். சொந்தப் பணிகளை செய்யும்போது சொந்தப் பணத்தில் வாங்கிய மெழுகுவர்த்தியையும் பேனாவையும் உபயோகிப்பேன். அதற்கு  வசதியாக என் மேஜையில் எப்போதும் இந்த பேனாக்கள் இருக்கும்!”

9) 145 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!

கடந்த பத்து ஆண்டுகளில், 145 ஐஏஎஸ் அதிகாரிகள் சிபிஐ மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளின் ஊழல் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளதாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டது, லஞ்சம் பெற்றது, வருவாய்க்குப் பொருந்தாத சொத்து சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2003-ஆம் ஆண்டு 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரகம் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேர் மீதும், 2005-ஆம் ஆண்டு 6 பேர் மீதும், 2006-ஆம் ஆண்டு 5 பேர் மீதும் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2007 முதல் 2013 ஆண்டு வரை முறையே 111 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4,619 அதிகாரிகள்: நாடு முழுவதும் 4,619 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். விதிமுறைகளுக்குப் பொருந்தாத வகையில் பணிக்கு வராமலிருந்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– தினமணி

10) படித்ததில் பிடித்தது

(1) “பேய்ப்படங்களை பார்த்து பேச்சிலர்கள் பயப்படுவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. பேமிலி மேன்களும் பயந்தேன்னு சொல்லும்போது தான் லாஜிக் இடிக்கிறது!” – குமரேஷ் சுப்பிரமணியம் @ குங்குமம்

(2) “தவறுகளை விட சந்தேகத்துக்காக சிலுவை சுமந்தவர்கள் இந்த உலகில் அதிகம்” – twitter.com/tparavai

(3)
Man-Pushing-Rock-Up-Hill copy copy

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

=====================================================================

[END]

7 thoughts on “வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

  1. My Dear Sundar Sir

    Thank you very much for the wonderful update.

    1. Firstly Ramalingam Adihalar did a wonderful thing. He corrected a thief. The article is very good.

    2. Hats off to Jeyanthi Madam.. Even though she belongs to Brahamin Community, she is doing a very noble activity. Jeyanthi Madam, I am bowing my head in front of you. Keep it up.

    3. The Name “King Maker” to Shri Kamararajar is perfectly suits to him. Face reading is God’s Gift. Moreover he possessed good qualities because he was a disciple of the great freedom fighter Sathyamoorthy Iyer. Guru’s (Sathyamoorthy Iyer) blessing was always with him. So there is no wonder for his success.

    All the human beings must have Parents’ and Guru’s blessing.

    Regards

    S. Chandrasekaran

  2. இந்த பதிவில் தாங்கள் கொடுத்திருக்கும் அனைத்து தகவல்களும் அருமையோ அருமை. ஜெயந்தி அவர்கள் செய்யும் சேவையை நினைத்தால் மனம் கசிகிறது. திரு. காமராஜர் அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தீராது. எல்லாமே சூப்பர்தான்.

    இனிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

  3. பத்து தகவல்களும் அருமை. திருடனுக்கும் நன்மை செய்து திருடனையும் நல்ல மனிதனாக மாற்றிய வள்ளலாரின் குணத்தை படித்து மெய் சிலிர்க்கிறது. ( போன வருடம் மே 25 ம் தேதி வடலூர் சென்று வந்த பதிவை போடவும்)
    கர்ம வீரர் காமராஜர் நம் தமிழ் மண்ணில் பிறந்ததே நம் எல்லோருக்கும் பெருமை தான்

    Quote அருமை தவறை கண்காணிக்கும் இந்த உலகம் நம் கண்ணீரையும் துக்கத்தையும் பார்ப்பதில்லை

    நன்றி

    உமா வெங்கட்

  4. அனைத்து தகவல்களும் அருமை. எட்டாவதாக இருக்கும் தகவலைப் படித்தது விட்டு, ஒன்பதாவது தகவலைப் படிக்கும் பொழுது, மனதில் ஆனியால் அறைந்தது போல் இருந்தது.

  5. வணக்கம் சுந்தர். மீண்டும் ஒரு அழகான நல்ல பதிவுக்கு நன்றி. மயானத்திற்கு பெண்கள் செல்லகூடாது என்ற நிலை மாறி அதிலே ஒரு பெண் வேலை செய்வதை படிக்கிறோம்.நல்ல மாற்றம்.பெண்ணோ ,ஆணோ திறமை,தைரியம் தான் முக்கியம்.வாழ்த்துக்கள் திரு ஜெயந்தி.நல்ல உள்ளம் ,நேர்மை மக்கள்கு உதவாத சட்டம் தேவையில்லை சட்டத்தை மாற்றுங்கள் என்று சொன்ன நீதிமானுக்கு இன்னும் சில காலம் ஆயுள் இருந்திருக்கலாம்.நல்லர்வகளை விரைவில் அழைத்து கொள்கிறான்.ஏனோ காரணம் தெரியவில்லை . நன்றி

  6. பத்து தகவல்களும் – புதிய தகவல்கள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதும் கூட..ஆன்மிகம்,பக்தி,வரலாறு,தற்கால செய்தி,கலாச்சாரம்,மேற்கோள்கள் என்று தாங்கள் ஒவ்வொரு பிரிவிலும் இட்டிருக்கும் செய்திகள் – அருமை. வார வாரம் வெளிவரும் வார இதழ்களில் நாம் படிக்காது இருந்தாலும், தாங்கள் இங்கே எடுத்தாலும் செய்திகள் – நமக்கும், நம் தலைமுறைக்கும் உதவி செய்யும் என்பது திண்ணம்.

    தங்கள் உழைப்பினை வணங்குகிறேன் அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *