Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

print
திங்கட்கிழமை டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி!  இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!

1) எந்த வேலை செய்தாலும் கவனக்குறைவா?

தொழிலதிபர் ஜெ.ஆர்.டி. டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

VRB101462அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு ஆறு மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்.

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பன் – மரியாதை கொடுப்போம்.

3. பணம் – அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகள்- முறிக்க மாட்டோம்.

5. வியாபாரம் – அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கை – உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை!

(நன்றி : ரிலாக்ஸ் ப்ளீஸ்)

Vijay Sethupathy

2) மறக்க நினைக்கும் ஒரு சம்பவம்?

வெற்றிக்கு எல்லாத்தையும் மறக்கடிக்கிற சக்தி உண்டுதான்…. ஆனா சில அவமானங்களை தவிர. ஒரு இயக்குனர், ‘இவர் தான் ஹீரோ’னு ஒரு கேமராமேன் கிட்டே என்னை அறிமுகப்படுத்திட்டு போய்ட்டார். “கறுப்பா இருந்தாலே போதும்… ஹீரோ ஆகிடலாம்னு நினைச்சு வந்துட்டியா? நீயெல்லாம் ஹீரோ ஆக முடியாது”ன்னு முகத்துல அடிச்ச மாதிரி பேசினார். ஏன் அப்படி பேசினார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியலே. உடனே, “உன் கண் முன்னாடி நான் ஹீரோவாகி காட்டுறேன்”னு சபதம் போடலே. வேலையை மட்டும் சின்ஸியரா பார்த்துட்டே இருந்தேன். நான் ஹீரோ ஆகிட்டேன். அந்த கேமிராமேன் சார் இப்போ என்ன செய்றார்னு தெரியலே!”

– நடிகர் விஜய் சேதுபதி @ ஒரு பேட்டியில்!

Tharppanam woman

3) ஆண்கள் இல்லாத குடும்பத்தில் பிதுர்க்களுக்கு எப்படி தர்ப்பணம் செய்வது?

கேள்வி : நானும் என் வயதான தாயாரும், மகளும் சென்னையில் வசிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. என் மகள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ராமேஸ்வரம், காசி, கயா, அலஹாபாத், சென்று திலஹோமம், சிரார்த்தம், பித்ரு பூஜை ஆகியவற்றை செய்ய விரும்புகிறேன். என் கணவர் இல்லாததால் அவற்றை செய்யும் உரிமை எனக்கு இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். பெண்கள் இவற்றை எப்படி செய்வது?

பதில் : சொத்து விற்பனை செய்ய மற்றவருக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுப்பது போல, உங்கள் சார்பாக இவற்றை செய்ய தர்ப்பைப் புல் ஒன்றை கொடுத்து செய்யச் சொல்லலாம். உங்கள் சார்பாக செய்யும் ஆண், வேறு குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற ஊர்களில் உள்ள பண்டிதர்கள், யாத்திரை வரும் பெண்களுக்காக இவ்வாறு செய்கிறார்கள். பெண்களிடம் தர்ப்பைப் புல் வாங்கி சிரார்த்தம் செய்வது நமது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.

– ஜோதிடர் திரு.ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஒரு கேள்வி-பதிலில்

4) முதல் புரட்சித்தலைவர்!

மக்கு தெரிந்து மிகப் பெரிய சமூக சீர்த்திருத்தவாதி பாரதி தான். தனக்கு சரியெனப் பட்டதை செய்ய பாரதி என்றைக்குமே தயங்கியதில்லை. ஆனால், பாரதிக்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே அதாவது கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் முன்பு சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் ஸ்ரீமத் ராமானுஜர். அவரைப் பற்றி சமீபத்தில் vivekanandam150.com என்கிற தளத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை படித்தோம்.

Ramanujarஸ்ரீ ராமானுஜர் (1017-1137)  நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார். நல்லதொரு சீடனாகப் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், நல்லதொரு ஆசானாகவும் புகழ் பெற்றார். அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள் காரணமாக அவரால் உலகை மாயை என்று தள்ள முடியவில்லை. பிரம்மம் என்பது ஒன்றே பேருண்மை என்றார். ஆயினும், இந்தப் பிரும்மத்தில் மலர்ந்த இவ்வுலகம் என்பதும் உண்மையே என்றார். அதனால் தான் அவரது தத்துவ தரிசனத்தை விசிஷ்ட-அத்வைதம் (பிரத்தியேகமான அத்வைதம்) என்று அழைக்கிறோம்.

ராமானுஜரது வாழ்க்கையில் அவர் கருணையுடன் நடந்துகொண்ட காட்சிகள் பல உண்டு. தீண்டத்தகாதவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர் அரவணைத்தது இவற்றில் முக்கியமானது. ஸ்ரீவைஷ்ணவர்களின் ஆன்மிக குருவாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையாய திருவரங்கம் கோயிலை நிர்வகிப்பவராகவும் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமானுஜர், பணிவே உருவானவர். இந்த ஆசான் முனைந்த சேவைகள் ஒன்றா, இரண்டா? ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்த பணிகள், மருத்துவம், கல்வி, சமூக சேவை எனப் பலப்பல. தன்னையே ஒரு முன்னுதாரணமாக வைத்தவர். அதனால் அனைத்துச் சாதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். ஓர் எடுத்துக்காட்டு. காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது பிராமணரல்லாத சீடர், உறங்காவில்லிதாசர் தோளில் அல்லவா தனது கையை ஊன்றிக்கொண்டு ராமானுஜர் மடத்திற்குத் திரும்புவார்.

ஒரு முறை திருவரங்கத்தின் வயது முதிர்ந்த பிராமணரான பெரிய நம்பி, சேரியில் நோயுற்று வாடும் மாறநேர் நம்பி எனும் பக்தருக்கு உணவு எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது ஸ்ரீ ராமானுஜர் அவரைத் தடுக்கவில்லை. மாறநேர் நம்பி உயர்ந்த மனிதர். பரம பக்தர். அவருக்கு உதவிட வேண்டும். பெரிய நம்பி போன்ற சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவருக்கு உதவினால், அவரது இறுதி நாட்கள் இனிமையாக இருக்குமல்லவா?

அப்படியே நேர்ந்தது. மாறநேர் நம்பி பரமபதித்தபின், அவருக்கு அந்திம சமஸ்காரத்தையும் பெரிய நம்பியே செய்தார். என்ன? ஒரு பிராமணர் தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்தவனுக்கு இறுதிக்கடன் செய்வதா? என்று ஸ்ரீ ரங்கத்தில் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோபம் கொண்டனர். ஸ்ரீ ராமனுஜரிடம் சென்று முறையிட்டனர். அவர் சற்றுகூட அசைந்து கொடுக்கவில்லை. பெரிய நம்பியின் செய்கையில் தவறு காணவில்லை. மாறாக, இவர்களையா தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வது? என்றார்.

இவர்களும் தாயாரின் குழந்தைகளே என்று நினைத்து அவர்களுக்குத் திருக்குலத்தார் (லக்ஷ்மியின் குலம்) என்ற பெயரிட்டார். மகாத்மா காந்தி ஹரிஜன் என்று அழைப்பதற்குத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பே ராமானுஜர் இந்தப் புரட்சி செய்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

5) நோபல் பரிசை நிராகரித்த பெர்னார்ட் ஷா!

பெர்னார்ட்ஷா பெரிய மேதை. ஆனால் பள்ளிப் படிப்பில் தோற்றவர். அவர் சிறுகதை எழுதினார். கவிதை நாவல் எழுதினார். நாவல் எழுதினார். எல்லாம் நிராகரிக்கப்பட்டன.

Bernard Shawபல வருட போராட்டத்திற்கு பின் அவரது நாடகத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது. முதல் நாள் ஊடகங்களில் அது தலைப்புச் செய்தி.

அந்த விருதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அது அடுத்த நாள் தலைப்பு செய்தியானது.

அடுத்த நாள், முன்பு பரிசு பெற்ற மேதைகள் அவரை அந்த பரிசை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். அது மூன்றாம் நாள் தலைப்பு செய்தியானது.

நான்காவது நாள், அந்த பரிசை அவர் பெற்றுக்கொண்டார். அது மறுபடியும் தலைப்பு செய்தியானது.

ஐந்தாவது நாள், அந்த விருதின் மூலம் கிடைத்த பணத்தை ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்தார் அதுவும் தலைப்பு செய்தியானது.

நிருபர்கள் பெர்னார்ட் ஷாவிடம், “இந்த விருதை நீங்கள் ஏன் முதலிலேயே பெற்றுக்கொள்ளவில்லை?” என்று கேட்டனர்.

“வாங்கியிருந்தால் ஒரு நாள் தலைப்பு செய்தி. மறுத்ததால் ஐந்து நாள் தலைப்பு செய்தி!” என்றாராம்.

– வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். @ இளைய பாரதத்தினாய் – குமுதம்

6) ஒரே நாளில் ஞானம் வருமா?

ரு முறை எண்ணெய் வியாபாரி ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக தக்ஷினேஸ்வரம் வந்திருந்தார். அவர் நெடுநேரம் பரமஹம்சரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார்.  பரமஹம்சரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது.

Ramakrishna Paramahamsa“குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது அதிகமானதால் தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வந்துவிட்டது. என் சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்ட பிறகும் எனக்கு தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?” என்று ஏக்கத்துடன் கேட்டார்.

ராமகிருஷ்ணர் அந்த வியாபாரியைப் பார்த்து, “வியாபாரியான நீ நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினாய். உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய்க் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெய்யை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள். அதில் இருந்த எண்ணெய்தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?” என்று கேட்டார்.

வியாபாரி, “குருவே! என்னை மன்னித்து விடுங்கள். நான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன். சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம்.

ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்,” என்று சொல்லியபடி பரமஹம்சரை வணங்கினார்.

7) காந்தி சாப்பிட்ட வெள்ளித் தட்டு!

ளிமைக்கு பெயர் போனவர் காந்தி. அனால் அவர் ஒரு சமயம் வெள்ளித் தட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா?

kb sundarambalஇந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின் வீட்டுக்குக் காந்தி வந்திருந்தார். அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

ஒரு வெள்ளித் தட்டில் மதிய உணவு பரிமாறினார் சுந்தராம்பாள்.  உணவை உண்டு முடித்த காந்திஜி, எனக்கு சாப்பாடு மட்டும்தானா? தட்டு இல்லையா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அது கேட்டு முறுவலித்த சுந்தராம்பாள், அந்த வெள்ளித்தட்டைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு காந்திஜியிடம் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் கூடியிருந்தவர்களிடம் வெள்ளித்தட்டை ஏலம் விட்டார் காந்திஜி. அதன்மூலம் கிடைத்த பணத்தை சுதந்திரப் போராட்ட நிதிக்கு அளித்துவிட்டார்.

– இல.வள்ளிமயில், திருநகர், மதுரை @ தினமணி

8) மேகி Vs உப்புமா!

மனைவி: ராத்திரி மேகி ஓ.கே.வா ?

கணவன்: அது சாப்பிட கூடாதாம்… பேப்பர் பாக்கலையா?

மனைவி : ஐயோ…. சரி உப்மா பண்ணவா ?

கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்…

– சுபாஸ், சௌகார்பேட் @ குமுதம்

marina lovers

9) இது தான் இன்றைய காதல்!

காதலன் : “நம் காதலை யாராலும் பிரிக்க முடியாது கண்ணே !”

காதலி : “அது தான் டியர் என் ஒரே கவலை!”

– இடைப்பாடி மாணிக்கவாசகம் @ ஆனந்த விகடன்

10) படித்ததில் பிடித்தது

“பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்!” -ரஸ்கின்

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

‘நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!’ – கண்டதும் கேட்டதும் (2)

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

=====================================================================

[END]

8 thoughts on “ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

  1. இந்த வாரம் இனிமையான வாரமாக ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி

    எந்த வேலையையும் முழு கவனத்துடன் கையாண்டால் அதன் மதிப்பே தனி என்பதை டாட்டா தனது நண்பனுக்கு சொன்ன அறிவுரை மூலம் விளக்கி விட்டீர்கள்.

    ஆண்கள் இல்லாத குடும்பத்தில் பிதுர்க்களுக்கு எப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று .

    பெர்னாட்ஷா பற்றி நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் பொழுது அவர் சொன்ன ஒரு quote என் நினைவுக்கு வருகிறது
    //TAKE CARE TO GET WHAT YOU LIKE OTHERWISE YOU WILL BE FORCED TO LIKE WHAT TO GET//

    மொத்தத்தில் 10 தலைப்புகளும் சிந்திக்க வைக்கும் தலைப்பு

    நன்றி
    உமா வெங்கட்

  2. மிஸ்டர். சுந்தர்,

    “பார்ப்பனர்” என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் தவறானது. மற்றவர்கள் உபயோகப் படுத்தி இருந்தாலும், அதற்கு மாற்றான வார்த்தையை (பிராமணர்கள்) என்று மாற்றி எழுதி இருக்க வேண்டும். அப்படியே எழுதி அதை பின்பற்றுதல் வருத்தத்துக்குரியது. பிழையை அந்தக் கட்டுரையில் உடனே சரி செய்வீர்கள் என நம்புகிறேன். யார் செய்தாலும் பிழை பிழைதான்.

  3. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  4. வணக்கம் சுந்தர். வழக்கம் போல சிறந்த தொகுப்பாக அளித்து இருக்கிறீர்கள்.நன்றி. எளிமையாக சொல்லி புரியவைப்பதில் ஸ்ரீ ராமகிரிஷன பரமஹம்சர் வல்லவர். தர்ப்பணம் கொடுக்கும் விஷயம் தான் நம் மதத்தில் பிடிக்காத, புரியாத விஷயம்.கடவுள் முன்பு எல்லோரும் சமம் எனும்போது ஏன் பெண் கொடுத்தால் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதற்காக யார்யார்யோ தேட வேண்டிய நிலை.அற்ப சந்தோசம் பிறர் அவமானடுவதில். என்ன சொல்லுவது. நன்றி.

    1. தர்ப்பணம் குறித்து தவறான நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். வருத்தமாக உள்ளது. விரைவில் இது குறித்து விரிவான பதிவு அளிக்கிறேன். சடங்குகளின் போது கசப்பான அனுபவங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சில சமயம் ஏற்படுவதுண்டு. ஆனால், அதற்க்காக சடங்குகள் மீது நம் கோபத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தவேண்டாமே…

  5. சுந்தர் சார்,
    மிக அருமையான பதிவு. நீண்ட நாட்களுக்கு பின் ரைட்மந்திராவில் படிகின்றேன்.

    நன்றியுடன் அருண்

  6. கண்டதும் கேட்டதும் -3 படித்த பிறகு ஒரு “full meals” சாபிட்டது போன்ற ஒரு திருப்தி.
    ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு சுவை..கடைசியில் நிதர்சன தத்துவம் சூப்பரோ சூப்பர்.
    தங்கள் படைப்பிற்கு நன்றிகள்.

    விரைவில் தர்ப்பணம் குறித்த விரிவான பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *