தமிழகத்தில் திருஞானசம்பந்தரின் அவதாரம் மட்டும் நிகழவில்லை என்றால், தமிழகத்தின் வரலாறே திசை மாறி போயிருக்கும். அவரது காலத்தில் வேதத்தையும் வேள்விகளையும் வைதீகர்களையும் இழிவுபடுத்தும் கூட்டம் செழிப்புடன் வளர்ந்திருந்தது. “வேதம் பொய். அவை சொல்லும் வேள்விகளும் பொய். வேதத்தைக் கூறிவரும் வைதிகர்களும் பொய்யர்களே” என்ற கூற்று பரவலாக இருந்தது. சிலர் அரசர்களை தங்கள் வசப்படுத்தி வைத்து வேதத்திற்கும் வைதீகதிற்கும் எதிராக அவர்களை திசை திருப்பினர். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது போல, மக்களும் சைவத்தை மறந்தனர். பல கோவில்களில் ஆறுகால பூஜைகள் நின்றுபோயின. கோவில்களும் மடங்களும் கேளிக்கை விடுதிகளாகவும் வழிப்போக்கர்கள் தங்கும் ஓய்வு விடுதிகளாகவும் மாற்றப்பட்டன.
பல வைதிகர்கள் சமணர்களால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். சைவச் சின்னங்களை உடலில் தரித்தவர்கள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டனர். வேத வேள்விகள் நின்று போனாதால் வானம் பொய்த்துப்போனது. எங்கும் பசி, பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடியது.
நாட்டை ஆளும் மன்னன் முறை தவறி ஆண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வள்ளுவரும் மிக அழகாக கூறுகிறார்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள் 560)
ஆனால் இறைவன் இதைக் கண்டு சும்மாயிருப்பானா? இது தர்மபூமியல்லவா? தீயோரை அழித்து சைவத்தையும் வேத வேள்விகளையும் காக்க, முருகப்பெருமான், விநாயகப்பெருமான் ஆகியோரின் அம்சங்களுடன் ஒரு தெய்வக் குழந்தையை பிறக்கச் செய்தார். மூன்றாம் வயதில் உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய தினம் முதலே துவக்கிய தம் புரட்சியை தம் அவதாரத்தின் இறுதிநாள் வரை விட்டாரில்லை சம்பந்தர்.
ஊர் ஊராகச் சென்று சைவத்தையும் வேதத்தையும் தமிழையும் வளர்த்தார். ஒவ்வொரு தமிழனும் தன்னைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்பதனை தம் தேவாரப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். அவரது ஒவ்வொரு பாடலிலும் சைவ மணம் செழித்துக் காணப்பட்டது. வைதீக மணம் வையகத்தையும் வானகத்தையும் விஞ்சிற்று. தமிழ் மணம் தரணியெங்கும் தழைத்தோங்கியது.
வேள்வி செய்ய அஞ்சிய வேதியர்கள் மீண்டும் வேள்விகள் செய்ய முற்பட்டனர். சிவ சின்னங்களை சவச் சின்னங்கள் என எண்ணி அவற்றை விட்டிருந்த சைவர்கள் மேனி எங்கும் நீறு பூசி மேதினியில் மிளிர்ந்தனர். தமிழ் பயிலுதலும் தமிழ்ப் பாக்களை இயற்றுதலையும் தம் மரண பயத்தினால் விட்டிருந்த தமிழர்கள் தலைநிமிரத் தொடங்கினர். தமிழ்ல் பாமாலைகளைத் தொடுத்தனர்.
இன்று சம்பந்தப் பெருமானது குரு பூஜை. தவிர இன்று குரு வாரமும் கூட. எனவே குரு வாரத்தில் நம் குரு மஹா குரு மஹா பெரியவா அவர்கள் இந்த தெய்வக் குழந்தை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
பெரியவாவின் நடை மிக கடினமான பதங்களை கொண்டிருப்பதாக தோன்றும். இருப்பினும் அது தெய்வத்தின் குரலல்லவா? சாமானியனுக்கு புரியாதா என்ன? படித்துப் பாருங்கள்… சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல இருக்கும்.
சம்பந்தப் பெருமானது வரலாற்றை இதைவிட சுவையாக எவராலும் சொல்ல முடியாது!
OVER TO தெய்வத்தின் குரல்…
தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!
பாண்டிய நாட்டில் அப்போதும் சமணர்களின் செல்வாக்கு அதிகம் இருந்தது. ராஜா மாறவர்மாவே அந்த மதத்துக்கு மாறி விட்டான்.
“ஒருத்தரும் சிவாலயம் போகக் கூடாது; விபூதி இட்டுக் கொள்ளப்படாது” என்றெல்லாம் அவன் ஆக்ஞை பண்ணிவிட்டான். “யதா ராஜா ததா ப்ரஜா” – “அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பதால் ஜனங்களும் அதற்கு அடங்கி நடக்க வேண்டியிருந்தது.
எல்லாரையும் விட ஒரு ராஜாவுக்குக் கட்டுப்பட்டு அவன் நினைக்கிற பிரகாரமே பண்ண வேண்டியவர் மந்திரிதான்; இதேபோல் ஒரு ஆண் பிள்ளைக்கு எல்லோரையும் விட அடங்கியிருக்க வேண்டியது அவனுடைய பெண்டாட்டிதான். பாண்டிய ராஜா விஷயத்திலோ, வெளிப்படக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவனுடைய மந்திரி குலச்சிறையாரும் பத்தினி மங்கையர்க்கரசியும் தான் உள்ளூர அவன் ஆக்ஞைக்குக் கட்டுப்படாமல் இருந்தது.
அந்த இரண்டு பேரும் சிவபெருமானிட்த்தில் பரம பக்தி கொண்டவர்கள். ராஜா ஆக்ஞையை, பதியின் உத்தரவைப் பகிரங்கமாக அவர்கள் ஆக்ஷேபிக்க முடியாவிட்டாலும், ரகசியமாக ஈச்வர ஆராதனையே பண்ணிக் கொண்டிருந்தார்கள். மங்கையர்க்கரசி புடவை ரவிக்கைக்குள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் பண்ணிக் கொள்வாளாம். பதி சொல்லை எதிர்த்துச் சண்டை போடாமல், அதற்காக சாச்வதமான ஸநாதன தர்மத்தையும் விட்டு விடாமல் இப்படி சாதுர்யமாக நடந்து பார்த்தாள். ஆனாலும் அவளுக்கு மனஸை உறுத்திக் கொண்டுதானிருந்தது. “மனஸ் ஸாக்ஷிப்படி புருஷனையும் அநுசரிக்க முடியவில்லை; தைரியமாக தர்மத்தையும் அநுஷ்டிக்க முடியவில்லையே” என்று வேதனை பட்டுக்கொண்டு, இதற்கு என்ன விமோசனம் என்று அவள் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தபோதுதான், அவளுடைய மனக் கவலைக்கு மருந்தாக ஒரு சமாசாரம் தெரிய வந்தது.
“ஸம்பந்தர் என்று ஒரு அருள் குழந்தை. அது சிவபக்தி மஹிமையால் தேவாரம் பாடிக்கொண்டே என்னென்னமோ அற்புதங்களைப் பண்ணியிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தை இப்போது திருமறைக்காட்டில் – வேதாரண்யம் என்பது இதுதான் – அப்பரோடு கூட இருக்கிறதாம்; அது கால் வைக்கிற ஊரில் மற்ற மதம் போய், பூலோக கைலாஸமாகி விடுகிறதாம்” என்றெல்லாம் அவள் கேள்விப்பட்டாள்.
உடனே மந்திரியைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக ஆலோசனை பண்ணினாள். ஸம்பந்தரை எப்படியாவது மதுரைக்கு வர வைத்துவிட்டால் பாண்டியனையும் பிரஜைகளையும் மறுபடி தன் மதத்துக்குத் திருப்பி விடலாம்; அதுதான் விமோசனத்துக்கு வழி என்று தோன்றுகிறது என்று குலச்சிறையாரிடம் சொன்னாள். அவரும் ஒப்புக் கொண்டார்.
இரண்டு பேரும் சேர்ந்து ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுக்குத் தூது அனுப்பினார்கள். அவரும் ஆனைமலை வழியாக வந்து சேர்ந்தார். கதையை ஓட்டமாக ஓட்டிக் கொண்டு போகிறேன்.
அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே – அவர் பதிகம் பாடவில்லை – என் மாதிரி உபந்நியாஸம் பண்ணவில்லை – ஒரு அற்புதமும் பண்ணவில்லை – வெறுமே அவருடைய தர்சன மாத்திரத்திலேயே மதுரை ஜனங்களுக்கு ஒரு பக்தி வந்து விட்டது. நடுவாந்திரத்தில் மங்கிக் கிடந்த மீனாக்ஷி சுந்தரேச்வர ஆலயத்துக்கு அவர் போக, ஜனங்களும் ராஜ ஆக்ஞை பற்றி ஞாபகமே இல்லாமல் அவரோடு கூட்டமாகப் போனார்களாம்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு ஜைனர்கள் ராஜாவிடம் போய், வசியம் பண்ணுகிற துர்மாந்திரீக சக்தியோடு ஒரு சின்னப் பிள்ளை வந்திருப்பதாகவும், அது தங்களுக்குக் “கண்டுமுட்டு” என்றும் சொன்னார்களாம். இந்தத் தகவலைக் கேட்டது தனக்குக் “கேட்டுமுட்டு” என்று பாண்டியன் சொன்னானாம். ”கண்டுமுட்டு” என்றால் கண்ணால் பார்த்த்தாலேயே தீட்டு என்று அர்த்தம். “கேட்டுமுட்டு” என்பது காதால் கேட்கிறதாலேயே ஏற்படும் தீட்டு.
அவர்கள் ஸம்பந்தரைக் கண்ட்தாகச் சொன்னதே தீட்டு என்று பாண்டிய ராஜா நினைத்திருக்கிறான்.
அந்த ஜைனர்கள் அன்றைக்கு ராத்திரி என்ன பண்ணினார்கள் என்றால் ஸம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு நெருப்பு வைத்து விட்டார்கள்! பரமேச்வர சித்தம் என்ன என்று அப்போது ஸம்பந்தருக்குப் புரிந்தது. “மதுரையில் மறுபடியும் விபூதி, ருத்ராக்ஷம் பரவ வேண்டும். ப்ரஜைகள் சிவபக்தி செய்தால் அதற்காகத் தண்டிக்கிற ராஜாவுக்கே தண்டனை கொடுத்துத் திருத்த வேண்டும்” என்பதுதான் ஈச்வர சங்கல்பம் என்று தெரிந்து கொண்டார். அதனால் ஜைனர்கள் வைத்த நெருப்பு ராஜாவையே தாக்கித் தண்டிக்கட்டும் என்று நினைத்தார். “அமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே” என்று பாடினார்.
அந்தத் தீ வேகமாய்ப் போய் ராஜாவைத் தஹித்துப் பொசுக்கிவிடாமல் நிதானமாகவே, உயிர் போகிற மாதிரி கொடுமை பண்ணாமலே, அவனை வருத்த வேண்டும் என்ற கருணையால்தான் “பையவே” என்று சொன்னார் என்பார்கள்.
நெருப்பு பாண்டியன் வயிற்றிலே புகுந்து எரிச்சல் வலியாக வாட்டி தேஹம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. ’வெப்பு நோய்’ என்று அதைச் சொல்லியிருக்கிறது.
அப்பருக்கும் சூலைநோய் என்று வயிற்றில் உபாதை கொடுத்தே ஈச்வரன் ஆட்கொண்டான். அவர் அப்போது தாமே போய்த் திலகவதியாரின் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொண்டார். இப்போது பாண்டியனுக்காக மங்கையர்க்கரசி குலச்சிறையாரையும் அழைத்துக்கொண்டு ஸம்பந்தரிடம் போய், அவர் காலில் விழுந்தாள். முதலில் தன் பதியுடைய மதி திருந்த வேண்டுமென்பதற்காகச் சம்பந்தரை வரவழைத்தவள், இப்போது அவரிடம் பதி உயிர் பிழைக்க வேண்டும் என்று மாங்கல்ய பிக்ஷை வேண்டினாள். அவர் ஈச்வர ஸங்கல்பம் எப்படி இருக்கிறதென்று பிரார்த்தனை சக்தியினால் தெரிந்து கொண்டார். தாம் ராஜாவை சொஸ்தப்படுத்தி, அதன் மூலம் ”வேத வேள்வியை நிந்தனை செய்துழல்..அமணரை வாதில் வென்றழிக்கத் திருவுளமே” ஈச்வரன் கொண்டிருப்பதாக ஸுந்தரேச்வர ஸந்நிதானத்தில் உத்தரவு பெற்று நேரே அரண்மனைக்கே வந்து விட்டார்.
ராஜாவைக் குணப்படுத்துவதற்காக ஏகப்பட்ட ஜைனர்கள் தங்களுடைய மந்திரங்களை ஜபித்துக்கொண்டு மயில் பீலியும் கையுமாகக் கூடியிருந்த மண்டபத்தில் – அவர்கள் எதுவும் செய்யத் துணிந்தவர்கள் – இப்படி இந்தச் சின்னக் குழந்தை தன்னந்தனியாக வருகிறதே என்று அப்போது மங்கையர்க்கரசி பதறிவிட்டாள். அவரைப் பற்றி அவள் கேட்டிருந்த அற்புத சக்தியெல்லாம் அந்த சமயத்தில் அவளுக்கு மறந்து போய், ஒரு தாயாரின் ஹ்ருதயமே அவளிடம் பேசிற்று. “மஹா பெரிய மந்திரவாதிகள் இருக்கிற இடத்தில் இந்தக் குழந்தைப் பிள்ளை வருகிறதே! அதுவாகவேயா வருகிறது? நாமல்லவா வலிந்து ஆளனுப்பிக் கொலைக் களத்துக்கு வரவழைத்து விட்டோம்?” என்று ரொம்ப ‘கில்டி’யாக நினைத்துக் கொண்டாள். அப்போது அவள் கவலையெல்லாம் “சைவமே போய் விட்டுப் போகட்டும்; ஜைனந்தான் இருந்து விட்டுப் போகட்டும்; பதியின் தேஹ சிரமம்கூட எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; இந்தக் குழந்தைக்கு ஒரு கெடுதலும் வராமல் இருந்து விட்டால் அதுவே போதும்’ என்பதாகத்தான் இருந்தது!
அவள் மனஸில் படுகிற வேதனை ஸம்பந்தருக்குத் தெரிந்தது. உடனே அவளைக் கூப்பிட்டு ஒரு பதிகம் ஆறுதலாகப் பாடினார்.
ஆழ்வார், நாயன்மார்களைப் பற்றிய கதைகளில் உள்ள அநேக நிகழ்ச்சிகளுக்கு அவர்களுடைய பாட்டுக்களிலேயே direct reference (நேர் குறிப்பு) இருக்கிறது என்று சொல்ல முடியாது. மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் ஸம்பந்தரை வரவழைத்ததை ஏற்றுக் கொண்டு அவர் மதுரைக்கு வந்ததற்கும், அப்புறம் அவள் பயப்பட்டபோது அவளுக்குத் தைரியம் கொடுத்ததற்கும் வெளிப்படையாகவே ஸம்பந்தரின் தேவாரத்தில் ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.
“மஹா பெரிய மந்திரவாதிகளாகத்தான் இருக்கட்டுமே! ஆனாலும் ஈச்வர ப்ரசாதம் இல்லாதவர்கள் எத்தனை பலிஷ்டரானாலும் அவனை நம்பியவருக்கெதிரில் துரும்பு மாதிரிதான். நான் வருகிற வழியில் ஆனைமலை முதலான இடங்களில் சமணர்கள் எனக்குப் பண்ணின தீங்கெல்லாம் என்ன ஆச்சு? இந்த ஈனர்களுக்கு இளைத்த எளியவனாக நான் ஆகிவிடுவேனா? இப்படிச் சொல்வது அஹம்பாவத்தினாலா? இல்லை. அந்தப் பரமேச்வரன் என் பக்கத்திலேயே நிற்கிறானே, அந்தப் பக்க பலத்தினால்தான் சொல்கிறேன். என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்தவன் அவந்தானே? அவன் என்னை விட்டு விடுவானா? அவன் எனக்குள்ளேயே புகுந்து கொண்டிருக்கிற போது, ‘நான்’ என்று அகம்பாவமாகச் சொல்லிக்கொண்டு செய்ய என்ன இருக்கிறது?“ என்று இந்த மாதிரி கருத்துக்களை வைத்து ஸம்பந்தர் பதிகம் பாடினார்:
மானினோர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்!
“மான் மாதிரிக் கண் படைத்த மாதரசியே! ‘வழுதி’ என்கிற பாண்டியனுக்கு மகா பெரிய தேவியாய் இருக்கப்பட்டவளே!”
“வழுதிக்கு மாபெருந் தேவிகேள்” என்கிறார். எதைக் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார்?
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்று நீபரி வெய்திடேல்
“பால் நல்வாய்” என்பது ஸந்தியில் ‘பானல்வாய்’ என்றாயிருக்கிறது. “பால் குடிக்கிற பாலனாக நான் இருக்கிறேனே, இந்த சூராதி சூரர்களுக்கு எப்படித் தப்பிப் பிழைக்கப் போகிறேன் என்று நீ பயப்படாதே, கவலைப்படாதே – பரிவு எய்திடேல்.”
ஏதோ ‘பெரிய புராணத்திலேதான் கதையாக இட்டுக் கட்டிக் குழந்தைப் பிள்ளையாயிருந்தபோதே ஸம்பந்தர் மகத்தான காரியங்களைச் சாதித்தார் என்று எழுதினதாகத் தோன்றினால் அது தப்பு; அவர் வாயாலேயே அவர் தம்மைப் பால்வாய்ப் பிள்ளையாகச் சொல்லிக் கொள்வதால் உண்மை ஊர்ஜிதமாகிறது.
‘பால்வாய்’ என்று மட்டும் சொல்லாமல் தன் வாய்க்குத் தானே ‘நல்’ என்று பாராட்டி அடைமொழி ஏன் போட்டுக் கொண்டார்? அவரோ அஹம்பாவமே இல்லாதவர். ஏன் சொன்னாரென்றால் அந்தப் பால் ஸாக்ஷாத் தேவியுடையதாக இருந்த்தால்தான்! ஏதோ பசும்பாலாக இருந்திருந்தால் “நல்லவாய்” என்று சொல்லியிருக்க மாட்டார்.
“ஆனைமலை முதலான இடங்களில் எத்தனையோ இன்னலைத் தந்த – நான் தங்கியிருந்த மடத்துக்கே நெருப்பு வைத்த – இந்த ஈனர்களால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லையே:
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே”
“என்னை இவர்களுக்கு எளிசு பண்ணிவிட மாட்டான் என் கூடவே நின்று கொண்டிருக்கிற ஆலவாய் அரன்.”
ஆலவாய் என்பது மதுரை. அரன் என்றால் ஹரன். சிவ நாமங்களுக்குள் ஸம்பந்தருக்கு ரொம்பவும் பிடித்த பெயர்.
இப்படியெல்லாம் அவர் மங்கையர்க்கரசியைத் தேற்றின பிறகு, ஜைனர்களுக்கும் ஸம்பந்தருக்கும் எந்த மதம் உசந்ததென்று ராஜாவின் உடம்பைக் குணப் படுத்துவதை வைத்தே பலப் பரீக்ஷை நடந்தது. Trial of strength நடந்தது.
இதற்குக் காரணம் மங்கையர்க்கரசிதான். “சைவமும் ஜைனமும் பதியின் உடம்பும் எப்படி வேணுமானாலும் போகட்டும்; இந்தக் குழந்தை ஆபத்தில்லாமல் மீண்டால் போதும்’ என்று சற்று முந்தி நினைத்தவளுக்கு இப்போது ஸம்பந்தரிடம் அபார நம்பிக்கை வந்து விட்டது. அதனால், இவராலே இப்போது சைவத்தையும் காப்பாற்றிவிட வேண்டும், பதியையும் காப்பாற்றிவிட வேண்டும். இரண்டையும் சேர்த்து ஒரே காரியத்தில் முடிக்கப்பண்ணி விட வேண்டும் என்று நினைத்தாள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற மாதிரி.
ராஜாவுக்குச் சரீரம் முழுக்க வெப்பு நோய் பரவியிருந்ததல்லவா? இப்போது அதை ஜைனர்களும், ஸம்பந்தரும் அவரவருடைய மதத்தின் மந்திர சக்தியால் குணப்படுத்திப் பார்க்கட்டும்; யார் குணப்படுத்துகிறார்களோ அவருடைய மதமே ஜெயித்ததாக அர்த்தம் என்று மற்றவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றாள்.
அவஸ்தைப்பட்டவன் ராஜாதானே? அதனால் முன்னே ‘கேட்டுமுட்டு’ என்ற அவனே இப்போது சடக்கென்று ஒப்புக்கொண்டு விட்டான்.
அவனுடைய சரீரத்தை ஜைனர்களும் ஸம்பந்தரும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு அந்தந்தப் பாதியைத் தங்கள் தங்கள் மந்திரத்தால் சொஸ்தப் படுத்துவது என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
சமணர்கள் இடது பாதியை மந்திரம் சொல்லி மயில்பீலியால் தடவ ஆரம்பித்தார்கள். தடவத் தடவ அக்னியில் நெய்யை ஆஹூதி பண்ணுகிறது போல வெப்பு – உஷ்ணம் – மேலும் மேலும் ஜாஸ்தியாயிற்று. ராஜாவால் பொறுக்க முடியாமல் ஸம்பந்தரைப் பார்த்தான்.
அவர் “மந்திரமாவது நீறு” என்கிற பதிகத்தைப் பாடிக்கொண்டு ஸுந்தரேச்வர ஸ்வாமியின் விபூதிப் பிரஸாதமான “ஆலவாயரன் திருநீற்றை’ப் பாண்டியனுடைய வலது பாதி சரீரத்தில் இட்டார்; இட இட உஷ்ணம் அப்படியே அடங்கிக் குளிர்ச்சியாக ஆயிற்று. அப்புறம் அவன் வேண்டிக் கொண்ட்தன் பேரில் இடது பக்க வெப்பு நோயையும் அவரே தீர்த்தார்.
திலகவதி தானே தம்பிக்கு விபூதி கொடுத்தாள்; மங்கையர்க்கரசி புருஷனுக்கு ஸம்பந்தரைக் கொண்டு விபூதி பூசுவித்தாள். இரண்டு இடத்திலும் விபூதியே வியாதி தீர்த்தது. வைதிகத்தைக் காத்தது!
இப்படி அனலாயிருந்த உடம்பை அவர் புனலாகப் பண்ணிய பிறகும் ஜைனர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அனல்வாத, புனல்வாதங்கள் நடத்தச் சொல்லி, அதிலும் தோற்றுப் போனார்கள். அவரவர்களுடைய ஸித்தாந்தத்தைச் சுவடியில் எழுதி அதை நெருப்பில் போட்டால் எந்தச் சுவடி எரியாமல் இருக்கிறதோ, அதுவே ஸத்தியமென்று வைத்துக் கொள்வது அனல்வாதம். இப்படியே தங்கள் தங்கள் தத்துவத்தை எழுதிய சுவடியை ஆற்றிலே போட்டு, எது ப்ரவாஹத்தை எதிர்த்துக்கொண்டு மறு திசையில் போகிறதோ அதுவே உண்மையானதென்று வைத்துக் கொள்வது புனல்வாதம்.
எல்லாவற்றிலும் ஸம்பந்தர்தான் ஜயித்தார்.
ஸம்பந்தர் ஜயித்தார் என்றால் என்ன அர்த்தம்? சைவம் ஜயித்தது என்று அர்த்தம். சைவம் ஜயித்தது என்றால் வேத மதம் ஜயித்தது என்றே அர்த்தம்.
பாண்டியனும் பாண்டிய நன்னாடும் மறுபடி ஸநாதன தர்மத்துக்கே வந்து விட்டது.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
நன்றி : தெய்வத்தின் குரல் | ஆக்கத்தில் உதவி : அம்மன் தரிசனம் | சம்பந்தர் அபிஷேக புகைப்படங்கள் உதவி : kadamburtemple.blogspot.in
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Please check the following link for account details :
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
====================================================================
Also check similar articles and true incidents :
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!
====================================================================
[END]
நம் நடமாடும் சர்வவியாபியான ” தெய்வத்தின் குரல்” மூலம் ஞானக் குழந்தை திருஞான சம்பந்தரை பற்றி அவரது குருபூஜையன்று தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ஸ்வாமிகள் நம்மிடம் நேரில் உரையாற்றுவது போல் இருந்தது. குரு வாரத்தில் குருவின் குரலை நேரில் கேட்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது இந்த பதிவு.
//மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துயர்வாய் பங்கன் திருஆலவாயன் திரு நீரே //
ஒவ்வொரு படமும் மிகவும் உயிரோட்டமுள்ளதாக , தத்ரூபமாக அமைந்துள்ளது.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்
குருவே சரணம் ….மகா பெரியவா கடாக்ஷம்
நன்றி
உமா வெங்கட்
அதி அற்புதமான பதிவு.
நெஞ்சார்ந்த நன்றிகள்
ஓம் நமசிவய!!! சைவம் செழித்தோங்க நம் முன்னோர்கள் பட்ட பாடு கேட்க கேட்க கண்கள் கலங்கும். நம் தலைமுறைக்கு பிறகு நம் அடுத்த தலைமுறைக்கும் இத்தகு இடைர்களை களைந்து தான் நம் சைவம் தழக்க முடிந்தது என்று அடுத்து சொல்ல தங்கள் பதிவு மிகவும் சிறந்தது. எதுவும் சும்மா வராது. கஷ்ட்டபட்டால் தான் பலன். நம் தலைவர் கொஞ்சம் டெஸ்ட் பண்ணும் சுபாவத்தை குறைத்து கொள்ளும்படி அவர் தாள் பணிந்து கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.
நம் எத்தனையோ பேர் மற்றவர்களின் வேதனையை புரிந்து நடந்துகொள்ளும் பக்குவத்தை கொடுத்தவர், நம்மை உணரும் பக்குவத்தை தந்தையை போல் கண்டிப்புடன் இல்லாமல், தாயை போல் தயவுடன் அருளும்படி நம் அனைவரின் நலனுக்காகவும் வேண்டுகிறேன். நாம் ஏற்கனவு நொந்து நூடுல்சாக (அதுவும் “maggi தற்போது சொல்லவும் முடியலை) இருக்கும்போது, நம் தலைவர் தான் மேலும் டெஸ்ட் செய்யாமல் இந்த கலியுகத்தில் அருள வேண்டும்.
ராஜ்குமார் சார்,
வெகு நாட்களுக்குப் பிறகு தங்களை இங்கு பின்னூட்டம் வாயிலாக பார்க்கிறேன். நம் இறைவன் நம்மால் தாங்கும் வரை நமக்கு சோதனை கொடுப்பார். சோதனை சாதனை ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. வெற்றி உங்கள் பக்கம். இறைவன் கொடுத்த சோதனையிலேயே தங்கள் மனம் பக்குவப் பட்டு இருக்கும்
ரைட் மந்த்ரா வாசகர்கள் எந்த சோதனை வந்தால் அதை எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள்.
// காலம் ஒரு நாள் மாறும் , தங்கள் கவலைகள் யாவும் தீரும் //
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
மிக்க நன்றி மேடம், நானும் இதை நினைத்துதான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய தன்னபிக்கை குறையும்போது சுந்தரின் இத்தகைய பதிவுகளும், தங்கள் போன்ற நல்ல பல உள்ளங்களின் ஆறுதல்களும் தான் என்னை காப்பற்றி வருகிறது. எல்லாம் பெரியவ பார்த்துப்பா… ஜெய் சத்குரு சாயி நாத் மகாராஜ் கி ஜெய்.
Thank for the info Sunthar, however i want’s to notify some oppertunities over your article. Even though you are referring “Maha Periyava” all the language you are using is not tamil. It’s also defeat the purpose of the article. Specially when you refer Sambanthar he not only develop Saivam he is also a big asset to tamil language.
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை….
இது சாமானியர்களுக்கான தளம். நான் இந்தளவு எழுதுவதே ஒரு மிகப் பெரிய அதிசயம். மிக உயர்ந்த தூய மொழி நடையில் எழுத எனக்கு வராது. அப்படி ஒருவேளை எழுதினால் என் வாசகர்களுக்கும் அது சரியாக சென்று சேராது. இங்கு மொழியின் ஆளுமையைவிட பக்தியும் இறைவன் மீது நாங்கள் கொண்டுள்ள அன்புமே பிரதானமானது.
மற்றபடி சம்பந்தர் குறித்து நீங்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை.
நன்றி!
அருமையான பதிவு
குருவே சரணம்
நன்றி
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இந்த பதிவிற்கு பொருந்தும். சம்பந்தரின் வரலாறும், அந்த வரலாற்றை “தெய்வத்தின் குரல் ” மூலம் கேட்டதும் என இரண்டு நிகழ்வுகள்.
படிக்க படிக்க ..கண்கள் குளமாகின..சைவம் தழைக்க என்ன என்ன பாடுகள்? இந்த பதிவு இந்த தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று..
திருநீற்றின் மகிமையையும் தெரிந்து கொண்டேன்.
சம்பந்தரின் வண்ணபடங்கள் பார்க்கும் அனைவரது வாழ்விலும் வண்ணங்கள் பெற்று , வளமாக வாழ்ந்திட சம்பந்தர் அருள் புரிவாராக..
இந்த பதிவிற்கு பின்னால் இருக்கும், தள ஆசிரியரின் உழைப்பிருக்கு மரியாதை செய்கிறேன்.
நன்றி அண்ணா..