இந்த பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் நடைபெற்று வரும் மஹா பெரியவா மஹானுஷ ஜயந்தி மஹோத்சவத்தில் இன்று எடுத்தவை. இன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மயில் வாகன அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தார்.
தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன்!
காஞ்சி காமகோடி பீடத்தில் 68-ஆவது பீடாதிபதியாக அருளாட்சி செய்து, பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அன்போடு அருளையும் பொழிந்தவர் மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
கி.பி. 1894-ஆம் ஆண்டு, வைகாசி மாதம் 8-ஆம் நாள், அனுஷ நட்சத்திரம் கூடிய நன்னாளில் பகல் 19 நாழிகைக்கு, மகாலட்சுமி என்ற உத்தமிக்கும், சுப்ரமண்ய சாஸ்திரிகள் என்ற மகானுக்கும் இரண்டாவது மகனாக அவதரித்தார் பெரியவர்.
அப்போதைய தென்னாற்காடு மாவட்டம், விழுப்புரம் நகரம் நவாப் தோட்டத்துக்கு அருகிலுள்ள அக்ரஹாரத்தில், அக்காலத்தில் கோவிந்தராயர் வீடு என்ற பெயருடன் விளங்கிய இடமே அவர் பிறந்த புண்ணிய தலம்.
எவ்வாறு ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியும், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த துவாரகையும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறதோ, அவ்வாறே மகாபெரியவர் அவதரித்த விழுப்புரமும் பெரும் பாக்கியம் செய்துள்ளது.
மகாபெரியவருக்கு பெற்றோர் இட்ட நாமம் சுவாமிநாதன். சுவாமிநாதனுக்கு 13 வயதுக்குள்ளாகவே ஆங்கிலப் படிப்பு உள்ளிட்ட எல்லா கல்வித்திறமைகளும் நிறைந்துவிட்டன. அந்த வயதிலேயே காஞ்சி காமகோடி பீடம் தன் அரியணையில் அவரை ஏற்றிவைத்துப் பெருமைகொண்டது.
ஸ்ரீசுவாமிநாதன் பராபவ ஆண்டு, மாசி மாதம் 2-ஆம் தேதி, புதன்கிழமை (13-2-1907) கலவையில் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக அமர்ந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட தீட்சாநாமம் ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி ஸ்ரீபாதாள் என்பதாகும். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது 14-ஆவது வயதில் திருவானைக்காவுக்கு விஜயம் செய்து ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு கும்பாபிஷேகமும், ஸ்ரீகாஞ்சி பீடாதிபதிகளுக்கு உரித்தான தாடங்கப் பிரதிஷ்டையும் செய்தார்.
பிறகு பல தலங்களை தரிசித்துவிட்டு கும்பகோணம் வந்து சிலகாலம் தங்கினார். அதன்பின்னர் மகேந்திர மங்கலத்தில் பர்ணசாலை அமைத்து தங்கி, சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் தக்க பண்டிதர்களைக் கொண்டு அபிவிருத்தி செய்துகொண்டு, தனது விநயத்தாலும் மேதாவிலாசத்தாலும் பிரகாசித்தார். 1914-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீமடத்திற்குத் திரும்பி வந்தார். அங்கு நான்கு வருடங்கள் தங்கி, கலைகளுக்குப் பெருநிதியாகவும், மேதைகளும் வியக்கும் பாண்டித்யம் நிறைந்தவராகவும் அருளாட்சி செய்தார்.
1919-ஆம் ஆண்டு விஜய யாத்திரையை மேற்கொண்ட பெரியவர், 20 வருடங்கள் தன் திருப்பாதங்களால் பாரதத்தின் மண்ணை மேலும் பரிசுத்தமாக்கினார். பலநூறு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீஆதிசங்கரர் சீர்திருத்தி வைத்த நமது உயர்ந்த சநாதன மதம், மறுபடியும் மேலை நாகரிகத்தால் நிலைகுலைந்தது. மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பறிகொடுத்ததோடு, “தர்மம் எது? அதர்மம் எது?’ என்று அறியாமல் தடுமாறினர். மூடவாதங்களினாலும், குருட்டுத்தனமான செய்கைகளாலும் மனம் தடுமாறிய பாரதத்தை லௌகீகத் துறையில் காந்திஜியும், வைதிகத்துறையில் பெரியவர் உள்ளிட்ட மகான்களும் தன் தேசம், தன் மதம் என்று நினைப்பதற்கு கற்றுத்தரும்படி ஆயிற்று.
நாளடைவில் தவத்தின் திருவுருவமான ஸ்ரீபெரியவர் வைதிக மார்க்கத்தில் உறுதியையும், ஆத்ம பலத்தையும் உறுதுணையாகக் கொண்டு பீடுநடை போட்டபோது, மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
பெருமையின் பிறப்பிடமாய், எளிமையிலும் எளிமையாய், அன்பே உருவமாய் இருந்த ஸ்ரீபெரியவர் நாம் செல்லவேண்டிய வழிகளை நன்கு செப்பனிட்டுத் தந்தார்.
“ஏழையா? தானம் செய்ய முடியவில்லையா? தினம் ஒரு பைசாவும், ஒரு பிடி அரிசியும் ஒரு கலயத்தில் போட்டு வாருங்கள். அதுவே உங்களை ரட்சிக்கும் பெருநிதி’ என்று மக்களுக்கு அன்புடன் கூறினார்.
“சிறுமிகளே, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி ஆண்டவனை வழிபடுங்கள். அது தெய்வீக குணங்களை வளர்த்து, சம்பத்து நிறைந்த குணவானாகிய கணவனை அடையும்படிச் செய்யும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்தால் நல்ல சந்ததிகள் உண்டாகி நாட்டில் நலம் பெருகும்’ என்றார்.
“சிறுவர்களே, தினமும் காலையில் நாராயண, நாராயண என்று 12 முறை சொல்லி சூரிய நாராயணனை வழிபடுங்கள். அவன் உங்களுக்கு திடமான ஆரோக்கியத்தையும் ஐஸ்வர்யத்தையும் அளிப்பான்’ என்றார்.
பெண்களிடம், “எளிமையாய் பகட்டின்றி பண்போடு வாழுங்கள். அதுவே உலகத்திற்கு நன்மை. எதையும் வீணடிக்காமல் இருங்கள். காய்கறித் தோலையும், கழுநீரையும் வீணாக்காமல் பசுக்களிடம் சேருங்கள்’ என்றார்.
“மறைந்து வரும் வேதத்தை அழியாமல் காக்க மாதம் ஒரு ரூபாயாவது கொடுங்கள்’ என்றார்.
மடாதிபதிகளை ஒன்றுசேர்த்து, “மதச்சார்பின்மையால் வரும்- அதுவும் இந்து மதத்தின் ஆணிவேரை நறுக்குவதற்கு நடக்கும் காரியங்களிலிருந்து, நமது மதத்தை நாம்தான் ரட்சிக்க வேண்டும். உயிர் இருந்தால் அது மறுபடி துளிர்த்து தழைக்கும். மற்ற மதத்தினருக்கும் நிழல் தந்து, கனி தந்து, களைப்பையும் பசியையும் ஆற்றும். உலக அன்னையைப்போன்ற நமது துவேஷமற்ற மதத்தை நாம் அழியாமல் பாதுகாப்போம்’ என்று சொன்னார். அதற்காக பாடுபட்டார்.
சிற்பிகளுக்கும் ஸ்தபதிகளுக்கும் ஆதரவு தந்து, “பண்டைய கலைகளால் பரமனை வழிபட்டு, அவனை மையமாகக் கொண்டு உயர்ந்து, அவனருளால் சிறப்பாக வாழுங்கள்’ என்று ஆசி வழங்கினார்.
“மூல விக்ரகங்களை பொருட்காட்சிக்கு களவாடி விற்பதையே தொழிலாகக் கொண்டாலும், மூலமான தெய்வத்தையும், மனதையும் விற்றுவிட்டால் நாம் நம் நாட்டில் மட்டுமல்ல; உலகிலேயே தலைநிமிர்ந்து நடப்பது எப்படி?’ என்று உருகினார் அந்த மகான்.
சூரியன் எப்படி குடிக்க உபயோகமற்ற கடல் நீரை உறிஞ்சி, நன்னீராகிய மழையால் நானிலத்தை செழிக்க வைக்கிறானோ, அதேபோல மகாபெரியவரும் கசடர்களிடமிருந்தும் நன்மையை உண்டாக்கி நானிலத்தில் அறம்செழிக்கச் செய்தார்.
ஆதிசங்கர பகவத் பாதருக்கு ஒப்பான தவமும், கீர்த்தியும், எளிமையும், வலிமையும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் பெரியவர். தன்னை அண்டி வந்தவர்களுக் கெல்லாம் அருளை வாரி வழங்கினார். சுகமான சயனத்தைத் துறந்து வெறும் கட்டாந்தரையில் சயனித்தார். பலவிதமான பழங்கள் கூடை கூடையாக இருந்தும், பச்சைத் தண்ணீர்கூட பருகாமல் பிரும்மானந்தத்தில் லயித்திருப்பார். நாம் அன்போடு அளிக்கும் அற்பப் பொருளையும் ஆனந்தமாக ஏற்றுக்கொள்வார்.
மற்ற அவதாரங்களுக்கும், ஆதிசங்கரர் அவதாரத் துக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தை ஸ்ரீ பெரியவர் மிக அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறார்.
“மற்ற அவதாரங்களின் காலத்தில் அசுரர்களென்று தனியாக ஒரு பிரிவினர் இருந்தார்கள். அவர்களை சம்ஹாரம் செய்ய பகவான் அவதரித்தார். ஆனால் கலியில் அசுரர்கள் என்று தனியாக இல்லை. மக்களின் மனதுக்குள்ளேயே அசுரத்தன்மை புகுந்துவிட்டது. மக்களையெல்லாம் சம்ஹாரம் செய்ய பகவான் அவதரிக் காமல்- சம்ஹார அவதாரம் செய்த விஷ்ணுவிடம் பொறுப்பைத் தராமல்- தட்சிணாமூர்த்தி சிவமே மக்கள் அறிவைத் தெளிவித்து அசுரத்தன்மையை அகற்றி அருள்புரிய ஞானகுருவான சங்கரராகத் தோன்றினார்’ என்பது பெரியவர் கூற்று.
பெரியவர் பீடாதிபதியாக இருந்த காலத்தில், மத உணர்ச்சி என்பதே மக்களிடம் நசிந்து போயிருந்தது. விஞ்ஞானம், மேல்நாட்டு நாகரிகம் ஆகியவை ஒருபுறமும்; சுதந்திரப்போராட்டம், அரசியல் உணர்ச்சி என்று மறுபுறமும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அந்த சூழலில் சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டும் மிகப் பெரிய பணியைச் செய்தார் பெரியவர்.
இன்றைக்கு வேத சப்தங்கள் எங்கெங்கும் முழங்கிக் கொண்டிருப்பதற்கு மகாபெரியவர் அருள்தான் காரணம். பல ஆலயங்களில் திருப்பணி நடந்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்றால், பெரியவருடைய பிரயாசையே காரணம். ஸ்ரீபெரியவருக்குத் தெரியாத கலைகளே இல்லை. அவருடைய பேச்சில் வேதம் இருக்கும்; அறிவியல், சங்கீதம், சரித்திரம் போன்ற எல்லா விவரங்களும் இருக்கும்.
சநாதன தர்மத்தை நிலைநாட்டி மகத்தான பல சாதனைகள் செய்தவர் பெரியவர். அரசாங்க பலம் கொண்டோ, ஆள் பலம் கொண்டோ, பணபலம் கொண்டோ இவற்றை அவர் ஆற்றவில்லை. தனியொரு மனிதரின் அந்தரங்க சக்தியால்- தவசக்தியால்- அன்புச் சக்தியால் மட்டுமே இந்த அற்புதங்கள் சாதிக்கப்பட்டன.
அவரது ஞானதிருஷ்டியை விளக்க ஒரு சிறிய சம்பவம். எனது சகோதரர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். ஒருமுறை அவர் பள்ளிக் குழந்தைகளுடன் பழனி, மதுரை என்று பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வரும்போது, பழனியில் ஒரு சித்தர் (அழுக்கு சுவாமி) இருப்பதையறிந்து அவரை தரிசித்துவிட்டு வந்தார். இறுதியாக காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபெரியவரை தரிசிக்கச் சென்றார். சகோதரர் பெரியவரை நமஸ்கரித்துவிட்டு எழுந்தபோது, “என்ன, அழுக்கு சுவாமி தரிசனம் ஆச்சா’ என்று பெரியவர் கேட்டவுடன் சகோதரர் சிலிர்த்துப் போனார். “அவர் மகா யோகீஸ்வரர். தரிசிப்பது மிகவும் சிரமம்’ என்று சொல்லிமுடித்தார் பெரியவர்.
இத்தகைய அபாரமான ஞான திருஷ்டி இருந்தும் தம்மை எளியவராக்கிக் கொண்டு, நம் நிலைக்கு இறங்கிவந்து சாதாரண மனிதரைப்போல பேசி அருள்புரிந்தார் என்பதை நினைக்கும்போது உள்ளம் விம்மிப் புடைக்கிறது; ஆனந்தக் கண்ணீர் வருகிறது.
ஸ்ரீகாமகோடி மடத்தில் ஒரு நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களின் துயர்களைத் துடைத்து, அன்பையும் ஆசிகளையும் அள்ளி வழங்கினார்.
மேலைநாட்டு தத்துவ விஞ்ஞானிகளும் பெரியவரைக் கண்டு வியந்தார்கள்.
நமது காலத்தில் பெரியவர் அளவுக்கு ஆன்மிகத் தொண்டாற்றியவர்கள் எவரும் இல்லையென்றே சொல்லலாம்.
ஆற்றுவெள்ளமாக அருள்பொழிந்த வள்ளல்- ஆன்மிகச் சுடராக இருந்த பெரியவர் ஸ்ரீமுக ஆண்டு மார்கழி மாதம் 24-ஆம் நாள் (8-1-1994) சனிக்கிழமை ஏகாதசி புண்ணிய தினத்தில் ஒளியோடு ஒளியாகி காமாட்சியோடு கலந்தார். சப்த மோட்சபுரிகளில் ஒன்று காஞ்சிபுரம். மகாபீடஸ்தானம்.
ஸ்ரீபெரியவர் இன்று நம்மிடையே ஸ்தூலரூபத்தில் இல்லையென்றாலும் சூட்சும ரூபத்தில் இருந்துகொண்டு தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் அருள்புரிவதை கண்கூடாகக் காண்கிறோம்.
மகாபெரியவரின் காலத்தில் வாழ்ந்து, அவருடைய கருணை வடிவைக் கண்டு, அருளாசிகளைப் பெற்றது நாம்பெற்ற பெரும் பேறு!
நன்றி : திருமதி.பி.ராஜலக்ஷ்மி | ஓம் சரவண பவ
=====================================================================
Also check : மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்
=====================================================================
எத்தனை பதிகங்கள், எத்தனை ஸ்லோகங்கள்? அத்தனையும் படிக்கவேண்டுமா? எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா? என்ற சந்தேகத்திற்கு விடை இந்த பதிவு!
எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??
=====================================================================
மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!
நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!
=====================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…
“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)
தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)
மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)
நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)
அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)
“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)
“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)
ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)
மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)
பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)
சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)
மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)
பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)
கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)
குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)
“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)
“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
=====================================================================
Also check short series on Kalady & Sornaththu Manai :
வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
=====================================================================
[END]
மகா பெரியவா அவதார தினமான மகா அனுஷத்தில் அவரைப் பற்றி படிக்கும் நாம் பாக்கியசாலிகள்
மக்களின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்றார் போல் அவர்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார்.
1991ம் ஆண்டு காஞ்சி மடத்தில் என்னுடைய திருமண நாளன்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியதை இப்பொழுது நினைவு கூர்கிறேன். அவர் காலத்தில் நாம் வாழ்ந்ததே நாம் செய்த புண்ணியம்
நடமாடும் தெய்வமான மகானுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். அவர் நம் எல்லோரையும் வழி நடத்தி அருள் மழை பொழியட்டும். ஒவ்வொரு படங்களும் அருமையோ அருமை
நன்றி
உமா வெங்கட்
குருவே சரணம், குருவே சரணம், அற்புதமான பதிவு.
சுந்தர்ஜி உங்கள்ல்க்கு கோடி நன்றிகள்.
நன்றி
நாராயணன்.
மிக அருமையா பதிவு . மஹா பெரியவாவின் ஜெயந்தி அன்று அவரின் சரிதம் படித்து அருளை பெறுவோம். மஹா பெரியவர் ஜெயந்தி ஸ்பெசலாக அவரின் திருவிளையாடல்களை படிக்க ஆவலாக உள்ளோம் .
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
நன்றி அண்ணா..
சுந்தர்ஜி
மஹா கருணை கடலாம் நம் மஹா பெரியவா அவர்களின் பிறந்த வரலாறு , மற்றும் அவர்களின் நம் மக்களுக்கு செய்த சேவைகள் படிக்கும் போது நாமும் அவர் காலத்தில் வாழ்ந்து வந்தோம் என்பதில்
மகிழ்ச்சி அளிக்கிறது.
படங்கள் சூப்பர்
நன்றி
வணக்கம் சுந்தர். திரு ராஜலக்ஷ்மி அவர்கள் நன்கு எழுதி உள்ளார்கள் அதை நீங்கள் சரியான சமயத்தில் பகிர்ந்து உள்ளீர்கள் .நன்றி எல்லோரும் கூறியது போல அவர் காலத்தில் வாழ்வதே பெருமைதான். எப்போது படத்தை அல்லது அவரை பற்றிய கட்டுரை படித்தாலும் என் மனதில் தோன்றுவது ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்க கூடாதா என்பதுதான்.ப்ராப்தம் என்று ஒன்று இருகிறதே.அவர் அருள் கிட்ட முயற்சிகிறேன். நன்றி
மிக சிறப்பான பதிவினை பகிர்ந்தற்கு மிக்க நன்றி.
படங்கள் அனைத்தும் அற்புதம்.