Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

print
ம் தள வாசகரும் நண்பருமான ஒருவர் சமீபத்தில் நம்மை தொடர்பு கொண்டு, மிகப் பெரிய சந்தேகம் ஒன்றை கேட்டார்.

“தப்பா நினைக்காதீங்க சுந்தர்ஜி… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி முதன் முதல்ல எங்களை சுந்தரகாண்டம் படிங்க… சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்… வீட்ல சர்வ மங்களம் உண்டாகும்னு சொன்னீங்க… வாங்கி படிச்சேன். கொஞ்ச காலம் கழிச்சி வேல்மாறலை எங்களுக்கு அறிமுகப்படுத்தி, அதோட அருமை பெருமைகளை சொல்லி அதை படிங்க. நினைச்சது எல்லாம் நடக்கும், உங்க பிரச்சனைங்க எல்லாம் தீர்ந்துபோகும்னு சொன்னீங்க. அதையும் செஞ்சேன். போன மாசம் ‘இடரினும் தளரினும்’ பதிகம் பத்தி சொல்லி, இந்த பதிகத்தை படிங்க… உங்க பொருளாதார பிரச்னைகள்லாம் தீர்ந்துபோகும்னு சொன்னீங்க… சரின்னு சொல்லி அதையும் படிக்க ஆரம்பிச்சேன். இப்போ லேட்டஸ்ட்டா நேத்தைக்கு ஸ்கூல் அட்மிஷன்ல ஏற்படும் தடைகளை நீக்கும்னு சொல்லி ரெண்டு பதிகம் போட்டிருக்கீங்க. அப்போ, முன்னே சொன்ன சுந்தரகாண்டம், வேல்மாறல் இதுக்கெல்லாம் மகத்துவம் இல்லையா? இல்லே அதெல்லாம் படிச்சா இந்த பிரச்னைகள் தீராதா?”

சபாஷ் நல்ல கேள்வி. நியாயமான சந்தேகம். நெத்தியில அடிச்ச மாதிரி கேட்டார். சட்டசபையில கேட்குற மாதிரி கேட்டார். அவருக்கு மட்டுமல்ல… உங்களில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கக்கூடும்.

medicines

நாம் நண்பரிடம் கேட்டோம்…. “கடைசியா நீங்க எப்போ டாக்டர் கிட்டே போனீங்க? எதுக்கு போனீங்க?”

யோசித்தவர், “ம்….. போன மாசம். ஒரே ஜலதோஷம், மூக்கடைப்பு…. ஜூரம்… அதுக்காக டாக்டர் கிட்டே போயிருந்தேன்”

“ஓ.கே. டாக்டர் என்ன பண்ணார்?”

“உடம்பை செக் பண்ணி, இன்ஜெக்ஷன் போட்டு மருந்து மாத்திரையெல்லாம் எழுதிக்கொடுத்தார்.”

“ஓ… வெரி…குட்…. எத்தனை மாத்திரை எழுதிக்கொடுத்தார் ஞாபகமிருக்கா?”

சற்று யோசித்தவர் “மூணு மாத்திரை, ஒரு இருமல் மருந்து சிரப்”

“ஏன் ஒரு சாதாரண ஜலதோஷத்துக்கும் அதுனால வர்ற காய்ச்சலுக்கும் மூணு நாலு மாத்திரை எழுதி தர்றார்? ஒரே மாத்திரை தரவேண்டியது தானே? தவிர இன்ஜெக்ஷன் வேற… போலி டாக்டரா இருப்பாரோ?”

திருதிருவென விழித்தார் நண்பர்.

“ஜி… பொதுவா சளி, ஜலதோஷம்னு போனா குறைஞ்சது மூணு மாதிரியாவது எழுதி தர்றாங்க…”

“அதான் ஏன்னு கேட்கிறேன்…. ஒரே மாத்திரை எழுதித் தரக்கூடாதா?”

“மூணு நாலு மாத்திரை போட்டாத்தான் ஜலதோஷம் குணமாகும்”

“கரெக்ட்… டாக்டர் எழுதித் தர்ற மாத்திரையில, ஒவ்வொரு மாத்திரையும் ஒரு ஒரு வேலையை செய்யும். ஒரு மாத்திரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்யும்… ஒரு மாத்திரை சளியின் போது ஏற்படும் பல்வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும், ஒரு மாத்திரை நல்ல தூக்கத்தை தரும்… இப்படி நிறைய மாத்திரைகள் சாப்பிடுறதாலே வயிறு புண்ணாகாம இருக்குற வேலையை வேற ஒரு மாத்திரை பார்த்துக்கும். இப்படி டாக்டர் எழுதித் தர்ற ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு வேலையை செய்யும். இதெல்லாம் கரெக்டா அதோட வேலையை செஞ்சாத்தான் அந்த நோய் குணமாகும் இல்லீயா…?”

குறுக்கீடு இல்லாமல் நாம் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார்.

“ஆமா!”

“ஒ.கே… இதுக்கு முன்னாடி எப்போ டாக்டர் கிட்டே போனீங்க? எதுக்கு போனீங்கன்னு ஞாபகமிருக்கா?”

“ம்…. ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி… பல் டாக்டர் கிட்டே போயிருந்தேன்… சொத்தை பல் ஒன்னு சரியான வலி…. அதுக்காக போயிருந்தேன்”

“டாக்டர் என்ன பண்ணார்?”

“மரத்து போற இன்ஜெக்ஷன் போட்டு பல்லை புடுங்கி மருந்து மாத்திரையெல்லாம் எழுதிக்கொடுத்தார்!”

“இப்போ எத்தனை மாத்திரை…?”

“நாலஞ்சு மாத்திரை இருக்கும்!”

Vel Maaral“இது என்னங்க அநியாயம்? ஜலதோஷத்துக்கு ஒரு டாக்டர்…  பல்லை புடுங்குறதுக்கு ஒரு டாக்டரா? அதுவும் அதுக்கு மூணு மாத்திரை… இதுக்கு நாலு மாத்திரையா? என்ன கணக்குங்க இது?”

திருதிருவென விழித்தவர்… சற்று நேரம் கழித்து “ஜி… உங்களுக்கு தெரியாதது இல்லே… ஒவ்வொரு பிரச்சனைக்கும் அததுக்குன்னு இருக்குற தனித் தனி டாக்டர்ஸ்கிட்டே போய் பார்த்தா அந்த நோயை அவங்க சரியா குணப்படுத்துவாங்க…”

“ஒ.கே. ஒத்துக்குறேன். ஏன் மாத்திரைகள் ஒரே எண்ணிக்கையில தரவேண்டியது தானே. அதுக்கு மூணு. இதுக்கு நாலு… ஏன் ஏன்?”

“ஜி.. அந்தந்த நோயோட தீவிரத்தை பொறுத்து தன்மையை பொறுத்து மாத்திரைகள் தர்றாங்க”

“அதான். அதே தான்! அதே போலத் தான் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளும். உடலில் ஏற்படும் பிணிகளுக்கே நாம் இத்தனை மருத்துவர்களை பார்த்து இத்தனை மருந்துகளை சாப்பிடவேண்டியிருக்கிறது…. பிறவிப் பிணிகளை போக்கவேண்டும் என்றால் அது எத்தனை பெரிய வைத்தியம்? அதற்கு ஒரே மருந்து மட்டும் போதுமா? இந்த ஜென்மத்துல நாம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச பாவங்களை பட்டியல் போட்டாலே பெரிசா நான்-ஸ்டாப்பா அது பாட்டுக்கு போகும். இதுக்கு முன்னால ஒவ்வொருத்தரும் எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ? எவ்வளவு பாவங்கள் செஞ்சிருப்போமோ? அதுக்கெல்லாம் ஒரே வைத்தியர், ஒரே ட்ரீட்மென்ட், ஒரே மாத்திரை போதுமா? நம்ம பாவங்களுக்கும் அந்த ட்ரீட்மென்ட் பத்தாது. நமக்கும் அந்த பக்குவம் போதாது.

உடல் பிணிகளுக்கே தனித் தனியா அந்தந்த ஸ்பெஷலிஸ்ட்கள் கிட்டே வைத்தியம் பார்க்குறோம்… அதுவும் சீசன் மாறும்போது அந்தந்த சீசன்ல வரக்கூடிய நோய்கள் வேற வருது… வெயில் காலத்துல ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் கிட்டே போறோம். மழைகாலத்துல ஜலதோஷம் அது இதுன்னு சாதாரண டாக்டர் கிட்டே போறோம். எல்லாருமே வைத்தியம் பார்த்து நோய்களை குணப்படுத்துறவங்க தான். ஆனாலும் ஒரே மருந்து மாத்திரை தர்றதில்லே. அதுபோலத் தான் பிறவிப் பிணிகளும்…. இதை தீர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்லே…

Padhigangal

உடல்பிணிகளை தீர்க்க எப்படி மருந்துகள் நிறைய கிடைக்குதோ அதே போல பிறவிப் பிணிகளை தீர்க்க கிடைக்கும் மாமருந்துகள் தான் இந்த பதிகங்கள் ஸ்லோகங்கள் எல்லாமே.

கடந்த காலங்களில் முற்பிறவிகளில் நாம் செய்திருக்கக்கூடிய சாதாரண பாவங்கள் கூட பின்னாளில் மிகப் பெரிய தண்டனையை நாம் அடைந்து  துன்பத்தில் உழல்வதற்கு காரணமா அமையுது.

பானுதாசர் என்கிற மகானுக்கு ஒரு முறை செய்யாத தவறுக்காக ராஜ தண்டனை கிடைத்து வலக்கை துண்டிக்கப்பட்டுவிட்டது. பாண்டுரங்கன் மீது அலாதி பக்தி கொண்ட அவர், “தாயே ருக்மிணி தேவி… நீயாவது சொல்லக்கூடாதா பாண்டுரங்கனிடம்? நான் நிரபராதி!” என்று கதறி அழுதார்.

Narayana with sridevi boodevi

ருக்மிணி, பாண்டுரங்கனிடம் “பிரபோ உங்கள் ஆத்யந்த பக்தருக்கு ஏன் இப்படி ஒரு சோதனை? அதுவும் இப்படி கையை இழந்து கஷ்டப்படும் அவரை காப்பாற்றக்கூடாதா?” என்று கேட்க, பாண்டுரங்கன் சிரித்துக்கொண்டே “அது அவனது ஊழ்வினை தேவி. முன்ஜென்மத்தில் புலையன் ஒருவன் பசுவைக் கொல்ல துரத்தி வந்தபோது இவன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தான். “இந்த பக்கம் ஏதாவது பசு போயிற்றா?” என்று புலையன் கேட்டான். இவனோ “இந்த பக்கம் போயிற்று” என்று பொருள்படும்படியாக வலக்கையை பசு போன திசையை நோக்கி காட்டினான். புலையன் அந்த திசையில் பசுவை துரத்திச் சென்று கொன்றுவிட்டான். எனவே பசுவை காட்டிக்கொத்த கை இந்த ஜென்மத்தில் போய்விட்டது. இருப்பினும் அவனை நாம் காப்போம்! சிறிது காலம் கழித்து நாம் அவனுக்கு கையை மீண்டும் தருவோம்!” என்றார்.

ஆக… முற்பிறவியிலோ இந்த பிறவியிலோ நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனை நமக்கு பன்மடங்கு திரும்ப கிடைக்கிறது. (புண்ணியமும் அப்படித்தான்!) எனவே இறைவனின் நாமத்தை உச்சரித்து, அவனது அருமைப் பெருமைகளை பாடி நமது பாவங்களை கழுவவேண்டும். பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும். (என்னென்ன பாவம் நாம் செய்திருக்கக்கூடும் என்பது பற்றிய பதிவு ஒன்று சமீபத்தில் அளித்திருந்தோம். அதை ஒரு முறை மீண்டும் படிக்கவும்!)

சற்று யோசித்து பாருங்கள்… கடந்த காலங்களில் நாம் அறிந்தோ அறியாமலோ என்னென்ன பாவங்கள் செய்திருப்போம் என்று… அவற்றை தீர்க்கும் மருந்தை போல, இறைவனின் பல்வேறு ஸ்தோத்திரங்களை பாடி, புண்ணியச் செயல்களை செய்து நல்ல கதியை அடையவேண்டும்.

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check similar articles….

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!

விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம்!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

====================================================================

[END]

17 thoughts on “எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

  1. மிக சரியான விளக்கம்.

    பிறவி பிணிகள் களைய மருந்துகள் உள்ளன என சந்தோசப் பட வேணுமே தவிர, இவ்வளவு மருந்துகளா என்று சலிப்படையக் கூடாது.

    இவற்றை பின்பற்றி பிணிகள் தீர்ந்து, பிறவி இல்லா நிலை
    பெறுவோம்.

    எல்லா பிணிகளுக்கும் சரியான மருத்துவத்தை பரிந்துரைக்கும் நமது மருத்துவருக்கு {ஆசிரியர்} நன்றி

    ..

  2. I agree. Sole purpose of mantra’s is to deliver inner peace for the individual who chants or hear it. Metals like gold ,silver, iron,.. has its own properties and has its own purpose. One who uses gold cannot deny the existence of other metals or its purpose.

  3. பல நாட்களாக எனக்கிருந்த சந்தேகம், இந்த பதிவை படித்த பின்பு நீங்கிவிட்டது.தாங்கள் மேலே குறிப்பிட்டது போல்..இந்த சந்தேகம்,நம் தல(ள) அன்பர்கள் பலருக்கும் இருந்திருக்கும்.

    ஒரு வாரமாக, வேல் மாரல் பாராயணம் செய்வதை நிறுத்தி இருந்தேன்..இந்த பதிவை படித்த பின்பு..பெரிய தவறு செய்ததை உணர்கிறேன்..இவ்வாறு தடம் புரளும் போது, சரியான நேரத்தில், இறைவன் அருளால் சரியான பாதை காட்டிய பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.

    சரியான பாதை காட்டும் “rightmantra.com” கும் நன்றி.

    மிக்க நன்றி சுந்தர் அண்ணா..

  4. சுந்தர்ஜி
    சூப்பர். இந்த விஷயம் எல்லோருக்கும் புரியும்படி நன்றாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  5. சபாஷ் ……. சரியான பதிவு.

    நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் ஓர் மருந்து சாப்பிடுவது போல் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பிறவிப் பிணிக்கும் ஒவ்வோர் மருந்து உள்ளது தான் ஒவ்வொரு பதிகமும் என்பதை எல் கே ஜி மாணவருக்கு விளக்குவது போல் விளக்கி ஒரு நல்ல கை தேர்ந்த மருத்துவ நிபுணரை போல் விளக்கி விட்டீர்கள். தங்களின் conversation அருமை

    தெரியாமல் செய்த பாவத் திற்கே பானு தாசருக்கு அடுத்த பிறவியில் தண்டனை என்றால், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவத்திற்கு பதிகம் படித்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் .

    நான் சுந்தர காண்டம் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது. ஜஸ்ட் reminder

    நன்றி
    உமா வெங்கட்

  6. சுந்தர் சார் வணக்கம்

    நியாயமான சந்தேகம் அருமையான பதில் சார்

    நன்றி

  7. வணக்கம் சுந்தர். என் மனதிலும் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி.இன்று அருமையான பதில் கிடைத்துள்ளது.ஆனாலும் ஒரே கடவுளை பற்றிகொண்டல்தான் விரைவில் முன்னேற முடியும் என பல இடங்களில் படித்து உள்ளேன். யோசித்து முடித்த வரை படிப்போம் முடிவை கடவுள் இடம் விட்டு விடுவோம் என நினைத்துகொள்வேன் .நன்றி அருமையான பதிவுக்கு .

    1. ஒரே கடவுளை பற்றிக் கொள்ளவேண்டும். சரி தான். அவர் நம் ஃபேமிலி டாக்டர் போல. ஆனால், ஃபேமிலி டாக்டரே சில சமயம் சில நோய்களுக்கு வேறு டாக்டர்களை பரிந்துரைப்பதில்லையா? அது போலத் தான் இது.

      பக்தியின் தன்மையும், நம்மை திருத்திக்கொள்ளும் மாண்பும் தான் இங்கே முக்கியமே தவிர, எத்தனை கடவுள்களை வணங்குகிறோம் என்பது அல்ல.

      – சுந்தர்

      1. மிகவும் சரியாகவும், புரியும்படியாகவும் பதில் கிடைத்து இருக்கிறது. நானும் இந்த கேள்வியை தங்களிடம் கேட்க மறந்து விட்டேன். இறையாற்றல் திரு.விஜி மூலமாய் கேள்வியை கேட்டு..தங்களின் எளிமையான பதிலையும் இங்கு பதிய செய்து விட்டது.

        தாங்களின் கருத்தை, கடைபிடித்து பக்தியின் தன்மையை மெருகேற்றிட குருவருளும்,இறையருளும் துணை புரியட்டும்.

  8. இதே கருத்து பரிகார ஸ்தலங்களுக்கும் பொருந்தும்.
    அந்தந்த பிரச்சினைகள் , அந்தந்த பிரச்சினைகளுக்கான
    கோவில்களில்தான் தீருகின்றன. அங்கு ஜீவசமாதி அடைந்துள்ள
    மகான்கள் பதிகங்கள் பாடிய சைவ சமயகுரவர்கள், மங்களாசாசனம் செய்த பெரியவர்கள், இவர்களின் சங்கல்பம் ,
    அங்கு ஸ்தாபிக்கப்பட்ட யந்திரங்கள் இவை
    பொருட்டே அவை அமைகின்றன.

    இதில் இன்னொரு கோணமும் உண்டு. கொஞ்ச நாள் இந்த சாமி,
    கொஞ்ச நாள் இன்னொரு சாமி, யாராவது சொன்னால் அந்த
    சாமி, என்று மாறி மாறி வழிபட்டாலும் பிரயோசனம் இல்லை.
    பெரியவர்கள் சொல்லுவார்கள், ” பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டார் ” “கிணறு தோண்ட , பல இடத்தில்
    தோண்டுவதை விட , ஒரே இடத்தில் தோண்டுவது பலன் தரும் ”

    மொத்தத்தில் லோகோ பின்ன ருசி. ஒவ்வொருவருக்கும்
    குறிப்பிட்ட மருந்துதான் வேலை செய்யும்.

    அந்த வகையில் தாங்கள் தந்த விளக்கம் சரியானதே.
    அருமை. என் பாராட்டுகள்

    அன்புடன்

    வெங்கட் ராமன் .

  9. விளக்கம் வியப்பைத் தந்தது. சரியான கோணத்தில் விளக்கியுள்ளீர்கள். நிச்சயம் பலரின் மனதில் இருக்கும் கேள்விற்கு விடையைத் தந்துள்ளீர்கள் . மிக்க நன்றி!. தயவுசெய்து இப்பகிர்வை வள்ளுவன் பார்வைக்கும் வழங்குங்கள்.

  10. நண்பர் சுந்தரிடம் இதே கேள்வியை மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் இப்படி ஒரு தெளிவான அருமையான விளக்கம் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

    உயர்ந்த நோக்கங்களோடு இந்த தளத்தை ஆரம்பித்து பல நல்லவர்களையும் புனிதர்களையும் சந்தித்து கோயில்களுக்கு சென்று உழவாரப்பணி மற்றும் கோசேவை செய்ததன் பலன்தான் இந்த பதிலுக்குப்பின் இருக்கும் ரகசியம்.

    ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் பணம் பட்டம் பதவி ஆகியவை வரலாம். ஆனால் சிந்தனையில் தெளிவும் அதற்கேற்ற செயல்பாடும் அமைவது கடினம். அப்படியே அமைந்தாலும் அதை நல்ல நோக்கத்திற்காக பலருடன் இணைந்து செயல்படுவது இன்னும் கடினம். ஆனால் இவை எல்லாவற்றையும் நம் சுந்தர் தனது தளராத முயற்சியாலும் இறைவன் திருவருளாலும் தினமும் செய்கிறார். எல்லாம் அவன் செயல்!

    1. தங்கள் கருத்தினை முழு மனதுடன் ஆமோதிக்கிறேன்.

      தளத்தின் மகிமையை சரித்திரம் சொல்லும்.

  11. I second Babaram sir’s comment.
    **
    Everyday, there’s a improvement which makes author’s life more courageous and meaningful – which reflects in his postings and replies.
    **
    At the same time, I agree with Venkatraman sir’s comment too.
    **
    Whatever it’s, Confidence and Hope is what IMPORTANT to us.
    **
    To renew that hope, we may shift our drained confidence levelled thoughts to fresh new things with renewed hope – which will keep us stand and stay till the aim is achieved.
    **
    Overall, good reply and post for that person and for us too.
    ***
    Thanks a lot Sundarji for cleansing our thought patterns and giving new dimensions.
    **
    **Chitti**.

  12. மிகவும் அருமையான விளக்கம்.
    எல்லோருடைய நீண்ட நாள் கேள்விக்கு ஒரு சிறப்பான பதிலை கொடுத்தற்கு நன்றி.
    விஜி மற்றும் மனோ அவர்களை போல நம் தள வாசகர்கள் பலருக்கு இந்த கேள்வி பதில் ஒரு நல்லதொரு தெளிவை கொடுத்து இருக்கும்.
    பாபராம் சார் அவர்களும் சிட்டி சார் அவர்களும் சொன்னது மிகை படுத்த பட்டது அல்ல.
    நம் வாழ்க்கை பயணம் சிறக்க அந்தந்த சமயங்களில் அந்தந்த பதிகங்களை படித்து நம் ஊழ்வினை கலந்து பிறப்பில்லா வாழ்வு பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *