திரிசூலம் திரிசூலநாதர் கோவில், சென்னையில் உள்ள மிக மிக பழைமையான தலங்களுள் ஒன்று. நிச்சயம் 1500 வருடங்களுக்கும் குறையாத பழைமையுடைய கோவில் இது. நாம் முதல்முறை சென்றதே மனதுக்குள் பசுமையாக நினைவிருக்கிறது. சரியாக ரைட்மந்த்ரா பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு (2012 ஆகஸ்ட்) இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம். அதற்கு பிறகு இந்த கோவிலுக்கு மீண்டும் செல்ல நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
திரிசூலநாதருக்கு பணி செய்யவேண்டும் என்று விரும்பியதும், ஆலய நிர்வாகத்தை தொடர்புகொண்டு நமது உழவாரப்பணி பற்றி விளக்கி, இதற்கு முன்பு நாம் பணி செய்த கோவில் விபரங்களை கூறினோம். இதையடுத்து ஒப்புதல் கிடைத்தது.
நமது லெட்டர் ஹெட்டில் உழவாரப்பணி அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கவேண்டி நேற்று மாலை கோவிலுக்கு நேரில் சென்றிருந்தோம்.
சென்னை – திருச்சி ஜி.எஸ்.டி. சாலையில் விமானநிலையத்திற்கு எதிரே உள்ள ரயில்வே கேட்டை தாண்டி, திரிசூலம் ஊருக்குள் சுமார் 1.கி.மீ தூரம் சென்றால், கோவிலை அடையலாம்.
இது புராதன சிறப்பு மிக்க புனிதமான திருத்தலமாகும். நான்கு மலைகளுக்கு மத்தியில் இத்தலம் உள்ளது. இதன் மூலம் இத்தலத்தில் ஈசன், நான்குவகை வேதங்களுக்கும் உட்பொருளாய் இருப்பதாக கருதப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த தலம் வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், திருநீற்றுச் சோழநல்லூர் திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. இத்தலத்து ஈசனின் பெயர் திரிசூலநாதர் என்பதால் நாளடைவில் திரிசூலம் என்ற பெயர் நிலைத்து விட்டது. அடுத்து திருச்சுரம். ‘சுரம்’ என்றால் மலை. இத் தலத்தின் நான்கு புறமும் மலை சூழ்ந்திருப்பதாலும், மலைகளே வேத வடிவிலுள்ள தாலும் திருச்சுரம்; இறைவன், திருச்சுரமுடைய நாயனார். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதால் திருநீற்றுச்சோழநல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டது. திருச்சுரமுடைய நாயனார் என்கிற பெயரே மறுவி திரிசூலநாதர் என்றானது.
ஒரு தடவை இந்த தலத்துக்கு வந்த பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இப்பகுதியில் ஒரு குளம் ஏற்படுத்தி, அதன் அருகில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்றார்.
கோவிலில் ராஜகோபுரம் இல்லை என்றாலும் உள்ளுக்குள் நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தின் மேல் ஈசன் மடியில் பிள்ளையாரும், இறைவியின் மடியில் முருகனும் அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். அடுத்ததாக கொடி மரத்தடியில் மூஞ்சூறு மேல் அமர்ந்து வரப்பிரசாதியான பிள்ளையார் காட்சி தருகிறார். இவருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். தாமரை வடிவம் கொண்ட பலிபீடம் அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு வரும்போது நமக்கு பழைய நினைவுகள் தோன்றின. 2012 ஆகஸ்ட். நமக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு சராசரி மனிதனாக இந்த தலத்திற்கு வந்திருந்தோம். ஆனால் இன்று இதே கோவிலுக்கு வரும்போது ஒரு ஆன்மீக / சுயமுன்னேற்ற தளத்தின் ஆசிரியர் + இந்த கோவிலுக்கு உழவாரப்பணி செய்யவிருக்கும் உழவாரப்பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். ஒரு மனிதனுக்கு இதைவிட ஒரு பெரிய வளர்ச்சி இருக்க முடியுமா என்ன?
எனவே நமது நேற்றைய திரிசூலநாதர் தரிசனம்… நன்றி தெரிவிக்கும் பயணமாக மாறிவிட்டது. எல்லாம் ஈசனின் கருணை. இந்த மூன்று ஆண்டுகள் நமக்கு வேண்டுமானால் பெரிய இடைவெளியாக இருக்கலாம் ஆனால் ஈசனுக்கு ஒரு சில வினாடிகள் தான்.
தரிசனம் முடித்து திரும்ப வரும்போது இதே இடத்தில அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.
உள்ளே நுழைந்ததும் உட்புறத்தின் இடது பக்கத்தில் சூரியனும், வலது பக்கத்தில் சந்திரனும் இருப்பதைக் காணலாம். இவர்களை கடந்து சென்றால் திரிசூலநாதரை கண்டு வழிபடலாம். ஈசன் கிழக்கு முகமாக உள்ளார். ஈசனின் இடதுபுறம் சொர்ணம்பிகை நின்ற கோலத்தில் உள்ளார். தங்கக் கரத்துடன் அவர் அருள்பாலிப்பதைக் காணலாம்.
பணிக்காக சர்வே செய்யவேண்டி கோவிலை சுற்றிப் பார்த்ததில் கடினமான பணிகள் இதுவும் இல்லை. வழக்கமான துப்புரவு பணிகள் தான் இருக்கின்றன. மற்றபடி கோவிலை நிர்வாகத்தினர் நல்ல முறையில் பரமாரித்து வருகின்றனர். பியூஸ் போன பல்பை மாற்றுவது, ஒயரிங் சரிபார்ப்பது என எலக்ட்ரிகல் பணிகள் சில இருக்கின்றன.
கோவிலை ஒவ்வொரு அங்குலமாக ரசித்தபடி இருந்தோம். நந்தி மண்டபம் முழுவதும் சுதைச் சிற்பங்கள் நிறைந்திருக்கிறது. மண்டபத்திற்குள் பிரதோஷ நந்தி ஈசனை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
இக்கோயில் கஜ பிருஷ்ட விமானம் அல்லது தூங்கானை மாடம் என்ற கட்டிட அமைப்பைக் கொண்டதாகும். அதாவது, யானையின் பின்புறம் போன்று கருவறை அமைந்திருக்கும். அம்பாள் சன்னதி விமானத்தின் மீது ஐந்து கலசங்களோடும் சக்தி, பிராம்மி, விஷ்ணு துர்க்கையோடு காட்சியளிக்கிறாள்.
உள்ளுக்குள் காணப்படும் நேர் மண்டபத்தை ஒட்டி ஆஞ்சநேயர், ஐயப்பன், தன் சீடர்களுடன் அமர்ந்த கோலத்தில் ஆதிசங்கரர் ஆகியோர் காட் சியளிக்கின்றனர். அதற்கு அடுத்ததாக அரும்பூ மரத்தடி பிள்ளையார். அரும்பூ மரத்தை சுற்றி வருபவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இது சோழர் கால அமைப்பைக் கொண்டது. இக்கோயிலுக்குள் 1500 வருடத்து பழமையான சுரங்கம் இருப்பதாகக் கூறுகிறார்கள். இது அருகேயுள்ள பஞ்சபாண்டவர் மலை வரையிலும் செல்கிறதாம். இங்குள்ள மலை குகைகளில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
சோமாஸ்கந்தர், ரிஷபதேவர், வாலி, சுக்ரீவன், கண்ணப்ப நாயனார் ஆகியோரின் சிற்பங்கள் கல் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத் தில் ஆறு தூண்கள் உள்ளன. அதில் சரபேஸ்வரர் இறகுகள் இல்லாமல் காணப்படுகிறார். சரபமூர்த்தி என்பது நரசிம்ம மூர்த்தியின் கோபத்தை அடக்க வந்த சிவசொரூபமாகும். இச்சிற்பம், தெற்கு நோக்கி உள்ளது.

நாம் சென்ற நேரம் ராஜா குருக்கள் இல்லை. அவரது மகன் ஒன்பதாவது படிக்கும் கௌரிசங்கரன் என்னும் சிறுவன் தான் இருந்தான். தந்தைக்கு அவ்வப்போது ஆலயத்திற்கு உதவியாக வருவானாம். அக்காவின் திருமண வேளையில் தந்தை பிஸியாக இருப்பதால் தான் வந்திருப்பதாக சொன்னான் பாலகன்.
சுவாமிக்கு அர்ச்சனை செய்தோம். வழக்கம் போல, டைரியை எடுத்து பார்த்து வாசகர்கள் சிலர் பெயர்களுக்கு அர்ச்சனை செய்தோம்.
நல்ல தரிசனம். எந்தவொரு அடையாளமுமின்றி முன்பு வந்த கோவிலுக்கு தற்போது உழவாரப்பணி செய்ய வரவழைத்தமைக்கு திரிசூலநாதருக்கு நன்றி தெரிவித்தோம்.
இதுவொரு பிரார்த்தனை தலமாகும். வேண்டியது நிறை வேறினால், பக்தர்கள் இத்தல இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்து விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். பிரதோஷம், மஹாசிவராத்திரி என்று விசேஷ வழிபாடுகள் தவிர, கார்த்திகை தீபத்தன்று மலையின் நான்கு உச்சியிலும் தீபம் ஏற்றப் படுவது குறிப்பிடத்தக்கது. நான்கு கால பூஜைகளோடு ஆருத்ரா தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று தி ருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றன.
அடுத்து அம்பாள் திரிபுரசுந்தரி தரிசனம். வழக்கமாக சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் நாம், இந்த முறை அம்பாளுக்கே அர்ச்சனை செய்தோம்.
பாலகனிடம் பேசியபோது பல விஷயங்களை சொன்னான்.
வெளிநாட்டவர்கள் இத்தலத்தை சூறையாடிய போது அம்மனின் கை உடைந்து போனது. இதனால் புதிதாக திரிபுரசுந்தரி சிலை செய்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அன்று இரவே அர்ச்சகர் கனவில் தோன்றிய சொர்ணம்பிகை, “என்னை லிங்கம் அருகிலேயே வைத்திருங்கள்” என்று கூறினாளாம். இதைத் தொடர்ந்து சொர்ணம்பிகை கை உடைக்கப்பட்ட இடத்தில் தங்கத்தால் செய்து பொருத்தி, மீண்டும் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அங்கிருந்த திரிபுரசுந்தரி தனி சன்னதிக்கு மாற்றப்பட்டாள். அந்த சன்னதி தெற்கு நோக்கி காட்சித் தருகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்த அம்பிகைக்கு நவராத்திரியில் 18 சுமங்கலிப் பெண்கள் மற்றும் 18 பெண் குழந்தைகளை கொண்டு கன்யா பூஜை நடத்தப்படுகிறது. ஒன்பது நாட்களும் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, புஷ்ப அர்ச்சனை செய்யப்படுகிறது. தை வெள்ளி, ஆடி வெள்ளிக் கிழமைகளில் பூப்பாவாடை அணிவிக்கப்படுகிறது.

மேலும் ஒரு தகவல் கிடைத்தது. அருகே மலை மீது சிறிய முருகன் கோவில் ஒன்று இருப்பதாகவும், மலைக்கு மேலே சென்று பார்த்தால் திரிசூலத்தின் மொத்த அழகையும் தரிசிக்கலாம் என்பதையும் அறிந்தோம்.
சிவநாமத்தை மனதுக்குள் உச்சரித்தாவாறே பிரகாரத்தை வலம் வந்தோம்.
1972 ஆம் ஆண்டு மற்றும் 1984 ஆம் ஆண்டு & 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகங்கள் குறித்த விபரங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பொன்விழா ஆண்டையொட்டி திருக்கோவில் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் 1984 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
அர்த்த மண்டப தேவ கோஷ்டத்தில் முதலில் தெற்கு நோக்கி நாக யக்ஞோபவீத கணபதியாக அதாவது, நாகத்தை பூணூலாக அணிந்து நாக தோஷத்தை தீர்ப்பவராக விநாயகர் அருள்கிறார்.
வீராசன தட்சிணாமூர்த்தி இடது பாதத்தை மடித்தும், வலது பாதத்தின் அடியில் முயலகனை மிதித்தபடியும் அமர்ந்துள்ளார். இது மிகவும் சிறப்பான அம்சமாகும். அருகேயே சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அடிமுடி காண முடியாத லிங்கோத்பவ மூர்த்தி மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மா நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சண்டிகேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் உள்ளார்.
விஷ்ணு துர்க்கை வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். திருச்சுற்று சந்நதிகளாக சீனிவாசப் பெருமாள், காசி விஸ்வநாதர், மார்க் கண்டேயர், நடராஜர்- சிவகாமி, பைரவர், வள்ளி – தெய்வானை சமேத ஆறுமுகன் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். கோயிலின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்ற ழைக்கப்படுகிறது.
கோவில் வெளிப்பிராகரத்தை வலம் வந்தபோது, ஒரு சிறுவனும் அவன் தங்கையும் (வயது 10 & 6 இருக்கும்) அங்கப்பிரதட்சிணம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அம்மாவிடம் விசாரித்தோம். குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும், கைலாசநாதருக்கு வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சிணம் செய்தால் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டதாகவும் எனவே அங்கப்பிரதட்சிணம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்கள்.
அருமையான தகவலை தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தோம்.
பிரகாரத்தை வலம் வந்து நவக்கிரகங்களை தரிசித்துவிட்டு கொடிமரத்திற்கு அருகே வந்து சிறிது நேரம் பிள்ளையார் முன்பு அமர்ந்தோம். சில நிமிடங்கள் தியானம்.
மூன்றாண்டு இடைவெளியில், வாழ்க்கை எவ்வளவு மாறியிருக்கிறது… எவ்வளவு அனுபவங்கள், புது நட்புக்கள், உறவுகள்.. நினைக்கும்போது சற்று மலைப்பாக இருந்தது.
இந்த உழாவாரப்பணியை முடித்த பிறகு அடுத்து வரும்போது எப்படி வரவிரும்புகிறோம் என்கிற நமது விருப்பத்தை பிரார்த்தனையாக வேண்டிக்கொண்டோம். முழுமுதற் கடவுள் அருள்புரியட்டும்.
கௌரி சங்கரனிடம் விடைபெற்றுக்கொண்டு நேரே மலைக்கோவிலுக்கு சென்றோம். மலைக்கோவில் செல்ல படிக்கட்டுக்கள் உண்டு. மலை மீதுள்ள சிறிய சாலை மார்க்கமாக ஆட்டோ, டூ-வீலரிலும் செல்லலாம். ஆனால் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. போதாக்குறைக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்புக்களை சேர்ந்த மக்கள் அந்த பாதையை மிகவும் அசுத்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மலை என்பது எத்தனை புனிதமான ஒரு விஷயம் என்பது அதன் அடியில் குடியிருக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு தெரிவதில்லை.
மலையுச்சியில் வயர்லஸ் ஸ்டேஷன் உள்ளபடியால் மலை முழுக்க காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனுமதி பெற்றே மேலே செல்லவேண்டும். எனவே மலைக்கோவிலுக்கு செல்ல விரும்புகிறவர்கள் படிக்கட்டுக்களில் ஏறி செல்வது சிறப்பு.
மலைக்கு சென்றால், கோவிலோடு நமது பயணத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் உள்ள பகுதி காவல் துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் செல்வது உசிதமல்ல.
மேலே, சுமார் 50 ஆண்டுகள் பழமையான அழகிய பாலமுருகன் கோவிலும் தாட்சாயணி அம்மன் கோவிலும் உள்ளது. அங்கிருந்து பார்த்தால், ஒட்டுமொத்த திரிசூலம் நகரின் அழகும் தெரிகிறது. இந்த பக்கம் பார்த்தால் சென்னை விமானநிலையம் தெரிகிறது.
நாம் சென்றதே மலைமேலிருந்து திரிசூலநாதர் கோவில் எப்படி தெரிகிறது என்பதை பார்க்கத்தான். ஆனால், மரங்கள் மறைத்துவிட்டபடியால் வியூ கிடைக்கவில்லை. உச்சிக்கு சென்றால் ஒருவேளை தெரியக்கூடும். ஆனால் அதற்கு மேல் தனியாக அதுவும் உரிய அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்பதால் முருகனையும் தாட்சாயணி அம்மனையும் தரிசித்துவிட்டு திரும்பிவிட்டோம்.
ஆடிகிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை இந்த கோவிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திரிசூலம் செல்வோர் படியேறி இந்த முருகனையும் தரிசித்துவிட்டு வருவது சிறப்பு. (ஆள் அரவமற்ற பகுதி என்பதால் பெண்கள் உரிய துணையின்றி தனியே செல்லக்கூடாது.)
அடிவாரம் வந்து மீண்டும் ஒருமுறை திரிசூலநாதர் கோவிலுக்கு சென்று, சந்தியாகாலத்தில் கோவிலின் அழகிய தோற்றத்தை படமெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமின்றி கிளம்பினோம்.
முகவரி : அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், சென்னை – 600 043. காஞ்சிபுரம் மாவட்டம்.
செல்லும் வழி : சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விமானநிலையத்தின் பிரதான நுழைவாயில் எதிரே உள்ள சாலையில் சென்றால், ரயில்வே கேட் வரும். கேட்டை தாண்டி, சுமார் 1 கி.மீ. சென்றால் திரிசூலம் ஊருக்கு நடுவே நடுநாயகமாக திரிசூலநாதர் கோவில் அமைந்துள்ளது.
பஸ் ஸ்டாப் : விமான நிலையம் | ரயில் நிலையம் : திரிசூலம். திறந்திருக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
அர்ச்சனைக்குரிய பொருட்கள் தேங்காய், பூ, பழம் முதலியவை கோவில் வாசலிலேயே நியாயமான விலையில் கிடைக்கும்.
=====================================================================
விசேஷ அர்ச்சனை
திரிசூலம் திரிசூலநாதர் திருக்கோவிலில் அருள்பாலித்து வரும் திரிபுரசுந்தரி அம்மன் குடும்ப பிரச்னைகளை தீர்த்து சகல சௌபாக்கியங்களும் தருபவள் என்பதால் நம் தளம் சார்பாக இங்கு உழவாரப்பணி நடைபெறும் நாளன்று (24/05/2015) விசேஷ வழிபாடும் அர்ச்சனையும் நடைபெறவிருக்கிறது.
குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டு அதனால் நிம்மதி இழந்து தவிப்பவர்கள், தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தை நமக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் பெயருக்கு இங்கு அர்ச்சனை செய்யப்படும். விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : editor@rightmantra.com
=====================================================================
உழவாரப்பணி அறிவிப்பு
நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ள திரிசூலநாதர் திருக்கோவிலில் வரும் ஞாயிறன்று (மே 24) நடைபெறும். (காலை 7.30 – 12.30 வரை). பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் நேரடியாக ஆலயத்திற்கு காலை 7.30 க்குள் வந்துவிடவேண்டும். தளம் சார்பாக காலை காபி பிஸ்கட்டும் மதியம் மதிய உணவும் வழங்கப்படும். பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் அவசியம் தகவல் தெரிவிக்கவேண்டும்.
தொடர்புக்கு
முக்கிய குறிப்பு : திரிசூலம் ரயில்வே கேட்டை தாண்டி தான் இந்த கோவிலுக்கு வரமுடியும். இருமார்க்கமும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிக அதிக FREQUENCY யில் கடந்து செல்லும் பகுதி இது என்பதால் மிக மிக கவனமாக கேட்டை கடக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். டூ-வீலரில் வரும் அன்பர்கள் அவசரப்படாமல், கேட் திறந்த பின்பே கேட்டை கடக்கவேண்டும். அவசரம் ஆபத்தில் முடியும். எனவே இது விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையுடன் இருந்து பணி சிறக்க உதவவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இடங்களிலிருந்து டூ-வீலரில் வரும் அன்பர்கள் விமானநிலைய நிறுத்ததிற்கு முன்பாகவே வலப்புறம் திரும்பி, அங்குள்ள சுரங்கப்பாதை வழியாக திரிசூலம் ஊருக்குள் வரலாம். அவர்கள் கேட்டை கடக்கவேண்டிய அவசியமில்லை.
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check :
நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?
மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!
தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!
சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!
=====================================================================
[END]
சுந்தர்ஜி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது கடந்த உழவாரப்பணி சித்துகாடு தாத்திரீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்தேறியது.
உழவாரப்பணிக்கு நமது தள வாசகர்கள் வந்திருந்து கண்டிப்பாக வேதநாயகன் திரிசூலநாதன் அருள் பெறுவோம் .
நான் எனது குடும்பத்துடன் கலந்து கொள்ள வேத நாயகன் அருபுரிய அவன் திருவடி பணிகிறேன் .
நன்றிகளுடன்,
மனோகர் .
சென்னையில் இப்படி ஒரு கோவிலா என்று நினைத்து பார்க்கும் அளவுக்கு ஏகப்பட்ட
தகவல்கள். திரிசூலம் என்று பெயர் காரணமும் அறிந்து கொண்டேன்.
நாம் இங்கு உழவார பணி செய்ய இருப்பது குறித்து, மிகவும் மகிழ்ச்சி. தங்களின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மேலும் ஆர்வத்தை தூண்டுகின்றன.
தங்களின் உழைப்பின் மூலம் மலர்ந்திருக்கும் இந்த பதிவு அனைவரது வாழ்விலும் ஒளி ஏற்றிட, எல்லாம்வல்ல ஈசன் அருள் புரிவாராக..
தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
இந்த பதிவை படிக்கும் பொழுதே கோவிலுக்கு சென்று இறை தரிசனம் செய்த உணர்வு ஏற்படுகிறது. கோவிலைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதியுள்ளீர்கள்.
2003 ம் ஆண்டு சிவராத்திரி அன்று இறைவனை தரிசனம் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது
இந்த கோவிலில் தங்கள் தளம் குழுவினர் உழவாரப் பணி செய்ய வேண்டும் என்பது ஈசனின் விருப்பம். தங்கள் கோரிக்கையையும் இறைவன் கண்டிப்பாக நிறைவேற்றுவார்
அனைத்து படங்களும் அருமை.
குருக்கள் மகனைப் பார்த்தால் கையெடுத்து வணங்க தோன்றுகிறது.
நன்றி
உமா வெங்கட்
மிக தொன்மையான கோயிலின் அரிய தகவல்களை நேரில் பார்ப்பது போல் அற்புதமாக விவரித்து உள்ளீர்கள்.
படங்கள் யாவும் மிக அழகு.
விரைவில் திரிசூலநாதர் தரிசனம் கிடைக்க, ஈசன் அருள் புரிய வேண்டும்.
நன்றி
வணக்கம் சுந்தர்.இவ்வளவு பழமையான கோவிலை அருகில் வைத்து கொண்டு பார்க்காமல் இருக்கிறோம்.கையில் உள்ள பொருளின் மதிப்பு தெரியாது என்பது இதுதான். உண்மையிலே நேரில் பார்ப்பது போல் இருந்தது கோவிலை.நன்றி .வழக்கம் போல் தகவல்களை அழகாக தொகுத்து உள்ளீர்கள்.படங்களும் அருமை. மீண்டும் நன்றி.