சில வருடங்களுக்கு முன்பு ஒரு கடுமையான சோதனையில் நாம் ஆட்பட்டிருந்த நேரம், இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, யூ-டியூப்பில் ‘துணைவன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை காண நேர்ந்தது. அடுத்தடுத்த சோதனைகளால் வெறுத்துப் போய் கடவுள் மீது நம்பிக்கையே போய்விட்ட ஒருவன், வாரியாரின் சொற்பொழிவு நடக்கும் இடத்தில் குறுக்கிடுகிறான். அவனை வாரியார் தேற்றி, ஒரு விளக்கம் கொடுக்கிறார் பாருங்கள்…. கிளாஸ்…. மாஸ்!! அவசியம் அனைவரும் காணவேண்டிய காணொளி அது. (இணைக்கப்பட்டுள்ளது!)
அந்த ஒரு காட்சி, அந்த படத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்த அதற்கு பிறகு ‘லக்ஷ்மன் சுருதி’ சென்று அந்த படத்தின் ஒரிஜினல் சி.டி.யை வாங்கி வந்து பார்த்தோம்.
தேவரின் ‘துணைவன்’ படத்தில் வாரியார் ஸ்வாமிகள் தோன்றும் காட்சி!
திருமுருக. கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் வாரியாராகவே தோன்றியிருப்பார். “பரவாயில்லையே… வாரியார் ஸ்வாமிகள் சினிமாவுல கூட நடிச்சிருக்காரே… அதுவும் 1968 லேயே…” என்று வியப்பு மேலிட்டது. ஆனால், அதற்கு பின்னணியில் உள்ள விஷயங்களை அண்மையில் தேவரின் வாழ்க்கை வரலாற்றில் படித்தபோது, கண்கலங்கிவிட்டோம்.
சில நிமிடங்கள் நாம் ரசிக்கும் ஒரு காட்சிக்காக தேவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது, மனம் வலித்தது. நமது இறை நம்பிக்கை குறித்தும் நமக்கு ஐயம் எழுந்தது.
தேவர் ஒப்பற்ற முருக பக்தர் தான். ஆனால், அதற்காக இவருக்கு எல்லாமே சுலபமாக நடந்ததா என்றால் அது தான் இல்லை. கடும் சோதனைகளை இவர் சந்தித்திருக்கிறார். ஆனால் எந்த நிலையிலும் இவர் முருகன் மீது கொண்ட பக்தி மட்டும் மாறவேயில்லை. எனவே தான் முருகன் இவருக்கு பக்கத்துணையாக இருந்து சோதனைகள் அனைத்தையும் சாதனையாக்க உதவியிருக்கிறான்.
இதோ பா.தீனதயாளன் எழுதியிருக்கும் ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற தேவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து மற்றுமொரு சோதனை சாதனையான கதை!
“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்“
எம்.ஜி.ஆரை வைத்து தேவர் எடுத்த படம் ‘காதல் வாகனம்’ எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்த நேரம் அது. தேவரின் கோபமெல்லாம் வடபழனி முருகன் மீது திரும்பியது. அவரிடம் நன்கு வசை வாங்கிக்கொண்டிருந்தான் வடபழனி முருகன். சன்னதியில் நின்று கொண்டு கந்தசாமிக்கே சவால் விட்டார் சின்னப்பா தேவர். (என்ன ஏற்கனவே படிச்சது போல இருக்கிறதா? அட… கொஞ்சம் பொறுமையாத்தான் படிங்களேன் ரீடர்ஸ்!)
“இத பார் முருகா. காதல் வாகனம் தேவர் பிலிம்ஸ்க்கே கரும்புள்ளி ஆயிடுச்சு. எம்.ஜி.ஆர். கால்ஷீட் இனி உடனே கிடைக்காது. இதுவரையில் ஏறக்குறைய முப்பது படம் எடுத்துட்டேன். எல்லாம் உன் தயவாலே நடந்தது. எம்.ஜி.ஆர். ஆதரவுல ஜெயிச்சது. இப்ப நான் சொல்றது முக்கியமான விஷயம். அடுத்து நான் எடுக்குற படத்துக்கு உம்மேல வெச்சிருக்குற பக்தி, உனக்கும் எனக்கும் உள்ள நேரடி உறவு இது ரெண்டும் தான் மூலதனம். என்னை கைதூக்கி விடுறதும் குப்புற தள்ளுறதும் உன் இஷ்டம். எனக்கு துணையா நீ இருந்தா இந்த கோவில் மட்டுமில்லே தமிழ்நாட்டில் ஏன் வெளிநாட்டில் உள்ள முருகன் கோவில்கள் அத்தனையும் வளரும். வளம் கொழிக்கும். இது என் முதல் பக்தி படம். இதுல ஜெயிச்சுட்டா தொடர்ந்து நிறைய சாமி படம், உன் புகழை சொல்ற மாதிரி எடுப்பேன். இல்லே வழக்கம் போல நாயைப் போட்டோ, பாம்பை போட்டோ படம் எடுப்பேன். என்ன சொல்றே? எனக்கு துணை நிக்கிறியா?”
அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காட்டினார். தேவரின் கண்களில் கண்ணீர் தளும்பியது. பூசாரிகளுக்கு தேவரின் நடவடிக்கைகள் அத்துபடி. ஆரத்தித் தட்டை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.
தேவரின் மனசுக்குள் ஒரு வார்த்தை விழுந்துவிட்டது.
“துணைவன்!”
தன் அடுத்த படத்திற்கு அதையே தலைப்பாக்கினார். உற்சாகமாக தேவர் பிலிம்ஸ் அலுவலகம் திரும்பினார்.
ஏ.பி.நாகராஜன் அப்போது புராண படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். தேவருக்கு அத்தகைய கடவுளர் கதைகளில் ஆர்வம் கிடையாது. காரணம், அவர் தன் வாழ்வில் முருகனோடு பெற்றிருந்த நிஜ அனுபவங்கள் ஏராளம். அதுவே படம் எடுக்கப் போதும். ஆனால், ஒரு தயக்கம். தன் சொந்த அனுபவங்களை படமெடுத்தால் அது எடுபடுமா என்று.
புதிய தயாரிப்புக்கு பக்தி கதை தேவை. அதை யாரை வைத்து எழுதி வாங்கலாம் என்று யோசித்தார். ‘டேய் பாலு, இவனே மகேந்திரா, ஏம்பா மாரா, கம்முனு இருந்தா எப்படி? என் டேஸ்ட் உங்களுக்கு தெரியும். படத்துல மிருகமும் வரணும். முருகனும் இருக்கணும். முருக வேஷத்துல ஒரு சின்னக் குழந்தை நடிச்சா நல்லா இருக்கும்.’
திருமுகம் இடை மறித்தார். ‘பாலமுருகன் மாதிரியா?’
“நல்லா ஞாபகப்படுத்தினே திருமுவம். அட இவனே! பாலமுருகன் நமக்கு கதை எழுதுவாரில்லே. சிவாஜிக்கு எழுதி ‘எங்க ஊர் ராஜா’ சக்கை போடு போட்டுதே. போ. நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க.”
கதை இலாகா குஷியானது. கார் பறந்தது, கதாசிரியர் பாலமுருகன் வீட்டுக்கு.
“உம் பேரே பாலமுருகன்னு இருக்குறதாலே எனக்கு திருப்தி. இது பக்திப் படம். என் ஆசை, லட்சியம், ஏன் வெறின்னு கூட வெச்சுக்க. ரொம்ப நாளா நான் கும்புடுற முருகனையே மக்கள் இனி கடவுளா ஏத்துக்கனும்னு. கொண்டாடனும்னு. அப்பிடியொரு கதை இருக்கா?”
பாலமுருகனுக்கு பூரிப்பாக இருந்தது. அவரைப் பொருத்தவரை கந்தவேளாக பார்த்து வழங்கிய வரம் அது. பல கஷ்டங்களுக்கு பிறகு சிவாஜிக்கு தொடர்ந்து எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார். தேவர் பிலிம்ஸ் என்பது சினிமா எழுத்தாளர்களின் சொர்க்க பூமி. அங்கு வசனம் எழுத சந்தர்ப்பம் வராதா என உள்ளுக்குள் ஏங்கியவர்.
“அண்ணே! நீங்க நினைக்கிறதை என் எழுத்தில தருவேன். கொஞ்சம் டயம் கொடுங்க.”
“என்னப்பா எங் கம்பெனி பத்தி தெரியாதா? ஒரு வாரத்துல மொத்த கதை வசனுமும் எழுதி வாங்கிடுவேன். ஷண்முகம் நீ எடுத்துச் சொல்லுப்பா….”
“அதுக்கில்லேண்ணே. நானும் முருக பக்தன். அறுபடை வீட்டுக்கும் போய் தரிசனம் செய்யறேன். கதையோட் வரேன். தேவர் கதை கேக்குறார்னா சும்மாவா! உங்கள்ட்ட அதை இதை சொல்லி திருப்தி படுத்த முடியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேண்ணே.”
தேவர் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார். ‘துணைவன்’ படத்துக்கு நல்ல கதாசிரியர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை வந்தது.
“கதைக்காரங்களா இனி ஸ்க்ரிப்ட்டை பத்தின கவலை விட்டது. கண்ணதாசன் எங்கே இருந்தாலும் வரச்சொல்லுங்க. மீட்டிங், கீட்டிங்னு எதுன்னாலும் தள்ளி வெக்கச் சொல்லுங்க. உடனே பாட்டு எழுதணும்”
“அண்ணே! நாகர்கோவில் எலக்ஷன்ல காமராஜர் ஜெயிச்சிட்டாருல்ல… கவிஞர் அவரை பார்க்க போயிருக்காராம்.” தொலைபேசியில் விசாரித்தறிந்து தகவலை சொன்னார் உதவி டைரக்டர் பி.எஸ்.மாரிமுத்து.
“முருகா! கண்ணதாசனை கவிஞனா மட்டும் வெச்சிருக்கக் கூடாதா ? புலவனுக்கு ஏன்யா அரசியல் ஆர்வத்தை கொடுத்தே? எம் பொழைப்பை கெடுக்கவா??” – தேவர் வழக்கம்போல முறையிடத் துவங்கினார்.
அவருக்கு அதிக நெருக்கடி தரவில்லை கண்ணதாசன். சீக்கிரமாகவே வந்துவிட்டார். கூடவே ஒரு நல்ல செய்தியும் சொன்னார். “அண்ணே! காமராஜர் வீட்ல ஒரு புள்ளையை பார்த்தேன். தெய்வம்னே சொல்லலாம். உங்க படத்துல முருகன் வேஷம் கொடுத்தா ஓஹோன்னு இருக்கும்!”
“விஸ்வநாதா, ஏன் நிக்கிறே. கவிஞர் சொன்னது காதுல விழலை. அட்ரசை கேட்டுட்டு கிளம்பு. போய் குழந்தையோட வா”
தேவர் பிலிம்சிலிருந்து ஆள் வந்ததும் பேபி ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி. தேவர், ஸ்ரீதேவியின் களையான முகத்தை பார்த்தார். “என் படத்துல நீ தான் பாலமுருகன்!” என்றார்.
பாலமுருகன் கூறிய கதை தேவரை கவர்ந்துவிட்டது. முருகனே கதி என வாழும் கணவன். பகுத்தறிவு பேசும் மனைவி. அவர்களுக்கு ஊனத்தொடு பிறக்கும் குழந்தை. அதன் அசைவுக்காக யாத்திரை போகும் தம்பதியினர். முடிவில் முருகனே வந்து குழந்தையை குணப்படுத்துகிறான்.
வலுவான சம்பவங்கள் அதிகம் கிடையாது. ஆனால் தோதான நடிகர்களை போட்டால் படம் நிமிர்ந்துவிடும். ‘முருகன் நினைத்தால் எதுவும் முடியும்’ என நிரூபித்தால் போதும். தேவர் சிந்தித்தார். ‘அடேயப்பா! எத்தனை முருகன் கோவில்கள் என ரசிகர்கள் வாயை பிளக்க வேண்டும். அதை கலரில் காட்டி கிளைமேக்ஸை திருச்செந்தூரில் வைத்துக்கொள்ளலாம்.’
ஓடுகிற குதிரைகளின் மீது பணம் கட்டுவதே சினிமா சந்தையில் வெற்றிக்கு வழி. தேவர் அவ்வாரே திட்டமிடுபவர். 1968 இல் மார்கெட்டில் இருந்தவர்களில் ஏ.வி.எம்.ராஜன் குணச்சித்திர ஹீரோவாக கருதப்பட்டார். நடிப்பில் சிவாஜிக்கு அடுத்து அவரே வருவார் என்று பத்திரிக்கைகள் எழுதிய காலம். தேவர், ராஜனை ஒப்பந்தம் செய்தார்.
கதாநாயகி?
கே.பாலச்சந்தரின் படங்கள் சௌகார் ஜானகிக்கு பொற்காலத்தை ஏற்படுத்தியிருந்தன. சௌகார் ஜானகி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் அமோக வெற்றி பெறுவதற்கு ஆன்மீகத்தில் புகழ்பெற்றவர்கள் தேவருக்கு தேவைப்பட்டார்கள்.
கே.பி.சுந்தராம்பாளை கேட்டார். “முருகனை என் வாயாரப் பாட நிறைய சந்தர்ப்பம் தரணும். அப்படின்னா ஒத்துக்குறேன் தேவரே.” கே.பி.எஸ்.ஸின் பதிலில் தேவர் துள்ளிக் குதித்தார். “அம்மா முருகன் புகழை உங்கள் வாயால கேக்கறதுக்கு மக்கள் விடிய விடிய காத்திருக்காங்க. உங்க விருப்பம் போல எத்தனை பாட்டு வேணும்னாலும் பாடுங்க” என்றார்.
“ஒவ்வொரு தொகையறாவுக்கும் தனித் தனி தொகை தந்தா சரி.”
பகவானைப் பற்றி பாடுவதையே வாழ்வாகக் கொண்ட கே.பி.எஸ்.ஸை ஆச்சரியமாக பார்த்தார் தேவர். அவர் எண்ணியபடியே ‘துணைவன்’ வளர்ந்தது. ஏதோ ஒரு குறை தேவரின் மனதில் தோன்றியது. அன்று வழக்கம் போல காலை எட்டுமணிக்கெல்லாம் ஆபீஸில் இருந்தார். தினத்தந்தியை பிரித்தார். அதில், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில் வாரியாரின் கந்த புராணம் தொடர் சொற்பொழிவு விளம்பரம்.
வாரியார் சினிமாவில் நடிப்பாரா? துணைவனில் அவரும் இருந்தால் கூடுதல் பலம் என்று நினைத்தார். தன் அறையில் மாட்டப்பட்டிருந்த மிகப் பெரிய மருதாசல மூர்த்தியின் படத்தையே பார்த்தபடி இருந்தார். ஒருவேளை இந்த எண்ணம் பேராசையா? முருகன் கண்ணசைத்தால் முடியாதது எதுவுமில்லை. ‘மனசு வைப்பியாடா முருகா! துணைவனைப் பொறுத்தவரையில் இதுவரை எல்லாமே சிறப்பா ஒண்ணு சேர்ந்திருக்கு. வாரியாரும் வந்துட்டா…’ போன் அடித்தது.
மறுமுனையில் வாரியார். கிரும்பானந்த வாரியாரா! தேவரால் நம்பவே முடியவில்லை. ‘முருகா! நீ என்னை உச்சாணிக் கொம்புல எத்தி வெச்சிட்டுத் தான் மறுவேலை பார்ப்பே போலிருக்கு… என்ன சக்திடா உனக்கு!”
வாரியார் தேவரை பார்க்க வந்தார். வேறு விஷயமாக. வயலூர் முருகன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை கேட்டு உட்கார்ந்திருந்தார். ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவே தேவர் வாரியாரை அனுப்ப மனசில்லாமல் பேசினார். கடைசீயாக இதயத்துக்குள் நமைச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்த கேள்வியை கேட்டே விட்டார்.
“சினிமால நடிக்கிறீங்களா சாமி? ‘துணைவன்’னு ஒரு படம். முருகனோட பெருமையை சொல்றேன். ஊர்ல ஒரு கோவில் பாக்கியில்லாம அத்தனையையும் காட்டப்போறேன். உங்க வயலூர் உட்பட. நீங்களும் எம் படத்துல இருந்தா மக்கள் அதிகம் வருவாங்க.”
நெற்றித் திருநீறு பட்டையில் தேள் ஊறுவது போலிருந்தது வாரியாருக்கு. அறை அமைதியானது. தேவர் மகா கெட்டிக்காரர். ஒரு பக்கம் வள்ளல். மறுபக்கம் தேர்ந்த வியாபாரி. வாரியாருக்கு எழுந்துகொள்ள தோன்றியது.
‘அருணகிரிநாதர்’ படத்தில் வாரியார் நடிப்பதாக 1963 லேயே செய்திகள் வந்தன. தியாகராய நகரில் நடந்த ஆன்மீக கூட்டமொன்றில் வாரியார் அதற்கு பதில் சொன்னார். “ஆபாசம் மிகுந்த சினிமா உலகில் அடியெடுத்து வைப்பேனா?”
வாரியார் தேவரிடம் எதுவும் சொல்லவில்லை. தேவர் சற்று விட்டுப்பிடிக்க எண்ணினார். வாரியார் புவனகிரிக்கு போய்விட்டார். அங்கு சொற்பொழிவு இருந்தது. டிரங்கால் போட்டு பேசினார் தேவர்.
“சாமீ… நீங்க எப்பவும் கதாகாலட்சேபம் செய்றீங்க இல்ல…அதை போட்டோ புடிச்சி பத்திரிகையில வருது. நான் சினிமா கேமராவுல படம் எடுக்கப்போறேன். அவ்வளவு தான். நீங்க நீங்களா நின்னு பேசப்போறீங்க. படத்துல உங்க ஆசார சீலம் குறையுற மாதிரி எதுவும் கிடையாது. வாகிணில செட் தயாராவுது. ரெண்டு நாள் நீங்க என்கூட இருந்தா போதும்.”
வாரியார் அசைந்து கொடுக்கவில்லை. புவனகிரிக்கே படையெடுத்தார் தேவர். பட்டென்று போட்டு உடைத்துவிட்டார். “நான் கேட்டு நடிக்கமாட்டேன்னு சொன்னது நீங்க ஒருத்தர் தான். காட்சிப்படி, திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட ஒரு ஹீரோ, உங்க உபன்யாசத்தாலே மனம் திருந்திடுறான். முருகான்னு கதறுறான். உங்க பெருமை இதுனால அதிகமாவும் புரிஞ்சிக்கோங்க.”
வாரியார் அரை மனத்தோடு ஒப்புக்கொண்டார். வாகினி ஸ்டூடியோவில் அன்று திருவிழாக் கூட்டம். ஆயிரக்கணக்கில் துணை நடிகர்கள். வாரியாரை பார்க்க சினிமா புள்ளிகளும் ஆர்வமாக திரண்டு நின்றனர். கேமிரா ஓட ஆரம்பித்தது. வாரியார் வழக்கம் போல வாயை திறந்தார்.
‘மருவும் அடியார்கள்மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமான்
குழந்தை வேலன்
கருத மலையானே கார்
அமர் பெற்ற மருதமலை
வேலவனை வாழ்த்து’
என்ற வரிகளை வாரியார் பாடினார். அதற்கு விளக்கம் கூறவும் முற்பட்டார். அப்போது அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தார் தேவர். வாரியாரின் பாதங்களை பற்றியபடி கதறி அழுதார்.
திருமுகம் ‘கட் கட்’ என்றார்.
தேவர் அப்படி உணர்ச்சி வசப்படுவார் என்று வாரியார் கனவில் கூட நினைக்கவில்லை. பின்னர் அன்றைய ஷூட்டிங் தொடர்ந்தது.
மறுநாள் வாரியாரை காணவில்லை.
தேவர் அலறியடித்தபடி வாரியார் வீட்டுக்கு ஓடினார். “என்ன சாமி, புறப்படலியா? என் படம்னா என்ன காரணத்தைக் கொண்டும் ஷூட்டிங் கான்சல் ஆகாது. எம்.ஜி.ஆர். உட்பட எல்லாரும் ஏழு மணிக்கே ரெடியா இருப்பாங்க!”
வாரியார் பதில் பேசாமல் காகிதம் ஒன்றை எடுத்து நீட்டினார்.
கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து வந்திருந்த கடிதம் அது. “இதுவரை உங்களால் தேவருக்கு எத்தனை பணம் நஷ்டமாகியிருக்கிறதோ அத்தனை பணத்தையும் நானே தருகிறேன். தயவு செய்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவும்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
தேவருக்கு இரத்த அழுத்தம் எகிறியது. பிறந்த அன்னை பூமியிலேயே எதிர்ப்பா? எம்.ஜி.ஆர். இல்லாமல், தேவர் பிலிம்ஸ் தயாரிக்காமல், தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூலமாகவும் தேவரால் தொடர்ந்து நூறு நாட்கள் படம் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தாகவேண்டும். ‘அக்கா தங்கை’ என்று ஏற்கனவே தேவர் எடுத்த படம் அதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டிருந்தது. ஜெய்சங்கர் நடித்தாலும் படம் நூறு நாள் ஓடும் என்று காட்டியாகிவிட்டது. ‘துணைவன்’ எம்.ஜி.ஆர். படங்களுக்கு நிகரான வசூலை பெறும் என்று நம்பினார்.
‘முருகா! முட்டாளே வாரியாரால் என் ஆசையில் மண் விழப்போகிறதா? மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன். ஒழுங்கு மரியாதையா வாரியார் மனசுல பூந்து, அவரை வாகினிக்கு அனுப்பி வை. இல்லேன்னா நீ என்கிட்டே இருந்து தாராந்து பூடுவே!”
மறுபடியும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி, வாரியாரை அழைத்தார். நீண்ட யோசனைக்கு பிறகு தேவருடன் கிளம்பினார் வாரியார்.
‘பக்தி படத்தில் ஒரு திருப்பம்’ என்று குமுதம் இதழில் பாராட்டி இரண்டு பக்கம் விமர்சனம் வெளிவந்தது. ‘துணைவன்’ வசூலில் தூள் கிளப்பியது. நூறு நாட்கள் ஓடியது. சிக்கனத்துக்கு ஒரு சின்னப்பா தேவர் என்பார்கள். ஆனால், துணைவனுக்கு நூறு நாட்கள் விழா கொண்டாடி ஷீல்டும் கொடுத்தார் தேவர்.
அதற்கு பிறகு நடந்தவை தேவரது இயல்பை சிகரத்தில் வைத்தது. ஒரு படம் ஓஹோ என்று ஓடினால் அதை ரீமேக் செய்ய எப்போதும் தயாரிப்பாளர்கள் அவசரம் காட்டுவார்கள். குறைந்த பட்சம் டப்பிங்காவது செய்ய விரும்புவார்கள். ‘துணைவன்’ படத்துக்கு தேவர் இரண்டையும் செய்யவில்லை. இத்தனைக்கு அப்போது அவர் ஹிந்தி படவுலகில் புகுந்த நேரம். அங்கு ஹீரோவை கிருஷ்ண பக்தராக மாற்றச் சொன்னார்கள். தேவர் மறுத்துவிட்டார்.
“நாங் கும்புடுற முருகனுக்கு நானே ஒரு சோதனை வெச்சேன். அதில் அவன் ஜெயிச்சிட்டான். என்னையும் மனம் குளிர வெச்சான். பணம் காசை எப்படியும் சம்பாதிக்கலாம். கடவுளோட அருள் கிடைக்கிறது கஷ்டம். முருகன் தமிழ் கடவுள். பணத்துக்காக முருகனை தூக்கிட்டு அங்கே கிருஷ்ணனைப் போட்டு ‘ஸ்ரீ கிருஷ்ண லீலை’ எடுக்க மாட்டேன். எனக்கு ஒரே கடவுள் மருதமலை முருகன். அவன் பெருமையை சொல்ற படத்தை தான் நான் எடுக்க முடியும்!”
இத்தோடு முடிந்ததா முருகன் – தேவர் பிணைப்பு ? இன்னும் இருக்கிறது….! அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்!
* இந்த நூல் வேண்டுவோர் நம்மை தொடர்புகொண்டால் வாங்கி அனுப்புகிறோம்.
(* மேலே பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை அவசியம் பாருங்கள். ஐந்து நிமிடங்கள் தான். உங்கள் வாழ்க்கைக்கே திருப்பு முனையாக அது இருக்கக்கூடும்!)
=====================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check earlier episodes of this series…
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
=====================================================================
Also check :
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
=============================================================
[END]
அருமையோ … அருமை.. தேவர் அவர்கள் நம்மிடம் பேசுவது போல் உள்ளது.
//நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.//
தேவரின் வாழ்கையில் முருகன் நடத்திய திருவிளையாடல் மெய் சிலிர்க்க்றது. தேவர் முருகன் மீது கொண்டு இருக்கும் அளவற்ற பக்திக்கு இந்த பதிவே சான்று.
தேவரைப் பற்றி மிக அழகாக நம் தளத்தில் பதிவு செய்து இருப்பது எல்லோருக்கும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஏற்ற ஒரு dictionary
முருகன் அருகில் இரண்டு முருக பக்தர்களும் நிற்கும் காட்சி கண்கொள்ளக் காட்சி. துணைவன் காணொளியை வீட்டிற்கு சென்று பார்க்கிறேன்
நன்றி
உமா வெங்கட்
அன்பின் சுந்தர் அண்ணா..
தொடரட்டும் சின்னப்ப தேவர் வாழ்க்கை வரலாறு..படிக்க படிக்க சுவாரசியம். தங்களின் தயவால் புத்தகத்தை முழுவதுமாய் படித்து முடித்து விட்டேன். ஆனால் தங்களின் நடையில் படிக்கும்போது இன்னும் சுவாரசியம் கூடுவதுடன், அதனோடு தொடர்புடைய வண்ணபடங்கள் என்ன தள பதிவின் அனுபவம் இன்னும் எங்கெங்கோ அழைத்து செல்லும்.
காண கிடைக்காத வண்ணப்படம் – முருகனின் சன்னதியில் வாரியரும், தேவரும். அழகோ அழகு.
அடுத்த பதிவை எதிர்நோக்கி.
மிக்க நன்றி அண்ணா..
துணைவன் படத்தின் தொகுப்பு, சோதனைகளால் துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு நிச்சயம் தெளிவைத்தரும். சின்னப்ப தேவரின் வாழ்க்கை அனுபவம் நமக்கு நல்வழிகாட்டியாக உள்ளது. மிக்க நன்றி!.
சரணாகதி அடைதல் என்பது பற்றற்று போவது மட்டும் அல்ல.
முருகன் மீது மிகுந்த பற்று வைப்பதும் சரணாகதிதான், என்று தேவர் கதை உணர்த்துகிறது.
வாரியார் சுவாமிகளை என் துவக்க பள்ளி நாட்களில் ஒரு சொற்பொழிவின் பொது காணப்பெற்றேன்.
அந்த நாட்களின் நியாபகங்களை தூண்டிவிட்டுள்ளது இந்த கட்டுரை.
நண்றி!
வாரியாரின் சினிமா பிரவேசத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
**
ஆக, வாரியார் சினிமாவில் நடிக்க ஓத்து கொண்டது எங்கள் ஊரில், புவனகிரியில் தான் என்று சொல்லுங்கள்.
**
அருமையான விளக்கம். கடவுள் யாருக்கு அனுக்கிரகம் செய்ய நினைகின்றாரோ அவரையே சோதிப்பார்.(புரிகிறதா???) கூடவே ஒரு சில எடுத்துக்காட்டும்.
பிரமாதம்.
**
தன் பக்தியில் இருந்து மாறாமல், கிருஷ்ணா லீலா எடுக்காமல் இருந்தாரே.
இப்பதிவு, தேவரை பற்றி ஒன்றும் தெரியாது இருந்த எனக்கு, பிள்ளையார் சுழியாய், மிகுந்த மதிப்பினை ஏற்படுத்தி விட்டது.
**
**சிட்டி**.
காலை வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
திருப்பு முனை உள்ள படம் தா சார்
நன்றி
வணக்கம் சுந்தர். சிலிர்க்க வைக்கும் பக்தி ஆனால் எல்லோருக்கும் அந்த பக்தி வருவது கடினம்தான். தன்நலம் அற்ற பக்தி,உரிமையான பக்தி,விட்டால் அடித்துவிடுவார் போல் இருக்கிறது. முருகன் அருகில் ஆனந்தமாக இருபார் என நம்புவோம்.நன்றி.
அருமயான தகவல் நன்றி சுந்தர்.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
துணைவன் இந்த படம் வளர்ந்த விதம், தொகுத்து வழங்கிய சுந்தர்ஜி அவர்களின் கைவண்ணம். மீண்டும் அனைவரது இல்லங்களிலும் முருகன் அருள் கிடைக்க வழி செய்த தங்களின் நமது இணைய தள வாசகர்கள் பாக்கியசாலிகள் ……..
வாழ்த்துகளுடன் .
மனோகர்