Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > வருமுன் காப்போம்!

வருமுன் காப்போம்!

print
காலடி புறப்படுவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் நமக்கு முகத்தில் திடீரென்று மூன்று பெரிய கட்டிகள் அடுத்தடுத்து வந்துவிட்டன. ஆரம்பத்தில் ஒரு சிறிய பரு போல வந்த கட்டி அப்படியே கொஞ்ச கொஞ்சமாக பெரிசாகி, இரண்டே நாட்களில் முகமே விகாரமாகிவிட்டது. இந்தளவு பெரிய கட்டிகளை முகத்தில் வைத்துக்கொண்டு எப்படி காலடி செல்வது என்று வருந்தினோம்.

அடுத்தடுத்து வெளியூர் பயணங்களால் (அப்போது தான் வள்ளிமலைக்கு சென்று திரும்பியிருந்தோம்) உடல் சூடாகிவிட்டது போல… அதனால் கட்டி வந்துவிட்டது என்று கருதினோம்.

அம்மா, கட்டியில் மஞ்சள் அரைத்து தந்து பூச சொன்னார். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தோம். அது சம்பந்தமாக இணையத்தில் எதேதோ தேடிக்கொண்டிருந்தோம்.

கட்டிகளுடன் முகத்தை பார்ப்போர் எல்லாம் துக்கம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். நமக்கு என்னவோ போலாகிவிட்டது. ஒரு வேளை திருஷ்டியாக (?!) இருக்குமோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது.

இதற்கிடையே தற்செயலாக தினமலர் நாளிதழில் வெளியான இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் மருத்துவர்கள் கோடையில் பொதுவாக வரக்கூடிய கொப்புளங்கள், கட்டிகள், அம்மை உள்ளிட்ட நோய்களை பற்றி குறிப்பிட்டு அதற்கு எடுத்துக்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

அதில் ஒரு மருத்துவர், முகத்தில் கட்டிகள் பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது என்றும் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில நாட்களில் குணமாகிவிடும் என்றும் கூறியிருந்தார். மேலும் படித்தவர்கள் கூட, இவ்வகை நோய்களுக்கு டாக்டரிடம் வருவதில்லை; தற்போது, இந்நோய்களுக்கு மருந்துகள் வந்துள்ளன. நோய் பாதிப்பு ஏற்படும்போது, சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள், தழும்பு ஏற்பட்டதும், டாக்டரிடம் வருகின்றனர். நோயை ஆரம்பத்தில் குணப்படுத்தினால், தழும்பே ஏற்படாது என்றும் கூறியிருந்தார்.

நமது நல்ல நேரம் அந்த கட்டுரை நமது கண்ணில் பட்டது. அதை படித்த பிறகு தான் நமது அலட்சியம் நமக்கு உறைத்தது. உடனே கே.கே.நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் உள்ள ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டை சென்று பார்த்தோம். அவர் இது பாக்டீரியா தொற்று தான் என்றும் மூன்று நாட்கள் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் போதும் என்று கூறி, ஒரு கிரீமையும் எழுதித் தந்தார். அவர் சொன்னது போலவே சுமார் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு இருந்த கட்டிகள் மூன்றே நாளில் குறைந்து, அடுத்த சில நாட்களில் காணாமல் போயே போய்விட்டன. காலடி பயணமும் இனிமையாக நடந்து முடிந்தது.

சரியான நேரத்தில் அந்த கட்டுரையை நம் கண்ணில் பட்டதால் உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடிந்தது. இல்லையெனில் வீட்டு வைத்தியம் அது இதென்று பிரச்சனை மேலும் பெரிதாக ஆகியிருக்கும்.

தற்போது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்டது. அடுத்த மூன்று வாரங்களுக்கு வெயில் வறுத்தெடுக்கும்.

உடல் நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள் அவசியம் இந்த கட்டுரையை படிக்கவேண்டும். நிச்சயம் உபயோகமாக இருக்கும். ஐந்து நிமிடம் கூட ஆகாது. உங்கள் உடல்நலத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த ஒரு ஐந்து நிமிடம் கூட செலவழிக்க மாட்டீர்களா என்ன?

Summer care

கோடையை சமாளிக்க டாக்டர்கள் தரும் டிப்ஸ்

வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. பருவ மழை பெய்யாத காரணத்தால், மாலை, இரவு நேரங்களில் கூட குளிர் காற்று வீசுவதில்லை. கோடையின் துவக்கமே, கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உடல் முழுவதும் சூடு பறக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய் தாக்கக்கூடிய அபாயம் உண்டு. கோடையில் வரும் சின்னம்மை, பெரியம்மையோடு, வேர்க்குரு, சூட்டு கொப்புளம் என தோல் சம்மந்தமான பல நோய்களும் தாக்கி வருகின்றன. வெயிலின் கொடுமை காரணமாக “ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டு, உயிரிழப்பையும் ஏற்படுத்தும். வெயில் தாக்கத்தால் சோர்வு, உறக்கமின்மை என பல பிரச்னைகளை திருப்பூர் மக்கள் எதிர்கொள்கின்றனர். இயற்கையை மாற்ற முடியாது; அதன் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வழிமுறைகள் உள்ளன. அதனால், கோடையை சமாளிப்பது எப்படி என்ற கேள்வியோடு, குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மகப்பேறு, தோல், சிறுநீரகம் என பல துறைகளில் சிறந்து விளங்கும் டாக்டர்களை சந்தித்தோம்.

அவர்கள் அளித்த பொன்னான ஆலோசனை

டாக்டர் சுபா (மகளிர் மகப்பேறு சிறப்பு நிபுணர்): கோடை விடுமுறைக்கு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது, கண்டிப்பாக, தங்களது மருத்துவ சிகிச்சைகள் குறித்த “பைல்’களை எடுத்துச் செல்ல வேண்டும். சிகிச்சைக்கு வருவோர், பெரும்பாலும் பழைய மருத்துவ சிகிச்சை குறித்து, எதுவும் கொண்டு வராத நேரத்தில், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்திருப்பதை போல், மருத்துவ குறிப்புகளையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வெயில் காலங்களில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பெண்களுக்கு, சிறுநீர் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. தண்ணீர் எந்த அளவுக்கு அதிகம் குடிக்கிறமோ, அந்த அளவுக்கு, இப்பாதிப்பை தவிர்க்கலாம். பெண்கள், பெரும்பாலும், சிறுநீர் கழிக்காமல் பல மணி நேரம் அடக்கி வைக்கின்றனர். பஸ்சில் பயணம் செய்யும்போதும் தவிர்க்கின்றனர். இது, பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். கர்ப்பிணிகள், குறைந்தது, நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல், தினமும் இரண்டு இளநீர், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். வியர்குரு பிரச்னை அதிகம் ஏற்படும்; உடல் சூடு அதிகரிக்கும்; வயிற்று பகுதிகளில், அரிப்பு, வெயில் கொப்புளம் உள்ளிட்ட பிரச்னைகள் வியர்வை காரணமாகவே ஏற்படும். தினமும் இரண்டு வேளை குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். காற்றோட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்க வேண்டும். குழந்தைகளை வெயிலில் விளையாட விடக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டினால், சளி பிடித்து விடும் என எண்ணக் கூடாது; வியர்வை போகும் வகையில் கண்டிப்பாக குளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், தடுப்பூசி போட வேண்டும். கோடை காலங்களில், ஈரப்பொருட்களில் பாக்டீரியா அதிகம் உற்பத்தியாகும். பழங்கள், காய்கள் நறுக்கிய கத்திகளை உடனே கழுவ வேண்டும்; மறுமுறை பயன்படுத்தும்போதும் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால், வயிற்றுபோக்கு பிரச்னை ஏற்படாது.

டாக்டர் நேதாஜி (பொது மருத்துவம்): 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பூமி வெப்பமயமாதல் காரணமாக, தட்ப வெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால், இயற்கையும், மனித உடலும் கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக , வெயிலில் செல்லும்போது, மனிதர்களுக்கு “சன் ஸ்ட்ரோக்’ ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும், வயது முதிர்ந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. வியர்வை அதிகம் வெளியேறும்போது, உப்பு சக்தி குறைகிறது. தசை பிடிப்பு, மயக்கம், ரத்தநாளம் விரிவடைந்து, மூளைக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாதிப்பு, வலிப்பு, கோமா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வெயிலில் சுருண்டு விழுபவர்களை உடனடியாக நிழலான பகுதிக்கு தூக்கிச் சென்று, குளிர்ச்சியான நீர், ஐஸ் கட்டி, ஈரத்துணி ஆகியவற்றால் முகம், கழுத்து, உடம்பு பகுதிகளில் குளிர்ச்சி ஏற்படுத்த வேண்டும். உடைகளை தளர்த்தி விட வேண்டும். மயக்கம் தெளியவில்லை என்றால், உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். வெப்பத்தை ஈர்க்கும், கருப்பு, கருநீலம் உள்ளிட்ட நிற உடைகளை அணியாமல், வெள்ளை, மஞ்சள், இளம்பச்சை நிற உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நடந்தோ, இரு சக்கர வாகனங்களில் செல்லும்போதோ, நேரடியாக தலையில் வெப்பம் இறங்காமல் பாதுகாக்கும் வகையில், தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூலிங்கிளாஸ் அறிய வேண்டும். வியர்வை வெளியேறுவதால், வீணாகும் உப்பு சத்தை உடலுக்கு வழங்கும், இளநீர், மோர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்த வேண்டும். காபி, டீ, மதுபானம் ஆகியற்றை தவிர்க்க வேண்டும்; ஏனென்றால், இவை, ரத்த நாளங்களை சுருக்கும் பணியையே மேற்கொள்ளும். வயதானவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம், வெயில் காலம். தோல் பாதிப்புகளும் அதிகளவு ஏற்படும். வியர்க்குரு, அரிப்பு, வியர்வையின்போது, வெளியேறும் உப்புகள் அடைத்து, கொப்புளங்கள் ஏற்படும். “ஜிங்க் ஆக்சைடு’ கலந்த பவுடர்கள் உபயோகிக்கும்போது, வியர்வையை உறிஞ்சி விடும். வியர்க்குரு பவுடர்கள் பயன்படுத்துவது நல்லது. சூட்டு கொப்புளங்கள் வந்தால், அரிப்பு இருக்காது; ஆனால், வலி இருக்கும். இதற்கு, சந்தனத்தை தேய்த்து, கொப்புளங்களில் வைக்க வேண்டும். சில நாளில் சரியாகவில்லை என்றால், உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், இவ்வகை கொப்புளங்கள் வந்தால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காற்றோட்டமான உடை அணிய வேண்டும்.

டாக்டர் நடராஜன் (குழந்தைகள் நலம்): குழந்தைகளை காலை 11.00 முதல் மாலை 3.00 மணி வரை, வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது. அதிகாலை, மாலை நேரங்களில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும். வெயிலில் விளையாடும்போது, “ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்பட வாய்ப்புள்ளது. குறைந்தது, ஒன்றரை லிட்டர் நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். மஞ்சள் காமாலை, சின்னம்மை ஆகிய நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீரை காய வைத்து, கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை தவறாமல் போடுவதோடு, வெயில் கால நோய்களுக்கான தடுப்பூசியும் அவசியம் போட வேண்டும். இளநீர், பழச்சாறு, எலுமிச்சை, தர்ப்பூசணி, நொங்கு, பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு, வெள்ளரி, நீர்ச்சத்து காய்கறிகள் கொடுக்க வேண்டும். சிறுநீரக கற்கள் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, 10 வயது சிறுவர்களுக்கு கூட வருகிறது. இதற்கு நீர்ச்சத்து குறைபாடே காரணம். கடந்த சில நாட்களில், நான்கு குழந்தைகள், சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல், டெங்கு காய்ச்சல் பாதிப்பும், கோடையால் அதிகரித்து வருகிறது. கிராமப்புற பகுதிகளிலிருந்து, கடந்த 10 நாட்களில், நான்கு சிறுவர்கள் பாதித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது புதிது, புதிதாக நோய்கள் வருகின்றன. எனவே, தடுப்பூசி போடுவது அவசியம்.

டாக்டர் பிரேம் ஆனந்த் (சிறுநீரக சிறப்பு மருத்துவர்): சிறுநீர் வெளியேறும் அளவு சரியாக இல்லாதபோது, சிறுநீரக கற்கள் உருவாகின்றன. மஞ்சள் நிறத்தில் சிறுநீர் செல்லும்போது, நீர் ஆகாரம் குறைந்துள்ளது என்பது அறிகுறி. தண்ணீர் அதிகம் குடித்து, வெண்மை நிறத்தில் சிறுநீர் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு தலை சுற்றல், மயக்கம், தொண்டை பிடிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெப்பம் காரணமாக அதிகம் சாப்பிட முடியாத நிலை ஏற்படும். சாப்பாடு குறைந்தாலும், தினமும் எடுக்கும் அதிக டோஸ் மாத்திரைகளை எடுப்பர்; இதனாலும் பாதிப்பு ஏற்படும். எனவே, உணவு குறையும்போது, அதற்கு தகுந்தாற்போல், டாக்டரின் அட்வைஸ் பெற்று, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கோடையில், தண்ணீராலும், வெயிலாலும், சிறுநீரக கல் உற்பத்தி அதிகரிக்கும். ஒரு கிலோ உப்பை, 10 லிட்டர் தண்ணீரில் கரைப்பதற்கும், ஒரு லிட்டர் தண்ணீரில் கரைப்பதற்கும் வித்தியாசம் உள்ளதுபோல், தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் பையில் உப்பு நீர் அதிகம் தேங்க விடக்கூடாது. தினமும், 2.5 லிட்டர் சிறுநீர் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்தளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

டாக்டர் திருமுருகன் (இருதயம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்): தினமும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இளநீர், பழங்கள், சாப்பாட்டில் மோர், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலங்களில், எண்ணெய், காரம், இறைச்சி உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இரண்டு வேளை குளித்து, உடல் வெப்பத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இருதய, சிறுநீரக நோயாளிகள், டாக்டரின் ஆலோசனைக்கு பிறகே, தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும். தளர்வான, காட்டன் உடைகளை அணிய வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமுள்ள காலை 11.00 மணி முதல் 3.00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக செல்ல வேண்டுமெனில், வெயில் நேரடியாக விழாமல் இருக்க, குடை, ஹெல்மெட் பயன்படுத்தலாம்; கிளவுஸ், கிரீம்கள் போட்டுக் கொள்ளலாம்.

டாக்டர் சங்கரி (பொது மருத்துவம்): சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளநீர், தர்ப்பூசணி என கோடையில் வரும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகள், பெரியவர்கள் இரண்டு நேரம் குளிக்கலாம். வியர்வைக்கு என வந்துள்ள சிறப்பான பவுடர்களை பயன்படுத்தலாம். வெயில் காரணமாக, பெண்களின் தோல் கருப்பு நிறத்துக்கு மாறுகிறது. இதற்கு, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கிளாஸ், ஹெல்மெட், கிளவுஸ், வெயிலுக்கு லோஷன் ஆகியவற்றை பயன்படுத்தலாம். லோஷன்கள் தேர்வு, டாக்டர்கள் ஆலோசனைபடி மேற்கொள்ள வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கோடையில் ஏற்படும் பாதிப்புகளை, அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், தண்ணீர் அதிகம் குடிப்பது, உடல் உஷ்ணத்தை குறைப்பது என கவனம் செலுத்த வேண்டும்.

டாக்டர் இளங்கோ (தோல் நோய் சிறப்பு மருத்துவர்): வெயில் காரணமாக, தோலில், “சன் பால்’ மற்றும் தோல் வெந்து போனதுபோல், சூட்டு கொப்புளங்கள், கிருமிகள் காரணமாக, பாதிப்புகள் ஏற்படுகின்றன. நூல் ஆடைகளை அணிய வேண்டும்; ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும். வியர்வை உறிஞ்சும் பவுடர்களை பயன்படுத்த வேண்டும். கொப்புளங்கள், தோல் வெந்து போனதுபோல் ஆகும்போது, லோசன் பயன்படுத்தலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அம்மை, சின்னம்மை, அக்கி உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. படித்தவர்கள் கூட, இவ்வகை நோய்களுக்கு டாக்டரிடம் வருவதில்லை; தற்போது, இந்நோய்களுக்கு மருந்துகள் வந்துள்ளன. நோய் பாதிப்பு ஏற்படும்போது, சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள், தழும்பு ஏற்பட்டதும், டாக்டரிடம் வருகின்றனர். நோயை ஆரம்பத்தில் குணப்படுத்தினால், தழும்பே ஏற்படாது. தழும்புக்கு மருத்துவம் இல்லை; ஆனால், அம்மை நோய்க்கு தீர்வு காண சிறந்த மருத்துவம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

டாக்டர் கணேசன் (பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்): கோடை காரணமாக, தரமற்ற குளிர்ச்சியான பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால், டைபாய்டு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. தண்ணீர், நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறி, தர்ப்பூசணி , மாதுளம்பழ ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மாதுளம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு உள்ளது. கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள், அழுகிய பழங்கள், ரோட்டில் விற்கும் சுகாதாரமற்ற பண்டங்களை சாப்பிட்டு விட்டு, சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீர்ச்சத்து குறையும்போது, உடல் சோர்வு ஏற்படுகிறது. வெப்பம் காரணமாக, உடல், தலை, கண்களை பாதிக்கிறது. தலைக்கு தொப்பி, கண்ணுக்கு கூலிங்கிளாஸ் அணிந்து, பாதுகாத்துக் கொள்வது அவசியம். தோல் நோய்கள் பாதிக்காமல் இருக்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு எடுத்துக் கொள்வது குறைவதோடு, உடலில் நீர்ச்சத்தும் குறைவதால், நீர்ச்சத்து ஆகாரங்கள், தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் ஜெகன்மோகன் (அவிநாசி அரசு மருத்துவமனை சித்தப்பிரிவு): கோடையில் வியர்வை அதிகமாக சுரக்கும் என்பதால், பருத்தி இழையிலான ஆடைகளையே அணிய வேண்டும். அவ்வப்போது வியர்வையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், படர்தாமரை போன்ற பூஞ்சை நோய்கள், சருமத்தை தாக்கி விடும். அதேபோல், குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க, தலைமுடியை நன்றாக வெட்டி விட வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிப்பது, இளநீர், பதநீர், நுங்கு, பப்பாளி, சிறிய வெங்காயம், அனைத்து பழ வகைகளை சாப்பிடுவது, சரும நோயை தடுக்க வல்லது. அதேபோல், தலைக்கு தொப்பி அணிந்து சென்றால், நேரடி வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியும். உடம்பு குளிர்ச்சியாக இருந்தால், கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் இருமுறை குளித்தால் நல்லது. குளிக்கும்போது சோப் பயன்படுத்தாமல், பாசிப்பயறு மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து குளிப்பது, சருமத்துக்கு ஏற்றது.

(நன்றி : தினமலர்.காம்)

=======================================================================

Also check :

எது நல்ல உணவு? எது சத்தான உணவு? MUST READ & MUST SHARE

கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!!

தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’! READ IT AGAIN & AGAIN!!

எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!

சிகரெட்டை நிறுத்த முடியவில்லையா? இதோ ஒரு எளிய டெக்னிக்!

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!

மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!

=======================================================================

[END]

8 thoughts on “வருமுன் காப்போம்!

  1. அவசியமான நேரத்தில் மிகச்சிறந்த பதிவு. திருச்சியிலிருந்து வந்ததிலிருந்து அவருக்கும் இத்தொல்லைகள் இருந்தது. பெரும்பாலும் இயற்கை வைத்தியத்தில் சரி செய்து கொண்டார். மேலும் பல தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

  2. அனைவருக்கும் உபயோகமான பதிவு. நம் வாசகர்கள் நலனைக் கருதி வெளியிட்ட இந்த பதிவிற்காக நன்றிகள் பல.

    உமா வெங்கட்

  3. மிக மிக நன்றி.

    தங்கள் சேவை மிக நன்று.

    தாங்கள் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க ஆண்டவனை வேண்டுகிறோம்.

    கே. சிவசுப்ரமணியன்

  4. மிக்க நன்றி
    கோடை அக்னி வெயிலில் இருந்து தப்பிக்க அருமையான டிப்ஸ்

  5. கோடை வெயிலை சமாளிக்கத் தேவையான உபயோகமான தகவல்கள்…… பகிர்ந்தமைக்கு நன்றிகள்………

  6. (பொதுவாக BAD BACTERIA வை உடம்பே சரி செய்து கொள்ள வேண்டும்.(அதற்கு தேவையான பொருட்கள் ரத்தத்தில் இருந்தால்) ) தேங்காய் பால் is the very good anti bacterial. ( கொதிக்க வைக்காத) தேங்காய் பாலின் அற்புதத்தை எழுத ஒரு நாள் போதாது.
    ( நமது சித்தர்களே தேங்காய் பாலின் அற்புதத்தை பற்றி பாடி உள்ளார்கள்)

  7. அன்பின் சுந்தர் அண்ணா..

    கோடை வெயிலை சமாளிக்க தாங்கள் அளித்த இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள் பல.

    மிகவும் பயனுள்ள தகவல்கள்களை எளிமையோடு சொன்னது, மிகவும் நன்று.

    மிக்க நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *