Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!

மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!

print
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் சிலர். இல்லை இல்லை அறிவு தானம் என்பார்கள் வேறு சிலர். மனிதன் உயிரோடு இருந்தால் தானே இந்த தானத்திற்கே அர்த்தம். எனவே இரத்த தானம் தான் சிறந்தது என்பார்கள் வேறு சிலர். இன்னும் சிலர் கண் தானம் உள்ளிட்ட உடலுறுப்புக்கள் தானமே சிறந்தது என்பார்கள். இப்படி ஒவ்வொரு தானமும் அவரவர் பார்வையில் ஒவ்வொரு வகையில் உயர்வானதே. ஆனால், இவை எல்லாவற்றையும் விட உயர்வான தானம் ஒன்று இருக்கிறது. அதுவும், தற்காலத்துக்கு மிகவும் இன்றியமையாத தானம் அது. அது தான் பசுமை தானம்.

“ஒரு மரம், நடப்பட்டு வளர்ந்தால் அதன் மூலம் இந்த பூமி பல வகையில் பயன் பெறும். அதுமட்டுமல்ல, புழு, பூச்சி, பறவை, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரனங்களும் பல்வேறு பயன்களை பெறுகிறார்கள். எனவே ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஓரிரு மரங்கள் நடவேண்டும். அதுவே ஒருவர் செய்யும் மிகப் பெரிய தானமாகும்!” என்கிறார் ‘பசுமைக் காவலர்’ திரு.முல்லைவனம்.

Tree Bank Mullaivanam 25

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நமது பாரதி விழாவில் உரையாற்றுகிறார் திரு.முல்லைவனம்
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நமது பாரதி விழாவில் உரையாற்றுகிறார் திரு.முல்லைவனம்
முதல் பாரதிவிழாவில் TREE BANK சார்பாக அமைக்கப்பட்ட இலவச மரக்கன்றுகள் வழங்கும் ஸ்டாலில்...
நம் முதல் பாரதிவிழாவில் TREE BANK சார்பாக அமைக்கப்பட்ட இலவச மரக்கன்றுகள் வழங்கும் ஸ்டால்…

திரு.முல்லைவனம் அவர்களை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. நமது முதல் பாரதிவிழா 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றபோது சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசகர்களுக்கும் இலவச மரக்கன்றுகள் கொடுத்தார். அதன் பிறகு நமது தளத்தின் ஒவ்வொரு விழாவிற்கும் வந்து நம்மை ஆசீர்வதிப்பார். நமது பிரார்த்தனை கிளப்பிற்கு கூட ஒரு முறை தலைமை தாங்கியிருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நமது பாரதி விழாவில் வாசகர் ஒருவர் மரக்கன்று பெறுகிறார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நமது பாரதி விழாவில் வாசகர் ஒருவர் மரக்கன்று பெறுகிறார்.

பல்வேறு பசுமைத் திட்டங்களில் இவரது பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்து வருகிறது. இதுவரை 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இவர் மூலமும் இவரது TREE BANK அமைப்பு மூலமும் நாடு முழுதும் நடப்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டுமே இதுவரை எட்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு அதைப் பராமரித்து வருகிறார்.

தன்னைத் தேடி வருபவர்களுக்கு இலவசமாக மரக் கன்றுகளைக் கொடுத்து சமூகக் கடமையில் அவர்களையும் ஒருவராக இணைத்துக்கொள்ள்கிறார் இந்த பசுமை மனிதர்.

சமீபத்திய பாரதி விழாவில் தனது நண்பருடன் திரு.முல்லைவனம் (வலது ஓரம்)
சமீபத்திய 2014 பாரதி விழாவில்…

மே 1 அன்று வரக்கூடிய தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் கடற்கரையில் விவேகானந்தர் சிலைக்கு எதிரே, பொதுமக்கள், நடைபயிற்சி செய்பவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இலவசமாக மருத்துவ குணமுள்ள மரக்கன்றுகள், மூலிகை செடிகள் ஆகியவற்றை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். துளசி, நில வேம்பு, மலை வேம்பு, சோற்று கற்றாழை, கற்பூர வள்ளி, பிரண்டை, பூவரசு, புங்கன், பாதாம், வில்வம், மந்தாரை உள்ளிட்டவை அந்த பட்டியலில் அடங்கும்.

இன்று மே 1, பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டும் பல்லாயிரம் மரக்கன்றுகளை இலவசமாக தரவிருக்கிறார். இதற்காக நான்கு பிக்கப் வண்டிகளை அமர்த்தி அதில் ஐந்து அடுக்கு பலகைகளை போட்டு அடுக்கு ஒன்றுக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் கடற்க்கரை மட்டுமல்லாது மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று தரவிக்கிறார். நாளை துவங்கும் இந்த பணி அடுத்த ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

திரு.முல்லைவனம் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரை கௌரவிக்க வேண்டி மே 1 அன்று நம் அலுவகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் மே 1 அன்று தன் பிறந்த நாள் இலவச மரக்கன்று விநியோகத்தில் பிஸியாக இருப்பேன் என்றும் வேண்டுமானால் ஒரு நாள் முன்னதாக வருகிறேன் என்றார். நாமும் மே 1 வெள்ளி இரவு திருச்சி புறப்படுவதால், ஒரு நாள் முன்னதாக அவர் வந்தால் நமக்கும் பதிவு எழுத வசதியாக இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டோம்.

Tree Bank Mullaivanam 5
நேற்று நம் அலுவலகத்திற்கு வந்தபோது…

இதை தொடர்ந்து நேற்று தனது நண்பருடன் முதன்முறை நம் அலுவலகம் வந்தார் திரு.முல்லைவனம். வந்தவரை வரவேற்று அமரச் செய்து அளவளாவினோம்.

நண்பர் ராஜா அப்போது நம்மை பார்க்கக் வந்திருந்தார். திரு.முல்லைவனத்தை அவருக்கும் அறிமுகப்படுத்தினோம்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாமும் நண்பர் ராஜாவும் முல்லைவனம் அவர்களை கௌரவித்தோம்.

Tree Bank Mullaivanam 7

வேட்டி, சட்டை, துண்டு, நமது பாரம்பரிய ஆரோக்கியமான இனிப்பு வகைகளான (கடலை உருண்டை, பொரி உருண்டை) ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து பிறந்த நாள் பரிசாக அளித்தோம்.

“நாளைக்கு உங்க பிறந்த நாள் அன்னைக்கு உங்களை பத்தி ஒரு விரிவான பதிவு போடப்போறேன். நீங்க இந்த சமூகத்துக்கு செய்துவரும் தொண்டுக்கு முன்னாள் இதெல்லாம் ஒன்னுமேயில்லை. இருந்தாலும் என்னோட வாசகர்கள் சார்பா, அவங்களோட பிரதிநிதியா இதை உங்களுக்கு செய்றேன். இது தனிப்பட்ட ஒருவர் செய்யும் மரியாதை அல்ல. சுமார் 5000 – 7000 வாசகர்கள் சேர்ந்து செய்யும் மரியாதை. உங்கள் சேவையின் மதிப்பை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோம், உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பக்கபலமாக இருப்போம் என்பதை காட்டவே இதை செய்கிறேன். உங்கள் பசுமைத் தொண்டு மேன்மேலும் தொடரவேண்டும். நானும் என் வாசகர்களும் உங்கள் பசுமைப் பயணத்தில் என்றும் துணை இருப்போம்!” என்றோம்.

 நம்முடன் திரு.முல்லைவனமும் நண்பர் ராஜாவும்...

நம்முடன் திரு.முல்லைவனமும் நண்பர் ராஜாவும்…

நமது கௌரவத்தை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

தன்னலம் பாராமல் சமூகத்திற்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற சிறு சிறு பாராட்டுக்கள் அங்கீகாரங்கள் எந்தளவு உத்வேகத்தை தரும் தெரியுமா?

இதுமட்டுமல்ல, அவ்வப்போது திரு.முல்லைவனம் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருவது நம் வழக்கம். ஒரு முறை அவரது மகளுக்கு கல்வி உதவி தேவைப்பட்டபோது, நம் தளம் சார்பாக வாசகர் ஒருவரின் துணையோடு அது நிறைவேற்றப்பட்டது. சென்ற ஆண்டு இவர் பிறந்த நாளையொட்டி அட்சய திரிதியை வந்தது. அட்சய திரிதியை அன்று கௌரவிப்பதற்கு இவரைவிட பொருத்தமான நபர் கிடைப்பார்களா? எனவே இவரை அவரது அலுவலகத்திலேயே சந்தித்து கௌரவித்தது நினைவிருக்கலாம். (நாம் அன்று கௌரவித்த மற்றொரு நபர் கிளிகளின் தந்தை திரு.சேகர்). அது பற்றிய பதிவின் சுட்டி இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

Tree Bank Mullaivanam 8

இந்த ஆண்டு நாம் அட்சய திரிதியையொட்டி காலடி பயணம் மேற்கொண்டதால், இவரை சந்திக்க இயலவில்லை. மே 1 தான் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள் வருகிறதே அப்போது அவரை கௌரவிக்கலாம் என்று விட்டுவிட்டோம். திரு.சேகர் அவர்களை மட்டும் சந்தித்தோம்.

மரங்கள் நடுவது, பரமாரிப்பது, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இவர் பணிகள் எல்லையின்றி பரந்து விரிந்திருந்தாலும் இவை தவிர வேறு சில முக்கிய பணிகளும் இவர் செய்கிறார்.

1) பட்டுப்போன, செத்துப்போன மரங்களுக்கு உயிர் கொடுப்பது. மரங்களின் வேறை ஆராந்து, அதற்குரிய மூலிகை சிகிச்சை கொடுக்கிறார். இரண்டாண்டுகளுக்கும் முன்னர் சென்னையை புயல் புரட்டிப் போட்டபோது, சாலையில் விழுந்த பல சிறிய மரங்கள் இவர் முயற்சியில் மீண்டும் உயிர் பெற்றன.

2) நன்றாக உள்ள மீசை வேர், ஆணி வேர் என்று தரம்பிரித்து சிகிச்சை அளித்து இறந்து போன மரங்களை மீண்டும் துளிர்க்கச் செய்கிறார். அப்படி அவர் மீண்டும் உயிர் பிழைக்கச் செய்த மரம் ஒன்று அவரது வீட்டருகிலேயே இருக்கிறதாம். (இரண்டொரு நாள் கழித்து நேரில் சென்று அதை படமெடுத்து பதிவில் இணைக்கிறோம். மறக்காமல் பாருங்கள்.)

3) மரங்களில் அடிக்கப்படும் ஆணிகளை, விளம்பரப் பலகைகளை தனது TREE BANK VOLUNTEERS களுடன் சென்று அகற்றுவது.

Tree Bank Mullaivanam 11
ஐயோ… இதைவிட ஒரு காட்டுமிராண்டித் தனம் இருக்க முடியுமா?

(மரத்தில் ஆணியடித்து விளம்பரங்களை தொங்கவிடுவதைவிட கொடுமையான / கேவலமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அத்தகைய நிறுவனங்கள் யாவும் ஷீனமடைந்து அழிந்து தான் போகும். மரங்களுக்கும் அறிவியல்படி உயிர் இருக்கிறது மட ஜென்மங்களே… அதை உணருங்கள். மன்னிக்கவும். நம் கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.)

TREE BANK தன்னார்வலர்களால் ஆணிகள் அகற்றப்படுகிறது!
TREE BANK தன்னார்வலர்களால் ஆணிகள் அகற்றப்படுகிறது!

Tree Bank Mullaivanam 16நம்மிடம் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார் திரு.முல்லைவனம்.

“மரங்கள் நடுறதை என்னோட அப்பா வழியில் நானும் சின்ன வயசுலேர்ந்து செஞ்சிட்டு வந்தாலும் இதுல ஒரு சமூக நோக்கத்தோட முழு மூச்சோட இறங்குறதுக்கு, என் மனைவி தனலட்சுமியின் அகால மரணமே காரணம்.”

பழைய நினைவுகளில் மூழ்கியவர், மேலும் தொடர்ந்தார்.

“என்னைப் போலவே என் மனைவி தனலட்சுமிக்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேல் அளவு கடந்த பிரியம் உண்டு. மரம் நடுறதுக்கு நான் எங்கே போனாலும் அவங்களும் ஆர்வமா கூட வருவாங்க. தான் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய மெனக்கெட்டாங்க. கான்சர் வந்து அவங்க திடீர்னு என்னையும் என் பொண்ணையும் தனியா தவிக்கவிட்டு போய்ட்டாங்க. அப்போ… எனக்கு ஆறுதலா இருந்தது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நட்டு வெச்ச மரங்கள் தான்! மரங்கள் நடுவதையும், பராமரிப்பதையும் ஒரு சமூகப்பணியா செய்வது நிச்சயம் அவங்க ஆத்மாவை சாந்தியடைய வைக்கும்” என்கிறார் கண்கலங்கியபடி.

மரம் வைக்கலாம். நல்ல விஷயம். ஆனா யாரு பார்த்துக்கிறது? தண்ணி ஊத்துறது? ன்னு நிறைய பேர் என்கிட்டே கேட்டாங்க.

இதனால, சாலையோரம் இருக்குற இளநீர் கடை, பெட்டிக்கடை, செருப்புக்கடை, பழக்கடை, பூக்கடை இதுக்கு பக்கத்துல மரம் நட ஆரம்பிச்சேன். அவங்க கிட்டே “கொஞ்சம் பார்த்துக்கோங்க. கடையை சாத்துரதுக்கு முன்னாள் மீந்து போற தண்ணியை கீழே கொட்டாம மரத்துக்கு ஊத்துங்க”ன்னு சொல்வேன்.

இதுனால அவங்களுக்கு என்ன லாபம்னு யோசிச்சவங்ககிட்டே, மரம் வளர்ந்தா நிழல் கிடைக்கும். உங்களுக்கும் பிசினஸ் நல்லா பிக்கப் ஆகும்னு சொல்லி புரிய வைப்பேன். அதுமாதிரி என்னோட முயற்சியில நிறைய மரம் வளர்ந்திருக்கு.

முல்லைவனத்தின் ஒரே சொத்து இந்த வண்டி தான்
முல்லைவனத்தின் ஒரே சொத்து இந்த வண்டி தான்

சாலையோரம் இப்படி மரங்களை நடுறது ஒரு விதம். அப்புறம் கல்யாணம், பிறந்த நாள், குழந்தைங்க காது குத்து, திருமண நாள் இப்படி ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒரு மரம் நடலாம். அன்னைக்கு செய்யக்கூடிய புண்ணிய காரியம் இதை விட வேற என்னங்க இருக்க முடியும்?

அப்படி அவங்க மரம் நடும்போது, அதை ஃபோட்டோ எடுத்து அவங்களுக்கு பிரிண்ட் போட்டு அனுப்பி வெப்பேன். அவங்க அதை வீட்டுல மாட்டும்போது, அதை நாலு பார்த்தா, அவங்க அதை பத்தி விசாரிப்பாங்க. அது மூலமா மரம் நடுறதை பத்தி விழிப்புணர்வு பெருகும்.

Tree Bank Mullaivanam 22
வளர்ந்த மரத்தில் CATTLE GUARD ஐ அகற்றும் TREE BANK குழுவினர்

மரக் கன்று நடும்போது ஆடுமாடுகள் மேயாமல் இருக்க போடப்படும் CATTLE GUARD அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்களால் அகற்றப்படுவதேயில்லை. அதனால் என்ன ஆகும் தெரியுமா? கீழே பாருங்கள்….!

ஐயோ... இந்த மரம் எத்தனை துடி துடித்திருக்கும்....
ஐயோ… இந்த மரம் எத்தனை துடி துடித்திருக்கும்….

இது மட்டுமில்லாம, வீடு வீடா போய், வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்வேன். “மரம் நட்டா வீடெல்லாம் குப்பையாகுமே”ன்னு சிலர் சொல்வாங்க. மரம் இருந்தா, நிழல் கிடைக்கும், நல்ல இயற்கை காத்து வரும், மண் வளம் அதிகமாகும், உங்க வீட்டுல்ல நிலத்தடி நீர் நிறைய ஊறும் அப்படி இப்படின்னு எடுத்துச் சொல்லி அவங்களை சம்மதிக்கவைப்பேன். அவங்க யோசிச்சிக்கிட்டுருக்கும்போதே கையில் ஒரு தொட்டியை கொடுத்துட்டு வந்துடுவேன்.

சொந்த வீடு இருக்குறவங்க, வாடகை வீட்டுல இருந்தாலும் மரம் நடுற சுதந்திரம் இருக்குறவங்க… இவங்களுக்கெல்லாம் உங்க திட்டம் ஓ.கே. ஆனா, ஆர்வம் இருந்தும் இட வசதியில்லாதவங்க என்ன செய்ய முடியும்? அவங்களுக்கு ஏதாவது திட்டம் வெச்சிருக்கீங்களான்னு சில பேர் கேட்டாங்க.

CATTLE GUARD அகற்றப்படாததால் உயிர் நீத்த ஒரு மரம்!
CATTLE GUARD அகற்றப்படாததால் உயிர் நீத்த ஒரு மரம்!

பார்க், பள்ளிக்கூடம்னு சில இடங்கள்ள மரம் நடுறதுக்கு அனுமதி வாங்கி வெச்சிருக்கோம். வாரம் ஒரு முறை அப்படிப்பட்ட இடங்கள்லேயும் மரக்கன்றுகள் நடுறோம். ஆர்வமுள்ளவங்க அதுல கலந்துகிட்டு ஒரு மரம் நடலாம்.

சென்னையில் இருக்குற யார் வேணும்னாலும் எங்களை கூப்பிடலாம். மரம் நடுறதுக்கு ஒரு குழியை மட்டும் அவங்க வெட்டிக் கொடுத்துட்டா போதும். நாங்க போய் மரம் நட்டு அதை பராமரிக்கிறது எப்படின்னும் சொல்லிக் கொடுத்துட்டு வருவோம்.

சும்மா டைம் பாஸ்க்கு எங்களை கூப்பிட்டு மரம் நடச் சொல்லக்கூடாது. ஏன்னா, மரம் நட்டதுக்கப்புறம் அவங்க அதை ஒழுங்கா பராமரிக்கிறாங்களான்னு செக் செய்துகிட்டே இருப்போம். மரம் காஞ்சு போச்சுன்னா, “எங்க நேரத்தையும் உழைப்பையும் வீணடிச்சுட்டீங்க. இயற்கையை காப்பாத்த தவறிட்டீங்க. இதை மன்னிக்க முடியாது. இதுக்காக ரூ.100/- பைன் கட்டணும்னு சொல்லி லெட்டர் அனுப்புவோம். ஆனா, அப்படியொரு சூழ்நிலை இதுவரை வந்ததில்லை. தங்களோடு உழைப்பும் அந்த மரக்கன்னு நட்டதுல இருக்குறதால எல்லாரும் அக்கறையா பார்த்துக்கிறாங்க.

Tree Bank Mullaivanam 9
குழந்தைகள் மனதில் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை விதைக்கும் பணியில்….
ஆஹா... ஆஹா... எத்தனை இனிமையான காட்சி...!
ஆஹா… ஆஹா… எத்தனை இனிமையான காட்சி…!

ஒவ்வொரு ஊரா போய் பள்ளி மாணவர்கள் கிட்டே சுற்றுச்சூழல் பத்தி விழிப்பு உணர்வை ஏற்படுத்திட்டு வருவோம். போகும் இடம் எல்லாம், ‘அண்ணா… அண்ணா இன்னும் சொல்லுங்க! இன்னும் சொல்லுங்க!!’ அப்படின்னு எங்களைச் சுற்றி வளைத்து அவ்வளவு ஆர்வமாகக் கேட்ப்பாங்க மாணவர்கள்.  வரலாறும், வேதியியலும், கணினியும் சொல்லிக்கொடுக்கும் நம் பள்ளிகளில் இரண்டு விஷயங்கள் கம்ப்ளீட்டா இல்லை. ஒன்னு, விளையாடுவதற்கான நேரம். ரெண்டு… சுற்றுச்சூழல் குறித்த செய்திகள். இதுல நிறைய விஷயம் ஆசிரியர்களே அறிந்து இருப்பது இல்லை. ‘அதெல்லாம் எதற்கு?’ என்ற அலட்சிய மனப்பான்மைதான் காரணம்.

இந்தத் தலைமுறையில் நானும் தான் இருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நான் சேர்த்துவிட்டுப் போக என்னிடம் மரங்கள் மட்டுமே இருக்கு. இப்படித் துவங்கியதுதான் TREE BANK அமைப்பு.

நம்மாழ்வாரிடம் விருது பெறுகிறார்...
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன்….

குப்பையில் கிடக்கும் பழ விதைகள், வீடுகளில் உள்ள காய்கறிக் கழிவுகள், வெட்டுப் பட்டுக்கிடக்கும் மரங்களில் இருந்து கொண்டுவந்த கிளைகள் என இவற்றை வைத்து மரக்கன்றுகளை நான் சம்பாதிக்கிறேன். தேடி வருபவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறேன்.

Tree Bank Mullaivanam 19

சுற்றுச் சூழலை கெடுக்கும் தண்ணீர் பாட்டில் எப்படி உபயோகமாக பயன்படுத்தப்படுகிறது பார்த்தீர்களா?
சுற்றுச் சூழலை கெடுக்கும் தண்ணீர் பாட்டில் எப்படி உபயோகமாக பயன்படுத்தப்படுகிறது பார்த்தீர்களா?

இதை நான் ஒருவனே ஒவ்வொரு இடத்திலும் செய்ய முடியாதுங்கிறதால என்னைப் பின்பற்றி வந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆங்காங்கே பசுமைக் குழுக்கள் ஏற்படுத்தி இருக்கேன். இந்தியா முழுமைக்கும் 100 கோடி மரங்கள் நட வேண்டும் என்பதுதான் என் விருப்பம், லட்சியம் எல்லாம். ஆனால், ஒரு கையால் தேர் இழுக்க முடியாதே! ஊர் கூடி இழுக்க வேண்டிய விஷயம் இது.

இன்னைக்கு இத்தனை வியாதிகள் பெருகியிருப்பதற்கு காரணம் ஏ.சி. தான்!

இன்னைக்கு வீட்டுக்கு ரெண்டு கார். அதுலயும் ஏ.சி. இல்லாத காரே இல்லை. ஆபீஸ்ல, வீட்டுக்குள்ளே, பாத்ரூமுக்குள்ளே இப்படி எங்கே பார்த்தாலும் ஏ.சி. தான். இன்னைக்கு இத்தனை வியாதிகள் பெருகியிருப்பதற்கு காரணம் ஏ.சி. தான். அளவுக்கதிமா நச்சுத் தன்மை கொண்டது ஏ.சி. தான். நம்மை உடம்பை கெடுக்கிறது மட்டுமில்லே… சுற்றுச் சூழலும் மாசடையுது… பூமியும் ஏ.சி. பயன்பாட்டினால சூடாகுது.

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் கொடையா மரங்கள் இருக்குறப்போ செயற்கையா பணம் செலவு பண்ணி நாம வேச்சுக்குற சூனியம் ஏ.சி. எதுக்கு? ஆளுக்கொரு மரம் இல்லே அட்லீஸ்ட் வீட்டுக்கொரு மரம் நட்டாலே போதும். அது காட்டுற நன்றி விஸ்வாசத்திலே என்னைக்கும் நாமளும் நம்ம குழந்தைகளும் ஆரோக்கியமா இருக்கலாம் என்கிறார்.

Tree Bank Mullaivanam 21
நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்…

திரு.முல்லைவனம் அவர்களுக்கு பிரித்விராஜ் என்கிற மகனும் காவியா என்கிற மகளும் உள்ளனர். பிரித்விராஜ் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிகிறார். மகள் காவியா பி.காம். மூன்றாமாண்டு தேர்வை எழுதிவிட்டு அடுத்த கட்ட படிப்பை தொடர காத்திருக்கிறார்.

தன்னலமற்று இந்த சமூகத்துக்கு சேவை செய்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், முல்லைவனம் அவர்கள் செய்யும் இந்த பசுமை சேவையை செய்யத்தான் யாருமே இல்லை!

இது மட்டுமல்ல…மதுப் பழக்கதத்திற்கெதிரான பிரச்சாரத்தை கூட மேற்கொள்ளும் முல்லைவனம், குடிகாரர்கள் பலரின் கால்களில் விழுந்து குடியின் தீமையை வலியுறுத்தியிருக்கிறார். முதல் முறை இதை அவர் நம்மிடம் சொன்னபோது, “குடிகாரர்களை திருத்த முடியுமா?ஏன் சார் டயத்தை வேஸ்ட் செய்றீங்க?” என்றோம். ஆனால், இவர் செய்கையினால் சுமார் 8 பேர் இதுவரை மனம் திருந்தி குடியை நிறுத்தியிருக்கிறார்கள் என்கிற தகவலை அவர் சொன்னபோது நமக்கு எதாலோ அடித்தது போலிருந்தது. காப்பாற்றப்பட்டது எட்டு பேர் அல்ல. எட்டு தலைமுறைகள்.

தங்களை ஏய்த்துப் பிழைக்கும் சினிமா நடிகர்களின் பின்னே இளைஞர்கள் சென்று வீட்டுக்கோ நாட்டுக்கோ பயனின்றி நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில்,  ஒரு அரசாங்கம் கூட செய்ய முடியாத விஷயத்தை, முல்லைவனம் அவர்கள் ஒற்றை மனிதனாய் களமிறங்கி, மிகவும் கஷ்டப்பட்டு எப்படி எப்படியோ தன்னார்வலர்களை திரட்டிக்கொண்டு செய்துகொண்டிருக்கும் பணிகள் இருக்கிறதே… அப்பப்பா…. நினைத்தாலே தலை சுற்றுகிறது.

முல்லைவனம் ஒரு சாதாரண அடித்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தனிப்பட்ட பொருளாதார நெருக்கடிகளை நாம் நன்கறிவோம். இன்று FIRST TERM கவுன்சிலர்கள் கூட குவாலிஸில் பறக்கும்போது, சுற்றுச் சூழலுக்காக ஒரு தனிமனித அரசாங்கமே நடத்தும் முல்லைவனம் அவர்கள் சராசரி வாழ்க்கைக்கே போராடிக்கொண்டிருக்கிறார் என்பது நாம் வெட்கப்படவேண்டிய விஷயம். தொண்டு செய்பவர்களுக்கு நம் நாட்டில் இது ஒரு சாபக்கேடு.

மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து தங்கள் சொத்து சுகங்களை பெருக்கிக்கொண்டு கவலையின்றி திரியும் பெருச்சாளிகள் இருக்கும் நம் நாட்டில், மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியை பிடுங்கச் செல்லும் முல்லைவனம் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பது நமக்கு மிகப் பெரிய ஆறுதல்.

இன்றைய உலகிற்கு திரு.முல்லைவனம் செய்யும் தொண்டு எத்தனை முக்கியம் என்று நமக்கு தெரியுமோ தெரியாதோ அந்த பூமித்தாய்க்கு தெரியும். பூமியில் பசுமை தழைக்க பாடுபாடும் இந்த நிஜ ஹீரோவுடன் நாம் செலவழித்த ஒவ்வொரு நொடியும் எத்தனை அர்த்தம் வாய்ந்தது என்று உங்களுக்கு புரிந்திருக்குமே…!

கோவில் உழவாரப்பணியை எப்படி மாதாமாதம் செய்கிறோமோ அதே போல, மாதம் ஒருமுறையாவது இவருடன் சென்று இவர் செய்யும் பசுமை சேவையில் நம்மையும்  இனி ஈடுபடுத்திக்கொள்ளவிருக்கிறோம். நம்முடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைவிட எத்தனை உள்ளங்கள் வருகின்றன என்பதே முக்கியம்.

உண்மை உழைப்பாளி முல்லைவனம் அவர்களுக்கு நம் தளம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் சேவை மேன்மேலும் தொடரவேண்டும்; பூமித் தாய் மனம் குளிரவேண்டும். பசுமை செழிக்கவேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல் (குறள் 1021)

=====================================================================

முல்லைவனம் அவர்களை தொடர்புகொள்ள…

திரு.முல்லைவனம் அவர்களை தொடர்பு கொள்ள, அவரின் குழுவில் தன்னார்வலராக இணைய அவரது அலைபேசி எண் 97898 92080. முல்லைவனம் அவர்களை தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து வாழ்த்து கூறுங்கள். அவரது முகநூல் ID : Mullaivanam Treebank

=====================================================================

இவருக்கு என்ன செய்துவிட்டோம் இதுவரை?

* எத்தனையோ பொருளாதார நெருக்கடிக்கிடையேயும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மரங்களை நடுவது, நாள் கிழமை விசேஷங்களிகளின் போது மரக்கன்று விநியோகிப்பது, மரங்களில் ஆணி & CATTLE GUARD அகற்றுவது, பட்டுப்போன மரங்களுக்கு உயிர் கொடுப்பது, குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஊர் ஊராக சென்று பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இது தவிர குடி நோயாளிகளை மீட்பது… என இவர் பணிகள் பிரமிக்க வைக்கின்றன.

Tree Bank Mullaivanam 26
ஒரு மரம் எத்தனை மதிப்புள்ள விஷயங்களை தருகிறது என்பதை விளக்கும் போஸ்டருடன்…

முல்லைவனம் அவர்களை பற்றியும் அவரது தன்னலமற்ற சேவைகளை பற்றியும் எழுதிக்கொண்டே போகலாம். இந்த பதிவில் அளிக்க முல்லைவனம் அவர்களின் முகநூலில் இருந்து புகைப்படங்களை தேர்வு செய்தோம். அவரின் முகநூல்ஆல்பத்தில் தோண்ட தோண்ட TREE BANK நடத்திய பல்வேறு பசுமை நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. எதை விடுப்பது, எதை எடுப்பது, ஒன்றுமே புரியவில்லை. ஒரு தனிமனிதன், இந்தளவு இந்த பூமிக்காக உழைத்திருக்கிறான் என்பது எத்தனை பெரிய விஷயம்!!! இந்த பதிவை தயாரித்துகொண்டிருக்கும்போதே மனசாட்சி உறுத்துகிறது. எங்கோ பசுமைக்காக போராடிக்கொண்டிருப்பவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நாம், நம் மாநிலத்தில், நம் அருகிலேயே
இவருக்கு என்ன செய்துவிட்டோம் இதுவரை?

மகளை பி.காமே மிகவும் கஷ்டப்பட்டுதான் படிக்க வைத்திருக்கிறார் முல்லைவனம். அடுத்து அவர் எம்.காம் படிக்க விரும்புவதாக தெரிகிறது. அவரின் எம்.காம் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளலாமா என்று பரிசீலித்து வருகிறோம். நம் தளத்திற்கே செலவினங்களுக்கு உரிய வரவு இன்னும் STABILIZE ஆகாத சூழ்நிலையில் எந்த தைரியத்தில் ஒப்புக்கொள்வது என்று தயக்கமாக இருக்கிறது. இருப்பினும் இவருக்கு நிச்சயம் நாம் ஏதேனும் செய்தே தீரவேண்டும். வாசகர்கள் இதுவிஷயமாக நம்மை தொடர்புகொண்டால், கலந்துபேசி உங்களையே நேரடியாக உதவி செய்ய வைக்க உத்தேசித்திருக்கிறோம். முல்லைவனம் அவர்களின் மகளின் கல்விக்கு உதவுவது என்பது ஒரு சிவாலயத்தை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்வதைவிட மிகப் பெரிய புண்ணிய காரியம் என்பதில் ஐயமில்லை!

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !

தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

இது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=8

=====================================================================

[END]

7 thoughts on “மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!

  1. வணக்கம்……….. திரு.முல்லைவனம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…….. அவரின் தொண்டு அளவிடற்கரியது……….நமது சந்ததிகளுக்கு தூய காற்று, பசுமை, நல்ல தண்ணீர், அமைதியான சுற்றுச்சூழல் கொண்ட ஒரு உலகத்தை பரிசளிக்க வேண்டும் என்ற அவரது லட்சியம் நமக்கும் உத்வேகத்தை அளிக்கிறது………

    நாமும் உழவாரப்பணி செய்யும் கோயில்களிலும், ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட மற்ற இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றுகிறது…….. பசுக்களைப் பராமரித்தல் போலவே மரங்களைப் பராமரித்தலையும் நம் தளப் பணிகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்…….எங்களால் இயன்ற ஒத்துழைப்பு நம் தளத்திற்கு என்றும் உண்டு………

  2. சுந்தர்ஜி
    மிகவும் நல்ல பதிவு. திரு.முல்லைவனம் அவர்களின் மகள் படிப்புக்கு நானும் ஹெல்ப் செய்ய காத்திருக்கிறேன். என்னுடைய கரங்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

    ர.சந்திரன்,
    மகாராஷ்டிரா

  3. சுந்தர் அண்ணா..

    நம் தள அன்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

    முல்லைவனம் அவரை பற்றியும் அவரது தொண்டின் மேன்மை பற்றியும் தங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

    தாங்கள் திரு.முல்லைவனம் அவர்களை கௌரவித்தது மிகவும் இனிமையான செயல்.பதிவு முழுமையும் படித்த பின்பு என்னால் ஒன்றும் சொல்ல முடியாததால் நிலை என்று தான் சொல்ல வேண்டும்.முல்லைவனம் அவர்களின் உழைப்பால்,இந்த சமுகம் உயர்வு பெறுவது உறுதி.

    மரங்களை வெறுமனே நடுவதொடு மட்டும் இன்றி , அவற்றை பராமரிக்க,அவர் மேற்கொள்ளும் பணிகளை,வண்ண படங்களோடு பார்த்தபின்பு தான் அவரது நோக்கம் என்னவென்று புரிகிறது.இந்த பணியில் நாமும் சேர்த்து கொள்ள வேண்டும்.இது இன்றைய காலத்தின் தேவையும் கூட.

    கண்டிப்பாக பசுமை சேவையில் நாம் பங்கு பெற்று, ஊர் கூடி தேர் இழுப்போம்.

    திரு முல்லைவனம் அவர்களுக்கும்,அவரது தொண்டின் மேன்மை சிறக்கவும்,அவரது குடும்பம் உயர்வு பெற்றிடவும், எல்லாம் வல்ல எம் பெருமானிடம் பிரார்த்தனை செய்வோம் அண்ணா.

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

    திருச்சிற்றம்பலம்.

    மிக்க நன்றி அண்ணா..

  4. திரு முல்லைவனதிற்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் அவர் ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழவும், மேன்மேலும் அவருடைய பணிகள் சிறக்கவும், அவருடைய மகன் மற்றும் மகளின் வாழ்க்கை சிறப்பான முறையில் அமையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அவருடைய மகளின் கல்விக்கு என்னால் இயன்ற உதவி நல்கிட விரும்புகிறேன்.

    இன்றைய சூழ்நிலைக்கு தேவையான (Green Belt) ஒரு சிறந்த பதிவினை அளித்த தங்களுக்கு மிக பெரிய நன்றி.

  5. Belated Birthday wishes to திரு முல்லைவனம். இந்த பதிவை படிக்கும் பொழுது இந்த உலகை பசுமை உலகமாக மாற்ற அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வியக்க வைக்கிறது, நமது அரசாங்கம் அவரது செயலை கௌரவப்படுத்தி அவருக்கு விருது வழங்க வேண்டும், நாமும் இவரது பசுமை புரட்சி திட்டத்தில் சேர்ந்து நம்மாலான உதவி செய்து இந்த பூமித்தாயை குளிர வைப்போம்,

    இவரது குழந்தைகள் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் . அவரும் வாழ்வில் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா வெங்கட்

  6. Belated birthday wishes to Mr.Mullaivanam!!

    He is doing an amazing service to the Mother Earth. Hats-off to him.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *