காலடி நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமையும், குளிர்ச்சியும்… பூலோக சொர்க்கம் அது.
இந்த தொடரின் நோக்கமே காலடியின் மனதை வருடும் இயற்கை அழகை உங்களிடம் பகிர்ந்துகொள்வது தான். வெறும் புகைப்படங்களாக இல்லாமல், அப்படியே சங்கரரின் வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை சேர்த்து சொன்னால் சுவாரஸ்யமாக இருக்குமே என்பதற்காக அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களை நன்கு அலசி ஆராய்ந்து புதிய தகவல்களை சேர்த்து அளித்து வருகிறோம். இந்த சம்பவங்களை சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், புகைப்படங்கள் நிச்சயம் புதிதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
காலடியில் பூர்ணா நதி தன் போக்கை மாற்றிக்கொண்டு சங்கரன் வீட்டினருகே பாய்ந்த கதையை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஜகத்குரு சந்நியாசம் மேற்கொள்ள காரணாமாக இருந்த மிக முக்கிய நிகழ்வு ஒன்றைப் பற்றியும் அது நடந்த இடம் பற்றியும் பார்ப்போம்.
பற்றவேண்டியவர்களின் காலடியை பற்றினால் நல்லகதி நிச்சயம்!
சங்கரன் இளமையிலேயே மிகப் பெரும் ஞானியாக விளங்கினான். பல நூல்களை கற்றுத் தேர்ந்தான். ஆனால் துறவறம் மேற்கொண்டு பாரதமெங்கும் விஜயம் செய்தால் தானே அவதார நோக்கம் நிறைவேறும்?
எனவே அவரது அவதார நோக்கத்தை நினைவூட்ட அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர் உள்ளிட்ட சப்த ரிஷிகள் எனப்படும் முனிவர் எழுவர் ஒரு நாள் சங்கரன் வீட்டுக்கு எழுந்தருளினர்.
சங்கரனின் தாய் ஆர்யாம்பாள் அவர்களை ஏதோ பண்டிதர்கள் என்று கருதி வரவேற்றாள். “அம்மா.. உங்கள் மகன் சங்கரனின் புலமை பற்றி கேள்விப்பட்டு அவனிடம் உரையாட வந்தோம்!” என்றனர். ஆர்யாம்பாளின் கண்களுக்கு பண்டிதர்கள் போல காணப்பட்ட அவர்கள் சங்கரனின் கண்களுக்கு சப்த ரிஷிகளாக தெரிந்தனர்.
அவர்களை உள்ளே வரவேற்று ஆசனமிட்டு அமரச் செய்தாள். ஆர்யாம்பாள் அங்கு இல்லாத நேரம் பார்த்து, சங்கரனை அவர்கள் அனைவரும் வணங்கி “பெருமானே! நாளுக்கு நாள் நாட்டில் நாஸ்திகம் வலுத்து வருகிறது. தாங்கள் ஆஸ்திகத்தை நிலை நிறுத்தவே அவதாரம் செய்து எட்டாண்டுகள் முடிய இருக்கிறது. தங்களது அவதாரப் பணியை நினைவூட்டவே வந்தோம்” என்றனர்.
“நல்லது. நான் துறவியாகி, வீட்டை விட்டு, நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து உபதேசித்தால் தான் இப்பணி நடைபெறும். இவ்விதம் நான் துறவியாவதற்கு வாய்ப்பாக இந்நிகழ்ச்சிகளை உருவாக்குவேன்.”என்றான் சங்கரன்.
சப்தரிஷிகள் திருப்தியுடன் விடைபெற்றனர்.
இதற்கிடையே அன்னையிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லைஎன்றும் துறவறத்தை தாம் விரும்புவதாகவும் சொன்னான். ஆர்யாம்பாளோ அதற்கு மறுத்துவிட்டாள்.
எனவே அதற்கு வடக்குநாதனின் உதவியோடு திட்டமிட்டு ஒரு நாடகம் நடத்தப்பட்டது.
ஒரு நாள் பூர்ணா நதியில் சங்கரன் நீராடுகையில் முதலை ஒன்று அவனுடைய காலைக் கவ்வி விட்டது. “அம்மா! அம்மா!” என்று அலறினான் சங்கரன். ஆர்யாம்பாளுக்கு செய்தி கிடைத்து பதறி ஓடிவந்தாள்.
தன் உயிருக்குயிரான சங்கரனை முதலை பற்றியிருப்பது கண்டு துடி துடித்தாள். ஆனால் அவளால் எப்படி முதலையின் இறுக்கமான பிடிப்பிலிருந்து குழந்தையை விடுவிக்க முடியும்?
“ஜயோ சங்கர முதலை உன்னை பற்றியிருக்க கையாலாகாத பாவியாக நிற்கிறேனே! சங்கரா நீ புனர்ஜென்மம் எடுத்து வரவேண்டுமே” என்று கூறி கையைப் பிசைந்தபடி நின்றாள் ஆர்யாம்பாள்.
“இல்லையம்மா, என்னைக் காப்பது உன்கையில்தான் இருக்கிறது. இந்தப் பிறவியில் நான் முதலையால் கொல்லப்படவேண்டும் என்பது விதி. ஆனால் இப்போதே சந்நியாசம் ஏற்றுக்கொண்டால் இந்தப் பிறவியே முடிந்து, எனக்கு வேறு பிறவி உண்டாகும். சாஸ்திரப்படி சன்னியாசம் என்பது மறுஜென்மம் போல. அடுத்த பிறவியில் முதலை என்னை எதுவும் செய்ய முடியாது. எனவே இப்போது நான் துறவியாவதற்கு அனுமதி கொடுத்தால் நான் இங்கே இப்போதே சந்நியாசத்தை ஏற்றுக்கொள்கிறேன். முதலை என்னை விட்டு விடும். என்னை பிழைக்க வைப்பது உன்கையில் தான் இருக்கிறது!” என்றான் சங்கரன்.
ஆர்யாம்பாள் “நீ துறவறம் ஏற்க நான் சம்மதிக்கிறேன்” என்று வாக்களிக்க, முதலை காலைவிட்டது.
அடுத்த சில நொடிகளில் அங்கே ஒரு கந்தர்வன் தோன்றி சங்கரனை வணங்கினான்.
“சுவாமி… நான் ஒரு கந்தர்வன். நான் பாட்டுக்கு ஸதா குடித்துக்கொண்டு, எங்கள் ஸ்த்ரீகளோடு ஆடிப் பாடிக்கொண்டு கிடப்பது வழக்கம். ஒருநாள் துர்வாஸ மஹரிஷி வருகிற வழியிலே இப்படிக் கிடந்தேன். அவர் வருவதை லட்சியம் செய்யாமல் முதலை கிடக்கிற மாதிரி போதையில் நான் கிடந்ததைப் பார்த்ததும் அவருக்கு கோபம் வந்துவிட்டது. “முதலையாகப் போகக் கடவாய்!” என்று சபித்து விட்டார்.
உடனே அவர் காலில் விழுந்து அபசாரத்துக்காகக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். மனமிரங்கிய அவர், “சங்கரனின் அவதாரம் ஏற்படும். பூர்ணா நதிக்கு அவர் நீராட வரும்போது அவர் காலை போய்ப் பிடித்துக் கொள்ளு. உனக்கு விமோசனம் கிடைத்துவிடும்’ என்றார். ஆகையால் பல காலமாக உங்களுக்காக காத்திருந்தேன். உங்கள் கால்களை பற்றினேன். எனக்கு சாப விமோசனம் கிடைத்துவிட்டது என்று கூறினான்.
சங்கரன் ஆசி கூற, ஆகாயத்தில் மறைந்தான் அந்த கந்தர்வன்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடம் இன்றும் காலடியில் இருக்கிறது. அங்கு நாம் புனித நீராடியது மறக்க முடியாத சம்பவம். ‘முதலைக்கடவு’ – CROCODILE GHAT என்று அந்த இடத்திற்கு பெயர்.
(பாம்பே ஞானம் அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ நாடகத்தில் மேற்படி முதலை சங்கரன் காலை கவ்வும் காட்சி தத்ரூபமாக காட்டப்பட்டது. மேற்படி காட்சியில் பார்வையாளர்கள் கைதட்டல அடங்க வெகு நேரமானது).
காலடி செல்வோர் அவசியம் பூர்ணா நதியில் நீராடவேண்டும். பரம்பொருளின் ஸ்பரிசம் பட்ட இடமல்லவா?
(அர்த்தமுள்ள பக்தி சுற்றுலாவாக இந்த சம்மருக்கு பேசாம காலடி போய்ட்டு வாங்களேன்… கேரளா அத்தனை குளுகுளு!)
…. பயணம் தொடரும்
=====================================================================
அடுத்து :
காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே? எப்படி ?
புண்ணியனை ஈன்றெடுத்த புனிதத் தாய் ஆர்யாம்பாளின் சமாதி தரிசனம்! (அவர் தகனம் செய்யப்பட்ட இடம்).
இன்னும் பலப் பல!
=====================================================================
An appeal – Help us in our mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
For more details : CLICK HERE.
=====================================================================
Also Check :
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!
காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!
=====================================================================
[END]
முதலைக் கடவு பதிவு அருமையோ அருமை. நாங்களும் அந்த பூர்ணா நதியில் நீராடி இறைவனை தரிசனம் செய்த பேறு பெற்றது போல் உள்ளது.
ஒவ்வொரு படங்களும் அற்புதம். மனதை கொள்ளை கொள்கிறது .
பஜகோவிந்தம் டிராமா போட்டோவை இந்த பதிவுடன் லிங்க் செய்த விதம் அருமை
மகானின் கதையை படிக்க படிக்க பரவசமாக உள்ளது.
அடுத்த பதிவை வெகு விரைவில் அளிக்கவும்.
நன்றி
உமா வெங்கட்
கேரளா தேசம் பயணம் பல அறிய விசயங்களை அள்ளிக்கொண்டு வந்தது, பதிவில் உள்ள புகைப்படங்கள் நிருபிக்கின்றது .மேலும் பல அறிய தகவலுக்காக ஆவலுடன் ….
மனோகர்.
அற்புதமான படங்கள். அருமையான விவரிப்பு.
சுந்தர் அண்ணா..
முதலைக் கடவு பற்றிய பதிவும் , வண்ணப்படங்களும் அருமை..
மிக்க நன்றி அண்ணா..
வணக்கம் சுந்தர். அருமையான புகைப்படங்கள். நேரில் சென்று பார்த்து இருந்தால் கூட இப்படி ரசித்து இருக்க முடியும் என தோன்றவில்லை.அவளவு அழகு புகைப்படங்கள் .நன்றிகள் பல உங்களுக்கு . கேரளா மட்டும் ஏன் நல்ல நீர் வளத்தோடு இருக்கிறது . இயைற்கைய அல்லது வேறு காரணமா.நீண்ட நாட்களாக இந்த கேள்வி என் மனதில் உண்டு.மீண்டும் நன்றிகள்.
அற்புதம். ஸ்ரீமத் ஆதி சங்கரர் வரலாற்றை கேட்டும் படித்தும் தெரிந்து கொண்டுள்ளேன் . தற்போது ஸ்ரீ பஜ கோவிந்தம் மூலம் ஸ்ரீமத் ஆதி சங்கரரின் புகழை போற்றும் பாம்பே ஞானம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அத்வைதத்தை விட சிறந்ததொரு தத்துவமுமில்லை
ஸ்ரீமத் ஆதி சங்கரருக்கு மிஞ்சிய ஒரு குருவுமில்லை