இப்படி ஒரு நிபந்தனையை விதிக்க நம் மன்னனுக்கு ஏன் புத்தி கெட்டது…? தன் மகளுக்கு திருமணம் செய்து பார்க்கும் ஆசையே அவனுக்கு கிடையாதா என்று மக்கள் வருந்தினர். ‘திரயம்பகம்’ என்ற பெயர் கொண்ட அந்த தனுசை கொண்டு வந்து வைத்தவுடன், இத்தனை நாள் எவராலும் வளைக்க முடியாத அந்த தனுசை இப்போது யார் வளைத்துவிடப் போகிறார்கள் என்று எண்ணினர்.
அப்போது சதானந்த முனிவர் என்பவர், ராம லக்ஷ்மனர்களிடம் அந்த சிவதனுசின் வரலாற்றை கூறினார்.
“ஒரு முறை பார்வதியின் தந்தையாகிய தக்ஷன் என்பவன் சிவனை அழைக்காது ஒரு பெரும் யாகத்தை துவக்கினான். தன்னை மதிக்காது தக்ஷன் செய்த யாகத்தையும் அதில் கலந்துகொண்டவர்களையும் அழித்துவிட்டு வருமாறு சிவபெருமான் தனது கண்களில் இருந்து உருவாக்கிய வீரபத்திரரை பணித்தார். தானும் ஒரு மிகப் பெரிய தனுசை எடுத்துக்கொண்டு வேள்விச் சாலையை அடைந்தார். அங்கு தேவர்கள் அனைவரையும் அழித்தார். பின்னர் சினம் தணிந்து அனைவரையும் உயிர்பித்தார். சினம் தணிந்த நிலையில் தன் கையில் இருந்த அந்த பெரிய வில்லை, ஜனகனின் முன்னோர்களில் ஒருவனுக்கு கொடுத்துவிட்டதாக வரலாறு. அதுவே இந்த திரயம்பகம் எனப்படும் சிவதனுசாகும்.” என்று கூறி முடித்தார் சதானந்த முனிவர்.
இதனிடையே சீதையின் அழகைக் கண்டு அவளை மணமுடிக்க விண்ணோர்களும் மண்ணோர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு வந்தனர். ஆயினும் சிவதனுசை வளைப்பவர்க்கே சீதையை மணமுடித்து தருவேன் என்று ஜனகன் கூறிவிட்டமையால் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்து திரும்பினர். பலர் சினம்கொண்டு ஜனகன் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் அனைவரையும் ஜனகன் புறமுதுகிட்டு ஓடச் செய்துவிட்டான்.
தற்போது இராமனை கண்ட நிலையில் ஜனகனுக்கு நம்பிக்கை ஏற்பட சிவதனுசை கொண்டு வர ஏற்பாடு செய்தான்.
இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த விஸ்வாமித்திரர், இராமபிரானை ஜாடையுடன் நோக்க, குருவின் குறிப்பறிந்த ராமன் எழுந்தான். சிவ தனுசை நோக்கி நடந்தான். சிவதனுசு வைக்கப்பட்டிருந்த அந்த பிரமாண்ட பேழையை நெருகினான். தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ராமன் எழுந்து சென்று வில்லை கையில் எடுத்த காட்சியை கண்ட பல பெண்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இராமன் வெல்லவேண்டும் என்று வாழ்த்தினர்.
அவன் எழுந்தது, நடந்தது, வில்லை கையில் எடுத்தது என அனைத்துமே கவிதை என்கிறார் கம்பர்.
இராமன் நடந்து சென்ற அழகை கம்பர் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.
பெரிய காளையும் பொன் மலையான மேருவும் யானையும் வெட்கம் அடையுமாறு சென்றானாம் ராமன். அதாவது இராமன் நடக்கும்போது அவனது பெருந்தோற்றம் கண்டு மேருமலையும். இவனைப் போல மிடுக்கோடு நடக்க முடியாமை பற்றிக் காளையும் யானையும் நாணினவாம்.
தனுசை நோக்கி நடந்து சென்ற ராமன், அதை எடுத்து அதன் ஒரு முனையை காலில் வைத்து, நானை வைத்து இழுத்து பூட்டியதை கூட எவரும் காணும் முன், ஒரு பெரும் ஓசை கேட்டதாம். அடுத்து அந்த சிவதனுசு உடைந்து வீழ்ந்ததைத் தான் அனைவரும் பார்க்கமுடிந்ததாம். இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்துவிட்டனவாம்.
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.
கண் இமை கொட்டினால் இராமன் வில்லையெடுத்து நாணேற்றுவதைக் காணாமற்போய் விடுவோம் என்று கண் கொட்டாது பார்த்தவர்களும் அந்த இராமன் வில்லை எடுத்ததையும். அது முறிந்த ஓசையையும் கேட்டனரே அல்லாமல் அதை நாணேற்றியதைக் காண முடியாதவராயினர் என்பது இதன் பொருள்.
வில் முறிந்த அந்த ஓசையானது, பூமியெங்கும் கேட்டது. மேலுலகத்திலும், பாதாளலோகத்திலும் கூட கேட்டது. விண்ணோர் பூமழை பொழிந்தனர். கடல்கள் எல்லாம் இரத்தினங்களை வாரி இறைத்தன. முனிவர்கள் ஆசி மொழிந்தனர். ஜனக மன்னனோ, என் நல்வினைப் பயனே இன்று இந்த இராமன் உருவில் வந்தது என்று மகிழ்ந்தார். மிதிளையே மகிழ்ச்சி பேரலையில் மூழ்கியது. இந்த நல்ல செய்தியை மற்றவர்களுக்கும் சொல்ல அனைவரும் ஓடினர்.
தசரதன் புதல்வர் என்பார்; தாமரைக் கண்ணன் என்பார்;
புயல் இவன் மேனி என்பார்; பூவையும் பொருவும் என்பார்;
மயல் உடைத்து உலகம் என்பார்; மானுடன் அல்லன் என்பார்;
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்
இராமர் சிவதனுசை வளைத்த இந்த சம்பவத்தை கேட்போர் படிப்போர் அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் பெறுவார்.
* இன்று ராமன் சீதையை கரம் பிடித்த நாள். இந்த பதிவை நேற்று தயார் செய்தபோது இது நமக்கு நினைவில் இல்லை. மேலும் அந்த வாரத்தின் பிரார்த்தனைக்கு இன்னார் தான் தலைமை ஏற்கவேண்டும் இன்ன கதையை தான் அளிக்கவேண்டும் என்றெல்லாம் நாம் முடிவு செய்வது பெரும்பாலும் கடைசி நேரத்தில் தான். ஆனால் இன்று காலை பங்குனி உத்திரத்தின் சிறப்பு பதிவை அளித்தபோது தான் இன்று ராமன் சீதையின் கரம்பற்றிய நாள் என்பதே நினைவுக்கு வந்தது. பங்குனி உத்திரத்தன்று இந்த பதிவு அமைந்தது மிக்க மகிழ்ச்சி. எல்லாம் ராமன் திருவுள்ளம்.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் அர்ச்சகராக சேவையாற்றி வரும் திரு.சேஷாத்ரி பட்டர்.
62 ஆம் அகவையை தொடும் திரு.சேஷாத்ரி பட்டர் அவர்கள் தலைமுறை தலைமுறையாக இராமனுக்கு கைங்கரியம் செய்து வருகிறார். அவரது தந்தை இங்கே இராமனுக்கு பூஜை செய்தவர். தற்போது இவரது மகன், சகோதரி மகன் என அனைவரும் இதே ஏரி காத்த ராமர் கோவிலில் இராமனுக்கு தொண்டு செய்து வருகிறார்கள்.
அர்ச்சகர்களாக இருக்கும் பலர் தங்கள் பிள்ளைகளையும் அதே தொண்டில் ஈடுபடுத்துவது அரிதாகி வரும் சூழ்நிலையில் திரு.சேஷாத்ரி பட்டரின் செயல் நிச்சயம் போற்றுதலுக்குரியது.
இந்த கோவிலில் தந்தைக்கு பூஜைகளில் உதவி செய்யும் உதவியாளராக தனது சேவையை சிறு வயதில் துவக்கிய இவர் படிப்படியாக வளர்ந்து, தனது தகுதியையும் வளர்த்துக்கொண்டு 2002 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயத்தில் முதன்மை அர்ச்சகராக பணியாற்றி வருகிறார் திரு.சேஷாத்ரி பட்டர்.
தனது பணிக்காலங்களில் இராமபிரானின் மகிமையை பல தருணங்களில் உணர்ந்திருப்பதாக கூறுகிறார் திரு.சேஷாத்ரி பட்டர். மழைவரவேண்டி இராமனுக்கு பல சமயம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் அப்படிபப்ட்ட தருணங்களில் மழை பொத்துக்கொண்டு ஊற்றியதாம். ஆதாரப்பூர்வமாக ஒன்றை கூறவேண்டுமென நாம் கேட்டுக்கொண்டபோது 1984 ஆம் ஆண்டு அஞ்சனி தயானந்த் என்பவர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மழைவரவேண்டி செய்த வருண ஜெபத்தின் பலனாக மழை பொத்துக்கொண்டு ஊற்றி, காய்ந்து கிடந்த ஏரி நிரம்பி வழிந்ததாம்.
ஆங்கில கலெக்டருக்கு மட்டுமல்ல… இன்றளவும் சாமானியர்களுக்கு கூட இராமபிரான் தனது அருளை வாரி வாரி வழங்கி வருவதாக கூறுகிறார். இந்த கோவிலுக்கு வந்து இராமனை தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்திய பல குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும், திருமணத் தடைகளால் தவித்த பலருக்கு விமரிசையாக திருமணம் நடைபெற்றதாகவும் கூறினார்.
சென்ற முறை நாம் சென்றபோது அர்ச்சனை செய்யவில்லை. தரிசனம் மட்டுமே செய்தோம். அதை நினைவு கூர்ந்த பட்டர், நம்மை மீண்டும் ஒரு முறை கோவிலுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அது சமயம் சிறப்பு தரிசனமும் அர்ச்சனையும் செய்து வைப்பதாகவும் அதற்கு பிறகு பாருங்கள் உங்களுக்கு ஏற்படும் திருப்பத்தை என்றும் நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார். எனவே விரைவில் மீண்டும் ஒரு முறை இராமனை பிரத்யேகமாக தரிசிக்கவிருக்கிறோம்.
நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி எங்களுக்காக பிரார்த்திக்கவேண்டும் சுவாமி என்று கேட்டுக்கொண்டபோது, நிச்சயம் இராமனின் சன்னதியிலேயே நம் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
==================================================================
இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் அனைவரை பற்றியும் ஒரு சிறு குறிப்பு.
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் திரு.ராஜன் கணேஷ் அவர்களை நீண்ட நாட்களாக நமக்கு தெரியும். நேரத்தை வீணடிக்காது பல அறப்பணிகளை சத்தமின்றி செய்து வருபவர். நமது பணிகளுக்கும் இயன்றபோதெல்லாம் தோள் கொடுத்து வருபவர். இவர் நீண்ட நாட்கள் முன்பாகவே பிரார்த்தனை சமர்பித்துவிட்டார். இருப்பினும், இப்போது தான் அதற்கு வேளை வந்துள்ளது என்று கருதுகிறோம். இவருக்கு ஏரி காத்த ராமர் அருள்புரியவேண்டும் என்று விதி போலும். காரணம் ஏரி காத்த ராமர் புத்திர பாக்கியம் அருள்வதில் வரப்பிரசாதி. அப்படி ஏரி காத்த ராமன் அருளால் சந்தான ப்ராப்தி கிட்டும் பட்சத்தில் அந்த ராமன் பெயரோ அல்லது அன்னை ஜானகி பெயரோ வரும்படி குழந்தைக்கு பெயர் சூட்டவேண்டும் என்று ராஜன் கணேஷ் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். அவரது துயர் தீரும் நேரம் நெருங்கிவிட்டது என்றே கருதுகிறோம்.
அடுத்து பிரார்த்தனை சமர்பித்திருக்கும் நண்பர் புதியவர் என்று தெரிகிறது. நிச்சயம் அவரது தந்தைக்கு நோய் நீங்கி நல்லதே நடக்கும். தேவைப்பட்டால் நமது பத்ராவதி சிவசுப்ரமணிய ஆஷ்ரமம் பற்றிய பதிவை படித்து பயன்பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து பாகம்பிரியாள். நமது தளத்தில் நாம் குறிப்பிடும் பலவிஷயங்களை கூடுமானவரை கடைப்பிடித்து வருபவர். ஆழ்ந்த இறைநம்பிக்கை உள்ளவர். கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவம் தனக்கு தெரியும் என்பதாலேயே இங்கு நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கையை சமர்பித்திருப்பதாக கூறினார். அவரது நம்பிக்கை பொய்க்காது.
இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள அன்பர்கள் அனவரையும் நாம கேட்டுகொள்வது என்னெவென்றால் : உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் (அதற்கு முன்பாகவே கூட) மதுராந்தகம் சென்று இராமனை ஒரு முறை தரிசித்துவிட்டு நன்றி கூறிவிட்டு வாருங்கள். இங்கு ராமர் விக்ரகம் மிகப் பெரியது. சாட்சாத் அந்த சக்கரவர்த்தி திருமகனே நேரில் நிற்பது போலிருக்கும். அவரது அருட்பார்வை பட்ட மாத்திரத்திலேயே நமது தோஷங்கள் அனைத்து விலகி ஓடிப்போகும் என்பது திண்ணம்.
==================================================================
1) Want Santhana Prapthi
Dear friends,
Myself (Rajanganesh) and my wifer (Vidhya) have been longing for a child for almost 11 years now. My wife had miscarriage 3 times.
We humbly request you to kindly pray for us.
Thanks & Regards,
TS Rajanganesh,
Chennai.
==================================================================
2) Father suffering from Pancreatic Cancer
Dear Sundar Sir,
I am visiting your site rightmantra.com for the past 3 months. It’s very useful. Please continue your good work.
I kindly request you to pray for my father R. Subramaniam (62 years). My father is suffering from Stage 4 of Pancreatic cancer. He is suffering from lot of pain and symptoms. He is presently residing in Erode.
Please pray for my father to have painless life.
Thanks,
Mahesh,
Pallikkaranai, Chennai.
==================================================================
3) குழந்தை சரளமாக பேசவேண்டும்!
ரைட்மந்த்ரா ஆசிரியருக்கும் குடும்பத்தினருக்கு என் வணக்கம்.
என் மகன் சிவகனேஷ். வயது 3 ஆகிறது. அவனுக்கு இன்னும் சரியாக பேச்சு வரவில்லை. வார்த்தைகளை சொன்னால் திருப்பி சொல்கிறான். ஆனால் ஒரு மூன்று வயதுக்குரிய குழந்தையின் பேச்சு அவனுக்கு இன்னும் வரவில்லை. இதை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஸ்லோகங்கள், வழிபாடு, ஆலய தரிசனம் முதல் இந்த தளத்தில் கூறப்படும் பலவற்றை நான் நடைமுறைப்படுத்தி வருகிறேன். அது ஆசிரியரும் அறிந்ததே.
என் மகனுக்கு விரைவில் சரளமாக பேச்சு வரவேண்டும். நாங்கள் அகமகிழவேண்டும்.
வாசகர்களை இதற்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
பாகம்பிரியாள்,
தூத்துக்குடி.
==================================================================
பொது பிரார்த்தனை
இராமபிரான் பாதம் பட்ட மதுராந்தகம் ஏரி தூர்வாரி பாதுகாக்கப்படவேண்டும்!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக திகழும் மதுராந்தகம் ஏரி கடந்த 48 ஆண்டுகளாக தூர்வாராததால், தற்சமயம் கோடை வறட்சியால் போதிய நீரின்றி, பயிர் வைத்த விவசாயிகளும், குடிநீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
மேலும் இராமபிரானே ஆங்கிலேயே கலக்டருக்கு காட்சி தந்து பெருமழையின் போது ஏரி உடையாமல் பாதுக்காத்த சிறப்புடையது இந்த ஏரி.
மழைக் காலத்தில் மதுராந்தகம் ஏரியின் நீரைப் பார்க்கும்போது, அகண்டு விரிந்த குட்டிக் கடல் மாதிரி காட்சி அளிக்கும்.
ஆனால் இன்று இந்த ஏரியின் நிலை தெரியுமா?
குப்பைக் கூளங்களும் கழிப் பொருட்களும் கொட்டும் கிடங்கு போலாகிவிட்டது இந்த ஏரி. ஏரியில் நீர்மட்டக் கொள்ளளவு 21.5 அடியில், தற்சமயம் 15 அடி கூட இல்லை. அந்தஅளவுக்கு ஏரி தூர்ந்து போயுள்ளது.
இதன் நீர்மட்டக் கொள்ளளவு 21.5 அடியாகும். பொதுவாக இந்த ஏரி ஐப்பசி, மார்கழி, கார்த்திகை போன்ற மாதங்களில் பெய்கிற வடகிழக்குப் பருவமழையால், நிரம்பி வழியும். ஏரியின் நீர்ப் பாசனக் கால்வாய் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
உத்தரமேரூர், வேடந்தாங்கல் போன்ற ஏரிகளில் பெரும் மழையின்போது வருகிற வெள்ளநீரினால் நிரம்பி வழியும். இதுமாதிரி நிரம்பி வழியும் உபநீர் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. மதுராந்தகம் ஏரியின் நீர் நிரம்பி வழியும் காலங்களில், கல்லாற்றின் வழியாக உபரிநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதி விவசாய மக்களுக்கு மதுராந்தகம் ஏரி நீரினால், 3 போகம் விவசாய பயிர்களை விளைவித்து வந்தனர்.
மழைக்காலங்களில் வழிந்தோடி வருகிற மழைநீர் முறையாக ஏரிக்குச் செல்ல முடியாமல், நீர்வழி கால்வாய்களை பலர் ஆக்கிரமித்துள்ளதால், தடை ஏற்படுகிறது. ஏரியில் அதிக நீர்வரத்து இருக்கும்போது, அதன் நீர் சிறிய கால்வாய் மூலம் அருகில் உள்ள ஏரிகாத்த ராமர் திருக்கோயிலின் குளத்துக்கு வந்து சேரும். ஆனால் அதற்கான பாதைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. எனவே ஏரி மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதிளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற கட்சி வேட்பாளர்கள் தன்னை வெற்றி பெற வைத்தால், முதல் வேலையாக இந்த ஏரியை தூர்வார ஏற்பாடுகளை செய்வதாக வாக்குறுதியை கொடுத்து, தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றபின் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுவர்.
இந்த ஏரியில் நீர் இருந்தால்தான் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 1 மணி நேரமாவது குடிநீரை வழங்க முடியும். தற்சமயம் ஏரி வற்றிவிட்டதால், நகராட்சி சார்பில், முழு அளவில் குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு, ஏரியை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் போன்ற பணிகளை உடனடியாக செய்ய முன்வர வேண்டும்.
நம் இராமபிரான் திருப்பாதம் பட்ட இந்த புனித ஏரி தூர் வாரி முறைப்படி பராமரிக்கப்படவேண்டும். மக்கள் பயன்பெறவேண்டும். இதன்மூலம் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கவேண்டும்.
இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.
=============================================================
Rightmantra.com is running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme. Also ask your near and dear ones to join. Little Drops of Water Make the Mighty Ocean.
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
=============================================================
வாசகர் ராஜன்கனேஷ் – வித்யா தம்பதியினருக்கு விரைவில் சந்தான பாக்கியம் கிட்டி அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை நல்லமுறையில் பிறக்கவும், வாசகர் மகேஷ் அவர்களின் தந்தை திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கனையீரல் புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர் குணமடையவும், வாசகி பாகம்பிரியாள் அவர்களின் மகன் குழந்தை சிவகணேஷ் விரைவில் மடை திறந்த வெள்ளமாய் சரளமாய் பேசவும் பிரார்த்திப்போம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் திரு.சேஷாத்ரி பட்டர் அவர்களின் பகவத் சேவை மேன்மேலும் தொடரவும், சிறப்புற்று திகழவும். அவருக்கு அவரது குடும்பத்தினருக்கு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் இராமபிரான் வாரி வழங்கவும் பிரார்த்திப்போம். அதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் சரித்திர புகழ் பெற்ற, இராமனின் திருப்பதம் பட்ட மதுராந்தகம் ஏரி தூர்வாரப்பட்டு அந்த பகுதி செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 5, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : editor@rightmantra.com Mobile : 9840169215
=============================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
=============================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வட திருநள்ளாறு ஆலயத்தில் பல ஆண்டுகளாக குருக்களாக பகவத் சேவை செய்து வரும் சுரேஷ் சிவாச்சாரியார்
ராமர் சீதா தேவியின் திருமண திருநாளில் சிவதனுசைப் பற்றிய கதையை நம் தளத்தின் மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனை கதைகளை தேடித் தேடி அளிப்பதில் தாங்கள் சிறந்த நிபுணராகி விட்டீர்கள்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு சேஷாத்ரி பட்டருக்கு என் பணிவான வணக்கங்கள்
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசர்களின் கோரிக்கை குருவருளாலும் திருவருளாலும் கண்டிப்பாக நிறைவேறும்.தங்களின் ஏரி காத்த ராமர் கோவில் மறுபடியும் இறை அருளால் நிறைவேற வேண்டும் . மதுராந்தக ஏரியின் இன்றைய நிலைமையை பார்க்க மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. ஏரி வெகு விரைவில் தூர் வாரப் பட வேண்டும்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
மகா பெரியவா சரணம்
நன்றி
உமா வெங்கட்
இராமர் சிவதனுசை உடைத்த கதை அற்புதம். தேனில் ஊறிய பலாச் சுளை எந்த பக்கத்தில் இருந்து சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும் என்பது போல, இராமயணத்தை எங்கேயிருந்து படித்தாலும் அருமையாக இருக்கும்.
இந்த சிவதனுசு கதை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. திரியம்பகம் என்பது அதன் பெயர் என்பது எங்களுக்கு புதிது. தெரியப்படுத்தியமைக்கு நன்றி. இது போன்ற அரிய தகவல்கள் நம் தளத்தில் தான் பார்க்க முடிகிறது.
பெரியவர் திரு.சேஷாத்ரி பட்டர் அவர்கள் தலைமை ஏற்பதால் இன்றைய பிரார்த்தனை பதிவுக்கு இராமயணத்தில் இருந்து கதையை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். அது ராமர்-சீதா திருமணம் நடைபெற்ற நாளான பங்குனி உத்திரத்தன்று அமைந்துவிட்டது உண்மையில் தெய்வச் செயல் தான்.
பிரார்த்தனை பதிவின் ஒவ்வொரு அம்சத்துக்கும் தாங்கள் எந்தளவு மெனக்கெடுகிறீர்கள் முயற்சிக்கிறீர்கள் என்பதை எண்ணும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதன் பலன் பதிவின் தரத்தில் எதிரொலிக்கிறது. தங்கள் பதிவு அனைத்தையும் இரண்டு மூன்று முறை படிக்கத் தூண்டுகிறது. புகைப்படங்களின் நேர்த்தியும் சரி, வார்த்தைகள் கையாளப்படும் விதமும் சரி.
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் கொள்ளை அழகு. தற்போது தான் சென்ற வாரத்து பதிவுகள் ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். தலைமை ஏற்றுள்ள திரு.சேஷாத்ரி பட்டரின் அனுபவங்களை முடிந்தால் தனிப் பதிவாக போடவும்.
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.ராஜன்கனேஷ், வித்யா தம்பதியினர், திரு.மகேஷ் மற்றும் திருமதி.பாகம்பிரியாள் ஆகியோரின் பிரார்த்தனைகள் நிறைவேறி அவர்கள் மேலும் மேலும் அறச் செயல்கள் செய்து இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
மதுராந்தகம் ஏரியின் தற்போதைய நிலைமையை பார்த்தால் நீங்கள் சொல்வது போல கண்ணீர் தான் வருகிறது. நீர்நிலைகள் பூமித் தாயின் கண்கள் என்று கூறுவார்கள். அத்தகைய கண்களை குருடாக்குவது எந்த வகையில் நியாயம்? இருப்பினும் நம்மால் என்ன செய்ய முடியும். பிரார்த்தனை செய்வோம்.
ராம் ராம் ராம்
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
பங்குனி உத்திரமென்றால் வெறும் குலதெய்வ வழிபாடு என்றிருந்தேன். ஆனால் இந்நாளில் தான் நம் இஷ்ட தெய்வங்களின் மணநாள் என்பதை அறிந்து வியப்பு மேலிட்டது. களங்கமில்லா பவுர்ணமி தோன்றும் என்பதைத் தெரிந்து கொண்டேன். பயனுள்ள தகவல்களைத் தந்தமைக்கு நன்றி சுந்தர் சார் !
ஏரி காத்த ராமர் கோவிலின் மகிமை தெரிந்து கொண்டேன்.
பிரார்த்தனை சமர்ப்பித்த அன்பர்கள் வேண்டுதல் குருவருளால் அவர்கட்கு கிட்டும். நாமும் பிரார்த்திப்போம். கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு பட்டர் அவர்களை வணங்குகிறேன். நன்றி!
சிவதனுஷின் வரலாற்றை அறியத் தந்தமைக்கு நன்றி!. இவ்வாரப்பிரார்த்தனைக்குத் தலைமையேற்கும் திரு.சேஷாத்திரி பட்டர் அவர்களுக்கு எனது வணக்கம். ராமர் கோவிலின் திருக்குளம் புதுப் பொலிவைப் பெறவேண்டும். மற்றும் பிரார்த்தனை சமர்பித்துள்ள அனைத்து நண்பர்களின் கோரிக்கையையும் மகாப்பெரியவா அவர்களின் அருட் கடாட்சத்தினால் நண்முறையில் நிறைவேற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
நம் தளத்தில் பிரார்த்தனை சமர்ப்பித்திருக்கும் அனைத்து அன்பர்களின் குறைகளும் நீங்கி நலம் பெறவும், வளம் பெறவும் குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறோம்………..
மதுராந்தகம் ஏரி விரைவில் தூர் வாரப்பட்டு நீர் நிரம்ப வேண்டும்…….. அதன் கரைகள் உடைப்பெடுக்காமல் மீண்டும் நம் ராம லக்ஷ்மணர்களே வந்து காக்க வேண்டும்……….நாமெல்லாம் அதைக் காண வேண்டும்………. கூடவே சீதாப் பிராட்டி வந்தால் நலம்………
வணக்கம் சார்
ராமாயணத்தை முழுவதுமாக படிக்க படிக்க மறுபடியும் படிக்க தோன்றும்.
ராமர் வளைத்தது சிவதனுசு என்பது மட்டும் எனக்கு தெரியும். ஆனால் அது நம் அப்பாவின் கையால் தசரதனின் முன்னோர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அதன் மற்றொரு பெயரும் பெரும்பாலோருக்கு தெரியாது.
வில்லை முறித்த நிலையில் ராமரும் மணமாலையுடன் ஜானகியும் இருக்கும் படம் அருமை.
கோவில் குருக்களும் அவர் வாரிசுகளும் செய்யும் சேவை மகத்தானது. தொடரட்டும் அவர்கள் பணியும் உங்கள் சேவையும்.
இந்த வார கோரிக்கை வைத்துள்ளவர்கள் கோரிக்கை நிறைவேற பிரார்த்திப்போம்.
நன்றி
திரயம்பகம், சிவதனுசு,கார்முகசாலை பற்றிய விபரங்கள் பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிந்திராத நிலையில், அதை பற்றி அழகாகவும்,சுவாரசியமாகவும் விவரைத்தமைக்கு மிக்க நன்றி.
வரப்பிரசாதி இராமனின் பெருமையை தாங்கள் வர்ணனை செய்த விதம், விரைவில் இத்தலத்திற்கு சென்று இராமரை தரிசிக்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது.
தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள்தான் அற்புதம் என்றால், வெளியிடும் படங்கள் அதை விட சூப்பர்
தங்களின், இராமபெருமான் பிரத்யேக தரிசனம் சிறப்பாக அமைய பிரார்த்திக்கிறேன்.
இன்று பாண்டி பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சயனர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பட்டாபிசேக ராமர் தீபாராதனை – தரிசனம்
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஷண்முகநாதர் திருக்கல்யாண உற்சவம்
மேற்கண்ட இரு நிகழ்சிகளிலும் கலந்து கொண்ட பாக்கியம் மிகுந்த மன நிறைவினை தந்தது.
திருக்கல்யாண உற்சவத்தில், நமது தள ஆசிரியர்க்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் நமது தள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிரார்த்தனை குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் யாவும் குருவருளால் நிறைவேற வேண்டுவோம்
Thank you very much sir! A big boost indeed!!
வாழ்க வளமுடன்
ராம் ராம் ராம்
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
சுந்தர் சாருக்கு
நன்றி
சுந்தர் அண்ணா..
இனிய பங்குனி உத்திர திருநாளில் “ராமர் முறித்த சிவதனுசு” பதிவு மிகவும் அருமை.எல்லாம் இறைவன் செயல். இந்த பதிவை படிக்க நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.காரணம் இராமர்-சீதை வண்ணப்படம் மிகவும் அழகு.அந்த வண்ணப்படம் இந்த பதிவை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.
தாங்கள் கூறியது போல.இந்த பதிவை படிக்கும அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கி ஒளி வீசட்டும்.(இராமர் சிவதனுசை வளைத்த இந்த சம்பவத்தை கேட்போர் படிப்போர் அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் பெறுவார்.)
ஜெய் ஸ்ரீ ராம்.
ராம ராம ..ராம.ராம
மேலும் ஏறி காத்த ராமர் கோவிலுக்கும் செல்ல என் மனம் விரும்புகிறது அண்ணா..
இந்த வார பிரார்த்தனைக்கு சமர்ப்பித்தவர்கள் வாழ்வில் இன்பம் பொங்கிட,நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.
குருவே சரணம்.
மகா பெரியவா துணை.
மிக்க நன்றி அண்ணா..
வணக்கம் சுந்தர். அழகான பதிவுக்கு நன்றி. எல்லோர் பிரத்னைகளும் நிறைவேற நானும் பிராத்திக்கிறேன். ஏரியை தூர் வாரும் பணி அந்த ராமபிரான் மனது வைத்தால்தான் நடக்கும் போல் இருக்கிறது. ராம் ராம் ராம் ஸ்ரீ ராம். மனது வை இறைவா. வாழ்த்துக்கள். நன்றி.
அருமையான பதிவு சுந்தர் சார்….பதிவில் வரும் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறும் சிவதனுசை பெற்ற ராமபிரான் அருளால்…….