காமராஜர் அப்போது விருதுநகரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அருகே தான் காமராஜரின் வீடு. எனவே மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவது காமராஜரின் வழக்கம். வீட்டில் அம்மாவோ பாட்டியோ அவருக்கு உணவு பரிமாறுவார்கள். காமராஜரின் பாட்டிக்கு காமராஜர் என்றால் பாசம் அதிகம். அவரை ரொம்பவும் அவருக்கு பிடிக்கும்.
ஒரு நாள் திடீரென காமராஜர், “இனிமே நான் சாப்பிட வீட்டுக்கு வரமாட்டேன். எனக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துவிடுங்கள். நான் ஸ்கூலிலேயே சாப்பிட்டு கொள்கிறேன்” என்றார்.
வீட்டில் அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாட்டியிடம் சென்று காமராஜர் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
“ஸ்கூல் பக்கத்துல தானே இருக்கு வீடு. வந்து சூடா சாப்பிட்டுப் போறா ராசா” என்றார் பாட்டி. ஆனால் காமராஜர் சாப்பாடு கட்டி எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். “இல்லேன்னா எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார்.
இதற்காக வீட்டில் அடியும் வாங்கினார். அப்படியும் காமராஜர் மசியவில்லை.
வேறு வழியின்றி காமராஜரின் பாட்டி அவருக்கு உணவு கட்டிகொடுக்க ஆரம்பித்தார்.
இப்படியே பல நாட்கள் சென்றன. ஒரு நாள் பாட்டிக்கு சந்தேகம் வந்தது. இவன் கட்டிக்கொண்டு போகும் சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிடுகிறானா இல்லையா என்று. ஒரு நாள் மதியவேளையில் சென்று மறைந்திருந்து பார்த்தார்.
மதிய உணவுக்கான மணியடித்ததும் அனைவரும் மரத்தடிகளிலும் பெஞ்சுகளிலும் உட்கார்ந்து சாப்பிட, காமராஜர் கிழிந்த அழுக்கு சட்டை போட்டிருந்த ஒரு சக மாணவனுடன் வெளியே வந்தார். ஒரு ஓரத்தில் அமர்ந்து தனது உணவை அவனுடன் பகிர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.
இதைக் கண்ட அவர் பாட்டியின் கண்கள் குளமாகியது.
நம் குழந்தைக்கு தான் எத்தனை பெரிய மனது. இதை புரிந்துகொள்ளாமல் அவனை அடித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டார்.
காமராஜரிடம் உணவை பகிர்ந்து சாப்பிட்ட அந்த மாணவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அவன் அப்பா கூலி வேலை செய்பவர். சாப்பாட்டுக்கு வழியின்றி தினமும் தண்ணீரை குடித்து பசி போக்கிகொள்பவன். அவனை பார்த்து மிகவும் பரிதாபப்பட்ட காமாராஜர் அவனுக்காக வீட்டிலிருந்து மதிய உணவை கொண்டு வரும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். வீட்டிலும் இது தெரிந்து இருவருக்கும் சேர்த்து உணவை கட்டித் தரலானார்கள்.
இதுவே பிற்காலத்தில் அவர் முதல்வரானபோது மதிய உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த காரணமாக அமைந்தது.
============================================================
ரைட்மந்த்ரா கர்மவீரர் காமராஜர் விருது!
நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற போது காமராஜர் பெயரில் ஒரு விருது அறிமுகப்படுத்தப்பட்டு ஜோலார்பேட்டையை சேர்ந்த திரு.நாகராஜ் அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இப்போது தெரிகிறதா காமராஜர் பெயரில் ஏன் விருது வழங்கப்பட்டது என்று?
மேலும் ஜோலார்ப்பேட்டை நாகராஜ் அவர்களை நேரில் சென்று கௌரவித்து நமது தளத்திற்காக பேட்டி எடுத்து வந்தோம். அப்போது அவருடன் சில மணிநேரங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே முடிவு செய்துவிட்டோம், வரும் ஆண்டுவிழாவில் இவரை கௌரவிக்கவேண்டும் என்று. ஏழைகளின் பசித்துயர் போக்குபவருக்கு பசிப்பிணி மருத்துவன் காமராஜர் பெயரில் விருது வழங்குவது தானே முறை?
எனவே திரு.ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்களுக்கு கர்மவீரர் காமராஜர் விருது வழங்கப்பட்டது.
தன்னலமற்ற சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்பவர்களை ஊக்குவிக்கவும் அவர்கள் சேவையை உலகறியச் செய்வதுமே நமது நோக்கம். மேலும் காமராஜர் போன்றதொரு ஒப்பற்ற தலைவரை அடிக்கடி நினைவு கூரவும் இது வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
(ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்களது சந்திப்பு குறித்த பதிவு விரைவில் இடம்பெறும்!)
============================================================
Also check :
காமராஜரும் ராமராஜ்ஜியமும்! கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!
காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2
எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா? – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL
============================================================
[END]
இனிய மாலை வணக்கம் ………….
மதிய உணவு திட்டம் கொண்டு வர காரணமாக இருந்த காமராஜர் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த திட்டத்தால் பயன்பெரும் குழந்தைகள் ஏராளமானோர். அவர்கள் எல்லோரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்து கொண்டு இருப்பார் தன்னலம் கருதாத உத்தமர் காமராஜர் வாழ்ந்த தமிழகத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நமக்கு பெருமை.
தாங்கள் காமராஜரின் பெயரில் திரு நாகராஜ் அவர்களுக்கு விருது வழங்கியதில் நம் தளத்திற்கு பெருமை என்பதை சொல்லவும் வேண்டுமோ? வாழ்க தங்கள் உயர்ந்த உள்ளம் … வளர்க தங்கள் தொண்டு…. வாழ்த்துக்கள் தாங்களும் ஒரு வகையில் பசி பிணி மருத்துவர் தான். பசுவின் வயிற்று பசியையும் மற்றும் அன்னதானம் முதலானவை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறீர்கள்.
திரு நாகராஜ் அவர்கள் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் .
நன்றி
உமா வெங்கட்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்.
நல்லவேளை பெருந்தலைவர் ஆரம்பித்த இததிட்டம் இன்றளவும் நடந்து வருகிறது.இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
பெருந்தலைவர் திட்டத்திற்கு தோள் கொடுக்கும் திரு நாகராஜ் அவர்களை மரியாதை செய்தது நம் தளத்திற்கு கிடைத்த மிக பெரிய கௌரவம்
சுந்தர் அண்ணா..
பெருந்தலைவர் வாழ்வில் நடைபெற்ற சம்பவம், நெகிழ வைத்து விட்டது.இது போல் வரலாற்று பதிவுகள் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.மிகவும் அக மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி அண்ணா..
வாழ்க வளமுடன்
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
காமராஜ் படத்தில் வரும் இளளயராஜாவின் பாட்டுதான் நினைவு வருகின்றது
அது ஒரு பொற்காலம்
நன்றி
காமராஜர் போன்ற தன்னலமில்லா தலைவர்களை இனி நாம் காண முடியுமா என்ற ஏக்கம் ஏற்படுகிறது. சிறு வயதிலேயே தன் நண்பனுக்காக அவர் உணவை பகிர்ந்து கொண்டது அவரின் கருணையைக் காட்டுகிறது………… வாழ்க அவர் புகழ்…….
கர்மவீரர் காமராஜர் பெயரால் விருது வாங்கிய திரு.நாகராஜ் அவர்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்………..
வணக்கம் சுந்தர். இது போன்ற தலைவர்களை காண்பது அரிதுதான். ஆனாலும் அவரவர் சக்கித்கு உட்பட்டு நல்ல காரியங்களை செய்பவர்கள் இருகிறார்கள் என்பதிற்கு உங்கள் பதிவுகளில் வரும் நல்லவர்களே சாச்சி . நன்றி