Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > ‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

print
ன்று செவ்வாய்க்கிழமை. முருகனுக்கு உகந்த நாள். இன்னும் இரண்டொரு நாளில் பங்குனி உத்திரம் வேறு வருகிறது. முருகப்பெருமான் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பதிவை அளிக்க ஆசை. கைவசம் இருக்கும் பதிவுகள் பல (வள்ளிமலை, காங்கேயநல்லூர் etc.) பலமணி நேரம் உழைப்பு தேவைப்படுபவை.

Vadapalani Muruganஇதனிடையே… சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், பா.தீனதயாளன் எழுதி(மிரட்டி)யிருக்கும் ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற தேவரின் வாழ்க்கை வரலாற்று நூலை தற்போது படித்து வருகிறோம். இந்த நூலிலிருந்து ஏற்கனவே ஒரு சிறிய சுவாரஸ்யமான பகுதியை சமீபத்தில் பகிர்ந்திருந்தது நினைவிருக்கலாம். (“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”)

அப்போது ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாயங்கள் மட்டுமே படித்திருந்தோம். சமீபத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்தோம். தேவரைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் & அவரைப் போன்றதொரு முருகபக்தி நமக்கும் வாய்க்காதா என்கிற ஒரு பேராசை தான் காரணம்!

ஆனால் என்ன சொல்வது? எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? இப்படி ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. இனியும் படிக்கப்போவதில்லை என்னுமளவிற்கு படிக்க படிக்க பல இடங்களில் வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிப்பு, நெகிழ்ச்சி, கண்ணீர், கருணை, உவகை – இப்படி பல வித உணர்ச்சிகள்.

Sandow Chinnappa Devarஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. குறிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறவிரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் படித்து முடிக்கும் வரை நூலை கீழே வைக்கமாட்டீர்கள். அந்தளவு ஒரு பக்கா மாஸ் கமர்சியல் படம் போல விறுவிறுப்பு. இத்தனை சிறப்பாக எழுதிய நூலாசிரியர் திரு.பா. தீனதயாளன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த ஒரு நூலில் தான் எத்தனை எத்தனை வாழ்வியல் நீதிகள்! கடவுள் நம்பிக்கை + தன்னம்பிக்கை இரண்டும் ஒருவருக்கு வாழ்வில் எந்தளவு அவசியம் என்பதை படம் பிடித்துக் காட்டும் வாழ்க்கை தேவருடையது.

இரக்கம், பணிவு, விடாமுயற்சி, தைரியம், மனவுறுதி, தொழில் பக்தி, நேர்மை, ஒழுக்கம் – எல்லாவற்றுக்கும் மேல் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை. இது தான் சாண்டோ சின்னப்பா தேவர்.

காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்த தேவருக்கு அப்போது மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆறு ரூபாய்! அதன் பின்னர் இரும்புப் பட்டறையில் ஒன்பது ரூபாய் சம்பளம். சகோதரரின் தேகப் பயிற்சி சாலையில் குஸ்தி பயிற்சியில் ஈடுபாடு. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி என்று ஓடிய வாழ்க்கை. ஆனால் என்ன? கடின உழைப்பும் கூடவே கடவுள் நம்பிக்கையும் இருந்தால் எப்படிப்பட்ட நிலையில் ஒருவர் இருந்தாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாகிவிட்டாரே!

சூதும், வாதும், சூழ்ச்சியும், குழிபறிப்பும், புறம்பேசுதலும், மதுவும் மங்கையும் புரையோடிப்போன திரையுலகில் இவரைப் போன்ற ஒருவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வர முடிந்ததென்றால் அது இறைவனின் அருள் தான். முருகனையே எண்ணி வாழ்ந்த அவருக்கு முருகன் எப்படியெல்லாம் உதவி செய்தான் என்பதை படிக்கும்போது உள்ளம் சிலிர்க்கிறது. பக்தி பெருகுகிறது. (அதில் ஒரு சில துளிகள் தான் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன.)

கந்தன் அருள் அவருக்கு பரிபூரணமாய் இருந்த ஒரே காரணத்தினால் தான், அதள பாதாளங்களும் அவருக்கு மலர்ப்படுக்கைகளாக மாறின. அவரது வீழ்ச்சியை காண துடித்தோர் அவரது எழுச்சியை கண்டு புகைந்தனர். அவரது விலாசத்தையே பறித்துவிடும் என்று கருதப்பட்ட படம் அவருக்கு இந்தியா முழுக்க வசூலையும் புதிய அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்தது.

துன்பம் வந்த போது ஓடிச் சென்று அந்த தண்டாயுதபாணியின் பாதத்தை பற்றியவர், இன்பம் வந்தபோது அவனை மறக்கவில்லை. அவனுக்கு திருப்பணி செய்து மகிழ்ந்தார். அது தான் அவர் நமக்கு தரும் மெசேஜ்.

திரைத்துரையில் தான் சந்தித்த ஒவ்வொரு சோதனையையும், “முருகா… நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை?” என்று சொல்லியே சாதனையாக மாற்றினார். இது நாம் வாழ்வில் வெற்றிபெற பின்பற்றவேண்டிய மிகப் பெரிய வழிமுறை.

ஒழுக்கத்தையும் கடவுளையும் துணைக்கு வைத்துக்கொண்டு நீங்கள் நடக்கும்போது எதைப் பற்றி கவலைப்படவேண்டும்? இது தான் தேவரின் வாழ்க்கை கூறும் ஒன்லைன் மெசேஜ்.

“வாழ்க்கையை அனுபவிக்கனும்பா… வாழ்க்கை வாழ்வதற்கே” என்று சொல்லிக்கொண்டு தனிமனித ஒழுக்கங்கள் காற்றில் பறக்கவிடப்பட்ட ஒரு தருணத்தில் நெற்றி நிறைய விபூதி குங்குமத்தோடு திரையுலகில் வலம் வந்தவர் தேவர். நடிகையருக்காக எதையும் இழக்கத் தயாராய் இருந்தவர்கள் மத்தியில் தேவரின் அறைக்கு நடிகைகள் வரவே கூடாது என்கிற தடை கூட அவர் இருந்த காலத்தில் அமலில் இருந்தது. அவரை சந்திக்கவேண்டும் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அல்லது கல்யாண வீடுகளில் நான்கு பேருக்கு நடுவே தான் பார்க்க முடியும். நடிகையருடன் தனிமைச் சந்திப்பு அவர் அகராதியில் கிடையவே கிடையாது. இதெல்லாம் இப்போ திரையுலகில் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று.

அவரைப் பற்றி நம் தளத்தில் பகிர்வதில் பெருமைப்படுகிறோம்.

வாழ்க தேவர் புகழ்! ஓங்குக கந்தன் அருள்!!

To buy this book :

http://sixthsensepublications.com/index.php/categories/self-improvement/biography-success-stories/santo-chinnapa-thevar.html

=============================================================

தேவரின் வரலாற்றில் மூழ்கியெடுத்த முத்துக்கள் சில…

(இதை நாம் முதலில் இந்த பதிவில் அளிப்பதாக இல்லை. ஆனால், படித்தபோது நம்மையுமறியாமல் கண்களில் நீர் துளிர்த்தது. எனவே தான் இங்கே பகிர்கிறோம்.)

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

தேவரின் நான்காவது படம்  ‘வாழவைத்த தெய்வம்’. ஜெமினி கணேசன் – சரோஜா தேவியை வைத்து எடுத்த மிருக வாசனையற்ற முழு நீள குடும்பச் சித்திரம். வசனம் எழுத புதியதாக ஒருவருக்கு வாய்ப்பளித்தார் தேவர். ஏ.எல்.நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அவர். அப்பா தஞ்சையில் தமிழ் ஆசிரியர். சொந்த ஊர் திருவாரூர். ஆரூர்தாஸ் என்கிற பெயரில் ‘ஸ்ரீராம பக்த ஹனுமான்’ போன்ற டப்பிங் படங்களுக்கு கதை எழுதி வந்தார்.

cp_12_Vazhavaitha__1454563eஆரூர்தாஸின் பணிவு தேவருக்கு மிகவும் பிடித்துப் போனது. வசனம் எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினார். எழுதியவற்றை படித்துக் காட்டச் சொன்னார். ஆரூர்தாஸின் ஒலிச்சித்திரம் ஆரம்பமானது.

‘எலிபன்ட் பாய்’ என்கிற ஆங்கில சினிமாவை தமிழ் படுத்த தேவர் விரும்பினார். தனது லட்சியப் படமாக அதை அறிவித்தார். ஆனால்… துட்டு? கிடைக்கவில்லை. ஒவ்வொரு நயா பைசாவுக்கும் கஷ்டப்படவேண்டியிருந்தது. ஒழுங்காக சம்பளம் வராததால் யூனிட் ஆட்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.  குறிக்கோள் நிறைவேறுமா அல்லது குப்புற விழுந்துவிடுவோமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. தேவர் கவிழ்வதை காண கோடம்பாக்கமே ஆவலோடு காத்திருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் தன் நெஞ்சுக்குள்ளேயே குடியிருக்கும் குமரக் கடவுள் தன்னை கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது.

ஜெமினி கணேசன், ஆரூர்தாஸை ‘பாசமலருக்கு’ கதை வசனம் எழுத அழைத்தார். தேவரிடம் எப்படி சொல்வது? ஆரூர்தாஸ் சங்கடத்தில் நெளிந்தார். ‘அறிமுகப்படுத்திய என்னை விட உனக்கு சிவாஜி முக்கியமா?’ என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது?

தேவரோ குன்னூருக்கு கூப்பிட்டார். அவுட்டோர் லொக்கேஷனுக்கு ஏற்றபடி கதை எழுதச் சொன்னார். யானைகளை எப்படி பிடிக்கிறார்கள் என்பதை நிஜமாகவே படமாக்க எண்ணினார் தேவர். முழுக்க முழுக்க காட்டு மிருகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

தேவர் திட்டினால் திட்டட்டும் என்று பாசமலர் வாய்ப்பு பற்றி கூறினார் ஆரூர்தாஸ்.

‘என்ன தாஸு இப்போ வந்து இப்படிச் சொல்றே? முதுமலை சீனிவாஸ நாயுடு எஸ்டேட்ல அவ்வளவு ஏற்பாடும் பண்ணிட்டேன். யானைக்கு குழி தோண்டி வெச்சிருக்கு. இப்ப புது கதாசிரியருக்கு எங்கே போறது?’

‘பரவாயில்லண்னே. எனக்கு பாசமலர் வேண்டாம். யானைப் பாகன் போதும்.’

‘அப்படிச் சொல்லாதே தாஸு. சிவாஜிக்கு எழுத மாட்டோமான்னு அவனவன் தவம் கிடக்குறான். ஜெமினியே உன்னை சிவாஜிகிட்டே அறிமுகம் செஞ்சி வெச்சிருக்காரு. பீம்சிங் பெரிய டைரக்டர். அது உனக்கு ஒரு பெரிய கொடுப்பினை. போ, அங்கே முதல்ல வேலையை நடத்து. நீ திரும்பி வர்றதுக்குள்ளே நான் ரெண்டு படம் முடிச்சிடுவேன்.’

ஆரூர்தாஸுக்கு பயமும் ஆனந்தமும் ஒரு சேர வந்தது. ‘அண்ணே இப்போ சிவாஜிக்கு எழுதலேண்ணா இன்னொரு வாய்ப்பு வரும். உங்க மனசை நோகடிக்கிறது பாவம்.’

தேவருக்கு கண்களில் கண்ணீர் ஊறியது. திரை உலகில் எப்போதாவது தான் ‘நன்றி’ காட்டும் அதிசய சம்பவங்கள் நடக்கின்றன.

‘தாஸு நீ குடும்பக் கதை எழுதுறதுல கெட்டிக்காரன். இது ஜங்கிள் பிக்சர். உனக்கு என்ன பெரிசா சந்தர்ப்பம் இருந்துடப்போவுது. பாசமலர் மூலமா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையலாம். நான் இருக்கேன். எனக்கு அடுத்த படம் எழுது.’

தேவர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

=============================================================

எல்லாம் உன்னால… உன் கருனையால நடந்தது முருகா!

சினிமா உலகம் இப்போது போல அப்போதெல்லாம் கிடையாது. முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கிடைப்பது குதிரைக்கொம்பு. ஒரு படத்தில் ஓஹோவென வந்து அடுத்தப் படத்திலேயே சவக்குழிக்கு போன தயாரிப்பாளர்கள் அதிகம்.

Haathi mere Saathiமிகவும் கஷ்டப்பட்டு ராஜேஷ் கன்னாவை ஒப்பந்த செய்து ஹிந்தியில் தேவர் முதன் முதலில் ‘ஹாத்தி மேரா சாத்தி’ எடுத்த நேரம் அது. அதன் தமிழ் பதிப்பு ‘நல்ல நேரம்’. (தேவர் ‘ஹாத்தி மேரா சாத்தி’ எடுத்த கதையை சொல்லவேண்டும் என்றால் அதற்கு தனியாக இரண்டு மூன்று பதிவுகள் போடவேண்டும். அத்தனை விறுவிறுப்பு, சுவாரஸ்யம், நீதி அதில்!)

வாஹினி ஸ்டூடியோ. ‘நல்ல நேரம்’ ஷூட்டிங். தேவர் பம்பரமாய் சுழன்றபடி இருந்தார். ரிக்ஷாக்காரன் வெற்றி, தமிழ் சினிமாவுக்கே புத்துணர்ச்சியை கொடுத்திருந்தது. எங்கும் தி.மு.க. வி.ஐ.பி.க்களின் நடமாட்டம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற தி.மு.க. மு.கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்திருந்தது.

1971 இன் வைகாசித் திங்கள். ஸ்டூடியோவின் ஒன்பதாவது தளத்தில் எம்.ஜி.ஆரோடு உட்கார்ந்திருந்த தேவர் கூழையும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

MGR Devar‘முருகா நம்ம படத்துக்கு நல்ல நேரம்னு டைட்டில் வெச்சாலும் வெச்சோம் எல்லாமே நல்லபடியா நடக்குது. மறுபடியும் எம்.எல்.ஏ. ஆகிட்டீங்க. ரிக்ஷாக்காரனே ஆறு மாசத்துக்கு ஒடும்போலருக்கு. நீங்க ஞாபகம் வெச்சிக்கோங்க. நல்ல நேரம் மார்ச் 10, 1972 ரிலீஸ்.’

எம்.ஜி.ஆர். மெலிதாக சிரித்தார். ‘வள்ளி பிலிம்ஸ்ல ‘சங்கே முழங்கு’ வரணும்கிறாங்க. ‘ஒரு தாய் மக்கள்’ ஏழெட்டு வருஷமா காத்திருக்கு. கனகசபை செட்டியார் ‘ராமன் தேடிய சீதை’ ரிலீஸ் பண்ணனும்கிறார். ஜெமினில ‘நீரும் நெருப்பும்’ வந்தாகனும்னு சொல்றாங்க. இன்னிக்கி நீங்க இத்தனை யானைகளை கட்டி தீனி போடுற ப்ரொட்யூசர். இந்தி படமெல்லாம் எடுக்குறீங்க. தேவர் சொல்லை தட்டமுடியுமாண்ணே?’

எம்.ஜி.ஆரின் கேலிப் பேச்சை மிகவும் ரசித்தார் தேவர். ‘ஹாத்தி மேரா சாத்தி’ ஹிந்தியில் மிகப் பெரும் வெற்றி பெறும் என்று கணித்தார் எம்.ஜி.ஆர். எனவே தேவரிடம் போனார். உடனே கால்ஷீட் தந்தார். அதுவே ‘நல்ல நேரம்’ ஆகிக்கொண்டிருந்தது. எல்லாம் தெய்வச் செயல்.

இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது தந்தி சேவகர் ஒருவர் தயங்கியபடி தூர நின்றார். எம்.ஜி.ஆர். அவரை கவனித்துவிட்டார். தேவரிடம் சுட்டிக்காட்டினார். ‘சண்முகம், அந்த தந்தி யாருக்கு பாருங்க’

கடவுளைத் தரிசிப்பது போல எம்.ஜி.ஆரை பார்த்தபடி இருந்தார் தந்தி ஊழியர். தந்தி தேவருக்குத் தான். ராஜேஷ் கன்னாவிடமிருந்து.

தந்தியின் வாசகங்களை மீண்டும் மீண்டும் தேவர் படிக்கச் சொன்னார். முருகனின் கந்தர் சஷ்டி கவசம் போல வாசிக்க வாசிக்க இனித்தது.

////முருகன் ஒருபோதும் ஏமாற்றமாட்டான். தேவரை அவன் ஏமாற்றவில்லை. ‘ஹாத்தி மேரா சாத்தி’ பம்பாயில் முதல் வார வசூல் மட்டும் ரூ.7,06,345/-. இந்தியாவில் சினிமா தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை எந்தப் படமும் இப்படி வசூல் ஆனதில்லை. வாசனுக்கு சந்திரலேகா எப்படியோ தேவருக்கு ஹாத்தி மேரா சாத்தி. சென்னை வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன். – ராஜேஷ் கன்னா’////

தேவரது கருப்பு நிற செவ்ரோலேட் அடுத்து நின்ற இடம் வடபழனி ஆண்டவர் சன்னதி. ‘எல்லாம் உன்னால… உன் கருனையால நடந்தது முருகா! உன் கோயில்ல ஒரு மண்டபம் கட்டித் தர்றேன் முருகா!’

இதற்கிடையேயே எம்.ஜி.ஆரின் ‘நம் நாடு’, ஹிந்தியில் ‘அப்னா தேஷ்’ என்கிற பெயரில் தயாரானது. அதன் படப்பிடிப்புக்கு ஏ.வி.எம். வந்தார் ராஜேஷ் கன்னா. அவரை ‘நல்ல நேரம்’ செட்டில் இருந்த எம்.ஜி.ஆர் தேடிச் சென்று பாராட்டினார். தேவர் தன் பங்குக்கு மிகப் பெரிய மாலையை ராஜேஷ் கன்னாவுக்கு போட்டு அழகு பார்த்தார். அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

Devar Rajesh Kanna

ஏ.வி.எம். செட்டியார் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. கல்காத்தாவில் ‘ஹாத்தி மேரா சாத்தி’க்கு கிடைத்த வரவேற்பு கனவிலும் யாரும் எதிர்பார்க்காதது. அங்கு என்பது லட்சத்தை கடந்து வசூல் குவிந்தது. காண்பவர்களிடமெல்லாம் ‘தேவர் பெருமை’ பேசினார் செட்டியார்.

மே 14, 1971 இல் வெளியான ‘ஹாத்தி மேரா சாத்தி’, இந்தியா முழுவதும் வருடக் கணக்கில் ஓடியபடி இருந்தது. தேசிய கீதத்துக்கு அடுத்தபடியாக சிறுவர்கள் ‘சல் சல் மேரே ஹாத்தி’ பாடி மகிழ்ந்தார்கள்.

‘ஹாத்தி மேரே சாத்தி’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றியின் காரணமாக அதுவரை ‘காளை’ மாட்டுடன் காணப்பட்ட தேவர் பிலிம்ஸ் எம்பளம் ‘யானை’க்கு மாறியது. புதிய எம்ப்ளத்தோடு வெளியான ‘நல்ல நேரம்’ சக்கை போடு போட்டது.

1973 ஜனவரியில் மலேசியாவில் உள்ள பினாங் மாகாணத்தில் ‘ஹாத்தி மேரா சாத்தி’ வெளியானது. கீழ்த்திசை நாடுகளில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் என்கிற பெருமையை பெற்றது.  அத்தனை பெரிய வெற்றியை பெற்ற தேவர் அலட்டிக்கொள்ளவேயில்லை. அடுத்து பசுவை வைத்து படம் எடுக்க ஹோசூர் விரைந்தார். அது தான் ‘கோமாதா எங்கள் குலமாதா’.

=============================================================

ஒரு புகைப்படத்தின் பின்னே…

மேற்படி சம்பவத்தை படிக்கும்போது வடபழனி ஆண்டவன் கோவிலில், தேவர் தான் முருகனிடம் வாக்களித்தபடி மண்டபம் கட்டியிருப்பாரா? கட்டியிருந்தால் அதை புகைப்படம் எடுத்து வந்து நம் தளத்தில் அளித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. எதையும் ஆதாரப்பூர்வமாக மேலும் சுவாரஸ்யமாக அளிப்பது தான் நமது பாணி என்று உங்களுக்கு தெரியுமே…. எனவே இன்று காலை அலுவலகம் வரும் முன்பு வீட்டிலிருந்து நேரே வடபழனி கோவிலுக்கு விட்டோம் ஜூட்.

Devar Vadapalani Temple 5

நம் கோவில்களில் சகலவித குற்றங்களும் மிக மிக ஈஸி. ஆனால் புகைப்படம் எடுப்பது தான் அத்தனை கஷ்டம். காமிராவை கையில் எடுத்து ஃபோகஸ் செய்வதற்குள் எங்கிருந்தாவது சவுண்டு வரும். எனவே ஒருவேளை தேவர் மண்டபம் கட்டியிருந்தால் கூட அதை எப்படி புகைப்படம் எடுப்பது என்று யோசித்தோம். கூட்டமும் பணியாளர்களும் அதிகம் மிக்க வடபழனி போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் புகைப்படம் எடுப்பது அத்தனை சுலபமல்ல.

நமது நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் காமிராவை பறித்துக்கொண்டு அடாவடி செய்தால் என்ன செய்வது? சில சமயம் அனுமதி பெற்று படம் எடுக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. நூற்றில் ஐந்து சதவீதம் கூட வாய்ப்பில்லை.

‘வருவது வரட்டும் பார்த்துவிடுவோம் ஒரு கை. தண்டாயுதபாணி துணையிருக்க என்ன கவலை…?’ என்று மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த வடபழனி ஆண்டவன் மீது பாரத்தை போட்டுவிட்டு இன்று காலை கோவிலுக்குள் நுழைந்தோம்.

Devar Vadapalani Temple 1

கோவிலில் லக்ஷார்ச்சனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சரியான கூட்டம். அங்கே இங்கே நின்று நோட்டம் விட்டோம். தேவர் உண்மையில் மண்டபம் ஏதாவது கட்டினாரா? அப்படி கட்டியிருந்தால் அது பற்றிய கல்வெட்டோ அறிவிப்போ இருக்குமா? சுற்றும் முற்றும் பார்த்தோம். மூலவரின் சன்னதிக்கு எதிரே உள்ள பிரதான நுழைவாயிலிலேயே அந்த கல்வெட்டு கண்ணில் பட்டுவிட்டது.

Devar Vadapalani Temple 2

“ஆஹா.. ஆஹா…” மனம் குதூகலித்தது. தேவர் உண்மையில் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார். அவர் பக்திக்கும், நன்றி மறவா நல்ல குணத்திற்கும் தலை வணங்கினோம். மானசீகமாக அவருக்கு நன்றி சொன்னோம்.

எங்கிருந்தோ தைரியம் வந்தது. எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. நேராக சென்று அதை காமிராவை வைத்து படமெடுத்தோம். ஓரிரண்டு படங்கள் எடுத்திருப்போம். அடுத்த படம் எடுக்கும்போது, கீழிருந்து ஒரு சவுண்டு. லட்சார்ச்சனைக்கு அமர்ந்திருந்த ஐயர் ஒருவர் “போட்டோல்லாம் எடுக்கக்கூடாது இங்கே!”

“அதில்லை சாமி… தேவர் மண்டபம் கட்டினதா கேள்விப்பட்டோம். அதை ஜஸ்ட் ஒரு படம் எடுக்க…” நாம் முடிப்பதற்குள் சவுண்டு அதிகமானது.

“அதெல்லாம் எதுக்கும் எடுக்கக்கூடாது சார்….”

அவரிடம் நம் நோக்கத்தை  புரியவைக்க முடியாது. அவரும் அதை கேட்கும் மனநிலையில் இல்லை. இதற்கு மேல் இங்கே நிற்பது ஆபத்து. இரண்டு படங்கள் எடுக்க முடிந்தததே முருகன் கருணை தான்.

Devar Vadapalani Temple 3

கோவிலை சுற்றி வந்தோம். பிரகாரத்தில் இருந்து ஓரிரு படம் எடுத்தோம். யார் எங்கேயிருந்து சவுண்ட் விடுவார்கள் என்பதே நமது அச்சமாக இருந்தது.

விநாயகருக்கு ஒரு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தோம்.

அதுவரை சற்று படபடப்பாக தான் இருந்தது. வெளியே வந்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

வெளியே வந்து கோபுரத்தை படமெடுக்க முற்பட்டபோது, வேறொரு பிரதான விஷயம் கண்ணில் பட்டது. முருகன் ஏன் இன்று வரவழைத்தான் என்று அப்போது தான் புரிந்தது. (அதற்கு பிறகு நாம் அங்கு பத்து நிமிடங்கள் செலவிட்டது தனிக்கதை! விபரங்கள் வேறொரு பதிவில்!)

Devar Vadapalani Temple 4

இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால், இங்கு நீங்கள் காணும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் ஒரு மிகப் பெரிய ரிஸ்க் & உழைப்பு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். எது ஒன்று மிகச் சுலபமாக கிடைக்கிறதோ அதன் அருமையை எவரும் உணர்வதில்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டினாலாவது தூங்குவது போல நடிக்கும் சிலர் உணர்வார்களா என்கிற ஒரு வித ஏக்கம் தான் காரணம். மேலும் நமக்காக வாதாட யாருமேயில்லாத நிலையில், நாமே நமக்கு வழக்கறிஞர் பணியையும் செய்யவேண்டியிருக்கிறது.

மேலும் நூலை பார்த்து இந்த பதிவில் இடம்பெற்றிருந்த இரண்டு சம்பவங்களை நாம் தட்டச்சு செய்து தந்திருந்தாலும் அதில் விடுபட்ட சில முக்கிய விஷயங்களை சேர்த்து, மூன்று வெவ்வேறு பகுதிகளை தொகுத்து கோர்வையாக்கி தந்திருக்கிறோம். நன்றி!

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்

மருதமலை மாமணியே முருகய்யா
‘தேவரின்’ குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா!

(‘தெய்வம்’ படத்திற்கு தேவரை மனதில் வைத்து கண்ணதாசன் எழுதியது.)

=====================================================================

இன்னும் நீங்கள் நம் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேரவில்லையா?

இந்த உலகில் நல்லதை விதைக்க, கை கொடுங்கள். இது உங்கள் கடமையல்லவா?

We are running full-time. Give us your hand. Help us to serve you better – Join our ‘Voluntary Subscription’ scheme. Also ask your near and dear ones to join. 

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=============================================================

Also check :

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=============================================================

[END]

11 thoughts on “‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

  1. பதிவின் intro அருமை. முழு பதிவையும் படித்து முடித்ததும் நிஜமாகவே கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளி. தேவரின் நல்ல குணம் அவரை இந்த அளவு நாடு போற்றும் உத்தமராக உயர்த்தி இருக்கிறது. தேவர் வரலாற்றின் ஒவ்வொரு முத்துக்களும் ஜொலிக்கிறது.

    தங்களை முருகன் தேவரின் பதிவு அளிக்கும் நோக்கில் தங்களை அழைத்து ஒரு அதிசயத்தை நிகழ்த்த அழைத்து இருக்கிறார் என நினைக்கிறேன், suspense முடித்து எங்களை நிறைய எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி விட்டீர்கள். இதை பற்றிய பதிவை வெகு விரைவில் அளிக்கவும். ஏனெனில் தொடரும் ….. என்று போட்டு விட்டு தொடராமல் போகிறது. நானும் வடபழனி கோவில் அந்த கல்வெட்டை பர்ர்த்து இருக்கிறேன்

    ஒரு புகைப்படத்தின் பின்னே … என்ற பாரா தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் எழுதி தங்களின் உணர்வை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள் .

    இந்த பதிவு தளத்தின் ஜொலிக்கும் மணி மகுடம்.

    நன்றி
    உமா வெங்கட்

  2. சுந்தர் அண்ணா..

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ..

    முருகனுக்கு உகந்த நாளில், சாண்டோ சின்னப்பா தேவர் வரலாறு மூலம் முருக பக்தி பற்றி
    தெரிந்து கொண்டேன்.

    மிக்க நன்றி அண்ணா..

  3. சாண்டோ சின்னப்பா தேவர் என்கிற முருக பக்தரைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொண்டோம்…….. தலைப்பில் உள்ள பாடல் அவருக்காகவே பாடியது போல் உள்ளதே……..ஒரு வேளை அவரே எழுதிய பாடலா?

    நம் தளத்தில் அளிக்கும் பதிவுகளுக்காக தாங்கள் எடுக்கும் சிரத்தை வியக்க வைக்கிறது……….. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்……….

  4. வாழ்க வளமுடன்

    வேலை வணங்குவதே வேலை
    :- வாரியார் சுவாமிகள்

  5. மிக அருமை , தேவரின் முருக பக்தி வியக்க வைக்கிறது . தேவரின் முருக பக்தி தெரியும் ஆனால் இந்த அளவுக்கு தெரியாது . தங்கள் பதிப்பு மூலம் நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம். மனிதன் வாழ்வின் ஒரு முன் உதரணமாக திரு தேவர் அவர்கள் வாழந்து
    உள்ளார் .நாமும் அவரை போல் வாழ்கை வாழ மேற்கொள்வோம்

  6. வணக்கம் சுந்தர் சார்

    அணைத்து பதிவுகளும் அருமையோ அருமை

    எங்களுக்ககா நீங்கள் படும் கஷ்டம் எப்படி புரியுமால் இருக்கும் சொல்லுங்க சார்..

    நன்றி..

  7. சுந்தர்ஜி
    நல்ல பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
    R சந்திரன்
    மகாராஷ்டிரா

  8. இன்பமோ, துன்பமோ வெற்றியோ, தோல்வியோ அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தேவரின் மனநிலையை நாம் பின்பற்றுவது மிக கடினம் என்றாலும், முடிந்தளவுக்கு முயற்சித்தால் மனம் பண்படும்.

    பாமரர்களையும் குழந்தைகளையும் எளிதில் கவரும் வகையில் அவர் எடுத்த புராண படங்கள் ஆன்மிகம் தழைக்க உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையல்ல

  9. Good Afternoon Shri Sundar Sir

    I was not able to find any article about Panguni Uththiram written by you. I could not find any article about this Maha Sacred Day in others’ blogs, like “Sage of Kanchi, Ramani’s Blog and Balhanuman’s.

    Perhaps I did not go through your articles carefully. (my apologies)

    If time permits, could you please write an article about Panguni Uththiram. On this Sacred day are we supposed to read Kandar Shashti Kavacham. Or, if you had already published an article about Panguni Uththiram, in this blog, could you please give me the date of the article?
    Thank you with best regards

    Sakuntala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *