Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, February 25, 2024
Please specify the group
Home > Featured > அடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனுக்கும் சோதனையன்றோ? Rightmantra Prayer Club

அடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனுக்கும் சோதனையன்றோ? Rightmantra Prayer Club

print
றத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய செங்கல்பட்டை அடுத்துள்ள பொன்விளைந்த களத்தூரில் நல்லார் ஒருவர் வாழ்ந்து வந்தார். பிறவியிலிருந்தே அவருக்கு பார்வை கிடையாது. அப்போதெல்லாம் பார்வையற்றோர் கல்வி பயில்வது மிக மிக கடினம். இருப்பினும் கல்வி கற்கவேண்டும் என்கிற தணியாத ஆவலில், தனது முதுகில் எழுத்துக்களை எழுதிக் காட்டச் சொல்லி கல்வி பயின்றாராம் இவர். (முதலில் ப்ரெய்லி முறையை கண்டுபிடித்தது இவர் தான் போல!) அந்தளவு கல்வி மீது தணியாத தாகம் கொண்டவர் இவர். இவரது விடா முயற்சியினால் கவிகள் இயற்றுவதில், கவிபாடுவதில் வல்லவர் ஆனார்.

காங்கேயநல்லூர் முருகன் கோவில் + வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானம் - இராஜகோபுரம் லட்ச தீபத்தன்று காலை
காங்கேயநல்லூர் முருகன் கோவில் + வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானம் – இராஜகோபுரம் லட்ச தீபத்தன்று காலை

கண்களில் பார்வையில்லாவிட்டாலும், அகக்கண்ணால் இறைவனை தரிசனம் செய்து பல பாடல்களை இயற்றினார். இவர் பாடிய நூல்களுள் ஒன்று ‘திருக்கழுகுன்ற புராணம்’.

மண்தலத்தில் நாளும் வயித்தியராய்த் தாமிருந்து
கண்டவினைத் தீர்க்கின்றார் கண்டீரோ?தொண்டர்க்கு
விருந்து கொடுக்கின்றான் வேதகிரி ஈசன்
மருந்து கொடுக்கின்றான் மண்.

இவருக்கு வீட்டார் பார்த்து பார்த்து ஒரு பெண்ணை மணம் செய்து வைத்தனர். அவளோ அருளைவிட பொருளே பெரிது என்னும் எண்ணம் கொண்டவளாக இருந்தாள். ‘தமது கணவன் மிகப் பெரிய கவிஞன். அவன் நாவில் சரஸ்வதி நர்த்தனமாடுகிறாள்’ என்கிற அருமையெல்லாம் அவளுக்கு புரியவில்லை. மற்றவர்களைப் போல தன் கணவன் சம்பாதிக்கவில்லையே என்கிற ஆற்றாமை அவளுக்கு இருந்தது.

லட்ச தீபத்தன்று இரவு வேளையில் ஜொலிக்கும் கோபுரம்
லட்ச தீபத்தன்று இரவு வேளையில் ஜொலிக்கும் கோபுரம்

இந்நிலையில் ஒரு நாள், மனைவியை அழைத்து, “குளிக்க வெந்நீர் தயார் செய்து வை. நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, நீராடுவதற்கு ஆயத்தமானார். தண்ணீர் சூடு போதுமா என்று தொட்டுப் பார்த்தார். ஆனால் தண்ணீர் வெந்நீர் போலல்லாமல் ஜில்லென்று இருந்தது. “வெந்நீர் கேட்டால் தண்ணீர் வைத்திருக்கிறாயே” என்றார் மனைவியிடம்.

மனைவியோ சட்டென்று, “ஆம்… இவர் கவி பாடி யானையும் காணி நிலமும் வாங்கி வந்துவிட்டாராக்கும். குளிக்க வெந்நீர் வேண்டுமாம். ஏன் தண்ணீரே போதாதா?” என்று அவர் இல்லாமையை குத்திக்காட்டினாள்.

தன்னிடம் இருக்கும் வித்தையின் மகத்துவத்தை அறியாமல், கேவலம் இப்படி பொருளின் பின்னே இவள் பற்று வைக்கிறாளே… என்று துடியாய துடித்தார் அவர்.

உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்
உண்ணாமை கோடி பெறும்

என்கிற ஒளவையின் வாக்கிக்கேற்ப “இனி இவள் கையால் உண்பது பாவம். இவள் கேட்பது போல, பொன்னை சம்பாதித்து அதை யானையை  கட்டி தூக்கி வரவேண்டும்” என்கிற உறுதி பூண்டு என்று வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் ஒருமுறை சேயூர் முருகன் கோவிலுக்கு சென்றபோது, முருகனின் அலங்காரம் குறித்து வந்திருந்தவர்கள் புளங்காகிதப் பட, தன்னால் முருகனின் அழகை காண முடியவில்லையே என வருந்தினார். என்ன  ஆச்சரியம், அடுத்த நொடி இவருக்கு முன் ஒரு ஒளிப் பிழம்பு தோன்றியது. அதில் முருகனின் அழகுக் கோலம் இவருக்கு தென்பட்டது. கூடவே “இந்த சேய் மீது பிள்ளைக் கவி பாடு!” என்று முருகனின் குரல் ஒலித்தது. அப்போது இவர் பாடியது தான் சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்.

இப்படிப்பட்ட அருளாளருக்கு வீட்டை விட்டு வெளியேறியதும் எங்கே போகவேண்டும் என்று புலப்படவில்லை. அக்காலத்தில் இலங்கையை ஆண்டு வந்த பரராச சேகரன் என்கிற மன்னன், தமிழறிஞர்களை போற்றி அவர்களுக்கு பொன் தருகிறான் என்று கேள்விப்பட்டவர், தனக்கு நம்பிக்கையான மாணவன் ஒருவனின் துணையுடன் தோணி மூலம் இலங்கை சென்று அம்மன்னனை சந்தித்தார்.

இவரது புலமையை வியந்த அந்நாட்டு அரசவைப் புலவர்கள், இவர் எங்கே அரசனை சந்தித்தால் நமக்கு அரசன் கொடுக்கும் முக்கியத்துவம் போய்விடுவோமோ என்று அஞ்சி, “குடியாளும் மன்னன் பார்வையற்றோரை பார்ப்பது ஆகாது” என்று ஏதேதோ கூறி அரசன் இவரை பார்ப்பதை தடுத்துவிட்டனர்.

இருப்பினும் அரசன் விடாப்படியாக இருக்கவே, “வேண்டுமானால் உங்களுக்கும் அந்தப் புலவருக்கு இடையே ஒரு திரையைப் போட்டு நீங்கள் அவரை சந்திக்கலாம். அவரை நேரடியாக நீங்கள் பார்க்ககூடாது” என்றனர்.

அரசன், எப்படியாவது நம் புலவரை பார்க்க விரும்பி, அதற்கு அரை மனத்துடன் சம்மதித்தான்.

இதற்கிடையே இவர் பார்வையற்றவர் என்பதால் அரசனை பார்ப்பது கடினம் என்ற தகவல் இவருக்கு வந்து சேர்ந்தது. நெருப்பிலிட்ட புழுவாய் துடித்தார். முருகனை மனமுருகி அழைத்து முறையிட்டார். “முருகா… உன் அடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது உனக்கும் தானே?” என்று கரைந்து உருகினார்.

இந்நிலையில், அரசன் இவரை பார்க்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றார்கள்.

இவர் போய் அமர்ந்த ஆசனத்திற்கு எதிரே திரை போடப்பட்டிருந்தது. திரைக்கு அப்பால் அரசன் அமர்ந்திருந்தான். பார்வையற்ற இவருக்கோ நடந்த ஏற்பாடுகள் எதுவும் தெரியாது.

இருப்பினும் இவர் தன்னுடன் அழைத்து வந்த மாணவன், மிகவும் விவரமானவன். அரசனுக்கும் தனது ஆசிரியருக்கும் இடையே திரைப் போட்டப்பட்டிருப்பதை தன் ஆசிரியருக்கு, குறிப்பால் உணர்த்த விரும்பியவன், “சிவசிதம்பரம்.. சிவசிதம்பரம்…சிவசிதம்பரம்…” என்று மூன்று முறை குறிப்பிட்டான். சிதம்பரத்தில் ரகசியத்தை திரையிட்டு மறைப்பது வழக்கம். எனவே கவிஞருக்கு நடப்பது என்ன என்று புரிந்துவிட்டது.

வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானம் முன்பாக உள்ள சரவணப் பொய்கையில் முருகனின் அழகு தோற்றம்!
வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானம் முன்பாக உள்ள சரவணப் பொய்கையில் முருகனின் அழகு தோற்றம்!

முருகப்பெருமானிடம் வேண்டி ஒரு பாடலை பாட, அடுத்த நொடி திரை தானாக தீப்பற்றிக் கொண்டது. இவரது புலமையின் ஆற்றலை கண்டு அஞ்சிய ஈழக் கவிஞர்கள் திரையை முழுமையாக அப்புறப்படுத்தினார்கள்.

பார்வையற்ற இந்த கவிஞருக்கு தனக்கு முன்னேற போடப்பட்டிருந்த திரை பற்றி தெரிகிறது, அது பற்றி பாடியதும் திரை தீப்பிடித்துக் கொள்கிறது என்றால் இவர் சாதரணமானவர் அல்ல என்று உணர்ந்த மன்னன், அவரை பல கவிகள் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்து அவருக்கு யானை நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பி, கப்பலிலும் ஏற்றி அனுப்பினான். கூடவே இலங்கையின் தென் பகுதியில் ஒரு நிலப்பகுதியும் இவர் பெயருக்கு பட்டயம் எழுதித் தந்தான்.

ஊரார் மூக்கில் விரலை வைக்க ஒரு மாபெரும் செல்வந்தனாக தனது ஊருக்கு திரும்பிய கவிஞர், வெளியே நின்று கொண்டு, “யானை சுமக்கும் அளவுக்கு பொன்னையும் காணி நிலத்தையும் பரிசாக பெற்று வந்துள்ளேன். இப்போது வெந்நீர் கிடைக்குமா?” என்று கேட்டார்.

ஏற்கனவே அவரை பிரிந்திருந்த துயரத்தில் இருந்த அவர் மனைவி ஓடி வந்து அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டாள். அது!!!!

மனைவி சொல்லால் வீட்டை விட்டு வெளியேறி முருகன் அருளால் பொன்னை மூட்டையாக கட்டிக்கொண்டு திரும்பிய அந்த கவிஞர்   ‘அந்தகக் கவி’ என்று அழைக்கப்பட்ட வீரராகவ முதலியார் ஆவார்.  சேயூர்முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றத் தலபுராணம், திருக்கழுக்குன்ற உலா, திருவாரூர் உலா முதலான இலக்கியங்கள் இவர் இயற்றியுள்ளார்.

வாழ்க முருகன் திருநாமம்! வளர்க அவன் அடியார் புகழ்!!

==================================================================

* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு நினைவூட்டவும்.

** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் விரைவில் வெளியிடப்படும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : சாதனைச் சிகரம் ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ புதுக்கோட்டை ராதாபாய் அவர்கள்.

ராதாபாய் அவர்களை பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. சிறு வயது முதலே பார்வையற்ற இவர், தென்னிந்தியாவின் முதல் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்ற பெண்ணாவார். நம் தளத்தில் ஏற்கனவே ‘ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு’ பகுதியில் இவரது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் ராதாபாய் அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது....
நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் ராதாபாய் அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது….

பார்வையற்றோர்களுக்கு இப்போது வேண்டுமானால் கல்வி பயிலவும், தங்கள் திறமையை நிரூபிக்கவும் இந்த சமூகத்தில் வாய்ப்புக்கள் ஓரளவு இருக்கலாம். ஆனால் ராதாபாய் அவர்கள் படித்து பட்டம் பெற்ற காலகட்டங்களில் பார்வையற்றோர் படிப்பதே மிகவும் சவாலான ஒரு விஷயம். அதுவும், பெண்ணாக இருந்து கொண்டு அவர் இதற்காக நடத்திய போராட்டம் இருக்கிறதே… அப்பப்பா…!

தங்களுக்கு பிரச்சனை பிரச்னை என்று புலம்பும் பெண்கள் ராதாபாய் அவர்களது வரலாற்றை ஒரு முறை படிக்கவேண்டும். தங்களுக்கு இருப்பதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று உணர்வார்கள். அந்தளவு போராட்டங்களை சந்தித்து, இன்று சமூகத்தில் ஒரு நல்ல அடையாளத்தை பெற்று, பல பார்வையற்ற மாணவிகளுக்கு ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார்.

'பாரதி கண்ட புதுமைப் பெண்' விருதை பெறும்போது....
‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ விருதை பெறும்போது….

நமது சமீபத்திய ரைட்மந்த்ரா விருதுகள் இவருக்கு ‘பாரதி விருது’ அளித்து அந்த விருதுக்கு பெருமை தேடித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார பிரார்த்தனைக்கு நாம் முதலில் தலைமை ஏற்கச் செய்யலாம் என்று இருந்த நபர் வேறு ஒருவர். ஆனால் அவரைப் பற்றி ஒரு முழுமையான பதிவை அளித்துவிட்டு பின்னர் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே ராதாபாய் அவர்களை தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் என்ன ஒரு அதிசய ஒற்றுமை என்றால் இந்த வார பிரார்த்தனை பதிவில் நாம் அளித்திருக்கும் கதை, பார்வையற்ற இறை அருளாளர் ஒருவரைப் பற்றியது.

ராதாபாய் அவர்களை தொடர்புகொண்டு இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.

தினமலர் ‘நிஜக்கதை’ பகுதியில் சமீபத்தில் இவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை நண்பர் முருகராஜ் அவர்கள் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also check : அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

இந்த வார பிரார்த்தனைக்கு முதல் கோரிக்கை வைத்திருக்கும் நண்பர் தான் பணியிடத்தில் பிரச்சனை ஏற்பட்டு தன் பணியை ராஜினாமா செய்ததாக கூறிய வாசகர். (“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”) நமது பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பிக்க விரும்புவதாக சொன்ன அவர் உடனே அனுப்பியும் விட்டார். தற்போதே தனது கோரிக்கை நிறைவேறிவிட்டதாக கருதுவதாக நம்பிக்கையுடன் நம்மிடம் கூறினார். அவர் புது முயற்சி வெற்றியடையவும், குருவருள் அவருக்கு பரிபூரணமாக கிட்டவும் பிரார்த்திப்போம்.

அடுத்து புத்திர பாக்கியம் தொடர்பான கோரிக்கை அனுப்பியிருப்பவர் நம் நீண்ட நாள் வாசகர்களில் ஒருவர். நமது தளத்தின் விழாக்களுக்கும் உழவாரப்பணி ஒன்றுக்கும் வந்திருக்கிறார். பதிவுகளை விடாமல் படித்து வருபவர்களில் ஒருவர். நம் நலம் விரும்பிகளில் ஒருவர்.

அடுத்தது குட்டி சந்திரன். குட்டி சந்திரனை பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. பிறர் நலன் விழையும் உத்தம குணம் கொண்டவர். ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் குட்டி சந்திரன் தன்னால் இயன்ற பல அறப்பணிகளை அமைதியாக செய்துவருகிறார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார்ப்போல நமது தளத்தின் பணிகளில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி துணை நின்று நமது வலது கரமாக திகழ்ந்து வருகிறார். தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் மகளுக்காக கோரிக்கை வைத்திருக்கிறார்.

==================================================================

1) எல்லாம் நன்மைக்கே!

ரைட்மந்த்ரா நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இது நாள் வரை நான் பணியில் இருந்தாலும் அது என்னுடைய வாழ்க்கையாக கருதவில்லை. எப்பொழுதும் என்னுடைய அடையாளத்தைத் தேடியபடியே இருந்தேன். அதற்கான சூழல் மற்றும் காலம் எது என தெரியாமல் காலம் கடந்தது. தற்போது உண்கிறேன் இது தான் மிக சரியான தருணம் என்று. உங்களிடம் பகிர்ந்து கொண்டதுபோல் இந்த பணியில் இருந்து சுமுகமாக, பிரச்சினைகளின்றி வெளியே வந்ததும் எனது புதிய பயணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கப்போகிறேன்.

காலம் சில படிப்பினைகளை கொடுத்திருக்கிறது வாழ்க்கையில் தனக்கான இலக்கையும், அடையாளத்தையும் சாதிப்பதற்கு தனது பணி ஒருவருக்கு இடையூறாக இருக்குமெனில் அதை விட்டு வெளியேறுவதே உத்தமம் என்று உணர்ந்துகொண்டேன். இனி போராடியாவது இலக்கை அடைவதே வாழ்க்கையில் மன நிம்மதிக்கு, அமைதிக்கு வழி.

பணியிலிருந்து முழுமையாக ரிலீவ் ஆனதும் சுந்தர்ஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவண்ணாமலை சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமத்துக்கு சென்று அங்கு முழுநாளை அவருடன் கழிக்கவிருக்கிறேன்.

என் புதிய இலக்கை வெற்றிகரமாக அடையவும், தற்போதைய பணியிலிருந்து சுமூகமாக வெளியேறவும் பிரார்த்திக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

ராஜா கே.துரைசாமி,
சென்னை

=================================================================

2) புத்திர பாக்கியம் வேண்டும்…!

ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கு வணக்கம்.

நான் ரைட்மந்த்ரா தளத்தின் நீண்ட நாள் வாசகர். எனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை புத்திரபாக்கியம் இல்லை. நமது பிரார்த்தனை கிளப்பில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் இதுவரை இங்கு இதற்காக கோரிக்கை வைக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஏனோ இப்போது தான் ஏற்படுகிறது. ஒருவேளை இனி தான் அதற்க்கு எனக்கு ப்ராப்தமோ என்னவோ.

ஒன்பது வருடங்கள் கழித்து என் மனைவி சமீபத்தில் கருத்தரித்தார். ஆனால் பத்து நாட்களிலையே கரு நிற்காமல் கலைந்துவிட்டது. இதனால் சொல்லொண்ணா துயரத்தில் நாங்கள் மூழ்கியிருக்கிறோம். என் மனைவிக்கு கரு தங்கவும், ஆரோக்கியமான குழந்தை ஒன்றை நாங்கள் பெறவும் எங்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

– எஸ்.நாராயணன்,
சென்னை

=================================================================

3) +2 தேர்வை நல்ல முறையில் எழுதவேண்டும்!

ரைட்மந்த்ரா சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்.

என் நண்பரின் மகள் தரணி என்கிற தேவி தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். அவரது கல்வியும் முன்னேற்றமும் அவர் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தேர்வை நல்லமுறையில் எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று விரும்பிய உயர்கல்வியை தொடர பிரார்த்திக்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதே போன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் ரைட்மந்த்ரா வாசகர்களின் பிள்ளைகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வை எழதி நல்ல மதிப்பெண்களை பெறவேண்டும்.

நன்றி!

– குட்டி சந்திரன்,
சேப்பாக்கம், சென்னை

=================================================================

பொது பிரார்த்தனை

பார்வையற்றோர் தேர்வை நல்ல முறையில் எழுதவேண்டும்!

ஏற்கனவே சில பதிவுகளில் நாம் கொட்டித் தீர்த்த ஆதங்கம் தான். நம் நாட்டில் பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் கல்வி கற்பதில் பல பிரச்சனைகள் உள்ளன.

தமிழகம் முழுவதும் பார்வையிழந்தவர்கள் 95,000 பேர் பள்ளிச் செல்லும் வயதில் இருந்தாலும், அவர்களில் சுமார் 5000 பேரே பள்ளிக்கு செல்லும் நிலையில் உள்ளார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.

தேர்வெழுதும் பார்வையற்ற மாணவர் ஒருவர்!
தேர்வெழுதும் பார்வையற்ற மாணவர் ஒருவர்!

தமிழகத்தில் இவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முதல் இதர கல்வி சம்பந்தமான உதவிகள் கிடைப்பது வரை அனைத்திலும் ஒரு ஒழுங்கீனம் நிலவுகிறது. இதற்கே இப்படி என்றால் மற்றவைகளை பற்றி கேட்கவேண்டுமா என்ன?

பார்வையிருந்தாலே ஏழையாய் பிறந்துவிட்டால் அவர்கள் பள்ளிக்கு செல்வது முதல் கல்வி கற்பது வரை அனைத்தும் ஒரு சவால் தான்.

தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வையும் கல்லூரி இறுதியாண்டு தேர்வையும் பல பார்வையற்ற மாணவ மாணவியர் எழுதி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அவரவர் படித்த பாடங்கள் நன்கு நினைவில் நின்று, தேர்வு எழுத ஒரு நல்ல ரீடர் கிடைத்து தேர்வை நல்ல முறையில் எழுதவேண்டும். அவர்கள் விரும்பிய உயர்கல்வியையோ அல்லது லட்சியத்தையோ எட்டவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநண்பர் ராஜா துரைசாமி அவர்கள் பணியிலிருந்து நல்லமுறையில் விடுபட்டு, தனது புதிய முயற்சியில் வெற்றியடையவும், வாசகர் நாராயணன் அவர்களின் துணைவியாருக்கு கரு நல்ல முறையில் தங்கி ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், அவர்களின் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்கவும் நண்பர் குட்டி சந்திரன் அவர்களின் நண்பரின் மகள் தேவி நல்ல முறையில் +2 தேர்வை எழுதி விரும்பிய உயர்கல்வியை தொடரவும் பிரார்த்திப்போம். அதே போன்று இந்த ஆண்டு போதுதேர்வும், இதர பட்டப் படிப்பிற்கான தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் எழுதும் பார்வையற்றோர் அனைவருக்கும் இறையருள் துணைநின்று அவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வை எழுதவும் அவர்கள் லட்சியத்தை தடைகளின்றி எட்டவும் இறைவனை பிரார்த்திப்போம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி.ராதாபாய் அவர்கள் மேலும் மேலும் பலருக்கு உத்வேகமாக திகழ்ந்து தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக சௌக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  திருவாசகத் தொண்டர் திரு.திவாகர் அவர்கள்

12 thoughts on “அடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனுக்கும் சோதனையன்றோ? Rightmantra Prayer Club

 1. கவிஞர் வீரராகவ முதலியார் கதை இது வரை எங்களுக்கு தெரியாது. நம் தளத்தின் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அவரது முருக பக்தி பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. கோபுரமும், முருகனின் அழகு திருமுகமும் காணக் கண் கோடி வேண்டும். தங்கள் கை வண்ணத்தில் சொல்லிக்கிறது ஒவ்வொரு படமும். அருமையோ அருமை.

  இந்த வாரம் பிரார்த்தனைக்கு ஒரு பொருத்தமானவரை தேர்ந்தெடுத்ததில் மிக்க மகழ்ச்சி. எல்லாம் அந்த முருகனின் திருவிளையாடல். திருமதி ராதா பாய் அவர்களுக்கு என் இனிய வணக்கமும் நெஞ்சார்ந்த நன்றியும்.

  திரு ராஜாவின் எதிர்காலம் நல்லபடியாக அமையவும், திரு நாராயணன் தம்பதிகளுக்கு ஆரோக்யமான குழ்ந்தை பிறக்கவும், திரு குட்டியின் நண்பர் மகள் தாரணி பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எதிர்காலம் நல்ல படியாக இருக்கவும் மற்றும் பார்வையற்றோர் நல்லமுறையில் தேர்வை எழுதவும் பிராத்தனை செய்வோம்

  தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற

  வித்யா வித்யாகரி வித்யா வித்யா வித்யா ப்ரபோதிநீ
  விமலா விபவா வேதா விஸ்வஷ்தா விவி தோஜ்வலா

  நம் பிராத்தனை கோரிக்கையை மகா பெரியவா கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

  லோக சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா வெங்கட்

 2. ஜொலிக்கும் கோபுரம் மற்றும் சரவணப் பொய்கை முருகன் புகைப் படங்கள் அற்புதம்.
  நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு.

  பிரார்த்தனை பதிவுக்கும், பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவருககும் உள்ள எதேச்சையான ஒற்றுமை, நமது தளம் இறைவனால் ஆசிர்வதிக்கபபட்டுள்ளது என்பது நிருபணமாகிறது

  பிரார்த்தனை குழுமத்தில் கோரிக்கை சமர்பிதிருக்கும் வாசகர்களின் கோரிக்கைகள் யாவும் அவர்கள் வேண்டியபடி நிறைவேற இறைவனை உள்ளன்போடு பிரார்த்திப்போம்.

 3. Really felt happy in going through the Sri.Veeraraga Mudaliar story and my heartfelt prayers for all those Prarthana Club members.

  Sundarji has created such a wonderful web-site for sharing our thoughts, prayers and various information on Bhakti, Health, etc..etc.

  May God give Sundar ji enough health, wealth and good environment to work towards his Goals.

  Regards,
  Sankar J

 4. அருமையான பதிவு.
  பதிவிற்கும், ராதா பாய் அவர்களுக்கும் என்னே பொருத்தம்.
  இது தான் முருகனின் திருவிளையாடல்.
  புகைப் படங்கள் மிகவும் அருமை.முருகன் தக தக வென ஜொலிக்கும் அழகு கொள்ளை.
  இந்தவாரம் பிராத்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவரும் அவரவர் கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறை வேற வேண்டிக் கொள்வோம்
  நமது வாசகர் ஒருவர் மட்டுமல்ல, பலருக்கும் அவரவர் வேலை இடங்களில் நல்ல சூழ்நிலையோ அல்லது நல்ல பணி மாற்றமோ கிடைக்கவும் வேண்டிக்கொள்வோம்.
  நமது வாசகர்கள் பலரது முதன்மையான கோரிக்கை புத்திர பாக்கியம்.
  கூடிய விரைவில் அவர்கள் அனைவருக்கும் சத்புத்திரர்கள் கிடைக்கவும் மனமார வேண்டிக் கொள்வோம்.
  நமது 12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் பரிச்சை எழுதவும் வேண்டிக் கொள்வோம்

  குருவே சரணம்
  வாழ்க வளமுடன்
  நன்றி

 5. நம் சுந்தர் அவர்களின் தொண்டு நாளுக்கு நாள் மெருகு ஆகி கொண்டு இருக்கிறது. வாழ்த்துகள். குரு மற்றும் திரு அருளால் எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ வேண்டும்.

  கே. சிவசுப்ரமணியன்

 6. வணக்கம் சுந்தர். முருகன் படம் அருமை. பிராத்தனையில் வந்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற பிராத்திக்கிறேன். ஓம் முருகா நன்றி .

 7. வாழ்க வளமுடன்

  நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

  தேர்வு எழுதும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  நன்றி

 8. குருவருளாலும், திருவருளாலும் அனைவரின் மனக் குறைகளும் நீங்கி வாழ்வில் வளம் பெற பிரார்த்திப்போம்……..

 9. Happy to inform that my brother’s son got 1102 /1200 marks in +2 exams, Thanks to Right Mantra Readers for praying +2 students

  Regards
  uma venkat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *