கடல்வாழ் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு தரிசனம் தர விரும்பியே இறைவன் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று சமுத்திரத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார். இதைப் பார்ப்பதும், அது சமயம் கடலில் நீராடுவதும் மிகவும் சிறப்பு. அளவற்ற நற்பலன்களை அளிக்கவல்லது.
தீர்த்தவாரியின் தாத்பரியத்தை விளக்கி இதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே நாம் போதுமான பதிவுகளை அளித்திருந்தபடியால் அதற்குள் விரிவாக போகவேண்டியதில்லை என கருதுகிறோம்.
எனவே நேற்றைய நமது அனுபவத்தை விளக்கி பதிவளித்திருக்கிறோம்.
சென்னை திருவல்லிக்கேணி, பாரிமுனை, ராயப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் இருந்தும், பெருமாள் கோவில்களில் இருந்தும் சுவாமிகள் மாசிமகத்தையொட்டி சிறப்பு அலங்காரங்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி சென்னை மெரினா கடற்கரையில் காட்சியளித்து தீர்த்தவாரி செய்தனர்.
இந்த தீர்த்தவாரியில் திருவள்ளுவர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் உற்சவரான சந்திரசேகரர், உமா மகேஸ்வரி, கச்சாலீஸ்வரர், காரணீசுவரர், வெள்ளீஸ்வரர், கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், வீரபத்திரர், கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி, புதுப்பேட்டை பாலசுப்ரமணியர், எல்லையம்மன், கோலவிழியம்மன், வாராஹி அம்மன், திருவல்லிக்கேணி காமகலா காமேஸ்வரர் – காமேஸ்வரி, கங்கையம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், அங்காளம்மன், எல்லையம்மன், கோலவிழியம்மன், கேசவப்பெருமாள், மாதவப்பெருமாள், பார்த்தசாரதி, உள்ளிட்டக் சைவ, வைணவத் தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
மூர்த்தங்களின் சிலா வடிவங்கள் அலங்கரிக்கப்பட்டு கோவில்களில் இருந்து புறப்பாடு நடைபெற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக மெரினா கடற்கரையை வந்தடைந்தது. அதை தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் புதிய கடற்கரையில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கோவிலில் உள்ள மூலவர் வடிவங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.
கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்
மது விருந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்
அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
=================================================================
திருச்சி பயணத்தை முடித்துக்கொண்டு வியாழன் (மார்ச் 5) காலை தான் சென்னை வரமுடியும் என்பதால் ஒருவேளை தாமதமாக பேருந்து வந்து சேர்ந்தால் நேரடியாக கடற்கரைக்கே செல்வதாக திட்டமிட்டிருந்தோம். (கடலிலே நீராடுவதற்கு உரிய முன்னேற்பாடுகளுடன் இருந்தோம்.) நல்லபடியாக பேருந்து 4.30 க்கெல்லாம் வந்து சேர்ந்துவிட்டது. எனவே வீட்டுக்கு சென்று காமிராக்கள், மொபைல் அனைத்தையும் சார்ஜ் போட்டுவிட்டு குளித்து முடித்து தயாராகி கிளம்பும்போது காலை 5.45 AM இருக்கும். இப்போதெல்லாம் சென்னை காலை 5.00 மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாகிவிடுகிறது.
நமது பைக்கை எக்மோர் ஸ்டேஷனில் விட்டுவிட்டு ஊருக்கு சென்றபடியால் வீட்டிலிருந்து பீச்சுக்கு பஸ்ஸில் தான் பயணம் செய்யவேண்டும்.
நாம் இருக்கும் ஐயப்பன்தாங்கலில் வழியாக கடற்கரைக்கு பேருந்து வசதி உள்ளது (25G) இருக்கிறது என்றாலும் அந்த நேரம் ஒரு பேருந்து கூட வரவில்லை. காத்திருந்து காத்திருந்து நேரம் தான் வீணானது. நமக்கு படப்படப்பு தொற்றிக்கொண்டது. காரணம் காலை 6.30 முதல் ஒவ்வொரு கோவில் உற்சவராக வரத் துவங்கிவிடுவார்கள். சரி ஒரு ஆட்டோவோ கால்டாக்சியோ பிடிக்கலாம் என்றால் தனிநபருக்கு அது ஒரு தேவையற்ற செலவு. எதில் பயணம் செய்தாலும் கடற்கரைக்கு எப்படியும் ரூ.300 – 400 ஆகிவிடும். ஆனால் நாமோ குறைந்தது 6.30 – 6.45 க்குள் கடற்கரையில் இருக்கவேண்டும். ஒரு மூர்த்தியை கூட தவறவிட்டுவிடக்கூடாது என்பது நமது ஆசை.
என்ன செய்வது.. பேருந்து வருவதாக தெரியவில்லை. நேரே அடையார் சென்று அங்கிருந்து பீச்சுக்கு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று அடுத்து வந்த ஒரு பஸ்ஸில் ஏறி அடையார் சென்றோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்தோம். ஆட்டோ டிரைவர் முதல் சவாரி போல. மீட்டர் போடுறேன். மீட்டருக்கு மேல் உங்க இஷ்டம் ஏதாவது கொடுங்க சார் என்றார். நேரே பீச்சுக்கு போகும்போது 6.45 am.
அதற்குள் ஒரு சில கோவில் உற்சவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீர்த்தவாரி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பம்பரமாக சுழன்று புகைப்படங்களை கிளிக் செய்தோம்.
தீர்த்தவாரியில் கண்ட சில காட்சிகள்…
* ஒவ்வொரு உற்சவராக தீர்த்தவாரிக்கு பல்லகில் வரும்போதும் பக்தர்கள் ‘தென்னாடுடைய சிவனே போற்றி‘, ‘என்னாட்டவருக்கும் இறைவா போற்றி‘, ‘ஓம் நமச்சிவாய’, ‘கோவிந்தா கோவிந்தா’, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘ஓம் சக்தி பராசக்தி’ என்று அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய கோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.
* திருநங்கைகள் சிலர் சுவாமி தரிசனம் செய்து கடல் நீராடியாது நெஞ்சை நெகிழ வைத்தது.
* சில வயது முதிர்ந்தவர்களும் முதுமையை பொருட்படுத்தாது தங்களால் இயன்ற சேவையை அங்கு செய்துகொண்டிருந்தனர். கீழ்காணும் புகைப்படத்தில் காணப்படும் பெரியவர், கடற்கரை மணலில் நடக்க முடியாமல் விந்தி விந்தி நடந்து வந்தார்.
* பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் கடலில் நீராடி வழிப்பட்டனர்.
* பீச்சில் குதிரை சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரை ஒன்றை அதை வளர்க்கும் சிறுவன், அழைத்து வந்து சந்தன குங்குமத்தை வைத்தது கண்கொள்ளா காட்சி. நாமும் நமது பங்கிற்கு வாங்கி அஸ்வத்துக்கு திலகமிட்டோம். பசு, குதிரை, யானை இவை மூன்றும் பவித்திரமான விலங்குகள். நமது திருக்கோவில்கள் மற்றும் புராண இதிகாசங்களுடன் நெருங்கிய தொடர்புடையடையவை.
* குதிரையின் மூச்சு காற்று நம் மீது படுவது நல்லது என்பதால் அது நம் மேலே படுமாறு சிறுது நேரம் நின்றுகொண்டிருந்தோம். சிறிது நேரத்திலேயே நமது நெருங்கிய நண்பனாகிவிட்டது அக்குதிரை. பரிபாஷை நமக்கு புதிதல்லவே…!
* ஸ்ரீ காமகலா காமேஸ்வரர் ஸ்வாமி எழுந்தருளியிருந்தபோது சுவாமி நெற்றியில் பட்டை மின்னியது. சூலாயுதமும் காணப்பட்டது. அவரை சுமந்து கொண்டு வந்தவரிடம் “இது என்ன சுவாமி?” என்று கேட்டோம். “திருவல்லிக்கேணி ஸ்ரீ காமகலா காமேஸ்வரர், காமேஸ்வரி” என்றார்.
“உங்கள் நெற்றியில் திருமண் இருக்கிறதே….?” அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று தெரிந்துகொள்ள நம் சந்தேகத்தை கேட்டோம். நாங்கள் அதெல்லாம் பேதம் பார்ப்பதில்லை என்றார். நாம் சற்று நகர்ந்தவுடன், “சுவாமி நெற்றியில பட்டை இருக்கு. என் நெற்றியில நாமம் இருக்கு. காமகலா காமேஸ்வரர்னு சொன்னபிறகு கூட அவருக்கு சந்தேகம் போகலே… ஏதோ பெருமாள்னு நினைச்சிட்டார் போல” என்றார். அது நம் காதில் விழுந்தது. “சுவாமியை பார்த்தவுடன் ஈஸ்வரன் என்று உணர்ந்துகொண்டேன். உங்கள் நெற்றியில் திருமண் சூடிய நிலையில் ஈஸ்வரனை சுமந்து வந்ததற்கு நீங்கள் என்ன விளக்கம் அளிப்பீர்கள் என்று தெரிந்துகொள்ளவே கேட்டேன்!” என்றோம்.
* கந்தகோட்டம் முருகன் மீது முகத்தில் தழும்புகள் காணப்படுகின்றன. எவ்வளவோ விசாரித்தும் இதன் காரணம் சரியாக அறியமுடியவில்லை. கெமிக்கல் சந்தனங்களை கொண்டு அபிஷேகம் செய்வதால் ஏற்பட்டு பாதிப்பும் என்று கூறப்படுகிறது.
* ஒரு பெரியவர் நாம் காமிராவுடன் நிற்பதை பார்த்து, “சார் எதுனா ஸ்டூடியோ வெச்சிருக்கீங்களா இல்லே பிரஸ்ஸா ?” என்று கேட்டார். இல்லை சார்… நான் ஒரு வெப்சைட் நடத்துறேன். அதோட கவரேஜ்க்காக வந்திருக்கேன். எதுக்கு கேட்க்குறீங்க?” என்று கேட்டோம். “ஒண்ணுமில்லை சார்… சாமி முன்னாடி நின்னு ஒரு போட்டோ எடுக்கணும். அதுக்கு என்ன பணமோ அதை கொடுத்துடுறேன்” என்றார். “சிவ… சிவ… ஒண்ணில்லை ரெண்டு கூட எடுத்து தர்றேன். பணமெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார். எவ்ளோ பெரிய சேவை செய்யறதுக்கு வாய்ப்பை கொடுத்திருக்கீங்க… என் விசிட்டிங் கார்டை தர்ரேன். என் நம்பருக்கு உங்களோட மெயில் ஐ.டி. இல்லே அட்ரஸ் அனுப்புங்க. நான் ஃபோட்டோஸ் அனுப்புறேன்” என்று கூறியபடி அவரை போட்டோ எடுத்து இன்று காலை அவரது மகனின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டோம்.
* பெரும்பாலானோர் பிரசாதம் சாப்பிட்டு முடித்த தட்டுக்களை, இலைகளை ஆங்காங்கே போட்டு அந்த இடத்தை அசுத்தம் செய்தது வேதனையுற வைத்தது. இத்தனைக்கும் அங்கே ஒரு பெரிய குப்பை தொட்டி காணப்பட்டது.
* அங்கே டிரம்மில் டீ- விற்றுக்கொண்டிருந்த பையன் ஒருவனிடம் அங்கே நாதஸ்வரம் இசைத்துக்கொண்டிருந்த கலைஞர் ஒருவர் டீ கேட்க, “அவர் கிட்டே டீக்கு காசு வாங்கவேண்டாம். நான் தர்றேன்” என்று சொல்லி நம் தளம் சார்பாக அங்கு மங்கள வாத்தியம் இசைத்துக்கொண்டிருந்த பலருக்கு தேநீர் தரும் வாய்ப்பு கிடைத்தது. பலர் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர்.
* அடுத்த ஆண்டு வாசகர்கள் எவரேனும், மிகப் பெரிய புண்ணிய காரியம் ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தால் இங்கே கடும் வெயிலில் சுவாமியை சுமந்து வரும் பல்லக்கு தூக்கிகளுக்கும் நாதஸ்வர தவில் கலைங்கர்களுக்கும் சுக்கு காப்பி அல்லது நீர் மோர் தயார் செய்து கொண்டு வந்து கொடுக்கலாம். தீர்த்தவாரியை விட இந்த தாகசாந்தி மிகப் பெரிய புண்ணியத்தை கொடுக்கும். நாம் நிச்சயம் செய்ய உறுதி பூண்டிருக்கிறோம்.
* அதே போல, ஒரு சிறு சாக்கு பை கொண்டு வந்து இங்கு பக்தர்கள் சாப்பிட்டுவிட்டு போடும் தட்டுக்களை, வாட்டர் பாட்டில்களை, மிச்சம் மீதி பூஜை பொருட்களை (பூ, பால் பாக்கெட் கவர் etc.,) போன்றவற்றை அந்த சாக்கில் அள்ளிப்போட்டு அந்த பகுதியை சுத்தம் செய்யலாம். அதிக பட்சம் ஒரு மணிநேரம் பிடிக்கும். இரண்டு மூன்று பேர் சேர்ந்தால் தாராளமாக செய்யலாம்.
* அதே போல, காமிரா வைத்திருப்பவர்கள் காமிராவை கொண்டு வந்து இங்கு தீர்த்தவாரிக்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமியுடன் புகைப்படம் எடுக்க விரும்பினால் அதை எடுத்துக்கொடுத்து உதவலாம்.
* கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம் ஆகியவற்றை தயார் செய்து கொண்டு வந்து இங்கேயே நைவேத்தியம் செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கலாம்.
* அகத்திக்கீரை, பழங்கள் முதலானவைகளை வாங்கி வந்து சுவாமியை சுமந்து வரும் எருதுகளுக்கு தரலாம். (இந்த எருது எப்படி மெலிந்திருக்கிறது பாருங்கள்!).
* ஒரே இடத்தில பல மூர்த்தங்களை பார்க்கும் இந்த வாய்ப்பை வாசகர்கள் நழுவிடாது பயன்படுத்திக்கொண்டு பலன் பெறவேண்டும் என்பதே நமது விருப்பம். மேலே நாம் கூறிய பல நற்பணிகளை அடுத்த வருடம் நாம் ஒரு குழுவாக சென்று செய்யலாம். முன்கூட்டியே தெரியப்படுத்துகிறோம்.
சுமார் 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் 9.30 ஆகிவிட்டது. நாம் காலையில் எதுவும் சாப்பிடவில்லை. அங்கே பிரசாதங்கள் கிடைத்தாலும் நாம் இருந்த பரபரப்பில் பிரசாதம் வாங்கி சாப்பிட முடியவில்லை. கிளம்பலாம் என்றால் முடிவே இன்றி ஒவ்வொரு உற்சவராக வந்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக 10.30க்கு அங்கிருந்து கிளம்பினோம். பைக் இல்லாமல் சென்னையில் இருக்க முடியாது. நேரே எக்மோர் சென்று பார்க்கிங்கில் பைக்கை எடுத்துக்கொண்டு மேற்கு மாமபலத்தில் உள்ள நம் அலுவலகம் செல்லவேண்டும். நாம் இருந்த களைப்பில் ஒரு அடி கூட எடுத்து வைக்க உடலில் தெம்பில்லை. “முருகா… ஏதாவது ஆட்டோ கிடைச்சா தேவலை…” ஆனால் இங்கேயிருந்து எக்மோருக்கு எவ்வளோ கேப்பானுன்களோ… மீட்டர் போட்டு வர்றீங்களான்னு கேட்டா… நம்மளை ஏற இறங்க பார்த்துட்டு பதில் கூட சொல்லாமல் கிளப்பிகிட்டு போற ஆட்டோக்கள் தான் இங்கே ஜாஸ்தி.
முருகன் மேல பாரத்தை போட்டு, வந்த ஒரு ஆட்டோவை பார்த்து கையை காண்பித்தோம். நமக்கு நேராக நிறுத்தியவரிடம், “எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்… டூ-வீலர் பார்க்கிங் போகணும்…”
“மீட்டர் போடுறேன் சார்… மீட்டர் காசு கொடுங்க போதும்” என்றார்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆட்டோவில் போகும்போதே அவரிடம் பேசிக்கொண்டே வந்தோம். நமது பேக்கை திறந்து காமிராவை ஒழுங்காக எடுத்து அனைத்து சரியாக இருக்கிறதா என்று பார்த்தோம். “என்ன பிரஸ்ஸா சார்” என்று கேட்டார். தீர்த்தவாரி பற்றி பேச்சு வந்தது. “உங்களை சவாரி ஏத்திக்கிட்டது நான் செய்த பாக்கியம் சார்” என்றார்.
“உங்க ஆட்டோ கிடைச்சது தான் சார் நான் செய்த பாக்கியம்” என்றோம்.
அவருக்கு நமது கையில் இருந்த பிரசாதம் (வாழைப்பழம்) கொஞ்சம் கொடுத்தோம். விபூதியும் தந்தோம். அங்கேயிருந்து எக்மோருக்கு சரியாக 62.00 தான் ஆனது. ரவுண்டாக ரூ.70/- கொடுத்து அவருக்கு நன்றி கூறி, பையில் சுவாமி பிரசாதமாக நமக்கு கடற்கரையில் கிடைத்த ஒரு பெரிய பூச்சரத்தை எடுத்து அவரிடம் கொடுத்து “ஆட்டோவுக்கு போடுங்க” என்று கொடுத்தோம். அத்தனை சந்தோஷம் அவருக்கு.
நன்றி கூறி விடைபெற்றோம்.
டூ-வீலர் பார்க்கிங்கில் பைக்கை எடுக்கச் சென்றால், தலை சுற்றியது. பத்ம வியூகத்தை விட சிக்கலான வியூகத்தில் நமது பைக் மாட்டிக்கொண்டிருந்தது. எப்படிடா வெளியே எடுக்குறது என்று திகிலுடன் யோசித்தோம். பார்கிங் ஸ்டாண்ட் நடத்துபவரே வந்தால் கூட ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. எப்படியோ சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் முயற்சி செய்து நமது பைக்கை மீட்டோம். இதற்காகவே பைக்கை வெளியூர் செல்லும்போது கூடுமானவரை வீட்டிலேயே விட்டுவிடும் வழக்கம் நமக்கு.
நன்றி!
=========================================================
* * பதிவிலும் இறுதியில் அளிக்கப்பட்டுள்ள காலரியிலும் மேலும் மேலும் புகைப்படங்கள் சேர்க்கப்படும்.
=================================================================
மயிலை திருவள்ளுவர் கோவில் ஏகாம்பரேஸ்வரர் – காமாக்ஷி அம்பாள் – தீர்த்தவாரி சிறப்பு புகைப்படங்கள்!
=========================================================
மாசிமகம் தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரினா கடற்கரை – முழு புகைப்படங்கள்!
[Best_Wordpress_Gallery id=”3″ gal_title=”Masi Magam Theerthavari 2015 @ Chennai Marina Beach”]
=================================================================
Also check :
2014 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !
ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!
2013 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !
மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!
=================================================================
[END]
சுந்தர்ஜி,
படங்கள் அனைத்தும் அருமை. தெய்வ அருள் இருந்தால்தான் இவை எல்லாம் சாத்தியமாகும்.
நாராயணன்.
சுந்தர் சார், வணக்கம்.
என் மைத்துனிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அங்கு உதவிக்கு சென்றுவிட்டேன். எனவே இடையே சில வாரங்கள் தளத்தை பார்க்கமுடியவில்லை. தற்போது ஒரு பதிவு விடாமல் பார்த்து வருகிறேன். தாங்கள் அலுவலகம் துவக்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி.
மிகச் சரியான முடிவு. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. நான் மட்டுமல்ல, எனக்கு தெரிந்த ஒருசிலரிடம் கூட நம் தளத்தை பற்றி சொல்லி, சந்தா சேரும்படி சொல்லியிருக்கிறேன்.
என் கணவரிடம் சொன்னபோது, நான் சொன்ன தொகையைவிட கூடுதலாக ரூ.100/- சேர்த்து மாதம்தோறும் போடச் சொன்னார்.
தீர்த்தவாரி புகைப்படங்கள் மிக மிக அருமை. இதற்காக சொல்லப்போனால் ஆவலோடு காத்திருந்தேன். அடுத்த வருடம் சென்னை வந்து எங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கி தீர்த்தவாரியை நேரில் காணவும், நீங்கள் சொன்ன சேவைகளில் ஒரு சிலதையாவது செய்யவும் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
படங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. குறிப்பாக எருதின் படமும் குதிரையின் படமும் அழகோ அழகு. காமிரா ஓவியர் என்றே உங்களுக்கு பெயர் சூட்டலாம்.
ஒவ்வொரு படத்திற்கும் பிரபல பாடல்வரிகளில் இருந்து பொருத்தமான கேப்ஷன்கள் போட்டிருப்பது உங்கள் பிரத்யேக டச்.
தொடரட்டும் உங்கள் தொண்டு. பரவட்டும் ஆன்மீக ஒளி. செழிக்கட்டும் வாசகர்களின் வாழ்வு.
சிவராத்திரி ஸ்பெஷல் தொடர்கள் அத்தனையும் அருமை. நானும் என் கணவரும் இந்த ஆண்டு விரதம் அனுஷ்டித்தோம்.
தங்கள் பயணத்திற்கு எங்கள் துணையும் ஆதரவும் எப்போதும் உண்டு.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்.
வாவ் … தீர்த்தவாரி ஸ்பெஷல் ஒவ்வொரு படங்களும் அருமையோ அருமை. எனக்கு தீர்த்தவாரி என்றால் என்னவென்றே தெரியாது. தங்களின் போன வருட பதிவை படித்து எப்படியாவது இந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தேன், தங்களின் மருதமலை பதிவில் நாளை தீர்த்தவாரி coverage என்பதை பார்த்தவுடன் நான் பரிமளத்திற்கும், குட்டி சந்திரனுக்கும் போன் செய்து நாம் தீர்தவரியில் கலந்து கொள்ளலாம் வருகிறீர்களா என்று கேட்டேன். அவர்களும் ஓகே என்று சொன்னது எனக்கு சௌகரியமாய் இருந்தது. ஒவ்வொரு உற்சவ மூர்த்தியாக வர வர கண்கொள்ளக் காட்சியாக இருந்தது. எல்லா மூர்த்திகளையும் ஒரு சேர பார்த்ததில் மனதில் எல்லையில்லா பரவசம்,
நீங்களும் சந்திரனும் ஓடி ஓடி வேலை செய்தது மறக்க முடியாது.
தங்களின் ஒவ்வொரு படத்தின் கீழ் உள்ள caption அருமையோ அருமை. தாங்கள் எழுத்துலகின் முடிசூட மன்னராக திகழ வாழ்த்துக்கள்.
தங்களைப் போல் போட்டோ coverage செய்ய யாராலும் முடியாது. அற்புதம். அங்கு வந்த நாதஸ்வர கலைஞர்களுக்கு tea வாங்கிக் கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்டீர்கள், தாங்கள் அங்குள்ள குதிரையை கூட விட்டு வைக்க வில்லை. அதனுடன் கொஞ்சி மகிழ்ந்து அதன் குலம் கோத்திரம் விசாரித்து அதனுடன் பேசி மகிழ்ந்ததை மறக்க முடியாது.
நானும் பரிமளமும் சிறு குழ்ந்தை போல் அன்றைய தினத்தை என்ஜாய் பண்ணினோம். அவ்வளவு மெனக்கிட்டு ஒவ்வொரு போட்டோவையும் நம் வாசகர்களுக்காக எடுத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அடுத்த வருடம் நம் தளம் சார்பாக நீர் மோர் , பானகம், தயிர் சாதம் முதலியன விநியோகிக்கலாம்.
மொத்தத்தில் எங்களுக்கு ஒரு மறக்க முடியாத தீர்த்தவாரி.
நன்றி
உமா வெங்கட்
சுந்தர் சார் வணக்கம்
எவ்வளவு புண்னியம் செய்து எங்களையும் பாக்க வைத்து இருக்கங்க சார்
புகைப்படங்கள் அருமையோ அருமை சார்
நன்றி
தீர்த்தவாரியில் நேரில் கலந்து கொள்ள முடியாத குறையை தங்கள் பதிவு போக்கிவிட்டது.
நேரில் கலந்து கொண்டிருந்தாலும் கூட , இவ்வளவு
சிறப்பாக, இத்தனை தெய்வங்களை,
தரிசித்துருக்கமுடியுமா என்பது சந்தகமே.
நேர்த்தியான புகைப் படங்கள்.
அனைத்தும் அருமை.
நான் ஏற்கனவே சிலாகித்தது போல், தங்களின் உள்ளே ஒளிபதிவாளர் பாலு மஹேந்திரா ஒளிந்து உள்ளார்.
வாழ்க வளமுடன்
இது போன்ற நிகழ்ச்சியை இப்போதுதான் கேள்விபடுகிறேன் ,
மயிலை 63 விழா தெரியும் . நல்ல சுவாமி தரிசனம் . குருட்டு ஆடு
மந்தையோடு சேர்ந்தால் வீடு சேந்து விடும் என்பர் அதுபோல்
நானும் ஒரு குருட்டு ஆடுதான், சுந்தர் ஐயா குழுவோடு சேர்ந்து
வீடுபேறு அடைய வேண்டியதுதான்
நன்றி
வணக்கம்…………..
மாசி மக தீர்த்த வாரியை நேரில் தரிசித்தது போன்ற உணர்வு……நிச்சயம் நமது தெய்வங்களின் மனம் குளிர்ந்திருக்கும்……….அது போல் நமது பூமியும் குளிர வேண்டும்………..
வணக்கம் சுந்தர் . அழகான புகைப்படங்கள். நிறைய உழைப்பு தெரிகிறது படங்களுக்கு பின்னால . நன்றி நேரில் பார்த்தல் கூட இவ்வளவு அழகான தரிசனம் கிடைத்து இருக்காது . மீண்டும் நன்றி .