திருமுறைகள் நமது பாரம்பரியத்தின் அடையாளம். பக்தியின் சின்னம். பக்தி நெறியில் நமது திருமுறைகளை கற்று வளரும் குழந்தைகள் குடும்பத்தின் பெருமையை கட்டிக் காப்பார்கள். பெற்றோரை மதித்து நடப்பார்கள். பிறந்த ஊருக்கு புகழைச் சேர்த்து வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடி தருவார்கள்.
நாம் அடிக்கடி இங்கு வலியுறுத்தி வருவது தான். உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது நமது பாரம்பரியத்தையும். பெருமையையும் அவை உணர்த்தும் நல்ல விஷயங்களையும் சொல்லி வளர்த்து வாருங்கள். பள்ளியில் தேவாரம், திருவாசகம் இல்லையென்றால் என்ன, நீங்கள் முயற்சி எடுத்து அதற்குரிய வகுப்புக்களுக்கு அனுப்புங்கள்.
“நல்லா படிக்கணும். பர்ஸ்ட் ரேங்க் எடுக்கணும். டாக்டராகணும். இல்லே எஞ்சினீயராகனும்” என்று மட்டுமே அவர்களிடம் சொல்லி சொல்லி அவர்களை ஒரு ஏ.டி.எம். மெஷினாக வரவேண்டும் என்று வளர்த்தால் எதிர்காலத்தில் உங்களை அவர்கள் முதியோர் இல்லத்தில் தான் கொண்டு போய் சேர்ப்பார்கள். (இன்றைக்கு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களிடம் போய் பேசிப்பாருங்கள். நாம் சொல்வது எத்தனை உண்மை என்று புரியும்!)
எனவே பிள்ளைகளிடம் நமது பாரம்பரியத்தின் பெருமையை, பக்தி இலக்கியங்களை பற்றிய அறிவை ஊட்டி வளர்க்க அனைவரும் முயற்சிக்கவேண்டும்.
தேவாரம் திருவாசகம், நால்வர் மற்றும் ஆன்மீக தொண்டு பற்றிய விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.
இது எல்லாராலும் முடியுமா? குறைந்தது தன் வீட்டில் தனது குழந்தைகளிடம் அதை வெற்றிகரமாக செயல்படுத்தும் ஒருவரால் தானே முடியும்? அப்படி ஒரு முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒரு மிகப் பெரிய சமூக சமயப் புரட்சியை அமைதியாக செய்து வரும் ஒருவரைத் தான் நாம் தற்போது சந்திக்கப்போகிறோம்.
சமூக சமயப் புரட்சி!
சென்ற வருடம் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது சென்னை தியாகராய நகரில் தியாகராயர் அரங்கின் வாசலில் ‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ என்னும் நாடகத்தின் பேனரை பார்க்க நேர்ந்தது.
“அடடே… முதல்லயே தெரியாம போய்டுச்சே…” என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தோம்.
எது எதையோ இன்றைக்கு காட்சிப் பொருளாக வைத்து பொருளீட்டி மக்களின் ரசனைகளை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு சூழலில், மாணிக்கவாசகரின் வாழ்க்கையை நாடகமாக எடுத்து காண்பித்துகொண்டிருப்பவரை முதலில் சந்தித்து ஒரு பொன்னாடையை போர்த்தவேண்டும் என்கிற தவிப்பு அப்போதிலிருந்தே நம்மிடம் மேலோங்க துவங்கியது.
சில நாட்களுக்கு முன்னர் வள்ளி, லோச்சனாவின் தந்தை திரு.சீதாராமன் அவர்கள் நம்மிடம் பேசும்போது, அவர்கள் வீட்டுக்கு அருகில் போரூரில் வாரம்தோறும் ஞாயிறு மாலை 4 – 6, ‘சிவலோகம்’ திவாகர் என்பவர் தலைமையில் திருவாசகம் ஓதுதலும் பின்னர் அண்ணாமலையாரின் பாதபூஜையும் நடைபெறுவதாகவும் அதை ஒரு நாள் அவசியம் நாம் நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று நம்மிடம் கேட்டுக்கொண்டார்.
நாம் ஏற்கனவே சிவலோகம் திவாகர் அவர்களை சந்திக்க விருப்பம் கொண்டிருந்ததால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விழைந்தோம். ஆனால் அவர் கூறிய இரண்டு ஞாயிறும் வேறு சில அலுவல்கள் காரணமாக நம்மால் செல்ல முடியவில்லை. இதற்கிடைடியே திவாகர் அவர்களிடமே எதிர்பாரதவிதமாக பேசும் சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது.
அப்போது அவரது சிவத்தொண்டுக்கும் அவர் தன் குழுவினர் சார்பாக ஆற்றிவரும் பல்வேறு சிவப்பணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தோம். அவரையும் அவரது இல்லத்தில் சந்தித்து கௌரவிக்க வேண்டும் என்றும், பின்னர் அப்படியே சிவலோகத்தில் நடைபெறும் சிவ பூஜையில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற நமது விருப்பத்தையும் வெளியிட்டோம்.
“கௌரவமெல்லாம் எதுக்கு சார்… வீட்டுக்கு வாங்க. அதுவே போதும்!” என்றார்.
இதையடுத்து சென்ற ஞாயிறு மதியம் சுமார் 3.00 மணியளவில் நண்பர் சீதாராமனும் நாமும் வளசரவாக்கத்தில் உள்ள திரு.திவாகர் அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். சீதாராமன் அவர்கள் தனது குடும்பத்தோடு வந்திருந்தார்.
நம்மை வாசல் வந்து வரவேற்றார் திவாகர் அவர்கள்.
பரஸ்பர நலவிசாரிப்புகள் முடிந்தவுடன் தனது பெற்றோர் உட்பட தனது குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். திரு.திவாகர் அவர்களின் பணிகளில் அவரது மனைவி புவனேஸ்வரி அவர்கள் பெருமளவு உதவி வருகிறார். மகளுக்கு தாய் உமா என்று அழகான பெயரை வைத்திருக்கிறார்கள்.
திரு.திவகார் அவர்களின் தந்தையார் அருண்குமார் ஷர்மா (67). இவர்கள் பூர்வீகம் திருவண்ணாமலை. மிகப் பெரிய வைதீக குடும்பம்.
திவாகர் மற்றும் அவரது சிவலோகம் அமைப்பின் சிவத்தொண்டு மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று கூறி நம் தளம் சார்பாக திரு.திவாகர் அவர்களுக்கும், அவரது துணைவி.புவனேஸ்வரரி அவர்களுக்கும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
விடைபெறும் முன்னர் திரு.திவாகர் மற்றும் அவர் பெற்றோர் பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்றோம்.
அப்போது மங்களப் பதிகமான மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் பதிகத்தை பாடினர். அப்பா, அம்மா, பிள்ளை, மருமகள், பேத்தி என அனைவரும் நெற்றி நிறைய திருநீருடன் ஒரே நேரத்தில் பதிகங்களை பாடும் அந்த காட்சி… காண கோடி கண்கள் வேண்டும்.
நாளை நடைபெறக்கூடிய நாடகத்தின் பணிகளில் திவாகர் அவர்கள் பிசியாக இருந்தபடியால் நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. ஜஸ்ட் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினோம். அவரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவலை இங்கு இத்துடன் தந்திருக்கிறோம்.
சீதாராமன் அவர்கள் மூலம் ஏற்கனவே நமது தளத்தை இணையத்தில் பார்த்தவர் நமது தளத்தை பற்றியும் நமது பணிகளைப் பற்றியும் நம்மை வெகுவாக பாராட்டினார். மிகச் சிறந்த ஆன்மீக சமூக தொண்டு என்று பாராட்ட தயங்கவில்லை. அவர் பெற்றோர் உட்பட அனைவரும் அவர் கருத்தை ஆமோதித்தனர்.
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” – வேறு என்ன சொல்ல?
நாம் செல்லும் இடங்களில் மகா பெரியவா ஏதேனும் ஒரு ரூபத்தில் இருப்பார் என்று கூறியிருக்கிறோம் அல்லவா? இதோ இங்கே திவாகர் அவர்களின் இல்லத்திலும் மகா பெரியவாவை பாருங்கள். நாம் கொண்டு சென்ற நமது தளத்தின் காலண்டரை அவருக்கு அதே அறையில் பரிசளித்தோம்.
(மகா பெரியவா எப்படி இங்கே…? அவர் தந்தை சிறு வயதில் அடிக்கடி மகா பெரியவரை தரிசிக்க காஞ்சி செல்வாராம். மகா பெரியவா குறித்து அவர் கூறிய தகவல்களை வேறொரு பதிவில் பார்ப்போம்!)
=========================================================================
2011ல் ஆனி மகம் “மாணிக்கவாசகர்” குருபூஜையன்று சிவலோகம் சிவனடியார் திருக்கூட்டம் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் துவங்கப்பட்டது. வாதவூரர் வழியில் திருவாசக நெறியில் மக்கள் மனதில் ஆன்மிக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தூய நோக்கத்தோடு துவங்கப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் பல்வேறு வழிகளில் தனது இலக்கினை அடையும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறது.
சிவலோகம் சார்பில் இசைச்சொற்பொழிவு சென்னை திருவலிதாயம், மல்லிகேஸ்வரர் கோயில், கச்சாலீஸ்வரர் கோயில், திருவேட்டீஸ்வரர் கோயில், கந்தக்கோட்டம் முதலான பல முக்கிய கோயில்களில் “திருவாசகமும் மணிவாசகரும்” எனும் தலைப்பில் பக்தி இசைச்சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.
திருவாசக நடனம்: சென்னை அயன்புரத்தில் இயங்கி வரும் “பாபாஞ்சலி கலைக்கோயில்” எனும் பரத நாட்டியப்பள்ளியோடு இணைந்து திருவாசகப்பாடல்களுக்கு நடனமாடும் “திருவாசகம் என்னும் தேன்” பக்தி நாட்டிய நிகழ்ச்சிகள் சென்னை, திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் ஊர் கோவில்கள் மற்றும் பாரம்பரிய கலையரங்கங்களில் சிறப்புடன் நடைபெற்றன.
வான் கலந்த மாணிக்கவாசகர்
இந்தத் தொடர் வளர்ச்சியின் அடுத்த பரிமானமாக அருளாளர் மாணிக்கவாசகரின் முழுமையான வரலாற்றை நாட்டிய நாடகமாக உருவாக்கும் மாபெரும் பணி 6 மாத கால தீவிர முயற்சி மற்றும் பயிற்சிக்குப் பின் “வான் கலந்த மாணிக்கவாசகர்” – நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம் எனும் வடிவில் பிரம்மாண்டமான முறையில் ஏறத்தாழ 60க்கும் மேற்ப்பட்ட கலைஞர்களை கொண்டு சென்னை வாணிமஹால் கலையரங்கில் 1200 சிவனடியார்களின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
சிவலோகத்தின் திட்டங்கள் என்று பார்த்தால்
திருவாசக பாடசாலை – சிவலோகத்தின் கிளை மையங்களில் திருவாசக வகுப்பு நடத்துவது.
தெருவெல்லாம் திருவாசகம் – அடியார்கள் கூடி தெருவில் நடந்தபடி பாடுதல்
பசுமரத்தாணி – திருவாசக ஞானக்கருத்துக்களை உணர்த்தும் குறும்படங்கள் தயாரித்து வெளியிடுதல்
திருவாசகத்திருக்கோயில் – கருவரையில் திருவாசகத்தைக்கொண்ட கற்கோயில்
ஆகியனவேயாகும்.
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ இயக்கம்
சமூகப் புரட்சியோ, சமயப் புரட்சியோ பள்ளிக் குழந்தைகளிடம் இருந்து தான் துவங்கவேண்டும். அப்போது தான் அது நிறைவேறும். எனவே சிவலோகம் சார்பாக மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் சைவ நெறியையும் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம், முதற்கட்டமாக அம்பத்தூர் விவேகானந்தா பள்ளியில் ‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ என்கிற தலைப்பில் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஐந்து விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
இது தவிர திருவாசக மனப்பாடப் போட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப் போட்டி, இசைத் திறன் போட்டி முதலியவற்றில் பங்கேற்ற மாணவ மாணவியர்க்கும் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கும் முக்கியப் பிரமுகர்களின் மூலம் சென்ற அரங்கேற்றத்தின்போது சான்றிதழ் வழங்கப்பட்டது.
=========================================================================
வான் கலந்த மாணிக்கவாசகர்
சிவலோகம் அறக்கட்டளை மற்றும் பாபாஞ்சலி கலைக்கோவில் ஆகியவை இணைந்து சுமார் 40 கலைஞர்களை கொண்டு சென்ற ஆண்டு அரங்கேறியது மாணிக்கவாசகரின் முழு வாழ்க்கை வரலாற்றை கூறும் நாடகம்.
முழுக்க முழக்க சிவனடியார்களை கொண்டே இந்த நாடகம் நடத்தப்படுவதே இதன் சிறப்பு.
திருவாசகப் பாடல்களை பற்றி பெரும்பாலானோர் அறிந்துள்ளனர். அதை பாடிய ஞானமே வடிவாகிய மாணிக்க வாசக பெருமானை பற்றியும் முழுமையாக அறிந்துகொண்டால் தான் திருவாசகப் பாடல்களை பாடும்போது உணர்வுப் பூர்வமான அனுபவத்தை பெற முடியும். இந்த முயற்சிக்கான வித்து இது என்றே அறியமுடிகிறது.
இசை மிகப் பெரிய ஹைலைட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இசையமைத்துள்ள பிரவீஷ் ஆனந்த என்பவர் பக்திப் பாடல்களுக்கு இசையமைப்பதையே வாழ்நாள் தொண்டாக செய்து வருகிறார்.
நமது நாட்டின் பாரம்பரிய பெருமை மிக்க நடனங்களான பரதம் மற்றும் குச்சிப்பிடி நடனங்களில் 15 வருடம் அனுபவம் மிக்க ராஜ் பரேஷ் பாபா. இவரே நாட்டியம் மற்றும் நாடகத்தை வடிவமைத்தவர். இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான மாணிக்க வாசகரின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டவர். ஏற்றுகொண்டததோடு மாணிக்கவாசகராக வாழ்ந்து காட்டியிருப்பதாக பலர் பாராட்டுவது தான்.
அரிமர்த்தன பாண்டியனின் அரசவைக் காட்சிகள், வாதவூரரை முதலமைச்சர் ஆக்குதல், பின் குதிரைகளை வாங்க அனுப்பி வைத்தல், திருபெருந்துறை காதிலே குருநாதரைக் கண்டு தன்னிலை மறத்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நாடகத்தின் ஹைலைட் எனலாம்.
குறிப்பாக திருக்கோத்து தும்பி பதிகத்தில் கண்ணப்ப நாயனாரை நினைத்து மாணிக்க வாசகர் உருகும் காட்சியில் வரும் பிளாஷ் பேக் அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துவிடும்.
பொருத்தமான செட்டிங்குகளோடு நகரும் நாடகம் நம்மை மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்திற்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. தில்லை பொன்னம்பலத்தில் மாணிக்க வாசகர் முக்தியடையும் காட்சி சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும்.
இறுதியில் அனைத்துக்கும் திலகமிட்டது போல, கயிலாய வாத்தியங்கள் இசைக்கப்படுவது கண்களுக்கு மட்டுமல்ல செவிகளுக்கும் விருந்து தான். ஆம்… சிவ விருந்து.
இந்த நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுக்க முக்கிய ஊர்களில் நடத்திடவேண்டும் என்பதே இவர்களின் விருப்பம்.
========================================================================
வான் கலந்த மாணிக்கவாசகர் – காணத்தவறாதீர்கள்!
‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ நாடகத்தை நாம் நேரில் நாளை மாலை காமராஜர் அரங்கில் காணவிருக்கிறோம். நாடகம் குறித்த விரிவான பதிவு தளத்தில் விரைவில் இடம்பெறும்.
மேற்படி நாடகத்திற்கு பழனி பாட்டி இராஜம்மாள் சங்கரன், சிவத்திரு.தாமோதரன் ஐயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
சிவலோகத்தின் இந்த அரும்பணிக்கு தோள் கொடுப்போம். உங்கள் நட்பு மற்றும் உறவுகளுக்கு இந்த நாடகம் குறித்த தகவலை அனுப்பி அவர்களை நாளை பார்க்கச் செய்யுங்கள்.
நுழைவுக்கட்டணம் ரூ.250/- ரூ.500/- அரங்கிலேயே டிக்கட்டுகள் கிடைக்கும்.
Van Kalandha Manickavasagar Drama – Trailer
==============================================================
Also check :
பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !
அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !
==============================================================
[END]
Om Sivaya nama om. .
அருமை. சந்தோசம். அற்புதமான தொண்டு. வாழ்க சிவத்திரு திவாகர் ஐயாவின் சிவ சேவை. பகிர்ந்தமைக்கு ரொம்ப சந்தோசம்.
சிவ சிவ.
திரு திவாகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நெற்றியில் திரு நீற்றுடன் காணும் அவர்கள் புகைப் படங்களை பார்க்க மிக்க பரவசமாக உள்ளது.
இந்த காலத்து குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் முதலான கற்றுக்கொடுத்து குழந்தைகளை ஆன்மிக அறிவை வளர்க்க வேண்டும்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு நான் அடிமை. ஒவொரு படமும் மிகவும் அருமையாக உள்ளது. திரு திவாகர் அவர்களின் இசை சொற்பொழிவை கேட்பதற்கு ஆசையாக உள்ளது. மாணிக்க வாசகர் பிறந்த ஊரான மதுரையில் உள்ள திருவாதவூர் எனக்கு மிகவும் பிடித்த இடம். மதுரை செல்லும் பொழுதெல்லாம் திருவாதவூர் சென்று அங்கு திருவசாகத்தில் நான்கைந்து பாடல்கள் பாடி விட்டு வருவேன். அங்கு சென்றால் திரும்பி வர மனம் வராது. மாணிக்கவாசகர் எங்கள் ஊரான மதுரை பிறந்தவர் என்பதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஒவொரு சிவராத்திரிக்கும் திருவாசகம் முற்றோதல் செய்வேன். இன்று காலையில் மாணிக்க வாசகர் பற்றிய பதிவை பார்த்தும் மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. சீரார் பவளங்கால். கோத்தும்பி, குயில் பாட்டு மிகவும் அருமையாக இருக்கும்/ இன்று நடக்கும் நாட்டிய நாடகத்திற்கு முடிந்தால் கலந்து கொள்வேன். அழகிய தகவலுக்கு நன்றிகள் பல.
LOVELY ……….. ARTICLE ……….
// நமச் சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க //
நன்றி
உமா வெங்கட்
நன்றி தங்கள் பதிவுக்கு. திரு திவாகர் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நமது நமஸ்காரங்கள்.
கே. சிவசுப்ரமணியன்
சுந்தர்ஜி
வான்கலந்த மாணிக்கவாசகர் அருமையான பதிவு . இம்மாதிரி சிறந்த பதிவு வாசிக்கும் பேரு கிடைத்தமைக்கு சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றிகள் பல.
வாழ்க வளமுடன்
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
திவாகர் ஐயா பனி மென்மேலும் வளர இறைவனை வணங்குவோம்
நன்றி
இன்றும் மகாபெரியவர் கண்குளிர் தரிசனம்.
குருவே சரணம். மிக்க நன்றி.
நாடகத்தின் trailer மற்றும் சாம்பிள் படங்களே சிறப்பாக இருக்கும் போது நாடகத்தை பற்றி கேட்கவா வேண்டும்.
தாமோதர ஐயா பாராட்டுக்கள் இந்த ஆன்மிக காவியதிற்கு ஒரு மணி மகுடம்.
சிவலோக திவாகர் அவர்களுக்கும் ஏனைய கலைஞர்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
சென்னைவாசியாக இல்லையே என வருத்தமாக உள்ளது விரைவில் சிதம்பரத்தில் இந்த நாடகம் அரங்கேறும் நாளை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம்.
வணக்கம்………..திரு.திவாகர் அவர்களின் தொண்டு அளப்பரியது…. அவர்களின் குடும்பத்தைப் பார்க்கவே பரவசமாக உள்ளது…..குடும்பமே திருநீற்று நெறியில் பயணிக்கிறார்கள்………..வாழ்க………..
நால்வர் பெருமக்களைப் பற்றி சிந்திக்கையில் அவர்களை எல்லாம் நம் நேரில் காண மாட்டோமா என்று நினைப்பது உண்டு. இந்தப் பதிவில் உள்ள படங்களைப் பார்க்கையில் மணிவாசகப் பெருமானை நேரில் கண்டு தரிசித்தது போல் உணர்கிறோம்………
விரைவில் வான் கலந்த மாணிக்கவாசகர் நாட்டிய நாடகத்தைப் பற்றிய விரிவான பதிவை எதிர் நோக்குகிறோம்……..
அருமையான பதிவு.
அருமையான சிவநெறிக் குடும்பம் .
அவர்களைப் பார்ப்பதே மிகவும் புண்ணியம்.
அளப்பரியது அவர்கள் தொண்டு.
வாழ்க அவர்கள் பணி.வாழ்க அவர்களது தலைமுறை.
அவர்கள் வீட்டில் மகாப்பெரியவா போட்டோவை பார்த்ததில் ஒரு சந்தோசம்.
நன்றி
குருவே சரணம்.
நல்ல பதிவு