முதன்முறை 2012 ஆண்டு சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தபோது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. சிவராத்திரி அன்று உறங்காமல் அட்லீஸ்ட் கோவிலுக்கு போய் கண்விழிக்கவாவது செய்வோமே என்று கருதி பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு சென்று, அங்கு நான்கு கால பூஜைகளையும் கண்டு ரசித்து, அங்கு தரப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டுக்கொண்டு திருவிளையாடற்புராணம் முதலியவற்றை படித்தபடி அனுஷ்டித்தோம்.
அடுத்த வருடம் அதாவது 2013 ஆம் ஆண்டு நாம் அனுஷ்டித்தபோது ரைட்மந்த்ரா.காம் என்னும் இந்த தளத்திற்கு ஆசிரியர். (நம்மைப் பொருத்தவரை அது ஒரு மிகப் பெரிய உயர்வு… மாபெரும் மாற்றம்…!) இந்த முறை நம்முடன் நண்பர் குட்டிசந்திரன் இருந்தார். கோவிலில் உழவாரப்பணி செய்துகொண்டே இருவரும் விரதத்தை அனுஷ்டித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பணி செய்துகொண்டே இருந்ததால் தூக்கமும் அதனால் வரவில்லை. அது பற்றிய பதிவை கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கலாம். (மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி!)
சென்ற ஆண்டு அதாவது 2014 ஆம் ஆண்டு, திருவெண்பாக்கம் எனப்படும் பூண்டி ஊன்றீஸ்வரர் ஆலயத்தில் அனுஷ்டித்தோம். சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணியை சிவராத்திரிக்கு ஒரு வாரம் முன்னர் அங்கு செய்தமையால், கோவிலின் அர்ச்சகர் திரு.சுப்ரமணிய குருக்கள் நிச்சயம் சிவராத்திரிக்கு நாம் அங்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (சிவனோடு சில மணி நேரம் – ஊன்றீஸ்வரரோடு கழிந்த நம் சிவராத்திரி!)
அதிக கூட்டம் வராத கோவில் அது. பாடல்பெற்ற தலமாக இருந்தாலும் அந்தக் கோவிலைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. நமக்கோ முந்தைய இரண்டு ஆண்டுகள் பூவிருந்தவல்லியில் கூட்ட நெரிசலில் சிவனை தரிசித்தபடியால் சற்று நிம்மதியாக தரிசிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. மேலும் வருவாய் அதிகம் வராத கோவில் என்பதால் சுப்ரமணிய குருக்களுக்கு பூஜையில் நாம் கூட மாட ஒத்தாசையாக இருந்து சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்போம் என்று சென்ற ஆண்டு அங்கு சென்றுவிட்டோம்.
இரவு முழுக்க அவருடன் இருந்து அவருக்கு உதவிக்கொண்டு ஊன்றீஸ்வரருடனேயே சிவராத்திரியை கழித்தது மறக்க முடியாத ஒரு உன்னதமான அனுபவம். நம்முடன் நம் வாசகர் நண்பர் செந்தில் என்பவரும் வந்திருந்தார்.
இந்த ஆண்டு, சிவராத்திரிக்கு நம் கோவிலுக்கு வரவேண்டும் என்று மயிலை திருவள்ளுவர் கோவில், நூம்பல் அகத்தீஸ்வரர் கோவில் என்று பல இடங்களிலிருந்து அழைப்பு வந்தது. சரி இங்கு எங்காவது போகலாம் என்று நாம் முடிவு செய்த நேரத்தில், சென்ற வாரம் திருவெண்பாக்கத்திலிருந்து சுப்ரமணி குருக்கள் ஃபோன் செய்து “இந்த ஆண்டும் நீங்கள் அவசியம் சிவராத்திரிக்கு நம் ஆலயத்திற்கு தான் வரவேண்டும். இந்த ஆண்டு லட்ச தீபம் வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!” என்றார்.
வேறு கோவிலில் கூப்பிட்டிருப்பதாக சொன்னோம். “அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்கள் அவசியம் வரவேண்டும்… உங்களுக்காக காத்திருப்பேன்!” என்று கூறி ஃபோனை துண்டித்துவிட்டார்.
அவரது அன்புக்கு கட்டுப்பட்டு இந்த ஆண்டும் திருவெண்பாக்கமே செல்வது என முடிவானது.
முன்னதாக மாலை 6.00 மணியளவில் மதனந்தபுரம் சென்று அங்கு நடைபெற்ற சிவநாம அர்ச்சனையை கண்டு மகிழ்ந்தோம். சுவாமி தயானந்த சரஸ்வதியின் தர்ம ரக்ஷன சமிதியினர் நல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என எப்படியும் 500 பேருக்கும் குறையாமல் சிவநாம அர்ச்சனையில் பங்கேற்றிருப்பார்கள் என கருதுகிறோம். அது தவிர கோவிலுக்கு உள்ளே வேறு நல்ல கூட்டம்.
வெளியே காணப்பட்ட ஒரு சிறு தற்காலிக மேடை போன்ற அமைப்பில் சுவாமி படம் வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். அருகில் பளீரென்ற திருநீற்று பட்டையுடன் நம் ஸ்ரீராமுலு காணப்பட்டார். முழு நெற்றியில் நீண்ட திருநாமத்துடன் ஸ்ரீராமுலு அவர்களை பார்த்துவிட்டு இப்படி திருநீற்றுன் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது. வைதேகி மாமி மற்றும் சரவணன் ஆகியோர் பூஜைக்கான ஏற்பாடுகளில் அங்கும் இங்கு ஓடிக்கொண்டு பரபரப்பாக இருந்தார்கள்.
தரையில் பெரிய ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு, அதில் பெண்கள் பலர் வரிசையாக அமர்ந்திருந்தனர். விளக்கு பூஜை போல, அனைவரும் சோமாஸ்கந்தரின் திருவுருவப் படத்திற்கு அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து சிவராத்திரி மற்றும் அதன் சிறப்பு குறித்து அங்கு அவர்கள் குழுவின் நண்பர் ஒருவர் உரையாற்றினார். அங்கு நிலவிய சூழல் காரணமாக நாம் ஆவலோடு இருந்தபோதும் நம்மால் உரை நிகழ்த்த முடியவில்லை.
புறப்படும் முன், ஸ்ரீராமுலு அவர்களிடம் நம் முகநூல் நண்பர் ஒருவரின் மைத்துனி டூ-வீலரில் செல்லும்போது கீழே விழுந்து அடிபட்டு சீரியசாக இருக்கும் தகவலை சொல்லி அவருக்காக சிவபெருமானிடம் பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் செய்வதாக வாக்களித்தார்.
சிவநாம அர்ச்சனை & பூஜை நிறைவடைந்தவுடன் அங்கே ஆனந்த விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை தரிசித்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
அடுத்து திருவெண்பாக்கம் பயணம்….
வீட்டிற்கு வந்து நண்பர் செந்தில் அவர்களுடன் சேர்ந்து திருவெண்பாக்கம் புறப்படுவதாக பிளான். சென்ற முறை வந்த செந்தில் இந்த முறையும் நம்முடன் வர விருப்பம் தெரிவித்திருந்தார். நம் வாசகி மற்றும் உழவாரப்பணி குழு உறுப்பினர் சுபாஷினி அக்கா அவர்களும் வர விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் நேரடியாக அங்கு பேருந்து மூலம் வந்துவிடுவதாக கூறியிருந்தார்.
வாரியாரின் வாரிசுகள் சிறுமிகள் வள்ளி, லோச்சனாவின் தந்தை சீதாராமன் (வாரியாரின் கொள்ளுப் பேத்திகளின் தந்தை) அவர்களும் வர விருப்பம் தெரிவித்திருந்தார். டூ-வீலரில் நீங்கள் போவதாக இருந்தால் சொல்லுங்கள்… நான் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லியிருந்தார் அவர். நாமும் முதலில் டூ-வீலரில் தான் செல்வதாக பிளான். ஆனால் இரவு மிகவும் லேட்டாகிவிட்டதால் எதற்கு ரிஸ்க்… நீண்ட தூரம் வேறு போகவேண்டும் என்று தன் காரை எடுத்து வந்தார் செந்தில். அதிலேயே மூவரும் திருவெண்பாக்கம் புறப்பட்டோம்.
திருவள்ளூரிலிருந்து சுமார் 12 கி. மீ.தொலைவில் உள்ளது திருவெண்பாக்கம்.
சுபாஷினி அவர்கள் இரவு ஒன்பது மணிக்குள்ளாகவே திருவெண்பாக்கம் சென்றுவிட்டார். ஆனால் நமக்கு தான் அன்று மாலை மதனந்தபுரதிற்கு சென்றுவிட்டு திரும்பியிருந்தபடியால் கிளம்புவதற்கு நிறைய நேரமாகிவிட்டது. மேலும் நண்பர் செந்தில் அவர்களுக்கும் அலுவலகம் முடிந்து கிளம்பி வர மிகவும் லேட்டாகிவிட்டது. எனவே சீதாராமன் அவர்களை போரூரில் பிக்கப் செய்துகொண்டு செந்தில் நம் வீட்டிற்கு வர இரவு பத்து மணியாகிவிட்டது.
அங்கிருந்து நாங்கள் திருவெண்பாக்கம் செல்லும்போது இரண்டாம் கால பூஜை நடந்து முடிந்து தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார்கள்.
கோவிலில் லட்ச தீபம் என்பதால் எங்கு பார்த்தாலும் விளக்குகள் தான். ஜோதி தரிசனம் தான்.
நமக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த சுபாஷினி அக்கா, ஏற்கனவே அங்கு உழவாரப்பணியை துவக்கிவிட்டிருந்தார்கள். லக்ஷ தீபம் மாலை முதல் வேளை பூஜையின்போதே ஏற்றப்பட்டிருந்ததால், ஏற்றி முடிந்து அணைந்துபோயிருந்த விளக்குகள் பலவற்றை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார். அதே போன்று பிரகாரம் முழுக்க குப்பை விழ விழ அவர் கூட்டியபடி இருந்திருக்கிறார். மிகவும் சந்தோஷப்பட்டோம்.
நாம் போனவுடனே குருக்களிடம் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டோம். “நீங்க வந்ததே சந்தோஷம் தான். சுவாமியை முதலில் தரிசனம் பண்ணுங்க!” என்றார்.
சுப்ரமணிய குருக்களை மாமா என்று தான் அழைப்போம். மாமாவுக்கு உதவியாக அவர் மகன் வேதம் படித்து வரும் சனத்குமாரன் இருந்தான்.
செந்திலும் சுபாஷினி அவர்களுக்கு உதவியாக பிரகாரத்தை தூய்மைப்படுத்த சென்றுவிட்டார். சீதாராமன் அவர்கள் ஒரு நல்ல இடமாக பார்த்து அமர்ந்தபடி சிவபுராணம் முதலியவற்றை படிக்க ஆரம்பித்துவிட்டார்.
நாம் சட்டையை கழட்டி வைத்துவிட்டு சன்னதிக்கு சென்று சனத்குமாரனுக்கு அடுத்த வேளை பூஜைக்கு தேவையான உதவிகளை செய்ய ஆரம்பித்தோம்.
பால் கவரை பிரித்து கேனில் கொட்டி பாலாபிஷேகதுக்கு தயார் செய்வது, சன்னதியை பெருக்கி குப்பைகளை அகற்றுவது, அர்ச்சனை செய்து முடிந்த தேங்காய், பூ பழங்களை எடுத்து தனியாக வைப்பது, தேங்காய் உடைத்து தருவது, மணியடிப்பது, திரையை மூடுவது திறப்பது என நம்மால் முடிந்த கைங்கரியங்களை சனத்குமாரனுக்கும் மாமாவுக்கும் செய்துகொண்டிருந்தோம்.
லக்ஷ தீபம் என்பதால் கோவிலில் பார்க்கும் இடங்களில் எல்லாம் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. எண்ணை பல இடங்களில் வழிந்துகொண்டிருந்தது. எனவே செந்தில் அவர்களும் சுபாஷினி அவர்களும் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் விளக்குகளை எல்லாம் சாக்குப் பைகளில் எடுத்து போட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
குழு குழுவாக பலர் பேருந்துகளிலும் வேன்களிலும் தரிசனத்திற்கு வந்தபடி இருந்தார்கள். சிலருக்கு இது இன்ன ஆலயம் என்று தெரிந்திருக்கிறது. சிலருக்கு தலத்தின் பெயர் உட்பட பல விபரங்கள் தெரியவில்லை. அவர்களிடம் தலத்தை பற்றி விளக்கி, சுந்தரர் இங்கு பாடி ஊன்றுகோல் பெற்ற வரலாற்றை சொல்லிக்கொண்டிருந்தோம்.
ஒரு குழுவினர் வந்து தேவாரம் முதலியவற்றை பாடி, பின்னர் வேதம் படித்தார்கள். அந்த வேளையில் (அதாவது 2.30 am இருக்கும்) வேத கோஷத்தை சிவாலயத்தில் கேட்பது ஒரு பரவச அனுபவம். தொடர்ந்து ருத்ரம் முதலியவற்றை படித்தார்கள்.
மூன்றாம கால பூஜைக்கான சங்கல்பம் நடைபெற்றபோது, நமது வாசகர்கள் பலருக்கு அர்ச்சனை செய்ய பொன்னான வாய்ப்பு கிடைத்தது. நமது டைரியை எடுத்து அனைவரின் பெயர் ராசி நட்சத்திரங்களை சொல்ல சொல்ல குருக்கள் மாமா ஒருவர் பெயர் விடாமல அனைவருக்கும் நிறுத்தி நிதானமாக சங்கல்பம் செய்து வைத்தார். இதற்கே பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது கூட பாதிப் பெயர்கள் தான் சொல்ல முடிந்தது. மீதி பெயர்களை கடைசி கால பூஜையின்போது சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.
சனத்குமாரன் வேத மந்திரங்களை சொல்ல சொல்ல, மாமா சிவனுக்கு அபிஷேகம் செய்யத் துவங்கினார். சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம் என்றாலும் இத்தனை அருகே இருந்து பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு இருக்கும் நடைமுறை சிரமங்களை அருகே இருந்து பார்த்து புரிந்துகொள்ள மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்தது.
இது போன்ற நீண்ட நெடிய பூஜைகள் மற்றும் அபிஷேகங்களின் போது அவர்களுக்கு துணையாக நிச்சயம் ஒருவர் அருகே இருக்கவேண்டும்.
டாஸ்மாக்கில் இருப்பவர்களுக்கு கூட உதவியாளர்கள் உண்டு. ஆனால் கோவிலில் பூஜை செய்யும் பிராமணர்களுக்கு உதவியாளர்கள் கிடையாது. சனத்குமாரன் சொந்த மகன் என்பதால் தந்தையின் கைங்கரியத்தில் அருகிலிருந்து உதவுகிறான். மற்றவர்கள் என்ன செய்வார்கள்?
சனத்குமாரன் வேத மந்திரங்களை உரக்கச் சொல்லி அர்ச்சனை செய்ய, அது அந்த கருவறையில் எதிரொலித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கேட்டுகொண்டேயிருக்கலாம் போல அத்தனை இனிமை வேத சப்தங்கள். இருக்காதா பின்னே வேதங்கள் இறைவனின் மூச்சுக் காற்று என்று சொல்லப்படுகின்றனவே.
அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது நமது பிரார்த்தனை கிளப்பின் கோரிக்கைகள் & நமக்கு தெரிந்த வாசகர்களின் இதர கோரிக்கைகளை பிரார்த்தனைகளை பலவற்றை மீண்டும் மீண்டும் சிவபெருமானிடம் சொல்லிக்கொண்டே இருந்தோம்.
அபிஷேகம் முடிந்து திரை போடப்பட்டு அலங்காரம் செய்த பின்னர் ஆரத்தி காண்பிக்கப்படும். அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து முடித்த பின்னர் அப்போதைய டென்ஷன் கொஞ்சம் முடிவுக்கு வரும். ‘ஹப்பாடா’ என்றிருக்கும். போய் சிறிது நேரம் உட்காருவோம்.
இடையே நேரமிருக்கும்போதெல்லாம், வாசகி நமக்கு அனுப்பி வைத்த யோகி ராம்சுரத்குமார் அவர்களைப் பற்றிய ‘உண்மையுடன் ஒரு வாழ்வு’ நூலை படித்து வந்தோம். செந்தில் அவர்கள் ‘தெய்வத்தின் குரல்’ நூலை படித்துக்கொண்டிருந்தார். சீதாராமன் மற்றும் சுபாஷினி அவர்கள் பதிகங்கள் படித்து கொண்டிருந்தார்கள்.
அப்போது வந்திருந்த ஒரு தம்பதியினரின் குழந்தை ஒன்று, சுமார் இரண்டு வயதிருக்கும் மெல்ல தளிர் நடை பயின்று வந்து நமது பேக்கில் சைடில் இருந்த வாட்டர் பாட்டிலை பிடித்து இழுத்தது. “என்ன உனக்கு தண்ணி வேணுமா?” என்றோம்.
“ஆம்…” என்பது போல தலையாட்டியது.
உடனே தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அக்குழந்தைக்கு தண்ணீர் கொடுத்தோம். புரை ஏறிவிடாதபடி ஜாக்கிரதையாக. குழந்தையின் அப்பா அம்மா பார்த்துகொண்டிருந்தார்கள். ஒன்றும் சொல்லவில்லை. குழந்தை எச்சில் பட்ட அந்த பாட்டிலில் இருந்து ஒரு வாய் தண்ணீரை நாம் குடித்தோம்.
குழந்தையின் பெயரைக் கேட்டோம். மழலை மொழியில் ஏதோ சொன்னது. நமக்கு புரியவில்லை. பெற்றோர்கள் அந்த குழந்தையின் “பாஸ்கர்” என்று சொன்னார்கள். பாஸ்கருடன் அவன் ஐந்து வயது அக்காவும் வந்திருந்தாள். அக்குழந்தை துறு துறு என விஷமம் செய்வதற்கு தோதாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. குழந்தைகளை பார்க்காமல் ஆலய வழிபாடு நிறைவு பெறுவதில்லை. இந்த குழந்தைகளை பார்த்தவுடனேயே நமக்கு பரம திருப்தி ஏற்பட்டுவிட்டது.
பாஸ்கர் கோவிலுக்குள் அங்கும் இங்கும் ஓடி, ஒரு பரவசத்தை ஏற்படுத்திவிட்டான். அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, படியில் ஏறி உட்கார்ந்துகொண்டு அவன் இறங்க மறுத்தது அபிஷேகத்தைவிட இனிமையான ஒன்று. அனைவரும் அவனைத் தான் ரசித்துக்கொண்டிருந்தோம்.
நாம் காலை சாப்பிட்டது. அதற்கு பிறகு சாப்பிடவில்லை. எனவே முதலில் பசி பயங்கரமாக இருந்தது. பிறகு நேரம் செல்ல செல்ல அடங்கிவிட்டது. அதாவது பசி பழகிவிட்டது. தொடர்ந்து பணிகளில் ஈடுபட பசி குறித்த எண்ணமே மறைந்துவிட்டது. அபிஷேகம் முடிந்த பிறகு பிரசதாமாக கொடுக்கப்பட்ட கிடைத்த பஞ்சாமிர்தத்தை மட்டும் கொஞ்சம் சாப்பிட்டோம். எழுமிச்சை சாதம், புளியோதரை என்று வேறு சில பிரசாதங்கள் கொடுத்தார்கள். ஆனால் நாம் அவற்றையெல்லாம் தொடவில்லை.
இடையே அடிக்கடி எழுந்து போய் வெளியே ஆலய வளாகத்துக்குள் கிடந்த பேப்பர் பிளேட்டுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டு வந்தோம்.
நேரம் போவதே தெரியவில்லை. அப்படியே விடியற்காலை ஆகிவிட்டது. காலை 5.30 க்கு நான்காம் கால பூஜை. கடைசி கால பூஜையின்போது அம்பாளுக்கும் சேர்த்து அபிஷேகம் நடைபெறும் என்பதால் அனைத்தையும் தயார் செய்வதிலேயே நேரம் போய்விட்டது.
இந்த முறை சங்கல்பத்தின் போது விட்ட இடத்திலிருந்து அனைவரது பெயர் ராசி நட்சத்திரங்களையும் சொன்னோம். சமீபத்தில் தாத்திரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றபோது, சுவாதி நட்சத்திரம் கொண்ட சில வாசகர்கள் நண்பர்கள் பெயர் ராசி நட்சத்திரத்தை அனுப்பியிருந்தார்கள். அவர்கள் பெயருக்கும் அர்ச்சனை செய்தோம்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனையும் அபிஷேகமும் நடைபெறும்போது மணி எப்படியும் காலை 6.30 இருக்கும். அனைத்தும் முடிந்தபிறகு, எங்கள் அனைவருக்கும் மாமா பிரசாதம் கொடுத்தார்.
சனத்குமாரனையும் மாமாவையும் அழைத்து நண்பர் செந்தில் மற்றும் சுபாஷினி அவர்களை வைத்து விநாயகர் சன்னதிக்கு முன்பாக இருவரையும் கௌரவித்தோம். சீதாராமன் அப்போது அங்கே இல்லை. அருகே ஏதோ கோவிலுக்கு சென்றிருந்தார்.
இருவருக்கும் அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு, ஒரு தட்டில் வேட்டி மற்றும் சட்டை, வெற்றிலை பாக்கு பூ பழம் அடங்கிய தாம்பூலத்துடன் சிறிது ரொக்கமும் தரப்பட்டது.
“இதெல்லாம் எதுக்குப்பா.. வேண்டாம்….” என்றார் மாமா.
“இது எங்க ஆத்ம திருப்திக்கு. தடுக்காதீங்க மாமா..” என்று கூறி அவரை கௌரவித்தோம்.
சனத்குமாரனை கௌரவிக்கும்போது, “வேதம் படிக்கும் உனக்கு நாங்கள் செய்யும் இந்த மரியாதை மிக மிகச் சிறிய ஒன்று. ஊன்றீஸ்வரர் அருளால் எதிர்காலத்தில் உனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்ய ஆசைப்படுகிறோம். மந்திரங்களை ரொம்ப நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரித்தாய்… ரொம்ப சந்தோஷம். இதே போல எப்போதுமே அப்பாவுக்கு அவரது பணிகளில் உதவியாக இருக்கவேண்டும்!” என்று சொல்லி அவரை கௌரவித்தோம்.
ஊன்ரீஸ்வரரையும் மின்னொளி அம்பாளையும் மீண்டும் ஒரு முறை தரிசித்துவிட்டு அனைவரும் புறப்பட்டோம்.
நான்காம் கால பூஜை பிரசாதங்களை (கேசரி, வெண்பொங்கல்) ஆகியவற்றை நிறைய கொண்டு வந்து “இந்தாங்க சாப்பிடுங்க முதல்ல” என்று மாமா நம்மிடம் கொடுத்தார்.
“ஆஹா… மாட்டிக்கொண்டோமே…” என்று விழித்தேன்.
“மாமா.. எனக்கு பஞ்சாமிர்தம் மட்டும் போதும். வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கோ-சம்ரோக்ஷனம் & பிரசாத விநியோகம் முடிஞ்ச பிறகு தான் சாப்பிடுவேன். பஞ்சாமிர்தம் மட்டும் வேணும்னா கொஞ்சம் கொடுங்க… சாப்பிடுறேன்” என்றோம்.
“இந்த கதையெல்லாம் என் கிட்டே வேண்டாம்” என்று கூறியவர், “பிரசாதம் தானே… சாப்பிடலாம் பரவாயில்லை. சாப்பிடவில்லை என்றால் அடித்தே விடுவேன்!” என்றார்.
சாப்பிடாவிட்டால் விடமாட்டார் என்று தோன்றியது. நமக்கோ குளித்து முடித்துவிட்டு கோ-சம்ரோக்ஷனம் செய்த பிறகு தான் சாப்பிடவேண்டும் என்று ஆசை. இவரிடம் என்ன சொல்லியும் எடுபடவில்லை.
“சரி கொடுங்க…” என்று அவர் கொடுத்த கேசரி, வெண்பொங்கல் ஆகியவற்றை ஒரு சிறிய பேப்பர் தட்டில் வாங்கிக்கொண்டு நைசாக அந்தப் பக்கம் போய் அதை ஒரு கேரி பேக்கில் டிரான்ஸ்பர் செய்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டோம்.
அவர் அதற்குள் தீபாராதனை காண்பிக்க சென்று விட நாம் எஸ்கேப். அனைவரும் ஊன்றீஸ்வரரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
செந்தில் அத்தனை களைப்பிலும் நன்றாக கார் டிரைவ் செய்தார். நம்மை வீட்டருகிலேயே விட்டுவிட்டார். சீதாராமன் மற்றும் சுபாஷினி ஆகியர் இருவரும் போரூரில் இறங்கிக்கொண்டார்கள்.
நாம் வீட்டிற்கு வரும்போது எப்படியும் மணி 8.30 இருக்கும். உடனே குளித்து முடித்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு புறப்பட்டோம்.
நாம் ஏற்கனவே கோ-சம்ரோக்ஷனத்துக்கு நெய்யும் பாலும் சேர்க்காத சர்க்கரைப் பொங்கலும், பக்தர்கள் சுமார் 100 -150 பேருக்கு விநியோகிக்க நெய்யும் பாலும் போட்ட சர்க்கரைப் பொங்கலும் ஏற்பாடு செதிருந்தோம்.
(*பால் மற்றும் நெய் ஆகியவை பசுவிடமிருந்து கிடைப்பதால் அவற்றுக்கு இவை கலந்த உணவை தரக்கூடாது என்று மஹா பெரியவா ஒரு முறை சொல்லியிருக்கிறார்.)
நாம் கோவிலுக்கு போகும் 10.00 ஆகிவிட்டது. பாலாஜி பதட்டத்துடன் காத்திருந்தார். கூட்டம் குறையத் துவங்கிவிட்டது. பிரசாதத்தை அப்புறம் யாருக்கு கொண்டு போய் தருவது?
முதலில் காசி விஸ்வநாதருக்கு அர்ச்சனை செய்தோம்.
சில பல காரணங்களினால் சிவராத்திரி விரதத்தை சரியான முறையில் நாம் அனுசரித்தோமா இல்லையா என்கிற சந்தேகம் நமக்கு இருந்துகொண்டே இருந்தது. “ஐயனே என் வாசகர்கள் உட்பட பலர் இந்த முறை முதன் முறையாக சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்ககூடும். பலருக்கு இரவு முழுதும் கண்விழித்து உன்னை தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கக்கூடும். அவர்கள் விரத முறையில் இருந்த குற்றம் குறைகளை பெரிதுபடுத்தாமல் சிவாராத்திரி விரதத்தின் முழு பலனையும் நீ அவர்களுக்கு தரவேண்டும். நான் செய்த விரத முறையில் கூட தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. நான் இன்னமும் இந்த உலகில் ஒரு மாணவன் தான். தினம் தினம் பாடம் கற்று வருகிறேன். சரியாக விரதம் இருந்தேன்னா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. விரத பங்கம் நிகழ்ந்திருக்கலாம். இருப்பினும் பெற்றவன் நீ. பொறுப்பது உன் கடன். எல்லா குறைகளையும் மன்னித்து நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் மன நிம்மதியையும் சாந்தியையும் அனைவருக்கும் தரவேண்டும்!”
அர்ச்சனை முடிந்து அர்ச்சகர் நமக்கு ஒரு சிறிய மலர்ச் சரத்தை சூட்ட, “ஓம் நம சிவாய” என்று கூறியபடி அதை ஏற்றுக்கொண்டோம். பிரசாதத்தை நைவேத்தியம் செய்துவிட்டு என்னிடம் அந்த பிரசாத தூக்கை தந்தார்.
முதலில் கோ-சாலைக்கு போய் அவற்றுக்கு சர்க்கரைப் பொங்கலை அளித்தோம். அவை ஆர்வமுடன் சாப்பிட்ட பின்னர் தான் நமக்கு நிம்மதியாக இருந்தது.
அப்போது நேரம் எப்படியும் 10.30 இருக்கும். கூட்டம் ரொம்ப குறைவாக இருந்தது. இருக்குற கூட்டமும் கிளம்புறதுக்கு முன்னால முதல்ல பிரசாதத்தை கொடுத்திடுவோம் என்று பிரசாதத்தை அங்கே டேபிளில் வைத்து தொன்னையில் பிரசாதத்தை கொடுக்க ஆரம்பித்தோம். அனைவரும் சூடான அந்த சர்க்கரைப் பொங்கலை ஆர்வத்துடன் வாங்கிச் செல்ல, ஒரு அரை மணிநேரத்தில் பிரசாதம் முழுதும் காலியாகிவிட்டது. சிறு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் வாங்கியபோது தான் நமக்கு நிறைவாக இருந்தது.
சாஸ்திரப்படி பூர்த்தி செய்யவேண்டும் என்றால் பலருக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு அன்னதானம் செய்யவேண்டும். நாமோ பிரசாதத்தை ஒரு தொன்னையில் விநியோகித்தோம். அவ்வளவு தான். ஆனால் இதை ஏற்பாடு செய்து சரியாக முடிக்கவே போதும் போதுமென்றாகிவிடுகிறது.
முதலில் வாங்கிய பக்தர்கள் சிலர் அங்கே ஓரமாக அமர்ந்து வாயில் சிறிது பொங்கலை போட்டபிறகு தான் சிவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்த திருப்தி வந்தது. நமக்கு சாப்பிட இரு தொன்னைகளில் எடுத்து வைத்திருந்த பிரசாதத்தை ஒரு ஓரமாக அமர்ந்து ‘ஓம் நம சிவாய’ என்று சொல்லி சாப்பிட்ட பின்னர் தான் சிவராத்திரி விரதம் முழுமை பெற்றது.
நாம் நம் வாசகர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இந்த முறை சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்காதவர்கள் குறைந்தது ஒரு நூறு பேராவது இந்த பதிவை பார்த்துவிட்டு அடுத்த முறை சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். இந்த விஷயத்தில் உங்களிடையே ஒரு ஆர்வத்தை தூண்டவும், எப்படி விரதமிருப்பது என்பதை உங்களுக்கு அனுபவப்பூர்வமாக உணர்த்தவுமே இந்த பதிவை அளித்தோம். மற்றபடி வேறொன்றுமில்லை.
==============================================================
Also check :
மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6
சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5
சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4
இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3
மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!
கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12
==============================================================
[END]
மிக அழகிய நீண்ட பதிவு.
படங்களையும் கோவிலையும் பார்க்கும் போது அங்கு பணி செய்ததது எங்கள் பாக்கியம். இது வரை செய்த உழவர பணிகளில் பூண்டி பணி எங்களால் எப்போதுமே (நான், விஜி மற்றும் உமா ) மறக்க முடியாது.
பதிவை படித்த பிறகு எங்களால் உங்களுடன் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது. அந்த உணர்வு உமாவுக்கும் வரும். அந்த அளவுக்கு இந்த கோயில் உங்களை கவர்ந்துள்ளது.
உங்கள் எழுத்து நடை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.
ellam avar seiyal.
பரிமளம் இனிய காலை வணக்கம். எனாகும் ஊன்றீஸ்வறரை மறக்க முடியவில்லை , அன்றும் , இன்றும் என்றும் மறக்க முடியாத ஓர் உன்னத கோவில். நாம் அந்த கோவில் உழவார பணியின் பொழுது இறைவன் இறைவியின் வஸ்திரங்களை (கிட்டத் தட்ட 100 செட்) தோய்த்து உணர்த்தி வெய்யிலில் காய வைத்து மடித்து வைத்ததை மறக்க முடியாது. நான் கூட விஜியிடம் நீங்கள் வஸ்திரத்தை அடித்து அடித்து துவைக்கும் சத்தம் அந்த இறைவன் காதில் கண்டிப்பாக விழும். ஜனனி அதிக மதிப்பெண்கள் எடுத்து 10 வது வகுப்பில் தேர்ச்சி பெறுவாள் என்று சொன்னேன் . அதே போல் அவள் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். பூண்டீஸ்வரர் கண் கண்ட தெய்வம். அதே போல் போன வருடம் நம் ஆசிரியர் சிவராத்திரி விரதம் கடைபிடித்தார். இந்த வருடம் அலுவலகம் திறந்து விட்டார். இந்த வருட பலன் அவருக்கு கை மேல் கிடைக்கும். எனக்கும் சிவராத்திரி விரதம் இந்த முறை இருக்க முடியவில்லை . எனக்கு இந்த வருடம் செல்ல முடியவில்லை என மிக்க வருத்தமாக இருந்தது. பதிவை படித்து ஆத்மதிருப்தி ஏற்பட்டது. இந்த வருடமும் என்னால் விரதம் இருக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் தட்டி விட்டது. வரும் வருடம் உடலும் , மனமும் ஒத்துழைத்தால் கண்டிப்பாக ஊன்றீச்வர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்வேன் நம் சகோதர சகோதரிகளுடன். மீண்டும் அந்த கோவில் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது இறை அருள் இருந்தால் கண்டிப்பாக நடக்கும்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர்ஜி
மிகவும் நல்ல பதிவு. உங்கள் உடன் இருந்தது போல உணர்கிறேன். பலருக்கும் இது ஒரு தூண்டு கோளாக இருக்கும். சில பல காரணங்களால் என்னால் முழு விரதமும் இருக்க
முடியவில்லை. இது தொடக்கம் தான் வரும் ஆண்டு கன்டிப்பாக முழு விரதமும் இருப்பேன். நன்றிகள் பல
அருமை சுந்தர். இரண்டாவது முறையாக சிவராத்திரி விரதம் இருந்தேன். மனசுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு இருக்கிறது. இரண்டு வருடமும் ஊன்றீஸ்வரர் அவர் சந்நிதானத்திற்கு என்னை வரவழைத்து விட்டார். இதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஒம் சிவாய நாம.
சிவராத்திரி final பதிவு படிக்க படிக்க திகட்டாத பதிவு. அத்தனை படங்களும் அருமை. நாங்கள் கலந்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது. மொத்தத்தில் இந்த சிவராத்திரி விரதம் தங்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் சிவராத்திரி யாக இருக்க வாழ்த்துகிறேன்.
அத்தனை படங்களும் அருமை.
நன்றி
உமா வெங்கட்
மிகவும் சிரத்தையாக விரதம் இருந்து சிவனை வழிபட்டு இருகிரிகள். படங்களும் அருமை. மீண்டும் நன்றி.
இறைவன் திருவருளால் சிவராத்திரி விரதத்தை சிறப்பாக முடித்த தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்……….அடுத்த முறை நம் தள வாசகர்கள் இணைந்து ஒரு குழுவாக சிவராத்திரி விரதம் கடைபிடிக்கவும் ஆலய வழிபாடு செய்யவும் ஏற்பாடு செய்யுமாறு சிவபெருமானை வேண்டிக் கொள்கிறோம்………
தங்களின் இந்த பதிவை வாசிக்கும் போது,தங்களின் முந்தைய இரு ஆண்டுகளின் சிவராத்திரி சிவாலய பதிவுகளையும் வாசித்தேன்.
என்ன ஒரு அற்புதமான உரைநடை. இப்பதிவினை வாசிக்கும் போது உங்களுடன் இணைந்து சிவாலய தரிசனம் செய்வது போன்ற உணர்வினை அடைநதேன் என்றால் அது மிகையல்ல
அந்த உணர்வினை வார்த்தையால் விவரிக்க இயலாது.
வழக்கம் போல் தங்கள் புகைப்படங்கள் யாவும் சூப்பர். அதுவும் அந்த ஓம் படம் ஜோதி மயமாக. அற்புதம்
வரும் சிவராத்திரி அன்று பாடல் பெற்ற ஸ்தலமான திருப்பபாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் விரதம் அனுஷ்டிக்க முடிவு செய்து உள்ளேன்.
இறைவன் அருள் புரிய வேண்டும்
ஓம் நமச்சிவாய
டியர் சுந்தர்ஜி ,
நான் தங்களுடன் சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு வந்து என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் என் வயதான தந்தையை வீட்டில் தனியாக விட்டு எங்கும் வர முடியவில்லை. ஆதலால் முடிந்த வரை நான் அன்றிரவு கண்விழித்து எனக்கு தெரிந்த வகையில் நம் இறைவனை தியானித்தேன். எல்லாம் வல்ல சிவ பெருமான் என் நிலைமையை புரிந்து கொள்வார். திருப்பதி தரிசனமும் மிக நன்றாக அமைந்தது. வரும் காலங்களில் என்னால் முடிந்த ஒத்துழைப்பை கண்டிப்பாக தருவேன்.
ஓம் நம சிவாய .
அன்புடன்,
ரமாஷங்கர்
Dear Sundar,
Wonderful series of articles on the Sivarathri occassion and i suppose the quote you often used to share applies to us when we stay connected with you… “Nallarodu Inangi Iruppadhuvum Nandre’ May god bless you with all you desire as you continue with your amazing dedication.
Regards
Prabu
நண்பருக்கு வணக்கம், சிவராத்திரி விரதம், குருவாயூர், மம்மியூர் ஆலய தரிசனம் ஆகிய காரணங்களால் கடந்த மூன்று நாட்களாகப் பதிவுகளைப்படிக்க முடியவில்லை. அனைத்துப் பதிவுகளையும் இன்றுதான் படித்தேன். இந்த வருடம் சிவதீட்சைப் பெற்றுக்கொண்டேன். பதிவுகள் அனைத்தும் பிரமிப்பையும் மகிழ்வையும் நிறைவையும் தருகின்றன.. மிக்க நன்றி.
சிவதீக்ஷை பெற்றுக் கொண்ட திருமதி தமிழ் செல்வி ஞானப்ரகாசத்திற்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் . சிவ தீக்ஷை என்பது மிக எளிதில் கிடைக்கும் விஷயமல்ல. அந்த ஈசன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாக இருக்கிறது. தங்கள் கோரிக்கைகள் யாவும் நிறைவேற எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவான்
நன்றி
சகோதரி உமா வெங்கட்
சகோதரி உமா அவர்களுக்கு நன்றி!. தாங்கள் சொல்வது உண்மைதான், ஆறு வருடங்களாகக் காத்திருந்த பிறகு தான் சிவதீக்கை பெறும்பேறு பெற்றேன்.
வணக்கம் சுந்தர் சார்,
சிவராத்திரி பதிவு மிகவும் அருமை.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலுருந்தே அணைத்து தளங்களுக்கும் சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். ஜோதி தரிசனம் கண் கொள்ளா காட்சி. மிகவும் நன்றி.
உங்களின் ஆன்மீக பயணம் எப்போதும் வெற்றி அடைய எல்லாம் வல்ல அந்த பரம்பொருள் அனுக்கிரகம் புரியட்டும்.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஓம் நம சிவாய.
மிகவும் அருமையான பதிவு.
தங்களது புகைப் படங்களால் எங்களால் பார்க்க முடியாத கோவில்களையும் பார்க்க செய்கிறீர்கள்.
மிக்க நன்றி.
சிவராத்திரி பதிவு மிக அற்புதம்.
வாழ்க வளமுடன்
சுந்தர் ஐயாவுடன் சுந்தரர் வழிபட்டு ஊன்றுகோல் பெற்ற ஊன்றிஸ்வரர் ஆலயம் சென்று சிவரத்ரியை அனுபவித்து வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது . வாய்பு அளித்த செந்தில் ஐயாவுக்கும் நன்றி .பரபரப்பு இல்லாத ஒரு ரம்மியமான திருத்தலம் . நீயும் நானுமாய் ஏக போகமாய் இறைவனோடும் , இறைவியோடும் ஏகாந்தமாய் இருந்தோம்
வணக்கம் சுந்தர் சார்
நான் இந்தவருடம் கபலிஸ்வரர் கோவில் சிவராத்திரி அன்று சென்றிருந்தேன். அருமயான பதியு நன்றி .
சுந்தர்ஜி
சிவராத்திரி பதிவு மிகவும் அருமையாக இருந்தது . தங்களுக்கு சிவனின் அருள் பரிபூரணமாக இருக்கிறது.
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி. உண்மை . அனைத்தும் அவன் செயலே. நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் திரு சுந்தர் அவர்கள் பல பேருக்கு வழி காட்டி ஆக விளங்க வேண்டும் என்று அந்த கருணா மூர்த்தி திரு வருள் கொண்டான் போலும்.
திரு சுந்தர் அவர்களின் பணிவு சிவன் அருளால் என்றும் அவருக்கு இருக்கும்.
ஓம் நமசிவாய.
கே. சிவசுப்ரமணியன்.