சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று மாணிக்கவாசகர் கூறியதில் எத்தனை எத்தனை பொருள். நினைத்து நினைத்து நாம் வியக்கும் வரிகளுள் இதுவும் ஒன்று. அவர் கூறுவதைப் போல அவன் அருள் இருந்தால் தான் அவனைப் பற்றிய நினைவே வரும்.
சிவபெருமான் இயல்பாகவே அனந்த கல்யாண குணங்களை உடையவர். அவர் எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர். தனக்கு எதுவும் ஆதாரமாக இன்றி ஆனால் தானே அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர் – இப்படி எத்தனையோ சொல்லலாம்.
நாயன்மார்கள் வரலாற்றை சற்று கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பல வரலாறுகள் அந்தந்த நாயன்மார்களின் தனித் தன்மையை, அவர்களின் சிவபக்தியை, கொண்ட கொள்கை மீது அவர்கள் வைத்திருந்த உறுதியை பறைசாற்றும். ஆனால் சிலரது வரலாறை பார்த்தால், அது அவர்களின் சிறப்பை பற்றி மட்டுமல்லாது சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்களையும் பறைசாற்றும். சிவபெருமானை பற்றிய பெரும்பாலானோர் எண்ணங்களை மாற்றியமைத்ததே இந்த அடியார்களின் வரலாறும் அவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்த விதமும் தான் என்றால் மிகையாகாது. (உ.ம். திருநீலநக்க நாயனார், சாக்கிய நாயனார் போன்றோர்!)
இந்த பதிவில் உள்ள பூசலார் நாயனாரின் சரிதத்தை உங்களில் பலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். இருப்பினும் நாயன்மார்கள் வரலாற்றில் நமக்கு மிகவும் பிடித்த வரலாறுகளுள் இதுவும் ஒன்று என்பதால் இந்த சிவராத்திரி தினத்தன்று அவசியம் பதிவு செய்ய விரும்பி இங்கு அளிக்கிறோம்.
ஒன்பது விதமான பக்திகளுள் ஒன்று ஸ்மரணம். அதாவது மனதுக்குள் இடையறாது இறை நாமத்தை மனனம் செய்வது. அப்படிப்பட்ட உன்னதமான பக்தியாகிய ஸ்மரணம் மூலம் மனதுக்குள்ளேயே இறைவனை பூஜிக்கும் ‘பாவன பூஜை’யையே வேள்வியாய் கொண்டு இறைவனை வேண்டி ஒரு இலுப்பை மரத்தடியில் தியான நிலையில் அமர்ந்து தனது மனதுக்குள்ளேயே கோயிலை கட்டிய ஒரு தொண்டரைப் பற்றி பார்ப்போம்.
மனக்கோயில் கொண்ட மாணிக்கம்!
கி பி 7ம் நூற்றாண்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் பிறந்தவர் பூசலார் என்னும் அடியார். சிறந்த சிவபக்தர். சிவபெருமானுக்கு கோவில் கட்டவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. ஆனால் அவரோ மிகவும் ஏழை. வறுமையான குடும்பச் சூழ்நிலை. அடுத்த வேளை உணவுக்கே அடுத்தவரை அண்டி வாழும் அவரால் ஆலயம் எப்படி கட்ட முடியும்? என்ன செய்வார்? அங்கே இங்கே சென்று பொருளீட்ட முயற்சி செய்தார்.
ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும் என்பார்களே அது போலத் தான் முடிந்தது அவரது பொருளீட்டும் முயற்சி. எவரும் உதவ முன்வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவர் கடைசியில் தான் கட்ட நினைத்த சிவாலயத்தை மனத்திலேயே கட்ட முடிவெடுத்தார்.
மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்
மனதிலேயே அஸ்திராவரம், அதன் மேல் மதில் சுவர், யாக மண்டபம். சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, நவக்கிரக சன்னதி என அனைத்தையும் கட்டி முடித்தார். பல நூறு பணியாளர்களை வைத்து ஒரு நிஜ கோவிலை கட்ட எத்தனை நாட்கள் ஆகுமோ அத்தனை நாட்கள் அவர் எடுத்துக்கொண்டார். இப்படி மனக்கோயிலை கட்டும் பொருட்டு சதா சர்வ காலமும் இலுப்பை மரத்தடியிலேயே அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தமையால் ஊரார் அவரை பித்தன் என்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக கோவிலை கட்டி முடித்து குடமுழுக்கு நன்னாளையும் கணித்து விட்டார் பூசலார். இந்த நேரத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் என்பவன் காஞ்சியில் கயிலாயநாதர் ஆலயத்தைக் கட்டி முடித்து குடமுழுக்குக்கான நாளை வேத விற்பன்னர்களைக் கொண்டு தீர்மானித்தான். இதையடுத்து ஊரே விழாக்கோலம் பூண்டது. குடமுழுக்கை எதிர்கொள்ள தயாரானது.
ஒரு மிகப் பெரிய பணியை நிறைவு செய்த திருப்தியில் மன்ன அன்றிரவு உறங்கச் சென்றான். அவன் கனவில் பரமேஸ்வரன் தோன்றி “அன்பனே! நீ கும்பாபிஷேகம் செய்யப்போகும் கோயிலுக்கு நாம் அன்று வருவதாக இல்லை. திருநின்றவூர் என்னும் பதியில் வாழும் நம் அன்பன் ஒருவன் நெடிது நாட்களாக நினைத்துக் கட்டி முடித்த கோயிலில் அன்று கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. நாம் அங்கு தான் எழுந்தருளப் போகிறோம். எனவே நீ வைத்திருக்கும் கும்பாபிஷேகத்தை வேறொரு நாளில் வைத்துக் கொள்!” என்று கூற, திடுக்கிட்டு விழித்த மன்னன் தன் பரிவாரங்களுடன் மறுநாள் திருநின்றவூர் புறப்பட்டான்.
ஆனால் அங்கு ஒரு கோவில் கட்டப்பட்டதற்க்கான அறிகுறியே இல்லை. கனவு பொய்யோ? சிவபெருமான் நேரில் சொல்வது போல இருந்ததே. ஊர் பெயர் முதல் கட்டியவர் பெயர் வரை சரியாக சொன்னாரே. எதற்கும் விசாரித்து பார்ப்போம் என்று கருதி, அங்கே ஊராரிடம் “இங்கே பூசலார் என்று யாரும் இருக்கிறார்களா? அவர் சிவாலயம் எதையேனும் கட்டியிருக்கிறாரா?” என்று விசாரித்தான்.
ஊரார்… “பூசலார் என்று ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் ஆலயமெல்லாம் கட்டவில்லை. எப்போது பார்த்தாலும் சிவநாமம் ஜபித்தபடி இருப்பார். இப்போது கூட ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உள்ள இலுப்பை மரத்தடிக்கு சென்றால் அவரை பார்க்கலாம். வேந்தர் விரும்பினால் அவரை அழைத்து வருகிறோம்” என்றனர்.
“இல்லையில்லை… அவரை தேடி நான் செல்வதே சிறப்பு” என்று கூறியபடி பூசலாரைத் தேடிச் சென்றான் மன்னன். தியானத்தில் இருந்த பூசலாரைக் கண்டான். பணக்கோயில் எழுப்பிய வேந்தனும், மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரை ஒருவர் கண்டனர்.
தாங்கள் கட்டிய ஆலயத்தின் குடமுழுக்கு காண வந்தேன் என்று கூறி நடந்ததை விவரித்தான் மன்னன். அது கேட்டு அதிர்ந்தார் பூசலார்.
“கோவில் எங்கே? நான் பார்க்கலாமா?” என்றான் வேந்தன்.
“இதோ என் மனத்தில் தான் கட்டினேன்!” என்று தன் இதயத்தை கை வைத்து காண்பித்தார் பூசலார்.
“அடடா! இவர் இதயத்தில் கட்டிய கோவிலுக்கு மதிப்பளித்து இறைவன் நாம் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தை ஒத்திவைக்கச் சொல்கிறான் என்றால் இவர் பக்தி எப்படிப்பட்டது?” வியந்த மன்னன் பூசலாரை வீழ்ந்து வணங்கினான்.
பூசலார் மனதுக்குள் கட்டிய கோவிலை தாம் நிஜத்தில் கட்டித் தர விரும்பினான். பூசலார் இதயத்துக்குள் கட்டியமையால் இருதயாலீஸ்வரர் கோயிலை எழுப்பிப் பூசலார் கனவை நனவாக்கிய பின்பே காஞ்சி சென்றான்.
எந்த நாயனமாருக்கும் இல்லாத சிறப்பு பூசலார் ஒருவருக்கே உண்டு. ஆம்… கருவறையில் இறைவனுக்கு அருகிலேயே பூசலாரும் காட்சி தருகிறார் என்பதே.
இங்கு மூலவருக்கு மேல் இதய வடிவம் செதுக்கப்பட்டிருக்கும் என்கிற தகவல் ஒன்று வெளியே பரவியிருக்கிறது. அது தவறு. உண்மை என்னவென்றால், பூசலாரின் திருவுருவச் சிலையை சற்று உற்று நோக்கினீர்கள் என்றால் அவர் இதயத்தில் கைவைத்திருப்பது போல இருக்கும். அங்கு சிவலிங்கம் ஒன்று இருக்கும். அர்ச்சகரிடம் கூறி அங்கு ஆரத்தி தட்டை காண்பிக்கச் சொன்னால் அதை நன்கு தரிசிக்கலாம். திருநின்றவூர் இருதயாலீஸ்வரரை தரிசிக்கச் சென்றால் அவசியம் இதையும் தரியுங்கள். ஏனெனில் அது தான் ‘மனக்கோயில் கொண்ட மாணிக்கம்’.
நினைத்துப் பாருங்கள். நாட்டையாளும் அரசன் ஒரு கோவில் கட்டுகிறான். அதே நேரம் ஏழை ஒருவன் நிஜத்தில் கோவில் கட்ட வசதியின்றி மனதுக்குள்ளேயே கோவில் கட்டுகிறான். நம் இறைவனோ, நீ வேறொரு கும்பாபிஷேகத்திற்கு வேறொரு நாளை பார்த்துக்கொள் என்று அரசனிடம் சொல்லிவிட்டு, ஏழையின் மனக்கோவிலுக்கு எழுந்தருளச் செல்கிறான். இப்படி ஒரு சம்பவம் உலகில் எந்த சமய வரலாற்றிலாவது உண்டா? அதுவும் ஆதாரப்பூர்வமாக? இப்படி ஒரு தெய்வம் நாம் ஈரழு ஜென்மங்கள் தவமிருந்தாலும் கிடைக்குமா? ஈசன் கழலினைப் பற்றுவோம். இகபர சுகங்களை அடைவோம்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
இதய நோய் தீர
இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள், நோய் குணமாக திங்கட் கிழமைகளில் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள். இங்கே சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவத்தில் காட்சி தருவதும் ஓர் அதிசயம்தான். மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். கஜபிருஷ்ட விமானமாக தூங்கானை மாடம் வடிவில் இருதயாலீஸ்வரரின் விமானம் அமைந்துள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நந்திதேவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கி மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அமைப்பு.
இதயநோய் குணமாக திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பக்தி மிக்க இதயநோய் டாக்டர்கள் தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
(அது சரி…. ‘அனந்த கல்யாண குணங்கள்’ என்றால் என்ன என்கிற உங்களில் சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். ‘அனந்த’ என்றால் முடிவேயில்லாத என்று பொருள். அப்போ பதிவுக்கு நம்ம தலைப்பு சரி தானே?)
==============================================================
(அறிவிப்பு : சிவனின் பெருமை எழுத்திற்குள் அடங்குமா என்ன? சிவராத்திரி சிறப்பு பதிவு – 6 கூட தயாராக உள்ளது. மாலை அல்லது இரவுக்குள் அது அளிக்கப்படும். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நமது சிவராத்திரி அனுபவங்கள் தொடர்பான பதிவை அளித்த பிறகு இந்த வருட சிவராத்திரி சிறப்பு பதிவுகள் நிறைவு பெறும். அதன் பின்னர் இராமநாம மகிமையை விளக்கும் தொடர் முழு வேகம் பெறும்!)
==============================================================
Also check :
சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4
இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3
மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!
கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=சிவராத்திரி&x=6&y=12
==============================================================
[END]
Very good information.
Padmavathi
இந்த இனிய சிவராத்திரி நாளில் சிவபெருமானை பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்கிறது. தாங்களும் சிவசிந்தையில் மூழ்கி வாசகர்களாகிய எங்களையும் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். நாங்கள் கோவிலுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் செல்ல முடியாவிட்டாலும் எங்கள் மனதிற்குள் சிவன் குடி கொண்டு விட்டார் தங்கள் தளம் மூலமாக. பூசலார் போன்று நாம் இறைவனிடம் அன்பு செல்லுத்தி நம் உள்ளத்தில் கோவில் கட்ட வேண்டும் அதுவே உன்னதமான பக்தி.
படங்கள் கண் கொள்ளாக் காட்சி. அடுத்த பதிவை இன்றே அளித்து விடுங்கள். படிப்பதற்கு நாங்கள் ரெடி.
சிவன் லிங்கத்தில் அருள் புரிகின்ற இன் நன் நாளில் நாம் இறைவனை வணங்கி பல்வேறு சகல சௌபாக்கியங்களும் பெறுவோம். சிவாய நாம என சிந்தனை செய்பவர்களுக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை இன்று விரதம் இருந்தால் முக்தி கிடைக்கும் சிவராத்திரி விரதம் இருந்து பிரம்மா சரஸ்வதி தேவியை மனைவியாக பெற்றார் . மகா விஷ்ணுவும் இன் நாளில் விரதம் இருந்து மகா லக்ஷ்மியை மனைவியாக பெற்றார் .
அழகிய பதிவிற்கு மிக்க நன்றி
உமா வெங்கட்
வரிசையாக jet வேகத்தில் பதிவுகள் வெளிவருவதைக் கண்டு மகிழ்ச்சி.
ஓம் நம சிவாய
ஹர ஹர சங்கர!! ஜெய ஜெய சங்கர!!
முழு அர்பணிப்பு உள்ள சுத்தமான மனம் இறைவன் குடி இருக்கும் இடம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
இந்த பதிவு
இத்தகைய பதிவுகள் நம்முடைய இறை பணியினை/ பாதையை செம்மை படுத்துகின்றன.
வளரட்டும் உங்கள் மகத்தான சேவை
மிக்க நன்றி
சிவராத்ரி பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது…சிவராத்ரி அன்று அவரைப்பட்றிப் படிப்பதும் நினைப்பதும் நாங்கள் செய்த பாக்கியமே,…
சிவராத்திரி நன்னாளில் சிவனை பற்றி மேலும் மேலும் புதிய தகவல்கள்… எத்தனை நன்றி கூறினாலும் போதாது!!!
இன்று தரிசிக்க முடியாவிட்டாலும் படிகமுடிந்ததே பெரும் புண்ணியம் . நன்றி சுந்தர்.
சுந்தர்ஜி
அருமையான பதிவுகள். நன்றிகள் பல பல.
ர. சந்திரன்
சிவராத்திரி பதிவு மிக மிக அருமை.
நன்றி
வாழ்க வளமுடன்
என் சிறு வயதில் தாத்தா சொன்ன கதை , பெரும்பாலான வீடுகளில் இப்போது தாத்தாவும் இல்லை , கதை சொல்லவும் , அதை கேட்கவும் நேரமும் இல்லை . இவற்றை குழந்தைகள் படிக்கும்படி சொல்ல வேண்டும்
நன்றி