Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, October 5, 2024
Please specify the group
Home > Featured > கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

print
திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான். பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார். எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார். கூடவே லக்ஷ்மணனும்.

இதை நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய், வைகுண்டம் போய் கருடனிடம், “இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும். நீ உடனே சென்று இராமபிரானை காப்பாற்று” என்கிறார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற 108 வைஷ்ணவ திவ்ய தேச கண்காட்சியிலிருந்து...
அண்மையில் சென்னையில் நடைபெற்ற 108 வைஷ்ணவ திவ்ய தேச கண்காட்சியிலிருந்து…

கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். பரமனையே காப்பாற்றியதால் கருடனுக்கு கர்வம் ஏற்பட்டது.

“என்ன நாரதரே இராமர் பரம்பொருள் அவரே எல்லாம் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இல்லாவிட்டால் இராமரை யார் காப்பாற்றியிருப்பார்கள்?” என்றார்.

கருடனுக்கு ஏற்பட்டுள்ள கர்வத்தை புரிந்துகொண்ட நாரதர், இந்த சந்தேகத்தை சத்தியலோகம் சென்று பிரம்ம தேவரை கேட்கும்படி ஆலோசனை கூறினார். உடனே சத்தியலோகம் சென்ற கருடன் அங்கு பிரம்மதேவரிடம் கேட்க, பிரம்மதேவரோ “நான் சதாசர்வ காலமும் சிவ நாமத்தை ஜபித்துகொண்டிருப்பவன். எனக்கு எப்படி அது பற்றி தெரியும். ஒருவேளை சிவபெருமானிடம் கேட்டுப்பார். எனக்கு தெரிந்து அவர் ஒரு சிறந்த ராம பக்தர். உன் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்!” என்றார்.

உடனே கருடன் கயிலாயம் சென்றான். அங்கு சிவபெருமானை பார்க்க, தேவாதி தேவர்களும் ரிஷிகளும் காத்திருக்க, சிவபெருமான் தரிசனத்திற்கு வர தாமதமானது.

கைலாயத்தில் ஒரு நொடி என்பதன் கணக்கே வேறு. சில நொடிகள் கருடன் காத்திருக்க அதற்குள் பல யுகங்கள் முடிந்திருந்தன.

கருடன் இறுதியில் நந்தியிடம் கெஞ்சினார். “நந்தி பகவானே, ஒரு பெரும் சந்தேகத்தை பரமேஸ்வரனிடம் கேட்க வந்திருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் தரிசனம் தரச் சொல்லுங்களேன். நான் மட்டுமல்ல இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும்  அவர் தரிசனதிற்காக காத்திருக்கிறார்கள்” என்று கூற, “சுவாமி பூஜையில் இருக்கிறார். அது முடிந்ததும் வருவார்!” என்று நந்தி கூற கருடன் திடுக்கிட்டார்.

Garuda

என்னது சிவபெருமான் பூஜையில் இருக்கிறாரா? முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கே அவருக்காக காத்திருக்க அவர் யாரை பூஜித்துக் கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் ஏற்பட்டது கருடனுக்கு.

அடுத்த கணம் அங்கே பிரத்யட்சமான சிவபெருமான், “கருடா நான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பூஜித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக அழைத்தது ஏனோ?”

கருடனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

“சுவாமி… இங்கே முப்பத்துமுக்கோடி தேவர்களும் யுகயுகமாக தங்கள் தரிசனத்திற்கு காத்திருக்க, தாங்களோ ராமனை பூஜித்ததாக சொல்கிறீர்கள். நானோ அவரது மகத்துவம் உணராத பாவியாகிவிட்டேன். என் கர்வம் இத்தோடு ஒழிந்தது. இராமபிரானை நாகபாசத்திலிருந்து விடுவித்ததால் தலைக்கனத்தோடு திரிந்தேன். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மீது எனக்கு மாறாத பக்தி ஏற்பட என்ன செய்யவேண்டும்? அதற்கு அருள் செய்யுங்கள்…” என்று கேட்டுக்கொள்ள, பரமேஸ்வரன், மெலிதாக புன்னகத்தார்.

ஒரு பறவைக்கு மற்றொரு பறவையின் மூலமே ஞானத்தை புகட்டவேண்டுமே என்று திருவுள்ளம் கொண்ட கங்காதரன், “கருடா, அதை என்னால் விளக்க இயலாது. அதற்கு சாதுக்களின் சத்சங்கம் வேண்டும். நீ நேராக கயிலையின் வடக்கே உள்ள நீலாச்சலத்திற்கு செல். அங்கு காகபுசுண்டி ஹரியின் பெருமைகளை இதர ஜீவராசிகளுக்கு கூறிக்கொண்டிருப்பார். அவர் உனக்கு ராமபிரானின் மகத்துவத்தை விளக்குவார்” என்று கூறி மறைந்தார்.

கருடனும் நீலாச்சலத்திற்கு சென்று காகபுசுண்டியை வணங்கி, இராமபிரானின் பெருமைகளை கூறுமாறு கேட்டுக்கொள்ள, அவரும் இராமபிரானின் பெருமைகளை விளக்கி, அனைத்தும் இராமபிரான் உருவாக்கிய மாயையே என்று விளக்கி கூறினார்.

“சுவாமி… இராமபிரானை விட மகத்துவம் மிக்கவர் அண்ட சராசரத்தில் எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டேன். நன்றி!”

“இல்லை கருடா… இராமபிரானை விட மகத்துவம் மிக்கது ஒன்று இருக்கிறது….”

“என்ன இராமபிரானைவிட மகத்துவம் மிக்கது இருக்கிறதா?” கருடன் ஆச்சரியத்திலும் குழுப்பத்திலும் மூழ்க, “இராமநாமமே அது. இராமனைவிட அவன் நாமத்திற்கு மகத்துவம் அதிகம்!” என்றார் காகபுசுண்டி.

கருடனும் தெளிவுபெற்று அது முதல் இராமபக்தியில் சிறந்து விளங்கினார்.

ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே
– விஷ்ணு சஹஸ்ர நாமம்

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் பரமேஸ்வரன் பார்வதியிடம் கூறிய இந்த வரிகளின் அர்த்தம் தெரியுமா? ராம ராம ராம என்று ஒரு முறை கூறினாலே மகாவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது தான்.

இராமநாமத்தின் பெருமைகளை ஒரு பதிவில் அடக்கமுடியுமா? எழுத எழுத வந்துகொண்டேயிருக்கிறது. ராமநாம மகிமை என்னும் தொடர் இன்று நம் தளத்தில் துவங்குகிறது. தனியாக படித்தாலும் சரி…. தொடராக படித்தாலும் சரி…. எப்படி படித்தாலும் இனிமையாக சுலபமாக புரியும்வண்ணம் தொடர் அமையும். இராமபிரான் அருள்புரியவேண்டும்.

– இராம நாம மகிமை தொடர்ந்து பொழியும்….

(108 திவ்ய தேச கண்காட்சியை தவறவிட்டவர்கள் வருந்தவேண்டாம்.. விரைவில் நம் தளத்தில் முழுமையான புகைப்பட கவரேஜ்!)

=====================================================================

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே….

இராமநாமத்தின் மகிமை இப்போது புரிந்திருக்குமே! இத்தனை பெருமை வாய்ந்த இராமநாமத்தின் மகிமையையும் கூடவே குரு மகிமையையும் அனைவரிடத்திலும் எடுத்துச் செல்லும் விதம் கலைமாமணி திருமதி. பாம்பே ஞானம் அவர்கள் ‘ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள்’ என்கிற நாடகத்தை இதுவரை 49 முறை அரங்கேற்றியிருக்கிறார். அதன் 50வது அரங்கேற்றம் நாளை மாலை கிருஷ்ண கான சபாவில் நடைபெறவுள்ளது.

Bodhendral drama

நாடகம் துவங்குவது மாலை 7 மணிக்கு என்றாலும் 50 வது மேடையற்றம் என்பதால் அதற்கு முன்னதாக மாலை 6 மணியளவில் ஒரு சிறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாம் ஏற்கனவே பலமுறை கூறியது தான். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இந்த நாடகத்திற்கு போதாது. அப்படியிருக்கையில் இது இலவச அனுமதி. எனவே அனைவரும் தவறாது கலந்துகொண்டு இராமபிரானின் அருளையும் பகவன் நாம போதேந்திராளின் அருளையும் பெறவேண்டும். உங்கள் வினைகளை விரட்ட இது ஒரு அருமையான வாய்ப்பு.

இதுவரை மேற்படி நாடகத்தை நாம் ஐந்து முறை பார்த்திருக்கிறோம். இராம நாமத்தின் மகிமையே அளவிடற்கரியது எனும்போது அதனுடன் குருவின் மகிமையும் சேர்ந்தால் அதன் மகத்துவத்தை கேட்கவேண்டுமா என்ன?

DSC_4572 copy

இதோ, யாரை பார்க்கவேண்டும், யாருடன் ஒரு சில நிமிடங்கள் பேசவேண்டும், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யவேண்டும், நம் தளத்தின் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்காக பேட்டி காண வேண்டும் என்றெல்லாம் நாம் ஏங்கித் தவித்தொமோ அவரே நமது தளத்தின் அலுவலகத்தை தனது பொற்கரங்களால் துவக்கி வைத்துவிட்டார்.

இராம நாம சாகரத்தில் மூழ்கி எழுங்கள். அனந்தகோடி புண்ணியத்தை அள்ளுங்கள்!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்

=====================================================================

Also check :

பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!

கண்ணனாக அவதரித்ததற்கு கடவுள் கொடுத்த விலை – கிருஷ்ண ஜெயந்தி SPL!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

=====================================================================

[END]

7 thoughts on “கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

  1. இந்த பதிவின் மூலம் ராம நாம மகிமையை புரிந்து கொண்டேன். கண்டிப்பாக போதேந்திறாள் நாடகத்தை மீண்டும் ஒரு முறை கண்டு கழிப்பேன். போன முறை நாடகத்தை பார்த்ததே மனதில் நீங்க நினைவுகளாக உள்ளது. உலகம் முழுவதும் ராம நாம மகிமையை உணரச் செய்வோம். அலுவலக திறப்பு விழா காட்சி கண்ணுக்கு விருந்தாக உள்ளது . ராமர் படம் மிகவும் அழகு.

    அழகிய பதிவிற்கு நன்றிகள் பல.

    ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
    சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே

    ராம் ராம் ராம்

    நன்றி
    உமா வெங்கட்

    1. நீங்கள சொல்வதைப் பார்த்தால என்னால் நம்ப முடியவில்லை. ராம நாமத்தை சிவபெருமான் சொல்கிறார் என்றால் , ராம அவதாரத்திற்கு முன் எந்த நாமம் சொல்லியிருப்பார். ஹரப்பா, சிந்து சமவெளி நாகரிகத்தில் சிவ வழிபாடு இருந்த சான்றுகள் கூறுகிறது. ராமரை பற்றி இல்லை. ஒரு இரண்டாயிரம் வருடத்துக்குள் உருவான புராணங்களை நம்ப முடியவில்லை. கட்டுக்கதைகள்.

      1. கௌதம முனிவர் அகலிகையை கல்லாக போகுமாறு சபித்தபோது ராமவதாரம் நடைபெறவில்லை. அது கிருத யுகம். ஆனால், திருமால் ராமவதாரம் எடுப்பார் அப்போது அவர் காலடி உன் மீது பட்டவுடன் நீ சாப விமோசனம் பெறுவாய் என்று அகலிக்கைக்கு விமோசனமும் கூறியருளினார்.

        அவதாரங்கள் என்பவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு நடைபெறும் ஒன்று. ராமாவதாரத்தின் பவித்திரம் அது நடைபெறும் முன்னரே கௌதம முனிவர்கள் போன்ற ரிஷிகளுக்கு தெரியும் எனும்போது சிவபெருமானுக்கு தெரியாதா?

        இதி ஹாசம் என்பதன் பொருளே இப்படி நடந்தது என்பது தான்.

        நடந்து சில ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன என்பதாலேயே அவை நடக்கவில்லை என்று பொருளில்லை.

        200 வருடங்களுக்கு முன்னர் நம் நாட்டில் நடைபெற்ற பல சரித்திர நிகழ்வுகளுக்கே ஆதாரம் இல்லை. ஆகையால் அவை நடைபெறவில்லை என்று சொல்ல முடியுமா?

  2. சுந்தர்ஜி

    கலைமாமணி திருமதி. பாம்பே ஞானம் அவர்கள் ‘ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள்’ என்கிற நாடகத்தை இதுவரை 49 முறை அரங்கேற்றியிருக்கிறார். அதன் 50வது அரங்கேற்றம் நாளை மாலை கிருஷ்ண கான சபாவில் நடைபெறவுள்ளது. இச்செய்தி மிகுத்த சந்தோசம் அளிக்கிறது. அவர்கள் 100வது அரங்கேற்றம் செய்ய மஹா பெரியவா அனுகிரகம் செய்ய பிராத்தனை செய்கிறேன்

  3. சிவ பெருமான் ராம பூஜை செய்தார் என்று எந்த புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது

    1. ஏன் சார்… புராணத்திலிருந்து ஆதாரத்தை கூறினால் தான் ஏற்றுகொள்வீர்களா? இதை ஒரு சொற்பொழிவில் கேட்டேன். பிடித்திருந்தபடியால் பகிர்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *