Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

print
ன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க நேதாஜி துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு.முத்தப்பா (வயது 86) அவர்களை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து ஆசிபெற்றோம். சந்திப்புக்கு நம்முடன் நம் நண்பர் முருகன் என்பவரும் வந்திருந்தார்.

INA Muthappa 1

(சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டும் இவரை சந்தித்து நாம் ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது.)

இவர் சொந்த ஊர் பரமக்குடி. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்திலிருந்து பர்மாவுக்கு பிழைக்கச் சென்ற எண்ணற்ற தமிழ் குடும்பங்களில் இவர் குடும்பமும் ஒன்று. இவருக்கு ஒன்றரை வயது இருக்கும்போது இவர் குடும்பம் பர்மாவுக்கு சென்றது. படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கு தான்.

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த பின்னணி கேட்டால் நீங்களும் உடனே அந்தக் காலகட்டத்துக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தில் நாமும் சேரமுடியாதா என்று ஏங்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

With Muthappa _ murugan

முன்னதாக பெரியவர் முத்தப்பா (86) அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக் கூறினோம். அவர் வீட்டில் டஜனுக்கு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உண்டு என்பதால் இனிப்புக்கள் வாங்கிச் சென்றிருந்தோம். இனிப்புக்களும் மலர்ச்சரமும்  ஒரு தட்டில் வைத்து அவரிடமும் அவர் திருமதி.சேது லக்ஷ்மி (80) அம்மாள் அவர்களிடமும் கொடுத்து ஆசி பெற்றோம்.

With Muthappa2

தம்பதி சமேதராக முத்தப்பா அவர்கள் நமக்கு ஆசியளித்து விபூதி, குங்குமம் இட்டது நாம் செய்த பாக்கியம்.

நம்முடன் சந்திப்புக்கு வந்திருந்த நண்பர் முருகன் அவர்களுக்கும் அடித்தது ஜாக்பாட். தன்னால் இது மறக்க முடியாத ஒரு சந்திப்பு என்று நம்மிடம் திரும்ப திரும்ப இப்போது வரை கூறிக்கொண்டிருக்கிறார்.

இருக்காதா பின்னே நேதாஜியின் வீர தீர பராக்கிரமங்களையும் இந்திய தேசிய ராணுவம் சிங்கையில் துவங்கப்பட்ட தருணங்களையும் பெரியவர் முத்தப்பா விவரிக்க விவரிக்க நாடி நரம்புகள் புடைக்க இருவரும் கேட்டுகொண்டிருந்தோமே…!

With Muthappa

நேதாஜி பற்றி முதலில் உங்களுக்கு தெரிந்த சில தகவல்களை கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டபோது திரு.முத்தப்பா அவர்கள் கூறியதை சிறு சிறு பாயிண்ட்டுகளாக பிரித்து அளிக்கிறோம். இவற்றில் பல கூகுளும் காணாத தகவல்கள்.

(இதை நமது மொபைலில் வீடியோவாக எடுத்த காட்சிகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவற்றை எடிட் செய்து அப்லோட் செய்ய நேரமில்லை என்பதால் பெரியவர் முத்தப்பா அவர்கள் நம்மிடம் பேசியதை எழுத்து வடிவத்தில் தருகிறோம்.)

* நேதாஜி சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவருடைய ஆளுமை சாதரணமானதல்ல. நெருப்பைப் போன்ற ஒரு தேஜஸ்ஸும் சந்திரனைப் வசீகரமும் அவருக்கு இருந்தன.

* சுவாமி விவேகானந்தர் மீதும் அவரது கொள்கைகள் மீதும் தீவிர பற்று வைத்திருந்தார் நேதாஜி.

* நேதாஜிக்கு அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும் என்கிற ஆவல் இருந்தது. அவருடைய அறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளின் புத்தகங்களும் கலைக்களஞ்சியங்களும் இருந்தன.

* ஒரிஜினல் ஹிட்லரை சந்தித்த ஒரே அயல்நாட்டு தலைவர் சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே. (ஹிட்லரைப் போல தோற்றமளிக்கக் கூடிய ஒன்பது பேர் அப்போது இருந்தார்களாம்.)

INA Muthappa 2

* இந்திய தேசிய விடுதலை இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு போர்க்களம் சென்ற ஒரே தலைவர் சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே.

* நேதாஜிக்கு தேசபக்தியைப் போலவே தெய்வ பக்தியும் அதிகம். தினமும் காலை புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்வாராம்.

* மகாத்மா காந்திக்கு 1941 இல் தேசத் தந்தை (FATHER OF THE NATION) என்று பட்டம் சூட்டியது நேதாஜி தான்.

* நேதாஜியின் கண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவரது கண்களை பார்த்து பேசுவது மிகவும் கடினம்.

* நேதாஜிக்கு நினைவாற்றல் மிக மிக அதிகம். தன் படைவீரர்கள் அனைவரின் பெயர்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார். சரியாக அவர்கள் பெயரைச் சொல்லி கூப்பிடுவாராம்.

With Muthappa3

* நேதாஜி விமான விபத்தில் தான் இறந்திருக்கவேண்டும் என்பது இவர் கருத்து. ஏனெனில் நேதாஜியுடன் கடைசீயாக விமானத்தில் பயணம் செய்த ஆறு பேர்களில் ஒருவரான சாட்டர்ஜி என்பவரை பர்மாவில் இவர் சந்தித்த போது “ஐயா தலைவருக்கு என்னய்யா ஆச்சு? ஆளாளுக்கு என்னென்னமோ சொல்றாங்க…” என்று கேட்டதில், அவர் “எதுவும் கேட்காதீங்க…. இங்கே என் கையை கொஞ்சம் பாருங்க” என்று கூறி தன் முழுக்கை சட்டையை அவிழ்த்து வலது கையை காண்பிக்க, கை முழுதும் நெருப்பில் வெந்த தீக்காயமாம். விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட காயம். நேதாஜியின் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று நான் நம்ப ஒரே காரணம் அது தான் என்கிறார் முத்தப்பா.

* இவருக்கு 16 அல்லது 17 வயது வயது இருக்கும்போது இந்திய தேசிய ராணுவத்தில் பாலசேனா என்கிற பிரிவில் இணைந்தார் என்றும் அதன் பின்னனி பற்றி கூறும்போது நமக்கே சிலிர்த்தது.

netajiநான் அறிந்த நேதாஜி!

(நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய திரு.முத்தப்பா கூறும் தகவல்கள்)

ப்பாடுபட்டாவது வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து விரட்டவேண்டும் என்று உறுதி பூண்ட நேதாஜி, இவர்களுக்கு அஹிம்சைஎல்லாம் சரிப்பட்டு வராது. நாமும் படையை திரட்டி படைபலத்தொடு மோதி அவர்களை வெற்றிகொள்வதே ஒரே வழி என்று தீர்மானித்து ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்தார். ஹிட்லருக்கும் நேதாஜிக்கும் நல்ல நட்பு நிலவியது.

அப்போதைய ஜப்பான் பிரதமர் டோஜோ, ஹிட்லர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் மூவரும் ஆலோசித்து எடுத்த முடிவின் படி, தென்கிழக்கு நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றிலிருந்து பிரிட்டிஷாரை முதலில் அப்புறப்படுத்துவது என்றும் அதன் பிறகு அந்தமான் மற்றும் பர்மா வழியாக இந்தியாவுக்குள் நுழைவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

நேதாஜிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஜப்பான் செய்யும் என்று ஜப்பான் பிரதமர் டோஜோ உறுதியளித்தார். ஹிட்லரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

இதையடுத்து பர்மா திரும்பிய நேதாஜி அங்கிருந்தே பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிரான அனைத்து காய்களையும் நகர்த்தினார். சிங்கப்பூரை கைப்பற்றி அங்கு இந்திய தேசிய ராணுவத்தை துவக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

INA Certificate 2

INA Certificateஆனால் சிங்கப்பூரை பிடிக்க நேசநாட்டு படைகளுக்கு மிகவும் இடையூறாக இருந்தது சிங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ‘பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ என்னும் மிகப் பெரிய பிரிட்டிஷ் விமானந்தாங்கி போர்க்கப்பல் தான். பல்வேறு யுத்த தளவாடங்கள், ரேஸ்கோர்ஸ் மைதானம், சினிமா தியேட்டர், என இந்த கப்பலில் பல வசதிகள் உண்டு. கிட்டத்தட்ட டைட்டானிக் கப்பலுக்கு இணையான பிரம்மாண்டமான போர்கப்பல் இது. இதன் நீளம் மட்டுமா 745 அடிகள் என்றால் இதன் பிரம்மாண்டத்தை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இந்த கப்பலை தகர்த்தால் மட்டுமே சிங்கப்பூரை கைப்பற்றும் கனவு சாத்தியமாகும். இந்திய தேசிய ராணுவத்தையும் நிறுவமுடியும்.

இரண்டாம் உலகப்போரின் போது 15 வயது சிறார்கள் கூட போர்க்களத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலை தகர்க்கவேண்டும் என்றால், குண்டுகள் நிரப்பிய விமானத்தை கொண்டுபோய் கப்பலில் மோதி அதை உள்ளே செலுத்தி வெடிக்கச் செய்தால் மட்டுமே அது சாத்தியம்.

இதையடுத்து ஜப்பான் விமானப்படையினர் அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டனர். அப்போது குண்டுகள் ஏற்றிச் செல்லும் விமான ஓட்டியாக தற்கொலைப்படை வீரராக மாற சோனான் என்கிற 15 வயது ஜப்பானிய கல்லூரி மாணவன் ஒருவன் முன்வந்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை. இருப்பினும் அவன் தாய் அவனை மகிழ்ச்சியுடன் போர்முனைக்கு அனுப்பினாள்.

Muthappa and family

விழியோரம் நீர் சுரக்க, பெற்ற தாய்க்கு அவன் கையசைத்துவிட்டு விமானத்தில் ஏறும் காட்சி துண்டுப் பிரசுரங்களாக ஜப்பான் படையினரால் தென்கிழக்கு நாடுகளில் விநியோகிக்கப்பட்டது. பர்மாவிலும் அது நேதாஜியின் ஏற்பாடுகளின் பேரில் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது. அனைவரும் சோனானின் தியாகத்தை பாராட்டினர். மெச்சினர். கண்ணீர் உகுத்தனர்.

பிரின்ஸ் ஆப் வேல்ஸ்
பிரின்ஸ் ஆப் வேல்ஸ்

இதற்கிடையே சோனான் சென்ற விமானத்தை மற்ற ஜப்பான் விமானங்கள் சுற்றி ஒரு அரண் போல அமைத்து பின்னர் சிங்கப்பூரை நோக்கி பறந்தனர். நூற்றுக்கணக்கான விமானங்கள் இவ்வாறு சென்றன. சிங்கை கடற்கரையில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மீது ஜப்பான் விமானங்கள் குண்டுமழை பொழிய, கப்பல் ஆட்டம் காணத் துவங்கியது. ஆனாலும் மூழ்கடிக்க முடியவில்லை. அத்தனை உறுதியுடன் அப்போதிருந்த நவீன தொழில்நுட்பத்துடன் அது கட்டப்பட்டிருந்தது. கடைசீயில் சுமார் 500 கிலோ எடை கொண்ட குண்டுகளுடன் சோனான் சென்ற ஃபைட்டர் விமானம் கப்பலின் புகைப்போக்கி வழியாக உள்ள விழுந்தது. கப்பல் வெடித்து சிதறியது. ஆனால் அது கடலில் மூழ்குவதற்கு மட்டுமே இரண்டு நாட்களானதாம். சுமார் 900 க்கும் மேற்ப்பட்ட பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய பலர் அவரவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தனர்.

INA Muthappa 4

சிங்கப்பூர் வீழ்ந்தது. ஜப்பான் படைகள் சிங்கப்பூரில் நுழைந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை சிறைபிடித்தது.

நேதாஜி சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை துவக்கினார். இதற்கிடையே பர்மா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல இடங்களில் இந்த போர்காட்சிகளும் சோனான் என்கிற பதினைந்து வயது நிரம்பிய சிறுவனின் உயிர்த் தியாகமும் டாக்குமெண்டரி போல பர்மா மற்றும் ஜப்பான் வீதிகளில் மூலைக்கு மூலை மக்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. பிரிடிஷ்ஷாருக்கு எதிராக தேசபக்தி அனைவரிடமும் கொழுந்துவிட்டெரியத் துவங்கியது.

பர்மாவில் கம்பை என்னுமிடத்தில் ராஜ சர் அண்ணாமலை செட்டியார் விடுதி என்று ஒரு பெரிய விடுதி உண்டு. அங்கும் இந்த படம் காண்பிக்கப்பட்டது.

Netaji soldier Muthappa

அதை பார்த்த நம்மவர்கள் பலர் ஒரு ஜப்பான் சிறுவன் பிரிட்டிஷ்ஷாரை விரட்ட தன்னுயிரை தியாகம் செய்திருக்கும்போது நாம் சும்மாயிருக்கலாமா என்று கருதி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் உடனடியாக இணைந்தனர். அப்போது இணைந்தவர்களில் ஒருவர் தான் இன்று நாம் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் திரு.முத்தப்பா.

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் இந்திய தேசிய ராணுவத்தில் PROPOGANDA பிரிவில் பணியாற்றியுள்ள இவர், இன்றும் நமது அரசின் தியாகிகள் பென்ஷனும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான இதர சலுகைகளையும் பெற்று வருகிறார். இந்திய தேசிய ராணுவ வீரர்கள் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது.

இதற்கிடையே சிங்கப்பூர் வெற்றியை தொடர்ந்து இந்திய தேசிய ராணுவம் நேதாஜி தலைமையில் அந்தமானை பிடித்தது. அங்கு சுதந்திர பிரகடனம் செய்த நேதாஜி, அங்கிருந்த சிறைச்சாலை கைதிகள் அனைவரையும் “நீங்கள் இனி அடிமையல்ல! இது சுதந்திர நாடு!” என்று கூறி விடுவித்தார்.

அதுவரை ஆங்கிலேயேர்களால் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நம் வீரர்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர்.

“பாரத் மாதா கி ஜேய்….” “வந்தே மாதரம்” என்ற கோஷம் அந்தமான் எங்கும் ஒலித்தது. சிறையில் அடைபட்டிருந்தவர்கள் அனைவரும் இந்திய தேசிய ராணுவத்தில் சேரத் துவங்கினர். இந்திய தேசிய ராணுவம் நாளுக்கு நாள் வளர்ந்தது. பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. கணவன்மார்கள் சிப்பாய் பிரிவிலும், மனைவியார் ஜான்சி ராணி பிரிவிலும், குழந்தைகள் பாலசேனா என்னும் சிறுவர் பிரிவிலும் சேர்ந்தனர்.

பின்னர் ஜப்பான் ராணுவத்துடன் சேர்ந்து நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் பர்மா வந்தது. இங்கு பர்மாவில் பலர் நேதாஜியின் கீழ் அணிதிரளத் துவங்கினர்.

முதன் முதலில் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் சென்னை துறைமுகத்தில் குண்டு வீசினர். வடக்கே பிரம்மபுத்திரா தாண்டி இம்பால் வரை நம் வீரர்கள் முன்னேறினர். இதற்கிடையே, அப்போது நிலவிய தட்பவெப்ப சூழல் மற்றும் மழையால் நம் படைகள் பெரும் பின்னடவை சந்தித்தது. போர்க்கருவிகள், குண்டுகள் தீர்ந்துபோயின. மருந்து பற்றார்க்குறை நிலவியது. காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க இயலவில்லை. பலர் வழியிலேயே மடிந்தனர். தொடர்ந்து ஆயுதங்களோ உணவோ தண்ணீரோ இன்றி 13 நாட்கள் நம் வீரர்கள் மலைப் பிரதேசங்களில் தவித்து வந்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானோர் வாழைத் தண்டை தான் சமைத்து சாப்பிட்டனர்.

இந்திய தேசிய ராணுவம் பலத்த பின்னடவை சாந்தத்த விஷயத்தை தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் ராணுவம் நேதாஜியை தீவிரமாக தேடி வந்தது. அவர் அகப்பட்டால் உடனடியாக தூக்கிலிட தீர்மானித்திருந்தனர். இதையடுத்து பர்மாவை கைப்பற்ற பிரிட்டிஷ் அரசு படைகளை அனுப்பியது. பர்மாவில் முகாமிட்டிருந்த நேதாஜியை பர்மா வாழ் இந்தியர்களும் (90% இவர்கள் தமிழர்கள் தான். இங்கு சிவகங்கை, செட்டிநாடு உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் இருந்து சென்றவர்கள்) பொதுமக்களும் சந்தித்து, “இனி நீங்கள் இங்கிருந்தால் ஆபத்து… உடனடியாக வெளியேறிவிடுங்கள்… உங்கள் செலவுக்கும் இந்திய தேசிய ராணுவத்தின் செலவுகளுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி அவரை ஒரு தராசில் அமரவைத்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட தாங்கள் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களையும் கழட்டி அவருக்கு கொடுத்து தப்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். பொன், பொருள், நகை இல்லாத பல தாய்மார்கள் தங்கள் திருமாங்கல்யத்தை கழட்டி நேதாஜிக்கு கொடுத்தனர்.

உலகின் எந்த சுதந்திர போராட்ட வரலாற்றிலாவது இது போல உண்டா? இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றதைய்யா நம் சுதந்திரம். தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்று பாரதி சும்மாவா பாடினான்?

INA Muthappa 5

புறப்படுவதற்கு முன், திரு.முத்தப்பா அவர்களின் கால்களில் மீண்டும் வீழ்ந்து ஆசிபெற்றோம். நாம் கொண்டு சென்றிருந்த நமது தளத்தின் ‘மகா பெரியவா’ காலண்டர் அவருக்கு பரிசளிக்கப்பட்டது.

சந்திப்பு முடிந்ததும் எங்களுக்கு வேறு ஒரு முக்கிய வேலை அங்கு இருந்தது. திரு.முத்தப்பா அவர்களின் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது தான் அது. சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது அக்குழந்தைகள் நம்மையே சுற்றி சுற்றி வந்து குறும்புகள் செய்துகொண்டிருந்தன. ஆஹா… இதை விட ஒரு மகிழ்ச்சியான தருணம் எங்களுக்கு இதுவரை கிட்டியதில்லை!

ஜெய் ஹிந்த்!

==================================================================

தொடர்புடைய பதிவுகள் :

சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

“என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ

==================================================================

Also check (from our archives) :

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

6 thoughts on “நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

  1. மிகவும் அருமையான உணர்ச்சிப் பிழம்பான பதிவு. ஒரு அருமையான தியாகியை சந்தித்து பல அறிய தகவல்களை அளித்ததற்கு மிக்க நன்றிகள் பல. திரு முத்தப்பா அவர்களுக்கும் அவரது மனைவிக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்கள் இவ்வளவு அறிய பல தகவல்களை கொடுத்ததற்கு. சோனானை பற்றி படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது

    ஒவொரு படங்களும் ஒரு கவிதை.

    வாழ்க ……பாரதம் !!!! வந்தே ….மாதரம்…

    நன்றி
    உமா வெங்கட்

  2. நேதாஜி அவர்களின் பிறந்த நாள் அன்று அவரை பற்றிய பதிவு படித்து சுதந்திரத்திற்காக அவர் பட்ட பாடுகள் பற்றி அறிந்தோம்.
    திரு. முத்தப்பா அவர்களின் வாய்வழி செய்திகள் எங்களை அந்த காலத்திற்கே கொண்டுசென்று விட்டது.
    படிக்க படிக்க பரவசம்.
    தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்று பாரதி பாடினர். சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனை எத்தனை தலைவர்கள் தம் இன்னுயிர் தந்து நமக்கு விடுதலை பெற்று தந்தார்கள்.
    அந்த விடுதலையை நாம் சரிவர பயன்படுத்துகிறோமா என்பதே கேள்விக்குறி?
    நம் தளத்தின் கலெண்டரில் மகா பெரியவ படம் இருப்பதால் தான் அது இன்னும் எனக்கு கிடைக்கவில்லை போல தெரிகிறது.
    நான் எவ்வளவு தான் அவரை நினைத்தாலும் அவருக்கு என்னவோ என்மேல் கோபமா தெரியவில்லை. இன்னும் அவர் கருணை பார்வை என்மேல் படவில்லை.
    நன்றி

  3. தியாகி திரு.முத்தப்பா அவர்களுக்கு நம் பணிவான வணக்கங்கள்………நமக்கு சுதந்திரம் பெற்றுத் தர எவ்வளவு பேர் எத்தனை சிரமப்பட்டுள்ளனர், உயிர் தியாகம் செய்துள்ளனர் என்று நினைக்கும் போது நமது நன்றி உணர்ச்சி பெருகுகிறது………நம் நாட்டுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற அயர்ச்சி ஏற்படுகிறது……..நேதாஜிக்கும், தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கம்……..

  4. வாழ்க வளமுடன்

    நல்ல தேச பக்தி உணர்த்தும் பதிவு

  5. I have become terrific fan of Mr. Muthappa after reading this article. Subhash Ji was born for Nation, Lived for Nation, Died for Nation. SALUTE SALUTE SALUTE!!!! He is the true leader of India, who followed SWAMI VIVEKANANDA but was less recognized and suppressed in the midst of Indian National Congress Wave. But None can touch his supremacy and Zenith for the years to come.

    Praying to Subhash Chandra Bose to guide our India to Strength & Positivity + _/\_

  6. Greatly inspiring.
    **
    By getting to know this kind of info, by then only, I recognise the pain and efforts of such an extent has been put for our national leaders to achieve freedom for us.
    **
    Today, we (I) are being ruled by cinema and other unwanted things – thus, wasting precious time and money.
    **
    Thanks so much for such an igniting and informative article.
    **
    I bow to the great leader Mr. Muthappa. Already god blessed him – with peaceful life and family as he deserves.
    **
    God bless you Sundarji.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *