நாம் தரிசித்த தலங்கள் அனைத்திலும் நம் நண்பர்களுக்காகவும் வாசக அன்பர்களுக்காகவும் அர்ச்சனையும் பிரார்த்தனையும் செய்து வந்தது நினைவிருக்கலாம். நாள் ஒன்றுக்கு ஐந்து திருத்தலங்கள் வீதம் தரிசிக்க திட்டமிட்டுருந்தபடியால் நேரம் மிகவும் குறைவாக இருந்தது. நாம் ஒவ்வொரு தலத்திலும் புகைப்படம் எடுக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் இது நாம் திட்டமிட்ட பயணம் அல்ல. எம் தங்கை குடும்பத்தினர் திட்டமிட்டிருந்த பயணம். அவர்கள் சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்துவிட்டு அடுத்த தலத்திற்கு புறப்பட்டுவிடுவார்கள். அதற்குள் நான் சுவாமியை நாம் தரிசனமும் செய்யவேண்டும்… புகைப்படமும் எடுக்கவேண்டும். சில கோவில்களில் காமிராவை எடுத்தாலே எங்கிருந்தாவது “யாரது ஃபோட்டோ எடுக்குறது. ஃபோட்டோவெல்லாம் எடுக்கக்கூடாது….” என்று சவுண்ட் வரும்.
மூலவர் மற்றும் முக்கிய சன்னதிகளை தவிர்த்துவிட்டு ஃபோட்டோ எடுப்பதில் தவறில்லை என்றாலும் இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் நாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. (கைக்கு அடக்கமான சிறிய உயர் ரக காமிரா இருந்தால் நலம். இது பற்றி பின்னர் சொல்கிறோம்!). எப்படியோ என்னென்னவோ ஜாலங்கள் செய்து புகைப்படங்களை எடுத்து வந்தோம்.
திருமங்கலக்குடியில் சுவாமியின் பெயர் என்ன தெரியுமா? ‘பிராணனை கொடுத்த பிராணநாத சுவாமி’. அம்பாளின் பெயர் : ‘மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகை’. கோவில் அலுவலக சுவற்றில் தல வரலாற்றை சுருக்கமாக எழுதியிருந்தார்கள். படித்தவுடன் சிலிர்த்தது.
நண்பர்கள் மற்றும் யாரேனும் வாசகர்களின் குடும்பத்துக்கு அர்ச்சனை செய்யலாம் என்றால் அவசரத்தில் அவர்கள் பெயர், ராசி, நட்சித்திர விபரங்கள் அடங்கிய டைரியை டாக்ஸியில் மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. போய் எடுத்து வர அவகாசம் இல்லை.
நிச்சயம் பொருத்தமான, தேவையுள்ள யாருக்காவது இந்த தலத்தில் அர்ச்சனை செய்யவேண்டுமே, மறுபடியும் இங்கே வர எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லையே என்று மனம் பதறியது. டைரியை போய் எடுத்துவர அவகாசம் இல்லை. ஏற்கனவே நான் புகைப்படங்கள் எடுப்பதால் நேரமாகிறது என்று சின்ன முனுமுனுப்பு அந்தப் பக்கம் எழுந்திருந்தது. (ஏனெனில் ஒரு சில கோவில்களில் குறிப்பிட்ட நேரத்தில் பரிகாரத்திற்கு தங்கை வீட்டினர் ஏற்பாடு செய்திருந்தனர். அது தவறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.)
சட்டென்று அந்த யோசனை தோன்றியது. நாகங்குடி சுகந்தா மாமிக்கு ஃபோன் செய்வோம். அவர் மருமகன் கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் கோமா நிலையிலிருக்கிறார்… அவர் மகள் மகாலக்ஷ்மி தன் மாங்கல்யத்துக்கு ஒவ்வொரு நொடியும் போராடி வருகிறார். அவர் பெயரில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வோம் என்று சுகந்தா மாமியை தொடர்புகொண்டோம்.
………………………………………………………………………………………………………….
Please check :
யார் இந்த நாகங்குடி மாமி? அவருக்கு என்ன பிரச்னை ?
அவருக்கும் நம் தளத்திற்கும் என்ன சம்பந்தம்?
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
………………………………………………………………………………………………………….
தாம் சென்னையில் இருப்பதாகவும் மருமகனை பார்க்க வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். நாம் திருமங்கலக்குடியில் இருக்கும் விபரத்தை குறிப்பிட்டவுடன், “ஓ… மங்களாம்பிகை கோவிலா?” என்றார் சரியாக.
அவர்கள் பூர்வீகம் கும்பகோணம் என்பதால் அவருக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது.
அவர் மகளின் பெயர்க்கு அர்ச்சனை செய்ய விரும்பும் விபரத்தை கூறியவுடன், “நல்லது சுந்தர்… நிச்சயம் செய்… ரொம்ப தேங்க்ஸ்…” என்று கூறி ராசி நட்சத்திர விபரங்களை கூறினார்.
அர்ச்சனை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கவனித்தோம்… அர்ச்சகர் அங்கே நின்றிருந்த சிலருக்கு மாங்கல்யச் சரடு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது தான் தெரிந்தது இங்கே இதற்கு அலுவலகத்தில் தனியாக பணம் கட்டினால் அம்பாளின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தாலிக் கயிற்றை தருவார்கள் என்று. பணம் கட்டிவிட்டு வந்து மறுபடியும் அர்ச்சனை செய்யலாம் என்றால் அதற்குள் ஒரு டூரிஸ்ட் கூட்டம் திமு திமுவென வந்து அம்பாள் சன்னதியை மொய்க்க குருக்கள் அவர்களுக்கு அர்ச்சனை செய்ய உள்ளே போய்விட்டார்.
நம்முடன் வந்தவர்கள் ஏற்கனவே தரிசனம் முடித்து வெளியேறி நமக்காக காத்திருந்தார்கள். நம் கைகளில் விபூதி, குங்குமம், தேங்காய்ப் பூ பழம் ஆகியவை மட்டுமே இருந்தன. மாங்கல்யச் சரடை வாங்காமல் வர நமக்கு மனமில்லை. இருந்தாலும் நேரமின்மையால், இதுவே போதும் என்று மனதை தேற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டோம்.
இங்கே ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் திருமங்கலக்குடி பற்றிய பதிவை போடலாம் என்று நினைத்து ஒரு சில நாள் கழித்து கணினியில் அமர்ந்தபோது சுவாமியை பற்றியும் அம்பாளைப்பற்றியும் மேலும் சில தகவல்கள் தேவைப்பட்டது. கோவில் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அங்கிருந்த கணக்கரிடம் நம்மை நமது தளத்தை அறிமுகப்படுத்திக்கொண்டு விபரங்களை கேட்டோம். நமக்கு சில விபரங்களை சொன்னவர், இதை பற்றி பதிவு அளிக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் “சார்… உங்க அட்ரெஸ் கொடுங்க நான் வேணும்னா தல வரலாற்று புக்கை கூரியர் பண்ணிடுறேன். அதுல எல்லா தகவலும் விரிவா இருக்கும். அது வந்தவுடன் படிச்சி டீடெயிலா போடுங்க” என்றார்.
அவர் சொன்னதும் சரி என்றே பட்டது. “சரிங்க சார். ரொம்ப நன்றி. நான் என் அட்ரெஸ்ஸை சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க”
“என் மொபைல் நம்பரை தர்றேன். அதுக்கு எஸ்.எம்.எஸ். பண்ணிடுங்க. எனக்கு ஈஸி அது தான்” என்று தன் மொபைல் எண்ணை தந்தார்.
“சார்.. கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிடுங்க. இப்போதைக்கு ‘எருக்க இலை பிரசாத’ பரிகாரத்தை பத்தி ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அதை போட்டுடுறேன். நீங்க புக் அனுப்பினதுக்கப்புறம் மீதி தகவல்களை தனிப் பதிவா போடுறேன். நீங்க அனுப்பின பிறகு எனக்கு ரெண்டு மூணு நாள் தேவைப்படும்… அதுனால கொஞ்சம் சீக்கிரம் அனுப்பினீங்கனா ரொம்ப உபயோகமா இருக்கும்!” என்றோம்.
நிச்சயம் விரைந்து அனுப்பிவிடுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே ஓரிரு நாட்கள் சென்றன. நாம் சம்பந்தப்பட்ட உரையாடலை மறந்தேவிட்டோம். நாம் நமது பணிகளை கவனிக்கலானோம்.
சென்ற வாரத்திற்கு முந்தைய வாரம் பிரார்த்தனை கிளப்பில் நாகங்குடி சுகந்தா அவர்களின் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்காக பிரார்த்தனை சமர்பித்திருந்தபடியால், மாமியை தொடர்புகொண்டு விஷயத்தை கூறி அவர்களையும் அந்த நேரம் பிரார்த்தனை செய்யச் சொல்வோம் என்றெண்ணி மாமியை தொடர்புகொண்டபோது சென்னையில் தான் இன்னமும் இருப்பதாக சொன்னார்.
மேலும் இங்கே அண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மருமகனை நேரில் பார்க்கவேண்டும் என்று நாம் விரும்பினாலும் மருத்துவர் அறிவுறுத்தல் காரணமாக தாமே அடிக்கடி அங்கு செல்வதில்லை என்றும், மேலும் மாமாவுக்கு இடது கண்ணில் சதை வளர்ந்து சங்கர நேத்ராலயாவில் ஆப்பரேஷன் செய்திருப்பதாகவும் தற்போது இங்கே மகன் திரு.வைத்தியநாதன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். .
“மாமாவுக்கு கண் ஆப்பரேஷனா? மாமாவையும் உங்களையும் அவசியம் நேர்ல பார்க்கணும் மாமி. போன தரம் வந்தப்போவே உங்களை பார்க்க பிரியப்பட்டேன். முடியலே… இந்த முறை அவசியம் நேரில் பார்க்கணும்”
“தாராளமா வாப்பா…” என்று கூறி மேற்கு மாம்பலத்தில் தன் மகன் வீட்டு விலாசத்தை தந்தார்.
“இன்னைக்கோ நாளைக்கோ வர்றேன் மாமி”
“வர்றதுக்கு முன்ன ஃபோன் பண்ணிட்டு வாப்பா!” என்று ஃபோனை வைத்தார்கள்.
அன்று மாலையே மாமியை சந்திக்க செல்வதாக பிளான். திருமங்கலக்குடி விபூதி குங்குமம் ஒரு சிறு பேப்பரில் மடித்து நமது பையில் தயாராக இருந்தாலும் அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் நம்பிக்கையை அதிகரிப்பது போல வேறு ஏதாவது தரவேண்டும். ஆனால் என்ன தருவது? சுந்தரகாண்டம் ஏற்கனவே நாகங்குடியில் பார்க்கும்போதே தந்தாகிவிட்டது. ‘வேல்மாறல்’ ஏற்கனவே அவர்களிடம் இருக்கிறது. படித்தும் வருகிறார்கள். பதிகங்கள்? அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல…. எனவே ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சரி, இன்று வேண்டாம். நாளை போய்க்கொள்ளலாம். வீட்டுக்கு போய் மாமிக்கு என்ன எடுத்துச் செல்வது என்று முடிவு செய்துகொள்ளலாம் என்று அன்று மாலை அவர்கள் வீட்டுக்கு போகும் திட்டத்தை ஒத்திவைத்தோம்.
இதற்கிடையே வீட்டில் அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது. திருமங்கலக்குடி கோவிலில் இருந்து ஒரு கூரியர் வந்திருப்பதாக சொன்னார்கள். “திருமங்கலகுடி தலவரலாறு புத்தகம் கேட்டிருந்தேன்… அது வந்திருக்கும். என் டேபிள்ள வைம்மா… சாயந்திரம் நான் வந்து பார்த்துக்குறேன்” என்று கூறினேன்.
மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பியவுடன், கவரைப் பிரித்துப் பார்க்கிறோம்… அதில் தலவரலாற்று புத்தகத்துடன், திருமங்கலக்குடி பிராணநாதர் விபூதி பிரசாதம், மங்களாம்பிகை குங்குமம், ஒரு திருமாங்கல்யக் கயிறு, அம்பாள் படம் என் அனைத்தும் வந்திருந்தது.
நமக்கு சந்தோஷம் தாளவில்லை. மாமிக்கு என்ன கொண்டு சென்று கொடுப்பது என்று வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தோமே, அம்பாளே தற்போது தனது குங்குமத்துடன் திருமாங்கல்யம் அனுப்பியிருக்கிறாளே என்று பரவசமாகி கண்களில் ஒத்திக்கொண்டோம்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள். கோவிலில் அவர் அனுப்புவதாக சொன்னது தல வரலாற்று புத்தகம் மட்டுமே. ஆனால் தற்போது வந்திருப்பது அதனுடன் சேர்த்து மாங்கல்ய சரடு, அம்பாள் படம், குங்குமம் மற்றும் விபூதி பிரசாதம். நாம் திருமங்கலக்குடியில் அர்ச்சனை செய்தபோது மாங்கல்ய கயிறு வாங்காமல் விட்டுவிட்டதாக வருத்தப்பட்டோம். ஆனால் அம்பாளோ நமக்கு ஒரு முழு பேக்கேஜ் அனுப்பிவிட்டாள். தல வரலாறு நூல் அனுப்புகிறவர்கள் விபூதி மற்றும் குங்குமம் அனுப்புவது யதார்த்தம். ஆனால் பணம் கட்டினால் மட்டுமே கிடைக்கக்கூடிய மாங்கல்ய கயிறும் நாம் கேட்காமலே பணம் கட்டாமலே வந்தது தான் விசேஷமே.
அந்த நேரம் பார்த்து நம்மை தொடர்புகொண்ட வாசகி ஒருவரிடம் இது மாதிரி திருமங்கலக்குடியில் இருந்து பிரசாதம் வந்திருப்பதாக கூறியவுடன்… “இது உங்களுக்கு திருமண யோகம் நெருங்கிவிட்டதை குறிக்கிறது” என்றார்.
அவரிடம் சொன்னோம்… “எனக்கு அப்படி தோன்றவில்லை. நீங்கள் ஒரு நல்ல விஷயம் சொல்கிறீர்கள். எனக்கு எதிர்மறையாக பேசி பழக்கமில்லை. அம்பாள் திருவுள்ளம் என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் பிறருக்காக நாம் தவிக்கும்போது தான் இறைவன் நம்மை நோக்கி திரும்புவான் என்பதை அனுபவப்பூர்வமாக பலமுறை உணர்ந்திருக்கிறேன். சுகந்தா மாமிக்கு என்ன கொண்டு சென்றால் அவர் குடும்பம் தற்போது இருக்கும் நிலைமையில் அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கமுடியும் என்று தான் நான் யோசித்தேன். அதே நினைவாக இருந்ததால் மாங்கல்யத்தை பார்த்தவுடன் அவர் மகளிடம் கொண்டு சேர்ப்பிக்கவே அம்பாள் அனுப்பியிருப்பதாக தோன்றியது. மேலும் திருமங்கலக்குடி செல்லும்போது நான் டைரியை மறந்ததும், எத்தனையோ பேர் இருக்க சுகந்தா மாமியின் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவுக்கு வந்ததும், திருமதி.மகாலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்காக அர்ச்சனை செய்யவேண்டும் என்று தோன்றியதும், பெயர் ராசி நட்சத்திரம் உள்ளிட்ட விபரங்களை கேட்க சன்னதியில் இருக்கும் நான் செய்த ஃபோனை மாமி தவறாமல் அட்டெண்ட் செய்ததும் உண்மையில் தற்செயலானது அல்ல. இது அவர்களுக்காகவே மங்களாம்பிகை நடத்திய திருவிளையாடல் என்று தோன்றுகிறது. அடியேன் ஒரு கருவி. அவ்வளவே!” என்றேன்.
“உண்மை தான்!” என்றார் அந்த வாசகி.
அடுத்த நாள் காலை மார்கழி தரிசனம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில். மார்கழி ஒவ்வொரு நாளும் ஒரு ஆலயத்திற்கு சென்று வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இங்கே திருவேற்காடு கோவிலில் தரிசனத்திற்கு நுழைந்தால் தர்ம தரிசனம் போகும் பாதையில் சன்னதியின் கொடிமரத்துக்கு பக்கவாட்டில் புதிதாக கன்றை ஈன்ற பசுவின் தரிசனம் கிடைத்தது. பார்க்கும்போதே பரவசம் தான்.
அங்கே டூட்டியில் இருந்த ஊழியர்களை விசாரித்தபோது அது தான் விஸ்வரூப தரிசனத்தில் கடந்த சில நாட்களாக உபயோகப்படுத்தப்படும் பசு என்றும் கன்றை ஈன்று நான்கைந்து நாட்கள் தான் ஆகிறது என்று சொன்னார்கள்.
அதை ஃபோட்டோ எடுக்க முற்பட்டோம். வழக்கம்போல சவுண்ட் வந்தது.
“ஐயா… ஒரே ஒரு ஃபோட்டோ. என் மொபைல்ல வால்பேப்பரா வைக்கிறதுக்கு… ப்ளீஸ்….” என்றோம். அந்த ஊழியர்களில் ஒருவர் நாம் ஏதோ கோவிலில் உழவாரப்பணி செய்தபோது பார்த்திருப்பார் போல.
“சார் தானே… அவரை எனக்கு நல்லா தெரியும். எடுத்துகட்டும் விடுப்பா… நீங்க ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துகோங்க சார்…. உள்ளே எதுவும் எடுக்காதீங்க. காமிராவை புடிங்கிடுவாங்க” என்று ஒரு சிறு நிபந்தனையுடன் அனுமதி தந்தார்.
இது போதாதா நமக்கு… பசுவையும் கன்றையும் வணங்கிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு சன்னதியில் உள்ளே நுழைவதற்கு முன்பு… யாருக்காவது அர்ச்சனை செய்தால் தேவலை என்று தோன்றியது. காலை 5.30 என்பதால் கூட்டம் அதிகமில்லை.
பொதுவாக மார்கழி காலை தரிசனத்தின்போது நாம் அர்ச்சனை செய்வது கிடையாது. ஆனால் திருவேற்காடு கோவிலுக்கு நீண்ட நாள் கழித்து வருகிறோம். அர்ச்சனை செய்துவிடுவோம் என்று மீண்டும் வெளியே வந்து அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு, அர்ச்சனை சீட்டை கவுண்டரில் பெற்றுக்கொண்டு திரும்புகையில் யார் பெயருக்கு செய்வது என்று ஒரு சிறு யோசனை. அடடா… நாம தான் இன்னைக்கு சுகந்தா மாமியை பார்க்கக் போகப்போறோமே… அன்னைக்கு அவங்க பொண்ணு பேர்ல பண்ணோம். இன்னைக்கு மாப்பிள்ளை பெயரில் பண்ணுவோம் என்று தோன்ற, மாமிக்கு அங்கேயிருந்தே போன் செய்தோம்.
நல்லவேளை மாமி போனை எடுத்தார்கள். அவரிடம் காலை இத்தனை சீக்கிரம் போன் செய்ததற்குக் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, திருவேற்காடு கோவிலில் இருக்கும் விபரத்தை குறிப்பிட்டு, அர்ச்சனை செய்வதற்காக அவர் மருமகன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ராசி நட்சத்திர விபரத்தை கேட்டோம்.
அவருக்கு திருவேற்காடு என்றவுடன் ஒரே சந்தோஷம். விபரங்களை கூறியவுடன் குறித்துக்கொண்டு உள்ளே சென்றோம்.
அருமையான தரிசனம். கூட்டம் மிகவும் குறைவு. மொத்தமே ஒரு பத்து பன்னிரண்டு பேர் தான் நின்றுகொண்டிருந்தார்கள்.
திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு மற்றவர்களுக்காகவும் கருமாரி அம்மனிடம் பிரார்த்தித்துக்கொண்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.
பிரகாரத்தை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டோம்.
கோவில் கோபுரத்தை புகைப்படம் எடுக்க, எதிரே தெப்பக்குளம் அருகே சென்றபோது, புனிதமான அந்த இடத்தை நம் மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக மாற்றியிருந்ததை கண்டு நெஞ்சு குமுறியது.
வழியே கடை வைத்திருந்தவர்களிடம் நமது ஆதங்கத்தை கொட்டினோம். “என்ன சார்…இது வழியாத் தானே சார் உள்ளே போகணும்… கொஞ்சம் ஜனங்க அசுத்தம் செய்யாம பார்த்துக்கக் கூடாதா? கோவில் இடம், தெப்பக்குளம்னு கூட பார்க்காம இப்படி அசிங்கம் பண்ணி வெச்சிருக்காங்களே…?” என்றோம்.
“சார் நாங்க எவ்ளோ தான் சொல்றது? இங்கே தங்குறவங்க நைட் டைம்ல வந்து இந்த மாதிரி பண்ணிடுறாங்க…” என்றார்.
நமது திருக்கோவில்கள் பலவற்றில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இருக்கும் ஒரு சில கோவில்களில் அவற்றை பயன்படுத்த பணம் வசூலிப்பதால் மக்கள் கட்டண கழிவறைகளை பயன்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. வருவாய் குவியும் பல திருக்கோவில்களின் உண்டியலில் வசூலாகும் பணம் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படாமல் வேறு எது எதற்கோ பயன்படுத்தப்படுகிறது. மேலும் நாம் பேசினால் இங்கு அரசியல் வந்துவிடும். இத்தோட விடுவோம்…
பல்லைக் கடித்துக்கொண்டு அந்த இடத்தில் நின்று கோவில் கோபுரத்தை புகைப்படம் எடுத்தோம். கோபுரத்திற்கு மேலே வானில் சந்திரன் தெரியும் அந்த காட்சி…வாவ்… அழகோ அழகு.
திருவேற்காட்டிலிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து அலுவலகத்துக்கு புறப்பட தயாரானோம்.
பிரசாதம் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போகும் வழியில் மேற்கு மாம்பலத்தில் சுகந்தா மாமியை சந்திப்பதாக திட்டம்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்கு சென்றபோது மாமி அன்போடு வரவேற்றார்.
மகன் வைத்தியநாதன் வேலைக்கு சென்றிருந்தார். மாமாவுக்கு ஒரு ஓரமாக படுத்திருந்தார்.
நாகங்குடி சந்திப்புக்கு பிறகு மாமியுடனே நாம் அடிக்கடி பேசி வருவதால் மாமாவுக்கு நம்மை சரியாக நினைவில்லை.
“அவரை தொந்தரவு செய்யவேண்டாம்… அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்….” என்று கூறி நாம் ஓரமாக அமர்ந்தோம்.
பரஸ்பர நல விசாரிப்புக்கள் முடிந்த பிறகு, திருமங்கலக்குடி + திருவேற்காடு பிரசாதத்தை கொடுத்தோம்.
வாங்கிப் பார்த்தவருக்கு திருமாங்கல்யம், குங்குமம், அம்பாள் படம், விபூதி என அனைத்தையும் பார்த்து ஒரே சந்தோஷம். முகத்தில் அத்தனை மலர்ச்சி.
வாங்கி கண்களில் ஒற்றி பூஜையறையில் வைத்தார்.
“உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலேப்பா…”
“உங்க டாட்டர்கிட்டே மறக்காம சேர்த்துடுங்க மாமி!”
“இன்னைக்கே நிச்சயம் கொண்டு போய் கொடுத்துடுறேன்… அப்புறம் குடிக்க பால் தரட்டுமா?” என்றார்.
அவர் அன்புக்காக “அரை டம்ளர் போதும்!” என்று கூறினோம்.
மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அந்த வாரம் பிரார்த்தனை கிளப்பில் மறுபடியும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி கோரிக்கையை சமர்பிக்கப்போவதை கூறி, மற்றொரு பிரார்த்தனை மற்றும் பொதுப் பிரார்த்தனை பற்றிய விபரங்களை கூறி பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
நிச்சயம் பிரார்த்திப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, தனது மருமகனுக்கு ஏன் இப்படி ஆயிற்று.. என் இப்படி தொடர்ந்து ஒரே மாதிரி நிலையில் (கோமா) இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறி கண் கலங்கினார்.
அவர்கள் குருமகா சன்னிதானத்தின் அறிவுறுத்தலின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களில் அபிஷேகமும் அர்ச்சனையும் செய்திருப்பதாக சொன்னார்.
“அவருக்கு இப்போ நேரம் சரியில்லை போல. அதுனால் மகா பெரியவா அவரை ஒரே இடத்துல முடக்கி வெச்சிருக்கார்னு நினைக்கிறேன். பெரியவாவோட செயல்களின் காரணங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? விரைவில் கிரகணம் விலகி உங்கள் கிரகம் பிரகாசிக்கும். கவலைவேண்டாம். எல்லாத்துக்கும் மேல எங்கள் அத்தனை பேரோட பிரார்த்தனையும் இருக்கு. அது நிச்சயம் வீண் போகாது. உங்க மருமகனுக்காக எங்க வாசகர்கள் பலர் ‘வேல்மாறல்’ படிச்சிகிட்டுருக்காங்க தெரியுமா?” என்றோம்.
“அப்படியா.. நல்லா இருக்கணும் எல்லாரும். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே” என்றார்.
“எல்லாம் அம்பாள் கடாக்ஷம் – பெரியவா திருவுள்ளம்…. ”
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டபடியால் “நான் உத்திரவு வாங்கிக்குறேன் மாமி” என்று கூறி அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
“அவருக்கு உடம்பு நல்லாச்சுன்னா… எனக்கு மறக்காம தகவல் சொல்லுங்க… அதே மாதிரி மாமாவும் நார்மலான பிறகு எனக்கு தகவல் சொல்லுங்க… நான் அவர்கிட்டே பேசணும்” என்றோம்.
“உனக்கு தாம்பா முதல்ல சொல்வேன்” என்று கூறி அன்புடன் வழியனுப்பி வைத்தார்கள்.
வெளியே வருகிறோம்… இரண்டு நாட்களாக நம்மை பிடித்திருந்த இறுக்கம் குறைந்து நம் மனம் சற்று லேசாகி இருந்தது.
நமக்கு தபால் அனுப்பிய திருமங்கலக்குடி கோவில் அதிகாரிக்கு ஃபோன் செய்து நடந்தது அனைத்தையும் கூறியவுடன் அவருக்கும் ஒரே சந்தோஷம். “எல்லாம் அம்பாள் கருணை சார். நீங்க அவசியம் இன்னொரு முறை இங்கே வரணும்” என்று கேட்டுகொண்டிருக்கிறார்.
நிச்சயம் நம் வாழ்வில் அன்னை மங்களாம்பிகையின் தொடர்பு நிரந்தரமாய் இருக்கும். அப்படி ஒரு சங்கல்பம் செய்துவிட்டோம். அது என்ன என்பதை அவள் அறிவாள்.
பொற்பாதம் பணிந்தவர்களுக்கு பொன்னான வாழ்வளிப்பாள்
பொற்பாதம் பணிந்தவர்களுக்கு பொன்னான வாழ்வளிப்பாள்
திருக்கோவில் சென்று வந்தால் திருவருளை தந்திடுவாள்
திருக்கோவில் சென்று வந்தால் திருவருளை தந்திடுவாள்
கலங்கித் தவிக்கும் இதயங்களில் நம்பிக்கை ஒளி ஏற்றுவதும் ஒரு வகையில் வழிபாடு தான். மிகப் பெரிய வழிபாடு. ஆம் இறைவனுக்கு மிகவும் பிடித்த வழிபாடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் செய்ய வேண்டிய வழிபாடு!!
(திருமங்கலக்குடி பரிகாரம் பதிவு விரைவில்…!)
===========================================================
Also check :
தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)
இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !
‘தேடி வரும் தெய்வத் திருவருள்!’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!
===========================================================
[END]
இந்த பதிவை படிக்க படிக்க கண்களில் கண்ணீர் வந்து விட்டது. தாங்கள் ஆத்மார்த்தமாக ஒருவருக்கு பிரசதாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்ததை இறைவன் தன் திருவிளையாடல் மூலம் நிகழ்த்தி விட்டான்.
திரு கிருஷ்ணமூர்த்தி வெகு விரைவில் நலமடைவார்.
அனைத்து புகைப்படங்களும் கண்கொள்ளாக் காட்சி. பசுவும் கன்றும் அழகோ அழகு.
அழகிய திர்ல்லிங் ஆன பதிவிற்கு நன்றிகள் பல
அடுத்த திருமங்கலக்குடி பதிவை எதிர்பார்க்கிறோம் விரைவில்
நன்றி
உமா வெங்கட்
சுந்தர்ஜி
தாங்கள் இறைவனின் கால்களை இறுக்கி பற்றி
கொண்டீர்கள். அதன் பயனாக இறைவன் நம் எல்லோரையும் அரவணைத்து கொண்டார்.எங்களின் பூர்வஜன்ம பலன் தான் இந்த
ரைட் மந்திர தளத்தை நாங்கள் அரிந்துகொண்டது. தங்களின் பணி
சிறக்க வாழ்த்துகள்
சுகந்தா அம்மாவின் இல்லத்தில் என்றென்றும் சந்தோசம் நிலைத்திருக்க மங்களாம்பிகையும், மகா பெரியவாவும் அருள்வார்கள்…….
பதிவினைப் படிக்கும்பொழுது மனதிற்கு ஆறுதலைத் தருவதுபோல் இருக்கிறது. சுகந்தா அம்மையாரின் இல்லத்தில் இருள் நீங்கி ஒளிபரவ மீண்டும் பிரார்த்தித்துக்கொள்கிறேன். கோயில்களில் படங்கள் எடுக்க எத்தனை சிரமங்கள் இருக்கின்றன. என்பதை அறிந்துகொண்டேன். பகிர்ந்துள்ள அனைத்து படங்களும் அருமை………மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு
அட்டகாசமான புகைப்படம்
ஆனந்தமான அருட் பிரசாதம்
நல்லதே நினைப்போம்
நல்லதே சொல்வோம் ,
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்
Excellent article Sundar. My eyes were wet when I read this whole story. I will pray for the betterment of the Sungtha Mami Mapillai. I am stunned to see your narration expertise. Even though we have also got may incidents like this we will not be in a position to narrate the incidents like this style. in future your kids and your grand kids will have a good “STORY TELLER”. This will be one of the previous article to save for the future generations. ஓம் மங்கலாய பவந்து.