Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 12, 2024
Please specify the group
Home > Featured > இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

print
த்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ‘மங்கள வாத்தியம்’ என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்தப் பெருமை உண்டு.  சிவாலயங்களில் தினமும் விடியற்காலை இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையின்போது தவில் & நாதஸ்வரம் ஆகிய மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுவதுண்டு.

சுப நிகழ்சிகளிலும் கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நமது தலையாய கடமை.

Mangala Vathiyam 6

இராமபிரான் பூஜித்த போரூர் ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி நாம் செல்வதுண்டு. சென்ற ஆண்டு மார்கழி தரிசனம் முழுக்க இந்த ஆலயத்தில் தான். இந்த ஆண்டு தான் தினம் ஒரு கோவில் என்று சென்று வருகிறோம். போரூர் ராமநாதீஸ்வரர் கோவிலிலும் அபிஷேக ஆராதனையின்போது இரண்டு கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைப்பதுண்டு. அதுவும் ஒரு நாள் தவறாமல் தினமும் காலையும் மாலையும் வருகிறார்கள். இந்த மார்கழி குளிரில் எழுந்து குளித்து புறப்பட்டு 4.30 க்கெல்லாம் ஆலயம் வந்து மங்கள வாத்தியம் இசைப்பது என்ன சாதாரண தொண்டா? (இவர்கள் ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆலய வழிபாட்டில் அபிஷேக ஆராதனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மங்கள வாத்தியக் கலைஞர்கள் பலர் தற்காலிக ஊழியர்களே. விற்கும் விலைவாசிக்கும் அரசு இவர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. திருமண நிகழ்சிகளில் மேற்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திய பிறகு இவர்களுக்கும் ஜீவாதாரத்திற்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது.

Mangala Vathiyam 1

இன்னும் சில ஆண்டுகள் கழித்து கோவில்களில் இது போல மங்கள வாத்தியக் கலைஞர்களை பார்க்க முடியுமா என்று தெரியாது. இருக்கும் ஒரு சிலரின் அருமையையாவது நாம் உணர்ந்து அவர்கள் போற்றவேண்டியது நம் கடமையல்லாவா?

எனவே அந்த ஆலயத்தில் மங்கள வாத்திய கலைஞர்களாக இருக்கும் திரு.துரை, திரு.சக்திவேல் மற்றும் திரு.ஜெயவேல் ஆகியோரை ஒரு நாள் நமது தளம் சார்பாக கௌரவிக்க திட்டமிட்டிருந்தோம். ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு அன்றே இதை செய்வதாக இருந்தது. ஆனால் அன்று இருந்த பரபரப்பான ஷெட்யூலில் முடியவில்லை. மேலும் தளத்தின் தளத்தின்  வங்கிக்கணக்கில் தொகை வேறு மிகக் குறைவாக இருந்தது.

மார்கழி முடிய இன்னும் ஒரே நாள் இருப்பதால் அதற்குள் அவர்களை கௌரவிக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். “அப்பா இராமநாதீஸ்வரா… மார்கழி முடிய இன்னும் ஓரிரு நாள் தான் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களை நான் மனதில் நினைத்தபடி தேவையானதை தந்து கௌரவிக்க நீ தான் ஏதேனும் ஒரு வழியை காட்டவேண்டும்!” என்று அவன் மீது பாரத்தை போட்டுவிட்டு பணிகளை கவனிக்கலானோம்.

Mangala Vathiyam 2

இதற்கிடையே திருச்சியை சேர்ந்த வாசக அன்பர் ஒருவருக்கு  ‘வேல்மாறல்’ நூலை அவர் கேட்டுக்கொண்டபடி அனுப்பியிருந்தோம். நூல் கிடைக்கப்பெற்றவர் நூலுக்கான தொகையை நமது வங்கிக்கணக்கில் ட்ரான்ஸ்பர் செய்யும் போது, நமது தளத்தின் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி அதற்கும் சேர்த்து பணம் கொஞ்சம் செலுத்தினார். சரியான நேரத்தில் அந்த தொகை கிடைத்தபடியால் ஏற்கனவே கணக்கில் இருந்த தொகையுடன் சேர்த்து வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம், இனிப்புக்கள், ரொக்கம் என நாம் மனதில் என்ன நினைத்திருந்தோமோ  அவை அனைத்தையும் ஒன்று விடாமல் ஏற்பாடு செய்ய முடிந்தது.

Mangala Vathiyam 3

நம் வாசகர்கள் யாரையாவது அழைத்து அவர்கள் மூலம் இதை செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற அருகாமையில் உள்ள நண்பர்கள் சிலரை அழைத்தபோது அவர்களால் வர இயலாத சூழ்நிலை. என்ன செய்வது என்று யோசித்தபோது போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த நம் தளத்திற்கு சமீபத்தில் அறிமுகமாகியுள்ள சில வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நினைவுக்கு வந்தனர். இவர்கள் தங்கள் பகுதிகளில் தினமும் காலை மார்கழி பஜனை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் நம்மை தொடர்புகொண்டு தங்கள் சத்சங்கத்தில் கலந்துகொண்டு நாம் பேசவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். நாமும் அவர்கள் அழைப்பையேற்று ஒரு மார்கழி காலை சென்று பஜனையில் பங்கேற்றுவிட்டு அவர்கள் மத்தியில் சுயமுன்னேற்ற + ஆன்மீக உரை நிகழ்த்தி விட்டு வந்தோம். மேலும் வைகுண்ட ஏகாதேசி அன்றும் இவர்களுடன் தான் இரவு முழுதும் சத்சங்கத்தில் கழித்தோம். (இது பற்றி விரிவான பதிவு வரவிருக்கிறது.)

Mangala Vathiyam 4

இவர்களை தொடர்புகொண்டு இது போல ராமநாதீஸ்வரர் கோவில் வாத்தியக் கலைஞர்களை கௌரவிக்கவிருக்கிறோம், கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, “நாங்கள் செய்த பாக்கியம்” என்று கூறி அந்த குழுவிலிருந்து திரு.சரவணன், அவர் சகோதர் மற்றும் அவர் சகோதரி திருமதி.வைதேகி மாமி மற்றும் திருமதி.இராம திலகம் அம்மாள் ஆகியோர் வந்திருந்து நமது எளிய நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Mangala Vathiyam 7

முன்னதாக நேற்று செவ்வாய் மாலை அனைவரும் கோவில் வந்து சேர்ந்தவுடன் தரிசனம் முடித்து கோவில் அர்ச்சகர்களை கொண்டே வாத்தியக் கலைஞர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.

அரசு தரும் சொற்ப சம்பளத்தை தவிர இவர்களுக்கு வேறு வருவாய் கிடையாது. ஆனால் இன்று பொங்கலை முன்னிட்டு இவர்களுக்கு வஸ்திரம், சட்டை, இனிப்பு, ரொக்கம் என்று நாம் அளித்தது அவர்களை நெகிழச் செய்துவிட்டது.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை… மிகப் பெரிய விஷயம் சார் நீங்கள் இப்படி எங்களுக்கு செய்வது!” என்றார்கள்.

“ஐயா… நான் ஒரு கருவி மட்டுமே. என்னை வழிநடத்தும் என் குருவுக்கும், ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் வாசகர்களுக்குமே இந்த பெருமை போய் சேரவேண்டும். அவர்கள் ஊக்கமும் ஆதரவும் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமேயில்லை. உங்களிடம் பிரதிபலனாக எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். தினமும் மங்கள வாத்தியம் இசைக்கும்போது பரமேஸ்வரனிடம் இந்த நாடும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும்… ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் அனைவரும் சகல சம்பத்துக்களுடன் நலமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் நிச்சயம் தவறாமல் இறைவனை சென்று சேரும்!!” என்று கூறினோம்.

“நிச்சயம் சார்…!” என்றனர். நன்றிப்பெருக்கில் கண்கள் பனித்தன அவர்களுக்கு.

Mangala Vathiyam 5

இன்னிசையாய் செந்தமிழாய் இருக்கும் நம் பரமேஸ்வரன் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தான்! அது போதும் நமக்கு!!

நிகழ்ச்சிக்கு வந்திருந்து தங்கள் கைகளால் இந்த கைங்கரியத்தை நடத்தித் தந்த நம் வாசகர்களுக்கு நன்றி தெரிவித்தோம். “நீங்கள் எதற்கு நன்றி சொல்கிறீர்கள்? நாங்கள் தான் இப்படி ஒரு மகத்தான கைங்கரியதில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்” என்றனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க!

==================================================================

[END]

3 thoughts on “இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

 1. இனிய காலை வணக்கம்

  நம் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

  நாதஸ்வர கலைஞர்களை கௌரவித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் இறைவன் தங்களுக்கு வழி காட்டுகிறேன். நினைத்தால் நடத்திக் கொடுக்க ஆண்டவன் இருக்க தங்களுக்கு கவலை எதற்கு. இந்த நிகழ்ச்சியில் தங்களுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருச்சியை சேர்ந்த வாசகருக்கும் எமது வாழ்த்துக்கள்

  தங்களுக்கு குருவருளும் திருவருளும் துணை புரியட்டும்.

  அனைத்து படங்களும் தங்கள் கை வண்ணத்தில் அருமையாக உள்ளது

  நன்றி

  உமா வெங்கட்

 2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் தெரிவித்திருந்தது சந்தோஷம்.

 3. மிக சரியாக நினைவு கூர்ந்து என்னை இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டது பெருமை. அனால் Meeting ஒன்று இருந்ததால் அந்த பாக்கியம் கிடைக்க வில்லை. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். தாங்கள் மனமுவந்து செய்யும் தங்கள் சேவையை கூட வாசகர்களை வைத்து செய்ய வேண்டும் என்ற தங்களின் பண்பு பாராட்டுக்கு உரியது. அனால் விதி என்ற ஒன்று இருக்கிறதே, நீங்கள் செலவு செய்து என்னை கலந்துக்கொள்ள சொன்னால் கூட என் விதி விடவில்லை. விதி வலியது என்பது இதுதானோ? என்னதான் நான் 200% Confident ஆக இருந்தாலும், சமயத்தில் விதி தன வலிமையை காட்டி எங்களை test செய்து பார்ப்பதை மறுப்பதற்கில்லை. HAPPY PONGAL, தங்களுக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும். சாய் எங்களை அவர் பக்கத்தில் வைத்துக்கொள்ளவே எப்படி ஒரு விளையாட்டை நிகழ்த்தி எங்களை காக்கிறார் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *