Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > 108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

print
ருடத்தின் கடைசி நாள். தவிர வைகுண்ட ஏகாதசிப் பொழுது. நேற்று வரை இந்த பதிவை இன்று அளிக்கவேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. இப்படி ஒரு பதிவு அமைவது உண்மையில் அரங்கன் அருள் தான். நினைத்ததைவிட சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறோம். உண்மையில் வைகுண்ட ஏகாதசிக்கு இதைவிட பொருத்தமான ஒரு பதிவை அளிக்க முடியாது. அரங்கனுக்கு நன்றி.

ழுவகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால் தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார். மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும்  மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம். மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று கூறுவார்கள். ஒவ்வொருவரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தரிசிக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.

‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்’

என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான். ‘நல்வினை’ என்று அவர் கூறியிருப்பதை கவனியுங்கள்.

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும். அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிற வாக்கிற்கு இணங்க, அனைத்தையும் தரிசிக்கவேண்டும் என்கிற வைராக்கியம் பூண்டால் தான் அவற்றில் ஒரு பத்து சதவீதமாவது நம் வாழ்நாளில் நாம் தரிசிக்க இயலும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் திருவேள்விக்குடி என்கிற தலத்திற்கு நாம் சென்றிருந்தபோது அங்கு தரிசனத்திற்கு வந்திருந்த நடுத்தர வயதுகொண்ட ஒரு தம்பதியினரை (திரு.ராம சுப்ரமணியன், திருமதி.லலிதா) சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் பேசிய போது இதுவரை 100 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் பார்த்துவிட்டதாகவும் (108 தலங்களில் 2 தலங்கள் புவியில் இல்லை) தற்போது தேவார பாடல் பெற்ற தலங்களை பார்க்க கிளம்பியிருப்பதாகவும் கூறினர்.

 பரிமள சுகந்த நாயகி உடனுறை அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி - 609 801
பரிமள சுகந்த நாயகி உடனுறை அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில்,
திருவேள்விக்குடி – 609 801

நமக்கு ஒரே ஆச்சரியம். “குடும்பம் பிள்ளை குட்டிகள் என்கிற பிணைப்புகள் இறுக்கும் சூழ்நிலையில் இது எப்படி உங்களுக்கு சாத்தியப்பட்டது?” என்று கேட்டபோது, “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்று பதிலளித்தனர் அவர்கள்.

1991 இல் திருமணமான அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் இந்த திருத்தல யாத்திரையை துவங்கி தலங்களை தரிசித்து வருகின்றனர்.

தம்பதிகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி புறப்பட்டு திருத்தலங்களை தரிசிப்பது என்று உறுதி மேற்கொண்டு கடந்த பல வருடங்களாக இப்படி போய்வருவதாக கூறினர். இவர்களின் ஆன்மீக தேடலுக்கு ஏற்றார் போல பிள்ளைகளும் குடும்பமும் அமைந்தது இறைவனின் கருணையே.

ஓரிரு பாடல் பெற்ற கோவில்களுக்கு சென்று வந்ததையே ஏதோ வாழ்நாள் சாதனை ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டிருப்பவர்கள்  நிச்சயம் இவர்களை ஒரு முறை நினைத்துப் பார்க்கவேண்டும்.

எதற்கும் இருக்கட்டுமே என்று அவர்களை அலைபேசி எண்ணை அப்போது கேட்டு குறித்து வைத்துக்கொண்டோம். இந்த பதிவை தயார் செய்ய முற்பட்டபோது அவர்கள் தான் நினைவுக்கு வந்தனர்.

கண்டிப்பாக இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மேலும் பல தலங்களை தரிசித்திருப்பார்கள். எனவே இன்று இந்த பதிவில் அப்டேட் செய்ய வேண்டி நாம் அவர்களை தொடர்புகொண்ட போது திருமதி.லலிதாவிடம் பேச நேர்ந்தது. வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒரு சில மட்டுமே பாக்கியிருப்பதாகவும் தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில் இதுவரை 91 தலங்கள் பார்த்துவிட்டதாக கூறினார் திருமதி.லலிதா. அடுத்து நம்மைப் பற்றி விசாரித்தார். நம்மைப் பற்றியும் நமது தளத்தைப் பற்றியும் கூறியபோது மிகவும் சந்தோஷப்பட்டார். தானும் தன் குடும்பத்தினரும் அவசியம் இனி நம் தளத்தை தொடர்ந்து பார்ப்பதாக கூறினார். ஒரு புது வாசகர் குடும்பம் நமக்கு கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி. ‘இந்த வருடம் நமது எண்ணங்கள் யாவும் ஈடேறி பல படிகள் நாம் முன்னேற்றமடைந்து மேலே செல்வோம்’ என்று வாழ்த்தினார். இத்தனை தலங்களை தரிசித்த ஒரு புண்ணியவதியின் வாக்கிலிருந்து வெளிவந்த சொற்கள் நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. சிவாய நம!

இந்த தம்பதிகளை போன்றே 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் எப்படியாவது தங்கள் வாழ்நாளில் தரிசிக்க வேண்டும் என்கிற விருப்பம் கொண்டு திவ்ய தேசங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் செல்பவர்கள் அநேகம் பேர் உண்டு. 108 தலங்களையும் நம்மால் தரிசிக்க முடியுமா என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்த உடலில் ஜீவன் இருக்கும்போதே எத்தனை தலங்களை முடியுமோ அத்தனை தலங்களை தரிசித்துவிடவேண்டும்.

Veera Narayanap Perumal
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும்
காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்

அப்படி வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முடிவு செய்து கிளம்புபவர்கள் முதலில் செல்லவேண்டிய கோவில் எது தெரியுமா? காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில். காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது. நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது. எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.

ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின்  பரம்பரை துவங்குகிறது.

இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.

Veeranam lake
வீராணம் ஏரி

‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.

Veera Narayanap Perumal temple 3

பெருமாள் பெயர் : வீரநாராயணப்பெருமாள்

உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.

தாயார் : மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.

தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி

தலவிருட்சம் : நந்தியாவட்டை

Maragada valli

இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ வராகரையும் நாம் தரிசிக்கலாம். பிராகாரத்தில் ஆளவந்தார் சந்நிதியை வணங்கி விட்டு தாயார் சந்நிதிக்குச் செல்வோம். இங்கு தாயார் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் என்னும் திருப்பெயரோடு அருள்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்று அழைக்கப் படுகிறாள். அடுத்து ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும் வணங்குகிறோம்.

பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். தவிர அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.

Veera Narayanap Perumal temple 2

கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர். இதன் எதிரில் ராமர் சன்னதி உள்ளது.

வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட  ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த தலம் இது. ”லக்ஷ்மி நாத சமாரம்பாம்” என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்.

Veera Narayanap Perumal temple 9

ஜில்லிகாவனம், ஸ்ரீ நாராயணபுரம், வீரசதுர்வேதி மங்கலம், வீரநாராயண விண்ணகரம், மதங்காச்ரமம் ஆகிய திருப்பெயர்களும் காட்டுமன்னார் கோவிலுக்கு உள்ளன. (பண்டைக்காலத்தில் ஜில்லிகை என்ற அரக்கி வாழ்ந்த பகுதியானபடியால் ஜில்லிகாவனம் எனப்பட்டது.)

Madhanga Maharisihi

இந்த ஆலயத்தின் தலவிருட்சம் நந்தியாவட்டைப் பூஞ்செடி. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடுகளும்; திருவரங்கம் பஞ்சாங்கத்தையொட்டி திருநட்சத்திரங்கள், திருவிழாக்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங் களுக்கு ஒத்த பெருமையுடைய இந்தத் திருத்தலத்தில் வைணவ ஆலயங்களுக்குரிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் நாதமுனிகள் மண்டபம் உள்ளது. இதில்தான் நாதமுனிகள் பெருமாளின் முன்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீண்டும் உலகுக்கு வெளியிட்டாராம்.

Veera Narayanap Perumal temple 4

தென்னாற்காடு மாவட்டத்தின் தென்கோடியில், கொள்ளிடத்தின் வடக்கே கடலூர் மாவட்டத்தில் உள்ளது இத்திருத்தலம். இத்திருத்தலத்துக்கு வருவோர் “குப்பங்குழி’ என்ற இடத்திற்குச் சென்று நாதமுனிகளின் அவதாரத் திருமாளிகையையும் தரிசனம் செய்யலாம். நம்மாழ்வார் நேரில் தோன்றி நாதமுனிகளுக்கு திருவாய்மொழி, நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை  உபதேசித்ததாக உள்ள ஐதீகத்தின்படி, வைணவ ஆலயங்களில் வடமொழி வேதத்துக்குச் சமமாக இவ்விரு நூல்களும் படிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.

Veera Narayanap Perumal temple 6

ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு இங்கு ஆண்டுதோறும் அபிஷேக ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். திவ்யபிரபந்தம் பாடி முடிந்தவுடன் பூஜை செய்து தயிர்சாதம் பிரசாதமாய் கொடுப்பார்கள். அதை புசிப்பது மிகவும் நலம் தரும்.

நாம் சென்ற மாதம் (நவம்பர் 16) இந்த தலத்திற்கு நமது ரைட்மந்த்ராவுக்காக சென்றிருந்தோம். முன்னரே பேசிவிட்டு சென்றபடியால் அனைத்தையும் நன்றாக தரிசிக்க முடிந்தது. (நாகங்குடி பயணம் நடைபெற்றதே… அதே நாள் தான்!)

Veera Narayanap Perumal temple 7

பட்டர் தலத்தின் பெருமையையும் சுவாமியின் மகிமையையும் விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் வாசகர்கள் சிலரின் பெயருக்கு அர்ச்சனை நடைபெற்றது. தீர்த்தப் பிரசாதம் பெற்றபின்னர், திருத்துழாய் கொடுத்தார். தொடர்ந்து அரங்கனை அலங்கரித்த மிகப் பெரிய மாலை ஒன்றை நமக்கும் நம் நம்முடன் வந்திருந்த நண்பர் சிட்டிக்கும் அரங்கின் அருள் பிரசாதமாய் அணிவித்தார்.

Veera Narayanap Perumal temple 5

தொடர்ந்து தாயார் சன்னதியிலும் தரிசனம் செய்விக்கப்பட்டது. தாயாரின் சன்னதியில் அந்த வாரம் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

Veera Narayanap Perumal 2

இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான் என்று நாம் அடிக்கடி கூறுவதுண்டு. அது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த திருத்தலத்தை பற்றியும் இதன் மகத்துவம் பற்றியும் இங்கு எழுந்தருளியிருக்கும் வீரநாராயணப் பெருமாளை பற்றியும் கேள்விப்பட்டவுடனேயே இந்த சுவாமியை நாம் நிச்சயம் விரைவில் தரிசிக்க வேண்டும் என்று சங்கல்பித்துகொன்டோம்.

அன்ன ஆச்சரியம் அடுத்தடுத்து அதற்குரிய சூழல் கனிந்து கடைசியில் தரிசித்தும் விட்டோம். அதுவும் ஒரு வி.ஐ.பி. ரேஞ்சுக்கு மாலை மரியாதையுடன். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் நூறடி அல்ல… இருநூறடி நம்மை நோக்கி வருவான் அரங்கன்! இது சத்தியம்!!

கோவில் முகவரி :
வீரநாராயணப் பெருமாள் கோவில்,
காட்டுமன்னார்குடி – 608301.
கடலூர் மாவட்டம்.
Ph : 04144-261523

=================================================================

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களை சென்னையில் ஒரே இடத்தில் தரிசிக்க…!

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க இதோ மற்றுமொரு வாய்ப்பு. சென்னை, வானகரத்தில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் உள்ள மூலவர்களை ஒரே இடத்தில காணும் விதமாய் ஒரு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

108 Divya Desams

அந்தந்த திவ்ய தேசங்களில் மூல மூர்த்தங்கள் எப்படி இருக்குமோ அதே போல தத்ரூபமாக விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி இன்னும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

24 Dec 2014 – 3 Jan 2015 | 6.00 am – 9.00 pm

இடம் : ஸ்ரீவாரு வெங்கடாச்சலபதி பேலஸ், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், (மதுரவாயல் அருகே), சென்னை

Divya Desam 2

கண்காட்சி குறித்து விரிவான கவரேஜ் நம் தளத்தில் இடம்பெறவிருக்கிறது. சாம்பிளுக்கு ஒன்றிரண்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Divya Desam 1

 

=================================================================

Also check:

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

பிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்!

கண்ணனாக அவதரித்ததற்கு கடவுள் கொடுத்த விலை – கிருஷ்ண ஜெயந்தி SPL!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

==================================================================

[END]

7 thoughts on “108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

  1. சுந்தர்ஜி

    தங்கள் பதிவு நாமும் தங்களுடன் வந்து தரிசனம் செய்ததாக வியக்க வைக்கிறது. மிகவும் சிறந்த பதிவு

  2. வருடத்தின் கடைசி பதிவு அருமையான பதிவு. நனது தளத்தின் புது வரவாக வரப்போகும் திரு.ராம சுப்ரமணியன், திருமதி.லலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒவொரு படமும் அருமை. எனக்கும் பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலங்களை நம் வாழ்நாளைல் தரிசக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பதிவை படித்த பிறகு ஏற்பட்டுள்ளது.

    பதிவிற்கு நன்றிகள்

    நன்றி
    உமா வெங்கட்

  3. என்ன சுந்தர் இப்படி பண்ணிடிங்க 🙂 நம்ம ஊரு வரைக்கும் வந்துட்டு ஒரு தகவல் கூட சொல்லவே இல்ல. என்னுடைய திருமணத்துக்கு இந்த வூருக்கு தானே (காட்டுமன்னார்குடி) வந்தீங்க அது கூடவா நினைவு இல்ல. நான் இப்பொழுது கோவையில் இருந்தாலும் நீங்கள் அங்கு செல்வது தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன். சரி போகட்டும். சிறு வயதில் இருந்தே இந்த கோவிலுக்கு பல முறை சென்று இருந்தாலும் இப்படி ஒரு சிறப்பு இருப்பது எனக்கு தெரியாது. எனது தந்தை PWD யில் பாசன ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். வீராணம் டிவிசனில் 15 வருடம் இருந்தார். அப்பொழுது ஒவ்வொரு வருடமும் PWD சார்பில் இந்த கோவிலுக்கு சிறப்பு படையல் நடைபெறும். அதில் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். சென்ற வருட வைகுண்ட ஏகதேசிக்கு கூட இந்த கோவிலுக்கு தான் சென்றோம். இந்த கோவில் மற்றும் வீராணம் எரி பற்றி பொன்னியின் செல்வன் கதையில் கூட வரும்.

    பொதுவாக எனது சொந்த ஊரை (காட்டுமன்னார்குடி) சொன்னால் யாருக்கும் தெரியாது என்பதால் சிதம்பரம் என்றுதான் சொல்வேன். ஆனால் இந்த பதிவிற்கு பிறகு இந்த ஊர் காரன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்.

    1. சக்திவேல், என் பயணங்கள் பெரும்பாலும் திடீர் திடீர் என்றே முடிவு செய்யப்படுகிறது. பல நேரங்களில் புறப்படுவது கடைசி நேரத்தில் கூட மாறிப்போயிருக்கிறது. என்னுடைய பணி சூழல் அப்படி.

      மேலும் பெரும்பாலான பயணங்களை கடைசி நேரத்தில் கூட தளத்தில் அறிவித்துவிட்டு தான் செல்கிறேன். இதை பற்றி சொன்னேனா என்று தெரியவில்லை. அடுத்த முறை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். காட்டுமன்னார்குடி அருமையான ஊர். இந்த பெருமாளை நீங்கள் அடிக்கடி தரிசித்ததன் பலன் தான் சமீபத்தில் நீங்கள் எனக்கு சொன்ன அந்த ‘குட் நியூஸ்’.

      தேடும் செல்வம் ஓடிவிடும். தெய்வம் விட்டுப்போவதில்லே.

  4. Dear Mr. Sundar

    I read this article fully with much interest. it is presented very well.

    It is nice of you when you are talking to us and get our full information on our trips. What we have achieved in visiting these temples are tremendous, and god’s blessings are also with us to achieve this one.

    Still long way to go in seeing more and more temples and get HIS blessing, which we will achieve it with HIS directions.

    Thanks for sharing our tour experience with others which will make others to take up this trips seriously and get the blessings of the god.

    Lalitha Ramasubramanian

  5. Dear Sir,

    Just went through your article and mention about Mr Ramasubramanian & Mrs Lalitha Ramasubramanian they are our neighbours and feel very blessed to meet them whenever we find time.

    Such a great couple who dedicate their time to visit the temples in various locations. On seeing them itself we feel blessed and get a good vibration.

    Thank you,
    JAYANTHI GANESH KUMAR

  6. Hi sundarji am regular reader /follower of your articles and nice about divya desam rameshwaram and Rama kovil vibishana temple etc.thanks for app introduced
    Keep going namashivaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *