Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, August 6, 2021
Please specify the group
Home > Featured > ‘அப்பா… வேணாம்ப்பா!’ – நம் விருதுகள் பட்டியலில் ஒரு திடீர் வரவு!

‘அப்பா… வேணாம்ப்பா!’ – நம் விருதுகள் பட்டியலில் ஒரு திடீர் வரவு!

print
ந்த ஆண்டு ரைட்மந்த்ரா விருதுகள் பட்டியலில் ஒன்பது பேர் தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால் விழா நெருங்கும் சமயம் அதாவது கடைசி நேரம் ஒருவர் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து பேர் இந்த விருது பெற்றனர். கடைசியாக சேர்க்கப்பட்ட அந்த நபர் யார் ? அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

தமிழகத்தில் உள்ள 7.20 கோடி மக்களில், ஒரு கோடி பேருக்கு மேல் மது பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை அடித்தட்டு மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். மதுகுடிப்பதை ஒரு ஹீரோயிசம் போன்று காட்டும் திரைப்படங்களால் பள்ளி மாணவர்களும், மது பழக்கத்துக்கு அடிமையாகி வரும்  அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வகுப்பறையிலேயே ஆறு மாணவர்கள் மதுவருந்தி சஸ்பெண்ட் ஆன சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.

நமது மாநிலத்தின் வளர்ச்சியை அரித்து வரும் மிகப் பெரிய நோய் இந்த மதுப்பழக்கம்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல் – (கள்ளுண்ணாமை – குறள் 925)

Tasmac Evil

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா

கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் – அட உன்னால் முடியும் – ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி – அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

இந்நிலையில் சென்ற வாரம் ஒரு நாள் www.newtamilcinema.com என்கிற இணையத்தில் திரைப்பட விமர்சனம் ஒன்றை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதன் ஆசிரியர் திரு.அந்தணனை கடந்த பல வருடங்களாக நாம் அறிவோம். வணிக ரீதியிலான நிர்பந்தங்களுக்கோ சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கோ இடம் கொடுக்காமல் விமர்சனத்தை எழுதும் பண்புள்ளவர் என்பதால் அவர் எழுதும் திரைப்பட விமர்சனங்களுக்கு வலையுலகில் தனி எதிர்பார்ப்பு உண்டு. யார் எவர் நடித்திருந்தாலும் இயக்கியிருந்தாலும் தரங்கெட்ட படங்களை குட்டவும், தரமான படங்களை தட்டிக்கொடுக்கவும் அவர் தவறியதில்லை. அவர் விமர்சனங்களை அவ்வப்போது படித்து அவரை அலைபேசியில் அழைத்து பாராட்டுவது நம் வாடிக்கை. கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாறு அண்மையில் படமாக ‘ராமானுஜன்’ என்கிற பெயரில் வெளியானபோது அவர் எழுதிய விமர்சனத்தை பார்த்து அவரை அலைபேசியில் அழைத்து பாராட்டினோம். ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பை பாராட்டி அதை நான்கு பேருக்கு பகிர்வதைவிட மிகப் பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன…

Appa venambaa

மீண்டும் விஷயத்திற்கு வருகிறோம். சமீபத்தில் மேற்படி இணையத்தில் விமர்சனப் பகுதியில் ‘அப்பா… வேணாம்ப்பா’ என்கிற ஒரு படம் நம்மை பெரிதும் கவர்ந்தது. டைட்டிலே வித்தியாசமாக இருந்ததால் விமர்சனத்தை படிக்க துவங்கிய நாம் படிக்க படிக்க பிரமித்து போய் விட்டோம்.

அதை தயாரித்து, இயக்கி, நடித்திருப்பவர் வெங்கட்டரமணன் என்னும் ஒன் மேன் ஆர்மி.

கோடி கோடியாக செலவு செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்த சமுதாயத்திற்கு நச்சுக்களையும் எச்சங்களையும் விட்டுவிட்டு போக, பத்து லட்ச ரூபாயில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழகத்தில் பெருகி வரும் மதுப்பழக்கத்திற்கு எதிராக ஒரு மிகப் பெரிய கிருமிநாசினியாக மாறி ஒரு மகா யுத்தத்தையே அதன் மீது தொடுத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

DSC_9202

படத்தை நாம் இன்னும் பார்க்க வில்லை என்றாலும், அந்த விமர்சனத்திலேயே அதன் தரம் நன்கு புரிந்தது. சினிமா போன்ற ஒரு மாஸ் கமர்சியல் மீடியாவில் இது போன்ற நல்ல கருத்துக்களை சொல்லவும் இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள் அதுவும் இத்தனை குறைந்த செலவில் என்பது நம்மை பொறுத்தவரை மிகப் பெரிய ஆறுதல்! அதிசயம்!! எனவே அதன் இயக்குனர் கம் தயாரிப்பாளரை அழைத்து கௌரவிப்பது தானே முறை?

ரைட்மந்த்ரா விருதுகள் 2014 ஆம் ஆண்டுக்கான பட்டியல் ஏற்கனவே நம் தளத்தில் வெளியிடபட்டு விட்டாலும் மது ஒழிப்புக்கான ரைட்மந்த்ரா மகாத்மா காந்தி விருதை இருவருக்கு பகிர்ந்து கொடுப்பது ஒன்றும் குற்றமல்லவே…? (மற்றவர் செய்யாறை சேர்ந்த கல்லூரி மாணவர் திரு.ஆனந்த்). இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை செய்தவரை கௌரவிப்பதற்கு அடுத்த ஆண்டு வரை காத்திருக்கவேண்டுமா என்ன? கௌரவமனாது உரிய நேரத்தில் வந்தால் தானே அதற்கு சிறப்பு?

 மது ஒழிப்புக்கான 'ரைட்மந்த்ரா மகாத்மா காந்தி விருது' பெறும் திரு.வெங்கட்டரமணன்

மது ஒழிப்புக்கான ‘ரைட்மந்த்ரா மகாத்மா காந்தி விருது’ பெறும் திரு.வெங்கட்டரமணன்

மேலும் இந்த திரைப்படம் மிகப் பெரிய விருதுகளையும் பாராட்டுக்களையும் குவிக்கப்போவது திண்ணம். எனவே இந்த படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் திரு.வெங்கட்டரமணன் அவர்களை நமது விழாவிற்கு அழைத்து முதல் விருதும் சான்றிதாழும் கொடுக்க முடிவு செய்தோம்.

Venkatramanan 2

தொடர்ந்து திரு.வெங்கட்டரமணன் அவர்களை தொடர்புகொண்டு அவரது படைப்பை பற்றி சிலாகித்துவிட்டு அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டு நமது தளத்தை பற்றியும் நமது விருதுகள் வழங்கும் விழா பற்றியும் குறிப்பிட்டு நிகழ்ச்சிக்கு அவசியம் வந்திருந்து நமது கௌரவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

அதை அன்போடு ஏற்றுகொண்ட திரு.வெங்கட்டரமணன் இந்த சாமானியர்கள் சாதனையாளர்களுக்கு அளிக்கும் விருதை பெற தனது துணைவியாரோடு வந்திருந்தார்.

Venkatramanan copy copy

நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்திற்கு வந்து நம்மை சிலிர்க்க வைத்த திரு.வெங்கட்டரமணன் விருதைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து அனைத்தையும் ரசித்தார்.

அவரைப் பற்றியும் அவரது மகத்தான முயற்சி பற்றியும் குறிப்பிட்டு, அவரை விருது பெற அழைத்தோம். நமது நிகழ்ச்சிக்கு எவரும் எதிர்பாராமல் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘அமர்சேவா சங்கம்’ திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதை பெறும் பாக்கியம் திரு.வெங்கட்டரமணன் அவர்களுக்கு கிடைத்தது.

நம் தேசத் தந்தை பெயரில் வழங்கப்பட்ட விருது, என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை!

ரைட்மந்த்ரா விருதை பெறுவது பற்றி திரு.வெங்கட்டரமணன் கூறியதாவது : “டிசம்பர் 7 ஆம் தேதி ‘அப்பா..வேணாம்ப்பா’ படம் வெளியான  நிலையில் நல்ல விமரிசனங்களுடன் பாராட்டுக்களையும் எல்லா தரப்பினரிடமும் பெற்றுள்ளது. நான் அப்படி திளைத்திருந்த சமயத்தில் தான் ரைட்மந்த்ரா சுந்தர் அவர்கள் தொலைபேசியில் அன்பாக என்னை அழைத்து எனக்கு ஒரு விருது காத்திருப்பதாக தெரிவித்தார். ஒரு படைப்பாளி என்கிற முறையில் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. விழா அரங்கிற்கு சென்றபோது தான் மகாத்மா காந்தி பெயரிலான விருது என்பதை அறிந்தேன். ஒரு நல்ல செயலைச் செய்தவுடனேயே அதற்கான அங்கீகாரத்தை ரைட்மந்த்ரா.காம் அளித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் நல்ல மனிதர்களின் கூட்டம் தான் மேன்மேலும் நம்மை வாழ்வில் முன்னோக்கி கூட்டிச் செல்லும். அந்த விருது அதுவும் நம் தேசத் தந்தை பெயரில் வழங்கப்பட்ட விருது, என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்ல. ரைட்மந்த்ரா தளத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் அங்கு அரங்கில் என்னை உற்சாகப்படுத்திய ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் + நன்றிகள். உங்கள் பணி வளரட்டும். என்னால் முடிந்த வரை உங்கள் அனைவருடனும் இணைந்து மகிழ்ச்சியாக பணியாற்றுவேன்.”

இப்படி ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று எப்படி தோன்றியது?

“இப்படி ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று எப்படி அவருக்கு தோன்றியது?’ என்று சொல்லச் சொல்லுங்கள் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டதும், திரு.வெங்கட்டரமணன் கூறியதாவது : சாலைகளில் அங்கு இங்கு என்று எங்கு பார்த்தாலும் மது போதையில் ஆடை விலகியது கூட தெரியாமல் விழுந்து கிடப்பவர்களை பார்த்து வேதனைப்படுவேன். அந்த வழியாக செல்லும் பெண்கள் எந்தளவு அதைக் கண்டு முகம் அருவருப்படைகிறார்கள் சுழிக்கிறார்கள் என்பதையும் கண்டேன். அதை தொடர்ந்து சுமார் 5 வருடங்களுக்கு முன் மதுவின் தீமைகள் பற்றி  டாக்குமெண்டரி எடுக்க முடிவு செய்த போது தான் குடிப்பழக்கம் என்பது சமுதாயத்தில் புரையோடிபோயிருக்கும் எவ்வளவு பெரிய ஒரு நோய் என்பதை புரிந்துகொண்டேன். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போல் குடி நோயால் பாதிக்கப்பட்டதால் தான் அதை விட முடியாமல் அவர்கள் குடித்து சீரழிகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டபின், குடியால் வாழ்க்கையை இழந்த பல குடிநோயாளிகளை சந்தித்து, அவர்கள் அனுபவங்களைக் கேட்டேன். அவர்களின் மனைவி, அண்னன், அப்பா போன்றவர்களையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கண்டறிந்தேன். அவர்கள் குடியை விட்டபின்னும் கூட சமுதாயத்தினால்  குடிகாரர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். மனைவி மற்றும் பெற்றோர் கூட அவர் செய்த கலாட்டாக்களை நினைத்து அவருக்கு ஆதரவு தராமல் வெறுத்து துரத்துகிறார்கள். இதனால் திருந்தியது பலனின்றி அவர்கள் மீண்டும் குடிக்க தள்ளப்படுகிறார்கள். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டவர்களை இந்த சமூகம் அரவணைக்க வேண்டும். இதெல்லாம் தான் என்னை இந்த திரைப்படத்தை எடுக்கத் தூண்டியது. மேலும் தமிழ்நாட்டில் மேலும் மேலும் பலர் குடிநோயாளிகளாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மனிதன் குடிப்பதனால் அவன் மட்டும் இல்லாமல் அவனைச் சார்ந்துள்ள குடும்பமே பாதிக்கப்படுகிறது. அதனால் தான் அதை ‘குடும்ப நோய்’ என்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் சமுதாயத்தில் ஆண்கள் குடித்து நோய்வாய்ப்பட்டு இறப்பர். பெண்கள் கணவனை இழப்பார்கள். குழந்தைகள் இனி தாத்தாக்களையே பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இது மிகவும் கொடியது. இந்த திரைப்படத்தில் எப்படி ஒரு குடிநோயாளி , சரியான சிகிச்சையால் முன்னேறி மறுபடி குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை படம் பிடித்துள்ளோம். அவர்களால் திருந்தி வாழமுடியும் என்று நம்பிக்கை அளிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தனது துணைவியாரை நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு படைப்பாளியாக இந்த விருது தனக்கு எவ்வளவு பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது என்பதை விளக்கினார். மேலும் திரு.ராமகிருஷ்ணன் போன்றோர் கைகளில் விருதை பெற்றது உண்மையில் மிகப் பெரிய பாக்கியமாக கருதுவதாக கூறினார்.

Venkatramanan award

வரும் வெள்ளிக்கிழமை முதல் விருகம்பாக்கம் தேவி கருமாரி திரையரங்களில் ‘அப்பா…வேணாம்பா’ திரைப்படம் தினமும் பகல் காட்சி திரையிடப்படவிருக்கிறது. படத்தை பார்க்க நம்மை அழைத்திருக்கிறார் திரு.வெங்கட்டரமணன். அந்த அனுபவத்தை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

நீங்களும் உங்கள் நட்பு மற்றும் உறவு வட்டங்களில் இந்த் திரைப்படத்தை பற்றி கருத்துக்களை விதைத்து ஒரு நல்ல தரமான படைப்பை பலர் பார்க்க வழி செய்யுங்கள்.

இதுவும் கூட ஆன்மிகம் தான்! ஒரு வகையில் வழிபாடு தான்!!

(பின் குறிப்பு : தமிழில் பெயரை தாங்கி வெளிவரும் சிறந்த படங்களுக்கு வரிவிலக்கு உண்டு. ஆனால் மதுவின் தீமையை சொன்னதாலோ என்னவோ அருமையான பெயரைகொண்டிருந்தும் இந்த படத்துக்கு அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. தியேட்டரும் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றாக இதுவரை கிடைத்தது மொத்தம் மூன்றே மூன்று தியேட்டர்கள் தான். இது தாண்டா தமிழ்நாடு! தமிழன் என்று சொல்லடா… தள்ளாடியபடி நில்லடா!!)

Appa..Venampa… Movie Official Trailer

[END]

12 thoughts on “‘அப்பா… வேணாம்ப்பா!’ – நம் விருதுகள் பட்டியலில் ஒரு திடீர் வரவு!

 1. உண்மையில் மது எப்படி மக்களையும் குடும்பத்தையும் அழித்து கொண்டு இருக்கிறது என்பதற்கு மீண்டும் நேற்று நான் கண்ட காட்சிகள் ஒரு உதாரணம்

  ஒரு வேலையாக நெசப்பாக்கம் முதல் அய்யப்பன்தாங்கல், போரூர் நேற்று காலை 10 மணி முதல் 2.30 வரை சுற்றி கொண்டு இருந்தேன் ,

  நெசப்பாக்கம் ஆரம்பிக்கும் இடத்தில , அய்யப்பன்தாங்கல் ஆயில் மில் சாலையில் என்று பல இடங்களில் சுய நினைவு இல்லாமல் ரோட்டில் படுத்து கிடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 க்கு மேல்

  எங்கே போகிறது நாடு?

 2. ”அப்பா வேணாம்ப்பா” படத்தின் விமர்சனத்தைப் படித்தேன், பாக்கு விற்பவரை ஊக்குவித்தால் அவர் தேக்கு விற்கும் அளவிற்கு உயர்வார்’ என்பதனை நிச்சயம், மகாத்மாவின் விருதினை பெற்ற இயக்குநர், மற்றும் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என அனைத்துப் பணிகளையும் ஏற்றிருக்கும் திரு.வெங்கட் ரமணன் அவர்கள் நிரூபிப்பார். நல்ல உள்ளங்களைத் தேடியெடுத்து மரியாதை செய்யும் தங்களுக்கு எமது வாழ்த்துகளும், நன்றிகளும்.

 3. ஒரு படம், ஒரு பாராட்டு விழா, ஒரு விமர்சனம். அவ்வளவுதான், மக்களுக்கு இதைவிட சீரியல்கள், நடிக நடிகைகளின் உதார் பேட்டி, காம நெடி காமெடிகள், இலவசங்கள், தலைவர், தலைவி, ஐயா, இவர்களின் வீர உரைகள் தான் முக்கியம்.

  இங்கே சாலைகளைப் பாருங்கள், குண்டும் குழியுமாக, குப்பைமேடுகலாக, சாக்கடை அவலங்கள், சுற்றுபுறம் மகா கேவலம். இதில்தான் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள், மந்திரிகள், முன்னாள், இந்நாள் என சென்று வருகிறார்கள். இந்த மக்களுக்கு என்றாவது சூடு சுரணை இருந்தால் இவர்களை கேள்வி கேட்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். அவர்களுக்குதான் ஜாதி, மதம், அரசியல், பணம், இலவசம், போதை முக்கியம் என்று சுயநலமான சிந்தனைகளை அமல் படுத்தி வைத்திருக்கிறார்களே.

  டாஸ்மாக் கொடுமை என்றால் அதில் கிடைக்கும் வருமானம் அபரிமிதம், யார் கேட்பது? எதனை படங்கள் வந்தாலும் அங்கே கல்லா புல் தான். நல்ல மக்களின் போராட்டம் ஒன்றே, இதனை ஒழித்துக் கட்டும். இல்லையென்றால் “ஒரு படம், ஒரு பாராட்டு, ஒரு விமர்சனம்” என்பதே தொடரும்.

 4. சுந்தர் சார்,

  அறிமுகம், பாராட்டு விழாக்கள் எல்லாம் சரி, சமூகத்திற்கு நல்லது செய்யும் இந்த மனிதர்களுக்கு நாம் எந்த வகையில் கை கொடுத்து இணையப் போகிறோம்? இதுவும் ஒரு சுயநலம் தான், என்னென்றால் ஊர் கூடி தேர் இழுக்கும்போது விரைவாக நடக்கும். “ரைட் மந்த்ரா” மற்றும் அதன் வாசகர்களின் பங்களிப்பென்ன? ஐயா டிராபிக் ராமசாமி போன்ற தனிமனிதர்கள் நம் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்.?

  1. ஒன்றும் செய்யவேண்டாம். இது போன்று அவர்களை விருதளித்து ஊரறிய கௌரவிக்கும்போது சம்பந்தப்பட்ட அந்த விழாக்களுக்கு தவறாமல் வந்திருந்து கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினாலே போதும். நீங்கள் விழாவிற்கு வந்திருந்தீர்களா என்று அறிய அவா…

 5. சமுதாயத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இந்த ரைட் மந்த்ர விருதுகள் அமையட்டும் . தமிழகத்தை பீடித்திருக்கும் பைசாசிக நோயான – மது அரக்கனை – ,குடியை எதிர்த்து போராடுவோருக்கு- திரு வெங்கட்டரமணன். அவர்களுக்கு விருதுகள் பகிர்வது சால சிறந்தது . ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்தி திருநாளாம் இன்று ரைட் மந்த்ர சுந்தர்ஜி அவர்களுக்கு, அவர்கள் மேற்கொள்ளும் சமுதாய பணிகள் சிறந்திட, ஸ்ரீ மஹா பெரியவா கருணை மழை முழுமையுடன் கிடைத்திட, எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் .
  வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

 6. பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நல்ல சிந்தனையுடன் பாட்டு எழுதுபவர்களுக்கு பரிசு கொடுத்து அழகு பார்த்து, அதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது நமது ரைட்மந்த்ரா. சமூகத்தில் நாம் பார்க்கும் அவலங்களை சீர்செய்வதற்கு போராட்டத்தில் இறங்கவேண்டிய அவசியம் இல்லை. சீரிய சிந்தனையுடன் சமூக நோக்குள்ள முயற்சிகளையும், நற்காரியங்களை செய்பவர்களையும் ஊக்கப்படுத்தி சமூக மேன்மைக்கு வித்திடுவதே நண்பர் சுந்தர் அவர்களின் நோக்கம்.

  இத்தகைய உன்னத பயணத்தில் திரு வெங்கடரமணன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விருது ஒரு நல்ல முன்னேற்றம். இவரது படத்தை பார்த்து யாரோ ஒரு சிலர் மனம் மாறி குடிப்பழக்கத்தை விட்டால் அதுவே மிகப்பெரிய சாதனை.

 7. திரு வெங்கட்ரமணன் அவர்களுக்கு மகாத்மா காந்தி விருது கொடுத்து அவரை கௌரவித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மதுவினால் வீட்டில் உள்ள பெண்கள் தான் மிகவும் அவஸ்தை படுகிறார்கள். இந்த படத்தை பார்த்து 4 பேர் திருந்தினாலே அது திரு வெங்கட் அவர்களுக்கு கிடைத்த ஆஸ்கர் விருது

  மது என்னும் போதை அரக்கனை நாட்டை விட்டு விரட்ட எல்லோரும் முயற்சிக்க வேண்டும். மதுவினால் நடுத் தெருவிற்கு வந்த குடும்பம் எத்தனையோ ..

  திரு வெங்கட் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  நன்றி
  உமா

 8. சுந்தர் சார்,

  அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு. மேலும், சில விவாதங்களைப் பார்க்கும்போது, ஒரு நெருடல் ஏற்படுகிறது, அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாராட்டும் பரிசளிப்பும் நிச்சயம் தேவைதான் இல்லை என்று சொல்ல முடியாது. சுதந்திரப் போராட்டத்தில், காந்தியடிகள், நேதாஜி போன்ற தலைவர்கள் “போராட்டங்கள்” பல நடத்தி சுதந்திரம் பெற்று தந்தனர். யாரும் அந்த நேரத்தில் பாராட்டு விழாக்கள் அவர்களுக்கு நடத்தி கவுரவிததால் “சுதந்திரப்” போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது உண்மை. அந்த காலக் கட்டம் வேறு இன்று முற்றிலும் வேறு. அன்று மக்களும் ஆண்டவர்களும் நியாய தர்மத்திற்கு கட்டுபட்டிருன்தனர். இன்று அப்படியா? எங்கே இலவசம் கிடைக்கும், யாரை ஏமாற்றலாம் என்ற கொடிய மனோ பாவம்தான். நம்முடைய எட்டுசுரைக்கை கல்வி முறை “மார்க்” எடுத்து வெளிநாட்டில் அடிமை தொழில் செய்பவர்களைத்தான் ஊக்கு விக்க்றது. ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம். நம்மில் பலபேருக்கு என்னவென்றால் ஒருவரைப் பாராட்டி பலர் தங்களுடைய உண்மையான கடமையில் இருந்து தள்ளி நிற்கிறார்கள், இது தான் இன்றைய உண்மை. ஏன் எல்லோரும் பங்கேற்க செய்வதுதான் உங்களைப் போன்ற தலைவர்களுக்கு அழகு. காந்தி, நேதாஜி, விவேகனந்தர் போன்றவர்களுக்குப் பின்னால் செயல் வீரர்கள் அணிவகுக்க செய்தனர், அவர்களுடைய பாராட்டு விழாக்களை மட்டும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் செயல்களை மறந்து. பாவனைகள் மட்டும் இன்று பயன்படாது. இதனை பாராட்டு விழாக்கள் நடந்துள்ளன, ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா? “ஏமாற்றமே நமக்கு மிச்சம்”. ஊர் மாறும் நாம் மாறலாம் என்று ஒவ்வொருவரும் நினைப்பது/ நினைக்க வைப்பது ஆபத்து. பகவத் கீதையிலும் பகவான், கடமையை செய்யுங்கள் என்றுதான் கூறியுள்ளார். நம் கடமை, வெறும் பாராட்டு விழா மட்டுமல்ல……….

  1. “நான் முந்தைய தினமே லீவ் போட்டுவிட்டு உங்களுடன் விழாவுக்காக களப்பணியில் இறங்குவேன்… விழா நடைபெறும் இடத்திற்கு வந்து ஓடியாடி வேலை செய்வேன்…” அப்படி இப்படியெல்லாம் என்னிடம் வாக்களித்தவர்கள் கடைசியில் எட்டிக்கூட பார்க்கவில்லை. நிகழ்ச்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. அவர்களை குற்றம் சொல்லவில்லை. இது தான் யதார்த்தம் என்பதை நான் நன்கறிவேன். இவர்களை நம்பி நான் என்ன செய்யமுடியும்?

   நண்பர் ஒருவர் கூறியது போல இங்கு மனம் இருப்பவரிடம் பணம் இல்லை. பணம் இருப்பவரிடம் மனம் இல்லை. இரண்டும் இருப்பவரிடம் நேரமில்லை. அது தான் பிரச்னை. இருக்கும் RESOURCE களை வைத்து என்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய்து வருகிறேன். மேற்கொண்டு என்ன செய்யமுடியும் என்று நீங்களே கூறுங்களேன். ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

   நன்றி….

   – சுந்தர்

 9. நன்றி சுந்தர் சார்,

  பாராட்டு விழாக்களுடன், உழவாரப் பணிகளுடன் குறைந்தபட்சம் சமூகப் பணியாளர்களின் கருத்துக்களை எடுத்துக் கூறி அவர்கள் செயல்களுக்கு விருப்பப்படும் நபர்கள் தோள் கொடுக்க வேண்டும், இது தொடர்ந்து நடைபெற்றால் நல்லது. அந்த அளவுக்கு மக்களின் மனதில் பொறுப்பின்மை, அலட்சியம், சுயமதிப்பின்மை வேரூன்றியுள்ளது., இதை தாங்களும் ஒப்புக் கொள்வீர்கள் / அனுபவித்துக் கொண்டும் இருப்பீர்கள் என்பது உண்மை. சுவாமி விவேகானந்தர் என்னிடம் 100 இளைனர்களை தாருங்கள் இந்த நாட்டை மாற்றி காடுகிறேன் என்றார், அவருடைய விவேகம் மீண்டும் உருவாக்கப் பட வேண்டும். இன்றைய தேவை, நீங்கள் 100 விவேகானந்தர்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சமூகப் பிரச்சனைகளை (அடிப்படை வசதிகளான – சாலை வசதி, குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை நீர் தேங்குதல், குப்பைகள், நடைபாதை ஆகிரமிப்பு) நம்முடைய மக்கள் ஒவ்வொருவரும் தட்டிக் கேட்க வேண்டும். கேட்க வைக்கப் பட வேண்டும். ஒரே ஒரு கேள்வி – கோவில்களில் உழவாரப்ப் பனி மற்றும் சில பணிகளை “ரைட் மந்த்ரா” இன்னும் சில அமைப்புகள், நல்ல உள்ளங்கள் செய்கின்றன. அப்படி என்றால், அந்த அந்த கோவில்களுக்கு எழுதப்பட்ட நிலங்கள், கடைகள், வரி வசூல்கள், நிதி இருப்புகள், நன்கொடைகள் எங்கே செல்கின்றன? யார் பங்கிட்டுக் கொள்கிறார்கள்? நம்மால் முடிந்ததை செய்து, கோவில் சொத்து கோவிலுக்கு கிடைக்க வழி வகை செய்யலாம். இது பற்றி யோசித்ததுண்டா? நமக்கேன் என ஒதுங்கலாம், ஆனால் சற்றே சிந்தித்துப் பாருங்கள் நாம் செய்யும் அந்த உபரி செலவை உண்மையான தேவை இருக்கும் கோவில்களுக்கும், பொது காரியங்களுக்கும் செய்யலாமே. உங்கள் முன் உள்ள வாய்ப்பும், தேவையும் பெரியது என்பதை மறந்து விடாதீர்கள். சமூக அமைப்புகள் இணைந்து அறப் பணியை விரிவு / விரைவு படுத்துங்கள். மக்கள் தங்கள் அடிப்படி தேவைகளுக்கு கேள்வி கேட்டு விடை பெற வேண்டும் அப்போதுதான் “ரைட் மந்த்ரா” வின் வெற்றி விழா சிறப்பாக இருக்கும்.

 10. இது தாண்டா தமிழ்நாடு! தமிழன் என்று சொல்லடா… தள்ளாடியபடி நில்லடா!!) – ——-

  மிக அருமை சுந்தர். நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *