Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

print
மது தளத்தின் சமீபத்திய விழாவில் நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களுள் ஒன்றை உங்களிடையே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம். பாரதி தனது பாடல்கள் பலவற்றில் வலியுறுத்திய விஷயம் ஏழையின் கல்வி மற்றும் பசித்த வயிற்றுக்கு உணவு.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

ஏழையின் கல்விக்கு உதவுவதை விட மகத்துவமான விஷயம் வேறேதும் இருக்க முடியாது என்பது அவன் தீர்ப்பு. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் பாரதி விழாவில் தகுதியுடைய ஏழை மாணவர் எவரேனும் ஒருவரை தேர்ந்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறோம்.

Rightmantra Scholarship 2

அதே போன்று தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கினான் அந்த முண்டாசுக் கவிஞன். அவன் தொடர்புடைய விழாவுக்கு வந்துவிட்டு செல்பவர்கள் மனம் மட்டுமல்ல வயிறும் நிறைந்தல்லவா செல்லவேண்டும்? எனவே தான் இந்த ஆண்டு நமது முப்பெரும் விழாவில் இறுதியில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்தோம். வாசகர்களின் மகத்தான ஆதரவால் நிகழ்ச்சிக்கு இடையே பிஸ்கட்டும் முடிவில் உணவும் ஏற்பாடு செய்திருந்தது பலருக்கு பயனுள்ளதாய் அமைந்தது. குறிப்பாக வெளியூர் பஸ் மற்றும் ரெயிலை பிடிக்க வேண்டியிருந்தவர்களுக்கு.

மீண்டும் கல்வி உதவி விஷயத்திற்கு வருகிறோம்…

சென்ற ஆண்டு நாம் கல்வி உதவி வழங்கியதைப் பார்த்து ஒரு வாசக தம்பதியினர் ரூ.10,000/- அனுப்பி தகுதியுடைய எவருக்கேனும் இதை வழங்கவேண்டும். பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகிறோம் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களுடைய மறைந்த பார்வையற்ற சகோதரர் நினைவாக இதை செய்வதால் பார்வையற்ற பயனாளியாய் இருந்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம் என்று கூறியிருந்தார்கள்.

அந்த தொகையை பத்திரமாக வைத்திருந்தோம். உரிய பயனாளியை தேடிவந்தோம். இதற்கிடையே புதுகோட்டையில் ராதாபாய் அவர்களை சந்தித்தபோது மேற்படி வாசகர் ஒருவர் பார்வையற்றவர்களின் கல்விக்கு உதவ விருப்பம் தெரிவித்து தொகையை அனுப்பியிருக்கும் விபரத்தை தெரிவித்து அவர்களுக்கு தெரிந்து யாரேனும் அப்படி இருக்கிறார்களா என்றும் கேட்டோம்.

அப்போது அவர், தன் கல்லூரியில் வரலாறு மூன்றாமாண்டு படிக்கும் அழகு ரேகா என்னும் பார்வையற்ற மாணவி ஒருவர் இருப்பதாகவும், படிப்பில் படு சுட்டியான அந்த மாணவி, சக மாணவியர் பலருக்கு ஸ்காலர்ஷிப் வாங்கித் தர உதவி புரிந்தவர் என்றும் ஆனால் இறுதியில் அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்றும் கூறினார். பிறருக்கு உதவி செய்த அவருக்கு உதவி கிடைக்கவில்லையா? அப்போதே முடிவு செய்துவிட்டோம்… அவர் தான் இந்த ஆண்டு நமது தளத்தின் கல்வி உதவி பெறப்போகிறவர் என்று.

Rightmantra Scholarship 3

புதுக்கோட்டையை அடுத்த ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கும் அந்த மாணவி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலாவதாக வந்தார். சொந்த வாழ்வில் தான் சந்தித்த ஏமாற்றங்களுக்கு விடை தேடும் பொருட்டு ஒரு வெறியோடு பட்டப் படிப்பு படித்துவருகிறார். அவர் பயிலும் வகுப்பில் இவர் ஒருவர் மட்டும் தான் பார்வையற்றவர். ஆனால் பார்வையுடைய பல மாணவிகளுக்கு இவர் தான் ப்ராஜக்ட், கைடு உள்ளிட்ட பல விஷயங்களில் வழிகாட்டி. கணினியை இயக்குவதில் படு சுட்டி. படிப்பு சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் இவர் டவுன்லோட் செய்து தரும் MATERIAL தான் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கிறது. இப்படிப்பட்டவர் பிறருக்கு ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுத்து தான் பெற முடியவில்லை. (நமது கல்வி சட்டதிட்டங்கள் அத்தனை சூப்பர்!).

அழகு ரேகாவுக்கு நமது பாரதி விழாவில் கல்வி உதவித் தொகை வழங்கலாம் என்றும், அவரை அழைத்து வர முடியுமா என்றும் கேட்டபோது, ராதாபாய் அவர்கள் புதுக்கோட்டையில் இருந்து தாம் ஒரு காரை அமர்த்திக்கொண்டு வரவிருப்பதாகவும் தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை குறைத்துக்கொண்டு அதற்கு பதில் மாணவி அழகு ரேகாவை அழைத்து வருவதாகவும் கூறினார்.

அனைவரும் தங்குவதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்யவேண்டுமா என்று கேட்டபோது, நாம் சிரமப்படவேண்டாம் என்றும் குரோம்பேட்டையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்குக் சென்று அங்கு தங்கி, இளைப்பாறிவிட்டு நேரே விழாவிற்கு வருவதாகவும் கூறினார்.

சொன்னதைப் போல ராதாபாய் அவர்கள் மாணவியையும் தம் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு சனிக்கிழமை இரவு புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு ஞாயிறு காலை சென்னை வந்துவிட்டார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சரியாக நேரத்தில் வந்துவிட்டார். அவர் மட்டுமல்ல அவரது நண்பர்கள் பலருக்கு தகவல் தெரிவித்து அவர்களும் நிகழ்ச்சிக்கு தவறாமல் வந்திருந்தனர்.

Rightmantra Scholarship 4

விழாவில் இறுதியில் ராதாபாய் அவர்கள் உரையாற்றிய பிறகு மாணவி அழகு ரேகாவுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.

அப்போது நாம் பேசியதாவது:

இந்த உலகம் சுழல்வது புவி ஈர்ப்பு விசையினாலோ அல்லது சூரியனின் சக்தியினாலோ  அல்ல. அடுத்தவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்களால் தான். தொண்டு செய்பவர்கள் “யார் எப்படி போனால் எனெக்கென்ன?” என்று நினைத்து ஒரு நாள் தங்கள் தொண்டை நிறுத்தினார்கள் என்றால் இந்த உலகம் சுற்றாது.

பொதுவாக அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்ட தொண்டுள்ளம் படைத்தவர்களுக்கு எந்த வித சோதனையும் ஏற்படக்கூடாது. ஏனெனில், அவர்களுக்கு ஏற்படும் சோதனை என்பது அவர்களை மட்டும் பாதிக்காது. அவர்களது தொண்டினால் பலன் பெறும் பலரை அது பாதிக்கும்.

எனவே பிறருக்கு உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்களுக்கு ஏதேனும் ஒரு தேவை என்றால் நாம் ஓடிச் சென்று உதவ வேண்டும்.

இதோ இந்த ஆண்டு நமது தளத்தின் கல்வி உதவி பெறும் மாணவி அழகு ரேகா அவர்கள் டாக்டர்.ராதாபாய் அவர்களிடம் படித்து வருகிறார். தன் கல்லூரியில் சக மாணவியர் பலர் ஸ்காலர்ஷிப் பெற உதவியாய் இருந்த அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. தன்னைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களை பற்றி இறைவன் கவலைப்படுவான். அவர்களுக்குரிய தேவையை அவன் கவனித்துக்கொள்வான். ஆகையால் தான் எனக்கு ராதாபாய் அவர்களிடம் இது பற்றி கேட்கவேண்டும் என்று சரியான நேரத்தில் தோன்றியது.

இந்த ஆண்டுக்கான கல்வி உதவியை புதுகோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு படிக்கும் மாணவி அழகு ரேகா அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். விழாவின் நடுவர் அவர்கள் தனது கரங்களால் இந்த காசோலையை மாணவிக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.”

பலத்த கரகோஷத்துக்கிடையே அழகு ரேகாவுக்கு காசோலை வழங்கப்பட்டது.

முதலில் இம்மாணவிக்கு ரூ.10,000/- தான் வழங்குவதாக இருந்தோம். ஆனால் தகுதியுடையோருக்கு செய்யும்  உதவி மேலும் சற்று பெரியதாக இருக்கட்டுமே என்று கருதி மேலும் ரூ.5,000/- சேர்த்து ரூ.15,000/- த்துக்கான காசோலை  வழங்கப்பட்டது.

(ஒரு விஷயத்தை நாம் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். மேற்படி கல்வி உதவி புரிய நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்த இந்த வாசகர்கள் அவர்கள் புண்ணியம் தேடிக்கொள்ள மட்டும் நம்மிடம் வருபவர்கள் அல்ல. நமது தளத்தின் செலவினங்களில் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கரம் நீட்டி வருகிறவர்கள். மேற்படி கல்வி உதவித் தொகை மட்டுமல்லாது இந்த விழாவுக்கும் அவர்கள் உதவியிருக்கிறார்கள். தங்கள் புண்ணியத்தை பற்றி மட்டுமே கவலைப்படாமல் நமது தளத்தை பற்றியும் அக்கறை கொண்டு இயன்றபோது உதவி வரும் இவர்களைப் போன்றவர்களால் தான் நமது தளம் தொய்வின்றி தொடர்ந்து நடக்கிறது. அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.)

மாணவி ரேகா அவர்கள் மேடையில் ஓரிரு வார்த்தைகள் பேச விரும்பினாலும் நேரமின்மை காரணமாக அந்த வாய்ப்பை வழங்க இயலவில்லை.

விழா முடிந்தபிறகு, நமது கரங்களை பற்றியபடி நா தழுதழுக்க அவர் கூறியதாவது: “அண்ணா உங்களுக்கும் இந்த உதவியை செய்த உங்க ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மத்தவங்களுக்கு உதவி செஞ்சா உனக்கு தேவையான உதவி தானா உன்னை தேடி வருங்கிறதை இன்னும் நல்லா புரிஞ்சிகிட்டேன். மேன்மேலும் மத்தவங்களுக்கு உதவி செய்வேன். இந்த பணத்தை என்னோட பி.எட். படிப்பு செலவுக்கு வெச்சிக்குவேன். இந்த நேரத்துல இந்த பணம் எனக்கு எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? ரொம்ப நன்றிண்ணா!” என்றார்.

பாரதி விழாவின் நோக்கம் நிறைவேறியதில் நமக்கு மட்டுமல்ல பாரதியின் ஆன்மாவுக்கும் மகிழ்ச்சி பெருகியிருக்கும் தானே ?

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

===============================================================

Also check :

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மகனின் கல்வி உதவி – தாய் அடைந்த சிவலோகப் பதவி!

இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? MON MORNING SPL 57 

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி! – UNSUNG HEROES 3

===============================================================

[END]

8 thoughts on “அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

  1. அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் – ஆலயம் பதினாயிரம் நாட்டல் –
    பின்னயாவினும் புண்ணியம் கோடி – ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்! – பாரதி.

    கல்வி உதவி செய்வதும் புண்ணியமே………..

    தங்களுக்கும், மாணவி அழகு ரேகாவுக்கும் நமது வாழ்த்துக்கள்…….

  2. அண்ணச் சத்திரங்கள் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உத்தமம், என்பதை நிகழ்வில் காட்டி விட்டிர்கள். ராதாபாய் அம்மாவிடம் பேசிய பொழுது இந்த உதவித்தொகை, அப்பெண்ணுக்கு நிச்சயம் நல்ல உதவியாக இருக்கும் என்று, மன நெகிழ்ச்சியுடன் கூறினார்கள், மிக்க நன்றி.

  3. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது…

    உதவி செய்த நல்உள்ளங்களுக்கும், அதை முறையாக கொண்டு சேர்த்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  4. பெரியவா சரணம்.

    இயலாதவர்களுக்குச் செய்கின்ற உதவியே பகவானுக்கு நாம் செய்யமுடிந்த மிகப்பெரிய தொண்டு என்றார் நம் மஹாஸ்வாமிகள்.

    இயலாத நிலையிலும் செயலாக்கம் புரிவோர்க்கு ஊக்குவித்தல் என்பது அதனைவிடவும் பெரியதான தொண்டல்லவோ!

    அதனை ஆத்மார்த்தமாக உணரவைத்த ஓர் உன்னதமான மஹோத்ஸவம் இந்த ரைட்மந்த்ரா.காம் முப்பெரும்விழா என்பதை அங்கு வந்திருந்த ஒவ்வொரு இதயமும் உணர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை வெகுவானதாய் ஏற்படுகிறது.

    சாதனையாளர் அவார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு சாதனையாளர்களும் நவரத்தினங்கள் தாம்!

    அற்புதமான சொல்வளம், குரல்வளம் – அழகோ அழகு திருவாளர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், M எ அவர்கள்!

    சட்டென காதினுள் புகுந்து மனதினில் சிம்மாசனம் ஏற்றுகிற சொல்வன்மை மிகுந்த சுந்தர சக்தி – முனைவர் வேத நாயகி அவர்களுக்கு!

    அமைதியே உருவெனக் கொண்டாலும் அமைதிக்கென உருவான சாதனைப் புயலாய் புதுக்கோட்டை சகோதரி ராதாபாய்!

    சாதனையாளர்களை ஊக்குவிப்பதற்காய் விருதுகள் வழங்கியச் சாதனையாளனாய் அன்புத் தம்பி சுந்தர் – ரைட்மந்த்ரா.காம்!

    ஆயக்குடியிலிருந்து விழாவிற்கு வருகை புரிந்ததோடு, விழா நாயகமாய், பெரியோனாய் இருந்து, விழாவினை சிறப்பிக்கச் செய்த அருளாலர், அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் உயர்திரு ராமக்ருஷ்ணன் அவர்களது முன்னிலையில் அந்த இடம் ஓர் ஸ்வர்கபுரியாய் எமக்குத் தோன்றியதும் சத்தியம்!!

    சாதனைகளைச் செய்கின்ற வாழ்வினில் இனிக்கின்ற ஒவ்வொரு சாதனையாளர்களும் மின்னும் ரத்தினங்கள். அவர்கட்கு தங்கக்கூடு செய்துஅளித்தமைபோல விருதுகளை வழங்கியதைப் பார்த்த ஒவ்வொரு இதயங்களும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்தாலும் அவர்களின் ஒரு சோடிக்கண்கள் நீர் பணித்ததை எம்மால் உணரமுடிந்தது.

    எப்பொழுதும் ஆச்சார்யன் தன்னிழலில் தாம் எம் காலம் கழிகிறது; ஒவ்வொரு நிமிடங்களையும் அவர் முடிவு செய்கின்றார் என்பதை எமக்கு நிரூபனம் செய்யும் வண்ணமாய் ரைட்மந்த்ரா.காம் -இன் 2015 காலண்டரை (ஸ்ரீசரணாளும், ஸ்ரீகாமாக்ஷிதேவியின் கோபுர தரிசனமும்) உலகிற்கு அளிக்கும் பொறுப்பினை ஸ்ரீசரணாள் இந்த அற்பனுக்கு தந்து ஆனந்தப் படுத்திவிட்டார் என்றால் மிகையாகாது.

    அந்த அற்புத ரத்தினங்களுக்கு மத்தியில் கிடந்த ஒரு தூசாக நாம் இருப்பினும் மனதில் ஓர் தைரியம்… ரத்தினங்களிடையே யுள்ள தூசினை துடைக்க பட்டைத் தானே (மிருதுவான ஓர் விடயம் கொண்டு) உபயோகிப்பர் என்ற நம்பிக்கை!

    கண்களுக்கு விருந்து!
    காதுகளுக்கு இனிமை!
    மனதிற்கு சந்தோஷம்!

    அதுமட்டுமா..?!!! வயிற்றுக்கு உணவும் கிட்டிய நிலையில் ஒவ்வொரு பார்வையாளரும் ஆத்மதிருப்தியோடு விழா மண்டபத்திலிருந்து கிளம்புவதை கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு கடைசி நண்பனாய் திருவாளர் சுந்தரிடம் விடைபெற்றுத் திரும்பினோம் எங்கள் குடும்பம்!

    பொதுவாக ஞாயிறு பகற்பொழுதில் தானே நமக்கு தம் கதிரலையைத் தருவான்! சென்ற ஞாயிறின் இரவுப் பொழுதிலும் அவனது கதிர்ஸ்பரிசம் இனிமை யளித்த த்ருப்தி! சூரியக் கதிரின் துணையில் தானே ஒவ்வொரு ஜீவனும் உயிர்ப்பிக்கின்றது…!

    வளர்ந்த வண்ணமாய் வாழ்க சுந்தர் மற்றும் அவரது ரைட்மந்த்ரா குடும்பம்!

    பெரியவா கடாக்ஷம்

    நமஸ்காரங்களுடன்
    சாணு புத்திரன்.

  5. Function went great. People like Ramakrsihnan sir came and graced Rightmantra – what else we could ask for!
    **
    As you rightly said before, Ramakrishnan sir’s visit is the highlight and one of the best things for the function.
    **
    Wondering how much you are able to do with very limited source – of both time and money. Next year, this function will be very grand in all manner.
    **
    God bless. Thanks so much for all good things you have done for me especially.

  6. சரியான பயனீட்டாளரை கண்டுபிடித்து கல்வித்தொகை வழங்கியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அழகு ரேகாவிற்கு அவர் விருப்பம் போல் மேலே படிக்க வாழ்த்துக்கள் பல. இந்த பதிவை படித்து நாமும் கல்வி கற்க உதவி செய்ய வேண்டும் என்ன எண்ணம் ஏற்படுகிறது. இந்த நல்ல என்ணத்தை எனக்குள் ஏற்படுத்திய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. தங்கள் தொண்டு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *