Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > இது ஆனந்தம் விளையாடும் வீடு!

இது ஆனந்தம் விளையாடும் வீடு!

print
டிசம்பர் 3. இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். மாற்றுத் திறனாளிகள் என்றாலே சமூகத்தில் வித்தியாசமாகப் பார்க்கப்படும் நிலையில், அந்தத் தடைக்கல்லை, வெற்றிப்படிக்கட்டாக மாற்றுபவர்கள் ஒரு சிலரே.  விதி தங்களை முடக்கிப் போட்டுவிட்டபோதும் தன்னம்பிக்கை தான் உற்ற தோழன், சாதிக்க வேண்டும் என்ற வெறி தான் தங்கள் வழிகாட்டி என்று எண்ணி விடாமுயற்சி செய்து, தற்போது நமக்கிடையே தலைநிமிர்ந்து வாழ்ந்து  வரும் இருவரைப் பற்றி இன்று அவசியம் தெரிந்துகொள்வோம்.

இவர்கள் இருவரைப் பற்றியும் இவர்களின் வாழ்க்கை போராட்டங்கள் பற்றியும் இவர்கள் சாதித்தது பற்றியும் ஏற்கனவே தனித்தனி பதிவுகளில் விளக்கி இருக்கிறோம்.

ஆனால் இந்த பதிவு அதைப் பற்றியது அல்ல. நமது தளத்தின் ரோல்மாடல் வி.ஐ.பி. பேட்டிக்காக இந்த இருவரையும் ஒரே இடத்தில சந்தித்து பேசினோம். பேசினோம் என்பதைவிட  எங்களை மறந்து ஆனந்தத்தில் திளைத்தோம் என்பது தான் சரி. அதைப் பற்றியது தான் இந்த பதிவு. யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறவேண்டாமா?

Coimbatore VG Jagadish Sooriya 4

கோவை ஜெகதீஷ் அவர்களை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து எப்படியாவது அவரை சந்திக்கவேண்டும் என்கிற ஆர்வம் நமக்குள் பன்மடங்கு ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் துவங்கியது. பொள்ளாச்சியை சேர்ந்த சூரியாவையும் சந்திக்கவேண்டும் என்று விரும்பினோம். எனவே இருவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அவர்களுடன் உரையாடினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

ஜெகதீஷ் அவர்களுக்கு சூரியா அவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால் நமது பணி சுலபமாகிவிட்டது. இருவரும் அடிக்கடி போனில் பேசியிருக்கின்றனர். நேரில் சந்தித்ததில்லை. எனவே நமது திட்டத்தை  சொன்னவுடன், இருவரும் அதில் ஆர்வமாகிவிட்டனர். இதையடுத்து சந்திப்புக்கான ஏற்பாடுகள் மளமளவென நடந்தது. பொள்ளாச்சியிலிருந்து சூரியா கிளம்பி வருவது என்றும் அனைவரும் கோவை ராம்நகரில் உள்ள ஜெகதீஷின் வீட்டில் சந்திப்பது என்றும் முடிவானது.

சந்திப்பின்போது கோவையை சேர்ந்த நம் நண்பர்களும் வாசகர்களும் நம்முடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவர்களில் சிலரை தொடர்பு கொண்டு அவர்களையும் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். கோவையில் இருந்து நண்பர் விஜய் ஆனந்த் மற்றும் சக்திவேல், மைத்துனரும், ஈரோட்டிலிருந்து நண்பர் பூமிநாதனும் சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து நமது கோவை பயணம் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி ஏற்பாடானது.

ஆனந்தம் விளையாடும் வீடு!

மாற்றுத் திறனாளிகள் என்றாலே அவர்களும் சரி அவர்களின் வீட்டில் இருப்பவர்களும் சரி எதையோ இழந்ததுபோல முகத்தை வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவரது வீட்டையும் அதன் சூழ்நிலையையும் கண்டால் வெட்கித் தலைகுனிவார்கள். காரணம் ஜெகதீஷின் வீடே ஒரு ஆனந்தம் விளையாடும் வீடு தான்.

Kovai Jagadish Sooriya 11

நாம் சென்ற நேரம் ஹீரோ ஜெகதீஷ் குளித்துக்கொண்டிருந்தார். ஹாலில் நாம் காத்திருந்த நொடிகளில் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவரது அறையை நோட்டம் விட்டோம். அந்த ஹாலையே சலவையில் போட்டு எடுத்தது போல பளிச்சென இருந்தது. ஒருவித நறுமணம் அறை எங்கும் கமழ்ந்தது. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே நாம் உணரக்கூடிய ஒரு வித இனிமையான அதிர்வலையை அந்த வீட்டில் உணரமுடிந்தது. ஆனால் இவர்கள் செல்வந்தர்கள் அல்ல. சராசரி நடுத்த வர்க்கத்தினர் தான். பின்னர் எப்படி அந்த வைப்ரேஷன் இங்கு? பதிவின் இறுதியில் உங்களுக்கு தானாகவே அந்த விடை கிடைக்கும்.

மேலே சுவற்றில் பார்த்தோம். நம் ஆசிரியர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி அடங்கிய படம் கண்களை ஈர்த்தது.

ஒவ்வொரு வரியும் எத்தனை அர்த்தம் மிக்கது…!

Kovai Jagadish Sooriya 4

பேசிக்கொண்டிருக்கும்போதே பொள்ளாச்சியில் இருந்து சூரியா தனது பெற்றோருடன் வந்துவிட்டார். அவரது சொந்தக் காரில் தான் வந்தார். அவர் தந்தை காவல் துறையில் தடய அறிவியல் ஆய்வாளராக உள்ளார். காரில் ஏறுவது, அமர்ந்து வருவது  இவை அனைத்தும் சூரியா இருக்கும் நிலையில் மிகவும் சிரமம். இருப்பினும் நமது சந்திப்பில் எப்படியும் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வ மிகுதியால் தடைகளை பொருட்படுத்தாமல் வந்துவிட்டார்.

Coimbatore VG Jagadish Sooriya 6
Coimbatore VG Jagadish Sooriya 7
Coimbatore VG Jagadish Sooriya 9

அவரை நாங்கள் அனைவரும் சென்று வரவேற்று அழைத்து வந்தோம்.

உள்ளே எங்கள் அரட்டையில் சூரியாவும் சேர்ந்துகொள்ள, கச்சேரி களைகட்டியது. நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த சற்று நேரத்திற்கெல்லாம் ஜெகதீஷ் குளித்து முடித்து வந்துவிட்டார்.

Coimbatore VG Jagadish Sooriya 10

அவரை அவரது பாட்டி ஒரு குழந்தையை தூக்குவது போல, தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினார். (ஜெகதீஷால் நடக்க முடியாது. அவருக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள சக்கர  நாற்காலியில் அதிகபட்சம் ஒரு மணிநேரம் உட்கார்ந்திருக்க முடியும். )

இவரை இருகண்களாக இருந்து பார்த்துக்கொள்வது இவரது பெற்றோரும் பாட்டி சுப்புலட்சுமியும் தான்.

Coimbatore VG Jagadish Sooriya 11

“வணக்கம் சுந்தர் அண்ணா.. எப்படி இருக்கீங்க?”

என்று நம்மை ஆர்வமோடு நலம் விசாரித்தார்.  நம்முடன் வந்திருந்த மற்ற நண்பர்களையும் வரவேற்றார்.

“சூரியா… வெல்கம்.. வெல்கம்!” என்று சூரியாவுக்கும் வரவேற்பு.

“அது சரி ஜெகதீஷ்..  ஒரு முக்கியமான விஷயத்தை உன்கிட்டே முதல்ல கேட்கணும். உன் கேர்ள் ப்ரெண்டை எப்போ எங்களுக்கு INTRODUCE பண்ணி வெக்கப்போறீங்க?” அதிமுக்கியமான விஷயத்தை முதலில் கேட்டோம்.

“கேர்ள் ப்ரெண்டா…. என்னண்ணா சொல்றீங்க?”

“உன் ப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் என் கிட்டே சொல்லிட்டாங்க…” என்றோம் அவர் நண்பர்களை பார்த்து கண்ணடித்துக்கொண்டே.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைண்ணா… சும்மா இவங்க கலாட்டா பண்றாங்க…”

“ஆனா உங்க சமீபத்து ஃபேஸ்புக் PROFILE பிக்சர்ஸ் & கவிதைகள் இதெல்லாம் பார்த்தா அப்படி தெரியலியே…”

இப்படியாக நமது கலாட்டா தொடர்ந்தது.

“போங்கண்ணா…” என்று இறுதியில் வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை அவருக்கு.

“என்னை மட்டும் கேக்குறீங்க… சூரியாவை கேளுங்களேன்…” என்று பந்தை சாமர்த்தியமாக சூரியா பக்கம் திருப்பிவிட்டார். (அப்போ… இவங்க ரெண்டு பேருக்கும் கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க டோய்!)

பரஸ்பர நல விசாரிப்புக்கள் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டோம்.

இருவருக்கும் நாம் வாங்கிச் சென்ற பழங்கள் ஒரு தட்டில் வைத்து கொடுக்கப்பட்டன. இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஜெகதீஷிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

“இந்திய பொருளை வாங்கு, இந்தியனாக இரு…’ என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார் ஜெகதீஷ்.

தமிழின் மீதான அதீத காதலால், நள்ளிரவு நேரத்தில் கூட, தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு, ‘ஆன் லைனில்’ தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். இறைவன் உடலுருப்புக்களைத் தான் முடக்கியிருக்கிறானே தவிர நாவை அல்ல. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வார்கள். இவரது தமிழும் உச்சரிப்பும் கேட்க கேட்க அத்தனை இனிமை. ஒரு ரேடியோ ஜாக்கியாக வரவேண்டும் என்பது இவரது லட்சியம். ஒரு தனியார் எப்.எம். சானலுக்கு குரல் தேர்வுக்கு சென்று வந்திருக்கிறார். விரைவில் ஒரு வெற்றிகரமான எப்.எம். ஜாக்கியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களின் அபிமானத்தையும் பெற்றவர். அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் என்று, மாணவர் அமைப்போடு அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், “நான் ஒரு கப்பல் என்ஜீனியர்… எனக்கான புராஜக்டை முடிக்க முடியவில்லை நீங்கள் உதவ முடியுமா?’என்று கேட்ட என்ஜீனியருக்கு, அவர் சொன்ன வேலையை முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஒரு பக்கம் என்று ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் போதவில்லை என்று மனதால் ஓடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம், இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்ப முடிகிறதா!

மாற்றுத் திறனாளி எப்படி இப்படி ஒரு திறமைசாலி ஆனார் ?

முன்பெல்லாம் ஜெகதீஷ் தன் ஒரே துணையாக கருதியது தன் மொபைல் போனைத் தான். மொபைல் போனில் தனிமையை விரட்ட உருப்படியான தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இன்டர்நெட் உதவியுடன், கம்ப்யூட்டர் நன்கு கற்றவர்களுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில், தன் அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

(இவரைப் பற்றி கேள்விப்பட்ட மதுரா டிராவல்ஸ் திரு.வி.கே.டி.பாலன் அவர்கள் அவர் நிறுவனத்தில் இவருக்கு REMOTE ACCESS மூலம் செய்யும் மேற்பார்வையாளர் பணியை கொடுத்திருக்கிறார். கோவையில் தன் வீட்டிலிருந்தபடியே அதை செய்து மாத ஊதியம் பெற்று வருகிறார் ஜெகதீஷ்!)

யாராவது பார்க்க வருகின்றனர் என்றால், சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார். எங்காவது போவது என்றால், பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருகிறார். மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில், “இயர் போனை’ செருகிக்கொண்டு, இடது கையின் நடுவிரலை அசைத்து, அசைத்தே, நம்மில் பலராலும் செய்ய முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார்.

Kovai Jagadish Sooriya 10

இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், தான் கற்றதையும், பெற்றதையும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து, “நீ மாற்றுத் திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி…’ என்று சொல்லி ஆசீர்வதித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறார்.

இவரிடம் கம்ப்யூட்டர் திறமையும், தமிழில் வளமான அறிவும், எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவும் இருக்கிறது.

இப்படி ஒரு மனோபாவம் எப்படி இவருக்கு வந்தது?

Kovai Jagadish Sooriya 7

தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை என்று சும்மாவா சொன்னார்கள்? ஜெகதீஷின் தாயார் கிரிஜா அவர்கள் ஒரு உற்சாக ஊற்று.

ஒரே மகன் இப்படி இருக்கும் நிலையில் இத்தனை உற்சாகமாக மலர்ந்த முகத்துடன் ஒரு தாயை பார்க்கமுடியுமா? இதோ இருக்கிறாரே அப்படி ஒருவர்.

“இது எப்படி முடிகிறது? சோகத்தின் சுவடோ அல்லது கவலையின் கீற்றோ உங்களிடம் கொஞ்சம் கூட தெரியவில்லையே…?”  நமது யதார்த்தமான வியப்பை வெளிப்படுத்தினோம்.

“அவனை நான் சுமையாக நினைத்த காலம் போய் சுகமாக நினைக்கும் அளவிற்கு அவன் வந்துவிட்டான். அவனைப் பற்றிய கவலையே எனக்கு இப்போது  கிடையாது. வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கும் ஒரு மகன் தன் பெற்றோருக்கு செய்யவேண்டிய அனைத்தையும் என் மகன் இப்போது எங்களுக்கு செய்கிறான். வீட்டிலிருந்தபடியே வேலை செய்து சம்பாதித்து எங்களுக்கு  கொடுக்கிறான். நாளைக்கே நான் வேலையைவிட்டு நின்றுவிட்டாலும் என் மகன் என்னை உட்காரவைத்து சோறு போடுவான். இதை விட ஒரு தாய்க்கு வேறு என்ன சார் வேண்டும்?” என்கிறார் கிரிஜா.

வாஸ்தவம் தானே?

ஸ்ரீராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டமும், பாரதியின் புதிய ஆத்திசூடியும் பரிசளிக்கப்படுகிறது
ஸ்ரீராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டமும், பாரதியின் புதிய ஆத்திசூடியும் பரிசளிக்கப்படுகிறது

அப்புறம் நாம் புரிந்துகொண்ட இன்னொரு விஷயம்…. ஜெகதீஷின் நட்பு வட்டம். ஒவ்வொருவரும் ஒரு குட்டி விவேகானந்தர்கள். மிகப் பெரிய லட்சியங்களை கொண்டு பல்வேறு சேவைகளில் ஈடுபடுகிறவர்கள். வெட்டிக் கதை பேசும் ஒருவர் கூட ஜெகதீஷின் நட்பு வட்டத்தில் இல்லை அவரது முகநூலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (முகநூலில் ஆயிரக்கணக்கானவர்களை நண்பர்களாக பெற்றிருப்பதில் எந்த பெருமையும் இல்லை.  எப்படிப்பட்டவர்களை நண்பர்களாக பெற்றிருக்கிறீர்கள் என்பதில் தான் பெருமை இருக்கிறது!)

ஜெகதீஷ் வீட்டில் நாம் இருந்த சுமார் இரண்டு மணிநேரம், ஒரு வி.வி.ஐ.பி. யை பார்க்க வருவது போல, அவர்  நண்பர்கள் அவரை  பார்க்க வந்துகொண்டே இருந்தார்கள். அவர்களிடம் பேசுவதும் அரட்டை அடிப்பதும் (பயனுள்ள) பார்க்கவே கண்கொள்ளா காட்சி தான்.

பாரதி, பசுமை, புத்தகம். இலக்கியம், தமிழ், ப்ராஜெக்ட், திருக்குறள், விழா, – இது தான் அவர்கள் பேச்சில் நாம் அடிக்கடி கேட்க நேறும் வார்த்தைகள்.

Kovai Jagadish Sooriya 14பேசிக்கொண்டேயிருக்கும்போது, “சாப்பிட்டுட்டு பேசலாம் வாருங்கள்…” என்று நம்மை அவரது பாட்டி சுப்புலட்சுமி அழைத்தார்கள்.

நாம் மட்டுமல்ல ஜெகதீஷ், சூரியா இருவரும் சாப்பிடவேண்டும் அல்லவா? எனவே எங்கள் உரையாடலுக்கு ஒரு பிரேக் விட்டோம்.

சூடான சம்பா கோதுமை ரவை உப்புமா மற்றும் தோசை. நாம் கொஞ்சம் அடக்கி வாசிக்க, ஆனால் நம் நண்பர் விஜய் ஆனந்த் “எனக்கு பசி இல்லை.. எனக்கு பசி இல்லை.. கொஞ்சமா போதும்” என்று கூறிக்கொண்டே பரோட்டா சூரி கணக்காய் ஒரு பிடிபிடித்தார். இரண்டாம் முறை உப்புமா செய்ய வேண்டியதாகிவிட்டது.

Coimbatore VG Jagadish Sooriya 12

ஜெகதீஷால் உட்கார்ந்தபடி சாப்பிட முடியாது. அவராலும் கைகளால் எடுத்து சாப்பிட முடியாது. அவர் படுத்திருக்க யாராவது அவருக்கு சிறு குழந்தைக்கு ஊட்டிவிடுவதை போல ஊட்டிவிட வேண்டும். இருவருக்கும் சூரியாவின் அம்மா தான் ஊட்டிவிட்டார்.

Kovai Jagadish Sooriya 12

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாம் நம்மை இரண்டு கைகளோடு படைத்த இறைவனுக்கு நன்றி சொன்னோம். மனப்பூர்வமாக

நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்த மற்ற நண்பர்கள் அவர்கள் வீடுபோல, உரிமையுடன் தட்டை எடுத்து சமையலறைக்கு சென்று அவர்களும் தங்களுக்கு தேவையானதை எடுத்து சாப்பிட்டது… உண்மையில் ஒரு கவிதை!

சாப்பிட்டு முடித்து மீண்டும் உட்கார்ந்தவுடன், ஜெகதீஷ் சூரியா இருவருக்கும் நம் தளம் சார்பாக தரவேண்டிய நினைவுப் பரிசுகளை (பிரார்த்தனை படம்) நண்பர்களின் மூலம் தந்தோம்.

Kovai Jagadish Sooriya 2
திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் சிவஞான தேனிசைப் பாமாலை பரிசளிக்கப்படுகிறது.

ஜெகதீஷிடம் “வாழ்க்கையில் உன் லட்சியம் என்ன?” என்று கேட்டால், இவர் அளிக்கும் பதில், நமது புருவத்தை உயர்த்துகிறது.

“ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை அமைச்சராக வரவேண்டும்! அது தான் என் லட்சியம் அண்ணா!” என்றார் தீர்மானமாக. அவரது குரலில் ஒலித்த உறுதி, ஒரு நாள் அதை சாதித்துக் காட்டுவார் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியது.

“லட்சியம் ஈடேற வாழ்த்துக்கள்!”

எத்தனை மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு லட்சியம் இருக்கும் என்று தெரியாது.

“இந்த இலட்சியத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாமா?”

மடைதிறந்த வெள்ளமாய் பொரிந்து தள்ளிவிட்டார் ஜெகதீஷ். “ஒரு மாற்றுத் திறனாளி வாழ்க்கையில் படும் பாடு சொல்லி மாளாது. நானும் ஒரு மாற்றுத் திறனாளி என்கிற வகையில் அவர்கள் படும் துயரம் எனக்கு நன்கு தெரியும். நான் பட்ட கஷ்டம் எந்த மாற்றுத் திறனாளியும் படக்கூடாது. சமூகத்தை குறைகூறிகொண்டிருப்பதற்கு பதில் அதை மாற்ற முனையவேண்டும். மாற்றுத் திறனாளி என்பதால் நான் எத்தனையோ இடங்களில் அலைகழிக்கப்பட்டிருக்கிறேன்.

மாற்றத்திற‌னாளிகளுக்கென உள்ள துறை செயலிழந்து கிடக்கிறது. அவர்களுக்கான சிறப்புக் கல்விக் கொள்கை, கல்விமுறை, கல்வித் திட்டங்கள் வேண்டும். சிறப்புத் தொழிற்கல்விகள், அவர்களுக்கு உதவும் புதியக் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும்… சமூகத்தில் எந்த ஒரு விஷயத்திற்கும் பிறர் துணை இல்லாமல் தாங்களாகவே இயங்க அவர்களுக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் (பெரும்பான்மையானக் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தனி வழிகள் இல்லை… பெரும்பாலான இடங்களில் அதிகக் கடினப்பட வேண்டியுள்ளது…).

மிக முக்கியமாக சமூகத்தில் பொது மக்களிடம் மாற்றுத் திறனாளிகள் என்றாலே சுமை என்ற ஒரு கருத்து உள்ளது… அதை மாற்ற அரசும் சமூக மற்றும் முற்போக்கு இயக்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் எவர் தயவுமின்றி நிறைவேற்றிடவேண்டுமேன்றால் அதிகாரத்தில் நான் அமரவேண்டும்.எனவே தான் அமைச்சராகவேண்டும் என்று கூறினேன்.” என்றார்.

எழுந்து நின்று மீண்டும் கைதட்டினோம். வருங்கால அமைச்சர் ஒருவருடன் நமக்கு ஏற்பட்டிருக்கும் நட்பை நினைத்து.

“நிச்சயம் உங்கள் லட்சியம் ஈடேறும்! ஒரு நாள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சராவீர்கள்!” என்று வாழ்த்தினோம்.

Kovai Jagadish Sooriya 3

இங்கு ஒரு விஷயத்தை அவசியம் நாம் குறிப்பிட விரும்புகிறோம். சினிமா நூற்றாண்டு விழா போன்ற அதி உன்னதமான (?!) விஷயங்களுக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கோடி கோடியாக பணத்தை எடுத்து தரும் அரசாங்கம், இவர்களின் கோரிக்கைகளை கொஞ்சமாவது ஏறெடுத்து  பார்க்கவேண்டும். (கடந்த ஆண்டு திரையுலகினர் கொண்டாடிய சினிமா நூற்றாண்டு (ஜால்ரா) விழாவுக்கு அரசு ரூ.10 கோடி அளித்தது குறிப்பிடத்தக்கது!) வரி ஏய்ப்பு செய்யும் பண முதலைகளுக்கு வாரி கொடுப்பதை விடுத்து விளிம்பு நிலை மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவது சமூகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலம் சரியான திசையில் செல்லவும் வழிவகுக்கும். மேலும் அவர்கள் கேட்பது எதுவும் சலுகைகள் அல்ல‌, அவர்களது உரிமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் பணி என்பது மக்கள் கோரிக்கைகளை செவிமடுத்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய‌ பணி, அதற்கு பின் தான் எல்லா கேளிக்கைகளும் என்பதை முதல்வராக வருபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே திரையுலகினருக்கு பட்டுக்கம்பளம் விரித்து முதல்வர் நிதியை அளித்த சூழ்நிலையில், மற்றொரு பக்கம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருந்தனர். வெட்கி தலை குனியவேண்டிய விஷயம் அல்லவா இது? இதற்கு மேல் இதுகுறித்து நாம் பேசினால் அரசியல் வந்துவிடும். எனவே இத்தோடு இந்த குமுறலை நிறுத்திக்கொள்கிறோம்.

சூரியா இன்னொரு பிரம்மிப்பு. விதி தம்மை முடக்கிப் போட்டுவிட்ட போதும் அதை மதியால் வென்று காட்டியிருப்பவர். பல முன்னனி நிறுவனங்களுக்கு இணைய தளத்தை வடிவமைத்து தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கம்ப்யூட்டரிலும் இணையத்திலும் நமக்கும் உங்களுக்கும் ஏன் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவர்களுக்கும் கூட தெரிவதை விட இருவரும் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

முன்னரே குறிப்பிட்டது போல, பேசும்போது திக்கித் திக்கித் தான் பேசுகிறார். வார்த்தைகள் தான் திக்குகின்றன. எண்ணங்கள் அல்ல. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.

Kovai Jagadish Sooriya 1

இருப்பினும் தனது அயராத முயற்சியாலும் ஆர்வத்தாலும் கணினி கற்றுக்கொண்டு ஒன்று முன்னணி நிறுவனங்களுக்கு வெப் டிசைனிங் செய்து தரும் நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே நான்கு பேர் வேலை செய்துவருகின்றனர்.

இவருடைய வாடிக்கையாளர்கள் பலருக்கு உண்மையில் இவர் ஒரு மாற்றுத் திறனாளி என்பதே தெரியாது என்பதே உண்மை. “எனது திறமைக்கு தான் அனைவரும் வாய்ப்பை கொடுக்கவேண்டுமே தவிர எனது உடல் குறைப்பாட்டை எண்ணி அல்ல!” என்கிறார் உறுதியுடன்.

இவரது பெற்றோர் இவருக்கு ஊன்று கோலைத்தான் கொடுத்தார்கள். ஆனால் அதில் நடப்பது இவர் தான்.

உன் லட்சியம் என்ன சூரியா என்று கேட்டால், “உலகிலேயே நம்பர் ஒன் வெப்சைட்டை நான் வடிவமைக்கவேண்டும்!” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

சூரியாவிடம் உள்ள மிகப் பெரிய சொத்து அவரது பெருந்தன்மை மற்றும் MATURITY தான். அனைத்து அங்க அவயங்களும் நன்றாக அமையப்பெற்றவர்கள் பலரிடம் இல்லாத குணம் இது.

பொறியிண்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
ஆல்வினை இன்மை தரும்.

உடல் அங்கங்களில் ஏற்படும் குறை ஒரு குறையே அல்ல. அவர்களிடம் இருக்கும் திறமை, ஆளுமை அல்லது முயற்சி செய்து மாற்றுத் திறனை வளர்ப்பதற்கு ஒரு தூண்டு சக்தியாக சமுதாயமோ குடும்பமோ அல்லது அரசாங்கமோ இல்லாமல் இருப்பதுதான் இங்கே மிகப் பெரிய ஊனம் இங்கே.

Kovai Jagadish Sooriya 8

வரி ஏய்ப்பவர்கள் எல்லாம் சலுகைகளை ருசித்துக்கொண்டிருக்க, தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட மாற்றுத் திறனாளிகள் போராடவேண்டியதொரு துரதிர்ஷ்ட சூழலில் நாம் இன்று வாழ்கிறோம்.

எந்த நாடு ஊனமுற்றவர்களை மகிழ்ச்சியாக  வைத்திருக்கிறதோ அந்த நாடே இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடாகும்.

அப்படிப் பார்க்கையில் நமது மாநிலமும் நாடும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவையா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நாம் ஏற்கனவே சொன்னது போல… நாம் அனைவரும் மகிழ்ச்சியின் அலைகளை பரப்பவந்தவர்கள். இருட்டை சபிப்பதற்கு பதில் மெழுகுவர்த்தியை ஏற்றுபவர்களாக அல்லவா நாம் இருக்கவேண்டும்?

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி…. உங்கள் வாழ்க்கையில் இதுவரை எத்தனை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியிருப்பீர்கள்? குறைந்தது அவர்கள் வாழ்வில் நம்பிக்கையை விதைத்திருப்பீர்கள்??

சரி… போகட்டும் விடுங்கள். உலக மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று அனைவரும் ஒரு சூளுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

“எனக்கு தெரிந்த வாழ்வில் மிகவும் போராடும் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். அவர் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்க உதவிகள் செய்வேன். அவர் திறமையை அவர் அறியவும் அதை வெளிப்படுத்தவும் உதவிகள் செய்வேன்!”  என்று இங்கு இப்போது சூளுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

உதவிட நீங்கள் தயாராக இருங்கள். தகுந்த நபரை தானாகவே இறைவன் உங்களுக்கு அடையாளம் காட்டுவான்.

இதை நீங்கள் செய்யத் துவங்கினால், எந்த கோவிலுக்கும் போகவேண்டாம். யாத்திரைக்கும் போகவேண்டாம். எந்த கடவுளையும் வணங்கவேண்டாம். நீங்கள் இருக்கும் இடத்தை தேடி இறைவன் வருவான் என்பது சத்தியம்.

(Please check : யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?)

தன்னலமற்ற சேவையே மிகப் பெரிய ஆன்மிகம். பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்களே புனிதமானவை.

==========================================================

Kovai Jagadish Sooriya 5இந்த இரண்டு தன்னம்பிக்கை சிகரங்களையும் நிச்சயம் நம் பாரதி விழாவுக்கு அழைத்து பாராட்டி கௌரவிக்கவேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டோம்.

“டிசம்பர்ல வரப்போற எங்க ஆண்டு விழா மற்றும் பாரதி விழாவுல ரெண்டு பேரும் கலந்துகிட்டு எங்களோட அவார்டை வாங்கிக்கணும்!”

நாம் கூறியதை கேட்டு சந்தோஷப்பட்டாலும்… போக்குவரத்து பற்றி ரொம்பவும் யோசித்தார்கள்.

“நாளை அரசாங்கமே இப்படி ஒரு விருதை தருகிறது என்று வைத்துக்கொள்வோம்…. எப்படி போய் வாங்குவது என்று யோசிப்பீர்களா? இது எங்களைப் பொருத்தவரை சாமான்யர்கள் சாதனையாளர்களுக்கு தரும் விருது. மிகவும் உயர்வானது. குடும்பத்தோடு எங்கள் விழாவில் கலந்துகொண்டு, விருதைப் பெற்று நான்கு வார்த்தைகள் பேசி எங்களை கௌரவிக்கவேண்டும். மேலும், உங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் MOBILITY பிரச்சனைகளை உடைத்துக்கொண்டு நாலு இடத்திற்குக் போய் வரவேண்டும். இல்லையெனில் ஒரு ஊருக்குள்ளேயே நீங்கள் முடங்கிவிடும் அபாயம் இருக்கிறது. எதிர்காலத்தில் மிகப் பெரிய விருதுகளும் பதக்கங்களும் பெற நீங்கள் பல இடங்களுக்கு செல்லவேண்டி வரும். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்குமே.. எனவே தயங்கவேண்டாம்!!”

நமது குரலில் இருந்த உறுதி அவர்களை அசைத்து பார்த்தது.

ஆனால், தங்குமிடம் குறித்து தனது கவலையை பகிர்ந்துகொண்டார் ஜெகதீஷ்.

“அண்ணா… வர்றோம்… ஒன்னும் பிரச்னையில்லே… ஆனா எங்கே தங்குறதுன்னு தான் தெரியலே…!”

“நான் நீங்க தங்க ஏற்பாடு செய்றேன். நீங்க உங்க FAMILY & நண்பர்கள் எல்லாரும் வாங்க!” என்றோம்.

மிக்க மகிழ்ச்சியுடன் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Kovai Jagadish Sooriya 6

இருவரும் ஒரு நாள் முன்னதாகவே (டிசம்பர் 13 காலை) சென்னை வருகின்றனர். ஜெகதீஷ்க்கு நம் நண்பர் கிளிகளின் காட்ஃபாதர் சேகரை  சந்திக்கவேண்டும், அப்படியே அந்த கிளிகளையும் அவை வரும்போது ரசிக்க வேண்டும் என்று கொள்ளை  ஆசை. அதற்காகவே ஒரு நாள் முன்னதாக வருகிறார். (சேகரின் வீட்டு மாடிக்கு நூற்றுக்கணக்கான கிளிகள் பேட்ச் பேட்ச்சாக வரும் சாப்பிடும் பறந்துபோகும். மறுபடியும் வரும். போகும். இப்படியே இரண்டு மணிநேரம் ஓடும். அவற்றை ரசிக்க ஆரம்பித்தால் ஒருவருக்கு நேரம் போவதே தெரியாது.)

இந்த ஆண்டு ஜெகதீஷ் மற்றும் சூரியா இருவரும் தன்னம்பிக்கைக்கான ரைட்மந்த்ரா சுவாமி விவேகானந்தர் விருதினை பெறவிருக்கிறார்கள்.

நம் விழாவுக்கு வாருங்கள். இவர்களோடு பேசுங்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த விருதும் உங்கள் அன்பும் இவர்கள் வாழ்வில் மிகப் பெரியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

==========================================================

ஒரு முக்கிய வேண்டுகோள்!

திரு.ஜெகதீஷ் மற்றும் சூர்யாவுடன் அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் சேர்த்து மொத்தம் 9  பேர் நம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வருகிறார்கள். சென்னை நகரில் இவர்கள் தங்க நம் வாசகர்கள் யாராவது ஏற்பாடு (இடவசதி) செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். (வடபழனி, சாலிக்கிராமம், கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ஜாபர்கான் பேட்டை, இப்படி). இருவரும் சக்கர நாற்காலி உபயோகிப்பவர்கள் என்பதால் தரைத்தளமாக இருக்கவேண்டும். மற்றபடி சௌகரியங்களை பற்றி கவலை இல்லை. இவர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்வார்கள். டிசம்பர் 13 சனிக்கிழமை காலை சென்னை வரும் இவர்கள் திங்கட்கிழமை மாலை மீண்டும் கோவை புறப்படுகிறார்கள்.

(நம் வீட்டில் இவர்களை தங்கவைக்க ஆசை. ஆனால் நம் வீடு புறநகரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் பயணத்திலேயே இவர்களுக்கு நேரம் போய்விடும்.)

மேற்கூறிய எதுவும் அமையவில்லை எனில் மாற்று வழிகளை (HOTEL ACCOMMODATION) நாம் ஆராயவேண்டும். அவ்வளவே. எதற்கும் நம் வாசகர்களிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்று தோன்றியது.

நன்றி!

– சுந்தர்,
www.rightmantra.com
M : 9840169215
E : simplesundar@gmail.com

==========================================================

Also Check :

“வணக்கம் அண்ணா!”

முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !

9 thoughts on “இது ஆனந்தம் விளையாடும் வீடு!

  1. ஒரு அருமையான ரோல் மாடல்களை சந்தித்து உரையாடி நம் தளத்திற்கு பெருமை சேர்த்து விட்டர்கள். உரையாடலில் நாங்களும் பங்கு பெற்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. திரு ஜகதீசின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

    ஜகதீசும், சூரியாவும் இந்த உலகத்தையே தனது வசமாக்கும் மாற்றும் திறனாளிகள் . அவர்களை நம் ஆண்டு விழாவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

    நன்றி
    உமா

  2. Dear sir,

    Hats off excellent article regarding physically handicapped youngster showing the path of wisdom to the present generation inspite of all fitness using the science and technology and the social sites for unwanted activities and lower their knowledge and bring miseries to parents. Let this gentleman open their eyes to walk in the right path and direction.

    CHANDRA MOULI

  3. Hats off to Mr.Jegadeesh and Mr.Surya!!

    It is good to see how they are using technology and time for good, creative and useful things. The way they overcame the challenges they faced is an inspiration to us. Let our youngsters get motivated seeing these great people and start moving in the right direction.

    God be with them!!

  4. முதலில் ஜகதீசையும், சூர்யாவையும் எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு என் நன்றிகள்..இதுவரை எத்தனயோ சாதனையாளர்கள் சந்திப்புகள் நம் தளத்தில் படித்திருக்கிறேன். சிலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். ஆனால் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தது முதல் தளம் சார்பாக சாதனையாளர்களை சந்திக்கும் வாய்ப்பு அரிதாகிப்போனது. மேலும் நம் தளம் சார்பில் உழவாரப்பணிகள் தூள் கிளப்பிக் கொண்டிருந்தன. எதற்கும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு உழவாரப்பனியின் போதும், சாதனையாளர் சந்திப்பின் போதும் நம்மால் கலந்து கொள்ள முடியவில்லயே என்று வருத்தமாக இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் மருந்தாக அமைந்தது ஜெகதீஸ், சூர்யா சந்திப்பு.

    என்னுள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இருவரும் ஏற்படுத்தி விட்டார்கள்…இவர்களிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் என் வாழ்வின் திருப்புமுனை…நாங்கள் இன்று நண்பர்கள்…இவர்கள் மூலம் மேலும் சில நல்ல நண்பர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது…இதுவரை நான் தவறவிட்ட அனைத்தையும் மொத்தமாக செய்துமுடித்த திருப்தி….நன்றி அண்ணா….! நன்றி ஜகதீஸ்…! நன்றி சூர்யா..!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

    பி.கு: இந்தப் பதிவில் சுந்தர் அண்ணா சுட்டிருக்கும் உப்புமா கதைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, உண்மையைச் சொல்லப் போனால், தோசை மாவு தீரும் அளவுக்கு சுந்தர் அண்ணா தோசைகளை “கபளீகரம்”(!!?!!!) செய்தார் என்பதே உண்மை….! வதந்திகளை நம்பாதீர்……!

    1. அன்பு அண்ணா ஒரு சந்தேகம், அது என்ன ? “கடமையைச் செய்; பலனை எதிர்பார்” ?

  5. வணக்கம் சுந்தர் சார்

    சொல்வதர்க்கு வார்த்தைகளை இல்ல
    படிக்கும் போதே மிகவும் சந்தோசமாக இருக்கு நிஜமாவே ஆனந்தம் ததும்பும் வீடுதான் சார்

    நன்றி

  6. மிக அற்புதமான பதிவு …………..சொல்ல வார்த்தைகள் இல்லை .ஜெகதீஷ் மற்றும் சூரியா அவர்களின் லட்சியம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிரையன்.

    நன்றி
    வெங்கடேஷ்

  7. இந்த சாதனையாளர்கள் சந்திப்பில் என்னையும், மைத்துனரையும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி சுந்தர்.
    தற்போது ஜகதீஷ் மற்றும் சூர்யா நமது முக நூல் நண்பர்கள் ஆகி விட்டார்கள். நீங்கள் கூறியது போல அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் positive vibration உணர முடிந்தது. நமது ஆண்டு விழாவில் பங்கேற்க இந்த நண்பர்களுடன் கோவையில் இருந்து ஒன்றாக வர உள்ளோம்.

  8. சூப்பர் டா நன்பென்ஸ்
    ஐ ம் ரியல்லி ப்ரௌட் ஆப் யு டியர் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *