Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

print
போலிகளை கொண்டாடிக் கொண்டும் உண்மையை இழித்தும் பழித்தும் பேசி வரும் காலம் இது. கலிகாலம் அல்லவா? நடிகைகள் என்றாலே அவர்களை இளக்காரமாக பார்க்கும் வழக்கம் பலருக்கு இன்று இருக்கிறது. அதிலும் கவர்ச்சி நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். காரணம், நம்மவர்கள் ‘புரிதல்’ அப்படி. மனிதர்களை எடைபோடுவதில் கெட்டிக்காரர்கள் அல்லவா நாம்! இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள் அனைவரும் உத்தமிகளும் அல்ல. கவர்ச்சி காட்டி நடிப்பவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்தவர்களும் அல்ல.

தமிழ் பட உலகில் நடன நடிகையாக இருந்தவர், டிஸ்கோ சாந்தி. இவர், மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் நடனம் ஆடி வந்த அவர், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1டிஸ்கோ சாந்தி-ஸ்ரீஹரி தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஹரி கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கணவரின் மரணம், டிஸ்கோ சாந்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து டிஸ்கோ சாந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருடைய கல்லீரல் பழுதுபட்டது. உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. டிஸ்கோ சாந்தியை அவருடைய தங்கை லலிதகுமாரி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

லலிதகுமாரியை நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து செய்துவிட்டு வேறொரு நடன இயக்குனரை திருமணம் செய்துகொள்ள, இரு பெண் குழந்தைகளை வைத்திருந்த லலிதகுமாரி நிர்கதியாய் நின்றபோது, ஓடிவந்து தங்கையின் துயர் துடைத்தவர் அக்கா சாந்தி தான்.சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில்…. “இப்போது என் தங்கை தனியே வசிக்கிறாள். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ரொம்பவே கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடி தண்ணீர் சப்ளை செய்வதைக் கூட நிறுத்தி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50,000 என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பெரியவளானாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியைக்கூட நடத்தினேன். சொந்த மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். ஆனால் தன் சொந்த குழந்தைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்கக் கூட அவருக்கு மனமில்லை. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன். நன்றாக இருந்த என் தங்கையின் வாழ்க்கையை இப்படியாக்கிவிட்டாரே பிரகாஷ் ராஜ்!” என்று கூறியுள்ளார் டிஸ்கோ சாந்தி.

மிகப் பெரிய குடும்பம் இவருடையது. ஒரு காலத்தில் ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…’ என்று பாட்டுப் பாடி கதாநாயகனாக கலக்கிய தந்தை ஆனந்தனுக்கு பிற்காலத்தில் வாய்ப்புக்கள் குறைந்தவுடன் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. சாந்திக்கு டீன் ஏஜ் பருவம். வேலைக்கு போகலாம் என்றால் படிப்புமில்லை. தந்தைக்கோ உடல் தளர்ந்துவிட்டது. சினிமாவைத் தவிர இவர் குடும்பத்தினருக்கு வேறு எதுவும் தெரியாது. சரி.. என்று சினிமாவில் அடியெடுத்து வைத்தவருக்கு கிடைத்ததென்னவோ அரைகுறை ஆடைகளுடன் நடனங்கள் தான். தன் தம்பி தங்கைகளுக்காக அன்று ஆட ஆரம்பித்தவர் அவர்கள் தலையெடுக்கும் வரை ஆடிக்கொண்டிருந்தார். தன் சொந்த வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து குடும்பத்தை கரை சேர்த்தார் சாந்தி. நாமால் பலவிதங்களில் கீழ்த்தரமாக விளிக்கப்படும் இது போன்ற ஒவ்வொரு நடிகையின் பின்னணியிலும் ஒரு கைவிடப்பட்ட குடும்பம் உண்டு. இந்த சாந்தி மட்டுமல்ல.. இவரைப் போல எத்தனையோ பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக உடன் பிறந்தவர்களுக்காக மெழுகுவர்த்திகளாக தங்களை எரித்துக்கொண்டு ஒளி கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நம் வந்தனங்கள்!

Disco Shanti

திரையுலகில் பலரிடம் பணம் கோடி கோடியாக கொட்டிக்கிடக்கிறது… ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? டிஸ்கோ சாந்தி தன் குடும்பத்தை கரையேற்றியதை மட்டும் நாம் சிலாகித்து கூறவில்லை. அதற்கும் பல படிகள் மேலே சென்று அவர் ஆற்றியிருக்கும் தொண்டை பாருங்கள்…! விக்கித்துப் போவீர்கள்!! சாந்தி அவர்களின் மறுபக்கத்தை படித்து பாருங்கள். தான் வாழ பிறரைக் கெடுப்பவர்கள் மத்தியில் தான் கெட்டு பலரை வாழவைத்திருப்பவர் டிஸ்கா சாந்தி அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவள் விகடனில் வெளியான சாந்தி அவர்களின் பேட்டி இது.

====================================================================

அன்று கவர்ச்சி நாயகி… இன்று சமூகசேவகி…. பிரமிக்க வைக்கும் ‘டிஸ்கோ’ சாந்தி!

ஒரு நடிகையின் பர்சனல் பக்கங்களை பெரும்பாலும் ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’யில் பார்த்தே பழக்கம் நமக்கு. ஆனால், நடிகை ‘டிஸ்கோ’ சாந்தி, நமக்கு ‘டபுள் பாஸிட்டிவ்’ பக்கங்களை வாசிக்கக் கொடுத்து, ‘வெல்டன்’ வாங்குகிறார்!

”டிஸ்கோ சாந்தியா..? ‘ரோஜா மலரே ராஜகுமாரி… ஆசைக்கிளியே அழகிய ராணி’னு பாடின ‘வீரத்திருமகன்’ சி.எல். ஆனந்தனோட பொண்ணுதானே?”, “கவர்ச்சி நடிகைதானே?”, “நம்ம பிரகாஷ்ராஜ் மனைவி லலிதாவோட அக்காதானே?!” என்றெல்லாம் அவரை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்தானே?! இங்கு நாம் பகிர்ந்து கொள்ளப் போவது அவருக் கான இன்னும் மரியாதையான ஒரு அடையாளம் பற்றி!

Disco Shanthi familyஆம்… ஆந்திராவில் மூன்று கிராமங்களைத் தத்தெடுத்திருப்ப தோடு, அங்குள்ள குழந்தைகளின் நலனுக்காகவும் பல பயனுள்ள செயல்களை செய்து வருகிறார் ‘டிஸ்கோ’ சாந்தி! யாரிடமும் எந்த நன்கொடையும் பெற மறுத்து, பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த நல்ல காரியத்தை செய்துகொண்டிருக்கிறார் சாந்தி.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.

வாசல்வரை இறங்கி வந்து வரவேற்றவரை நாம் திகைப்புடன் பார்க்க, புரிந்து கொண்டவராக, “கொஞ்சம் (!) வெயிட் போட்டுட்டேன்ல?!” என்றபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ஆரம்ப சில நிமிடங்கள் ஃப்ளாஷ்பேக்குக்கு அர்ப்பணம்!

“எங்க வீட்டுல நாங்க மொத்தம் ஏழு பசங்க. எங்கப்பா புகழோட உச்சியில இருந்தப்போ, பணம் கொட்டுச்சு. அப்பறம் அப்பாவுக்கு பட வாய்ப்புகள் சரியா அமையாமப் போக, நிலைமை தலைகீழாச்சு. நாங்க மூணு நாள் தொடர்ந்து சாப்பிடாம இருந்த காலமெல்லாம்கூட உண்டு. அதெல்லாம்தான் இந்தப் பணத்து மேல பெருசா ஈடுபாடு எதையும் இல்லாம செய்துடுச்சு…” என்றவர், கணவர் ஸ்ரீஹரியின் எபிஸோடுக்கு வந்தார்.

“நான் எல்லா மொழிகள்லயும் நடிச்சிட்டிருந்த காலம் அது. ஒரு தெலுங்குப் பட ஷ¨ட்டிங்… நாலு வில்லன்கள் என்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி ஒரு ஸீன். பிரேக்ல மூணு வில்லன்களும் (!) என்கிட்ட சகஜமா பேசிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு வில்லன் மட்டும் உம்மணா மூஞ்சியா, தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரு. அவர்தான் என் பாவா (கணவரை அப்படித்தான் அழைக்கிறார்)! அதுவே அவர் மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்க… பரஸ்பரம் அறிமுகமாகி, ஃப்ரெண்ட்ஸாகி, காதலர்களானோம்.

ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கறதுனு முடிவெடுத்தோம். ஆனா, அதுக்கு முன்ன எங்க ரெண்டு பேருக்குமே சில கடமைகள் இருந்தது. என் கூடப் பிறந்தவங்களை செட்டில் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு… நாலு வில்லன்கள்ல ஒருத்தர்ங்கிறத தாண்டி இன்னும் கொஞ்சம் மேல வரவேண்டிய கட்டாயம் அவருக்கு. சில வருஷங்கள் காத்திருந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்பறம் நான் ஹவுஸ் வொய்ஃப் ஆயிட்டேன். அவர் மெயின் வில்லனா வந்து, அப்பறம் ஹீரோவாயிட்டாரு. அன்புலயும் அந்தஸ்துலயும் குறைவில்லாம அமைஞ்சது வாழ்க்கை. அவரைக் கல்யாணம் பண்ணிட்டதோட நான் ஹைதராபாத்லயே செட்டில் ஆயிட்டேன்” என்று சந்தோஷமாக ஒப்பித்த சாந்தியிடம் ‘கிராம தத்தெடுப்பு’ பற்றிக் கேட்டோம்.

“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்ப இஷ்டம். சொல்லப்போனா, என்னோட முதல் ரெண்டு பையன்களையும் நான் பெண்ணா பிறக்கணும்தான் எதிர்பார்த்தேன். மூணாவதா என் பொண்ணு அக்ஷரா பொறந்தப்போ, அவ்ளோ சந்தோஷம்! ஆனா, நாலே மாசத்துல அந்த சந்தோஷத்தை ஆண்டவன் பறிச்சுக்கிட்டான். நுரையீரல் கோளாறால அவ இறந்து போயிட்டா…” – குரலில் கண்ணீர் ஈரம் கலக்கிறது.

“அந்த இழப்புல இருந்து எங்களால வெளிய வரவே முடியல. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எங்க பொண்ணு ஞாபகம்தான் வரும். அப்படித்தான் அந்தக் குழந்தைங்களப் பார்க்கும்போதும் வந்தது. அதாவது, ரெண்டு வருஷம் முன்னால ஆந்திராவுல இருக்கற நாராயண்பூர், அனந்தாபூர், லக்ஷ்மாபூர்ங்கற மூணு கிராமங்கள்லயும் குடிதண்ணியில அதிகமான குளோரின் கலந்து, அதைக் குடிச்ச கிராம மக்கள் பல் உதிர்ந்து, கை, கால் எலும்பு மூட்டு எல்லாம் ரொம்ப வீக்காகி நடக்கக்கூட முடியாம, அதிக பாதிப்புக்கு உள்ளானங்கனு அடிக்கடி பேப்பர்ல செய்தி வந்தது. அந்தத் தண்ணியால அதிகம் பாதிக்கப்பட்டவங்க, குழந்தைங்கதான். அவங்க போட்டோவை எல்லாம் பேப்பர்ல பார்த்தப்போ, ‘காப்பாத்த முடியாத நோயால நம்ம பொண்ணை பறிகொடுத்துட்டோம். ஆனா, இவங்களுக்கு தண்ணிதானே பிரச்னை? நம்மாள முடிஞ்சதை செய்யலாமே’னு யோசிச்சு நானும் பாவாவும் நேரா அந்த கிராமங்களுக்குப் போய் நிலைமையத் தெரிஞ்சுக்கிட்டோம்.

தான் தத்தெடுத்த கிராம மக்களின் அன்பு மழையில் டிஸ்கோ சாந்தியும் அவர் கணவர் ஸ்ரீஹரியும்
தான் தத்தெடுத்த கிராம மக்களின் அன்பு மழையில் டிஸ்கோ சாந்தியும் அவர் கணவர் ஸ்ரீஹரியும்

அந்த ஊர்கள்ல ‘வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கலாம்’னு முடிவு பண்ணி, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரோட பேசினோம். ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கற பிரமாண்ட மெஷின்களை அந்தக் கிராமங்கள்ல அமைச்சோம். கிராமத்துல இருக்கற நல்ல தண்ணி டேங்க்ல இருந்து வர்ற தண்ணியை ப்யூரிஃபையர்ல சுத்திகரிச்சு, அதை இன்னொரு டேங்க்ல சேமிச்சு வைச்சு, மக்களுக்கு விநியோகிச்சோம். அந்த தண்ணியை மக்கள் சேமிச்சு வைக்கறதுக்காக இருபது லிட்டர் வாட்டர் கேன்கள் சுமார் ரெண்டாயிரம் வாங்கிக் கொடுத்தோம்.

ஆரம்பத்துல மூணு கிராம மக்கள் மட்டும்தான் இந்தத் தண்ணீரை குடிச்சுட்டு இருந்தாங்க. இப்போ பக்கத்துல இருக்கற கிராமத்துல எல்லாம் இருந்தும் வந்து எடுத்துட்டுப் போறாங்க. ஆனா, சிலர் இந்தத் தண்ணியை பிடிச்சுட்டுப் போய் காசுக்கு விக்கறாங்கனு கேள்விப்பட்டப்போ, ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதனால, இப்போ இருபது லிட்டர் கேனுக்கு ரெண்டு ரூபாய்னு வசூலிக்கற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கோம். அந்தப் பணத்தை, வாட்டர் டேங்கோட பராமரிப்பு செலவுக்கு மக்களே பயன்படுத்திக்கறாங்க.

குளோரினால ஏற்பட்ட பிரச்னைகள் இப்போ படிப்படியா குறைஞ்சுட்டு வருது. பிறக்கற குழந்தைகள் ஆரோக்கியமா இருக்காங்க. அவங்களோட தாகத்துக்கு நல்ல தண்ணி கொடுத்த திருப்தியில, ஆத்ம திருப்தினா என்னனு தெரிஞ்சுக்கிட்டோம்” என்று சொல்லும் சாந்தி, மேற்கொண்டும் செய்துவரும் பயனுள்ள செயல்களைப் பற்றி தொடர்ந்தார்.

“இந்த கிராமங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை விசிட் போவேன். மூணு கிராமத்திலேயும் ரெண்டு கவர்ன்மென்ட் ஸ்கூல் இருக்கு. சத்துணவு போடுறாங்க. ஆனா, அதை வாங்கிச் சாப்பிட நல்ல தட்டு கிடையாது. இது தெரிஞ்சதும்… தட்டு, டம்ளர், ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேன். அதனால அந்தப் பிள்ளைங்களுக்கு என் மேல ரொம்ப பிரியம்!” என்றவர் கணவர் ஹரியோடு வண்டியில் ஏற… அந்த கிராமங்களுக்கு ஒரு விசிட் ஆரம்பமானது.

சாந்தியைப் பார்த்ததும் கிராமத்து மக்கள் பாசமாக சூழ்ந்து கொண்டார்கள். எட்ட நின்று நன்றி சொல்லாமல், தோழியைப் போல சகஜமாக கலக்கிறார்கள். லக்ஷ்மா பூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி பாவனி ஜெகநாதன், சாந்தியின் உதவிகளைப் பற்றி நம்மிடம் தெலுங்கில் சொல்லி பரவசப்பட்டார்.

”மூட்டுவலியால முன்ன ஊருல ரொம்ப பேரு கஷ்டப்பட்டோம். இப்ப அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டிருக்கு. அடுத்த தலைமுறை நிச்சயமா எந்தப் பிரச்னையும் இல்லாம பொறக்கும்கிற நம்பிக்கை இருக்கு” என்று சொன்னார் பாவனி.

இதேபோலவே மூன்று கிராமங்களிலும் மாற்றி மாற்றி பரவசங்கள்தான்.

அத்தோடு, ‘எங்க ஊருக்கு லைட் இல்ல. நூத்தி அம்பது ஸ்ட்ரீட் லைட் வேணும்… பஸ் வசதியில்ல… ஒரு மினி பஸ் ஏற்பாடு பண்ணினா நல்லாயிருக்கும்… பசங்களுக்கு படிக்க புத்தகமெல்லாம் இல்ல… வாங்கிக் கொடுங்க…” – இப்படி உரிமையுடன் கோரிக்கை வைத்த மக்கள், மனுவாகவும் எழுதி சாந்தியிடம் சேர்ப்பித்தனர்.

நம்பிக்கையுடன் அந்த கிராமத்து மக்களும், அடுத்த முயற்சியை கையில் சுமந்தபடி சாந்தியும் விடைபெற்றனர்.

ஒன்றரை மணி நேரப் பயணத்தில், பேக் டு சாந்தி வீடு!

“அக்காவுக்கு வணக்கம் சொல்லுங்க…” என்று நம்மை தன் இரண்டு பையன்களிடமும் அறிமுகப்படுத்தினார் சாந்தி.

“என் பிள்ளைங்ககிட்ட நான் மூணு விஷயத்துல ரொம்ப கண்டிப்பா இருப்பேன். படிப்பு, சாப்பாடு, மரியாதை! பெரியவங்களைப் பார்த்தா உடனே கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிப்பாங்க. கூடவே, ‘அப்பா சம்பாதிக்கற பணம் அவரோடது. நல்லா படிச்சு, வேலைக்குப் போய், உங்க கால்லதான் நீங்க நிக்கணும்’னும் சொல்லியிருக்கேன்” என்றவர்,

“நான் என் குழந்தைங்களுக்கு ஹண்ட்ரட் பெர்சன்ட் குட் அம்மா! ஒண்ணு தெரியுமா… நான் ஒரு நடிகைங்கறது என் முதல் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கறப்போதான் தெரியும். ஒருநாள் நான் நடிச்ச படத்துல இருந்து ஒரு பாட்டு டி.வி-யில ஓடிட்டு இருந்தப்போ, ஏனோ அந்த நிமிஷத்துல தோணுனதால அவனைக் கூப்பிட்டு காமிச்சேன். ‘என்னம்மா டிரெஸ் இது?’னு ஒரு கோபத்தோட என்னைப் பார்த்துட்டுப் போயிட்டான். அதோட என் படம், பாட்டுனு எதையும் நான் என் பசங்ககிட்ட காட்டினதே இல்ல! அதுமட்டுமில்ல… ‘டிஸ்கோ’ங்கற பேரும் அவங்களுக்குப் பிடிக்கறதில்ல. அதனால, இப்ப நான் வெறும் சாந்தி மட்டும்தான்” என்றவர், “சஷாங்… மேகாம்ஷ்… நேரமாச்சு வாங்க சாப்பாடு ஊட்டி விடறேன்…” என்று அம்மா பறவையானார்!

(நன்றி : அவள் விகடன் | ம.பிரியதர்ஷினி)

=================================================================

போகும்பாதை எப்படி இருந்தாலும் போய் சேரும் இடம் கோவிலாக இருக்கவேண்டும் என்பார்கள். சிலர் போகும் பாதை கோவிலாக இருந்தாலும் போய்சேரும் இடம் சாக்கடையாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் கையெடுத்து வணங்கப்படவேண்டியவர் தன்னை உருக்கிக்கொண்டு பிறருக்கு ஒளி கொடுத்த சாந்தி ஸ்ரீஹரி அவர்கள்.

கணவர் ஸ்ரீஹரி காலமாவதற்கு முன், முக்கிய வேடத்தில் தோன்றி நடித்த படம் என்கிற ஒரே காரணத்துக்காக முடிப்பதற்கு போதிய பணமின்றி தவித்த ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்கிற படத்தின் தெலுங்கு பதிப்பு உரிமையை தன் கைக்காசை கொண்டு வாங்கியிருக்கிறார் சாந்தி. கணவர் மறைந்த துக்கத்தில் அவரும் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

“சகோதரி, கறந்த பாலைவிட தூய்மையானவர் நீங்கள். நீங்கள் கலங்கவேண்டாம். உங்களுக்காக பிரார்த்திக்க இதோ உலகின் ஏதோ ஒரு மூலையில் உங்கள் சகோதரன் இருக்கிறேன். என்னுடன் பல சகோதர சகோதரிகளும் நண்பர்களும் இருக்கிறார்கள். விரைவில் நீங்கள் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் நலம் பெற்றவுடன் உங்களையும் நேரில் சந்திக்கிறேன்!!”

நமது வாராந்திர ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் இந்த வாரம் திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்களுக்காக பிரார்த்தனை செய்யப்படும்.

=================================================================

Also check :

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

இது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :

http://rightmantra.com/?cat=8

=================================================================

[END]

16 thoughts on “ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

  1. நிஜ வாழ்க்கையில் சினிமாவில் ஹீரோவாக நடித்தவர்கள் வில்லன்களாகவும், வில்லனாக நடித்தவர்கள் நல்லவர்களாகவும் இருக்க பார்க்கிறோம்.

    மேம்போக்காக உருவத்தை பார்த்தே மனிதர்களை எடை போட்டு பழக்கப்பட்டு போனவர்களுக்கு சாந்தியின் குணம் ஒரு மன மாற்றத்தை கொண்டு வரும் என்று நிச்சயமாக நம்புவோம்.

    அவர் கூடிய விரைவில் இறைவனின் கருணையால் ஆரோக்யமாய் மீண்டு வர மஹா பெரியவாளிடம் மனமார பிரார்த்தனை செய்கிறேன்.

  2. வணக்கம் சார்.
    தன் தலைவன் இறந்த துக்கத்தில் தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சகோதரி சாந்தி அவர்களின் உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.
    அவர் செய்யும் சமூக சேவைகள் பாராட்டுதலுக்கு உரியது.
    அவரின் பல பரிமாணங்கள் (டிஸ்கோ சாந்தி மற்றும் குடும்ப தலைவி சாந்தி, சமூக சேவகி) பிரமிப்பு ஊட்டுகிறது.
    ஒரு பெண்ணிற்குள் இத்தனை முகங்களா?
    அவரின் சேவை அவர் தத்தெடுத்து உள்ள கிராமங்களுக்கும், இன்னும் அவர் உதவி வேண்டி காத்திருக்கும் பல நல்ல உள்ளங்களுக்க்காகவும், நம் தள வேண்டுதலுக்க்காகவும் அவர் விரைவில் பழையபடி பூரண நலத்துடன் மீண்டு வருவார்.
    நன்றி

  3. தன் குடும்பத்தை கவனிக்காமல் நடிகர்கள் பின்னால் ஓடும் மக்கள் மத்தியில் திரையுலகை சேர்ந்த திருமதி சாந்தி அவர்கள் செய்துள்ள மக்கள் தொண்டு மகத்தானது. நம் சமூகத்திற்கு ஒரு சிறந்த ரோல் மாடல். அவருக்கு ஏற்ப்பட்டுள்ள சோதனையிலிருந்து மீண்டு வந்தது தன் குடும்பத்தாருடன் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  4. Sundarji,

    It’s heartening to see the greatness in Tmt.Santhi amidst being in film industry.

    Today, so many actors have been earning crores of rupees – out of them, how many do like this. and that too, without much publicity.

    In our ‘Special’ life, we first – 1. need to take care of ourselves, 2. our family, 3. (not but the least) society around us.

    And you, Sundarji are already doing the much things which others (including me) could have said that’s impossible to do given the lack of time and money and remain selfish.

    Posts like this – which cleanse our thoughts and lead us to unselfish path. Thanks so much. continue your work.:)

    I also pray for santhi for her good heart and work. 🙂
    **
    **Chitti**.

  5. தன் கணவர் இறந்த துக்கத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சகோதரி சாந்தி உடல்நலம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் –

    சாந்தி அவர்களின் சேவை மிகவும் நம் நாட்டுக்கு தேவை.

  6. சகோதரி சாந்தி அவர்களைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பைத் தருகின்றன. அவர் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்களுக்காக நிச்சயம் அவரது உடல் பூரண நலம் பெற்று விரைவில் திரும்ப வேண்டும் என இறைவனின் பொற்பாதங்களை வேண்டிக்கொள்கிறேன்.

  7. சகோதரி சாந்தி விரைவில் குணமடைந்து தன் குடும்ப மற்றும் சமுதாய நலப் பணிகளை செவ்வனே செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்…………….

  8. இவர் பரிபூரண குணம் அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

    கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சிலர் ,50000 அல்லது லட்சம் செலவு செய்து 50 மூட்டை அரிசி 100 மூட்டை அரிசி கொடுத்து அதை விளம்பர படுத்த பல லட்சம் செலவு செய்யும் காலம் இது

    அப்படி பட்டவர்கள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் செய்த சேவை மகத்தானது தொடர வாழ்த்துக்கள்

  9. இங்குஇவர்களிடம் இப்படி ஒரு உருக வைக்கும் நிகழ்வை எதிர்ப்பாகவில்லை ….இவர்கள் போன்றோர் இல்லையேல் உலகம் உருளாது

  10. இந்தப் பதிவு அனைவருக்குமே ஒரு சவுக்கடி என்றால் மிகையல்ல.

    சாந்தி அவர்களின் சேவையை பற்றி தெரிந்துகொள்ளும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. அதைவிட அவர் மீது மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு ஏற்படுகிறது.

    தனக்கு வந்த துன்பம் மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்று நினைத்த அந்த நல்ல உள்ளத்திற்கு ஒரு குறையும் வராது என்று நம்புவோம்.

    – பிரேமலதா மணிகண்டன்
    மேட்டூர்

  11. சகோதரி சாந்தியின் உடல் நலம் வெகு விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    நன்றி
    உமா

  12. பெரியவா சரணம்.

    “டிஸ்கோ சாந்தி” என்பவரை “ஒரு நல்மனம் படைத்த நர்த்தகி சாந்தி ஹரி” என அறிமுகம் செய்வித்தமைக்கு தங்களுக்கு மனமார நன்றி தெரிவிக்கின்ற பொழுதினில் “குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்” என்பதால் குஞ்சிதபாதமோடு இருக்கும் ஸ்ரீமஹாஸ்வாமியின் திருவுருவத்தைத் த்யானித்து அம்மையாருக்காக எந்தன் மனதார்ந்த ப்ரார்த்தனைதனை செய்கின்றேன். வருகிற அனுஷ தினத்தன்று கோவிந்தபுரம் சென்று ஸ்ரீமஹாஸ்வாமியை, தபோவனமூர்த்தியை தரிசிக்கின்ற பொழுதில், இவருக்கென ப்ரத்யேக ப்ரார்த்தனையை செய்யவுள்ளேன். கூட்டு ப்ரார்த்தனை சர்வ நிச்சயமாக நற்பலனைத் தரும்.

    பெரியவா கடாக்ஷம்.

  13. அவங்க செஞ்ச நல்ல கரியம்களே அவங்கள காப்பாற்றும். கர்ம வினைகளே கடவுல்லாம்.

  14. Definitely she will be alright. god bless her and her fly.
    also blessings to Lalithakumari and her fly.

    But special blessings to Prakashraj for neglecting the family. Because such people need blessings and wishes.

    shashikala

  15. அவர்கள் உடல் நலம் பெற நம் வணம்கும் தெய்வம் ஸ்ரீ மஹா பெரியவளை VANANGUVOM ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  16. நலமாக வந்து மீண்டும் பணி புரிவதை காண ஆவலாக இருக்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *