தற்போது 73 ஆம் அகவையில் இருக்கும் அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் சைவத்துக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் ஆற்றி வரும் சேவை அளப்பரியது. அன்னையின் சொந்த ஊர் சேலத்தில் உள்ள சூரமங்கலம். தந்தையார் பெயர் சுப்ரமணியம். தாயார் பெயர் நீலாம்பாள். இவர்கள் குடும்பமே பக்தி நெறியில் ஊறித் திளைத்த குடும்பம். சேலத்தில் உள்ள இவர்களது வீட்டில் பலமுறை திருப்புகழ் பாராயணம் நடந்துள்ளது. ‘திருப்புகழ்’ பாடுபவர்கள் என்பதால் இவர்களிடத்தே சைவ, வைணவ பேதம் கிடையாது. (திருப்புகழில் பல இடங்களில் முருகனை பெருமாளே என்று தான் அருணகிரிநாதர் குறிப்பிடுவார்.)
இவர் தாயார் நீலாம்பாள் 1956 லேயே ‘ஆழ்வார்களும் நாயன்மார்களும்’ என்கிற ஒப்புமை நூலை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
திருப்புகழில் ஊறித் திளைத்த குடும்பம் என்பதால் இவர்கள் திருப்புகழ் தொண்டு பற்றி கேள்விப்பட்டு வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் இவர்கள் வீட்டுக்கு ஒரு முறை வந்திருந்து திருப்புகழ் பாராயணத்தில் கலந்துகொண்டு இவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். அப்போது ஆறு வயது சிறுமியாக இருந்த அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் வள்ளிமலை ஸ்வாமிகள் மடியில் அமர்ந்து விளையாடும் பாக்கியத்தை பெற்றிருக்கிறார்.
“உங்கள் குழந்தைக்கு நல்ல குரல் வளமும் ஞானமும் இருக்கிறது. எதிர்காலத்தில் சிவத்தொண்டில் சிறந்து விளங்குவார். திருப்புகழ் மட்டுமின்றி தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளும் பாடும் ஆற்றலும் கற்பிக்கும் பேறும் இவருக்கு கைகூடும்.” என்று வாழ்த்திவிட்டு சென்றார். (வள்ளிமலை ஸ்வாமிகள் வாழ்ந்த காலம் : 1870 – 1950)
முருகனை நேரில் கண்ட மகானுபாவர் அல்லவா? அவரது வாக்கு பலித்துவிட… அதற்கு பிறகு இவருக்கு திருப்புகழ் பாடும் ஆற்றல் சரளமாக வரத் தொடங்கிவிட்டது.
உரிய வயது வந்ததும் கோவையை சேர்ந்த சோமசுந்தரம் என்கிற சிவநெறிச் செல்வருக்கு மணமுடித்து வைத்தனர். மனைவியை போன்றே அவரும் சிவத்தொண்டில் மிகச் சிறந்து விளங்கினார். தம்பதிகள் இருவரும் சேர்ந்து பக்தி மணம் பரப்பி வந்தனர்.
இவர்களது குருநாதராக விளங்கியவர் தொண்டைமண்டல ஆதீனம் காஞ்சிபுரம், ஞானப்ரகாச ஸ்வாமிகள் (229ம் பட்டம்) (முத்து சு) அவர்கள். ஸ்வாமிகளிடம் தீட்சை பெற்று, அதன் பின்னர் தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்யவும் கற்றுத் தரவும் ஆரம்பித்தனர்.
அப்போதெல்லாம் பெண்கள் தீட்சை பெறுவது சாதாரண காரியமல்ல. சமயப் பணிக்கு அவசியம் தீட்சை பெறவேண்டும். வண்டியை ஓட்ட நாம் லைசன்ஸ் பெறுவதை போல சைவ ஆகமப் பணிக்கு தீட்சை அவசியம். குருநாதரிடம் தீட்சை பெற்றது முதல் கடந்த 35 ஆண்டுகளாக ஞான பூஜை செய்து வருகிறார் அன்னை.
குருவருளால் பெற்ற ஞானத்தை பிறருக்கு அளிப்பது தான் தீட்சை. சைவத்தில் முன்னேற்றம் அடைய விரும்புவர்களுக்கு அம்மையார் தீட்சை செய்து வருகிறார்.
தனது தேவார, திருப்புகழ், திவ்யப்ரபந்த தொண்டுக்காக திருப்புகழ் செம்மணி, சைவ சித்தாந்த ஞானாம்பிகை, திருமுறைச் சுடர், திருமுறை தீபம், திருமுறைத் தமிழ் மணி, ஏழிசை வல்லபி, திவ்யப்ரபந்த மணி, சித்தாந்த செம்மல், பெரும்பாண நங்கை என்று அன்னை வாங்காத பட்டங்களே இல்லை.
அம்மையாரின் அருமை மைந்தன் திரு அரவிந்த் வெங்கடாசலம் B.COM., FCA, அவர்கள் சிந்தனை வழி சைவ சித்தாந்தம் என்பதற்காக சாத்திரங்களை ஊக்கத்துடன் சொல்லி வருகிறார்கள். மேலும் மெய்கண்டார் அறக்கட்டளை நிறுவி, உலக அளவில் மெய்கண்டாரை அறியச் செய்ய பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
மருமகள் நீலா வெங்கடாச்சலம். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவரான இவர் தன் பங்கிற்கு தானும் திருமுறைத் தொண்டை செய்து வருகிறார்.
பேத்தி கருணாசாகரி வேங்கடாச்சலம். இவர் கலாக்ஷேத்ராவில் நடனம் கற்ற ஒரு சிறந்த நாட்டிய தாரகை. இவர் உட்பட குடும்பமே தீட்சை பெற்றுவிட்டு சமயப்பணி ஆன்மீகப் பணி ஆற்றிவருகிறார்கள்.
அன்னையின் மூத்த சகோதரி சேலம் எஸ்.ஜெயலக்ஷ்மி ஆவர். இவர் இசையில் சிறந்தவர். அண்ணாமலை பல்கலைழகத்தில் இசைத்துறை பேராசியராக இருந்தவர். சிவபுராணம், திருவாசகம் உள்ளிட்ட பல சைவ ஆகமங்களை சி.டி. வடிவில் வெளியிட்டுள்ளார்.
அன்னை தனது பணிகளுக்காக ‘திருநெறிய தமிழ் மன்றம்’ என்கிற அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார். தேவாரத் திருமுறை மற்றும் திருப்புகழை மூலம் வாழ்வை மேம்படுத்தும் சமய உணர்வை தமிழிசை மூலம் ஊக்குவித்து, திறம்பட செயல் புரிய வழிகாட்டுவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.
தனது குருவின் அருளாணையின்படி பக்குவமுற்ற மாணவர்களுக்கு தீட்சை செய்தும், சைவ சித்தாந்த சாத்திர நூல்களுக்கு பாடம் சொல்லியும் (கடந்த 50 ஆண்டுகளாக) வருகிறார்கள். அவர்களின் முதன்மை மாணவி திருமதி கிருஷ்ணவேணி ராமச்சந்திரனும் வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.
”தோத்திரமும், சாத்திரமும் ஆனார் தாமே” என்ற அப்பர் பெருமானின் அருள் மொழிப்படி , சைவத்தின் இரு கண்கள் பன்னிரு திருமுறைகளும், 14 சாத்திரங்களும் ஆகும். இவைகளை ஓதுவதால் பக்தியும், ஞானமும் மிளிரும்.
மேலும் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்வதற்கு தோத்திர சாத்திர நூல்களை வெளியிடுவது திருநெறிய தமிழ் மன்றத்தின் ஞான வேள்வியாகும். இம்மன்றம் தொண்டைமண்டல ஆதீனம் 229 வது குரு மகா சந்நிதானம் சீலத்திரு ஞானப்ப்ரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எழுதிய உரை நூல்கள் பலவற்றை பதிப்பித்துள்ளது.
வெளி நாட்டவர்கள், தமிழ் அறிஞர்கள், இல்லத்தரசிகள், இளைய சமுதாயத்தினர் என பலரும் இவரிடம் பன்னிரு திருமுறை பயின்று வருகின்றனர். குறிப்பாக மங்கையர்களும், சிறுவர் சிறுமியரும் தமிழிசைப் பாடல்களைப் பயின்று வாழ்வில் மேன்மை பெற்று விளங்குகிறார்கள். அன்னையின் சேவை முற்றிலும் இலவசம் என்பதும் அவர் இதற்காக எவரிடமும் பொருளை பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தகது.
மன்ற அன்பர்களின் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் (திருமணம், மணிவிழா , புதுமனை புகுவிழா போன்றவை) சைவ தோத்திர நூல்களைத் தொகுத்து வெளியிட்டு, மாணவர்களையும் இந்த இறைப் பணியில் நெறிபடுத்தி வருகிறார்கள்.
அன்னை வெளியிட்டுள்ள சிறு தொகுப்பு நூல்கள் / உரை நூல்கள் சில…
– தாயுமானவர் பாடல்கள்
– ஐந்தாம் திருமுறைத் தொகுப்பு
– அநுபூதி – உரையுடன்
– உயிருண்ணிப்பத்து – திருவாசகம் – உரையுடன்
– கந்தர் அலங்காரத்தில் சில – உரையுடன் – கண்டப்பத்து – உரையுடன்
இது தவிர அனைவராலும் எளிதில் பின்பற்றக் கூடிய வகையில் உடன் பாடுவதற்கென்றே திருவாசகம் முழுவதும் இசை அமைக்கப்பட்டு MP3 சி.டி.யாக இவர் வெளியிட்டுள்ளார். உலகளவில் பல்லாயிரக்கணக்கான அன்பர்களும் அடியார்களும் பயன்படுத்தி இன்புறுகிறார்கள்.
சரி… அன்னையை நாம் சந்தித்த அந்த தருணத்தை பார்ப்போம்….!
சாதனையாளர் சந்திப்புக்காக சமீபத்தில் நாம் கோவை சென்றிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். கோவை பயணம் இறுதி செய்யப்பட்டவுடனேயே நம்மை தொடர்பு கொண்ட ஈரோடு ஞானப்பிரகாசம் தம்பதியினர் கோவையில் அவசியம் நாம் ஞானப்பிரகாசம் அவர்களின் குரு ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களை சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தேவார, திருப்புகழ் தொண்டாற்றி வருபவர்களை தேடித் தேடி கௌரவிப்பதை நம் தலையாய கடமையாக நாம் கொண்டுள்ளமையால் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம். மேலும் ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களின் பன்னிரு திருமுறைத் தொண்டை பற்றி நாம் ஏற்கனவே திரு.ஞானப்பிரகாசம் மூலம் அறிந்திருந்தமையால், அன்னையை சந்திக்கும் நமது ஆர்வம் பன்மடங்கானது.
எனவே கோவை பயணத்தில் அன்னையை நிச்சயம் சந்திப்பது என்றும் முடிவானது. திட்டமிட்டபடி கடந்த 14/09/2014 அன்று காலை நம் கோவை நண்பர்கள் சிலர் முன்னிலையில் கோவை ராம்நகரில் மகத்தான சாதனையாளர் இருவருடன் சந்திப்பு நடைபெற்றது. (பதிவு தயாராகிக்கொண்டுள்ளது. விரைவில் அளிக்கப்படும்! ?!)
காலை சாதனையாளர்களுடன் சந்திப்பு. மாலை ‘திருமுறைத் தமிழ்மணி’ அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களுடன் சந்திப்பு. கோவையில் வசிக்கும் நண்பர் விஜய் ஆனந்த் அன்று முழுதும் நம்முடன் இருந்தார். அன்னையுடனான சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார்.
அன்னையை சந்தித்ததை என்னவென்று சொல்ல? எப்படிச் சொல்ல…?
‘கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும்’ என்ற சொல்வதைப் போல, அந்த வீட்டின் ஒவ்வொரு அணுவும் ‘சிவ சிவ’ என்று கூறுவதைப் போல உணர்ந்தோம் நாங்கள். அப்படி ஒரு அதிர்வு. திருமுறைகளுக்கும் திருப்புகழுக்கும் என்றே தன்னை அற்பணித்துக் கொண்டவர் அல்லவா அன்னை.
அன்னையை சந்திக்க வந்திருக்கும் விபரத்தை சொன்னவுடன், வரவேற்பறையில் உட்காரச் சொன்னார்கள். சற்று நேரத்திற்க்கெல்லாம் அன்னை வர, எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றோம்.
பரஸ்பர நலம் விசாரித்துவிட்டு நாம் வாங்கிச் சென்ற பழங்களை அன்னையிடம் அளித்தோம்.
“உள்ளே வாங்க!” என்று அழைத்துச் சென்றார்கள்.
அப்பப்பா…. அப்போது தான் பார்க்கிறோம். உள்ளே ஹாலில் நுழைந்தவுடனே சிவகாம சுந்தரி அம்மையுடன் எழுந்தருளியுள்ள ஆளுயர நடராஜர் சிலை நம்மை வரவேற்கிறது. ஆடல் வல்லானை பார்த்ததும் மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி. இனம் புரியாத ஒரு பரவசம். கண்கள் கசிந்துருகியது. அது வீடல்ல.. எங்கள் சபாபதியும் சிவகாமசுந்தரியும் எழுந்தருளியுள்ள கோவில்… என்றே சொல்லலாம்.
அந்த அறையை சுற்றி பார்வையை சுழலவிட்டோம். வீட்டின் ஒரு பக்கம் வள்ளிமலை ஸ்வாமிகள் பரிசளித்த முருகனின் திருவுருவப்படமும், திருமுறை தந்த நால்வரும், திருப்புகழின் பெருமையை பாடிய வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளும் நம்மை வரவேற்கிறார்கள்.
இது தவிர, கோவிலே பூஜையறையாக இவர்கள் வீட்டில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. அந்த காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலையும், பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
அகவை 73 ஐ தொட்டுவிட்ட நிலையில் இன்றும் வாரத்தில் நான்கு நாட்கள் அன்னை இலவசமாக திருமுறையும் திருப்புகழும் சொல்லித் தருகிறார். திருவாசக முற்றோதலும் அவ்வப்போது நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1 அன்று மாலை 4 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுமாம். (இந்த வருடம் நமக்கு ஜனவரி 1 அன்னையுடன் தான்!)
“அம்மா… உங்களை கொஞ்சம் கௌரவிக்க விரும்புகிறோம். இந்த எளியோர்களின் மரியாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும்…” தயங்கி தயங்கி போனாடையை கையில் எடுத்தோம்.
நினைத்தது போலவே… “இதெல்லாம் எதுக்குப்பா?” என்றார்கள்.
“அம்மா.. தேவார, திருப்புகழ் தொண்டு செய்பவர்களை கௌரவிப்பதை என் தலையாய கடமையாக கொண்டுள்ளேன். தயை கூர்ந்து எங்கள் இந்த எளிய மரியாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும்!”
அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் நமது சந்தோஷத்திற்காக அன்னை அதற்கு ஒப்புக்கொண்டார்கள். அன்னைக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தோம்.
பின்னர் நமது தளத்தின் சார்பாக நமது ‘தினசரி பிரார்த்தனை’ படத்தை பரிசளித்தோம். அன்னை அதை பெற்று நடராஜரின் பாதத்தில் வைத்தார்கள்.
பிறகு அன்னை நமக்கும் நம்முடன் வந்திருந்த நம் நண்பருக்கும் ‘அமுத சாகரம்’ என்னும் நூலை பரிசளித்தார்கள். இது தவிர, பல்வேறு தேவார திருமுறை நூல்களும் திருப்புகழ் நூல்களும் நமக்கு பரிசளித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்.
அடியேன் ஜாதகத்தை அன்னையிடம் கொடுத்து “உங்கள் வாழ்த்தை, திருவாக்காக எனது ஜாதக கட்டங்கள் மேல் எழுதித் தாருங்கள்” என்று அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
‘சிவநெறித் தொண்டு சிறக்க நீடூழி இனிது வாழ்க’ என்று நம் ஜாதக கட்டங்கள் மேல் எழுதி கையெழுத்திட்டுத் தந்தார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்? இனி எந்த கிரகம் என்ன செய்ய முடியும்?
“இங்கே வந்துவிட்டு சென்றவர்கள் பலருக்கு பல நல்லது நடந்திருக்கு” என்றார்கள்.
“எப்படியம்மா உங்களுக்கு சைவ இலக்கியங்கள் மேல் இந்த ஆர்வம் வந்தது?” நமது சந்தேகத்தை கேட்டோம்.
“எனக்கென்ன தெரியும்? அதெல்லாம் அவன் பண்ண கூத்து…!” என்று அவர் கையை நீட்டுகிறார். கையை நீட்டிய இடத்தில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தான்.
“பொதுவாக உங்கள் அளவு தேவார திருமுறை திருப்புகழ் கற்றவர்கள் சைவத்தின் மீது தான் பிடிப்பாக இருப்பார்கள். ஆனால், உங்களுக்கு எப்படி நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் மீதும் பற்று ஏற்பட்டது?”
“என் அம்மா தான் அதற்கு காரணம். சிவமும் வைணவமும் நம் நாட்டின் இரு கண்கள். இவற்றால் தமிழ் இலக்கியம் உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களான நாலாயிர திவ்ய பிரபந்தமும், பன்னிரு திருமுறைகளும் பெற்றிருக்கின்றது. திருமுறைகளும் திருப்பாசுர்கங்களும் எவ்வாறு ஒத்திருக்கின்றன என்பதை 1956 லேயே ‘ஆழ்வார்களும் நாயன்மார்களும்’ என்கிற நூலில் அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். அதை பாடலாக பாடிக்காட்டினால் நன்றாக இருக்கும் என்று கணவரும் அவர் தந்தை ராமசாமி முதலியாரும் யோசனை கூற, 1977 இல் சென்னை தமிழிசை சங்கத்தில் அண்ணாமலை மன்றத்தில் ‘பண்ணில் இசைந்த பதிகங்களும் பாசுரங்களும்’ என்கிற தலைப்பில் ஒத்த கருத்துடைய பாசுரங்ளையும் பதிகங்களையும் நானும் என் அருமை சிஷ்யை ராமச்சந்திரனும் பாடினோம். சைவ, வைணவ அடியார்கள் குழுமியிருந்து குதூகலத்துடன் கேட்டார்கள்!”
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
– திருநாவுக்கரசர்
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.
– திருமங்கையாழ்வார்
“சைவர்கள் பரம்பொருளை சிவனாக கண்டார்கள். வைணவர்கள் விஷ்ணுவாக கண்டார்கள். இரண்டும் பொருளால் ஒன்றே என்பதை அவர்கள் திருவாய்மொழியினாலேயே நாம் உணரலாம்.”
“இறைவனை உள்ளவாறு அனுபவிக்க, பதிகங்களும் பாசுரங்களும் நமக்கு கிடைத்த அருநிதியங்கள். அவற்றை வாயார பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் நமக்கு நிகர் யார்?”
“அவ்வப்போது நான் திவ்ய பிரபந்தங்களை படிக்கும்போதெல்லாம் அதற்கு ஒப்பாக உள்ள திருமுறைகளை குறித்துக்கொண்டே வந்தேன். பின்னர் அதையே ‘திவ்ய பிரபந்த திர்முறை மலர்’ என்னும் நூலாக வெளியிட்டேன். அதற்கு நல்ல வேரவேற்பு கிடைத்தது.”
சைவ வைணவ பேதத்தை அறுத்து, இரண்டிலும் உள்ள மகத்துவத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் அன்னையின் பணிக்கு இந்த உலகில் ஈடு இணை உண்டோ?
நமக்கெல்லாம் ஒரு வருடமானது கைலாயத்தில் ஒரு நொடியாம். அதுபோல, அன்னையுடன் இருந்தபோது நேரம் போனதே தெரியவில்லை. விடைபெறும் நேரம் வந்தது.
நாம் சென்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்று வகுப்புக்கள் இல்லை. எனவே அன்னை வகுப்புக்கள் எடுப்பதை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. நம்முடன் வந்திருந்த நண்பர் விஜய் ஆனந்த் அவர்களிடம் மற்றோருமை வந்து உரிய அனுமதி பெற்று வகுப்பு நடைபெறும் நாளில், புகைப்படம் எடுத்து அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டோம். சொன்னதை போலவே நண்பர் ஒரு நாள் சென்றிருந்து அன்னை திருமுறை சொல்லிக் கொடுப்பதை புகைப்படங்கள் எடுத்து அனுப்பினார்.
புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது திங்கட்கிழமை தோறும் நடைபெறும் தேவார திருமுறை வகுப்பு. வெள்ளியன்று நடைபெறும் திருப்புகழ் இசை வகுப்புக்கும் சனியன்று நடைபெறும் சிறுவர் இசை வகுப்புக்கும் சிறுவரும் சிறுமியரும் அதிகம் வருகை தருவர்.
அன்னையின் சீரிய பணியால் தேவாரத் திருமுறை விளக்கு சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து.
அந்த வீட்டை விட்டு வெளியே வர மனமே இல்லை நமக்கு. பேசாமல் அன்னை வீட்டிலேயே ஏதேனும் எடுபிடி வேலை செய்து அங்கேயே உட்கார்ந்துவிடலாமா என்று கூட தோன்றியது. சந்திப்பு நிறைவுபெற்று அந்த இடத்தை விட்டு வெளியே வர மனமின்றி வந்தோம்.
சென்னைக்கு பேருந்தில் ஏறியதும் முதலில் ஞானப் பிரகாசம் & தமிழ்செல்வி தம்பதிகளுக்கு ஃபோன் செய்து நமது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு நன்றி சொன்னோம். “நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி சார். அம்மாவை உடனே பார்த்துட்டீங்க… நாங்க போன வருஷம் மூணு தடவை போனோம். மூன்று முறையும் பார்க்க முடியலே.” என்றார். நீங்களாவது பார்த்து நாலு வார்த்தை பேசினீங்க… நான் முதல்முறை அவங்களை பார்த்தப்போ எனக்கு பேச்சே வரலே… கண்கள் பனிக்க அப்படியே நின்றுகொண்டிருந்தேன்” என்றார் தமிழ்செல்வி.
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!
என்ற பாடல் சிவனுக்கு மட்டுமல்ல அவனது மெய்யன்பர்களுக்கும் பொருந்தும் போல!
முகவரி :
திருநெறிய தமிழ் மன்றம்
507 குருவருள்
DB ரோடு, ஆர்.எஸ். புரம் ,
கோவை – 641 002.
=================================================================
திருமதி.தமிழ்செல்வி ஞானப்ப்ரகாசம் கூறுகிறார்…
“அம்மாவின் அருட்பணிகளுக்கு அளவில்லை. திருநங்கை ‘நர்த்தகி’ அவர்களைப்பற்றி அறிந்திருப்பீர்கள் அவர்களுக்கும் அம்மா திருமுறை கற்று கொடுத்திருக்கிறார். 15.2.2012 அன்று தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தில், அம்மாவின் 70 அகவை நிறைவு விழாவில் அம்மா திருமுறைகளைப் பாட நர்த்தகி அவர்கள் நடனம் புரிந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.”
“இசைக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த பார்வையற்ற என் கணவருக்கு நேர்காணல் செய்ய அம்மா சென்றிருந்தார், அங்கு அவர் பாடியதைக் கேட்ட அவர், வீட்டிற்கு வரச்செய்து திருமுறைகளைக் கற்றுக் கொடுத்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து, மூன்றாண்டுகளை முடித்தவுடன், வேலை கிடைக்கும் வரை ஓராண்டுகள் வாடகைக்கு அறை எடுத்துக் கொடுத்து தங்க வைத்து, தங்களது வீட்டிலேயே உணவிற்கும் ஏற்பாடுகள் செய்தார். பாடங்களையும், பாடல்களையும் பார்த்து மணனம் செய்ய முடியாது என்பதால் ரேடியோவுடன் இணந்த டேப் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தார். தனியாக அறையில் தங்கியிருந்த பொழுது அவருக்கு அம்மை கண்டுவிட்டது, அப்பொழுது மின்விசிறி வாங்கி கொடுத்திருக்கிறார். எங்கு சென்றாலும் இவரையும் கூட அழைத்துக் சென்றார். இலங்கைக்கு கூட அழைத்து சென்றார். ஏழு வயதிலிருந்து இசை கற்றிருந்தாலும், இன்று எங்களை வாழ வைப்பது அம்மாவிடம் கற்று கொண்ட திருமுறைகள் தான். முதலில் தேவாரம் ஆசிரியராக இவருக்கு பணி கிடைத்தபொழுது, மிகவும் தயங்கினார். ஆனால் அம்மா கிடைத்த வேலையை ஏற்றுக்கொள், தெரியாத பாடல்களை நான் சொல்லித்தருகிறேன் என்று கொடுத்த ஊக்கம் தான் எங்களுக்கு சோறு போடுகிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.”
=================================================================
இந்த பதிவின் முதல் பாகத்தை படிக்க தவறாதீர்கள் : உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
=================================================================
Also check :
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!
‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!
=================================================================
[END]
திருமதி ஸ்வர்ணா சோமசுந்தரத்தைப் பற்றி படிக்க படிக்க பிரமிப்பாக உள்ளது . அவர்களைப் பார்த்தல் அபிராமி அம்மையை பார்த்த உணர்வு உள்ளது. குடும்பமே ஆன்மிக குடும்பமாக இருப்பதாய் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. நாமும் அவர்களிடம் திருமுறை கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்காத என நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் ஒரு சேர பரப்புகிறார்கள் . அவர்களது வீடே கோயிலாக உள்ளது. நாங்களும் அவர்களிடம் ஆசி வாங்க விருப்பம் . தங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் அவர்களிடம் சென்று ஆசி வாங்கியதில் . இனிமேல் நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கும்
மிகவும் அழகிய மனதை தொட்ட பதிவு
நன்றி
உமா
அன்னையின் அரும்தொண்டிற்கு வணக்கங்கள்.
நீங்கள் கொடுத்து வைத்தவர். பதிவிற்கு நன்றி.
ஓம் நம சிவாய
“நற்றுணை யாவது நமச்சி வாயவே”. “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”….. அந்த ஆடல் வள்ளாரின் அருள் பெற்ற அன்னையின் சைவ, வைணவ அற நெறித்தொண்டு அறிய, பாக்கியம் பெற்றவர்களாகக் கருதுகிறோம்…வாழ்க..வளர்க..அன்னையின் தொண்டு…நமச்சிவாயம் உங்களோடு நெடுநாள் துணைவர வணங்குகிறோம்….
கட்டுரையை படித்து முடித்ததும் அன்னையிடம் நேரில் ஆசி பெற்ற உணர்வு. ஆத்மார்த்தமான பதிவுக்கு மிக்க நன்றி சுந்தர்.
வணக்கம்…….
அம்மாவுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்……….அவரை நேரில் காணவும், திருமுறைகளை கற்று கொள்ளவும் விழைகிறோம்………
அவரது உள்ளம், இல்லம் இரண்டுமே கோவிலாய் மிளிர்கிறது…….அவரது திருமுறை வகுப்பைக் காணும்போது நாமும் சென்று அமர்ந்து கொள்ள விரும்புகிறோம்……..ஆடல் வல்லான் திருவுளம் கொண்டால் திருமுறைகளைக் கற்கும் பாக்கியம் நமக்கும் கிடைக்கும்…………..
அம்மாவின் அருட்பணிகளுக்கு அளவில்லை.
திருநங்கை ”நர்த்தகி” அவர்களைப்பற்றி அறிந்திருப்பீர்கள் அவர்களுக்கும் அம்மா திருமுறை கற்று கொடுத்திருக்கிறார். 15.2.2012 அன்று தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தில், அம்மாவின் 70 அகவை நிறைவு விழாவில் அம்மா திருமுறைகளைப் பாட நர்த்தகி அவர்கள் நடனம் புரிந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இசைக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த என் கணவருக்கு நேர்காணல் செய்ய அம்மா சென்றிருந்தார், அங்கு அவர் பாடியதைக் கேட்ட அவர், வீட்டிற்கு வரச்செய்து திருமுறைகளைக் கற்றுக் கொடுத்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து, மூன்றாண்டுகளை முடித்தவுடன், வேலை கிடைக்கும் வரை ஓராண்டுகள் வாடகைக்கு அறை எடுத்துக் கொடுத்து தங்க வைத்து, தங்களது வீட்டிலேயே உணவிற்கும் ஏற்பாடுகள் செய்தார். பாடங்களையும், பாடல்களையும் பார்த்து மணனம் செய்ய முடியாது என்பதால் ரேடியோவுடன் இணந்த டேப் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தார். தனியாக அறையில் தங்கியிருந்த பொழுது அவருக்கு அம்மை கண்டுவிட்டது, அப்பொழுது மின்விசிறி வாங்கி கொடுத்திருக்கிறார். எங்கு சென்றாலும் இவரையும் கூட அழைத்துக் சென்றார். இலங்கைக்கு கூட அழைத்து சென்றார். ஏழு வயதிலிருந்து இசை கற்றிருந்தாலும், இன்று எங்களை வாழ வைப்பது அம்மாவிடம் கற்று கொண்ட திருமுறைகள் தான். முதலில் தேவாரம் ஆசிரியராக இவருக்கு பணி கிடைத்தபொழுது, மிகவும் தயங்கினார். ஆனால் அம்மா கிடைத்த வேலையை ஏற்றுக்கொள், தெரியாத பாடல்களை நான் சொல்லித்தருகிறேன் என்று கொடுத்த ஊக்கம் தான் எங்களுக்கு சோறு போடுகிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.
அன்னையின் சேவைகளிலேயே இது தான் சிகரம் போன்றது. உங்கள் பின்னூட்டத்தை பதிவிலேயே சேர்த்துவிட்டேன். உண்மையில் இப்படிப்பட்டவரை சந்திக்க நேர்ந்ததே நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் தான். அவரை பற்றிய பதிவை படித்தது, நம் வாசகர்கள் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான்.
– சுந்தர்
திருமதி தமிழ் செல்வி ஞானப்ரகாசம் அன்னையை பற்றி கூறியவற்றை படிக்கும் பொழுது மெய் சிலிர்த்து விட்டேன். திரு ஞானப்ரகாசம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் அன்னையிடம் திருமுறை கற்றுக் கொண்டு இன்று ஒரு உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு தன்னிடம் கற்று கொள்ளும் மாணவ மணிகளுக்கும் திருமுறை கற்றுக் கொடுத்து அன்னை வழியில் தனது பணியை மேற்கொள்கிறார்/ . திருமதி தமிழ் செல்வியின் பின்னூட்டம் இந்த பதிவிற்கு ஒரு மகுடம் சேர்தாற்போல் உள்ளது. நம் தளம் மூலம் அவர்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்
நன்றி
உமா
சார்,
பகவான் உங்களுக்கு கொடுத்த வரபிரசாதம். தங்கள் பனி மேலும் சிறக்க இறைவனை பிரார்திக்றேன்.
“இது தவிர அனைவராலும் எளிதில் பின்பற்றக் கூடிய வகையில் உடன் பாடுவதற்கென்றே திருவாசகம் முழுவதும் இசை அமைக்கப்பட்டு MP3 சி.டி.யாக இவர் வெளியிட்டுள்ளார்.”
இந்த CD கிடைக்க ஹெல்ப் செய்யுங்கள்.
நன்றி
லோஹாபிராமன்.
சுந்தர் அண்ணா-விற்கு முதலில் எனது நன்றிகள்…..அன்றைய நாளை மிகவும் உபயோகமான, ஆக்கப்பூர்வமான நாளாக அன்று நாம் சந்தித்தவர்கள் மாற்றிவிட்டார்கள்…..குறிப்பாக அம்மா அவர்களின் சந்திப்பு. அன்றைய தின சோர்வுகள் அனைத்தும் அம்மாவின் வீட்டுக்குள் நுழைந்ததும் பறந்து விட்டது…அப்படி ஒரு வைப்ரேசன் வீடு முழுவதும் பரவி இருந்ததை உணர முடிந்தது. அதுவும் நடுநாயகமாக நடராசர் சிலை….பார்ப்பவர் மனது பக்தியில் கரைந்து விடுவது உறுதி. அம்மா அவர்களின் கனிவான பேச்சு நம்மை கவர்ந்தது. அங்கிருந்து கிளம்ப மனதே இல்லை…
—
இரண்டாவது முறையும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி..அன்று தான் நான் முதல் முறையாக திருமுறைகளை கேட்கிறேன். தெய்வீக அனுபவம் அது. நெகிழ்வாக இருந்தது..என்னையும் அறியாமல் மனது அவர்களுடன் ஒன்றி விட்டது…அனைத்தையும் புகைப்படம் எடுத்துவிட்டு, உடனே கிளம்ப மனம் இல்லாமல், வகுப்புகள் முடியும் வரை நடராசரின் கீழ் அமர்ந்து அனைத்தையும் கேட்டு அனுபவித்து விட்டுத் தான் கிளம்பினேன். அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை…..கோடி நன்றிகள்…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
உலகம் இன்னமும் அழியாமல் இருந்து கொண்டிருப்பதற்கு இவர்களை போன்ற உன்னதனமான ஆத்மாக்களால் தான்.
திருமதி. ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களை பார்க்கும் பொழுது காரைக்கால் அம்மையாரை பார்த்ததை போன்ற ஒரு உணர்வு எனக்குள் வருகிறது.
இதைப்போன்று சென்னையில் யாரேனும் இருந்தால் நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மிகவும் அருமையான சம்பவங்கள்
இதை எல்லாருடனும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி
தோண்ட தோண்ட புதையல் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.. அது போல rightmantra வினை தோண்ட தோண்ட..கிடைப்பதும் புதையல் தான்..அனைத்தும் ஆன்மிக பொக்கிஷங்கள்.
அன்னையின் தாள் பணிகின்றேன். பதிவின் பின்புலமான அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பற்பல.
மன்றத்தின் தொடர்பு எண் கொடுத்தல் கம்பச்ட் டிஸ்க் பெற உதவியாக இருக்கும்’
Will give sir. Please watch this same space again after a few dadys. thanks. * Noted your other request. Will take care. thanks.