Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > கேட்கும் விதத்தில் கேட்டால் கேட்பது கிடைக்கும் — Rightmantra Prayer Club

கேட்கும் விதத்தில் கேட்டால் கேட்பது கிடைக்கும் — Rightmantra Prayer Club

print
டந்த காலங்களில் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறாமல் போனது குறித்து நீங்கள் ஏமாற்றமடையலாம். ஆனால், நம்பிக்கை இழக்கவேண்டாம். நாம் கூறுவதை காதில் வாங்காமல் கடவுள் எந்நாளும் இருப்பதில்லை. ஆனால் நாம் தான் அவன் இருக்கும் திசையை மறந்துவிட்டு வேறு திசையில் திரும்பி நிற்கிறோம்.

அன்பே வடிவானவர் கடவுள். நீங்கள் தியானம் செய்ய பழகிக்கொண்டால், சுலபமாக கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் . அதன் பின்னர் நமது கோரிக்கைகள் யாவும் ஒவ்வொன்றாக நிறைவேறுவதை கண்கூடாக காண்பீர்கள்.

திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் கோபுரம்

எப்படி எங்கு பிரார்த்தனை செய்வது என்பதிலயே நமது பிரார்த்தனையின் வெற்றியும் அடங்கியிருக்கிறது. பிரபஞ்ஜத்தில் அனைத்துக்கும் விதிகள் இருக்கின்றன. அந்த விதிகள் தான் அதன் இயக்கத்தை தீர்மானிக்கின்றன. பிரார்த்தனைக்கும் விதிகள் உண்டு.

முதல் விதி : நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே இறைவனை அணுகவேண்டும்.

இரண்டாம் விதி : ஒரு பிச்சைக்காரன் யாசகம் கேட்பதை போல இறைவனிடம் கேட்கக்கூடாது. ஒரு மகன் / மகள் தன் தந்தையிடம் கேட்பதை போல  கேட்கவேண்டும்.

இறைவனிடம் தொடர்ந்து நீங்கள் பிரார்த்தனையில் ஈடுபடும்போது, ஒரு நெருக்கத்தை உணரத் தொடங்குவீர்கள். அப்படி உணர்ந்தால் இறைவன் உங்கள் அலைவரிசையில் வந்துவிட்டான் என்று அர்த்தம்.

பிறகு இறைவனிடம், “இறைவா… இது தான் எனது கோரிக்கை. அதற்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். என்னை நீ தான் இதற்கு வழிநடத்தவேண்டும். எனது எண்ணங்கள் உயர்ந்தவையாகவும் சிறந்ததாகவும் இருக்குமாறு என்னை பார்த்துக்கொள்ளவேண்டும். விடாமுயற்சியுடன் நம்பிக்கையோடு எனது பிரார்த்தனைக்காக நான் உழைப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்!” என்று வேண்டிக்கொள்ளவேண்டும்.

இறைவனிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்யவேண்டும். உதடுகள் மட்டுமல்லாது உள்ளமும் பேசவேண்டும். கடவுளிடம் நீங்கள் பிச்சைக்காரன் போல யாசகம் கேட்டாலும் அவன் கோபித்துகொள்ளப்போவதில்லை. ஆனால் அது தேவையற்றது. அதை அவன் விரும்புவதில்லை. ஏனெனில், அப்படி கேட்கும்போது நமது முயற்சிகள் ஒரு வரையறைக்குள் முடங்கிவிடுகிறது. நமது மனவுறுதி என்பது இந்த பிரபஞ்சம் நமக்கு அளித்திருக்கும் வரம். அதை பயன்படுத்திக்கொள்வது நமது பிறப்புரிமை. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிரபஞ்சம் அளித்திருக்கும் இந்த வரத்தை சக்தியை பற்றி அறியாமலே நம்மிடம் வந்து கேட்கிறார்களே என்று தான் இறைவன் கவலைப்படுகிறான்.

பிரார்த்தனை என்பது இறைவனிடம் பிச்சை கேட்பது என்று சில நினைக்கின்றனர். நாம் கடவுளின் குழந்தைகள். பிச்சைகாரர்கள் அல்ல. அவனிடம் கேட்டுப் பெற நமக்கு முழு உரிமை உண்டு. நமது ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை நாம் ஒழுங்கபடுத்திவிட்டோமானால் நிச்சயம் கேட்பது கிடைக்கும்.

கொடுக்கும் நபர் ஒரு திசையில் இருக்க கேட்கும் நபர் வேறு ஒரு திசையில் நின்று கேட்டால் கேட்பது எப்படி கிடைக்கும்? இறைவனிடம் நாம் பல முறை இப்படித் தான் நடந்துகொள்கிறோம். (டி.வி. ஒரு பக்கம் இருக்க, ரிமோட்டை வேற பக்கம் காமிச்சு அழுத்தினா எப்படியோ அது போல!)

(மேலே கூறியவற்றை ஒரு பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள கருத்துக்களை அடிக்கடி படித்து மனதில் பதியவைத்துவிடுங்கள்!)

===================================================================

DSC06086

முக்கிய அறிவிப்பு :

தவிர்க்க இயலாத காரணங்களினால் வரும் ஞாயிறு செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவிருந்த புதுவை குரும்பபேட் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன உழவாரப்பணி மீண்டும் தள்ளிப்போயுள்ளது. குடும்பத்துடன் மேற்படி உழவாரப்பணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள பல வாசகர்கள் மஹாளயத்தை முன்னிட்டு வர இயலாத சூழலில் உள்ளதால், வேறு ஒரு தேதியில் வைக்கும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். பலரிடமிருந்து இந்த கோரிக்கை வந்துள்ளபடியால், மேற்படி உழவாரப்பணி ஒத்திவைக்கப்படுகிறது.

பிருந்தாவன தரப்பில் நேற்று மாலை நிகழ்ச்சியை இறுதி செய்ய பேசும்போது அவர்களும் மஹாளயம் முடிந்த பிறகு வருவதே உசிதம் என்று கருத்து தெரிவித்துள்ளபடியால், இதை ராயரின் உத்தரவாகவே ஏற்று ஒத்தி வைத்துள்ளோம். இது போன்ற உழவாரப்பணி ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணியில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு வாசகர்கள் சற்று பொருத்தருளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உரிய நேரத்தில் மேற்படி குரும்பபேட் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவன உழவாரப்பணி + தரிசனம் நடைபெறும். இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படும்.

நடந்தவை அனைத்தும் நன்மைக்கே. நடக்காதவை இன்னும் நன்மைக்கே!

நன்றி!!

– சுந்தர்,
ஆசிரியர்,
www.rightmantra.com
E: simplesundar@gmail.com | M : 9840169215

===================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சாலையை பராமரித்து வரும் திருவேங்கடம் அவர்கள்.

DSC06553

திருவேங்கடம் அவர்களை சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் மேற்படி கோ-சாலையில் பார்த்தபோது, பரபரப்பாக வேலை  செய்துகொண்டிருந்தார். பசுக்களுக்கு தீவனம் வைப்பது, சாணத்தை அப்புறப்படுத்தி கோ-சாலையை கழுவி தரை துடைப்பது, பசுக்களை குளிப்பாட்டுவது என்று பாலாஜிக்கு ஒத்தாசையாக பல பணிகளை செய்துகொண்டிருந்தார்.

DSC06549

விசாரித்ததில், திருவேங்கடம் +2 வரை படித்து ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றுவது  தெரிந்தது. வேலை நேரம் போக, பகுதி நேரமாக இந்த கோ-சாலையில் சேவை செய்துவருகிறார். இதற்காக இவருக்கு வருமானமெல்லாம் கிடையாது. ஒரு ஆர்வத்தின் காரணமாகவே இந்த தொண்டை செய்து வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த கோ-சாலையில் சேவை செய்து வருகிறார்.

இது தவிர, கடந்த 11 ஆண்டுகளாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் திருவண்ணமலையில் கிரிவலம் சென்று வருகிறார். 11 ஆண்டுகளாக….!!

இவரது தொண்டுக்கு இவரது மனைவி குறுக்கே நிற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம் பாஞ்சாலி பசு தேவகி என்ற கன்றை ஈன்றதையோட்டி இவரை கௌரவித்தபோது, இந்த வார பிரார்த்தனைக்கு நீங்கள் தான் தலைமை ஏற்கவேண்டும் அதுவும் கோ-சாலையிலேயே அந்நேரம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு நம் நன்றி.

===================================================================

முதலில் ஒரு நல்ல செய்தி….!

நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்திருந்த நண்பர் ஒருவரது பிரார்த்தனை நிறைவேறியிருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் விஜய் ஆனந்த், தனது  மனைவிக்கு கரு நிற்காமல் தொடர்ந்து கலைந்து வருவதாகவும், அவருக்கு நல்ல முறையில் கரு தங்கி ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். (அவர் மனைவி ஒரு மருத்துவர்). சென்ற வாரம் ஒரு அழகான ஆண் குழந்தை அவருக்கு பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம்.

இந்த தகவலை நமது அலைபேசிக்கு அவர் தொடர்பு கொண்டு சொன்னபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இறைவனுக்கு  நன்றி. அந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருந்த நண்பர் முல்லைவனம் அவர்களுக்கும் நம் நன்றி.

(அந்த பதிவின் தலைப்பு என்ன தெரியுமா? வாருங்கள் விதியை வலிமை இழக்கச் செய்வோம்….! Rightmantra Prayer Club)

இன்னும் சிலரது கோரிக்கைகள் நிறைவேறியிருக்கின்றன. உரிய நேரத்தில் அவற்றை பற்றிய தகவல்களை தெரிவிக்கிறோம்.

===================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் கோரிக்கையை அனுப்பியிருப்பவர், நமது பிரார்த்தனை கிளப்பில் சில மாதங்களுக்கு முன்பு பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்த வாசகர் சண்முகநாதன் அவர்களின் நண்பர் ஆவார். நண்பரின் பிரச்னை பற்றி கேள்விப்பட்டு நமது பிரார்த்தனை  கிளப் பற்றி எடுத்துக்கூறி நம்மை தொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார். மேலே நாம் கூறியிருக்கும் தூத்துக்குடி நண்பர் விஜய் ஆனந்துக்கு ஏற்பட்ட அதே பிரச்னை தான் இவருக்கும் ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு கரு தங்கவில்லை. எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனில்லை. நம்பிக்கையுடன் இங்கு கோரிக்கை சமர்பித்திருக்கிறார். நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்புவோமாக.

அடுத்த கோரிக்கையை சமர்பித்தவர் நண்பர் ஜெகன். இவரது கோரிக்கை மேற்படி தூத்துக்குடி நண்பர் விஜய் ஆனந்த் அவர்களின் கோரிக்கை சமர்பிக்கப்பட்ட அதே பதிவிலேயே இடம்பெற்றது. சமீபத்தில் ஒரு நாள் நம்மை அவர் தொடர்புகொண்டு பேசியபோது நமது தளத்தில் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டதிலிருந்து நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும், தாம் நினைத்துக் கூட பார்க்காத இரு பணிகள் வெகு சுலபமாக நடந்தேறியது என்றும் கூறினார். சற்று தாமதமானாலும் அது விரைவில் நிறைவேறும் என்று நம்புவதாகவும், மீண்டும் அந்த கோரிக்கையை நமது பிரார்த்தனை கிளப்பில் வைத்து பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டுகொண்டார்.

===================================================================

கரு நிற்கவேண்டும்; குழந்தை பிறக்கவேண்டும் !

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்.

என் பெயர் ஆர்.குருமூர்த்தி. இதற்கு முன்பு இங்கு பிரார்த்தனை சமர்பித்திருந்த நண்பர் சண்முகநாதன் அவர்கள் மூலம் இந்த தளத்தை பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் தெரிந்துகொண்டேன். பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டது முதல் தனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுவருவதாக நண்பர்  கூறியதும், எனக்கும் எனது கோரிக்கையை இங்கு அளிக்கவேண்டும் என்று தோன்றியது.

எனக்கு திருமணமாகி எட்டு வருடங்களாகிறது. என் மனைவி பெயர் வத்சலா. இது வரை அவளுக்கு கரு தங்கவேயில்லை. இரண்டு மூன்று முறை அபார்ஷன் ஆகிவிட்டது. இதனால் ஒரு வித விரக்தியான மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அவளுக்கு நல்ல முறையில் கரு தங்கி ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும்.

எனக்கு பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார பிரச்னைகள் முடிவுக்கு  வரவேண்டும். என் வேலை தொடர்பாக  நான் எடுக்கும் புது முயற்சிகள் வெற்றி பெறவேண்டும்.

இதுவே எனது கோரிக்கை ஆகும். எங்களுக்காக அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

ஆர்.குருமூர்த்தி – வத்சலா,
திருப்பூர்.

===================================================================

வேலை கிடைக்க வேண்டும்… கடன் தீரவேண்டும்!

நண்பர்களே,

என் பெயர்  ஜெகன். துபாயில் மின் பொறியாளராக பணியாற்றிவிட்டு சில வருடங்களுக்கு முன்னர் தான் தமிழகம் திரும்பினேன். இங்கு வந்ததும் திருமணமாகி இறைவன் ஆசியில் ஒரு குழந்தை உண்டு. திருமணத்திற்கு சுந்தர் அவர்கள் கூட வந்திருந்தார்.

தற்போது குடும்பத்துடன் மீண்டும் வெளிநாடு சென்று வேலை செய்ய முடிவுசெய்திருக்கிறேன். என் குடும்ப சூழ்நிலைக்கு நான் வெளிநாடு சென்று வேலை செய்து பொருளீட்டினால் தான் எனக்கிருக்கும் பல்வேறு கடன்களை அடைக்க முடியும்.

எனவே அதற்காக முயற்சித்து வருகிறேன். என் முயற்சிகள் வெற்றியடைந்து நல்லதொரு வேலை கிடைக்க பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு சென்ற முறை பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்ததிலிருந்து நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இறைவனிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் எனும்போது நமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி திரும்பவும் இறைவனிடம் முறையிடுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

– ஜெகன்,
திருவொற்றியூர்.

===================================================================

பொது பிரார்த்தனை

இந்த வார பொது பிரார்த்தனைக்கு முதலில் நம் வைத்திருந்த கோரிக்கை வேறு. தற்போது இடம்பெற்றிருப்பது வேறு. அனைத்தும் தயார் செய்து வைத்திருந்த நேரத்தில் நண்பர் பாபாராம், பிரசவத்தின் போது கால்கள் உடைந்து போன ஒரு குழந்தை பற்றி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி, முடிந்தால் இந்த வார பொது பிரார்த்தனையில் அந்த குழந்தைக்காக பிரார்த்தனை வைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். நாமும் படித்து பார்த்தபோது பதறிப் போய் துடித்தோம். மனிதர்கள் தான் பவம் செய்கிறார்கள்… பிஞ்சு குழந்தை என்ன செய்தது இறைவா… ஏன் இந்த சோதனை என்று உருகினோம். சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்து அதை இங்கே இடம்பெற செய்திருக்கிறோம். அனைவரும் அந்த குழந்தைக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Tamil_News_large_1074005பிரசவத்தின்போது குழந்தையின் கால் உடைந்தது – வேதனையில் துடிக்கும் பெற்றோரும் குழந்தையும்!

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் கால் எலும்பு நொறுங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ‘இதை சரி செய்ய முடியாது’ என டாக்டர்கள் கைவிரித்து விட்டதால் பெற்றோர் கண்ணீருடன் தவிக்கின்றனர்.

வேடசந்தூர் பாகாநத்தத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 28. கர்ப்பிணி மனைவி மேனகாவுடன் ஆக., 20ல் நிலக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு மேனகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டதால், டாக்டர் காளியம்மாள் தலைமையிலான குழுவினர் ஆப்பரேஷன் மூலம் சிசுவை எடுக்க முயற்சித்தனர். சிசு வெளியே எடுக்கப்பட்ட நிலையில், அதன் இடது கால் எலும்புகள் நொறுங்கி விட்டதாக சர்ச்சை எழுந்தது.

‘காலை பிடித்து இழுக்கும் போது எலும்பு உடைந்து விட்டது’ என பெற்றோரிடம் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதுகுறித்து தந்தை சிவக்குமார், மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலாவிடம் புகார் மனு அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது:

‘குழந்தையை ஆப்பரேஷன் மூலம் வெளியே இழுத்தபோது கால் உடைந்து விட்டது’ என கூறுகின்றனர். ‘குழந்தையின் கால் சரியாகாது’ என பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். குழந்தை பிறந்து 30 நாட்களாகிறது. அதன் வேதனையை பார்த்து நானும், மனைவியும் கதறித் துடிக்கிறோம். குழந்தையை குணமாக்க முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

===================================================================

திருப்பூரை சேர்ந்த குருமூர்த்தி – வத்சலா தம்பதியினருக்கு அடிக்கடி ஏற்படும் கருக்கலைப்பு நின்று, குறைகள் நீங்கி, இனியதொரு மழலை பாக்கியம் கிடைக்கவும், அவர்களது பொருளாதார நிலை மேம்படவும் ஜெகன் அவர்கள் விரும்பும்படி நல்ல வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவும், அவரது பொருளாதார சூழல் மேலும் மேன்மையடையவும், வேடசந்தூரை சேர்ந்த சிவக்குமார்-மேனகா தம்பதியினரின் குழந்தைக்கு காலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு  நீங்கி,அக்குழந்தை முற்றிலும் நலபெறவும், கோ-சாலை பணியாளர் திரு.திருவேங்கடம் அவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 21, 2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

[END]

 

11 thoughts on “கேட்கும் விதத்தில் கேட்டால் கேட்பது கிடைக்கும் — Rightmantra Prayer Club

  1. பிரார்த்தனையின் விதிகள் அருமை. நாம் பிரிண்ட் எடுத்து பயன் படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. நாம் இறைவனிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தித்தால் நம்முடிய கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும். இது என் அனுபவத்தில் கண்ட தெள்ளத் தெளிவான உண்மை. நாம் ஆத்மார்த்தமாக மனதை ஒருநிலைப் படுத்தி இறைவனிடம் பேசினால் நடைபெறாதது ஒன்றுமில்லை.
    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு திருவேங்கடம் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அவர் செய்யும் கோ சேவை அளபர்கரியது

    திரு விஜய் ஆனந்த் மற்றும் அவரது மனைவிக்கு எமது வாழ்த்துக்கள்

    இந்த வார ப்ர்ராதனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காகவும் மற்றும் லோக ஷேமத்திற்க்காகவும் பிரார்த்தனை செய்வோம்

    மேலே குறிப்பிட்ட பிஞ்சுக் குழந்தையை பார்த்தல் மனம் கனக்கிறது. பிறக்கும் பொழுதே அந்தக் குழந்தைக்கு ஏன் இந்த சோதனை. அந்த குழந்தையின் கால் நல்லபடியாக நாம் பிரார்த்திப்போம்

    ஸ்ரீ ராகவேந்திரரின் நல்லாசியுடன் நாம் உழவார பணி மேற்கொள்வோம்

    லோக சமஸ்தா சுகினோ பவந்து

    நன்றி
    உமா

  2. சார் வணக்கம்.

    குடும்ப சுமையை குறைக்க தற்காலிகமாக எங்கள் பகுதியில் உள்ள ஃபேன்ஸி ஸ்டோர் ஒன்றுக்கு வேலைக்கு சென்றுவருகிறேன். என் கணவரின் மொபைலை வாங்கி அவ்வப்போது பதிவுகளை படித்துவிடுவேன். நாளுக்கு நாள் பதிவுகள் மெருகேறிக்கொண்டே செல்கின்றன. தரமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள்.

    கடவுளிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பது பற்றிய விளக்கம் அருமை. நிச்சயம் பிரிண்ட் எடுத்து வைத்து அவ்வப்போது படித்து பார்த்து நடந்துகொள்ளவேண்டிய ஒன்று தான்.

    உங்கள் உழவாரப்பணி தள்ளிப்போனது நிச்சயம் ஏதோ நல்ல காரணத்துக்காகத் தான். இறைவனின் செயல்களின் காரணங்களை யார் அறிவார்?

    திருவேங்கடம் அவர்களை பற்றி அறிமுகத்திற்கு நன்றி. இவர்களை போன்றவர்களை நம் தலத்தில் தான் பார்க்கமுடிகிறது. பசுவும் கன்றும் அவருடன் எத்தனை அன்னியோன்யமாக இருக்கிறன என்பதை படத்தை பார்த்தாலே தெரிகிறது.

    உங்கள் நண்பர் விஜய் ஆனந்த் அவர்களின் கோரிக்கை நிறைவேறி அவருக்கு குழந்தை பிறந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. உங்கள் நண்பர் என்றாலே நிச்சயம் அவர்கள் எந்தளவு தகுதியுடையர்வர்களாக இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

    இந்த வாரம் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் குருமூர்த்தி-வத்சலா தம்பதியினருக்கும், திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் அவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    சிவக்குமார் – மேனகா தம்பதியினரின் குழந்தை பற்றி செய்தியை படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. விதி என்பதா? மருத்துவர்களின் அலட்சியம் என்பதா? எப்படியோ… ஆனால் பாதிப்பு குழந்தைக்குன் தானே. அத்தனை சிறிய பிஞ்சு குழந்தையின் உடலில் பாதி உடம்பு கட்டுக்களால் மூடப்பட்டிருப்பது கொடுமை. விரைவில் இக்குழந்தை நலம்பெறவேண்டும்.

    நன்றி.

    பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. அப்புறம் முக்கிய விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். திருப்பட்டூர் கோவில் கோபுர படம் அற்புதம். கோவிலின் அழகை உங்களை போல படம்பிடிப்பவர்கள் யாரும் இல்லை. திருப்பட்டூருக்கு உடனே செல்லவேண்டும் என்கிற ஆசையை உங்கள் புகைப்படம் ஏற்படுத்திவிட்டது.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

    நன்றி

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. வணக்கம்…….

    எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும், நம் குருவருளாலும் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறும். குழந்தையும் நலம் பெறும். அதற்காக நாமும் பிரார்த்திப்போம்………

    ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவன உழவாரப்பணியில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருத்தமாய் இருந்தது. தற்பொழுது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குரு தேவருக்கு நன்றிகள்…………

  5. தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் விஜய் ஆனந்த் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தினமலரில் பிரசவத்தின்போது கால் உடைந்த குழந்தையை பற்றி படித்ததும் மனம் வேதனையில் இறைவனிடம் பலவாறு புலம்பியது. உடனடியாக நம் தள வாசகர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். சுந்தருக்கு மின்னஞ்சல் அனுப்பி பொது பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்தேன். நன்றி சுந்தர்.

    விஜய் ஆனந்த் அவர்களின் கோரிக்கை நிறைவேறியதுபோல் இந்த வார பிரார்த்தனையில் கோரிக்கை வைத்திருக்கும் நண்பர்களுக்கும் நல்லது நடக்கும். காஞ்சி பெரியவாளின் கருணை அளவற்றது. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

  6. குழந்தைப்பேறடைந்த தம்பதிக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு வாரம் பிரார்த்தனைக்கு தலைமையேற்பவர்களின் சிறப்பை நன்கு அறியும் விதத்தில் எடுத்துரைக்கிறீர்கள். திருவேங்கடம் அவர்களுக்கு எனது வணக்கம். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல காத்திருக்கும் நண்பரின் பிரார்த்தனை நிறைவேற வேண்டும். இவ்வாரம் குழந்தைச் செல்வத்திற்காக கோரிக்கை வைத்திருப்பவர்களுக்கு நம்பிக்கை தருவது போல் பிரார்த்தனை நிறைவேறிய தகவலையும் கொடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றி!. பிரசவத்தின் பொழுது கால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வேதனை எழுத்தில் வடிக்க இயலாதது. அக்குழந்தை விரைவில் நலம் பெற வேண்டும். அதற்கு இறைவனின் அருளை மகாபெரியவா பெற்றுத்தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ”விதியிருந்தால் விதி கூட்டி அருளும்” பிரம்மபுரீஸ்வரரின் கோவில் கோபுரம் கொள்ளை அழகு. பகிர்வுக்கு நன்றி.

  7. அருமையான பதிவு.
    திருபட்டூர் கோவில் கோபுரம் படம் மிகவும் அருமையாக உள்ளது.
    திரு.விஜய் ஆனந்த் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்கள்.
    இது போல ரைட் மந்த்ரா வாசகர்களின் அணைத்து கோரிக்கைகளும் கூடிய விரைவில் நிறைவேறவும்,
    குரு மூர்த்தி – வத்சலா தம்பதியினருக்கு கூடிய விரைவில் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய மழலை செல்வம் கிடைக்கவும்,
    ஜெகன் அவர்களுக்கு கூடிய விரைவில் அவர் விரும்பிய வேலை கிடைக்கவும் ,
    பிஞ்சு குழந்தையின் கால்கள் கூடிய விரைவில் முற்றிலும் பூரண குணம் அடையவும் நமது பிராத்தனைகளை அவர் பாதத்தில் சமர்பிக்கிறோம்.
    பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு வேங்கடம் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் , நலமும் பெறவும் வேண்டிக்கொள்வோம்.

  8. சுந்தர்ஜி
    நம் பிரார்த்தனை கிளப்பின் சில பிரார்த்தனைகள் நிறைவேறி இருப்பது கேட்டு மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருளாலும், வாசகர்களின் கூட்டுப் பிரார்த்தனையாலும் நம்மில் பல பேருக்கு இது மாதிரி நல்லது நடக்கட்டும்!

    பிரார்த்திக்கும் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த வார பதிவு அமைந்து உள்ளது. நடந்தவை அனைத்தும் நன்மைக்கே. நடக்காதவை இன்னும் நன்மைக்கே! வழக்கம் போல் இந்த வார பிரார்த்தனைகளும் அம்மை அப்பர் அருளால் நிறைவேற வேண்டிக் கொள்வோம். நன்றி!

  9. திருபட்டூர் கோவில் கோபுரம் மிக மிக அழகு.

    பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு வேங்கடம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். அவர் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வேண்டுவோம்.

    திரு.விஜய் ஆனந்த் மற்றும் அவரது மனைவிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    எனது தந்தை தொடர்பான உங்கள் முன் வைத்த பிரார்த்தனையும் நிறைவேறியது, டயாலிசிஸ் சிகிச்சை இல்லாமல், மருந்தின் மூலம் நலம் பெற்று வருகிறார்.
    பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சுந்தர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என் பிரார்த்தனைகள் நிறைவேறியது போல், ரைட் மந்த்ரா வாசகர்களின் அனைத்து கோரிக்கைகளும் கூடிய விரைவில் நிறைவேறவும், திருப்பூரை சேர்ந்த குரு மூர்த்தி – வத்சலா தம்பதியினருக்கு கூடிய விரைவில் அழகு கொஞ்சும் மழலை செல்வம் கிடைக்கவும், திருவொற்றியூர் ஜெகன் அவர்களுக்கு கூடிய விரைவில் அவர் விரும்பிய வேலை கிடைத்து நல்வாழ்வு பெறவும், பிஞ்சு குழந்தையின் கால்கள் கூடிய விரைவில் முற்றிலும் பூரண குணம் அடையவும் மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

    நன்றி!

  10. நண்பர் சுந்தருக்கு
    தங்களது பிராத்தனையால் எனது முயற்சிக்கு நல்லதொரு பலன் கிடைத்துள்ளது .மிக்க நன்றி
    மேலும் எனது முயற்சிக்கு வெற்றி கிடைக்க அனைவரும் இன்று பிராத்தனை செய்யுமாறு வேண்டி கொள்கிறேன்

  11. During prarthana time, i will pray for industrial development along with last week prarthana.

    Maha periyava will fulfill the desires of everybody.

    regards
    uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *