Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி தரிசனம்!

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி தரிசனம்!

print
மது ரிஷிகள் தரிசனம் தொடரின் ஆறாம் அத்தியாயம் இது. ஐந்தாம் அத்தியாயத்தில் வியாக்ரபாதரை பற்றி பார்த்தோம். தற்போது அவரது திருச்சமாதி பற்றி பார்ப்போம்.

ஸ்ரீவியாக்ரபாத முனிவர், பல சிவத் தலங்களை தரிசித்த பின், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் சிறுகனூர் கிராமத்துக்கு அருகில் உள்ள ‘திருப்பட்டூர்’ என்ற திருத்தலத்தில் சமாதி ஆனார்.

DSC05788

திருப்பட்டூர், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூர் அருகே உள்ளது.  சிறுகனூரில் இருந்து திருப்பட்டூர் செல்ல பஸ் வசதி இருந்தாலும் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை தான் பஸ் உள்ளது. ஷேர் ஆட்டோவில் செல்வது உசிதம். நான்கைந்து கோவில்களை சுற்றிக்காட்ட பேக்கேஜிங் ரேட் கேட்கிறார்கள். (ரூ.250/-) அவர்கள் வைத்தது தான் சட்டம். நமக்கும் வேறு வழி இல்லை. கார் வசதி உள்ளவர்கள் காரில் செல்வது சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு கோவிலுக்கும் இடையே உள்ள தூரம் 2 கி.மீ. இருக்கும்.

(மேலே புத்தம் புது தார் சாலையை பார்த்து தமிழகத்தில் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடுவதாக நினைக்கவேண்டாம். பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு அமைச்சர்களும், உயரதிகாரிகளும் அடிக்கடி வருவதையொட்டி போடப்பட்ட சாலை இது. மக்களுக்காகவோ இறைவனுக்காகவோ போடப்பட்ட சாலை அல்ல. நம் மாநிலத்தில் பல பாடல்பெற்ற தலங்களுக்கு செல்ல, செம்மண் பாதை கூட இல்லை என்பது தான் உண்மை.)

நாம் சில வாரங்களுக்கு முன்பு பழனி சென்றிருந்தபோது, திரும்பி வரும்போது திருப்பட்டூர் சென்றிருந்தோம். திருப்பட்டூர் என்றாலே பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அருள் புரியும் பிரம்மனின் நினைவு தான் வரும். இந்தத் திருக்கோயிலுக்கு மிக அருகில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் – விசாலாட்சி கோயில் உள்ளது  பலருக்கு தெரியாது. சரியாக திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது காசி விஸ்வநாதர் கோவில். திருப்பட்டூர் செல்லும் அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய கோவில்.

DSCN6182

கோவிலுக்கு செல்லும் பாதை ரம்மியமாக காட்சியளிக்கும். நகரத்து பரபரப்புக்களில் சிக்கி தவிப்பவர்களுக்கு சொர்க்கமாக காட்சியளிக்கும்.

ஊருக்குள் புகுந்து சந்து பொந்துகளில் திரும்பி ஊர் எல்லைக்கு வந்தால் காசி-விஸ்வநாதர் கோவிலை  காணலாம். பார்க்கும்போதே மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் அளவு கோவில் அத்தனை பழமை. சூழல், அத்தனை இனிமை.

குளக்கரையில் உள்ள அரசமரத்தின் அடிவாரத்தில் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து கோவிலை பார்க்கும்போது கொள்ளை அழகு.

DSCN6178

கோவிலுக்கு வெளியே உள்ள குளம் (வியாக்ரபாதர் உண்டாக்கியது) வறண்டு காணப்படுவது கண்ணில் நீரை வரவழைக்கிறது.

வறண்டு கிடக்கும் திருக்குளம்
வறண்டு கிடக்கும் திருக்குளம்

அர்ச்சனைக்கான தேங்காய், பூ, பழம் கோவிலுக்கு வெளியே உள்ள கடையிலேயே நியாயமான விலையில் கிடைக்கும். நமது மொபைல் அங்கு செல்லும்போது சார்ஜ் தீர்ந்துவிட, அந்த கடையில் இருந்த கேட்டு, அங்கு சார்ஜ் போட்டுவிட்டு போனோம்.

கோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைகிறோம். இந்தக் கோயிலின் பிரதான தெற்கு வாசலில் நுழைந்ததும் நாம் தரிசிப்பது ‘வியாக்ரபாதர் பிருந்தாவனம்’ (சமாதி) ஆகும். அந்த பிருந்தாவனத்தின் நாற்புறமும் தசாவதார உருவங்கள் சிறிய அளவில் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்தச் சமாதியின் முன் பக்தர்கள் தியான வழிபாடு செய்து, பூஜித்து பலன் பெறுகிறார்கள். இதுவரை திறந்த வெளியாக இருந்த இந்த இடத்தில் தற்போது, கூரை போடப்பட்டுள்ளது.

நாம் சென்ற  நேரம் சரியாக ஞாயிறு மாலை 5.30. நமது பிரார்த்தனை கிளப் நேரம். நம்  வாசகர்களுக்காகவும், அந்த வாரம் பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்திருந்தவர்களுக்காகவும் காசி விஸ்வநாதருக்கு அர்ச்சனை  செய்தோம். பின்னர் ஆலயத்தை பிரதட்சிணம் வந்து வியாக்ரபாதர் பிருந்தாவனம் முன்பு தியானத்திற்கு அமர்ந்தோம். சில நிமிடங்கள் நமது கோரிக்கைகளை வியாக்ரபாதரிடம் சொன்னோம். மனம் அமைதியடைந்தது.

DSC05797 copy

இந்தக் கோயிலில் ஈஸ்வரன் கிழக்குத் திசை நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் புரிகிறார்கள். கோயிலின் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி வலம்புரி விநாயகர் அருள் புரிகிறார்.

இந்தக் கோயிலுக்கு முன் புலிப்பாய்ச்சி தீர்த்தம் உள்ளது. இதை உண்டாக்கியவர் வியாக்ரபாத முனிவர் ஆவார்.

DSCN6166

திருவானைக்காவில் அருள் புரியும் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கயிலாயத்திலிருந்து தினமும் ஒரு வெள்ளை யானை தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். அப்படி வரும்போது ஒரு முறை திருப்பட்டூர் மிகவும் வறண்டு, தண்ணீர் இல்லாமல் போனதால், காசி விஸ்வநாதரை வழிபடும் வியாக்ரபாத முனிவர், தீர்த்தம் இல்லாமல் சோகத்தில் இருந்தார். அப்போது வெள்ளை யானை ஆகாய மார்க்கமாக தீர்த்தம் எடுத்துச் செல்வதைக் கண்டதும், சுவாமி அபிஷேகத்துக்குச் சிறிதளவு தீர்த்தம் கேட்டார்.

DSCN6172

யானையோ, “இது ஜம்புகேஸ்வரருக்கே சரியாக இருக்கும். உங்களுக்கு அளிக்க முடியாது” என்று கூறி, தீர்த்தம் தராமல், திருவானைக்காவுக்குச் சென்றது. இதனால் கோபமடைந்த முனிவர், தன் புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்ட, அப்போது ஈஸ்வரனின் தலையிலிருந்த கங்கை கீழே இறங்கியதாக ஐதீகம். நல்ல நீர் ஊற்று வந்ததும், அந்த நீரைக் கொண்டு வழக்கம்போல் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தார். இந்தத் திருக்குளம் கோயிலையட்டி கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது.

முனிவரிடம் பேசிவிட்டுச் சென்றதால், வெள்ளை யானை திருவானைக்கா செல்வதற்குக் சிறிது தாமதமானது. ஜம்புகேஸ்வரர், வெள்ளை யானையிடம் தாமதத்துக்குக் காரணம் கேட்டார். (ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறதுல நம்மாளை அடிச்சிக்க முடியாதுங்க!!). வழியில் முனிவர் தீர்த்தம் கேட்ட விவரத்தைக் கூறியதும், உடனே முனிவருக்குத் தீர்த்தம் கொடுத்து வரும்படி கட்டளையிட்டார் ஜம்புகேஸ்வரர். யானை உடனே திருப்பட்டூர் சென்று முனிவரிடம் தீர்த்தம் கொடுத்தது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர், அதை வாங்க மறுத்து விட்டார். இருந்தாலும், தான் கொண்டு வந்த தீர்த்தத்தை திருப்பட்டூர் காசி விஸ்வநாதருக்குத் தானே அபிஷேகம் செய்து விட்டுப் புறப்பட்டது வெள்ளை யானை என்று தலபுராணம் சொல்கிறது.

DSC05794

புலிக்கால்களைக் கொண்ட முனிவர், தாமே ஊற்றுத் தோண்டி எடுத்ததால், ‘புலிப்பாய்ச்சி தீர்த்தம்’ என்று இது வழங்கப்படுகிறது. இங்குள்ள புலிப்பாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட்டால் வேண்டுவன கிட்டும். மனநிலை சரியில்லாதவர்கள், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், சனியின் ஆதிக்கத்தில் இருப்போர் தங்களது இன்னல்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

DSCN6179

நம்முடைய ரிஷிகளும் சித்தர்களும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல. இந்த பூமியில் உண்மையில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பலரது சமாதி நம் நாடு முழுக்க பரவியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே பல சமாதிகள் இவ்வாறு உள்ளன. இவற்றில் பல உரிய பராமரிப்பின்றியும் அடையாளம் காணப்படாமலும் உள்ளன என்பது தான் சோகம்.

காசி விஸ்வநாதரையும், அன்னை விசாலாக்ஷியையும், வியாக்ரபாதரையும் தரிசித்துவிட்டு பின்னர் அங்கிருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தோம். அந்த அனுபவம் வேறொரு பதிவில்.

11 thoughts on “புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி தரிசனம்!

  1. சுந்தர்ஜி
    குருவருளால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் தொடர்ந்து இருவருடமும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் சொன்னமாதிரி முதலில் செல்லும் கோவிலுக்கு தலைஎழுத்து மாறும் என்ற நம்பிக்கையில் நிறைய பேர் வருவதால் சற்று பாதை நல்லதாக உள்ளது. பின்னர் செல்லும் காசி விஸ்வநாதர் கோவில் காட்டுப்புறத்தில் தான் உள்ளது. ஆனால் மிகவும் அமைதியான கோவில். திருக்குளத்து நீர் இல்லத்திற்கு எடுத்து வந்து வைத்தால் எடுக்கும்போது தூசியாக இருந்தாலும் நாளாக நாளாக பன்னீர் போல் மாறி இதுவரை கெடாமல் இருக்கிறது. இது ஒரு அதிசயமான நிகழ்வு. புலிக்கால் முனிவரின் பக்திக்கு இது ஒரு எடுத்துகாட்டு. பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி!

  2. வாழ்க வளமுடன்
    மிக மிக அருமையான பதிவு. பல மகான்களின் சமாதியை உங்களால் தரிசிக்கிறோம். நன்றி

  3. வணக்கம்…………

    இறையருள் இருந்தால் நாமும் திருப்பட்டூர் சென்று இறைவனையும், வியாக்ரபாத முனிவரையும் தரிசிக்கலாம்………..

    திருக்குளம் நீரின்றி காணப்படுவது வருத்தம் அளிக்கிறது………..இறைவன் மனம் வைக்க வேண்டும்……….

  4. Hello Sir, Thanks for sharing this wonderful information…. Please share me the other three temple name which u visited on that day. I’m planning to visit those temples.

    Thanks for your wonderful service.

    1. செல்லும் வழியிலேயே ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அதை முதலில் தரிசிக்கவேண்டும். பிறகு, காசி விஸ்வநாதர். பிறகு பிரம்மபுரீஸ்வரர். பிரம்மபுரீஸ்வரர் தலத்தில் பதஞ்சலி முனிவர் ஐக்கியமான இடம் உள்ளது. இதைத் தவிர வேறு ஒரு கோவிலும் உள்ளது.

      திருப்பட்டூர் பற்றிய பதிவில் விரிவாக கூறுகிறேன்.
      – சுந்தர்

  5. வியாக்ரபாதரின் அதிஷ்டானம் பற்றிய பதிவு மிக அருமை. தங்கள் பதிவின் மூலம் வியாக்ரபாதரை குரு வாரத்தில் தரிசனம் பண்ணிய உணர்வு ஏற்படுகிறது. கோவில் கோபுரம் வியக்க வைக்கிறது. பளபள சாலை அருமை. நம் தமிழ் நாடுதானா என வியக்க வைக்கிறது. இறை அருள் இருந்தால் வியாக்ர பாத்தார் அதிஷ்டானம் தரிசனம் செய்வோம்.

    குளத்தில் தண்ணீர் இல்லாமல் பார்க்கும் பொழுது நம் கண்களில் இரத்தக் கண்ணீர் வருகிறது

    நன்றி
    உமா

  6. குரு வாரத்தில் வியாக்ரபாதர் அதிஷ்டனம் தரிசனம் செய்து பேறு பெற்றோம்.
    சதுரகிரி மாதிரி பல தடவை முயற்சி செய்தும் செல்ல கடவுள் அருள் இல்லை.
    நம்முடைய ரிஷிகளும் சித்தர்களும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல. இந்த பூமியில் உண்மையில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பலரது சமாதி நம் நாடு முழுக்க பரவியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே பல சமாதிகள் இவ்வாறு உள்ளன. இவற்றில் பல உரிய பராமரிப்பின்றியும் அடையாளம் காணப்படாமலும் உள்ளன என்பது தான் சோகம். சித்தர்கள் சமாதி பற்றி படிக்கும் போது எனக்கும் இந்த மாதிரி தான் தோணும்.
    தன்னுளே பல அறிய பெரிய சக்திகளை அற்புதங்களை அடக்கி உள்ள அதிஷ்டனம் சென்று நாமும் அவர் அருள் பெறுவோம்.

  7. Last year we had been to thiruchi. first saw perumal koil, then kasi viswanathar koil and last brahmapureeswarar koil. When i went there, it was a pradosam day. I got the chance to see pradosha poojai in kasi viswanathar and brhamapurieeswarar temples. Lit lots of lamps in both the temples. I got the chance to go around the temple along with the lord. I also got the opportunity to carry the lord along with others.

    Just came back from chennai 3 days ago after attending a wedding in the fly. This time I visited maximum sitthar temples, with their blessings. All the samadhis are maintained well.

    shashikala

  8. புலிக்கால் ஸ்ரீவியாக்ரபாத முனிவர் அவர்களைப் பற்றி என்னுடைய மைத்துனர் ஸ்ரீ முருகன் அவர்கள் அடிக்கடி சொல்லி வருவர். உங்களுடைய பதிவை படித்தவுடன் என் மைத்துனருடன் உடனே சென்று தரிசிக்கவேண்டும் என்கின்ற எண்ணம் உண்டாகிறது. விரைவில் அந்த எண்ணம் நிறைவேற ஸ்ரீவியாக்ரபாத முனிவராய் வணங்கிக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *