பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க, அதிகாலை முதல், நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித சேவைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை. இந்த சேவை துவங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. நெஞ்சை நெகிழ வைப்பது.
அஷ்டதள பாத பத்ம ஆராதனை எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார். திருப்பதியை அடைந்தவுடன் ஏழுமலைகளையும் கடந்து நடந்தே சென்ற அவர் திருமலையை அடைந்தார். மகா துவாரத்துக்கு (பிரதான நுழைவாயில்) சென்ற அவர், அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை கேட்ட அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவரை நேரே தேவஸ்தானத்தின் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். அவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை ஆலயத்தின் செயல் அலுவலரிடம் (EO) அனுப்பி வைத்தனர்.
இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொருபக்கம் வேறு ஒரு விஷயம்…
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது. திருமலையின் நிர்வாகம் முழுக்க முழுக்க இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் பொன்விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட தேவஸ்தானம் தரப்பில் அப்போது திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். இதற்காக பல நாட்கள் பல ரவுண்ட் மீட்டிங்குகள் நடத்தப்பட்டன. ஆனாலும் பொன்விழாவுக்கு என்ன செய்வது, எந்த மாதிரி கொண்டாடுவது என்று எந்தவொரு முடிவுக்கும் அவர்களால் வர இயலவில்லை. இது போன்றதொரு சூழ்நிலையில் தான் அதிகாரிகள் தேவஸ்தான கமிட்டியிடம் வந்து அந்த முஸ்லீம் பக்தரின் கோரிக்கை பற்றி தெரிவித்தனர்.
அப்போது போர்டு ரூமில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களின் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. குமாஸ்தா ஒருவர் மெல்ல அறைக்குள் சென்று, இ.ஓ.வை சந்தித்து, முஸ்லிம் பக்தர் ஒருவர் குறிப்பிட்டதொரு கோரிக்கையுடன் கூறி, தங்களை அவசியம் பார்க்கவேண்டும் என்று காத்திருப்பதாக தெரிவித்தார்.
“மிக மிக முக்கியமான மீட்டிங் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. என்னால், எழுந்து வெளியே செல்ல முடியாது. அந்த பக்தரை நேரே இந்த அறைக்கே அனுப்பு பரவாயில்லை. என்ன ஏது என்று விசாரித்துவிட்டு உடனே அவரை அனுப்பிவிடுகிறேன்” என்று குமாஸ்தாவிடம் தகவல் தெரிவித்து அனுப்பினார்.
ஆனால் அவருக்கோ அந்த அறையில் இருந்த மற்ற தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களுக்கோ தெரியாது… அந்த முஸ்லீம் பக்தரை அனுப்பியவன் சாட் சாத் அந்த ஸ்ரீனிவாசனே என்பதும், அந்த பக்தரின் கோரிக்கையை ஏற்று இவர்கள் செயல்படுத்தப்போகும் திட்டத்தால் அந்த ஏழுமலையானே மனம் குளிர்வான், தேவஸ்தான பொன்விழா கொண்டாட்டங்களில் மகத்தானதொரு முத்திரையை அது பதிக்கப்போகிறது என்று.
குமாஸ்தா வெளியே வந்து ஷேக் மஸ்தான் என்கிற அந்த இஸ்லாமிய பக்தரை போர்டு ரூமுக்குள் இ.ஓ. அழைப்பதாக தெரிவித்தார்.
அதுவரை வெயிட்டிங் ஹாலில் காத்திருந்த ஷேக் மஸ்தான் தனது இருக்கையிலிருந்து எழுந்து நேரே மீட்டிங் நடைபெறும் அந்த அறையை நோக்கி சென்றார்.
கைகளை கூப்பியபடி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் மஸ்தான். அவருடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் தெரிவித்த இ.ஓ., “நாங்கள் இப்போது மிக முக்கியமானதொரு மீட்டிங்கில் இருக்கிறோம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்னை ஏன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறினீர்கள்? அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சீக்கிரம், சுருக்கமாக சொன்னீர்கள் என்றால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.”
[highlight]“நாங்கள் இப்போது மிக முக்கியமானதொரு மீட்டிங்கில் இருக்கிறோம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்னை ஏன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறினீர்கள்? அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சீக்கிரம், சுருக்கமாக சொன்னீர்கள் என்றால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.”[/highlight]
அடுத்து ஷேக் மஸ்தான் கூறிய விஷயம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரை சேர்ந்த ஒரு சிறு வணிகன். எங்கள் குடும்பத்தில் பலர் பல தலைமுறைகளாக ஏழுமலையானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். பலப் பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்த வித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், ஸ்ரீனிவாச பிரப்பத்தி. மங்களா சாசனம் ஆகியவற்றை கூட பாடுவோம். ஸ்ரீனிவாச கத்யத்தை கூட என்னால் முழுமையாக பாட முடியும்!”
கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருக்க, அந்த முஸ்லீம் அன்பர் தொடர்ந்தார்….
“எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனை போற்றி கூறும் 108 போற்றிகள்). இதுதவிர, எங்கள் வீட்டு புழக்கடையில் உள்ள தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அற்பணிப்போம்.”
“எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனை போற்றி கூறும் 108 போற்றிகள்). இதுதவிர, எங்கள் வீட்டு புழக்கடையில் உள்ள தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அற்பணிப்போம்.”
“ஆனால் ஐயா… இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்றதொரு சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால் எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் என் கொள்ளு தாத்தாவால் சில பூக்களைத் தான் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிது பூக்கள் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிது பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறோம்.”
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ய மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். (வில்வத்திற்கு கூட நிர்மால்ய தோஷம் கிடையாது!)
அதிர்ச்சியுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல் அலுவலர், “எ….ன்…ன…. நீங்கள் 108 பூக்களை சேர்த்துவிட்டீர்களா?”
“ஆம்!” என்றார் ஷேக் மஸ்தான்.
“ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வயிற்றை கட்டி வாயை கட்டி இந்த பூக்களை சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட மூன்று சவரன்!)
“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்… அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின் போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே”
“எங்கள் கோரிக்கையை தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் எங்கள் தாத்தாவின் ஆன்மா கூட நிச்சயம் இதன் மூலம் சாந்தியடையும். இது தான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்!!”
ஷேக் மஸ்தான் முடிக்க…. அமைதி… அமைதி… அந்த அறை முழுக்க ஒரே அமைதி. நிசப்தம். இது சாதாரண அமைதி அல்ல. அசாதாரணமான அமைதி.
அடுத்த சில கணங்களுக்கு அந்த அறையில் ஃபேன்கள் சுழலும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.
சேர்மன், செயல் அலுவலர், இணை அலுவலர், துணை அலுவலர் மற்றும் பல அதிகாரிகளும் தேவஸ்தான கமிட்டி உறுப்பினர்களும் நிரம்பியிருந்த அறையில் எவருமே வாயை திறந்து எதுவும் பேசவில்லை.
தங்கள் முன், கைகளை கட்டிக்கொண்டு பவ்யமாக நின்றுகொண்டிருந்த அந்த முஸ்லிம் பக்தரிடம் என்ன சொல்வது, என்ன பதில் அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.
தங்களுக்கு நடுவே சாட்சாத் ஸ்ரீனிவாசனே அங்கு எழுந்தருளி நடக்கும் அனைத்தையும் பார்த்துகொண்டிருப்பது போன்று அறையில் அனைவரும் உணர்ந்தனர்.
எக்சியூட்டிவ் ஆபிஸர் எனப்படும், இ.ஓ. தான் முதலில் வாயை திறந்தார்.
கண்களில் இருந்து அவருக்கு தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது இருக்கையைவிட்டு எழுந்தவர் நேரே அந்த முஸ்லிம் பக்தரிடம் சென்று “இத்தனை நேரம் உங்களை நிற்கவைத்து பேச வைத்ததற்கு எங்களை மன்னிக்கவேண்டும். முதலில் இந்த சேரில் உட்காருங்கள்” என்று கூறி ஷேக் மஸ்தான் அமர்வதற்கு ஒரு சேரை போட்டார்.
“மஸ்தான் காரு, உங்களை போன்றதொரு பக்தரை இந்த காலத்தில் இங்கு பார்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான பக்தர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் உங்களைப் போன்றதொரு பக்தரை இதுவரை பார்த்ததில்லை.”
“எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்… அதை உடனடியாக சேவையில் பயன்படுத்துவோம் என்று இப்போது, இங்கு நான் எந்த வித உத்திரவாதமும் கொடுக்க முடியாது. மேலும் தேவஸ்தானத்தின் பாலிஸி தொடர்பான இந்த விவகாரத்தில் நான் மட்டும் உடனே முடிவெடுத்துவிட முடியாது. தவிர அது எங்கள் கைகளில் மட்டும் இல்லை.”
“ஆனால், உங்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்துவது என்று உறுதி பூண்டிருக்கிறோம். எங்களுக்கு கொஞ்ச காலம் அவகாசம் நீங்கள் அளிக்கவேண்டும். அது போதும்! முடிவெடுத்த பின்னர் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்!”
மஸ்தான் விடைபெற்று செல்ல, அவருக்கு தரிசனம் செய்வித்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் தேவஸ்தான தரப்பில்.
அதற்கு பிறகு தேவஸ்தான கமிட்டி கூட்டம் மேலும் பல முறை கூட்டப்பட்டு இந்த மலர்களை பயன்படுத்துவதற்கு என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திருமலையில் அஷ்டதள பாத பத்ம ஆராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.
தம்பதிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த ஆர்ஜித சேவைக்கு டிக்கெட்டை மூன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்துவிடவேண்டும். இந்த சேவையில் கலந்துகொள்ளும் சேவார்த்திகள் பங்காரு வாசலுக்கு குலசேகரப்படிக்கும் இடையே உள்ள சிறிய மண்டபத்தில் உட்கார வைக்கப்படுவார்கள். ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் (ஷேக் மஸ்தான் குடும்பத்தினர் காணிக்கையாக அளித்த) ஒரு மலர், வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.
1984 ல் திருமலையில் ஏழுமலையான் சன்னதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றும் நடக்கிறது.
திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்திவந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் இரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.
சரி…. இத்தனையும் நடத்திவிட்டு புன்முறுவல் பூக்க திருமலையில் நின்றுகொண்டிருப்பது யார்?
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்!!
=================================================================
நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் உண்மையில் திருமலையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஆதாரம் : http://www.tirumala.org/sevas_weekdes.htm#ashtadala
(மேலே அளிக்கப்பட்டுள்ள இணைய முகவரி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையம் ஆகும்.)
சரி… இது எப்படி நமக்கு தெரியும்?
எல்லாம் அந்த ஏழுமலையான் நடத்திய நாடகம்.
படியுங்கள்… உங்களுக்கே புரியும்.
மேற்படி சம்பவம் குறித்த ஆங்கில எழுத்துரு ஒன்றை சென்னை மௌலிவாக்கத்தை சேர்ந்த நம் வாசகர் வெங்கட் என்பவர் நமக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதை படித்துவிட்டு மிரண்டுபோன நாம், இதன் உண்மை தன்மையை ஆராய்ந்துவிட்டு தமிழில் மொழி பெயர்த்து தகுந்த ஆதரங்களுடன் நிச்சயம் நம் தளத்தில் அளிப்பதாக அவருக்கு பதில் அனுப்பியிருந்தோம்.
மிக மிக அற்புதமான இந்த சம்பவத்தை அப்படியே மொழி பெயர்த்து அளிக்காமல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை திரட்டி இந்த பதிவை அளிக்க விரும்பினோம். ஆர்ஜித சேவை பற்றியும் திருமலை தேவஸ்தான வரலாறு பற்றியும் ஆராய்ந்தபோது இதற்கான ஆதாரம் திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலேயே ஏழுமலையான் அருளால் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஒரிஜினல் ஆங்கில எழுத்துருவில் இந்த ஆர்ஜித சேவையின் பெயர் இடம்பெறவில்லை. நாம் ஆதாரத்தை தேடியபோது இதன் பெயர் ‘அஷ்டதள பாத பத்ம ஆராதனை’ என்று கண்டுபிடித்தோம். ‘பத்ம’ என்றால் தாமரை என்று அர்த்தம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..
வெங்கட் அவர்களிடம் அதற்கு பிறகு இரண்டொரு முறை பேசும் வாய்ப்பு கிடைத்தது. நம் தளத்தை பற்றி எப்படி தெரியும் என்று ஆவலுடன் நாம் கேட்டபோது, மகா பெரியவா பற்றி இணையத்தில் தேடுகையில் நம் தளத்தை பார்க்க நேர்ந்ததாகவும், தமது சொந்த ஊர், மகா பெரியவவோடு நெருங்கிய தொடர்புடைய கலவை என்றும் தன் தாத்தா காலம் முதல் தம் குடும்பத்தினர் மகா பெரியவாவின் ஆத்யந்த பக்தர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் மகா பெரியவா, 1907 ல் 13 வயதில் காஞ்சி சங்கர மடத்திற்கு பட்டமேற்றதற்கு தனது தாத்தாவும் ஒரு காரணம் என்ற ஆச்சரிய தகவலையும் தந்தார். இது போதாதா…? எங்கள் நெருக்கம் அதிகமாகிவிட்டது.
இதற்கிடையே சென்ற வார இறுதியில், ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்தினருடன் திருப்பதி சென்று திரும்பிய திரு.வெங்கட் நம்மை தொடர்புகொண்டு நமக்கு திருமலையிலிருந்து ஸ்ரீனிவாசனின் பிரசாதம் கொண்டுவந்திருப்பதாகவும் எங்கு சந்திப்பது என்றும் கேட்டார். அப்போது நாம் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்த நேரம். அவர் குடும்பத்தினருடன் பூந்தமல்லி அருகே தமது உறவினர் ஒருவரை சந்திக்க காரில் கிளம்பிகொண்டிருந்தார். அவர் ரிட்டர்ன் வரும்போது போரூர் சிக்னல் அருகே சந்திப்பதாக தெரிவித்தோம்.
இதையடுத்து சுமார் இரவு 8.30 அளவில் போரூர் ஜங்க்ஷன் அருகே குடும்பத்தினருடன் காரில் காத்திருந்த அவரை சந்தித்தோம். இருவரும் பரஸ்பரம் சந்தித்து கைகுலுக்கி கொண்டபோது, திருமலை பிரசாதத்தை இது போல் சாலையில் வைத்து தரவிரும்பவில்லை எனவும், அருகே தான் மௌலிவாக்கத்தில் தான் தன் வீடு என்றும், வீட்டுக்கு ஒரு எட்டு வந்துவிட்டு செல்லும்படியும் கேட்டுக்கொண்டார். நாமும் பதிலுக்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு வைத்திருந்தோம். அதை சாலையில் வைத்து தர நமக்கும் விருப்பமில்லை.
அடுத்த சில நிமிடங்களில் அவர் வீட்டுக்கு நம்மை அழைத்து சென்றார். (அங்கு நாங்கள் டிஸ்கஸ் செய்த விஷயங்கள் வேறொரு சிறப்பு பதிவுக்கு உரியது. அது தொடர்பான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவிருக்கிறது.)
வீட்டில் வைத்து முறைப்படி அனைவரையும் அறிமுகம் செய்துவைத்தார். நம் தளத்தை பற்றி அலுவலகத்தில் தனது நண்பர்களிடம் கூறி வருவதாகவும் அனைவரும் வியப்புடன் தற்போது தவறாமல் படித்துவருவதாகவும் தெரிவித்தார். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
இதனிடையே, அவர் திருமலை பிரசாதத்தை நமக்கு தர, பதிலுக்கு இராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டத்தை நாம் அவருக்கு பரிசளித்தோம்.
நம்மை தேடி ஏழுமலையான் பிரசாதம் வர, அவர் வீடு தேடி சர்வ மங்களம் நல்கும் சுந்தரகாண்டம் வந்தது. நிச்சயம் இது மனிதர்கள் நாங்கள் எடுத்த முடிவல்ல. சாட்சாத் அந்த வேங்கடவன் எடுத்த முடிவு. ஏனெனில் எதுவுமே திட்டமிட்டு செய்யப்படவில்லை.
திருமலை திருப்பதி ஆர்ஜித சேவை பற்றிய பதிவை விரைவில் அளிப்பதாக கூறினோம். சென்ற ஞாயிறே அதை அளிக்கவேண்டியது. ஆனால், செவ்வாய்க்கிழமை சரியாக அது வெளியாகியிருப்பது ஏழுமலையான் விருப்பமே அன்றி வேன்றோன்றுமில்லை.
புறப்படும் முன் வெங்கட் மற்றும் அவரது இல்லத்தரசி இருவரின் பெற்றோர்கள் கால்களிலும் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றோம்.
[END]
ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட இரண்டு சவரன்!) – ஒரு சவரன் என்பது 8 கிராம் அடியேனுடய தாழ்மையான கருத்து.
மூன்று என்பதற்கு பதில் இரண்டு என்று டைப் செய்துவிட்டேன். தவறு திருத்தப்பட்டுவிட்டது. நன்றி.
– சுந்தர்
Dear Sundarji,
Excellent article. Thanks for sharing:)
ரேகர்ட்ஸ்
Harish.V
சுந்தர் சார்
மனதை நெகிழ வைக்கும் பதிவு, படிக்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும் ..
நன்றி
அப்பப்பா !!!!! எவ்வளவு பெரிய பக்தி. உண்மையான பக்தி.
திருப்பதி ஆர்ஜித சேவை பற்றி தெரிந்து கொண்டோம். மனதை உருக்கும் பதிவு. ஒவ்வொரு வாரமும் தெரியாத பல நிகழ்வுகளை பதிவாகப் போட்டு எல்லா வாசகர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்து விடுகிறீர்கள். இவ்வாறு பல புது புது காண்டக்ட் தங்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி. நாங்களும் இதன் மூலம் பல நல்ல விஷயங்களை படித்து பயனடைகிறோம்
பதிவை படிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது. அந்த முஸ்லிம் அன்பர் ஷேக் மஸ்தானை அனுப்பியது சாட்சாத் ஸ்ரீனிவாசனே.
அரிய தகவலுக்கு நன்றி
ஓம் நமோ நாராயணாய
நன்றி
உமா
மிகவும் நன்றி சுந்தர். தாங்கள் கூறியது போல் எல்லாம் அவன் செயல். இப்பதிவிருக்கு சிறு துரும்பாக இருந்தமைக்கு எல்லாம் வல்ல கடவுளுக்கும், ஈர்த்து என்னை ஆட்கொண்ட நம் பெரியவாளுக்கும் இந்த அடியேனின் நமஸ்காரங்கள்.
வணக்கம்…………
அமைதி அந்த கமிட்டி கூட்டத்தில் மட்டுமில்லை, இந்த விடயத்தை படித்தவுடன் எங்களிடத்திலும் ஏற்பட்டது. இப்படிகூட தலைமுறை தலைமுறையாய் பக்தி செலுத்துவார்களா…….. வியப்பாக உள்ளது. எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு, முன்னோரின் கடமையை நிறைவேற்றும் வைராக்கியம்………..கிரேட்……………அவர்கள் காணிக்கையாய் அளித்த பூக்களைக் கொண்டு ஸ்ரீநிவாசனுக்கு செவ்வாய் தோறும் பாத பத்ம சேவை நடைபெற அவர்கள் எவ்வளவு பேறு பெற்றிருப்பார்கள்……..
இவ்வாறு ஷேக் மஸ்தானின் பரம்பரையையே பக்தி செலுத்த வைத்த திருவேங்கடவனின் மகிமையையும், கருணையையும் என்னென்று வியப்பது………….
திரு. வெங்கட் அவர்களால் ஏழுமலையானின் மகிமை நமக்கு அறிய கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு நம் வணக்கங்கள் மற்றும் நன்றிகள்….
கோவிந்தா…….கோவிந்தா……….
அருமையான நிகழ்வு சுந்தர். தெய்வம் கண் எதிரில்
அச்சுதா அனந்தா கோவிந்தா
அச்சுதா அனந்தா கோவிந்தா
அச்சுதா அனந்தா கோவிந்தா
ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
நந்த முகுந்தா கோவிந்தா
நவநீத சோரா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
அருமையான பதிவு.
படிக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.
ஏழு மலையான் மீது ஷேக் மஸ்தானும், அவர்தம் குடும்பத்தினரும் வைத்திருக்கும் பக்திதான் எத்துணை.
அது போல் அந்த ஏழு மலையானும் ஷேக் மஸ்தான் மீது வைத்திருக்கும் அன்பு தான் எத்துணை.
சுந்தர்ஜி,
மெய் சிலிர்கின்றது. என்ன ஒரு அற்புதமான நிகழ்வு?
ஷேக் மஸ்தான் அவர்களின் குடும்பத்தை நினைத்தால் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. எம்மதமும் சம்மதமே என்று பெருமாள் கலியுகத்தில் உணர வைத்துள்ளார். கண்ணீர் கண்களை மறைக்கின்றது.
30 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை திரு வெங்கட் அவர்கள் சுந்தர் மூலமாக தெரிய படுத்தி உள்ளார் . அன்று ஷேக் மஸ்தான் இன்று திரு சுந்தர் அவர்கள். இந்த தளத்தை பார்வையிட எல்லோரும் என்ன தவம் செய்தனை. எல்லாம் அவன் செயல்.
எந்த ஒரு நிகழ்ச்சியையும் நயம்பட எடுத்து உரைப்பதில் தங்களுக்கு நிகர் எவரும் இல்லை.
வாழ்க வளமுடன்.
அவரவர் மதத்தின் மீது உள்ள அற்பணிப்பு, பக்தி இயற்கையானது.
ஆனால், ஏழு மலையான் மீது ஷேக் மஸ்தானும், அவர்தம் குடும்பத்தினரும் வைத்திருக்கும் பக்தி அளவிற்கறியது. சந்ததினர் தொடர்ந்து, அவர்கள் தம் பிரார்த்தனையை நிறைவேற்றியது மகத்தானது. மதம் தாண்டி, அவர்கள் ஏழு மலையான் மீது வைத்த பக்தி நம்மை எல்லாம் ஆச்சர்யபடுத்துகிறது.
ஆன்மீக தேடல், அதன் மீதான உங்கள் அற்பணிப்பு இருப்பதால்தான், இந்த மாதிரியான மகத்தான விஷயங்கள் உங்கள் பார்வைக்கு வருகிறது சுந்தர் சார்! அந்த ஏழு மலையான் பார்வை உங்கள் மீதும் பட்டு விட்டது. இனி உங்களுக்கு ஏறுமுகம் தான்.
இதற்க்கு உதவியாக இருந்த வெங்கட் சுப்ரமணியம் சார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
சிறப்பான பதிவு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலைத் தெரிந்து கொள்ள உதவும் உங்களுக்கு நன்றிகள். இப்பதிவைப் படித்தவுடன் கோவிந்தா ……கோவிந்தா எனும் நாமம் தான் என் மனதில் தோன்றியது. மீண்டும் நன்றி!.
உண்மையான பக்தனின் குடும்பத்துக்கு பெருமாள் செய்த மரியாதை. ஷேக் மஸ்தான் அவர்கள் குடும்பம் செய்த புண்ணியத்தில் நூற்றில் ஒரு பங்கு செய்திருந்தால் கூட நான் பாக்கியசாலி.
என்னை போன்றவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஷேக் மஸ்தான் போன்றவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
There are two kinds of men – those who spend their time talking about virtues and those who just have them! Antonio Machado, Spanish writer
Regards,
Baba Ram
டியர் சுந்தர்
ஏழு மலையானின் தீவீர பக்தையான எனக்கு இப்பதிவு படிக்கும் போதே கண்ணீர் வரவைத்தது. அவனின் கருணைக்கு பத்திரமான முஸ்லிம் அன்பரின் பக்தி மெய் சிலிர்க்க வைத்தது. சாதி மத பேதங்களை கடந்து அருள் புரிபவன் வேங்கடவன்.
மாதம் ஒருமுறை திருப்பதி செல்பவள் நான். நேற்று இப்பதிவை படிக்க வில்லை. இன்று காலை என் கணவர் இந்த மாதம் எப்போ திருப்பதி செல்லலாம் என்று கேட்டார். நான் சொல்கிறேன் என்று சொல்லி நம் தளத்தை ஓபன் செய்தால் இந்த பதிவு கண்ணில் பட்டது. அவனை நினைத்தால் மறுகணம் ஏதாவதொரு ரூபத்தில் நம்மிடம் வருபவன் வேங்கடவன். இன்று தங்கள் பதிவு மூலம்.
நான்கு தலைமுறையாக தங்க பூக்களை சேர்த்து இன்று ஒரு புதிய சேவை தொடங்க காரணமாக முஸ்லிம் அன்பர் இருந்தது வேங்கடவனின் நெடுநாளைய நாடகம் அல்லவா.
வேங்கடவனின் அருள் தங்களுக்கும் நம் தள வாசகர்களுக்கும் என்றும் இருக்க அவனை பிரார்த்திக்கிறேன்
என்றும் நட்புடன்
ரம்யா
அற்புதம்
இதை type செய்வதற்கு கூட கைகள் வரவில்லை.
கே கே
நவி மும்பை
படத்தவுடன் மெய்சிலிர்க்க வைக்கிறது.ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமக.
பக்தியுடன் கண்ணீரையும் வரவழைத்த மெய்சிலிர்க்க வைத்த பதிவு.
ஓம் ஸ்ரீ கோவிந்தனாய நமஹ.
இட் வாஸ் வெரி கிரேட் டு ரீட் ஆல் தி articles & இ am பீல் லைக் வெரி மச் blessed by ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா. ப்ளீஸ் கீப் இட் up
Miracles.
மனதை நெகிழ வைத்த நிகழ்ச்சி…. இதனைப் பகிர்வதால் மக்கள் மனதில் நல்ல மாற்றம் வரும்.