அருணகிரிநாதரின் அருள் நூல்களான திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, அந்தாதி, வகுப்பு என எல்லாவற்றையும் முற்றும் பருகி எழுத்தெண்ணி, நயம் காட்டி, தங்குதடையின்றி சந்த ப்ரவாகத்தை கொட்டும் அதிஅற்புத ஞானவாரி.
காலையானால் ஜபம், தியானம், பின்பு ஸ்நானம், பூஜை, ஓய்வு ஒழிவின்றி கட்டுரைகள் வரைதல், மாலையில் சந்தியாவந்தனம், பிறகு சொற்பொழிவு செய்யும் அறநெறி வாழ்க்கை. சூரியன் உதிக்காத நாள் இல்லை; அதுபோல், மாலையானால் மாலையும் கழுத்துமாக வாரியார் சொற்பொழிவு ஆற்றாத நாளே கிடையாது.
பல கோயில் திருப்பணிகள், அறப்பணிகள், கல்விக் கூடங்கள் முதலியன அவரால் செழித்தன. காந்திஜி, ராஜாஜி போன்று இம் மூதறிஞரும் தமக்கு வரும் கடிதங்களுக்கு விடாது பதில் எழுதும் பழக்கமுடையவர். மாதம்தோறும், படிக்கும் பல குழந்தைகளுக்கு உதவித்தொகை அனுப்புவதை கடமையாகக் கொண்டிருந்தவர்.
பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர்.
காஞ்சி மாமுனிவர் அவருக்கு ‘சரஸ்வதி கடாக்ஷமிர்தம்’ என்று பட்டம் வழங்கினார். மேலும் ஷட்பதநாதர், அமுதமொழி அரசு, ப்ரவசன சாம்ராட்… இப்படி 30-க்கும் மேற்பட்ட பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்ற பெருந்தகையாளர்.
காங்கேயநல்லூரில் உள்ள முருகன் கோவிலுக்கு நேர் எதிரே வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானம் கட்டப்பட்டுள்ளது. ‘தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்’ என்பது இதன் பெயர். கடந்த 2000 வது ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது. அடுத்த நாள் முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை பரமாரித்து வரும் பெருமையை ஓட்டல் சரவணபவன் பெற்றுள்ளது.
இத்தனை சிறப்பு மிக்க வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானம் (திருச்சமாதி) காங்கேயநல்லூரில் பாலாற்றாங்கரையோரம் அமைந்துள்ளது. காங்கேயநல்லூர் வேலூருக்கு வெகு சமீபம் (4 கி.மி.) அமைந்துள்ளது.
சுவாமிகளின் திருக்கோவில் ராஜகோபுரத்தில், சுவாமிகளின் பெற்றோர் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் எதிரே தெரிவது சரவணப் பொய்கை. அதன் அருகில், இடது புறம் சுவாமிகள் கையில் கமண்டலத்தோடு காணப்படும் முழு உருவ வெண்கலச் சிலை உள்ளது. அச்சு அசல் சுவாமிகளே நம் முன்னர் நிற்பதை போல காணப்படும். (இது சுவாமிகளின் மணிவிழாவின் எழுப்பப்பட்ட மண்டபமாகும்.
இதை தரிசித்துவிட்டு நேரே சென்றால் ஸ்வாமிகள் திருச்சமாதி கொண்டுள்ள கருவறை. ஆறுபட்டைகள் கொண்டுள்ள அறுகோண வடிவம். ஸ்வாமிகள் திருச்சமாதியை 6 அடிக்கு மூன்று அடி அகலம் கொண்டுள்ள சலவைக்கல் அடையாளம் காட்டுகிறது. சமாதி மீது எந்நேரமும் மலர்களால் செய்யப்பட்ட சிவலிங்க வடிவம் காணப்படுகிறது.
சமாதிக்கு முன்பு, தாமரை பீடத்தில் அமர்ந்து சிரித்த முகத்துடன் நாடி வருவோருக்கு ஆசிகளை அள்ளி வழங்கும் விதமாக வாரியார் சுவாமிகளின் தத்ரூப சிலை காணப்படுகிறது.
வடதிசை நோக்கி 24 மணிநேரமும் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு ஒன்று இங்கு உள்ளது.
இங்கு நடைபெறும் வழிபாடுகள் பூஜைகள் அனைத்துமே முறைப்படியும் தமிழ் தமிழ்நெறிப்படியும் நடப்பது விசேஷம்.
வாரியார் சுவாமிகளின் தந்தை மல்லையாதாஸ் பாகவதர், தாயார் கனகவல்லி அம்மையார், மனைவியார் அமிர்தலட்சுமி அம்மையார், தமையனார் மறைஞான சிவம் ஆகியோரது சமாதிகள் முறையே லிங்கம், நந்தி, மேரு, பிள்ளையார் ஆகிய இறைத் திருவுருவங்களுடன் அமையப் பெற்றுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வளாகத்தில் வாரியாரின் திருச்சமாதி தவிர இங்கு சரவணப் பொய்கையும், சண்முகர் சுதை வடிவமும், வாரியார் சுவாமிகளின் ஆளுயரச் சிலை ஒன்றும் அமைந்துள்ளது.
வளாகத்தை சுற்றிலும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு பார்ப்பதற்கே பசுமையாக காட்சியளிக்கிறது.
வாரியார் சுவாமிகளின் அவதார நட்சத்திரமான ஸ்வாதி தினத்தன்றும், அவர் இறைவனோடு கலந்த நட்சத்திரமான ஆயில்ய தினத்தன்றும், மற்றும் கிருத்திகை, வளர்பிறை சஷ்டி அன்றும் இந்த ஞானத் திருவளாகத்தில் வழிபாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் பெருமளவு வருகிறார்கள். அன்று அத்தனை பேருக்கும் அன்னதானம் உண்டு. மேலும் இங்கு பௌர்ணமி தினத்தன்று தமிழ் முறைப்படி யாகம் நடக்கிறது. பன்னிரு திருமுறை ஓதுகிறார்கள். அதன் பிறகு, அதிஷ்டானத்தில் அமைந்துள்ள வாரியார் சுவாமிகளின் திருவுருவத்துக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் என்று பிரமாதப்படுகிறது
நாம் இங்கு சென்ற நேரம் ஒரு சாதாரண ஞாயிற்றுக் கிழமை என்பதால் எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியாக அனைத்தையும் சுற்றிப் பார்த்தோம்.
‘தெய்வத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆராதனை பராமரிப்பு டிரஸ்ட்’ இதை திறம்பட நிர்வகித்து வருகிறது. ஒரு சிறு இலை விழுந்தால் கூட, அடுத்த நொடி சீருடை அணிந்த பணியாளர்கள் அதை ஓடிவந்து சுத்தம் செய்கிறார்கள்.
வளாகத்திலேயே சிறு புத்தக கடை உண்டு. அங்கு வாரியார் சுவாமிகளின் படங்கள், புத்தகங்கள், சி.டி.க்கள் கிடைக்கும்.
வளாகத்திற்கு போவோர், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்களை வாங்கிச் சென்று சுவாமிகளுக்கு படைக்கலாம். வரும் பக்தர்களுக்கு அப்பழங்களை கொடுப்பார்கள்.
தமிழ் முறைப்படி இங்கு அர்ச்சனை நடைபெறுகிறது. திருப்புகழும் பாடுவார்கள்.
அதிஷ்டானத்தின் உள்ளே சென்று வலம் வர அனுமதி உண்டு. நாம் சென்றபோது பிரதக்ஷிணம் செய்துவிட்டு பின்னர் அங்கு அமர்ந்து தியானம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.
இங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு தனி காட்டேஜ் வசதிகள் உண்டு. திருமணம் முதலான சுபகாரியங்கள் இங்கு சிறப்பான முறையில் செய்துகொள்ளலாம்.
இங்கு வந்து சுவாமிகளை வழிபட்ட பலபேருக்கு பல வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளன.
தங்களின் திருமண நாள், பிறந்த நாள், மூதாதையர் நினைவு நாள் ஆகிய நாட்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து அன்னதானமும் அளித்து அவர் அருளை பெறலாம்.
முகவரி :
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்,
எண் 1, சுப்ரமணிய சுவாமி கோவில் தெரு,
காங்கேயநல்லூர், வேலூர் – 632006
திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 முதல் 11.30 வரை | மாலை 4.30 முதல் 8.00 மணிவரை.
எதிரிலேயே மிக பழமையான காங்கேயநல்லூர் முருகன் கோவில் உண்டு. முதலில் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு பின்னர் வாரியாரை தரிசிப்பது நலம்.
64வது நாயன்மார் என்று ஆன்மீக அன்பர்களாலும் பெரியோகளாலும் போற்றப்பட்ட திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் இந்த திருச்சமாதியை வாசகர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்கவேண்டும். குமரனது அருளை பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வாரி முழக்கம்!
முருகன் அருளால் முத்தமிழ் முழங்கும் வித்தகர்
வாரியார் சுவாமிகள். திருப்புகழில் ஊறிய
வாரியார் வாக்கு தமிழன்னையின் வெற்றி
முரசமாகும். சைவத்தின் சங்கநாதமாகும்.
வாரியார் பேசச்சென்றால் ஊரே திரண்டு
வரும். உள்ளம் கவரும் வெள்ளைப் பேச்சைக்
கேட்கக் கேட்கச் சிரிப்பலைகள் பொங்கும்.
செவிப்பதுடன் கண்டு கண்டுணரும் பேச்சு
வாரியார் சொல்மாரி. அவர் தமது நகைச்சுவைச்
சவுக்கை இங்குமங்கும் வீசுவார். நாத்திகம்
நடுங்கும். ஆணவம் ஒடுங்கும். சைவம்
தழைக்கும். தமிழ் சிறக்கும். வாய் மட்டுமன்று;
வாரியார் உடலின் ஒவ்வோர் உறுப்பும்
பேசும். அவர் நிற்கும் தரைகூட பேசும்.
கண் பேசும் கை பேசும் கால்பேசும் வேல்முருகன்
பண் பேசும் தாளப்பதம் பேசும் – வீண் பேசும்
ஆனந்த வாரி அலைவீசிச் சீவ சிவ
ஞானந் தனைப் பேச நன்று!
நீண்டுயர்ந்த பொன்மேனி நீண்டளக்கும் பொன்மணிவாய்
யாண்டும் புகழும் இனியநகை – பூண்டொளிரும்
வாரியார் வாய் வண்ணம் வண்தமிழ் வண்ணம்
பாரியார் கை வண்ணப் பாங்கு.
– சுத்தானந்த பாரதி
* இந்த பதிவும் புகைப்படங்களும் உயிரினும் மேலான உழைப்பில் விளைந்தவை. புகைப்படங்களை எடுத்தாளுபவர்கள் அவற்றை எந்தவித மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் எடுத்தாளவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
==============================================================
வாரியார் ஸ்வாமிகள் ஜெயந்தியையொட்டி இன்று (31/08/2014) மாலை 5.30 க்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நமது தளம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானமும் கோ-சம்ரோக்ஷனமும் நடைபெறும்.
அனைவரும் வருக!
==============================================================
[END]
தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம், -மிகவும் அற்புதமாக உள்ளது ..நம்முடைய தலைமுறையில் இவர்கள் வாழ்ந்தார்கள் என நினைக்குன்போது மிக பெருமையாகவும் உள்ளது ..நம் எதிர்கால சந்ததியர்களிடம் நாம் பெருமையாக சொல்லலாம் ..வாரியாரின் பெருமைகளை .
\\பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர். – \\
இதுதான் அந்த முருகனின் அருள் கடாட்சம். பட்டங்கள் பல பெற்று இன்றும் பல தவறுகள் செய்யும் மனிதர்கள் அநேகம். அதற்கு நானே முதல் உதாரணம். வாரியார் அவர்களின் தமிழ், தமிழறிஞர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு உள்ளது உலகறிந்த உண்மை.
நமக்கு இருக்கும் பெருமை அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுதான். இதன் மூலம் நமக்கு ஒரு உண்மை தெரிகிறது. மெத்தப்படித்ததினால் மட்டுமே ஒருவன் அறிவாளி அல்ல.
தொடர் விடுமுறையை எல்லோரும் எப்படி எப்படியோ அனுபவிக்கும்போது தாங்கள் மட்டும் என்ன பதிவு கொடுக்கலாம் அதை எப்படி சரியான நாளில் கொடுக்கலாம் என்று யோசித்து கொடுப்பது மிகவும் நலம்.
நன்றி
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் ஜெயந்தி அன்று இந்த பதிவை அளித்து எங்களை இந்த பதிவு மூலம் அவருடயை திருசாமதயை தரிசனம் செய்ய அழைத்து சென்றுவிட்டிர்கள் .திருமுருக கிருபானந்த வாரியார் ஆசியால் உங்கள் எண்ணங்கள் மிக விரைவில் நிறைவேறட்டும் .
நன்றி
வெங்கடேஷ் பாபு
வணக்கம்………….
வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்தை நேரில் சென்று தரிசித்தது போல் உள்ளது. இதுநாள் வரை கேள்விபடாத செய்திகள், பார்த்திராத படங்கள்…….
விரைவில் குடும்பத்துடன் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது……
நன்றிகள் பல……….
வாரியார் சுவாமிகளின் பிறந்த நாளில் அளிக்கப்பட்ட அவரைப் பற்றிய பதிவை படித்து பரவசமானேன். வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானம் அழகாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பார்க்கும் பொழுது நாமும் அவர் அதிஷ்டானத்தை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவலாக உள்ளது. அத்தனை படங்களும் மிகவும் அருமையாக உள்ளது. சுவாமிகளின் சிலை தத்ரூபமாக அமர்ந்து நமக்கு ஆசி வழங்குவது போல் உள்ளது. அவரது பிறந்த நாளில் அவரது அதிஷ்டானத்தை தரிசித்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். வாரியார் சுவாமிகள் நம் தளத்திற்கும் கண்டிப்பாக ஆசி வழங்குவார்.
காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னதானம் மற்றும் கோ சம்ரோக்ஷனம் நல்லபடியாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி
உமா
பதிவு மற்றும் புகைப்படங்கள் மிகவும் அருமை
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
சுவாமிகளின் வெண்கல குரல்
பாமரனுக்கும் புரியும்படியான சொல் நடை
சொற்பொழிவில் அவர் எடுத்தாட்கொள்ளும் சிலேடை மற்றும் நகைச்சுவை
அவருக்கு மட்டுமே அது சாத்தியம்
சில நேரங்களில் சுவாமிகளின் பிரசங்கத்தை கேட்கும்பொழுது கற்பனையாக சிந்திப்பதுண்டு சுவாமிகளும் அவ்வையாரும் சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று …
வாழ்க வளமுடன்
ஐயா
தமிழ் தாத்தா, ஊ .வே .சாமிநாத ஐயர் ஊர் ஊரக சென்று ஓலைசுவடிகளை தேடி தேடி தமிழ் வளர்த்தார் , அதற்கு ஈடானது உங்கள் பணி. ஓய்வு ஒழிச்சலின்றி நீங்கள் செய்யும் பணிக்கு கோடி கொடுத்தாலும் தகும் , உங்களால் பல பல மனிதர்களை பற்றியும் ஊர்களை பற்றியும் அறிய முடிகின்றது . உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க குருநாதர் அருள் புரிவாராக. நன்றி
தங்கள் அன்புக்கு நன்றி சார்…
குப்பையில் கிடந்த இலை, காற்றினால் தூக்கிச் செல்லப்பட்டு கோபுரத்தில் அமர்ந்தால், அந்த பெருமை இலையையா சேரும்?
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!
– சுந்தர்
Dear Sundarji,
Very much excited to know about variyar.I will go here with my mother.
ரேகர்ட்ஸ்
V.HARISH