Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, June 7, 2023
Please specify the group
Home > Featured > தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

print
வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு நரசி வெளியேறி, சிவாலயத்தில் தஞ்சம் புகுந்து, சிவ பெருமானின் தரிசனம் பெற்று, கண்ணனின் ராசலீலையை காணும் பெரும் பாக்கியத்தையும் பெற, அங்கே யமுனாதாஸ், வெளியே  சென்ற நரசிம்ம மேத்தாவை எதிர்பார்த்துப் பார்த்து அழுதார்.  மருமகளை அழைத்து கேட்க, அவள் தான் திட்டியதைச் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.  உடனே அவர் ஊர் முழுவதும் தேடும் படி ஆட்களை ஏவினர்.  குளம், குட்டை, நதி, வாய்க்கால்கள் முதலிய இடங்களிலும் தேடினார்.  இப்படியே நாட்கள் 15 நாட்கள் கழிந்தன.

==============================================================

For Part 1 of this article, please check:  சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

==============================================================

ஒரு நாள் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் காட்டுக்குள்ளே குளத்தருகில் உள்ள பாழுங்கோயிலில் வேத கோஷம் கேட்டது என்றான்.  அக்காலத்தில் காளி பூஜை செய்பவர்கள் நரபலி இடுவது உண்டு.  இது கேட்ட யமுனா தாஸ் நடுநடுங்கிப் போனார்.  அவர் சொத்துக்கு  ஆசை கொண்டு தாமே இவரை வெட்டி விட்டதாக உலகம் பழி சொல்லவும் கூடும் என்று அவர் அஞ்சினார்.  அந்த மாடு மேய்க்கும் சிறுவனையே துணையாகக் கொண்டு  பாழுங்கோயிலுக்கு விரைந்து வந்து சேர்ந்தார் அவர்.

shivakrishnaகோயில் ஒரே அமைதியில் ஆழ்ந்திருந்தது.  வௌவால்கள் , அணில்கள் இவைகளைத் தவிர வேறு ஒருவரையும் காணவே  இல்லை.  துணிந்து உள்ளே சென்றார்.  அங்கே சிவபெருமானுக்கு எதிரே கண்மூடி மௌனியாகி உட்கார்ந்திருந்தார் நரசிம்ம மேத்தா  உடல் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சி தந்தது.  அப்பா என்று அலறி இவரை  தழுவிக் கொண்டார் யமுனதாஸ்.

கண் விழித்தார் மேத்தா.  கண்ணனைப் பற்றிய அருமையான கவிதை ஒன்றைப் பாடினார்.  ”இருப்பது சிவன் கோயில், பாடுவது கண்ணபிரானை.  பள்ளிக்கும் போகாத இவனுக்கு இந்த ஆற்றல் எங்கிருந்து  வந்தது?” என்று திகைத்தார்.  யமுனா தாஸ் நடந்தவைகளை எல்லாம் விவரித்தார். மேத்தா வீடு திரும்பி விட வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.

வீட்டிலேயே இருந்து கடமைகளையும் செய்து தெய்வ வழிபாடும் செய்யலாம் என்று இறைவனே நரசிக்கு கட்டளை இட்டார்.  இந்தன் பின் மேனக் பாய் என்கிற ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்துவைத்தார்கள். திருமணம் முடிந்து நல்ல முறையிலே குடும்பத்தை நடத்தி வந்தார் மேத்தா.  சில வருடங்கள் சென்றன.  முதலிலே ஓர் ஆண்  குழந்தையும், பிறகு ஒரு மகளும் பிறந்தனர்.  குழந்தைகளுக்கு ஷாமல் தாஸ் மற்றும் குன்வர் பாய் எனப் பெயரிட்டார். தந்தையார் என்ற நிலைக் கேற்ப நடந்து வந்தார் மேத்தா.

பிள்ளைகள் வளர்ந்து வர, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெரும் பொறுப்பு நரசிக்கு ஏற்பட்டது.

புராதனகூடம் என்ற ஊருக்குச் சில காத தூரத்தில் சியாமளா என்ற ஒரு சிறு நகரம்.  அதிலே திரிபுராந்தகர் என்ற ஒரு அந்தணர்.  அவர் வியாபாரம் செய்து ஏராளமாகப் பொருள் சேர்த்திருந்தார்,  அவருக்கு ஓர் அழகிய மகள்.  அவள் எல்லா நற்குணங்களும் நிரம்பியவள்.  இந்தப் பெண்ணை ஒரு நல்ல குடும்பத்த்திலே, செல்வம் கொழிக்கும் குடும்பத்திலே கொடுக்க விரும்பினார் அவர்.

அந்த ஊரிலே கிருஷ்ணபட்டர் என்றொரு வேதியர் மிகச் சிறந்த பக்தர்.  அவர் நரசிம்ம மேத்தாவிடம் பேரன்பு பூண்டவர்.  எப்படியாவது அந்த அழகியும் , குணவதியுமான பெண்ணை மேத்தாவின் மகனுக்கே மணம் செய்விக்க வேண்டும் என்று எண்ணங் கொண்டார் அவர்.

IMG_4092 copy

ஆகவே சமயம் நேரும் போதெல்லாம் மேத்தாவின் மகனைப் பற்றிச் சொல்லலானார்.  நரசி மேத்தா பரம எழை  என்பது எல்லோருக்கும் தெரியும்.  ஆகவே திரிபுராந்தகர் எளிதில் ஒப்பவில்லை.  கிருஷ்ணபட்டர் ஊருக்கே பெரியவர்.  அவரை மறுக்கவும் கூசினார்.  கடைசியில் ஒரு நாள் “என் கௌரவத்துக்கு ஏற்ப என் பெண்ணுக்குச் சீர் வரிசைகள் கொண்டு வருவதானால் பார்க்கலாம்” என்று சொல்லி வைத்தார். அது நரசியால் முடியாது என்று அவருக்கு தெரியும்.

ஆனால் இதையே மனத்திற்கொண்டு புராதன கடம் வந்து சேர்ந்தார் கிருஷ்ண பட்டர்.  வந்ததும் மேத்தாவிடம், “திருபுராந்தகர் மகளை உமது மகனுக்கு மனம் முடிக்கிறேன், சம்மதமா?” என்றார்.  மேத்தா திகைத்துப் போனார்.  “அவரோ குபேர சம்பத்திலே புரளுகிறார்; நானோ வெறுங்காவடி. இருவருக்கும் ஏற்குமா ? தகுதி அன்று, வேண்டாம்” என்றார்.  கிருஷ்ணபட்டர் விடுவதாயில்லை. மேலும் மேலும் வற்புறுத்த அவர்  இணங்கினால் எனக்கு ஆட்சேபமில்லை.  நீரே முன்னின்று நடத்தி வையும்” என்றார் மேத்தா.

கிருஷ்ண பட்டர் ஊருக்குத் திரும்பி திரிபுரந்தகரிடம் சென்றார்.  “மேத்தா சீர்வரிசைகளுடன் குறித்த நாளில் வந்து சேருவார்.  நீர் மேல் நடக்க வேண்டியவைகளைக் கவனியும்” என்றார்.  திரிபுராந்தகர் இதை ஏதோ வேடிக்கை என்றே நினைத்து வெகு அலட்சியமாய் இருந்ததோடு ஒரு விதமான ஏற்பாடும் செய்யவில்லை.

திருமண  நாளைக் குறித்து மேத்தாவுக்குச் செய்தி அனுப்பினார் கிருஷ்ண பட்டர்.  அவரும் குறித்த நேரத்தில் வந்து சேர்வதாகத் தகவல் அனுப்பினார்.

இதன் பின் உரிய காலத்தில் மணமகனையும், மற்றும் குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு, தமது பக்த கோஷ்டிகள் புடை சூழக் கால்நடையாகவே சியாமளாநகர் நோக்கி புறப்பட்டு விட்டார் மேத்தா.

அந்தக் கோஷ்டியை க் காண்பவர் எதோ திருவிழாவுக்குச் செல்லும் பஜனை கோஷ்டி என்று எண்ணும் படி இருந்ததே அன்றி , விவாக மகோஸ்த்தவம் என்று சொல்லும் வகையில் இல்லை. தம்பூராவும், சிப்ளாவுமாக மேத்தா முன் செல்ல, “பாண்டு ரங்கா விட்டல ! ஹரி நாராயண விட்டல! விட்டல !” என்ற நாமாவளிகள் இன்னிசையுடன் காற்றிலே தவழ்ந்தன.  மிருதங்கமும், ஜால்ராவும் இவைகளுக்கேற்ப ஒலிக்க, மெய் மறந்து கண்கள் பனி சோர, பக்த கோஷ்டிகள் அவரைச் சுற்றலும் மொய்த்துச் சென்றன.

இன்னும் சில மணிநேரங்களில் கிருஷ்ண பட்டர் வீட்டுக்கு சென்று இவர் அவமானப்படப்போகிறார். இன்னும் பாண்டுரங்கனோட என்ட்ரி வரலேன்னா எப்படி?

இந்த  விவாகத்திற்குச் செல்லும் கோஷ்டியின் வைபவத்தை பாண்டுரங்கப் பெருமானும், ருக்மினிப் பிராட்டியும் கண்டனர். “நம்முடைய மெய்யடியார் மேத்தா.  அவரது அவமானம் நம்முடையதல்லவா?” என்று நினைத்து எழுந்து வியாபாரியும் மனைவியுமாக மாறினார்கள்.  சிவபெருமானும் பார்வதியும் உடன் வந்தார்கள். (ஹூம்… எவ்வளவு பெரிய ஆளு இந்த மேத்தா…!)

Panduranga Rukmini

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் செல்வம் கொழிக்கும் வியாபாரிகளாக மாறி வந்தனர். அவர்கள் வீட்டரசிகள், அதற்கேற்ற பட்டும் பீதாம்பரமுமான உடைகள், கைகளிலே பொன் மயமான சந்தனம், தாம்பூலம் வழங்கும் பாத்திரங்கள், மணமகளுக்கு வேண்டிய ஆடை ஆபரணங்கள், இவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு நடந்தனர்.  அவர்கள் யாவரும் சியாமளா நகருக்குச் சில கல் முன்னே வந்து சேரும் ஒரு கிளைச் சாலை வழியே வந்து, மேத்தா கோஷ்டியினருக்கு முன்னே சேர்ந்து கொண்டனர்.  முன்னே வாத்தியங்கள் நடுவிலே வியாபாரிகளாய் வந்த செல்வர்கள் கூட்டம். மூன்றாவதாக நரசிம்ம மேத்தாவின் பஜனைக் கோஷ்டி என்று இப்படி முறையாக நகருக்குள் புகுந்தன.

ஊரார் ஒரே ஆச்சரியக் கடலுள் ஆழ்ந்தனர்.  “மேத்தா  ஏழை என்று கேள்வி.  இவ்வளவு பெரும் செல்வமும், ஆடை, ஆபரங்களும் எது? என்றனர் சிலர். அதற்கு விடையாக அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், “நான் அவருடைய காரியஸ்தன்,  பண்டரிபுரத்திலே அவருக்கு ஒரு கடை இருக்கிறதே, அதை மேற்பார்வை இடுபவன்” என்றான்.  மேற்பார்வைக் காரியஸ்தன் காதுகளிலே பொற்குண்டலங்கள், கைகளிலே வைர மோதிரங்கள் ஒளி வீசின.  மேலே போர்த்தியிருந்த பொன்னாடையிலிருந்து விலையுயர்ந்த அத்தரின் மெல்லிய நறுமணம் கமழ்ந்தது. “அப்படியா? உங்கள் பெயர் நான் அறியலாமா?” என்று அவர் மிகுந்த பணிவுடன் கேட்க “என்னைச் சியாமளநாதன் என்பர். வீட்டிலே செல்லமாக நந்தகிஷோர் என்பர்!” என்றான் அந்த காரியஸ்தன்.  கேட்டவர் அயர்ந்தே போனார்.

ஊர்வலம் மெல்ல மெல்லத் திரிபுராந்தகர் வீட்டை நெருங்கியது.  அவர் ஒரே திகைப்பில் ஆழ்ந்துவிட்டார்.  கை கால்கள் நடுக்கம் எடுத்தன.  வாய் குழறியது.  நாத்தடுமாறத் தவித்து நின்றார். காரியஸ்தன் கூடத்திலே சீர் வரிசைகளை எல்லாம் இறக்கிவிட்டு , “நாளைக்கு முஹூர்த்தம் .  இங்கே ஒன்றையுமே காணோமே!” என்றான்.  திரிபுராந்தகர் முகத்திலே அசடு வழிந்தது.  காரியஸ்தன் மிகவும் அமைதியாக “நாமோ சம்பந்திகள் , கொண்டு கொடுத்துக் குளம் பேசல் ஆகாது.  நீர் தயங்க வேண்டாம்.  வேற்றூரான் என்று மலைக்காதீர்.  இதோ இரவுக்குள் எல்லாம் ஒழுங்காக்கி விடுகிறேன்” என்று இங்கும் அங்கும் ஓடி மக்களை எல்லாம் ஏவலானர் சியாமளனாதர்.

அப்பொழுதுதான் தெருக்கோடியிலிருந்து அருமையான மோகன ராகத்திலே “பாண்டு ரங்க விட்டல  ! ஹரி நாராயண விட்டல!” என்ற கோஷம் கேட்க , மெல்ல மெல்ல ஆடி அசைந்து, துரித காலத்தில் கால் சதங்கைகள் ஒழிக்க வந்து கொண்டிருந்தது நரசிம்ம மேத்தாவின் பஜனைக் கோஷ்டி.

மறுநாள் சியாமளா நகரத்தார் அது வரை கண்டிராத வகையில் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.  விருந்தின் தரமோ சொல்லத்தரமன்று.  கிருஷ்ணபட்டரும் சியாமளா நாதரும் பிரதான மனிதர்களாக  நின்று எல்லாவற்றையும் நடத்தினர். சியாமளா நாதரை மார்புறத் தழுவியபடிய மெய் மறந்தார் மேத்தா. வியாபாரிகளாய் வந்த மாயக் கூட்டத்தினர், வழக்கம் போல் விடை பெற்று ஊர் எல்லை வரை வந்து திரிபுராந்தகர் வழி அனுப்பத் திரும்பச் சென்றார்.

மறுநாள், கிருஷ்ண பட்டரை அழைத்து, “சொன்னபடியே செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி.” என்று கூற, “நான் எங்கே செய்தேன்? எல்லாம், பண்டரிபுரத்தில் நீங்கள்  நடத்தி வரும் கடையை கவனித்துக்கொள்ளும் நந்தகிஷோர்  தானே செய்தது!” கிருஷ்ண பட்டர் கூற, “என்னது  இந்த பிச்சைக்காரனுக்கு பண்டரிபுரத்தில் கடையா? யார் சொன்னது? வாருங்கள் உடனே சென்று நந்தகிஷோரை பார்ப்போம்…” என்று நந்தகிஷோரை தேடினால், அவர் எங்குமே அகப்படவில்லை.

நந்தகிஷோராக வந்தது பாண்டுரங்கனே என்பதை அறிந்து கண்ணீர் உகுத்தார் மேத்தா.

இதே போல, நரசியின் மகள் கருத்தரித்தபோது, மகளுக்கு சீர் செய்ய வழியின்றி  தவித்தார் நரசி. பாண்டுரங்கனே மாறுவேடம் பூண்டு சீர் சுமந்து சென்றான்.

ஒரு முறை நரசி தனது சகோதரருடன் (சித்தப்பா மகன்) ஒரு சாலையில் நடந்து போய்கொண்டிருந்தார். பசி காதை அடைத்தது. வழியில் எங்கும் உணவு கிடைக்கவில்லை. பாண்டுரங்கன் ஒரு ஆடு  மேய்க்கும் சிறுவனாக வந்து அவர்களை ஒரு குடிசைக்கு  அழைத்துச் சென்று உணவளித்தான். ஆசார சீலரான அவர் சகோதரன் அங்கு உண்ண மறுத்தார். “தயங்க வேண்டாம்… நமக்கு உணவளிப்பது சாட்சாத் அந்த பாண்டுரங்கனே” என்று நரசி எடுத்துக் கூறியும் அவர் சகோதரர் அங்கு உண்ண மறுத்துவிட்டார். இருவரும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். அப்போது தான் நரசியின் சகோதரருக்கு நினைவுக்கு வந்தது தனது பாத்திரம் அடங்கிய பை ஒன்றை குடிசையிலேயே விட்டுவிட்டு வந்தது. வேகவேகமாக ஓடிச்சென்று அங்கு பார்த்தால், அங்கு பை இருந்தது. குடிசையையோ அந்த ஆடு மேய்க்கும் சிறுவனையோ காணவில்லை.

அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||

பொருள் : “வேறு எந்தவித நினைப்பும் இன்றி என்னையே  வழிபடுவோர், அந்த நித்திய யோகிகளின் தேவைகளையும், பாதுகாப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன்”

என்று கீதையில் கூறியுள்ளபடி, பகவான் தன்னையே நினைந்துருகும் அடியவர்களின் தேவைகளை தான் பார்த்துக்கொள்கிறான்.

நரசியின் சகோதரருக்கு வந்தவர் சாட்சாத் அந்த பாண்டுரங்கனே என்பது புரிந்தது. பாண்டுரங்கன் தன் கைகளால் அளித்த உணவை ஏற்க மறுத்தமைக்கு வருத்தம் தெரிவித்தார். தம்மையே நொந்துகொண்டார்.

மற்றொரு சமயம், தன்னுடைய தந்தையின் சிரார்தத்தை நரசி ஒரு நாள் செய்யவேண்டியிருந்தது. சிரார்த்தத்திற்கு சமையல் செய்யாவோ சாப்பிடவோ எவரும் வரவில்லை. மேலும் சிரார்த்தத்திற்கு தேவையான நெய்யோ மளிகை பொருட்களோ ஒரு குன்றிமணி அளவு கூட வீட்டில் இல்லை. மனைவியின் வளையலை வாங்கிக்கொண்டு சந்தைக்கு இவற்றை வாங்க சென்றார் நரசி. அங்கே பண்டரிபுரம் செல்லும் பஜனை கோஷ்டி ஒன்று நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்ததை பார்கிறார். தானும் அவர்களுடன் சேர்ந்து நாமசங்கீர்த்தனத்தில் மெய்மறந்து ஈடுபடுகிறார். சிரார்த்தத்திற்கு நெய் வாங்க வந்த விபரமே அவருக்கு மறந்துவிடுகிறது.

ஆனால் இங்கே நரசியின் மனைவி, கணவனுக்காக காத்திருக்கிறார். அந்நேரம் இரண்டு அதிசயங்கள் நடந்தன. சிரார்த்ததிர்க்குரிய நேரம் கடந்துவிடக்கூடாதே என, சூரியனை ஒரு அங்குலம் கூட அசையக்கூடாது என்று பகவான் கிருஷ்ணர் உத்தரவிட, நேரமானது கழியாமல் அப்படியே இருந்தது. அடுத்து நரசியின் வேடத்தை புனைந்து பகாவானே அவர் வீட்டுக்கு நெய்யையும் மளிகை பொருட்களையும் கொண்டு சென்றார். அவருடன் கூடவே சமையல் செய்ய ஆட்களும் சிரார்த்தம் நடத்த பிராம்மணர்களும் பெருமளவு திரண்டு வந்தனர்.

நரசியின் மனைவி வழக்கம்போல, முகத்தை ஒரு வெட்டு வெட்டி உள்ளே சென்றாள். வந்திருந்த சமையல் ஆட்கள் பிரமாதமான சமையலை செய்து முடிக்கு, ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு வந்திருந்த பிராம்மணர்கள் அனைவருக்கும் அவர்கள் திருப்தியடையும் விதமாக (ஸ்ரார்த்த சமையல்) விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் விடைபெற்று கிளம்பி சென்றனர். நரசியின் மனைவி, அனைத்தையும் சுத்தம் செய்துகொண்டிருந்த வேளையில், உண்மையான நரசி, கையில் மளிகை பொருட்களுடன் தயங்கி தயங்கி வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்குள்ளே தானே இருந்தார். இப்போ எங்கே இருந்து வர்றார் என்கிற குழப்பத்ததுடன் நரசியின் மனைவி, “நீங்க எப்போ வெளியே போனீங்க? ” என்று கேட்டவள், கையில் நரசி மலைபோருட்களுடன் நிற்பதை பார்த்து, “அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே.. இப்போ ஏன் போய் எதெல்லாம் மறுபடியும் வாங்கிட்டு வந்தீங்க?” என்று கேட்க, நரசி நடந்தது அனைத்தையும் அறிந்துகொள்கிறார்.

“பாண்டுரங்கா… உன் மெய்யடியார்கள் மீது தான் உனக்கு எவ்வளவு கருணை… இந்த ஏழையின் வீட்டுக்கு ஏவல் செய்ய வந்தனையோ” என்று கண்ணீர் உகுத்தார்.

மற்றொரு முறை, பண்டரிபுரம் செல்லும் பாகவத கோஷ்டி ஒன்று ஹூண்டி கேட்க, [அந்தக் காலத்து செக் சிஸ்டம் – காசோலை] நரசி மீது பொறாமை கொண்ட சிலர், “அங்கே நரசி என்கிற பணக்கார அடியார் இருக்கிறார். பண்டரிபுரம் செல்பவர்கள் அனைவருக்கும் அவர் தான் ஹூண்டி கொடுத்து அனுப்புவார். அவரிடம் போனால் உங்களுக்கு ஏதேனும் செய்வார்” என்று கூற, அவர்களும் அதை உண்மை என்று நம்பி நரசியின் வீட்டுக்கு வந்து அவரிடம் ஹூண்டி கேட்டனர். அவர் வீட்டை பார்த்து சந்தேகங்கொண்ட சிலர், தாங்கள் அலைகழிக்கப்படுகிறோம் என்பது புரிந்தது.

உண்மையை புரிந்துகொண்ட நரசி, மெய்யடியார்களை ஏமாற்ற விரும்பவில்லை. “ஹே… பாண்டுரங்க… உன் லீலையே லீலை” என்று கூறி, ஓலையில், 300 வராகனுக்கு ஹூண்டி எழுதிக் கொடுத்து, “இதை பண்டரிபுரத்திலே உள்ள நந்தகிஷோர் என்பவரிடம் கொடுத்து உங்களுக்கு தேவையான வராகனை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். மிக்க மகிழ்ச்சியுடன் அங்கே செல்லும் அடியார் கோஷ்டி, நந்தகிஷோரை தேடி அலைய, அங்கே அப்படி யாரும் இல்லை என்று பண்டரிபரத்து வணிகர்கள் கூறி, “உங்களை நரசி நன்றாக ஏமாற்றியிருக்கிறார்” என்று கூற, அந்த சமயம், பகவானே நந்தகிஷோர் போல வேடம் புனைந்து இவர்களிடம் ஹூண்டிக்கான ஓலையை பெற்றுக்கொண்டு 300 வராகனை கொடுத்தார்.

மெல்ல மெல்ல நரசியின் புகழ் அந்த ஊர் முழுக்க பரவத் துவங்கியது. ஜாதி வேறுபாடுகளை உடைத்தெறிந்தார் நரசி. தாழத்தப்பட்டோருக்கு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அறுத்தெறிந்து அனைவர் வீட்டிலும் நாம சங்கீர்த்தனங்களை நடத்தினார். இது கண்டு பொறுக்காத மேல் சாதியினர் இவரை கண்டித்தனர். அப்போது இவர் பாடியது தான் ‘வைஷ்ணவ ஜனதோ தானே கஹியே’ என்கிற காலத்தால் அழியாத அந்த பாடல்.

Narasinha chora

(மேலே நீங்கள் காணும் புகைப்படத்தில் இருப்பது குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் உள்ள நரசிம்ம மேத்தா மேடை என்றழைக்கப்படும் இடம் ஆகும். (Narsinh Mehta No Chora). குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் முக்கிய இடங்களுள் ஒன்று. இன்றும் குஜராத் மாநில சுற்றுலா தொடர்பான தளங்களில்  இந்த இடம் குறிப்பிடப்பட்டிருக்கும்.  நரசி, தான் வாழ்ந்த காலத்தில் இங்கிருந்து தான் நாம சங்கீர்த்தனங்களையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்துவாராம். மேலும் இந்த இடத்தில் தான் பகவான் கிருஷ்ணர் முதன்முதலில் நரசிக்கு காட்சி கொடுத்தாராம். இந்த இடத்தில் சிறிய கிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. உள்ள கிருஷ்ணர்  அருகிலேயே நரசியின் விக்கிரகமும் உண்டு.)

பூவை கசக்கினால் வாசம் வருவது போல நரசி தனது வாழ்க்கையில் பட்ட ஒவ்வொரு கஷ்டத்திற்கும் சோதனைக்கும் ஒரு கீர்த்தனைகளை  இயற்றினார். அதே போல பகவான் அருள் புரியும்போதும் ஒரு பாடலை இயற்றினார். அந்த பாடல்களை படிக்கவும், அவற்றின் அர்த்தத்தை உணர்ந்து உருகவுமே குஜராத்தி மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த பதிவும் பதிவில் உள்ள பல்வேறு சம்பவங்களும் பக்த விஜயம் தவிர, வேறு பல மூலங்களை கொண்டும், பல ஆங்கில இணைய தளங்களை படித்தும் எழுதப்பட்டது.

நரசி குறித்து ஆராய்ச்சி செய்ய செய்ய ஒன்றையொன்று விஞ்சும் சம்பவங்கள் கிடைக்கின்றன. இப்படி எத்தனை எத்தனையோ அற்புதங்களை நரசியின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. அவற்றை விவரிக்க ஒரு பதிவு போதாது. ஒரு நூல் தான் எழுதவேண்டும். விடுபட்டுள்ள சம்பவங்களை எல்லாம் சேர்த்து திருமால் அடியவர்களின் வரலாற்றை ஆணித்தரமான ஆதாரங்களுடன் நாமே ஏன் புத்தகமாக எழுதக்கூடாது என்று தோன்றுகிறது. பாண்டுரங்கன் கிருபையிருந்தால் நிச்சயம் நடக்கும். நீங்களும் அதற்காக பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்க பக்த நரசிம்ம மேத்தாவின் புகழ். பரவுக நாமசங்கீர்த்தனம். வளர்க பாண்டுரங்கனின் அருட்கடாக்ஷம்.

சர்வ ஜனோ சுகினோ பவந்து!

=============================================================

குறிப்பு : சென்ற ஆண்டு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் & கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பதிவுகளின் முகவரியை கீழே தந்திருக்கிறோம்.

இந்த ஆண்டு, நாம் முன்பே கூறியபடி பாண்டுரங்கனின் அருளால் சிறப்பான முறையில் அன்னதானமும், மாலை கண்ணபிரான் கோவிலில் வழிபாடும் நடைபெற்றது. நமது ஆடிக்கிருத்திகை அன்னதானம் & தரிசனம் தொடர்பான பதிவு அளித்தபிறகு, இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தரிசனம் தொடர்பான பதிவு இடம்பெறும்.

=============================================================
Also check:

8 thoughts on “தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

 1. நரசிங்க மேத்தாவின் முழு கதையையும் இந்த தளம் மூலம் படித்து மெய் சிலிர்த்தோம்.

  பாண்டு ரங்கன் நிகழ்த்திய லீலைகள் அற்புதம். இந்த கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷல் மறக்க முடியாத ஸ்பெஷல் ஆக அமைந்து விட்டது.

  இவ்வளவு பெரிய பதிவை நம் வாசகர்களுக்காக அளித்த ரைட் மந்த்ராவிற்கு வாழ்த்துக்கள் பல/

  படங்கள் அருமை.

  இந்த பதிவை படித்தவுடன் பண்டரிபுரம் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது

  நன்றி
  uma

 2. வணக்கம் சுந்தர் சார்

  இதை படிப்பதற்கே எத்தனை ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் தெரியவில்லை

  நன்றி

 3. மிக மிக அருமையான பதிவு.
  படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வழிகிறது.
  எத்துனை பெரும் பேரு பெற்றவர் நரசிம்ம மேத்தா.
  அவர் தம் வாழ்வில் பாண்டுரங்கன் நேரடியாக நிகழ்த்திய லீலைகள் தான் எத்துணை எத்துணை.
  இறைவா உனது கருணை தான் எத்துணை.

  மேலும் சுந்தர்ஜி உங்களது ஆசைகளும் கூடிய விரைவில் நடக்க எங்களது வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள்.

 4. வணக்கம்…….

  மகான் நரசிம்ம மேத்தாவின் சரிதை வியப்பை அளிக்கிறது. விட்டலன் எத்தனை முறை மானுட வடிவில் சென்று அவருக்கு உதவியிருக்கிறார்! இது விட்டலனின் கருணையா? அல்லது நரசிம்ம மேத்தாவின் பக்தியா? இவரைப் போன்ற பக்தி நமக்கு வருமா? விட்டலனுக்கே வெளிச்சம்.

  ஜெய் விட்டல்……ஜெய் ஜெய் விட்டல்…….

 5. சுந்தர்ஜி
  எத்தனையோ அலுவல்களுக்கு இடையே முத்து முத்தான பதிவுகளை அளிக்கும் உங்களுக்கு பாராட்டு தெரிவிக்க இன்று தான் எனக்கு வாய்த்து உள்ளது. அனைத்து பதிவுகளை படித்தாலும் கடந்த இரண்டு பதிவுகளும் நம்மை பரவசபடுத்தும்படி மட்டுமல்லாது பக்தியின் வல்லமையினை காட்டுகிறது. படங்கள் அனைத்தும் சொக்க வைக்கும்படி உள்ளது. கண்டிப்பாக உங்கள் எழுத்துக்கள் புத்தகங்களாக அச்சேறி எங்களை போல் பலரும் பயன் பெற இறையருள் துணை புரியும். (உடுக்கை பய லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக கொடுப்பான், நரசி ஊமை ஆக இருந்தான். உடனே கிடச்சது . ஆனா நாம சும்மாவா இருந்தோம் ரைட் மந்திராக்கு முன்பு. இப்பவாது திருந்துணமே ! அதுவரைக்கு அந்த பயலுக்கு நன்றி ! ஹூம் )

 6. பதிவு அருமை…
  இதைப்போன்ற பக்திப் பொக்கிசங்களை புத்தக வடிவில் பார்க்க ஆவலாய் உள்ளோம். விரைவில் அது நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.. வாழ்த்துக்கள்..

  எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
  எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

  சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
  சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
  அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
  பல பல நல்லழகுகள் சமைத்தாய்!

  முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
  முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
  பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
  பரமா! பரமா! பரமா!

 7. நரசிம்ம மேத்தாவின் உன்னத வாழ்க்கையைப் படித்தவுடன் மனம் நிறைந்தது. கண்ணபிரானைக் கொஞ்சும் எம்பிரானின் தாய்முகம் கண்களை நிறைத்தது. நரசும்மமேத்தாவின் எளிய உருவமும் ருக்மணி சமேத பாண்டுரங்கணின் தரிசனமும் அருமை. பதிவிற்கு நன்றிகள்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *