Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

print
மீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்… நமது கருத்துக்களை இறுதியில் தந்திருக்கிறோம்.

ரயிலில் கிடைத்த பாடம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

IMG_4213

வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது

அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன். ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை , ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.

“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”

“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”

“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்

“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது

உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் .

இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”

“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்

“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,

“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்

“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”

சிரிப்பு வந்தது எனக்கு. “டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது

“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.

IMG_0027

“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .

திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்

“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்

“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .

அண்ணன், ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் , வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .

Corporate Slavesமலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.

(நன்றி : http://parthasarathyrengaraj.blogspot.in)

====================================================================

பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார்.

‘வியாபாரச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் அப்பதிவு தொகுக்கப்பட்டிருந்ததால்  மேற்படி பதிவும் அதில் வரும் சம்பவமும் உண்மையா அல்லது கற்பனையா என்கிற நமது சந்தேகத்தை கேட்டோம். உண்மையாக தனக்கு நிகழ்ந்த அனுபவம் தான் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நன்றி கூறி விடைபெற்றோம்.

மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!

=======================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

[END]

21 thoughts on “கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

  1. சுந்தர் சார் தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்… (நம் தள வாசகர்களையும் கேட்டுகொள்கிறேன், தவறான வார்த்தையை பயன்படுத்துவதற்காக) இது பளார் அல்ல செருப்படி. (மீண்டும் மன்னிகவும்).

    நான் சுய தொழில் செய்பவன். மிகவும் மோசமான பண நெருக்கடியில் உள்ளவன் இந்த நேரத்தில் இந்த பதிவை அதுவும் வீட்டில் சண்டை நடந்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருகையில் இப்படி ஒரு பதிவு இது எனக்காகவே அளித்த பதிவு போல் உள்ளது இதனால் எனக்கு என்ன பயன் என்றால் தொழிலில் எனக்கு நானே சில வரையரைகளை வகுத்துக்கொண்டு இருந்தேன் அதுவே எனக்கு தடையாக இருந்தது இன்று முதல் அந்த தடைகள் அனைத்தும் உடைந்து போக வேண்டும் என அந்த ஆண்டவனே எனக்கு அளிக்கும் செருப்படிதான் இது. நிச்சயம் என்னைப்போல் இன்னும் பல பேர் இதனால் பயன் பெறுவர் நான் இதை குறைந்தது 10 பேருக்காவது அனுப்புகிறேன். நன்றி

  2. சுந்தர் சார் காலை வணக்கம்

    சொல்வதற்கு வார்தைகளை இல்ல தங்களையும் சிற்பியா இருந்து செதுக்கிகொண்டு எங்க்ளையும் செதுக்கி கொள்ள வழிவகை செய்து தரும் தங்களுக்கு மனமார்ந்த ந்ன்றிகள்

    நன்றி

  3. வணக்கம்…….

    இது போன்ற கட்டுரைகள், நாம் என்ன நிலையில் இருக்கிறோம்….. என்ன செய்ய போகிறோம்…. என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே intra personal investigation செய்ய உதவுகின்றன………..keep it up……………..

    நன்றிகள்………..

  4. நம்மில் பலர் இப்படித்தான் கெளரவம் பார்த்து நாம் செய்ய வேண்டிய வேலைகளை அடுத்தவர்களை செய்யசொல்கிறோம். இந்த வேலை நம் வீட்டு கழிப்பறையில் ஆரம்பிகிறது.

    இந்த பதிவின் முடிவில் கூறப்பட்டுள்ள முன்று நீதிகளும் – சூப்பர் பஞ்ச். நண்பர் ஹரிதாஸ் அவர்களின் மனதில் இந்தப்பதிவு ஏற்படுத்தியுள்ள மாற்றம் – மிகப்பெரிய வெற்றி.

    செய்யும் தொழிலே தெய்வம்.

  5. Apt message–especially for me and all our working class members who are actually nothing but slaves !!

    Feel like someone slapped me rite now for being a corporate slave for such a long time…
    GOD has his ways of teaching a lesson to all!!

    Thanks to RM& RMS(RIGHTMANTRA & RIGHTMANTRA SUNDAR)
    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  6. இந்த கட்டுரை எழுதியவர் மிக அருமையாக எழுதி உள்ளார்.
    முக்கியமா, ஆரம்பத்தில் “சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும்..” – மிக அருமை.
    **
    இதே போன்ற சம்பவம் (எப்படி என்றால் சுய தொழில் மூலம் உள்ள ஒற்றுமை) என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது.
    நான் கல்லூரியில் பயிலும் போது கல்லூரி விடுதியில் தங்கிதான் படித்தேன். என்னை போன்று பல நூறு மாணவர்கள் என் கல்லூரியின் கீழ் உள்ள பத்திற்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கி பயின்று கொண்டு இருந்தனர். ஒவ்வொரு dept மாணவர்களுக்கும் மாறி, மாறி சிறு, பெரு தேர்வுகள் வரும் போது இரவு கண்விழித்து படிப்பது வழக்கம். எங்கள் கல்லூரியில் இதை போன்று இரவு படிப்பவர்க்கும் காலையில் எழுந்து படிப்பவர்க்கும் ஒருவர் மிதி வண்டியில் தேனீர் மற்றும் பஜ்ஜி, பிஸ்கட் வகையாரக்களை கொண்டு வந்து விற்ப்பார் ஒருவர்.
    **
    அவரின் வருமானம் (எனக்கு தெரிந்த வரையில்) தோராயமாக:

    (எப்படியும் ஒரு வேளைக்கு 200பேர் குறையாமல் தேனீர் அருந்துவர் – இரவு நேரம் ஆதலால் – இவருக்கு போட்டியாக campus -இல் விற்க ஆள் யாரும் இல்லை) – 200*6 = 1200
    பஜ்ஜி வகை வியாபாரம் – 200*5 = 1000
    இருவேளை (மாலை, இரவு – peak time; மற்றும் காலையில் சுமாரான வியாபாரம்) கணக்கிட்டால் = 2200*2 + 600(காலை வேலைக்கு) = 5,000ரூபாய் – அவர் செலவு போக 3,000ருபாய் வந்தால் கூட – மாதத்திற்கு தேர்வு நாட்கள் எப்படியும் 15நாட்கள் குறையாமல் இருக்கும் மற்ற நாளில் கால் பங்கு விற்பனை என்றால் கூட 50,000ருபாய் குறையாமல் சம்பாதிப்பார்.
    **
    நாங்கள் (பொறியாளர்கள்) எல்லாம் மாதம் 30,000ருபாய் கூட சம்பாதிக்க திணறும் வேளையில் அவர் நிச்சயம் பல படிகள் மேலே.

    அப்போதெல்லாம் நான் இவரை பற்றி பல கணங்கள் சிந்தித்து உள்ளேன். சுய தொழில் எதுவாயினும் அதில் நாம் எப்படி பிறரின் கீழ் வேலை செய்யும் போது போடுகிறோமோ அதே உழைப்பையும் நேரத்தையும் இதில் போட்டால் நாம் எங்கோ சென்று விடலாம்.
    **
    இந்த தகவலை எங்களுக்காக சிரமப்பட்டு சேர்த்த சுந்தர் அவர்களுக்கும் மற்றும் கட்டுரையாளருக்கும் நன்றிகள் பல.
    **
    **சிட்டி**.

  7. நண்பர் haridoss அவர்களின் மனநிலைமை தான் (சற்று ஏறக்குறைய) என்னிடம்.
    **
    நம்மை நன்றாக புரிந்த கொண்டவரே குத்திய போதுதான் நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று புரிந்தது.

    அப்படி இருக்கையில் நேற்று இட்ட பதிவும் (“காலடியில் வைர சுரங்கம்..) மற்றும் இந்த பதிவும் ஆறுதலாக, உத்வேகத்தை தருபவனவற்றாக உள்ளது.
    **
    ஆசிரியர்க்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.
    **
    “அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
    அங்கோர் காட்டினில் பொந்திடையில் வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு – கழல்வீரத்திற்
    குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”.
    **
    **சிட்டி**.

  8. சுந்தர் சார்,
    “இது பளார் அல்ல செருப்படி” என்று நம் வாசகர் Horidhoss சொன்னது உண்மை என்று நினைகிறேன். இதை எழுதிய திரு பார்த்த சாரதி அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதை நீங்கள் எங்களுக்கு எடுத்து சொன்னது மிக அருமை.
    நன்றியுடன் அருண்.

  9. முதலில் இந்த பதிவை எழுதிய திரு பார்த்தசாரதி அவர்களுக்கு எமது நன்றிகள். அதை பதிவாக வெளியிட்ட தங்களுக்கு கோடி நன்றிகள்.

    // எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். – பஞ்ச் டயலாக் . நாம் எது எதற்கெல்லாமோ கௌரவம் பார்க்கிறோம். இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும்.

    இந்த பதிவை படிக்கும் பொழுது நமக்கு சுரீர் என்று சாட்டையடி நம் கன்னத்தில்விழுந்தது போல் இருந்தது.

    நாமும் திரு ஹரிதாஸ் சொன்னதை ஆமொதிக்கிறோம்.

    நன்றிகள் பல
    உமா

  10. அருமையான பதிவு.
    வியாபார சிறுகதைகள் என்ற தலைபிற்கு பதில் சுய முன்னேற்ற கட்டுரை என்று கூட சொல்லலாம்.
    எல்லா வரிகளும் பளார் பளார் தான்.
    இந்த பதிவை படித்து பல பேர் தம் தொழில் பாதையில் மாற்றம் கொண்டுவருவார்கள்.
    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று புரிந்து கொள்வார்கள்.
    ஹரிதாஸ், சிட்டி, அருண்சார், ஹரி எல்லோருக்கும் இந்த பதிவு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரு புதுமையான வரவேற்க தக்க பதிவு.
    நன்றி.

  11. டியர் சுந்தர் ஜி ,

    திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

    இந்த வரியை என் மனதில் தினம் தோறும் கூறி கொண்டு இருப்பேன்.
    அருமையான பதிவு.எந்த வேலை செய்தால் என்ன , அதில் பயமும் பக்தி யும் இருந்தால் போதும் நாம் எளிதாக ஜெயித்துவிடலாம்.

    கஷ்டப்பட்டு செய்யும் வேலையே இஷ்டப்பட்டு செய்யவேண்டும்.

    நன்றி,

    V ஹரிஷ்

  12. சிறப்பான பதிவு என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய பதிவுதான். வொய்ட் காலர் ஜாப் தான் செய்வேன் என அடம்பிடிக்கும் நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டியத் தகவல். ஒவ்வொரு கல்லூரிகளிலும் இப்பதிவை மாணவர்களின் கண்களீல் படுமாறு ஒட்டி வைக்க வேண்டும். நன்றி.

  13. இந்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது அந்த உழைப்பாளி தானாக முன்வந்து வரி கட்ட வேண்டும் என்று சொல்வதுதான். அப்படி எத்தனை பேர் முன் வருகிறார்கள்? நடுத்தர வர்க்கம் எப்படி இருந்தாலும் கட்ட வேண்டியதுதான். மேல் தட்டு வர்க்கத்தினருக்கு வரி ஏய்க்க உதவி செய்ய ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதன் நடுவில் இப்படியும் ஒரு நபர். உண்மையிலேயே வணங்கத்தக்க ஒருவர்தான்!

    1. உண்மை தான். நல்லதொரு பாயிண்ட்டை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      – சுந்தர்

  14. அருமையான பதிவு!!
    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.

    ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விசயத்தில் திறமைசாலியாக இருப்பார்கள். யாரையும் கீழாக எண்ணுவது/மதிப்பது கூடாது.

    பணம் இருப்பவனுக்கு மட்டுமே மரியாதை தருவது கேவலம்.
    பணம் இருப்பவன் கடவுளைக்க் கூட அருகில் பார்க்கலாம் என்ற நிலை நம் கோவில்களில் மாறவேண்டும்!

    கூஜா தூக்குபவன் கோபுரத்திலும் கூடை தூக்குபவன் கொடுமையிலும் இருக்கும் நிலை மாறவேண்டும்!

    இயந்திங்களை உருவாக்குவது சாதனை அல்ல
    நல்ல இதயங்களை உருவாக்குவதே சாதனை..

    ஏற்றத்தாழ்வு இல்லாத எண்ணங்கள் இருப்பவனே உலகில் மிகப்பெரிய பணக்காரன்.தளரா மனம் உள்ளவர்களின் முயற்சிக்கு இறைவன் கரங்களும் விரைந்து உதவிக்கு வரும்…

  15. Hi சுந்தர் & All,

    நன்றி , மீண்டும் எழுதத் தூண்டும் உங்களின் பாராட்டிற்கு !!

    1. மிக்க மகிழ்ச்சி பார்த்தசாரதி அவர்களே. ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து பயன்படும் என்பதில் ஐயமில்லை.

      கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
      வேட்ப மொழிவதாம் சொல் (குறள் 643)

      – சுந்தர்

  16. மிகவும் பயனுள்ள தகவல். என்ன வேலை பார்க்கிறோம் என்பது முக்கியமில்ல . சம்பாதிக்க எவ்வளவோ வழி இருக்கு அதனை ஆராய்ந்து நல்லவிதமாக பயன்படுத்தி நாமும் முன்னேறலாம், நமது நாட்டையும் முன்னேற்றல்லாம்.

  17. SIR,

    I WANT TO SPEAK WITH YOU REGARDING THIS BUSINESS MAN. IF YOU DO NOT MIND, CAN I GET HIS PHONE NUMBER. IF I GET THIS, IT WILL BE A NEW PATHWAY FOR MY LIFE TOO..

    THANKS,

    SELVARAJ

  18. சார் மிக பெரிய தொழில் ரகசியத்தை வெளிட்டு விட்டீர் .எத்தன பேர் காலம்ப போராங்களோ .சாரி சார் இதை நீங்கள் செய்து இருக்க குடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *