சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலுக்கு ஏகாம்பரேஸ்வரர் – காமாக்ஷி திருக்கல்யாண உற்சவத்திற்கு ஒரு நாள் நாம் செல்லும்போது அங்கு, சுவற்றில் காணப்பட்ட ஒரு லேமினேடட் திருவள்ளுவர் படம் நமது கவனத்தை ஈர்த்தது. அருகே சென்று படித்தபோது புரிந்தது, மிக பெரிய லட்சியம் ஒன்றை கையில் எடுத்துகொண்டிருக்கும் சிறுவன் ஒருவன் அளித்த திருவள்ளுவர் படம் அது என்று.
அதில் காணப்பட்ட அந்த சிறுவனின் கடிதம் கூறியது என்ன தெரியுமா?
எனது பெயர் குறள் மகன். எனது தந்தையார் பெயர் பாஸ்கரன். நான் நான்காம் வகுப்பில் 1330 குறளையும் ஒப்புவிக்கும் சான்று பெற்று கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். எனது நோக்கம், எங்கெல்லாம் தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று மாணவ மாணவிகளை சந்தித்து அவர்கள் திருக்குறள் கற்க ஊக்கம் கொடுத்து அவர்களுக்கு திருக்குறள் நூலை இலவசமாக வழங்குவது. மேலும் சுற்றுச் சூழலை பாதுக்காக்க அப்பள்ளியில் மரக்கன்றுகள் நடுவது. ஒவ்வொரு இல்லத்திலும் திருவள்ளுவர் படத்தை அமைக்கச் செய்வது, ஒவ்வொருவர் கைகளிலும் திருக்குறள் நூலை தவழ விடுவது, திருக்குறளை மக்கள் மனதில் பதிய வைத்து திருக்குறளின் சிறப்புக்களை உலகிற்கு பறைசாற்றுவது என்ற லட்சியத்தோடு தொடர்ந்து செயலாற்றி வருகிறேன். திருவள்ளுவர் படத்தை ஒவ்வொருவர் இல்லத்திலும் சென்று சேர்க்கும் என் முயற்சிக்கு தங்களின் பங்களிப்புக்கு நன்றி.
அன்புடன்,
பா.குறள் மகன்
ஆம்…அன்று சீர்காழியில் பார்வதி தேவி பால் கொடுத்ததால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் இறைவன் குடிகொண்டுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனின் புகழ் பாடினார்.
அதுபோல் இன்று திருவாரூரில் ஒரு சிறுவன் ஆரூர் தியாகேசர் மற்றும் கமலாம்பாள் அருளால் மூன்று வயதில் கற்க தொடங்கி திருக்குறளில் உள்ள 1330 குறளையும் கற்று அதில் அடங்கியுள்ள அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பால் என்ற முப்பாலையும் அருந்திவிட்டு திருக்குறளை பரப்புவதில் உறுதி கொண்டு பள்ளி தோறும் பயணம் தொடங்கி 8.9.2011 நாடு தோறும் உள்ள உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கெல்லாம் சென்று அப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் நூலை இலவசமாக வழங்கி அவர்கள் திருக்குறள் கற்க ஊக்கம் கொடுத்து திருக்குறளை பரப்பி கொண்டு வருகிறான்.
இதுவரை 306 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்றுள்ளார். 24,300 திருக்குறள் நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாது ‘நாடு செழிக்க வேண்டுமானால் மழை வேண்டும். மழை வேண்டுமானால் மரம் வேண்டும்’ என்பதை உணர்த்தும் நோக்கில் தான் சென்ற பள்ளிகளிலெல்லாம் மரக் கன்றுகளை நட்டு மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறான். இதுவரை 3060 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.
அன்று அந்த திருஞானசம்பந்தரோ ஆலயங்களுக்கு எல்லாம் சென்று இறைவனின் புகழைப் பாடினார். இன்று இந்த திருஞானசம்பந்தரோ பள்ளிகளுக்கெல்லாம் சென்று திருக்குறளின் புகழைப் பாடுகிறான் .
இச்சிறுவன் பெயர் சுபாஷ் சந்திரபோஸ். திருக்குறளின் மீது தான் கொண்ட பற்றின் காரணமாக தன்னை திருக்குறளுக்கு அர்பணிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தான். இவரது தந்தை பாஸ்கரன் தன் மகனை திருக்குறளுக்கு அற்பணித்து ‘குறள் மகன்’ என்று பெயரிட்டார்.
எத்தனை பெரிய சாதனை! எப்படி இது சாத்தியமாயிற்று ?
இந்த சாதனை சிறுவனை நமது தளத்தின் சார்பாக சந்தித்து பேட்டி எடுக்கவும், அவரை கௌரவிக்கவும் விரும்பினோம். படத்தில் காணப்பட்ட அவரது தந்தை பாஸ்கரன் அவர்களை தொடர்பு கொண்டு குறள் மகனின் அரும்பணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு நமது தளத்தை பற்றியும் சில வார்த்தைகள் கூறி, குறள் மகனை நேரில் சந்திக்கும் நமது விருப்பத்தை தெரிவித்தோம்.
அடுத்த சில நாட்களில் நமது திருவாரூர் பயணம் முடிவானது. நமது திருவாரூர் பயணத்தை பற்றி தளத்தில் கூறி, நமது வாசகர்கள் எவரேனும் திருவாரூரில் இருந்தால் மேற்படி சந்திப்பில் நம்மோடு பங்கேற்கலாம் என்றும் அறிவித்தோம்.
இதையடுத்து பாண்டீஸ்வரி என்ற வாசகி தமது குடும்பத்தினரோடும் தோழிகளோடும் சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்.
முந்தைய தினம் பொள்ளாச்சி சென்று அங்கு ஒரு திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டு நேரே திருவாரூர் பயணம். திருவாரூரில் நண்பர் ஒருவரின் வீட்டில் இறங்கி குளித்து முடித்து தயாராகி முதலில் தியாகேசரையும் அன்னை கமாலாம்பாளையும் தரிசிக்க தீர்மானித்தோம். குறள் மகனின் தந்தை பாஸ்கரன் அவர்களிடம் விஷயத்தை கூறி, குறள் மகனுடன் நாம் தியாகேசரை தரிசிக்க விரும்பும் விஷயத்தை சொன்னோம். கோவிலுக்கு பக்கத்தில் தான் வீடு என்பதால், அவர் உடனே வருவதாக சொன்னார்.
அந்த நேரம் நம்மை தொடர்புகொண்ட வாசகி பாண்டீஸ்வரி அவர்களிடம், கோவிலுக்கு போகும் விஷயத்தை சொன்னவுடன் அவர் தானும் வருவதாக சொன்னார்.
இதையடுத்து அனைவரும் தியாகேசர் கோவிலிலேயே சந்தித்தோம். குறள் மகனை நம் வாசகியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அனைவரும் சேர்ந்து தியாகேசரை தரிசிக்க புறப்பட்டோம்.
மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய ஆலயம், இந்த திருவாரூர் தியாகேசர் ஆலயம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.
வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.
இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்’ என்றால் ஏழு. திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.
இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை ‘தியாகராஜர்’ என்பர்.
கோவிலை பொறுமையாக முழுமையாக சுற்றிப் பார்க்க ஒரு நாள் ஆகும். நாம் அடுத்தடுத்து பலவேறு நிகழ்சிகளில் பங்கேற்க திட்டம் வகுத்து வந்தமையால், கமலாம்பாளையும் தியாகேசரையும் தரிசித்துவிட்டு குறள் மகன் வீட்டிற்கு சந்திப்புக்காக செல்ல தீர்மானித்தோம்.
குறள் மகனுடன் தியாகேசரை தரிசித்தது நம்மால் மறக்க முடியாது. சாட்சாத் அந்த திருஞானசம்பந்தருடன் தரிசித்தது போன்றதொரு உணர்வு. எத்தனையோ ஆலயங்களுக்கு சென்றிருக்கிறோம் இறைவன் நம்மை ஏறெடுத்தும் பார்த்திருப்பானா என்று தெரியாது. ஆனால், நிச்சயம் திருவாரூரில் பார்த்திருப்பான். காரணம், நாம் குறள் மகனுடன் சென்றதால்.
உள்ளே தாயார் சன்னதியில், உள்ள அர்ச்சகர் ஒருவர் குறள் மகனை அடையாளம் கண்டுகொண்டு, “தம்பி, உன்னோட செயல் இந்த திருவாரூருக்கே பெருமை தேடி தருது. ரொம்ப சந்தோஷம். எங்கே உதடு ஒட்டாத திருக்குறள் ஒன்னை சொல்லு பார்ப்போம்!” என்று கூற, அடுத்த நொடி மடை திறந்த வெள்ளமாய் குறள் மகன், சட்டென்று “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்!” என்றான். (இதன் பொருள் : நீ எதன் மீது விருப்பம் இல்லாமல் இருக்கிறாயோ அதனால் உனக்கு ஒரு போதும் துன்பம் இல்லை.)
“சபாஷ்… வெரிகுட்!” என்று பாராட்டினார் குருக்கள்.
பிரகாரத்தை சுற்றி வரும் வேளையில், திருவாரூர் நகர காவல் துறை அதிகாரி ஒருவர் எதிர்பட, அவரும் குறள் மகனை நலம் விசாரித்துவிட்டு அவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்று சும்மாவா சொன்னார்கள்? உடனே நமது காமிராவில் படமெடுத்தோம். (அந்த காவல் துறை அதிகாரி பெயர் என்ன தெரியுமா? தியாகராஜன்!)
பேசிக்கொண்டே வருகையில் பாண்டீஸ்வரி அவர்கள் தாம் கருத்தரித்திப்பதாக நல்ல செய்தி ஒன்றை சொன்னார்கள். உடனே அந்த கோவிலில் வைத்தே குறள் மகன் மூலம் நாம் கொண்டு வந்திருந்த பெரிய சைஸ் சுந்தரகாண்டம் நூல் ஒன்றை பரிசளிக்க விரும்பினோம்.
கோயிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த ஆஞ்சநேயர் சன்னதி முன்னிலையில், பாண்டீஸ்வரி அவர்களுக்கு சுந்தரகாண்டம் பரிசாக அளிக்கப்பட்டது. மிக மிகப் பெரிய மனிதர்களை நாம் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு இதை தருவது நம் வழக்கம். நீங்கள் கருத் தரித்திருப்பதாக சொன்னதால், இதை உங்களுக்கு தருகிறோம். தொடர்ந்து சுந்தரகாண்டத்தை நித்யம் படித்து வாருங்கள். குழந்தை அனுமன் அருளால் பக்தியுடனும் நல்ல குணத்துடனும் பிறக்கும் என்று ஆசி கூறி பரிசளித்தோம். அன்று சனிக்கிழமை. அனுமனுக்கு மிகவும் உகந்த நாள்.
நமது இந்த எதிர்பாராத பரிசால், திக்குமுக்காடிப் போனார் பாண்டீஸ்வரி. தொடர்ந்து வாசகியர் நமக்காக வாங்கி வந்த திருவாரூர் திருக்கோவில் தல வரலாறு நூலை ஆலயத்தில் உள்ள கோசாலையில் வைத்து குறள் மகனின் கைகளால் பெற்றுக்கொண்டோம்.
கோ-சாலையை பரமாரிப்பவரை தனியே அழைத்து, கோ-சேவையின் மகத்துவத்தை கூறி, அவர் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து, பசுக்களை நன்றாக கவனித்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். (நீங்களும் இதை செய்யவேண்டும் என்பதற்காகத் தான் இதை சொல்கிறோம்.)
தொடர்ந்து மேற்கு பிரகார வீதியில் உள்ள குறள் மகனின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. குறள் மகனின் வீடு முழுவதும் ஒரே திருவள்ளுவர் – திருக்குறள் மயம் தான்.
பாண்டீஸ்வரி அவர்களின் கணவரும் பரப்பபான தனது பணிகளுக்கு இடையே சந்திப்புக்கு வந்திருந்தார். வியாபாரத்தை விட்டுவிட்டு அவர் வந்திருப்பதால் அவரை உடனே அனுப்ப வேண்டி, அவர் இருக்கும்போதே குறள் மகனை கௌரவிப்பது, நினைவுப் பரிசு வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் முடித்துவிட்டோம்.
நம் தளம் சார்பாக திருவாரூர் தந்த திருஞானசம்பந்தன் குறள் மகனுக்கு பொன்னாடை போர்த்தி பின்னர் நமது தினசரி பிரார்த்தனை படமும் பரிசளிக்கப்பட்டது.
தவிர, மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி நூலும் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து குறள் மகன் சார்பாக நமக்கு திருவள்ளுவர் படமும் திருக்குறள் நூலும் பரிசளிக்கப்பட்டது. (இன்றும் காலை எழுந்தவுடன் நாம் கண்விழிப்பது அந்த திருவள்ளுவர் படத்தை பார்த்து தான்.)
சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, திருக்குறளுக்கு என்று www.voiceofvalluvar.org என்ற இணையத்தை துவக்கி திருக்குறள் பணியையை செவ்வனே செய்து வரும் விசாகப்பட்டினம் வணிகவரித் துறை ஆணையர் (சுங்கம் மற்றும் கலால்) நண்பர் திரு..ராஜேந்திரன் அவர்களை தொடர்புகொண்டு குறள் மகனை சந்திக்க நாம் வந்திருக்கும் விஷயத்தை கூறி, குறள் மகனிடம் பேசுமாறு செய்தோம். குறள் மகனின் அளப்பரிய திருக்குறள் பணியையும் சாதனைகளையும் பாராட்டிய திரு.ராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ். அவர்கள் திருக்குறள் பணி செய்பவர்களை தேடிச் சென்று கௌரவிக்கும் நமது பணியையும் பாராட்டி நம்மை உற்சாகப்படுத்தினார்.
இதுவரை பல நூறு இல்லங்களை அலங்கரித்திருக்கும் அந்த படத்தை ஒவ்வொருவரிடம் பரிசளிக்கும்போது அவர்கள் பெயர் மற்றும் முகவரியை தனியாக ஒரு லெட்ஜரில் அவர்களின் கையெழுத்தை பெற்று குறித்துக் கொள்கின்றனர்.
11 வயதே நிரம்பியுள்ள ஒரு சிறுவனுக்கு எப்படி இந்த திருக்குறள் ஆர்வம் ஏற்பட்டது? இதுவரை அவன் ஆற்றியுள்ள திருக்குறள் பணிகள் என்னென்ன? இந்த சமுதாயத்துக்கும் சக மாணவ செல்வங்களுக்கும் அவன் கூற விரும்புவது என்ன?
குறள் மகனின் மொழியிலேயே அதை கேட்போமா?
நான் திருவாரூர் வேலுடையார் மேனிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது எனது தந்தை, தாலாட்டிற்கு பதிலாக திருக்குறளைத்தான் கூறுவார். திருக்குறளின் பெருமை, அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி அடிக்கடி எனது தந்தையும், தாயம் கூறுவார்கள். இவ்வாறு சிறு வயதிலேயே எனது பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் திருக்குறளின் தாக்கத்தை என் மனதில் ஏற்படுத்தினர். மக்களை நல்வழிப்படுத்தும், சிறந்த வழிகாட்டி நூலாகிய திருக்குறளை நாமும் முழுவதுமாக கற்கவேண்டும். அதன் பெருமைகளைபற்றி அனைவரிடமும் கூற வேண்டும் என்ற ஆசை சிறு வயதிலேயே ஏற்பட்டது எனது பெற்றோர்கள் மற்றும் ஆஸ்ரியர்களின் துணையோடு 1,330 திருக்குறளையும் கற்றேன்.
திருவாரூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் சந்திரசேகரனிடம், முதன் முதலில் 1,330 திருக்குறளை, அதன் பொருளோடு கூறினேன். அவர் என்னுடைய திறமையை கண்டு வியந்ததோடு, தொடர்ந்து இது போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என எனக்கு ஊக்கம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் திருக்குறளை ஓப்புவித்து பாராட்டுதலை பெற்றேன்.
1330 திருக் குறளையும் வரிசையாகவும், தலை கீழாகவும், அதிகாரத்தைக் குறிப்பிட்டால் குறளையும், குறளை குறிப்பிட்டால் அதிகாரம் மற்றும் அதன் வரிசை எண்னையும் சற்றும் சிந்திக்காமல் சொல்லி வருவதால் குறள்மகனை பாராட்டி பலர் திருவாரூரின் திருஞானசம்பந்தர் திருக்குறள் வித்தகர், இளம் கவி வள்ளுவர் என பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளனர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சான்றிதழும், பரிசுத் தொகையும் குறள்மகன் பெற்றுள்ளார்.
அனைவரின் பாராட்டு, தொடர் ஊக்குவிப்பு, என்னுடைய விடாமுயற்சி ஆகியவற்றினால் தான் விருதுகளையும், பல்வேறு பதக்கங்களையும் பெறமுடிந்தது என்று கூறுகிறார்.
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கு ஏற்ப நான் பயின்ற திருக்குறளின் பெருமைகளை பற்றி அனைவரிடமும் எடுத்துக் கூற வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த ஆசையைப் பற்றி என் பெற்றோர்களிடம் கூறிய போது அவர்கள் மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
தலையாயகடமை
‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.’
என்னை மிகவும் கவர்ந்த குறள்களில் ஒன்றாகும். இக்குறள் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான குறளாகும்.
‘ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்’
என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க ஒவ்வொரு இளைஞர்களும், கல்வியோடு நின்று விடாமல்,ஏதாவது ஒரு துறையில் தனது திறமைகளை வெளிக்காட்டி பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கவேண்டும். இதுவே நமது தலையாய கடமையாகும்.
எதிர்கால லட்சியம்
நாம் வாழ்க்கையில் எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் இரண்டே வரிகளில் மிகவும் அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. தொன்மையான இந்த மொழிக்கு பெருமை சேர்க்கின்ற திருக்குறளை நாம் அனைவரும் கண்டிப்பாக கற்கவேண்டும். கற்பதோடு நின்று விடாமல் அதன்படி வாழவும் வேண்டும்.
திருக்குறளில் மட்டுமின்றி படிப்பிலும் படுசுட்டியாக திகழும் இவன் எதிர்கால லட்சியம் உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமைகளை பரப்பவேண்டும். முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் விருது வாங்க வேண்டும் என்பதாகும்.
கற்பது கையளவு, கல்லாதது உலக அளவு என்பதற்கு ஏற்ப இவ்வுலகில் நாம் கற்கவேண்டியது நிறையஉள்ளது. திருக்குறள் போன்று அனைத்து தமிழ் நூல்களையும் படித்து தமிழ்மொழியின் சிறப்புகளை உலகம் முழுவதும் பறைச்சாற்றுவேன் என கூறிவிடைபெற்றார்.
திருக்குறள் மீது அளவற்ற பற்று கொண்ட குறள்மகனை அவனது தந்தை பாஸ்கரன் கடவுளுக்கு பிள்ளைகளை தத்துக் கொடுப்பது போல (நேர்ந்து விடுதல்) திருவள்ளுவருக்கே தனது மகனை தத்துக் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ விழா சென்ற ஆண்டு திருவாரூரில் பல தமிழ் அறிஞர்கள் முன்னிளையில்லும் சான்றோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களையும் அவர்களது கனவுகளையும் குழி தோண்டி புதைத்துவிட்டு தங்களை சுரண்டும் சினிமா நடிகர்களுக்கு தத்து போய்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு மத்தியில் திருவள்ளுவருக்கு ஒரு சிறுவன் தத்து போயிருக்கும் செய்தி நமக்கு வித்தியாசமானது தான்.
[END]
அன்புள்ள சுந்தர்
வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..
வாழ்க வளர்க உங்கள் பணி.. வளர்க உங்கள் தொண்டு…
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
குறள் மகனுக்கு நம் வாழ்த்துக்கள்…………
மிகவும் நீண்ட அற்புதமான பதிவு. நாம் வெகுநாட்களாக இந்த பதிவிற்காக காதிருந்தோம். குறள் மகனின் சாதனைகளைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. தாங்கள் தேனிக்களைப் போல் சாதனையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து அதை பதிவாக அளித்து நாங்கள் படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
திருவாரூர் குளம், அம்பாள், சுவாமி, போடோஸ் மிகவும் அருமை. கமலாலயக் குளத்தை பார்ததால் கொள்ளை அழகாக உள்ளது. பிரகாரத்தை பார்த்தால் நாம் இந்த கோவிலில் உழவாரபனி செய்யவேண்டும் போல் உள்ளது.
முதலாக குரல் மகனின் பெற்றோருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெற்றோகளின் பெயரை காப்பாற்ற இந்த மாதிரி ஒரு பிள்ளை போதும். அவர்கள் இந்த குழந்தையை பெற்றதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள்.
குறள் மகனின் அலற்பர்கரிய ஆற்றலுக்கு ஒரு ராயல் salute. அந்த சிறுவன் மேலும் மேலும் பல விருதுகளை குவிக்க வாழ்த்துக்கள். அனைத்து பெற்றோகளும்., மாணவ மாணவிகளும் படிக்க வேண்டிய உன்னதமான பதிவு
நன்றி
உமா
குறள் மகனுக்கும் , தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பள்ளியில் படித்த பொழுது எனது தமிழாசிரியர், வாழ்வில் நாம் ஒரே ஒரு திருக்குறளைப் பின்பற்றிவந்தால் போதும். நம் வாழ்வு மேன்மையடையும் என்றார். அதன் பலனாக நான், சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மையறிந்து எனும் குறளைப் பின்பற்றி வருகிறேன். இதன் காரணமாக நாம் பேசும் எவ்விஷயமும் ஆதாரமுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்காகவே தேடித்தேடி நல்ல விஷயங்களைக் கற்று கொண்டு வருகிறேன். மேலும் தற்பொழுது, தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலால் பெண் எனும் குறளைப் பின்பற்றுவது என முடிவு செய்து அதன் படி நடந்து வருகிறேன். கமலாலயக் குளத்தின் அழகும், திருவாரூர் தியாகராஜப் பெருமானின் அருளையும் அருந்தினோம். திருக்குறள் மகனின் சேவை மென்மேலும் சிறக்க திருவள்ளுவப் பெருமான் அருள வேண்டும்.
ஒரு தனிப் பதிவாக சொல்லக் கூடிய விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். இறைவன், மிக மிக சரியான ஒரு துணையை ஞானப்பிரகாசம் அவர்களிடம் சேர்த்துள்ளான்.
திருக்குறள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றுக்கும் மதிப்புக்கும் எனது பாராட்டுக்கள்.
– சுந்தர்
ம்ம்ம் இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்….!!!
நீண்ட ,இனிமையான பதிவு..
குறள் மகனுக்கும் , உங்களுக்கும் கீழே வரும் குறள் பொருத்தமாக இருக்கும்…..
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
Couplet 399
Their joy is joy of all the world, they see;
Thus more The learners learn to love their cherished lore.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
நன்றி சார்…!
உண்மை தான் எழுதவதற்கே மிகவும் இனிமையாக உணர்ந்தேன்.
– சுந்தர்
குறள் மகனுக்கும் அவனுடைய திறமைக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்..