ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் அவன் தனிப்பட்ட குணங்களும் குடும்ப சூழ்நிலைகளும் எந்தளவு காரணமோ அதே அளவு அவன் கொண்டுள்ள நட்பும் மிக மிக முக்கியமான ஒரு காரணம் ஆகும். எனவே தான் தனது உலகப் பொதுமறையில் வள்ளுவர் நட்பு தொடர்பாக மட்டும் திருக்குறளில் நான்கு அதிகாரங்களை தந்திருக்கிறார்.
உயர்ந்த லட்சியங்களையும் நற்குணங்களையும் கொண்டுள்ளவர்கள் நட்பையே நாம் என்றும் விரும்பி வைத்துக்கொள்ளவேண்டும். தீயோரிடம் நட்பு கொண்டால் நிச்சயம் அதற்குரிய விலையை ஒரு நாள் கொடுத்தே தீரவேண்டும்.
நட்பு என்ற சொல்லையே இன்றைக்கு பலர் தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆகையால் தான் பலவித துன்பத்துக்கும் ஆளாகிறார்கள். நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியது தான் இது. கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் மது அருந்துவதற்கும் கூடுபவர்கள் நண்பர்கள் அல்ல. தரங்கெட்ட விஷயங்களில் நாம் இறங்கும்போது துணை வருபவர்கள் நண்பர்கள் அல்ல. ஒரு வகையில் நமது எதிரிகள்.
நாம் நல்ல விஷயங்களில் ஈடுபடும்போது, நம்மை உற்சாகப்படுத்தி உடன் வருபவர்களே உண்மையான நண்பர்கள்.
சுயநலமே குறிக்கோள் என்று வாழ்ந்து, ஒரு பிரச்னை என்றால் சத்தமேயின்றி காணாமல் போய்விடுகிறவர்களை எல்லாம் இன்று சிலர் நண்பர்கள் என்று கூறி கொண்டாடி வருகின்றனர்.
எனவே வாசகர்களே, உங்கள் நண்பனை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள். உங்கள் துன்பத்தின் போது உடனிருந்து, ஒரு நல்ல உயர்ந்த இலட்சியத்திற்காக உங்களை ஊக்கப்படுத்தும், அதற்கு துணை புரியும் ஒருவனை நண்பனாக தேர்ந்தெடுங்கள்.
உங்களை ஊர் சுற்ற வைத்து, மது, புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமை ஆக்க வைக்கும் ஒருவனை மறந்தும் கூட உங்கள் நண்பனாக ஆக்கிவிடாதீர்கள்.
உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வது எளிது. நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள், முகநூலில் நமது பதிவுகளுக்கு லைக் போடுபவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகிவிடமாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
நாம் தவறு செய்கின்ற பொது கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும். (இதுவும் வள்ளுவர் கூறுவது தான்.)
எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்று கூறுபவர்களுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது. காரணம் அவருக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். ஆனால் ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் என்று ஒருவருக்கு ஒருசிலர் தான் இருக்க முடியும். காரணம் அறிமுகம் என்ற நிலையில் இருந்து ஒரு நண்பன் என்ற நிலைக்கு வந்து நெருங்கிய நண்பன் என்ற நிலைக்கு மாற பல மாதங்கள் ஏன் வருடங்கள் ஆகும்.
நம் துன்பத்திற்கான காரணங்களை யாரை நம்பிச் சொல்கிறோமோ, அவர்களே அதை உபயோகப்படுத்தி ஒருநாள் நம்மை கதறி அழவைத்துவிடுவதும் உண்டு. எஎனவே நம் துன்பத்திற்க்கான காரணங்களை மற்றவர்களிடம் சொல்லி ஆறுதல் தேடுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சோதனைக் காலங்களில் உடனிருந்து, துன்பங்களுக்கு தோள் கொடுத்து, இன்பங்களில் பங்குகொண்டு, வீழ்ச்சியில் ஆறுதல் கூறி, வெற்றியில் உற்சாகபடுத்தி, மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நண்பன். பணதிர்க்கோ, பதவிக்கோ, அல்லது உங்களிடம் வேறு எதையேனும் எதிர்பார்த்தோ இருப்பவன் நண்பர் அல்ல.
நல்ல நட்பு உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். கூடா நட்பு உங்களை அழித்துவிடும்.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. (குறள் 811)
(பொருள் : நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.)
நாம் பிறருக்கு நல்ல நண்பனாக இருப்போம். இருந்தால்… நாமும் நல்ல நண்பர்களையே பெறுவோம்.
நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
“நல்ல நண்பர்கள்” எனக்கு வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் தங்களை நல்ல நண்பர்கள் என்று மற்றவர்கள் போற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.
எந்த நிறக் கண்ணாடியைப் போட்டு இந்த உலகத்தைப் பார்க்கிறோமோ அந்த நிறத்திலேயே பார்ப்பவைகள் தெரிவதுபோல நல்ல நட்புக்கான குணங்களோடு நண்பர்களைத் தேடினால் சிறந்த நண்பர்கள் நிச்சயம் நமக்குக் கிடைப்பார்கள்.
வழக்கமான பதிவுகளுடன் நாளை சந்திப்போம்…
==================================================================
Also check :
நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?
==================================================================
[END]
HAPPY FRIENDSHIP DAY.
BELATED FRIENDSHIP DAY WISHES ……..
பதிவு மிகவும் நன்றாக உள்ளது அவசரத்தில் தயாரித்தாலும் ஆழமான கருத்துக்கள் அடங்கி உள்ளது, நாம் நமது நண்பர்களை தேர்ந்து எடுப்பதற்கு முன் நாம் நான் மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் ஆபத்து காலத்தில் நம்மிடம் கூடவே இருந்து நமுடைய சுக துக்கத்திலும் பங்கேற்பவனே உண்மையான நண்பன். ”TRUE FRIENDS CRY WHEN YOU LEAVE ; FAKE FRIENDS LEAVE WHEN YOU CRY’ SUPERB QUOTE.
இந்த பதிவில் ஒவொரு பாராவும் தெள்ளத் தெளிவாக உள்ளது.
நன்றி
உமா
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்…
மிகவும் அருமையான பதிவு. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நட்பு , தீ நட்பு ,கூடா நட்பு , பெரியாரை துணை கோடல் , சிற்றினம் சேராமை என்ற 5 அதிகாரங்களையும் திருவள்ளுவர் நட்புக்காகவே எழுதியுள்ளார் என்றால் அதன் முக்கியத்துவம் நமக்கு நன்கு புரியும் .
Wish u happy friendship day to All…
Thanks,
Nagaraj T.
முகஸ்துதி செய்து நம்மைப் பாதாளத்தில் தள்ளுபவர்களைக் காட்டிலும், நம் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துபவர்களே உண்மையான நன்பர்கள் என்பது நன்கு புரிந்தது. பகிர்வுக்கு நன்றி!.
சுந்தர் அவர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
பாலு மகேந்திரன்.வீ
Happy friendship day
நீண்டநாள்களுக்கு பின் ……. நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன், சுந்தர்ஜி ” பதிவில் நன்றிகளுடன். நலம்.நலமுனர்கிறேன்”.