Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, February 25, 2024
Please specify the group
Home > All in One > உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

print
‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல. அது ஒரு மிகப் பெரிய பதம். சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது. வெற்றி, வித்தை, ஆயுள், சந்தானம், தனம், தான்யம், ஆரோக்கியம் இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் லக்ஷ்மி கடாக்ஷம்.

பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை பற்றி யோசிப்பதற்கு கூட இந்த பேஸ்புக் யுகத்தில் நேரமில்லாவர்களாகவும் இருப்பதுவும் தான்.

முன்வினைப் பயனால் ஒருவர் பெருஞ் செல்வத்தை தற்போது அடைந்திருந்தாலும் அதற்குரிய பலன் முடிவடையும் போது அது குடம் கவிழ் நீர் போல ஓடிவிடும். அவ்வாறு இல்லாமல் வினையற்ற செல்வம் பல்கிப் பெருக, எங்கும் மங்களம் பெருக, லக்ஷ்மி கடாக்ஷம் நம் கிரகத்தில் நிலைக்க என்ன செய்யவேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? என்பதை உங்களுக்கு இந்த தீப ஒளித் திருநாளில் விளக்குவதற்கான பதிவே இது.

பெரியோர்கள் கூற பல்வேறு தருணங்களில் கேட்டது, சிறுவயது முதல் படித்தது, என் தாயாரிடம் கேட்டது, படித்தது, என அனைத்தையும் தொகுத்து தந்திருக்கிறேன். பின்பற்றுங்கள். பலன் பெறுங்கள். லக்ஷ்மி கடாக்ஷம் உங்கள் கிரகங்களில் நிலைக்க திருவருள் துணை புரியட்டும்.

கீழே நாம் கூறிய முறைகள் அனைத்தும் நீங்கள் முயன்றால் சுலபமாக கடைபிடிக்க கூடியவைகளே. அரைகுறையாக இவற்றை கடைப்பிடித்து வந்த நான் தற்போது கூடுமானவரை முழுமையாக கடைபிடிக்க துவங்கியிருக்கிறேன். விரைவில் சுபம் பெருகும்!

திருமகள் எவரிடத்தில் நிலைப்பதில்லை?

திருமகள் எனப்படும் மகாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. “இது ஏன்?’ என அந்த பரந்தாமனே ஒரு முறை அன்னையிடம் கேட்க, அதற்கு அவள், “தர்மம் செய்யாத கருமிகள், மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது.”

“அதிகமாக கோபப்படுபவர்கள், பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; ஒரு வேளை வினைப் பயனால் அது கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது” என்றாள்.

இதை கேட்டு மகிழ்ந்த பரம்பொருள், “இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும் என்று வரமளிக்கிறேன்” என்றானாம்.

சாராய அதிபரின் வாழ்க்கை

மற்றவர்களை துன்புறுத்தியும் தவறான வழிகளிலும் ஈட்டப்படும் செல்வம் அவனை அழவைத்தவாறே அவனை விட்டுச் சென்றுவிடும். உதாரணத்திற்கு சாராய சக்கரவர்த்தி எனப்படும் தொழிலதிபர்  ஒருவரின் சமீபத்திய நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அவரின் தற்போதைய நிலை என்ன? மதுவின் மூலம் கிடைத்த வருமானம் என்ன செய்தது பார்த்தீர்களா? வேறொன்றில் நஷ்டம் ஏற்பட்டு கடைசியில் அனைத்தையும் விற்கவேண்டிய துர்ப்பாக்கியம். எத்தனை செல்வம் இருந்தும் என்ன? அவரால் நிம்மதியாக உறங்க முடியுமா?

இதைத் தான் வள்ளுவரும் கூறுகிறார்…..

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (குறள் 659)

பொருள் : பிறர் அழுமாறு துன்புறுத்திப் பெற்ற பொருட்கள் எல்லாம் தான் அழுமாறு தன்னை விட்டுப் போய்விடும். நல்வழியில் ஈட்டிய செல்வம் பறிபோனாலும் அது திரும்ப கிடைத்துவிடும்.

மேற்படி மதுபான அதிபரின் தொழிலால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தனவோ? எத்தனை பத்தினிகளின் வயிறு பற்றி எரிந்தனவோ?

இன்றைக்கும் இந்த முன்னேறிய காலகட்டத்திலும் மின்சாரமின்றி நம் மாநில மக்கள் தவிக்கவும் தொழில்கள் நசிந்து போகவும் காரணம், மதுவினால் கிடைக்கும் வருவாய் தான். குறுகிய ஆதாயத்தை மனதில் கொண்டு அரசாங்கமே மதுவை டாஸ்மாக் என்ற பெயரில் விற்பது என்றைக்கு முடிவுக்கு வருகிறதோ அப்போதே இது போன்ற துர்பாக்கியங்களும் முடிவுக்கு வரும்.

அதே போல, வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் செய்யாது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்பவனது செல்வம் கள்வர்களால் அபகரிக்கப்படும். இதைத் தான் ஒளவை, “ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்” என்று கூறியிருக்கிறார்.

ஆக  அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒரு சிறிய பங்காவது தான தர்மங்கள் செய்து வரவேண்டும். அப்போது தான் இருக்கும் செல்வம் விருத்தியடையும். எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவர முடியாது.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக கீழ்கண்டவைகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடைமுறைப்படுத்துங்கள். சுபமஸ்து!

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
(நம் தள வாசகர்களுக்கு நெல்லி மரம் வீடு தேடி வர இருக்கிறது. விபரம் விரைவில்….!)

3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

11) விளக்கை  தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

16)  எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

27)  இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.

30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.

31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.

32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.

34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.

37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.

47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

48) தங்கம் எனப்படும்  சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ இந்த தீபாவளித் திருநாளில் வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்.

—————————————————————————————————–
அடுத்து….
‘பொன்மழை’ நமக்கு கிடைத்த ஒரு சம்பவம்!

—————————————————————————————————–

22 thoughts on “உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

 1. wow. Thanks for these great tips.. Its a very worth gift for diwali. I will definetly try to follow. wishing you and your family a very happy diwali.

 2. சுந்தர், என்ன சொல்வது…. அபாரம். அற்புதம். தேங்க்ஸ்.

  இதில் நீங்கள் சொல்லியிருக்கும் சில விஷயங்கள் எனக்கு தெரிந்திருந்தாலும் சில விஷயங்கள் தெரியாது. நெல்லி மரம், கல்கண்டை கொண்டு தீபத்தை மலையேற்றுவது இதெல்லாம் மிக மிக அருமையான தகவல்கள். அடுத்து, என்னிடம் வீட்டில் சுப்ரபாதமும் இருக்கிறது. விஷ்ணு சஹஸ்ரநாமும் சி.டி. இருக்கிறது. போட்டு கேட்கும் வழக்கம் தான் இல்லை. இனி ஏற்படுத்திக்கொள்வேன். எப்படியோ நம் தளத்தால் இனி என் வீட்டில் நாராயணன் நாமம் நித்தம் ஒலிக்கும்.

  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

 3. Useful tips..these 50 instructions, if atleast can induce Greater positivism, discipline and cleanliness to us and our surroundings.

  I think one or two tips are too orthodox. But it should have meaning.

 4. அருமை அருமை. வரவேற்கத்தக்க தொகுப்பு. லக்ஷ்மி கடாக்ஷம் என்னும் சொல்லில் இவ்வளவு விஷயம் இருக்கும் விஷயம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருமால் எவரிடத்தில் நிலைப்பதில்லை என்னும் தலைப்பிற்கு அருகில் உள்ள படம் நல்ல இருக்கு. முக்கியமாக சாராய சக்கரவர்த்தி, தமிழ்நாடு அரசாங்கம் டாஸ்மாக் மூலம் சம்பாதிக்கும் வருமானம் அருமை. உண்மையில் டாஸ்மாக் ஆரம்பித்த வுடன் தான் தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனைய ஆரம்பித்தது. அண்டைமாநில பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே போலாம்.

  முன்னர் நான் லக்ஷ்மி தேவியை வெறும் செல்வம் கொடுக்கும் கடவுளாகவே பார்த்ததால் லக்ஷ்மி தேவியின் மீது பக்தி அவ்வளவாக இல்லை. formala கும்பிடுவேன். எல்லாரும் கும்பிட்ராங்கனு கும்பிடுவேன். ஆனால் சமீப காலமாக நான் லக்ஷ்மி தேவியை பற்றிய குறிப்புக்கள் என் வாழ்கையில் வந்த வண்ணம் உள்ளன.

  நான் B E முடித்து மதுரையில் உள்ள சிறிய IT நிறுவனத்தில் பணிபுரிகின்றேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைப்பளு மிக அதிகம். பிரஷர், tention க்கு பஞ்சமே இல்லை. இதனால் என்னால் சரியாக கடவுளை கும்பிடாமல் போவது, கடவுள் புத்தகத்தை படிக்க முடியாமல் போவது. கடைசியில் IT நிறுவனத்தில் இருப்பது எனக்கு சரிபட்டு வராது என்று என் மனதுக்கு பட்டது. ஆகவே பேங்க் தேர்வு எழுதலாம் என்று முடிவு செய்து bank jobs search செய்தேன். அதில் opening இருந்தது “Lakshmi Vilas Bank ” for clerk post, அதற்காக கொஞ்சம் prepare செய்து தேர்வும் எழுதி விட்டேன். தீபாவளியன்று என் அக்கா தீபாவளியை லக்ஷ்மி பூஜாவாக வட இந்தியர்கள் கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். தற்பொழுது லக்ஷ்மி கடாக்ஷம் பற்றிய குறிப்புக்கள்.இதெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. மனவருத்தம் சற்று அதிகமாக இருந்தாலும் அதை முறியடிகின்ற இறைவனின் சக்தி என்னை சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றது.

  சுந்தர் g . உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
  1 ) நீங்கள் ஏதோ ஒரு வெப்சைட் follow செய்வதாக உங்கள் website ஆன onlysuperstar , rightmantra வில் கூறி இருந்தீர்கள். அந்த வெப்சைட் கூட onlysuperstar , rightmantra பற்றிய குறிப்புக்கள் போடப்பட்டன. அது என்ன வென்று நான் மறந்து விட்டேன். அதை சற்று போடவும்.right mantra தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

  2 )நீங்கள் நிறைய நல்ல விஷத்தை தொகுத்து தருகின்றீர்கள். நீங்கள் இஸ்க்கான் கோவிலுக்கு சென்றிருக்கலாம்.அங்கே இஸ்க்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா எழுதிய புத்தகங்கள் நிறைய இருக்கும்.முக்கியமாக பகவத் கிதா, ஸ்ரீ கிருஷ்ணா,ஸ்ரீமத் பாகவதம் etc இருக்கும்.இதில் தர்மம், வால்மீகி ராமாயணம்,ஸ்ரீ கிருஷ்ணா போன்ற புத்தகத்தை ஒரு மூன்று வாரத்திற்கு முன்னர் வாங்கினேன். அதில் தர்மம் புத்தகத்தை படித்து வருகின்றேன்.அந்த புத்தகம் வெறும் நூறு பக்கங்கள் தான் இருக்கும். 30 ருபாய் தான். ஆனால் அதில் இருக்கும் விஷயங்கள் விலை மதிக்க முடியாதது. எப்படி லக்ஷ்மி கடாக்ஷம் என்னும் சொல்லில் நிறைய கருத்துக்கள் இருக்கின்றதோ, அதே போல் தர்மம் என்னும் சொல்லில் எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றது. எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் தெரிந்து கொண்டால் நிறைய பேரை கொண்டு பொய் சேர்க்கும். அதுமட்டும் இன்றி இதை படித்தால் பக்குவம் இன்னும் அதிகரிக்கும். அதற்காகவே இதனை உங்களிடம் பரிந்துரைகின்றேன்.

  பாலசந்தர் T J

  ———————————————-
  மிக்க மகிழ்ச்சி.

  திருமகளின் அருட்பார்வை உங்கள் மீது பட்டுவிட்டது என்றே படுகிறது. மேன்மேலும் சாதனைகள் படைத்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்வீர்களாக.

  நீங்கள் குறிப்பிடும் அந்த தளம் http://www.livingextra.com
  பல அற்புத தகவல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம்.

  http://www.livingextra.com/2012/10/blog-post_17.html

  Will get the books you referred for sure.

  – சுந்தர்

 5. மிக மிக அருமையான விஷயங்கள்..
  சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் பல விஷயங்கள் எனக்கு புதியது..
  ஒரு நெல்லி மரம் வீட்டில் இருந்தால் இவ்வளவு நன்மைகளா!!!!!
  அது போல் விளக்கை மலையேற்றுவது, பெண்கள் பரிமாறும் போது வளையல் போட சொன்னது, நாணயம் மற்றும் பர்ஸ் வைக்கும் இடங்கள் மற்றும் விளக்கு வைத்த பின் இரவல் கொடுக்க கூடாத பொருட்கள் என லிஸ்ட் போய் கொண்டே இருக்கிறது.. யப்பா..
  எல்லோரும் போற்றி பாதுகாக்க வேண்டிய பதிப்பு இது..
  Cheers..

 6. கோயம்புத்தூர்
  8-05-2013

  சமயபுரம் கோவிலுக்கு போய்
  வந்த பிறகு மிக மிக அற்புதமான் தவகல்களை பார்த்து மிக்க சந்தோசம் அடைந்தேன். பாராட்டுக்கள். நம எல்லோர் வீட்டிலும் அவசியம் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்யட்டும்.
  வாழ்க வளமுடன் என வாழ்த்தும் லென வென சுந்தரம்., கோயம்புத்தூர்.

 7. எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். மேலே சொன்ன விளக்கங்கள் ரொம்ப அருமையனவையும் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டிகள். எல்லாம் வல்ல இறைவனை வழி பட்டால் நிம்மதியும் சந்தோசமும் பெருகும். எல்லோரும் இந்த வழியை பயன்படுத்தி சந்தோசமாக வாழுங்கள்.

 8. அருமை …..நல்ல கருத்துக்களை தந்த உங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகள் …..இதே போல் ஒவ்வொரு வீட்டிலும் கடைபிடிக்க கூடாத விசயங்களையும் பட்டியல் இட்டு தருமாறு தங்களை பணிவோடு வேண்டிக் கொள்கிறேன் ……

 9. குல தெய்வ வழிபாடு எவ்வாறு செய்வது என்பதை விளக்கவும் ….மேலும் எங்களுக்கு குல தெய்வத்தின் குறைகள் எதோ இருப்பதாக கனவுகளில் அறிவுறுத்த படுகிறது ஆனால் அது என்ன என்பதும் அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதும் எங்களுக்கு தெரியவில்லை …அதை எப்படி கண்டறிவது ..? அதற்க்கு பரிகாரம் என்ன என்பதையும் தாங்கள் விளக்க வேண்டும் …..ப்ளீஸ்

   1. தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் …..

 10. நெல்லி மரம் என்பது,பெரு நெல்லியா , அரை நெல்லியா எந்த மரத்தை வீட்டில் வளர்க்கலாம் என்பதை தெரியபடுத்தவும். நன்றி.

 11. கருத்துள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *