Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > “கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

print
சுமார் இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில், வெளியான ‘வானமே எல்லை’ என்கிற படத்தில், வாழ்க்கையில் பல்வேறு மட்டங்களில் தோல்வியடைந்து, வஞ்சிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயலும் 3 இளைஞர்களும் 2 இளம்பெண்களும் சந்தித்துக்கொள்வார்கள்.

ஒரு மாதம் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டு 30 வது நாள் கடைசியில் தற்கொலை செய்துகொள்வது என்று தீர்மானம் எடுப்பார்கள். ஐந்து பேர்களில் ஒரு இளைஞனின் தந்தையாக வரும் திரு.ராஜேஷ், “நான் ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவரை பார்த்துவிட்டு நீங்கள் பிறகு தற்கொலை செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ளலாம்!!” என்று கூறுவார்.

pg_14“யாரு அவரு? அரசியல்வாதியா? பெரிய விஞ்ஞானியா? துறவியா? தத்துவமேதையா? இல்லை இவங்க எல்லத்துக்கும் மேல அவதார புருஷனா? யாரு அவரு?” என்று ஏகத்தாளமாக கேட்பார்கள் இளைஞர்கள்.

“இவர்கள் எல்லாருக்கும் மேல் இருப்பவர் அவர். ஆனால் ஒரு சாதாரண மனிதன்!” என்று பதிலளிப்பார்.

மறுநாள் அவர்களை ஒரு பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இவர்கள் காத்திருக்க திடீரென ஒரு கார் வரும். அதிலிருந்து ஒருவர் இறங்குவார். ஆர்வம் கலந்த அலட்சியத்தோடு பார்க்கும் இவர்கள் அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைவார்கள். காரணம், போலியோவால் இருகால்களும் அவர் பாதிக்கப்பட்டிருப்பார். அவரை நேரில் முழுவதுமாக பார்த்தவுடன் வெட்கப்படும் ஐந்துபேரும், மனம் திருந்தி வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ளப்போவதாக சூளுரைப்பார்கள். (படத்தில் கல்விக்கூடங்களும், அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும், தொழிற்சாலைகளும் நடத்திவருவார் ராமகிருஷ்ணன். திரு.ராமகிருஷ்ணன் அப்போது தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்துக்கொண்டிருந்தார். அபாரமான ‘கணீர்’ குரலுக்கு சொந்தக்காரர். முறைப்படி சங்கீதம் பயின்றவர். தற்போது ஒரு தனியார் சேனலில் இயக்குனராக உள்ளார்!)

உங்களுக்காக அந்த வீடியோ

அதே போலத் தான் இருந்தது, ஈரோடு இசைப்பள்ளி ஆசிரியர் திரு.இரா.ஞானப்பிரகாசம் அவர்களை நாம் நேரில் சந்தித்தபோது. அவரை பார்ப்பவர்கள் நிச்சயம் தங்களை நினைத்து வெட்கித் தலைகுனிவார்கள்.

இசைப்பள்ளியில் பன்னிரு திருமுறைகளை கற்றுத் தரும் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் பார்வையற்றவர் மட்டுமல்ல, இளம்பிள்ளைவாதத்தால் ஒரு காலும் பாதிக்கப்பட்டவர். அவரால் வாக்கிங் ஸ்டாண்ட் இன்றி நடக்கமுடியாது.

DSC03039

பிறந்ததிலிருந்தே இந்த இரண்டு குறைபாடும் அவருக்கு உண்டு. எவ்வளோ சிரமப்பட்டிருக்கிறார். அவமானப்பட்டிருக்கிறார். பெற்றோரால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இன்று…? உண்டு, உறங்கி, பூமிக்கு பாரமாய் நாம் வாழும் வாழ்க்கையை விட அவர் வாழ்க்கை பவித்திரமானது. அர்த்தமிக்கது.

DSCN4636

இசைப்பள்ளியில் பன்னிரு திருமுறைகள் சொல்லித்தருவதோடு வீட்டில், கீ-போர்ட், வயலின், வாய்ப்பாட்டு உள்ளிட்டவற்றை சொல்லித்தருகிறார். ஏழை மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிப்பது கிடையாது. அபாரமான குரலுக்கு சொந்தக்காரரான இவர், பாசுரங்கள் பாடுவதிலும் வல்லவர்.

DSC02959

ஆண்டவன் தனக்கு பிடித்தவர்களை தானே சோதனைக்கு தேர்ந்தெடுப்பான்? எனவே, இவரது திருமண வாழ்க்கை உட்பட பல விஷயங்களில் காலனின் காலில் பட்ட பந்து தான் இவர். ஆனாலும் இவர் கலங்கவில்லை. இறைவனை தூற்றவில்லை. ‘எல்லாம் நன்மைக்கே’ என்று தான் பாட்டுக்கு தன் கடமையை செய்து வருகிறார்.

திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் துணைவியார் திருமதி.தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் நம் தளத்தின் தீவிர வாசகி. நமது பிரார்த்தனை கிளப்புக்கு கூட ஒரு முறை பிரார்த்தனை அனுப்பியிருந்தார். (சூரியனுக்கே நாம் டார்ச் அடித்த விஷயத்தை அப்புறம் தான் நாம் புரிந்துகொண்டோம்!).

கணவர் கண்பார்வையற்றவர், தேவாரம் சொல்லித் தருகிறார் என்று நமக்கு தெரிந்தபோதே அவரை சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். ஒரு நாள் அவரது தளத்தை (www.rgp.myehome.in) தற்செயலாக பார்வையிட்டபோது, பிரமித்துப் போய்விட்டோம். மேலும் தேவாரம், திருப்புகழ் பாடுகிறார், சொல்லித் தருகிறார் என்கிற ஒரு விஷயம் நமக்கு போதுமே இவரை நோக்கி நாம் ஓட.

சென்ற வாரம், அதாவது இவரை ஜூலை 6 ஞாயிறன்று ஈரோட்டுக்கு சென்று சந்திப்பது என்று முடிவானது. ஆனால் அதை நாம் முடிவு செய்ததே ஜூலை 5 சனிக்கிழமை தான். அவசர அவசரமாக பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம். முகநூலில் நமது ஈரோடு பயணம் குறித்த அப்டேட்டை பார்த்து, பெருந்துறையில் உள்ள வாசகர் திரு.சண்முகநாதன் நம்மை தொடர்பு கொண்டு நம்மை ஈரோட்டில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். சண்முகநாதன் அந்நேரம் பலவித பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்தபடியால், யார் சந்திப்பு வருகிறார்களோ இல்லையோ அவர் நிச்சயம் வரவேண்டும் என்று விரும்பினோம். எனவே திரு.ஞானப்பிரகாசத்தை நாம் சந்திக்கவிருப்பதை கூறி, நேரே அவர் இல்லத்துக்கே சண்முகநாதன் அவர்களை வரச்சொல்லி கேட்டுக்கொண்டோம்.

அதே போல, திருச்சி சென்றிருந்த நண்பர் திரு.வெங்கடேஷ் பாபு தானும் திருச்சியிலிருந்து அப்படியே தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு வந்துவிடுவதாகவும், நம்முடன் ரோல்மாடல் சந்திப்பில் இருவருமே கலந்துகொள்வதாகவும் சொன்னார். நம்மை பொருத்தவரை ரோல்மாடல் சந்திப்புக்களை நமது வாசகர்களுடன், நண்பர்களுடன் நிகழ்த்துவதே நமது வழக்கம். இதுவரையிலும் அப்படித் தான் நடந்துவந்துள்ளது. ஒன்றுக்கு மூன்று பேர் கலந்துகொள்வதையடுத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

DSC02965

இங்கிருந்து நாம் கிளம்புபோதே, ஈரோட்டில் அவர்கள் வீட்டிலேயே நாம் தங்கிக்கொள்ளலாம், குளித்து முடித்து டிபன் சாப்பிட்டுக்கொள்ளலாம்… வேறு ரூம் எதுவும் புக் செய்யவேண்டாம் என்று ஞானப்பிரகாசம் அவர்களும் தமிழ்செல்வி அவர்களும் நம்மை கேட்டுக்கொண்டதையடுத்து அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு நாம் அதற்கு ஒப்புக்கொண்டோம்.

சனிக்கிழமை இரவு 11.30 pm க்கு புறப்பட்டு ஞாயிறு காலை ஈரோட்டை அடைந்தோம். சம்பத்நகர் ஹவுசிங் போர்டில் உள்ள ஞானப்பிரகாசம் அவர்களின் வீட்டை தேடி கண்டுபிடித்தோம். நம்மை அன்புடன் தம்பதிகள் வரவேற்றனர்.

வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பெருந்துறையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் நம் வாசகர்கள் வரும் விபரத்தை கூறி, அவர்கள் வரும் முன் நாம் குளித்து முடித்து தயாராகிவிடுவதாக கூறி குளித்து முடித்து சந்திப்புக்கு தயாரானோம்.

நம்மை சிற்றுண்டி சாப்பிடுமாறு கேட்டுகொண்டார்கள். நண்பர்கள் வந்தபின்பு அவர்களுடன் சேர்ந்து இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவதாககூறினோம்.

சொன்னபடி வாசகர் திரு.சண்முகநாதன் மற்றும் அவர் நண்பர் வேங்கடசுப்ரமணியன் மற்றும் நம் சென்னை நண்பர் வெங்கடேஷ் பாபு மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் வந்து சேர்ந்தவுடன் நண்பர்களை திரு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.

பின்னர் நம் வாசகர்களை கொண்டு தம்பதிகளுக்கு நாம் வாங்கிச் சென்ற பழங்கள், வேட்டி, சட்டை, புடவை உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அளித்து கௌரவித்தோம். இறுதியில் அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றோம்.

பதிகம் பாடுகிறார்...
பதிகம் பாடுகிறார்…

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

என்ற மங்கலப் பதிகத்தை பாடி வாழ்த்தியருளினார் ஞானப்பிரகாசம்.

தவிர நேயர் விருப்பமும் அங்கு நடைபெற்றது. நண்பர்கள் விரும்பிய சில பதிகங்களையும் பாடி எங்களை பரவசப்படுத்தினார். நம் ஆசைக்கு நாலாயிர திவ்ய பிரபந்தமும் பாடினார். பேசாமல் அவரை ஒவ்வொன்றாக பாடச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. குரல் அத்தனை இனிமை.

சந்திப்பின் இறுதியில் அமர்ந்து உணவருந்தினோம். ஆப்பம், தேங்காய்ப் பால் மற்றும் ஆவி பறக்கும் சூடான இட்லி கொத்துமல்லி சட்னி என சகோதரி தமிழ்செல்வி தூள் கிளப்பிவிட்டார். அன்பும் சேர்ந்து பரிமாறியமையால் சுவைக்கு கேட்கவா வேண்டும்?

DSCN4663 copy

சரி…. ஞானப்பிரகாசம் அவர்களின் கதையை சற்று விரிவாக பார்ப்போமா?

திரு.ஞானப்பிரகாசம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர். ராஜமாணிக்கம் – சாவித்திரி தம்பதிக்கு மகனாக பிறந்த இவருக்கு பவித்ராஅருள், வாணி என்ற தங்கைகளும், பிரணவ ஹரிப்ரசாத் என்ற தம்பியும் உள்ளனர்.

இவர்களில் ஞானப்பிரகாசத்துக்கு மட்டுமே உடலில் பெரிய குறை. பிறக்கும் போதே இரு கண்களும் இவருக்கு தெரியவில்லை. இது மட்டும் அல்லாமல் ஐந்து வயதில் இவரது ஒரு காலும் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டு ஊனமாக இருந்தது.

சிறுவயதிலேயே ஞானப்பிரகாசத்திற்கு இசையின் மீது ஒரு மோகம். அதுவே நாளடைவில் காதலாக மாறி இசைக்கு அடிமையானார். இவரது பாட்டி கமலம். இளம் வயதில் சங்கீதம் கற்று வந்த கமலம் நாளடைவில் பாதியிலேயே விட்டுவிட வேண்டிய நிலை. அதனால் தான் கற்று வந்த சங்கீதத்தை வீட்டிலேயே அடிக்கடி பாடுவார். இதைக் கேட்ட ஞானப்பிரகாசம் அப்படியே தானும் திரும்பி பாடினார். இசையின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை தெரிந்து கொண்ட அவரது பாட்டி தம்மால் தான் சங்கீதத்தை முழுமையாக கற்க முடியவில்லை பேரனாவது இசையைக் கற்றுக் கொள்ளட்டும் என்று நினைத்து ஞானப்பிர்காசத்தை சங்கீதம் படிக்க அனுப்பினார்.

இதனால் தனது எட்டாவது வயதிலேயே கோவையை சேர்ந்த நடராஜ ஐயர் என்பவரிடம் இவர் சங்கீதத்தை படிக்க தொடங்கினார். பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் கோவை இசைக் கல்லூரியில் சேர்ந்து 3 வருடம் பட்டயப் படிப்பை படித்து டிப்ளோமோ வாங்கினார். தேவாரப் பாடல்களுடன் கர்நாடக சங்கீதத்தையும் கற்றார்.

DSCN4682

நம் நாட்டில் போக்குவரத்து வசதிகள் இருக்கும் நிலைக்கு, சராசரி மாணவர்களே கல்லூரிக்கு சென்று வருவது போருக்கு சென்று வருவது போல உள்ளது. அப்படிஎன்றால் இவர் எந்தளவு கஷ்டப்பட்டு தனது படிப்பை முடித்திருப்பார் என்று யூகித்துக்கொள்ளவேண்டியது தான்.

இசைக் கல்லூரியில் படிக்கும் பொழுதே பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளும் பெற்றுள்ளார். கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவில் நடந்த கர்னாடக சங்கீதம் போட்டியில் இவர் அபாரமாக பாடி முதல் பரிசு பெற்றார். இது மட்டும் அல்லாமல் கோவை கற்பகம் கலைக் கல்லூரியில் நடந்த திருமுறைப் போட்டியிலும், ரோட்டரி அரிமா சங்கம் நடத்திய போட்டிகளிலும். மியூசிக் அகாடமி நடத்திய தேவாரப் பாடல்கள் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளார். ஏராளமான சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

ஞானப்பிரகாசம் அவர்களுக்கு தேவாரம் சொல்லித் தந்த அன்னை - சொர்ணா சோமசுந்தரம்
ஞானப்பிரகாசம் அவர்களுக்கு தேவாரம் சொல்லித் தந்த அன்னை – திருமதி.ஸ்வர்ணா சோமசுந்தரம்

ஒரு நிகழ்ச்சியில் இவரது இசைத் திறமையை பார்த்து வியந்த திருமதி.ஸ்வர்ணா சோமசுந்தரம் என்பவர், இவருக்கு பன்னிரு திருமுறை சொல்லித் தருவதாக சொன்னார். அவர் தான் இவரது திருமுறை குரு. (அவரது படம் தான் இவருக்கு தொலைகாட்சி பெட்டிக்கு முன்னே காணப்படுவது.).

ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள் மட்டும் இல்லையேல் தாம் பன்னிரு திருமுறை கற்றிருக்க முடியாது என்று கூறுகிறார் திரு.ஞானப்பிரகாசம். அவரை தனது தெய்வமாக பாவித்து வருகிறார்.

தேவாரத்தை தொடர்ந்து திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம், திருப்பாவை, திருவெம்பாவை, பிள்ளைத் தமிழ், திருஅருட்பா, திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் மற்றும் சங்க காலப் பாடல்கள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

மேலும் கோவை பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் இசைக் கச்சேரி நடத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இவருக்கு அரசு இசைப்பள்ளியில் பணி கிடைக்க காரணமாக இருந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள். 1996-2001 ல் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது, அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் மூலம் இவர் அவரை சந்திக்க முயற்சித்து, சென்னை தலைமைச் செயலகம் வந்தார். ஆனால் அப்போது முதல்வர் மிகவும் பிசியாக இருந்தார். இருப்பினும் இவர் கடுமையாக விடாப்பிடியாக முயற்சிக்க, அவரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது. கிடைத்த சில நிமிடங்களில் முதல்வர் முன்பு சில செந்தமிழ் பாடல்களை இவர் பாட, இவரது குரல் வளத்தாலும் இசை ஞானத்த்தாலும் கவர்ந்த முதல்வர், அடுத்த சில மாதங்களில் இவருக்கு சேலம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக சேர உதவி புரிந்தார்.

முதலில் சேலத்தில் உள்ள அரசு இசை பள்ளியில் தேவார ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த இவர் பிறகு ஈரோட்டில் உள்ள இசைப் பள்ளிக்கு மாறுதலாகி வந்துள்ளார்.

இவரிடம் தேவாரம் படித்த பல மாணவர்களும் நன்கு தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டத்திலேயே முதல் இடத்தை பெற்றனர். இவர்களில் கோபியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் ஞானப்பிரகாசத்தை போலவே பார்வை அற்றவர். தேவாரம் மட்டும் அல்லாமல் துணைப்பாடமாக கர்நாடக சங்கீதத்தையும் சொல்லிக் கொடுக்கும் இவரிடம் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

எத்தனை நாள் தான் இப்படி தனி மரமாக அடுத்தவர் துணையுடன் வாழ்வது என்று நினைத்த இவர் தனக்கு இணையான ஒரு வாழ்கை துணையைத் தேடினார். பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்த சென்னையை சேர்ந்த இசைக் கல்லூரியில் படித்த சுமித்ரா தேவி என்ற பெண் ஏற்கனவே இவரது இசைத் திறமையை தொலைக்காட்சிகளில் பார்த்து விட்டு தன்னலம் கருதாது ஞானப்பிரகாசத்தை மணக்க முன் வந்தார். இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த சுமித்ரா தேவியின் பெற்றோர் பின்னர் அவரது சேவை மனதை ஏற்று இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு மதுவந்திகா என்ற அழகான குழந்தை பிறந்தாள்.

அந்த இறைவனுக்குத் தான் ஞானப்பிரகாசத்தின் மீது என்ன கோபமோ தெரியவில்லை… ஏற்கனவே இரு கண்களையும் பறித்துக் கொண்டு ஒரு காலையும் முடக்கியது போதாது என்று அதை விட மிகப் பெரிய தண்டனையாக இவரது மண வாழ்க்கையில் விளையாடினான்.

விரும்பியே இவரை மணந்துகொண்ட இவரது மனைவி, சராசரி பெண் போல நாளடைவில் மாறினார். மற்றவர்களை போல, தன்னால் ஒரு கடைவீதிக்கோ, சினிமாவுக்கோ கணவருடன் வெளியே போய் வரமுடியவில்லையே என்று ஏக்கம் கொள்ள ஆரம்பித்தார்.

இந்நிலையில் குழந்தைக்கு திடீர் என்று காய்ச்சல் ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டரின் கவனக் குறைவான சிகிச்சையால் மதுவந்திகாவின் உடல் நிலை மோசமாகியது. இதனால் கணவரை கடிந்துகொண்டார் சுமித்ரா தேவி. இருவருக்குள்ளும் மோதல் வெடிக்க, கணவரை அச்சுறத்த வேண்டி தற்கொலை செய்வதற்கு முயன்ற சுமித்ராதேவி உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டார். (நிறைந்த வீட்டில் தற்கொலைக்கு முயற்சிப்பதோ, அது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதோ கூடவே கூடாது!)

அதுகுறித்து விவரிக்கும்போது ஞானப்பிரகாசம் அவர்களுக்கு கண்ணீர் அரும்பியது.

“என் ஊனத்தையோ பார்வை இன்மையையோ நான் பெரிய குறையாக என்றுமே கருதியதில்லை. ஆனால், என் மனைவி தற்கொலைக்கு முயன்றபோது, நானிருந்த நிலையில் ஓடிச்சென்று அவரை காப்பாற்ற முடியாமல் போனது. அதை நினைத்து தான் நான் முதல்முறையாக அழுதேன்!” என்று கூறுகிறார் ஞானப்பிரகாசம்.

முதல் மனைவியின் எதிர்பாரா மரணத்தையடுத்து பலவித மன உளைச்சல்களுக்கு ஆளானார் ஞானப்பிரகாசம். மரணத்திற்கு காரணம் இவரே என்றும் கூட அவர் குடியிருந்த பகுதிகளில் புறம் பேசினார். கையில் குழந்தை மதுவந்திகாவை வைத்துக்கொண்டு மிகவும் தவித்து போனார் ஞானப்பிரகாசம்.

ஆறுமாதக் குழந்தையை பார்த்துக்கொள்ள சொந்தங்கள் எவரும் முன்வராத நிலையில், பார்வையற்ற இவரால் என்ன செய்ய முடியும்? எனவே இவரது வகுப்புக்கு வந்த ஒரு மாணவரின் சகோதரிக்கு தன் குழந்தையை தத்து கொடுத்துவிட்டார்.

வருடங்கள் சில உருண்டன. இவருக்கு நெருக்கமான சிலர் இவருக்கு மறுமணம் செய்து வைக்க எண்ணினார்கள். ஆனால், முதல் மணம் இப்படி தோல்வியில் முடிந்த நிலையில், இவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை.

DSCN4692
நமது தளத்தின் சார்பாக ‘தினசரி பிரார்த்தனை’ படத்தை ஞானப்பிரகாசம் அவர்களுக்கு பரிசளித்தபோது!

இந்நிலையில், இவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளக்கூடிய தமிழ்செல்வி என்கிற ஒரு பெண் இவரது நலம்விரும்பிகள் கண்ணில் பட, அவரிடம் பேசி அவரது சம்மதத்தை பெற்று, பின்னர் இவரிடம் ஒரு துணையின் தேவையை எடுத்துக்கூறி இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தார்கள்.

‘காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன் உயர்
மானம் பெரிதென்று வாழும் குலமாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்’

என்ற கவியரசரின் வரிகளுக்கு இணங்க தமிழ்செல்வி கணவருக்கு தொண்டு செய்து வருகிறார். அவரே இவருக்கு எல்லாம் என்னுமளவிற்கு, திரு.ஞானப்பிரகாசத்திற்கு அனைத்து பணிவிடைகளும் செய்து அவரது பணிகளில் துணை நின்று உதவி வருகிறார். மேலும் நேரத்தை சிறிது விரும்பாமல் ஒய்வு நேரத்தில் தையல் வேலைகளும் ஆர்டர் எடுத்து மகளிர் ஆடைகளை வீட்டிலேயே தைத்து தருகிறார்.

ஞானப்பிரகாசத்தின் வாழ்கையில் இவ்வளவு சோதனைகள் நடந்தும், மனம் தளராமல் புன்சிரிப்புடன் மாணவர்களுக்கு இசையை கற்று தருவதை பார்க்கும் போது நமக்கே பிரமிப்பாகத்தான் உள்ளது.

சங்கீதம் மட்டும் அல்லாமல் பொதுவான நிகழ்ச்சிகளையும் அன்றாட அரசியல் சம்பவங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார். இவர் டெலிவிஷன் மூலம் இந்த நிகழச்சிகளை தெரிந்து கொள்கிறார்.

DSC03038 copy

இவ்வளவு மன உறுதியுடன் இருக்கும் ஞானப்பிரகாசம் கூறியதாவது :

“எனக்கு தேவாரம் சம்பந்தப்பட்ட பல நூறு பாடல்கள் மனப்பாடமாக தெரியும். இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்கள் என்னைப் போலவே திறமையானவர்களாக இசையில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக தேவார ஆசிரியராக இருக்கும் நான் மாணவர்களுக்கு நன்றாக தேவாரத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் கற்றுத் தருகிறேன். நான் பல கோவில்களில் சங்கீதம் பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளேன். எனது இசையை பலரும் வரவேற்கிறார்கள். எனவே நான் பாடிய சங்கீதத்தை யாராவது சி.டி.யாக  வெளியிட முன்வரவேண்டுமென விரும்புகிறேன்!!

இசையில் மாற்றம் செய்து பாமரர்க்கும் புரியும் வகையில் எளிமையாக பயன்படுத்தவேண்டும் என்பது எனது எண்ணம். எனவே சங்கீத்தை ஒழுங்கு படுத்தி மக்களிடம் எடுத்து சொன்னால் இன்னும் நிறைய பேர் சங்கீதம் கற்க முன் வருவார்கள். சங்கீதத்தில் உள்ள சில கீர்த்தனைகள் திரைப்படங்களில் வந்ததால் அவை பிரபலமானது. அது போல பல கீர்த்தனைகளை பிரபலமானதாக ஆக்க நான் முயற்சி செய்வேன்.

‘எனது உடல் குறைப்பாட்டை கண்டு எனது தாய் என்னை வெறுத்து ஒதுக்கினாள். ஆனால், என் தம்பி வீட்டில் வசிக்கும் அவருக்கு நான் தான் இன்றும் மாதந்தோறும் செலவுக்கு பணம் அனுப்பி வருகிறேன்!’ என்கிறார் தலை நிமிர்ந்து.

எனக்கு பார்வை இல்லாமல் இருப்பதையோ என் வாழ்கையில் நடந்த துயர சம்பவங்களையோ நினைத்து நான் காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் இசையில் எதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் சொந்த வாழ்வில் நடந்த சில சோகங்களை நான் உங்களிடம் சொன்னது கூட அதைக்கொண்டு அனுதாபம் தேடுவதற்கு அல்ல. இவரே எல்லா பிரச்னையும் இப்படி தாண்டி வந்துவிட்டார் என்கிறபோது நாமும் சுலபமாக எல்லாவற்றையும் தாண்டிவிடலாம் என்கிற ஒரு நம்பிக்கை அனைவருக்கும் வரும். அதற்காகத் தான் அதை பகிர்ந்துகொண்டேன்!” என்றார் இந்த தன்னம்பிக்கையின் சிகரம்.

DSCN4705

ஈரோடு வாசகர்கள் இருவருக்கும் நாம் கொண்டு சென்றிருந்த ராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டம் திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் பொற்கரங்களால் பரிசாக வழங்கப்பட்டது.

DSCN4710

சந்திப்பு நிறைவடையும்போது போது முழுக்க முழுக்க பார்வையற்ற இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டு திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் பாடிய ‘சிவஞான தேனிசை பாமாலை’ என்னும் சி.டி.யை எங்களுக்கு பரிசளித்தார் திரு.ஞானப்பிரகாசம்.

============================================================

உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் தைரியமாக இருப்பவர்கள் தான் மாற்றுத் திறனாளிகள். அனைத்து துறைகளிலும் இவர்கள், திறமையை வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறைபாடு என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க, இந்த சமூகம் மறுக்கிறது. சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில், அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறிக்கக் கூடாது.

திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டிருக்கும் 'சிவ ஞான தேனிசை பாமாலை' சி.டி. பரிசாக வழங்கப்படுகிறது
திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டிருக்கும் ‘சிவ ஞான தேனிசை பாமாலை’ சி.டி. பரிசாக வழங்கப்படுகிறது

சரி…. தேவாரத் தொண்டை செய்து தேமதுரத் தமிழோசையை பரப்பி வரும் ஞானப்பிரகாசம் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன?

இவரை பார்த்து அனுதாபப்படுவதைவிட இவரது திறமையை அங்கீகரித்து இவரது பொருளாதார நிலை மேம்பட நாம் உதவவேண்டும்.

எப்படி?

முழுக்க முழுக்க பார்வையற்ற இசைக்கலைஞர்களை வைத்து திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்ட ‘சிவ ஞான தேனிசை பாமாலை’ சி.டி.க்கள் இவரிடம் உள்ளது. சுமார் 250 இருக்கும். ஒரு சி.டி.யின் விலை ரூ.100/-. நண்பர்கள் அவற்றை ஐம்பது ஐம்பதாகவோ அல்லது நூறு நூறாகவோ வாங்கி அவருக்கு உதவவேண்டும். நீங்கள் வாங்கும் சி.டி.க்களை கிரகப்பிரவேசம், வளைகாப்பு உள்ளிட்ட உங்கள் வீட்டு, உங்கள் சுற்றம் மற்றும் நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பரிசளிக்கலாம். அல்லது ஏதாவது சிவாலயத்தில் பிரதோஷத்தின்போது அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்கலாம். வாங்க விரும்புவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். வழிமுறைகளை நாம் சொல்கிறோம்.

Siva Gnana Paamalai

‘சிவ ஞான தேனிசை பாமாலை’ யை தொடர்ந்து வேறு சில சி.டி.க்களையும் வெளியிட உத்தேசித்துள்ளார் திரு.ஞானப்பிரகாசம். அதற்க்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். நம்மால் இயன்ற உதவியை இவருக்கு நிச்சயம் செய்வதாக நாம் வாக்களித்திருக்கிறோம்.

============================================================

வெளியே வந்தவுடன் நண்பர் சண்முகநாதனிடம் கேட்டோம்… “இப்போ உங்க கஷ்டங்களை பத்தி என்ன நினைக்கிறீங்க சார்? கொஞ்சம் சொல்லுங்க….”

“சார்… என்னோட கஷ்டமெல்லாம் ஒரு கஷ்டமேயில்லை. கண் பார்வை தெரியாத, ஒரு கால் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருத்தர் இந்தளவு தன்னம்பிக்கையா இருந்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுறார்னு சொன்னா… எனக்கு வெட்கமா இருக்கு. இப்போ நான் வாழ்ந்துகிட்டு இருக்குற வாழ்க்கைக்கு முதல்ல ஆண்டவனுக்கு நன்றி சொல்லனும்னு தோணுது!” என்றார்.

இதைத் இதை இதைத் தான் நாம எதிர்பார்த்தோம்! 

உங்கள் கருத்து என்ன எனதருமை வாசகர்களே…?

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி (குறள் 618)

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை!

============================================================

நமது தளத்தின் முந்தைய ரோல் மாடல் சந்திப்புக்களுக்கு…

http://rightmantra.com/?cat=8

[END]

23 thoughts on ““கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

 1. வணக்கம்

  திரு ஞானப்பிரகாசம் மற்றும் திருமதி தமிழ்ச்செல்வி ஞானப்பிரகாசம் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  அய்யா அவர்களின் CD எப்படி பெறுவது?

  தாமரை வெங்கட்

  1. ஒன்று இரண்டு என்று வாங்குவது அவர்களுக்கு வீண் சிரமம். ஆகையால் தான் ஐம்பது சி.டி.க்களாவது வாங்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன். அவர்கள் சிரமத்தை மனதில் கொண்டே அதைக் கூட அவர்களிடம் வாங்கி உங்களுக்கு பெற்றுத் தரும் பொறுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன்.

   ஒரு சி.டி. இரண்டு சி.டி. வேண்டுவோரையும் மனதில் வைத்து எதாவது திட்டம் வகுத்து உங்களை தொடர்புகொள்கிறேன். அடிக்கடி மின்னஞ்சலில் நினைவு படுத்தவும். அது போதும்.

   நன்றி.

   – சுந்தர்

 2. ​Sundar அவர்களுக்கு,

  முதலில் எனது மனமார்ந்த நன்றிகள் பல. இப்படி எத்தனையோ தன்னம்பிக்கை சிகரங்களை கண்டு பலரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தத்தான் உங்களின் வாழ்வில் ஒரு சில மாற்றங்களை அந்த இறைவன் கொடுத்தான் என்றே நினைக்கின்றேன்.

  இத்தகைய தன்னம்பிக்கை தைரியசாலியை பல மைல்கள் கடந்து சென்று வாசகர்கள் எங்களுக்காக பேட்டி கண்டு, உங்களின் நேரமின்மையிலும் இப்படி தெளிவான பதிவு அளித்தமைக்கு எனது நன்றிகள்.
  **
  இவரின் பேட்டியும் இயக்குனர் சிகரத்தின் படக்காட்சியும் பார்ப்பவர்கள் ஒரு கணம் தங்களின் நிலை உணர்ந்து வாழ்வில் பல சிகரங்களை தொட முயற்சிப்பார்கள் என்று மட்டும் உறுதி.
  **
  **சிட்டி**.
  Thoughts becomes things.

 3. ஒரு அருமையான ரோல் மாடலை சந்தித்திருக்கிறீர்கள். இந்த பதிவை படித் தவும் நமக்கு உள்ள குறை ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது. நாம் இவ்வளவு நாள் நமை பற்றி கவலை பட்டதற்கு வெட்கப் படுகிறோம் திரு ஞான பிரகாசம் நம் எல்லோருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். திரு ஞானப்ரகாசம் தன் வாழ்கையில் ஏற்பட்ட தோல்விகளை கண்டு மனம் தளராமல் இந்த அளவுக்கு மன தைரியத்துடன் இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது. அவரது மனைவி யும் அவருக்கு உறு துணை யாக இருந்து தன் கணவரின் முன்னேற்றத்திற்கு பக்க பலமாய் இருப்பதை பார்த்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதை நிரூபித்து உள்ளார். அவர்கள் இருவரும் பார் போற்றும் தம்பதிகளாக வாழ வாழ்த்துக்கள்.

  நமக்கும் திரு ஞானப்ரகசதின் தேவார திருவாசக பாடல்களை கேட்க ஆவலாக உள்ளோம். பதிவு நீண்ட பதிவாக இருந்தாலும் படிக்க படிக்க தன்னம்பிக்கை நமக்குள் வருகிறது நாம் இந்த ரோல் மாடல் சந்திப்பிற் கு வரவில்லை என மனம் ஏங்குகிறது

  நன்றி
  உமா

 4. அருமையான பதிவு.

  திரு.ஞானப்பிரகாசம் அவரது வாழ்கையே நமக்கு ஒரு பாடம் தான்.

  எனக்கு மட்டும் ஏன் இறைவன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தான்? நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? என்று நிதம் புலம்பி திரியும் நம்மிடையே, எவ்வளவு கஷ்டங்கள், வேதனைகள், சோதனைகள் வந்தாலும் அதை தாண்டியும் வெற்றி பெற்று சாதனையாளராக விளங்கிக்கொண்டிருக்கும் திரு. ஞானப்பிரகாசம் அவர்கள் முன் நாம் கண்டிப்பாக தலை வணங்க வேண்டும்.

  இத்தனை வேதனைகள் மனதில் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து அவரை வெறுத்து ஒதுக்கிய தாய்க்கு நல்ல மகனாக அவர் தம் கடமையை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.

  நாமோ கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  இவர் தம் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற இறைவனை வேண்டுவோம்.

 5. சுந்தர்
  எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன்.
  நன்றி.

 6. பாதி கட்டுரை படித்ததுடன் முடியாமல் அழுதுகொண்டே எழுதுகிறேன்.

  நமக்குள்ள கஷ்டமெல்லாம் கால் தூசு.

 7. சுந்தர் சார் வணக்கம்

  கண்ணீர் மட்டும் அதிகம் வருது சார்

  முதல்ல ஆண்டவனுக்கு நன்றி சொல்லனும்னு தோணுது சார்

  நன்றி

 8. சுந்தர்ஜி
  அருமையான சந்திப்பு மற்றும் பதிவு சுந்தர்! நாமும் ஓரளவு சோதனைகளை கடந்தவர்கள் எனினும் ஞானப்பிரகாசம் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நம்மை கலங்கத்தான் வைக்கிறது. எனினும் அவர்க்கு பக்கத்துணை இருக்கும் திருமதி தமிழ்செல்வி அவர்களை பாராட்டியே தீர வேண்டும். அவர்கள் கோரும் பிரார்த்தனை விரைவில் நிறைவேற குரு அனுகிரகம் புரியட்டும்! நல்லதொரு படிப்பினை பதிவு.

 9. Mr. Gyanaprakasam and his wife Mrs.Thamizhchelvi Gyanaprakasam are the shining proof of the term “Leading by examples”. Lot to learn from these two great souls.

  Proud to be a part of Rightmantra.

 10. என்ன சொல்வது? வார்த்தைகளே இல்லை. வாழும் நம் அனைவருக்கும் இவர் ஒரு அற்புத உதாரணம். கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள் ஏராளமாக உள்ளது. இவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் எத்தனை முறை சொன்னாலும் போதாது. நான் 50 சி டி கள் வாங்கி கொள்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று தெரியப்படுத்தவும். கண்ணன் – மதுரை

  1. மிக்க மகிழ்ச்சி. நாளை உங்களுக்கு திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை அனுப்பி வைக்கிறேன். அதில் பணத்தை செலுத்தவும். கூரியருக்கு சேர்த்து எவ்வளவு செலுத்தவேண்டும் என்று குறிப்பிடுகிறேன். கூரியர் அனுப்பவேண்டிய உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

   நன்றி.

   – சுந்தர்

 11. அருமை. திரு.ஞானபிரகாசம் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

 12. உடலும் மனுமும் சிலிர்க்கின்றது இதுதான் நான் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மேலும் நானும் மற்றவர்களைப்போல் வெட்கப்படுகிறேன். என்னால் 50 சி டி வாங்க முடியாது ஒரு சி டி மட்டும் நிச்சயமாக எனக்கு தேவை தங்களுக்கு சிரமம் இல்லை என்றால் எங்கு வந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் நான் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன் (இது அவர்க்கு நான் செய்யும் உதவி அல்ல நான் பல நாட்களாக இப்படி ஒன்றைத்தான் தேடிகொண்டிருக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

 13. எனக்கு மட்டும் ஏன் இறைவன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தான்? நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? என்று நிதம் புலம்பி திரியும் நம்மிடையே, எவ்வளவு கஷ்டங்கள், வேதனைகள், சோதனைகள் வந்தாலும் அதை தாண்டியும் வெற்றி பெற்று சாதனையாளராக விளங்கிக்கொண்டிருக்கும் திரு. ஞானப்பிரகாசம் அவர்கள் முன் நாம் கண்டிப்பாக தலை வணங்க வேண்டும். –
  கண்ணீர் மட்டும் அதிகம் வருது சார்

  முதல்ல ஆண்டவனுக்கு நன்றி சொல்லனும்னு தோணுது சார்
  நமக்குள்ள கஷ்டமெல்லாம் கால் தூசு.

  எனக்கு ஒரு C D வேணும்
  selvi

 14. இயல்பாக நடந்த உரையாடலை மிகவும் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். இதைப் படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் மனதின் உணர்வுகளை உங்களின் எழுத்துக்களின் மூலம் கோர்த்து அழகான மாலையாக்கியுள்ளீர்கள். இத் தொகுப்பு யாராவது ஒருவரின் மனதிற்காவது ஆறுதல் அளித்தால் அம்மாலை இறைவனின் திருவடியை அடைந்த சிறப்பு பெறும். சுந்தர் அவர்களுக்கு நன்றி.

 15. நண்பர்களுக்கு வணக்கம். என் கணவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களைப் பற்றி அனைவரும் அறிந்துள்ளீர்கள். அவரது தாரக மந்திரமே, வாழ்வதற்காக சாகிற அளவுக்கு துணிவேன். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் வாழமுடியவில்லை என்பதற்காக சாகமாட்டேன் என்பார். அவரது நேர்மறை எண்ணத்திற்கு மற்றுமொரு உதாரணத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். செப்டம்பர் 2008ல் எங்கள் திருமணம் நிகழ்ந்தது, ஏப்ரல் 2009ல் அவருக்கு அடிபட்டது. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட அதே காலில். என்னைத் திருமணம் செய்து கொண்டதால் தான், என் நேரம் சரியில்லாததால் தான் அவருக்கு அடிபட்டதாக அவரது அன்னையும் தங்கையும் என்னை ஏசினார்கள், எனக்கே கூட அப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவரிடமும் கூறினேன், அதற்கு அவர் எனக்கு அடிபட வேண்டுமென்று விதியிருந்திருக்கிறது. கல்யாணத்திற்கு முன்னர் எனக்கு அடிபட்டிருந்தால் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள். அதனால் தான் சாமி எனக்கு விபத்தை தள்ளிப் போட்டிருக்கிறார் என்றார். இது தான் அவரின் நேர்மறையான அணுகுமுறை இதனைக் கடைபிடித்தால் அனைவரும் நலம் பெறுவோம். வாழ்த்திய அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி!.

 16. சார்… என்னோட கஷ்டமெல்லாம் ஒரு கஷ்டமேயில்லை///

  தன்னை பிடித்து மணந்த மனைவி,, சிறிய சலசலப்பால் …தன் முன்னே தற்கொலை பண்ணிய கொடுமையை …நினைத்து பார்க்கும் போது
  நெஞ்சம் படபடகிறது…அதையும் தாண்டி இன்று இவரது வாழ்கை
  பல பேருக்கு பாடம்
  வாழ்கை வாழ்வதற்கே …
  வாழ்ந்து பிறர்க்கு வழிகாட்டவே

 17. அன்னை – திருமதி.ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களுக்கு நன்றி !
  திருமதி தமிழ்செல்வி அவர்களுக்கு வணக்கங்கள் !

  திரு ஞானப்பிரகாசம் அவர்கள் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை” என்பதை தன் வாழ்வின் உடாக நமக்கு உணர்த்துகிறார்.

  நன்றி சுந்தர்.

 18. திரு.சுந்தர் அவர்களுக்கு

  வார்த்தைகளால் திரு.ஞானப்பிரகாசத்திற்கும்,அவரது இசைத்தொண்டிற்கும் அருமையான வழிபாடு நடத்தியிருக்கிறீர்கள்,எழுத்துகளில்தான் எத்தனை உயிர்த்தன்மை,உங்களோடு சேர்ந்து நானும் பேட்டியெடுத்த அனுபவம் கிடைத்தது,வெகு விரைவில் அவரை நான் சந்தித்து பதிவிடுகிறேன் அவரது தொடர்பு எண் கொடுக்கவும்,
  நன்றி!

  அன்புடன்,
  எல்.முருகராஜ்
  தினமலர்.காம்
  சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *