கீழ்கண்ட இந்த கதை பலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது. இருப்பினும் அனைவரும் ஒரு முறை படிக்கவேண்டும்.
ஸ்காட்லாண்டில் நாட்டில் ராபர்ட் புரூஸ் (1274 AD – 1329 AD) என்ற அரசன் தன்னுடைய எதிரிகளோடு பல தடவை போர் புரிந்து தோல்வியடைந்து கடைசியில் உற்சாகம் குறைந்து இனி தன் முயற்சியால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும்படியான நிலையில் அவன் மட்டும் தனியாக ஒரு குகையில் வாழ நேரிட்டது. தான் அடைந்த இந்த இழிந்த நிலையைக் குறித்து தினமும் வருந்திக் கொண்டிருந்தான்.
ஒருநாள் புரூஸ் தனது குகையில் மல்லாந்து படுத்தபடி இனி என்ன செய்வது என்று கவலையோடு யோசித்துக் கொண்டிருக்கையில்,மேலே உத்தரத்தில் சிலந்தி ஒன்று ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு தன் வலையை கட்ட எண்ணி அது இருந்த உத்தரத்தில் தன்மெல்லிய நூலை கட்டி விட்டு மற்றொரு உத்தரத்திற்கு பாய்ந்து கொண்டு இருந்தது,இரண்டு உத்தரத்திற்கும் இடைவெளி அதிகம் இருந்ததால் அதை எட்ட முடியாமல் சிலந்தி கீழே விழுந்து விட்டது.ஆனாலும் அதற்காக பின்வாங்காத சிலந்தி மீண்டும் மேலே ஏறி முன் போலவே அடுத்த உத்தரத்திற்கு பாய்ந்தது!இந்த முறையும் கீழே விழுந்து விட்டது, இப்படியே திரும்ப திரும்ப ஆறு தடவை முயன்றும் சிலந்தி தன் முயற்சி பலன் அளிக்காமல் கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்ததில் மிகவும் களைப்படைந்து போன சிலந்தி அப்படியே அசையாமல் கீழே கிடந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த புரூஸ் இந்த சிலந்தியும் நாமும் ஒரே நிலையில் இருக்கிறோம், நாம் பல தடவை போர் புரிந்து தோற்று களைத்தோம், இந்த சிலந்தியும் தனது முயற்சியில் பல தடவை தோற்று களைப்படைந்து விட்டது, இனி இதற்கும் வழியில்லை,அதே போல் நமக்கும் வேறு வழி காணோம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிலந்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் அசையாமல் கிடந்த சிலந்தி மெதுவாக அசைந்தது, பிறகு மெதுவாக அங்கிருந்து நகன்று முன்போல மேலே ஏறத்தொடங்கியது! புரூஸ் கண்கொட்டாமல் அதையே அதிசயத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது, மேலே வந்த சிலந்தி தன் முழு பலத்தோடு ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு பாய்ந்தது, இந்த முறை தன் விடாமுயற்சியால் அது நினைத்தபடி மறு உத்தரத்தை அடைந்தது.
இவையெல்லாவற்றையும் பார்த்த புரூஸ் இது நமக்கு கடவுள் காட்டிய நல்வழியாக நினைத்து நாமும் முயல்வோம் என்று இதுவரை தான் பட்ட கவலையை விட்டு பல சிரமங்களுக்கு இடையில் சிதறுண்டு போன தன் படையைத் திரட்டி மிகவும் ஊக்கமுடன் மீண்டும் தன் எதிரியுடன் போர் செய்தான்.
இந்த முறை தன் விடா முயற்சியால் எதிரியை முறியடித்து அதில் வெற்றியும் அடைந்தான்.
உத்வேகம் உள்ளவர்கள் சிறு சிறு விஷயங்களில் இருந்து கூட பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
‘ஊக்கமது கை விடேல்’ என்னும் நீதியை அந்த சின்னஞ்சிறு சிலந்தியின் செய்கையை அறிந்த ராபர்ட் புரூஸ் தானும் அதே போன்று நடந்ததால் மீண்டும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான்.
இறைவன் இந்த உலகில் ஏன் விலங்குகளை படைத்தான் தெரியுமா? உயிரின சுழற்சிக்கு மட்டும் அல்ல… ஒவ்வொரு விலங்கிடமும் இருக்கும் அதன் தனித்தன்மையை பார்த்து மனிதன் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தான்.
இயற்கையை நாம் நேசித்தால், சற்று உற்றுநோக்கினால், நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு விலங்கிடமும், ஒவ்வொரு உயிரினத்திடம் இருந்தும் நாம் எண்ணற்ற பாடத்தை கற்றுக்கொள்ளமுடியும்.
எறும்பின் சுறுசுறுப்பும் எருதின் உழைப்பும் காகத்தின் கூட்டுறவும் கழுதையின் பொறுமையும் நாயின் விசுவாசமும் நரியின் தந்திரமும் புறாவின் ஒழுக்கமும் புலியின் வீரமும் யானையின் அறிவும் சிங்கத்தின் நடையும் மானின் மானமும் மனிதனுக்குத் தேவை எனச் சான்றோர்கள் சொல்வதுண்டு.
அப்படி பார்க்கும்போது இறைவனின் படைப்புக்களில் ‘சிலந்தி’ ஒரு மகத்தான படைப்பு.
சிலந்தியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள்
உடனே செயலில் இறங்கு
சிலந்திகள் வலையை பின்ன காத்திருப்பதில்லை. அதற்காக நேரத்தை வீணடிப்பதில்லை. உங்கள் வீட்டிலேயே ஒரு நான்கு நாள் நீங்கள கணினியை பயன்படுத்தவில்லையெனில், சிலந்தி வலை பின்னியிருப்பதை காணலாம். (கொசு மற்றும் சிறு சிறு பூச்சிக்களை பிடித்து உண்ணவே அவை வலை பின்னுகிறது.)
உங்களை நம்புங்கள் உங்கள் செயலை நம்புங்கள்
சிலந்தி வலையை சர்வசாதாரணமாக நீங்கள் துடைத்து எறிந்துவிடுகிறீர்கள். ஆனால், அதே அளவு பருமனுள்ள (0.15 மைக்ரான்) எஃகு இழையைவிட சிலந்தியின் இழை கடினமானது என்பது தெரியுமா? (பென்சில் அளவு தடிமன் கொண்ட சிலந்தி இழையால், பறந்து கொண்டிருக்கின்ற போயிங் 747 ரக விமானத்தைக்கூட இழுத்து நிறுத்திவிட முடியும்!!)
சிலந்திக்கு தனது இயற்தன்மை மேல் நம்பிக்கை இருப்பதால் தான் வலையை பின்னுகிறது. அதே போல, நீங்களும் உங்கள் தனித்தன்மை மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
சிலந்தி வலையை நீங்கள் சற்று உற்றுப் பார்த்தீர்களானால் தெரியும் அது எத்தனை பெரிதாக இருக்கிறது என்று… நாம் இதைத் தான் செய்யவேண்டும் இப்படித்தான் செய்யவேண்டும், இவ்வளவு பெரிதாக செய்யவேண்டும் என்று அது தீர்மானித்த பிறகே வலையை பின்ன துவங்குகிறது.
விடாமுயற்சி
எத்தனை முறை நீங்கள் அதன் வலையை கலைத்தாலும், அது மீண்டும் மீண்டும் தனது வலையை பின்னும். பூச்சியினமான சிலந்தியிடம் உள்ள இந்த விடாமுயற்சி மிகப் பெரும் விஞ்ஞானிகளை கூட வியக்க வைத்துள்ளது.
அதே போல, உங்கள் கனவுகளை உங்கள் கற்பனையையோ எவரேனும் அழித்தால் அதற்கு சிலந்தியை போல கலங்காது மீண்டும் மீண்டும் செயலாற்றவேண்டும்.
கடின உழைப்பு
ஒரு வலையை பின்ன சிலந்தி பலமணிநேரங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், வலையை பின்னி முடிக்கும் வரை அது ஓய்வெடுத்துக்கொள்வதில்லை என்பது மிகப் பெரும் ஆச்சரியம். ‘ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்’ என்னும் இந்த பாடம் மனிதர்கள் சிலந்தியிடம் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.
நேர்த்தி
ஏனோதானோவென்று இல்லாமல் சிலந்தி மிக மிக நேர்த்தியாக தனது வலையை பின்னும். செய்த தவறுகளை திருத்தவோ அழிக்கவோ அவற்றிடம் ரப்பரோ அல்லது இதர உபகரணங்களோ இல்லை. இருப்பினும், மிக மிக நேர்த்தியாக தனது செயலை செய்கிறது.
தன் தேவையை தானே நிறைவேற்றிக்கொள்ளுதல்
ஒரு விஷயத்தை கவனித்தீர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிலந்தி இன்னொரு சிலந்திக்கு வலை பின்னுவதில்லை. ஒவ்வொரு சிலந்தியும் தனக்கு தேவையான வலையை தானே பின்னுகிறது. அதற்கு பிறர் உதவியை அது எதிர்பார்ப்பதில்லை. அதே போல, வேறொரு சிலந்தி பின்னிய வலைக்கு இன்னொரு சிலந்தி சென்று வசிப்பதில்லை. பயன்படுத்துவதில்லை. (பாவம்… மனுஷங்க டெக்னிக்கான ‘நில அபகரிப்பு’ அதுக்கு தெரியாது போல!)
ஒப்பிடுவது இல்லை
சிலந்திகளிடம் உள்ள அருங்குணங்களில் ஒன்று இது. ஒரு சிலந்தி வேறொரு சிலந்தியின் வலையை பார்த்து, பொறாமைப்படுவதோ அதை விட தான் அழகாக வலையை பின்னவேண்டும் என்றோ நினைப்பதில்லை.
நம் திறமை நம்மிடம் இருக்க, எதற்கு மனிதர்களிடம் உள்ள பொறாமை குணம் வேண்டும் என்று அது நினைக்கிறதோ என்னவோ?
இப்போது சொல்லுங்கள்…. இப்படி பல பாடங்களை நமக்கு கற்றுத் தரும் பூச்சியினமான சிலந்தி ஆறறிவு உள்ள மனிதர்களை விட பன்மடங்கு மேலானது தானே?
அடுத்த முறை சிலந்தியை அதன் வலையோடு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், வழக்கமான ஒரு அலட்சியமான பார்வை இருக்காது தானே?
==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
==============================================================
கிரேட் ஜி..
அற்புதம். நல்ல விஷயங்களை யாரிடம் இருந்தும் கற்று கொள்ளலாம்.
ப.சங்கரநாராயணன்
நல்ல ஒரு அருமையான கட்டுரை.
இந்த கதையை பற்றி தெரிந்து இருந்தாலும் அதன் பின் உள்ள அத்தனை புள்ளிவிபரங்களும் தெரியாது.
எல்லாமே நாம் தெரிந்து புரிந்து முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒன்று.
வழக்கம் போல சூப்பர்.
great lesson………..
Monday Special Article very nice as usual. Thanks.
சுந்தர் சார் வணக்கம்
நூற்றுக்கு நூறு நிஜம் தான் சார் ஆறறிவு உள்ள மனிதர்களை விட ஐந்து அறிவு ஜீவன்கள் பன்மடங்கு மேலானது தான் சார்..அற்புதமான தகவல்…
நன்றி
Today’s morning special is a very great lesson to all
கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் நாம் அடைய வேண்டிய சிகரத்தை வெகு விரைவில் அடையலாம். நடுவில் ஏற்படும் தடைகளை கண்டு கலங்க கூடாது.
”வாழ்கையில் ஆயிரம் தடைக் கல்லைப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக் கல்லப்பா // என்ற படையப்பா பாடல் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது
முன் வைத்த காலை நாம் பின் வைக்க மாட்டோம் என்ற கொள்கையுடன் வெற்றியை நோக்கி செயல் படுவோம்
நன்றி
உமா
சிலந்தியில் இத்துனை பெரிய வாழ்க்கைப் பாடமா?…..படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. தேனீக்களைப் போலவே சிலந்தியும் உழைப்புக்கு உதாரணமாக இருக்கிறது. எத்துனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் வலை பின்னும் சிலந்தியின் முயற்சி நிச்சயம் மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.
—
உங்கள் மாறுபட்ட சிந்தனை, கருத்துகளை ரசனையோடு உள்வாங்க உதவுகிறது. நன்றி..!
—
“கடமையசி செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
monday recharge spl very useful leason.
manohar.r