Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > குன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை!

குன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை!

print
சென்ற வாரம் சனிக்கிழமை மாலை குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்ற சேக்கிழார் விழாவுக்கு சென்றிருந்தோம். (இந்த விழாவின் பொருட்டு தான் நமது உழவாரப்பணியே அங்கு நடைபெற்றது.) இந்த விழாவில் நிச்சயம் நம் தளம் சார்பாக நாம் கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி எத்தனையோ அலுவல்களுக்கு இடையேயும் உடல்நலம் சற்று குன்றியிருந்த நிலையிலும் அங்கு சென்றிருந்தோம்.

இப்படி ஒரு விழாவை கண்டதில்லை இனியும் காணப்போவதில்லை என்னுமளவிற்கு பின்னி பெடலெடுத்துவிட்டார்கள். வாய்ப்பை தந்த சேக்கிழார் பெருமானுக்கு நன்றி. (விழாவின் அழைப்பிதழை கூட சென்ற வாரம் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.)

DSCN4578

சேக்கிழார் விழாவையொட்டி நகைச்சுவை பாட்டு பட்டி மன்றம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக குன்றத்தூரை சேர்ந்த, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசும் பதக்கமும், கல்வி ஊக்கத் தொகையும் தந்து கௌரவிக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து தெய்வச் சேக்கிழார் அறக்கட்டளை சார்பாக ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு பெரியோர்கள் பேசினார்.

DSC02845

DSCN4519

DSCN4520DSCN4526DSCN4527முன்னாள் அமைச்சர், சேக்கிழார் அறக்கட்டளையின் தலைவர், விழாவின் ஏற்பாட்டாளர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களை பற்றி வந்திருந்த பேச்சாளர் ஒருவர் பேசும்போது, “காலம் மாறலாம், காட்சிகள் மாறலாம், ஆட்சியும் மாறலாம், ஆனால் அடுத்த நூற்றாண்டிலும் உங்களின் பெயரை இந்த சேக்கிழார் மணிமண்டபம் கூறும்!” என்று குறிப்பிட்டார். உண்மை தான். குன்றதூருக்கே ஒரு மகுடமாக இந்த சேக்கிழார் மணிமண்டபம் விளங்கிவருகிறது.

DSCN4556

DSCN4557நிகழ்ச்சியின் இறுதியாக “பக்தியும் பண்பாடும் திரைப்பட பாடல்களில் வளர்கிறதா தளர்கிறதா?” என்ற தலைப்பில் நகைச்சுவை பாட்டு பட்டி மன்றம் நடைபெற்றது.

இப்படி நாம் சிரித்தும் சிந்தித்தும் பல நாட்களாயிற்று. பிரமாதப்படுத்திவிட்டார்கள். நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டே ரசித்துக்கொண்டிருந்தோம்.

இன்றைய திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் சமுதாயத்தை எந்தளவு சீரழித்து வருகின்றன, கண்ணதாசன், பட்டுகோட்டையார் போன்றோரின் பாடல்கள் எந்தளவு பக்தியையும் பண்பாட்டையும் வளர்ப்பதற்கு உதவின என்று பேச்சாளர்கள் நகைச்சுவை ததும்ப எடுத்துக்கூறி தெள்ளத் தெளிவாக புரியவைத்தனர்.

DSCN4562

DSCN4560

DSCN4576பட்டிமன்ற நடுவர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். மனிதர் பட்டையை கிளப்பிவிட்டார். இவருடைய பெயரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சை கேட்டதில்லை. ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளாராம். தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் ஆன்மீக பட்டிமன்றம் பலவற்றை நடத்தியிருக்கிறாராம்.

DSCN4602
நடுவர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம்

ஏற்கனவே நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சிகள் முடிந்து பட்டிமன்றதிற்காக இவரிடம் மேடையை ஒப்படைத்த போதே மணி 9.00 இருக்கும். பொதுவாக கூட்டம் கலையத் துவங்கும் நேரம் அது. (மாலை சென்னையில் சென்னையை கலங்கடித்த மழை வேறு பெய்தபடியால் நிகழ்ச்சியே சற்றுதாமதமாகத் தான் துவங்கியது. ஆகையால் தான் தாமதமாகிவிட்டது.)

நகைச்சுவை பாட்டு பட்டிமன்றம் துவங்குகிறது...
நகைச்சுவை பாட்டு பட்டிமன்றம் துவங்குகிறது…

எப்படியும் அனைவரும் பேசி முடித்து (கிட்டத்தட்ட இருபக்கங்களிலும் சேர்த்து ஆறு பேச்சாளர்கள்) பட்டிமன்ற தீர்ப்பை இவர் சொல்வதற்கு இரண்டு மணிநேரமாவது ஆகும். அதுவரை மக்கள் பொறுமையாக உட்கார்ந்திருப்பார்களா என்ற ஐயம் நமக்கு ஏற்பட்டது.

DSCN4582

DSCN4589ஆனால், நடுவர் திரு.அழகு.பன்னீர்செல்வம் அவர்கள் தமது பேச்சுத் திறத்தாலும், வெண்கலக் குரலிலும் அவ்வப்போது பாடிய பாடல்களாலும், நகைச்சுவையோடு பட்டி மன்றத்தை கொண்டு சென்ற பாங்கினாலும் கூட்டம் கலையாது அப்படியே உட்கார்ந்திருந்தது. நாம் இதுவரை பல நிகழ்சிகளுக்கு சென்றுள்ளோம். எவ்ளோ முக்கியப் புள்ளி வந்திருந்தாலும் 9.30 மணிக்கு மேல் பார்வையாளர் கூட்டத்தை கலையாமல் வைத்திருபப்து அத்தனை சுலபமல்ல.

DSCN4597தேவாரமும், பெரியபுராணமும், திருக்குறளும், திருவருட்பாவும் நடுவர் அவர்களிடமும் சரி வந்திருந்த பேச்சாளர்களிடமும் சரி விளையாடின. கேட்க கேட்க அத்தனை சுவாரஸ்யம். நாயன்மார்களின் சிறப்பை வந்திருந்த பேச்சாளர்கள் கூறியபோதெல்லாம் உடல் சிலிர்த்தது.

சென்ற வாரம், மயிலை கபாலீஸ்வரர் கோவில் வாசலில் யாசகம் பெரும் தொழுநோயாளி திரு.பலராமன் அவர்களை பற்றிய நமது பதிவில், திரு.சிவா.விஜய் பெரியசுவாமி அவர்கள் குறிப்பிட்ட ஒரு தேவாரப் பாடலை பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டு, மேற்கோள்காட்டியபோது உடல் முழுதும் சிலிர்த்தது. (அதாவது ஒரு பேச்சாளர் கூற அவ்வரிகளை ஒலிப்பெருக்கியில் கேட்டபோது).

“சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே”

(பொருள் : சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே அன்பும் பக்தியும் இல்லாதவர் என்றால் அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.)

என்ன வரிகள்… என்ன பொருள்….!!

இப்படி ஒரு விழாவில் நாம் கலந்துகொள்வது உண்மையில் மிகப் பெரிய பாக்கியம் தான். நேரம் 10.30 ஐ கடந்து இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. சாப்பிடவில்லை. ஆனால், செவிக்கு கிடைத்த உணவால் வயிற்றுக்கு பசிக்கவில்லை. மனம் நிறைந்த போது  பசிக்கென்ன வேலை?

சற்று நினைவுகள் பின்னோக்கி சென்றன. கடந்த காலங்களில் எங்கெல்லாமோ போய் உட்கார்ந்து எதற்க்கெல்லாமோ காத்திருந்து இந்த கால்கள் தவம் கிடந்தன? நேரம் வீணடிக்கப்பட்டது….? ஆனால் இன்று ஈசனருளால் தன்னிலை உணர்ந்த பிறகு வாழ்க்கை தான் எவ்வளவு இனிமையாக அர்த்தம் மிக்கதாக மாறிவிட்டது. முன்பெல்லாம் ஒவ்வொரு வாய்ப்பும் கூட பிரச்சனையாகத் தான் நமக்கு தெரியும். ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு பிரச்னையும் கூட ஒரு மகத்தான வாய்ப்பாக தெரிகிறது. சான்றோர்களையும் நல்லோர்களையும் இடைவிடாமல் சந்தித்து, அவர்கள் மூச்சுகாற்று நம்மீது படுவதால் இருக்குமோ?

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் – அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் – அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

நிகழ்ச்சியில் கண்ணதாசனின் பல வைர வரிகள் நினைவு கூரப்பட்டன.

 ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல் பிறந்த கதை!

அடுத்து….

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா

குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
குள்ள நரி கூட்டம் வந்து குருக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்…நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா – அவற்றை
எமனுலகுக்கனுப்பி வைக்க தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

‘நீலமலைத் திருடன்’ படத்திற்காக கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்திய இந்த பாடலை பாடிய நடுவர் அவர்கள், “இந்த பாடலைவிட ஒரு ஸ்டெப் அதிகமாக தனது படத்தில் ஒரு பாடல் வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். விரும்பி டி.எம்.எஸ். & கண்ணதாசனை கொண்டு உருவாக்கிய பாடல் தான் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற தகவல் இந்த விழாவில் கிடைத்தது.

இப்படிப் பலப் பல அரிய தகவல்களை தெரிந்துகொண்டோம். நிச்சயம் அவை அனைத்தும் நமது எழுத்துப் பணிக்கு மிகவும் உதவும்.

தொண்டைநாடு என்ன உடைத்து?

உதாரணத்துக்கு மேலும் ஒன்று சொல்கிறோம். சோழநாடு சோறுடைத்து என்பார்கள். சேரநாடு தந்தமுடைத்து என்பார்கள். பாண்டியநாடு முத்துடைத்து என்பார்கள்.  நாம் வாழும் இந்த தொண்டைநாடு என்ன உடைத்து தெரியுமா? தொண்டைநாடு சான்றோருடைத்து! ஆம், தொண்டை நாட்டில் தான் அதிகளவு சான்றோர்கள் தோன்றினராம். என்ன ஒரு அற்புதமான தகவல்!!!!

சேக்கிழார் பெருமானின் பெருமையையும் நிறைய கேட்டோம். செவிகள் புனிதமடைந்தன என்று தான் சொல்லவேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தெய்வ’ என்ற அடைமொழி இருவருக்கு மட்டுமே உண்டு. ஒன்று தெய்வப் புலவர் திருவள்ளுவர். மற்றொருவர் நம் பெரியபுராணம் தந்த தெய்வச் சேக்கிழார் பெருமான்.

விழாவையொட்டி பிரமாதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த சேக்கிழார்
விழாவையொட்டி பிரமாதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த சேக்கிழார்

விழாவையொட்டி குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் பிரமாதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இந்த மகத்தான மணிமண்டபத்தில் உழவாரப்பணி செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பு உண்மையில் சேக்கிழார் பெருமானின் பெருங்கருணை தான். வேறென்ன சொல்ல….?

DSCN4547

சென்ற வாரம் உழவாரப்பணிக்கு நாம் வந்திருந்தபோது மண்டபத்தின் காவலாளி பெரியவர் வேலாயுதம் அவர்களுக்கு வேஷ்டி பரிசளித்தது நினைவிருக்கலாம். அதை கட்டிக்கொண்டு வந்திருந்தார் அவர். நாம் கொடுத்த வேட்டி தானா அது என்று சந்தேகத்துடன் அதை பார்த்தபோது, “என்ன பார்க்குறீங்க தம்பி? நீங்க கொடுத்த வேட்டி தான் இது!” என்று கூறி நாம் கேட்காமலே சேக்கிழார் பெருமான் முன், நின்று கையெடுத்து கும்பிட்டார் பாருங்கள்…. நெகிழ்ச்சியில் அழுதே விட்டோம்.

நம் நண்பர் ஒருவர் தனது இல்லத்தரசியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்று நம்மை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தார் எனவே அப்படியே சிலநிமிடங்கள் ஒதுக்கி மணிமண்டபம் அருகேயுள்ள வட திருநாகேஸ்வரம் சென்று திருநாகேஸ்வரருக்கு நண்பரின் குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்தோம். ஆயிரம் சொல்லுங்க… சிவபெருமானை தரிசிக்கும்போது கிடைக்கும் ஒருவித பரவசத்துக்கு ஈடு இணை இந்த உலகில் இல்லை.

DSC02822

மீண்டும் வெளியே வந்து நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும்போதே முடிவுசெய்துவிட்டோம்… நடுவர் திரு.அழகு.பன்னீர்செல்வம் அவர்களை வைத்து நமது ரைட்மந்த்ரா விழா ஏதாவது ஒன்று நடத்திவிடவேண்டும் என்று. நாம் யாரும் மிஸ் செய்யக்கூடாத மாணிக்கம் இவர். காரணம் நமது பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவு, திருக்குறள் உள்ளிட்ட நீதிநூல்களில் தேர்ந்த அறிவு, நகைச்சுவை உணர்வு, நல்ல குரல் வளம் இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர் இவர். எல்லாவற்றுக்கும் மேல் அந்த கலைவாணியின் அருட்கடாக்ஷம் நிரம்பி வழிகிறது.

பக்தி இலக்கியங்களையும் நீதிநூல்களையும் கரைத்து குடித்து பேசுபவர்களுக்கு நகைச்சுவை வராது. நீதி நூல்களும் நகைச்சுவையும் கைகூடி வருபவர்களுக்கு பக்தி இலக்கியங்களை பற்றிய அறிவு இருக்காது. நீதி நூல்களும் நகைச்சுவையையும் கரைத்து குடித்திருந்தால் அவர்கள் நாத்திகர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்தையும், நமது பக்தி இலக்கியங்களையும், நீதி நூல்களையும், நகைச்சுவையையும் ஒருங்கே குழைத்து இவரைப் போல பாமரர்க்கும் எளிதில் புரியும் வண்ணம் புகட்டுபவர் எவரேனும் இருக்கிறார்களா என்று தெரியாது.

நிகழ்ச்சி முடியும் தருவாயில், மேடையேறி நடுவர் அவர்களை சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டு நமது பாராட்டுதல்களை தெரிவித்து, வாழ்த்துக்கள் கூறினோம். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். என்னே என் பாக்கியம்! (எனது பர்சனல் முகநூலில் வெளியிட்டுள்ளேன்). நமது விசிட்டிங் கார்டை கொடுத்தோம். பதிலுக்கு அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார். பிறிதொரு நாளில் ப்ரீயாக தொடர்புகொள்வதாக கூறி, வணங்கி விடைபெற்றோம்.

சமீபத்தில் ஒரு நாள் அவரை தொடர்புகொண்டு நம்மை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். குன்றத்தூரில் மேடையில் சந்தித்ததை நினைவு  கூர்ந்தோம்.

“ஆம் சொல்லுங்க தம்பி… நல்லாயிருக்கீங்களா?” என்றார் அன்புடன்.

தொடர்ந்து சில நிமிடங்கள் பரஸ்பர நல விசாரிப்புக்கு பின்னர் நமது பிரார்த்தனை கிளப்புக்கு இந்த வாரம் தலைமையேற்று எங்களுக்காகவும் நம் நாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

தன்னைப் பற்றியும் தனது ஊரான ஆடுதுறையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பகிர்ந்துகொண்டார்.

“எங்க ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமே… ஊர் நடுவுல வீற்றிருந்து பேரருளை வாரி வழங்குகிற ஆபத்சகாயேஸ்வரர்தான். ஒருமுறை வாலி, சுக்ரீவன் மீது கடும் கோபம்கொண்டு துரத்தியபோது, சுக்ரீவன் இங்கிருந்த சிவலிங்கத்தின் பின்னால் மறைந்து தப்பித்தானாம். சுக்ரீவன், தன்னைக் காப்பாற்றிய சிவனை ஆரத்தழுவி ஆனந்தக் கூத்தாடிய இடம் என்பதால், திருதென்குரங்காடுதுறை என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி ஆடுதுறை என ஆயிற்று” – பட்டிமன்றத்தில் பேசுவதைப் போலவே ஊர் பெருமையையும் ஆணித்தரமாகப் பேச ஆரம்பிக்கிறார் பிரபலப் பட்டிமன்ற நடுவரும் ஆன்மிகப் பேச்சாளருமான ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம்.

வாழைத் தோப்புகள் நிறைந்த ஆடுதுறையில் இருந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு வாழைத்தார், வண்டி வண்டியாகப் போகும். திருப்பதி உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் பிரசாதம் கொடுக்கப் பயன்படுத்தப்படும் தொன்னைகள்  இன்னமும் இங்கிருந்துதான் போகின்றன.

எங்கள் ஊருக்குப் பெருமை சேர்க் கும் இன்னொரு விஷயம் நாடக மன்றம். 90 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசங்கரநாராயண சபாவில் நடிக்காத பிரபலங்களே இல்லை. ஆச்சி மனோரமா இங்குவந்து நடித்தபோது, எனக்கு ஐந்து வயது. தாத்தா காலத்தில் இருந்தே எங்கள் குடும்ப ஆட்கள்தான் இந்த மன்றத்தின் புரவலர்கள். அதனாலேயோ என்னவோ சின்ன வயசிலயே நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். மேடைக் கூச்சம் போக்கவும் பிரபலங்கள் முன் பேசவும் வாய்ப்பு அமைத்துக்கொடுத்தது அந்த மேடைதான்.

அந்தக் காலத்தில் சென்னை செல்லும் புகைவண்டிகளை ஆடுதுறையில் கண்டிப்பாக நிறுத்துவார்கள். அதற்கு முக்கியக் காரணம், ஸ்டேஷன் அருகில் இருந்த பத்மவிலாஸ் என்ற காபி கிளப்தான். அந்த கிளப், மலையாள பிராமணர் ஒருவரால் நடத்தப்பட்டது. இப்போது அவர்களின் உறவினரால் நடத்தப்படும் சீதாராமவிலாஸ் அந்தப் பெருமையைக் கட்டிக் காப்பாற்றுகிறது. நவக்கிரகக் கோயில்களுக்கு வரும் பக்தர்களும் பிரபலங்களும் அந்த ஹோட்டலுக்குக் கண்டிப்பாக வருவார்கள்.

DSC02837

சுற்றிலும் நவக்கிரக ஆலயங்கள் அமைந்த ஊர், தென் இந்தியாவின் பண்டரீகபுரம்னு அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஊர்னு எங்க ஊரோட ஆன்மிகப் பெருமைகளையும் அடுக்கிக்கிட்டே போகலாம். ஊரிலேயே பெரிய திருவிழானு சொன்னா அது மதுரகாளியம்மன் கோயில் திருவிழாதான். 50 கிராம மக்கள் கூடும் அந்தத் திருவிழா, மூணு நாள் விமர்சையா நடக்கும்.  இப்போ உள்ள இயந்திர வாழ்க்கையால் எல்லா ஊர்கள்லயும் திருவிழா நாட்கள் சுருங்கிப்போக, இங்க மட்டும் மூணு நாள் விழாவை அஞ்சு நாளா நீட்டிச்சு சிறப்பாக் கொண்டாடிட்டு  வர்றோம். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்துல இருக்கிற மேலமருத்துவக்குடி விருச்சிக ராசி ஸ்தலமும் உலகப் புகழ்பெற்றது. தேள் வடிவ விநாயகரை இங்க மட்டுமே பார்க்க முடியும்.

அப்பவும் சரி, இப்பவும் சரி… கல்யாண மண்டபங்கள் அதிகமா உள்ள ஊர் எங்க ஆடுதுறை. சுற்றிலும் கோயில்கள் நெறைஞ்சு உள்ளதால இங்க திருமணங்கள் அதிகமா நடக்கும். என்னை வளர்த்துவிட்டதும் இந்த மதுரகாளியம்மன் தாயிதான். அதனால, அந்தத் திருவிழாவுல 24 வருஷமா விடாம பட்டிமன்றம் நடத்திட்டு வர்றேன். அம்மாவுக்கு என்னால வேற என்ன செய்யமுடியும்? சொல்லுங்க!’  என்கிறார் ஆடுதுறை அழகு.

இறுதியில் பேச்சாளர்கள் கௌரவிக்கப்ப்படும்போது...
இறுதியில் பேச்சாளர்கள் கௌரவிக்கப்ப்படும்போது…

DSC02832பக்தியும் அறநெறியும் தழைக்க ஆன்மீக பட்டிமன்றங்களை தமிழகம் முழுக்க நடத்தி வரும் திரு.அழகு.பன்னீர்செல்வத்தின் குடும்பமே கடவுள் மறுப்பை பிரதான கொள்கையாக கொண்ட திராவிடர் கழகத்தின் மீது பற்று கொண்ட குடும்பம். இவரது தத்தா சிங்கப்பூரில் திராவிடர் கழகத்தை வளர்த்தவர். தந்தையோ 14 வயது முதல் திராவிடர் கழக பேச்சாளர்.

இவர் மட்டும் எப்படி இப்படி மாறினார்?

“நானும் கல்லூரியில் படிக்கின்ற காலம் வரை திராவிடர் கழகத்தில் தீவிர உறுப்பினராக இருந்து கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஊறி ஊர் ஊராக பேசித் திரிந்தவன் தான். இறைவன் என்னை தடுத்தாட்கொண்டான் என்று தான் சொல்லவேண்டும். நான் சந்தித்த சான்றோர்களின் மூச்சு காற்று என்னை மாற்றியது. எனது இந்த மிகப் பெரும் மாற்றத்துக்கு காரணம் பன்றிமலை ஸ்வாமிகள் தான்! அவர் தான் இந்த களிமண்ணை செதுக்கிய சிற்பி!” என்கிறார் நெகிழ்ந்து.

“என் பிறவியின் காரணத்தை உங்களைப் போல எங்கிருந்தோ யாரோ ஒருவர் என்னை அழைத்து பாராட்டும்போது உணர்கிறேன்!” என்றார்.

“நானும் ஒரு காலத்தில்….
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
வீழ்வதற்கு இருந்தவன் தான் சார். ஆண்டவனின் கருணையால் தடுத்தாட்கொள்ளப்பட்டு இன்று மாநிலம் பயனுற வாழும் ஒரு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறேன்!!” என்றோம்.

தட்டுத் தடுமாறாமல் மடை திறந்த வெள்ளம் போல பாரதியின் இந்த வரிகளை நாம் அவரிடம் சொன்னபோது, “அட… அட… உங்க கிட்ட பேசுறதையே நான் பெருமையா நினைக்கிறேன் தம்பி! எப்போ வேணும்னாலும் நீங்க என்னை கூப்பிடலாம். அடிக்கடி என்கிட்டே பேசுங்க!” என்றார்.

“எல்லாப் புகழும் இறைவனுக்கே ஐயா!” என்றோம்.

தொடர்ந்து அவரிடம் பேசியதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

DSC02830

இதுவரை நூற்றுக்கணக்கான் சித்தர்களையும் ஆன்மீக புருஷர்களையும் நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றிருக்கிறாராம் இவர். பல நூற்றுக்கணக்கான ஊர் திருக்கோவில்களில் விழாக்களில் ஆன்மீக பட்டிமன்றம் நடத்தியிருக்கிறார். ஒரு பக்கம் சினிமா மோகமும் டாஸ்மாக்கும் அப்பாவி இளைஞர்களை சுரண்டிக்கொண்டிருக்க, இவர் தனது திரை இசைப்பாடல்களின் மூலம் பக்தியையும் பண்பாட்டையும் வளர்த்து வருகிறார்.

இன்னொரு விஷயம் தெரியுமா? தலைவருக்கு ரொம்ப நெருக்கமானவருங்க இவர். நான் சொல்றது சிவபெருமானை. எப்படின்னா… தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் சதய விழாவில் பலமுறை இவருடைய தலைமையில் பட்டிமன்றம் நடந்துள்ளது. நடந்து வருகிறது. தலைவருக்கு எந்தளவு இவரோட பட்டிமன்றம் பிடிச்சிருந்தா ராஜராஜன் தனக்கு கட்டிய சரித்திரப் புகழ் வாய்ந்த பெரியகோவிலில் இவருடைய பட்டிமன்றத்தை அடிக்கடி ஏற்பாடு செய்து கேட்டுக்கொண்டிருப்பார்? தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்குவது என்பது எத்தனை பெரிய பாக்கியம்….!

மேலும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்மனின் மகத்துவங்களை வெளியுலகிற்கு குறிப்பாக அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் பேசி வெளியுலகிற்கு கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். இப்போதும் நாள் கிழமை விஷேடங்களின் போது தஞ்சை பெரியகோவிலில் உள்ள வாராஹியை தரிசிப்பதற்க்கென்றே மக்கள் பெருந்திரளாக செல்கிறார்கள்.

இப்படி திரு.ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எதிர்காலத்தில் இறையருளால் நமது ரைட்மந்த்ரா சார்பாக நடைபெறும் விழாக்களில் இவரது பங்கு நிச்சயம் இருக்கும்.

=================================================================

நம் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பொழுதுபோக்கும் சினிமாவும் மட்டுமே வாழ்க்கை என்று வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்த சவாலையும் சந்திக்கக்கூடிய திறமை  இல்லாதவர்களாகவே இருப்பார்கள். நீங்கள் அதற்கு துணைபோகவேண்டாம். பிள்ளைககள் தோளுக்கு மீறி வளர்வதற்கு முன் அவர்களை பக்குவப்படுத்துங்கள்.

DSCN4174

கோடி கொடுத்தாலும் போதாது என்ற அளவுக்கு தகுதி உடைய, பாம்பே ஞானம் அவர்களின் போதேந்திராள் இராம நாம மகிமை நாடகம், திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் ‘குரு மகிமை’ நிகழ்ச்சி இவையெல்லாம் சென்னையில் ஆங்காங்கே (ஏன் தமிழகம் முழுக்க) இலவச அனுமதியுடன் நடந்துவருகிறது. நமது முகநூலிலும் அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறோம். எத்தனை பேர் இதுவரை உங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்றிருப்பீர்கள்? கோடை விடுமுறையில் கூட அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமிருந்ததாக தெரியவில்லை.

DSCN4308

“என் பையன் இண்டர்நெட்ல உட்கார்ந்தா எழுந்திருக்கவே மாட்டான்… என் பெண்ணுக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை…”  என்றெல்லாம் சிலர் பெருமையாக (?!) பேசுவதை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இது போன்ற விழாக்களில் கூடுமானவரை உங்கள் பிள்ளைச் செல்வங்களுடன் கலந்துகொள்ளுங்கள். இவை அவர்களை பக்குவப்படுத்தும். சிந்தனையை மாற்றும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சக்தியை கொடுக்கும். கடவுளை வேண்டுவதால் மட்டும் எதுவும் கிடைத்துவிடாது. கடவுள் அதை விரும்பவும் மாட்டார். நாமாக இந்த உலகில் கற்றுகொள்ள வேண்டியது நிறைய உண்டு.

டி.வி.சீரியல்களிலிருந்தும், மனதில் வக்கிரங்களை விதைத்து நஞ்சை விதைக்கக்கூடிய திரைப்படங்களை பார்ப்பதில் இருந்தும் விலகி இருங்கள். (இப்போதெல்லாம் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசுவதே காமெடி என்று சினிமாக்களில் காட்டுகிறார்கள்). நேரத்தை வீணடிக்கும் இதர விஷயங்களில் இருந்தும் விலகி, இது போன்ற விழாக்களில் நிகழ்ச்சிகளில் உங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொள்ளுங்கள். உங்கள் அறிவு மட்டும் அல்ல உங்கள் பிள்ளையின் அறிவும் வளரும். இறைவனின் ஆசியும் குருமார்களின் ஆசியும் பரிபூரணமாய் கிடைக்கும்.

ஆளும் வளர்ந்து அறிவும் வளரவேண்டும். அது தான்  வளர்ச்சி. வெறும் எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் என்ன பதினைந்தில் கூட நிச்சயம் வளையாது!

=================================================================

[END]

6 thoughts on “குன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை!

  1. சேக்கிழார் விழாவினைப்பற்றியும் பட்டிமன்ற நடுவர் திரு.அழகு.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றிய அறிமுகமும் அருமை. தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதை உண்மையாக்குவதுபோல் என்றும் தேடலிலேயே தாங்கள் இருப்பதால் தான் பல நல்ல உள்ளங்களைக் கண்டடைகிறீர்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  2. சேக்கிழார் மணி விழா பதிவு மிகவும் அருமையாக நேரில் விழாவை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. மிகவும் அழகாக தொகுத்து பதிவு செய்திருக்கிறீர்கள்.

    சேக்கிழார் மணி மண்டபத்தில் நாம் சென்ற வாரம் உழவார பணியில் கலந்து கொண்டதை மிகவும் பெருமையாக நினைக்கிறோம். எல்லாம் அந்த ஈசன் செயல்.

    விழாவை நாம் attend பண்ண முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் ஏற்படுகிறது இந்த பதிவை படித்த பிறகு. பட்டிமன்ற நடுவர் திரு.ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அவர்கள் நம் தள ஆண்டுவிழாவிற்கு அழைக்கவும். அவருடைய பேச்சை கேட்க ஆவலாக உள்ளோம்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அழகு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

    நாமும் நம் குழந்தைகளை இந்த மாதிரி விழாக்களுக்கு அழைத்து சென்று ஆன்மிக பற்றை வளர்ப்போம்.

    நன்றி

    உமா

  3. சார்,

    கிரேட்……….. எங்கள் குழந்தைகளையும் பக்தி நெறியில் வளர்க்க ஆசைபடுகிறோம்.

    தாமரை வெங்கட்

  4. உமா அவர்கள் கூறுவதைப் போல, இந்த நிகழ்ச்சியை நாம் மிஸ் செய்துவிட்டோமே என்று ஏங்குகிறேன். நீங்கள் கொடுத்துவைத்தவர் என்று தான் சொல்லவேண்டும்.

    தமிழ் திரைப்பாடல்கள் வரலாற்றில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் காலம் பொற்காலம் என்று தான் சொல்லவேண்டும்.

    பிள்ளைகளை வளர்ப்பது குறித்து இறுதியாக நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் சரி. சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

    என் பிள்ளைகளை பொருத்தவரை, நம் தளத்தில் வெளிவரும் நீதிக்கதைகளையும் பக்திக் கதைகளையும் இரவு படுக்கப் போகும் முன் சொல்லி வருகிறேன். மிகவும் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

    நடுவர் அவர்களுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தயவு செய்து யோசிக்காமல் வெளியிடவும்.

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர், சேலம் மாவட்டம்

  5. பதிவு அருமை.
    மிக நீண்ட பதிவாக இருந்தாலும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம்.
    சேக்கிழார் பெருமானின் பெருமையும் ஆடுதுறையின் சிறப்பும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுபவை.
    விழாவை miss பண்ணிவிட்டோம் என்ற கவலையும் குன்றத்தூரில் நாம் வசித்து இருக்க கூடாதா என்ற ஏக்கமும் பெரிதும் தெரிகிறது.
    எல்லா வரிகளும் படித்து பயன் பெற வேண்டிய பதிவு.
    nandri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *