Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

print
னித குலத்துக்கு எத்தனை வகையான பிரச்சனைகள் உண்டோ அத்தனைக்கும் உரிய ஸ்லோகங்களும் பரிகாரங்களும் உண்டு. அவை பெரும்பாலும் மாபெரும் ஞானிகளும், மகரிஷிகளும், இறையடியார்களும் கூறியவை, இயற்றியவை. கலியுகத்தில் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் மூழ்கி, தப்புவதற்கு வழியின்றி தவிப்பர். பக்தி செய்யகூட நேரம் இன்றி ஓடுவர். அது சமயம் அவர்களுக்கு இந்த ஸ்லோகங்களும் பாடல்களும் உபயோகமாய் இருக்கும் என்று கருதியே இந்த அரிய ஸ்லோகங்களை இயற்றி வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான் அகத்திய மாமுனி இயற்றிய திருமகள் துதி.

கடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல் !

செல்வம் பெருகவும் கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய மாமுனி எழுதி இருக்கிறார். இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் சுபிட்சம் பொங்கும். இந்த பாடல் எழுதிய ஏடுகள் வீட்டில் இருந்தாலே செல்வம் பெருகும்.

Agathiya lobamuthiraiஅகத்திய முனிவர் தமிழகத்தில் தம் திருப்பாத்தத்தை பதித்தபோது தன் துணைவி லோபமுத்திரையோடு கங்கைகொண்ட சோழபுரம் அருகே (அரியலூர் மாவட்டம்) உள்ள கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கு அன்னை மஹாலக்ஷ்மி திருக்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றபோது திருமகள் மீது பாடல்களை இயற்றி போற்றினார். அப்பாடல் கேட்டு மகிழ்ந்த திருமகள் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, “உன்னுடைய பாடல்களுக்கு நான் மனமகிழ்ந்தேன். இப்பாடலைப் பாடி போற்றினார் யாவரும் கெடுதற்கு அரிய, பெரிய இன்பங்களை நுகர்வார்கள். இப்பாடல்களை எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் (மூதேவி) அவ்வில்லத்தை அடையமாட்டாள்”, என்று திருவாய் மலர்ந்தருளினாள். (பாடலின் கடைசி மூன்று வரிகளை படியுங்கள். புரியும்!) கி பி 1564 முதல் 1604 ம் ஆண்டு வரை தென் பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டதாக தெரிகிறது.

இப்பாடல்களை தினந்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை அடைந்து அச்செல்வத்தை நல்ல முறையில் துய்ப்பர். அதனால் விளையும் பயனையும் துய்ப்பர். இப்பாடலானது வீட்டிலே இருந்தாலே செல்வம் கொழிக்கும். இது அனுபவப்பூர்வமான உண்மை. மேலும் அன்னை திருமகளே அறுதியிட்டு கூறியிருக்கிறாள். ஆகவே நம் வாசகர்கள் இந்த பாடலை கண்ணென போற்றி பாதுகாக்கக் வேண்டும்.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பாடலை தனியாக பிரிண்ட் அவுட் எடுத்து, அதை லேமினேட் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து வணங்கி வாருங்கள்.

நல்ல மன மாற்றத்துடன் திடமான தன்னம்பிக்கையுடன் நம் குறைகளை களைந்து இப்பாடலை பக்தியுடன் பாடி வந்தால் திருமகள் கண் திறப்பாள்.

உங்கள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒரு ஊரில் கடும் வறட்சி காரணமாக மழை வேண்டி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பிரார்த்தனை செய்ய ஊரே திரண்டு நின்றபோது ஒரு சிறுமி மட்டும் கையில் குடையோடு வந்தாளாம்.

“ஏன்?” என்று கேட்டதற்கு, “சாமிகிட்டே மழை வேணும்னு பூஜை பண்றோம். அப்ப மழை வந்துட்டா, நனைஞ்சுட மாட்டோமா? அதான்!’ என்று அந்தச் சிறுமி சொன்னாளாம். சிறுமியின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டி இறைவன் மழை பொழிவித்தானாம்.

அந்தச் சிறுமியின் நம்பிக்கை போல உங்கள் நம்பிக்கை இருக்கவேண்டும். பிறகென்ன…? அருள்மழை நிச்சயம்!

சிறப்பு மிக்க அந்த பாடல் வருமாறு :

Maha Lakshmi

அகத்திய மாமுனி இயற்றிய திருமகள் துதி!

1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான்

பொருள் : மூன்று உலகங்களுக்கும் துன்பத்தைச்செய்த வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்.

2. கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டிலுரை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே…
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்…

பொருள் : “வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே! எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும் தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!”

3. கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள் அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே எனவணக்கஞ் செய்வான் மன்னோ…..

பொருள் : “திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே! தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!” என்று வணக்கம் செய்யலானான்.

4. மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ…..

பொருள் : இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?

5. மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்….
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே…..

பொருள் : அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!

6. செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா…..

பொருள் : செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!

7. என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
“நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவன் மருவல் செய்யாள்….”

பொருள் : என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன் (திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்) “நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் கெடாத பெரிய போகங்களை நுகர்வார்கள். இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் வறுமையைக் கொடுக்கின்ற மூதேவி அவ்விடத்தில் பொருந்துதலைச் செய்யமாட்டாள்”.

www.rightmantra.com | The right formula for the right life

[END]

11 thoughts on “அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

  1. நன்றி சுந்தர்ஜி

    நமது தளம் அணைத்து வாசகர்களின் வாழ்வில் பலவிதங்களிலும் – ஞானத்திலும், தெய்வீக அருளிலும், எல்லாவித பொருளிலும் -முன்னேற்றத்தை பெற பெரும் உதவி புரிந்துள்ளது.

    மிக்க நன்றி.

    ப.சங்கரநாராயணன்

  2. வெள்ளிக் கிழமை மகா லக்ஷ்மியின் அகஸ்தியர் அருளிய கடன் தொல்லை தீர சொல்ல வேண்டிய பாடலை போட்டு அசத்தி விட்டீர்கள். எல்லோருக்கும் உபயோகமான பதிவு. நாம் இந்த பாடலை பூஜை அறையில் வைத்து வணங்கி வழிபடுவோம். மகா லக்ஷ்மி போட்டோ அருமையாக உள்ளது. மகாலட்சுமி எல்லோருக்கும் பண மழை பொழிய அருளட்டும். நம் தளமும் மகா லக்ஷ்மி அருளால் எல்லோருக்கும் நல்லது செய்வதற்கு உண்டான பண பலத்தை அருளட்டும்.

    இந்த பாடலை நம் தளம் சார்பாக பதிவாக வெளியிட்ட ரைட் மந்த்ராவிற்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா

  3. Sir,

    Thank you very much. We took copies and issued to our colleagues on behalf of you. Thanks.

    Regards,
    Thamarai Vengat

  4. மிக மிக அருமையான அவசியமான ஒன்று.

    பொருளாதார பிரச்னை யாருக்குத் தான் இல்லை? அவரவர் வருவாய்க்கு ஏற்ப அனைவரும் கடன் வாங்கவே செய்கின்றனர். இப்போதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் க்ரெடிட் கார்ட் கொடுத்து வாங்குவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். க்ரெடிட் கார்டுக்கு பதில் டெபிட் கார்ட் பயன்படுத்துவது சிறந்தது.

    பாடல் உண்மையில் கருத்தாழம் மிக்கது. அகத்தியர் எழுதியதல்லவா? சுவைக்கு கேட்கவேண்டுமா என்ன?

    பயனுள்ள பதிவுக்கு நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்.

  5. வணக்கம் ஐயா……இந்த பதிவை நான் பிரிண்ட் செய்து என் பூஜை அறையில் விட்டு மனமுருகி படிப்பேன் ஐயா ….மிக்க நன்றி …

  6. சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதிக்கொள்வது
    எனக்கு 63 வயதாகிறது. நான் ரைட் மந்த்ராவில் சென்று
    படித்ததில் மிக நல்ல ஆன்மீக விஷயங்களைப்பற்றி
    கூரியிருகிரீர்கள். மெய்சிலிர்க்க வைக்கிறது. சித்தர் அகஸ்தியர் அவர்கள் இயற்றிய திருமகள் துதி படித்தேன்.
    என்னுடைய சிஸ்டத்தில் பிரிண்ட் அவுட் எடுக்கும் வசதி இல்லை. காரணம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

    எனக்கு சித்தர் அகத்தியர் எழுதிய திருமகள் துதியும், சுந்தரகாண்டம் என்ற நூலும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப முடிந்தால் தயவு செய்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கங்கள் பல.

    வரதராஜன்
    கோயமுத்தூர் – 641043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *