Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

print
ஜூன் 24 – கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள். இன்று முழுதும் கண்ணதாசன் அவர்கள் தொடர்புடைய பதிவுகளே இடம்பெறும். கண்ணதாசன் அவர்களை பற்றி இந்த தளத்தில் பல முறை பல இடங்களில் நெகிழ்ந்து, சிலாகித்து  எழுதியிருக்கிறோம். கவிஞரின் மகன் திரு.காந்தி கண்ணதாசன்  அவர்களைக் கூட நம் தளம் சார்பாக சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறோம்.

நம் வாழ்வின் மிகப் பெரும் மாற்றத்திற்கான வினையூக்கியாக கண்ணதாசன்  இருந்தார். அவரது படைப்புக்கள் இருந்தன.  இந்த குளத்தில் கல்லெறிந்தவர்களில் கவியரசு கண்ணதாசனும் ஒருவர்.

நாம் எந்தளவு மகாபெரியவா அவர்கள் மீது பக்தி வைத்திருக்கிறோமோ அதை விட ஆயிரம் மடங்கு கண்ணதாசன் அவர்கள் பக்தி செலுத்தி வந்தார்.

1973 இல் தினமணியில் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் தொடரில் காஞ்சி மகா பெரியவரை பற்றி எழுதும்போது…. “அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் தெரியும். இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும். ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணரல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்? அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்!” என்று அன்றே முழங்கியவர் கவியரசர்.

மனிதனும் கடவுளும் சொல்லாத ஆறுதலை அவரது பாடல்கள் பல முறை நமக்கு சொல்லியிருக்கின்றன.

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

அவரது வரிகளில் நாம் அதிகம் ஹம் செய்தது மேற்படி பாடல் தான்.

‘கர்ணன்’ படத்தில் வரும் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா…” பாடலும் நமக்கு மிகவும் பிடித்த ஒன்று.

பல்வேறு நிர்பந்தங்களும் பொறுப்புக்களும் கடமைகளும் அபிலாஷைகளும் உள்ள சராசரி மனிதன் ஒருவன் அதுவும் இப்படி ஒரு தளம் நடத்தினால் அவனுக்கு என்னென்ன சந்தேகங்கள் வரும், சங்கடங்கள் வரும், சோதனைகள் வரும், கஷ்டங்கள் வரும்… சற்று யோசித்து பாருங்கள். எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. கடவுள் நாம் கூறுவதை கேட்டுக்கொள்வார். ஆனால் பதில் சொல்லமாட்டார். ஆனால் கண்ணதாசன் பதில் சொல்வார். அது தான் அவர் படைப்புக்களிடம் இருக்கும் சிறப்பு.

http://rightmantra.com/wp-content/uploads/2014/04/Arthamulla-Hindhumadham.jpg

நமது பார்வையை விரிவடையச் செய்ததில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூல் பெரும்பங்கு வகிக்கிறது.

இப்போதும் சொல்வேன்… உங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் இருக்கவேண்டிய ஒரு நூல் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’. நாம் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல, இது இந்து மதக்கொள்கை விளக்க நூல் அல்ல. வாழ்வியல் நூல். எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை விளக்கும் நூல். தனது வாழ்க்கையில் தான் பட்டவற்றை, கற்றுகொண்டவற்றை அடிப்படியாக வைத்து கண்ணதாசன் பலவிஷயங்களை விளக்கியிருப்பார்.

அந்நூலில் நாம் படித்த, மிக அருமையான ஒரு அத்தியாயத்தை இங்கு தருகிறோம்.

==================================================================

பாவமாம், புண்ணியமாம்!

(அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 1 – அத்தியாயம் 4)

இது வரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிட வில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிடவிரும்புகிறேன்.

படஅதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வநம்பிக்கை யுள்ளவர்.

Kannadasan With Devarசினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என சொல்லத்தக்க உயர்ந் தோரில் ஒருவர்.

முப்பது முப்பத்தைந்து வயது வரை, அவரது வாழ்க்கை கடும் வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாணயத் தையும் நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்திகோதா நடத்தினார். சிறிய பால்பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.

அவரது வரலாறு உழைத்துமுன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒருபாடமாகும்.

அந்தநேரத்தில் ஒருவெற்றிலை பாக்கு கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.

கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப்போட்டு முறுக்கினான்; அந்த கடையிருக்கும் பக்கமே போகமுடியாதபடி அவதிப்பட்டார்.

அடிக்கடி கோவைக்குப் பத்துமைலுக்கு அப்பாலிருக்கும் மருத மலைக்குப் போய் ‘முருகா! முருகா!’ என்று அழுவார்.

அந்தக்கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.

கடைக்காரன் கோபித்துக்கொண்ட அன்று இரவு. அந்த மருதமலை கோவிலில்போய் உட்கார்ந்துகொண்டு அழுதார்; “முருகா! காப்பாற்று” என வேண்டிக்கொண்டார்.

நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்தமலையை விட்டு இறங்கினார்.

வழியில் ஒருசிகரெட் பாக்கெட் கிடந்தது. அதை காலால் உதைத்துக்கொண்டு நகர்ந்தார்.

கொஞ்ச தூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?

அந்த சிகரெட்பாக்கெட்டை எடுத்து பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்துரூபாய் நோட்டும் இருந்தன.

அப்போது அவரதுமனநிலை எப்படி இருந்திருக்கும்?

“நல்லவனாகவாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்; தெய்வம் கைவிட வில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்!

அந்த முருகன் அவரை வாழவைத்தான்.

ஒவ்வொரு நாளும், “முருகா! முருகா!” என உருகுகிறார்.

tnhrce3

“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம்வரக்கூடாது” என்று தொழில்புரிகிறார். அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.

நீயும் நல்லவனாக இரு தெய்வத்தைநம்பு.

உனக்கு வருகிற துன்பமெல்லாம், பனி போல பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மதத்தையே நம்ப வேண்டாம்.

“பாவமாம், புண்ணியமாம்; எந்தமடையன் சொன்னான்?”

“சொர்க்கமாம், நரகமாம்! எங்கேஇருக்கின்றன அவை?”

“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில் தானே? பார்த்து கொள்வோம் பின்னாலே?”

இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன்மொழிகள்.

பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாக தெரிகின்றன.

‘நரம்பு தளர்ந்து போன கிழவர்கள், மரணபயத்தில் உளறிய வார்த்தைகள் அவை’ என அவன் நினைக்கிறான்.

நல்லதையேசெய்தால் சொர்க்கத்துக்கு போவாய் என்றும், அங்கே வகை வகையாக விருந்துகள் உனக்கு காத்திருக்கும் என்றும், தீங்குசெய்தால் நரகத்துக்கு செல்வாய் என்றும், அங்கே உன்னை எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள் நாகரிகஇளைஞனுக்கு நகைச்சுவையாக தோன்றுவதில் வியப்பில்லை.

ஆனால் இந்தக்கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்கு படுத்துவதற்காகவே தோன்றியகதைகள்.

அவனுடைய பற்றாக் குறை அறிவை பயமுறுத்தித்தான் திருத்தவேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக் கதைகளை சொல்லிவைத்தார்கள்.இந்த கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன என்பதைஅறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட, எவ்வளவு பலனை தருகின்றன என்பதை அவன் அறிவான்.

பாவம்புண்ணியம் பற்றிய கதைகளைவிடு; பரலோகத்துக்கு உன்ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்பவேண்டாம்.

ஆனால், நீசெய்யும் நன்மை தீமைகள், அதேஅளவில் அதே நிலையில், உன் ஆயுட் காலத்திலேயே உன்னிடம் திரும்பி விடுகின்றன.

அந்த அளவு கூடுவது மில்லை, குறைவதுமில்லை.

ஒருவனை எந்தவார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.

“எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என கிறிஸ்தவவேதம் கூறுகிறது.

“செய்தவினை, அதே வடிவத்தில் திரும்பவரும்” என்று முதன் முதலில் போதித்தது இந்து மதம் தான்.

“பாவம் என்பது நீசெய்யும் தீமை.”

“புண்ணியம் என்பது நீசெய்யும் நன்மை.”

“முற்பகல்செய்யின் பிற்பகல் விளையும்.”

“அரசன் அன்றுகொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”

“விநாச காலே விபரீத புத்தி.”

இவை எல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.

ஊரைக் கொள்ளையடித்து, உலையிலேபோட்டு, அதை உயில் எழுதி வைத்து விட்டு மாண்ட வன் எவனாவது உண்டா?

பிறர்சொத்தை திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா?

அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதிவைத்த உயிலின்படி அவன்சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ‘ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்த வனுடைய சந்ததி சாப்பிட்ட தில்லை.

கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாகவாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா?

எனக்கு தெரிந்தவரை இல்லை.

ஒருவன் செய்த எந்தபாவமும் அவன் தலையைச்சுற்றி ஆயுட் காலத்திலேயே அவனை தண்டித்துவிட்டுத்தான் விலகியிருக்கிறது.

“பாவத்தின்சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.

இல்லை, பாவத்தின் சம்பளம் வயதானகாலத்தில் திரும்பவரும் சிறுசேமிப்பு நிதி; சரியான நேரத்தில் அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!

சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!

முதல்தீர்ப்பு அவன் ஆயுட் காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில்தர்மலிங்கமும், மற்றும் இருபதுபேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத்தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.

அவர்களைத் தனித்தனியாகச் சிலஅறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.

அவர்களிலே, ‘மாயவரம் கொலைவழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழுபேர்.

செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு. சோம சுந்தரம்.

பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுவது வழக்கம்.

காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப்போகும் குற்றவாளி நல்லவனாக திரும்பிவந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!

அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தேயோசிப்பார்.

செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம்செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.

மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத்தண்டனையை ஊர்ஜிதம்செய்தார். அவரைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டும், அதை ஊர்ஜிதம்செய்தது.

ஜனாதிபதிக்கு கருணைமனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம்செய்தார். காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.மாயவரத்தில் நாற்பதுவயதான ஒரு அம்மையார், விதவை. அந்தவயதிலும் அழகாக இருப்பார்.

சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக் கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார். சொந்தவீட்டில் ஒரு வேலைக்கார பெண்ணை மட்டுமே துணையாக கொண்டு வாழ்ந்திருந்தார். அவரை மோப்பமிட்ட சிலர், ஒரு நாள் இரவு அவர் வீட்டுக்குள்புகுந்தார்கள்.

ஐந்துபேர் அவரை கற்பழித்தார்கள். அந்தஅம்மையார் மூச்சுத்திணறி இறந்துபோனார். இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான். ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித் தான் கூறிற்று.

நகைகள் கொள்ளையடிக்க பட்டன! கொலைகாரர்கள் ஓடிவிட்டார்கள். பிடிபட்டவர்கள் ஏழுபேர்.

சிறைச்சாலையில் அந்த ஏழுபேரில் ஆறுபேர் “நாளை தூக்குக்கு போகப்போகிறோமே!” என்று துடித்து கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஒருவன்மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான். சிறைச் சாலையில் தூக்குத் தண்டனை பெற்றகைதிகளை மற்றகைதிகள் அணுகிப் பேசமுடியாது.

நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதிபெற்று, அவர்களை அணுகினோம்.

சலனமே இல்லாமலிருந்தானே அந்தமனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக்கொடுத்தோம்.  உடம்பிலே துணி கூட இல்லாமல் சிறைச் சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.

நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:

“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும் போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி ‘அலிபி’ தயார் செய்துவிட்டு அந்த கொலையை செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக்கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”

அவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்றுகொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது.

அப்போது மாலை ஐந்துமணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்கு திரும்பினோம்.

தர்மு தன்னையும் மறந்துசொன்னார்,

“என்னதான் சொல்லையா, செய்யறபாவம் என்றைக்கும் விடாதய்யா!”

ஆமாம், பாவம்கொடுத்த, ‘போனஸ்தான் செய்யாத கொலைக்கு தண்டனை.

அன்று இரவு நான் தூங்கவே இல்லை.

காலை ஐந்துமணிக்கு, “முருகா! முருகா!” என்று பலத்தசத்தம்.

கைதிகள் தூக்குமேடைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.

(நன்றி : கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’)

============================================================
Also check :
“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

============================================================

4 thoughts on “‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

  1. வணக்கம் சுந்தர் சார்

    என்ன சொல்லுவதென்று தெரியலவில்லை. மிக அருமையான பதிவு.

    கண்ணதாசன் ஒரு திர்க்கதர்சி ஒவ்வொரு வரிகளும் உண்மை.

    .பாவ புண்ணியத்தின் கணக்கு , இப்போது தெரியாது. கடை காலத்தில் தெரியும்.

    நன்றி
    ராஜாமணி

  2. திரு கண்ணதாசன் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவை போட்டு அவரை நம் தளம் சார்பாக நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி ”

    கண்ணதாசனின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. மகா பெரியவரை பற்றி கண்ணதாசன் கூறியது எவ்வளவு பெரிய உண்மை. திரு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நாம் ஒவொருவரும் படிக்க வேண்டிய அற்புத நூல். தேவாரம் திருவாசகம் போல் நமக்கு ஓர் அரு மருந்து என்றால் மிகையாகது. கண்ணதாசன் வரிகளில் திரு MSV இசையில் திரு TMS பாடிய பாடல்களை இன்றும் கேட்டாலும் நமக்குள் ஒரு சந்தோசம் கிடைக்கும். in fact, Thiru MSV அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்.

    திரு தேவர் அவரகளை பற்றி கண்ணா தாசன் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அவரின் முருக பக்தியால் அவர் வாழ்வின் உன்னத நிலையை அடைந்தார்.

    தூக்கு தண்டனை கைதியை பற்றி அவர் கூறியது ‘அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்றுகொல்லும்’ என்ற பழமொழி எவ்வளவு பெரிய உண்மை .

    கண்ணதாசன் பாடல்களில் நமக்கு பிடித்தது ‘””உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி யாகு'””

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

    உமா

  3. கண்ணதாசனைப் போல் சுய சரிதையை உண்மையாக எழுதியவர்கள் மிகக் குறைவு!

    சிந்திக்க வேண்டிய வரிகள்:
    1. ஒருவனை எந்தவார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.
    2. என்னதான் சொல்லையா, செய்யறபாவம் என்றைக்கும் விடாதய்யா!
    3. பிறர்சொத்தை திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா?

    அனுபவங்கள் அனைத்தையும் அனுபவித்து எழுதிய கவிஞன்!!!

  4. தேவரும் கண்ணதாசனும் யாராலேயும் மறக்கமுடியாது சார்.

    எப்பவும் எப்போதும் எப்படி இருக்கணும் என்று சொன்னவர்கள் மட்டும் அல்ல அப்படியே வாழ்ந்து கட்டியவர்கள் . கிரேட் சார்

    எப்படி தான் உங்களுக்கு மட்டும் செய்திகள் கிடைக்குமோ//.

    நன்றி சார்

    சோ , ரவிச்சந்திரன்
    கைஹா
    கார்வார்
    கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *