Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > குரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்!

குரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்!

print
பூர்வ ஜென்மத்தில் அவரவர் செய்த கர்மாவின் படிதான் இந்த ஜென்மத்தில் ஜனன காலத்தில் ஜாதகத்தில் அந்தந்த கட்டங்களில் நவக்கிரகங்கள் அமர்கின்றன. அதையொட்டியே நம் வாழ்வு அமையும். இருப்பினும் வேண்டுதல், வழிபாடு, பரிகாரங்கள் இவற்றின் மூலம் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் தோஷங்களால் ஏற்படும் இன்னல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

மேலும் இந்த குரு பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதுவே  இறுதியானதல்ல. முடிவும் அல்ல.  ஒரு ஊருக்கு போகிறீர்கள். பாதை எப்படி இருக்கும் என்று தெரியாது. “இன்னின்ன இடத்தில் இன்னின்ன தடைகள் இருக்கும்…. சாலை இத்தனை மோசமாக இருக்கும்… அங்கு பார்த்து ஜாக்கிரதையாக செல்லுங்கள்!” என்று உங்களுக்கு  சொன்னால், அது உங்கள் பயணத்திற்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்! அது போலத் தான் இந்த குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்.

இவை அனைத்தும், நமது சுமூகமான வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிடவே கூறப்படுபவை. நம்மை பயமுறுத்த அல்ல.

DSC02736
சென்ற ஞாயிறு மாலை நம் ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் பிரார்த்தனைக்கு கபாலீஸ்வரர் கோவில் சென்றபோது எடுத்த படம்…!

மேலும் நவக்கிரகங்கள் என்பவை இறைவன் இட்ட ஏவலை, அவன் வகுத்த நெறிமுறைகளின்படி அவன் சார்பாக செய்பவை. எனவே, எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நவக்கிரகங்களை விட, நாம் வணங்கும் இறைவன் பெரியவன் என்பதை மறக்கக்கூடாது.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

நவக்கிரகங்களும் ஜாதக கட்டங்களுமே ஒருவரது வாழ்க்கையை தீர்மானிப்பவை என்றால் கோவில்கள் எதற்கு? அங்கு வழிபாடு எதற்கு ? தெய்வங்கள் எதற்கு? எனவே கிரகங்களின் பெயர்ச்சிகளால் பலன்கள் நன்றாக இல்லை என்று கருதுபவர்கள் மனம் கலங்காது தாங்கள் விரும்பும் தெய்வத்திடம் மாறாத பக்தியை செலுத்தி, கூடுமானவரை அனைவருக்கும் நல்லதையே செய்து வரவேண்டும். தான தருமங்களை அவரவர் சக்திக்கு ஏற்ப செய்யவேண்டும். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்கவேண்டும்.

நல்லதே நினையுங்கள். நல்லதே பேசுங்கள். நல்லதே செய்யுங்கள். நல்லதே நடக்கும். நடந்து தான் தீரும்!

திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 5-ம் தேதி வியாழக்கிழமை (19.6.2014) கிருஷ்ணபட்சத்து, சப்தமி திதி, கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் பஞ்ச பட்சியில் மயில் துயில்கொள்ளும் நேரத்தில் உத்ராயணப் புண்ணிய காலம் கிரீஷ்ம ருதுவில் பிரகஸ்பதி எனும் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகம் ராசிக்கு காலை மணி 9.01க்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு தினகரன் நாளிதழுக்காக திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா அவர்கள் கணித்த குரு பெயர்ச்சி பலன்கள் கீழே  ராசிகளுக்கும் தொகுத்து தரப்பட்டுள்ளது.

Guru Bhagavan

=================================================================

குரு பெயர்ச்சி பலன்கள்(13.06.2014 முதல் 04.07.2015 வரை)

கணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா

மேஷம்

மேஷம்: கடந்த ஆண்டில் குரு பகவானின் மூன்றாம் இடத்து சஞ்சாரம் தற்போது நான்காம் இடமாகிய சுகஸ்தானத்துக்கு வர உள்ளது. இதனால் வாழ்க்கையில் நிம்மதி  கூடும். நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். திடீர் பயணங்கள் இருக்கும். அதிக அலைச்சலுடன் சுபகாரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் ஒற்றுமை  அதிகரிக்கும். பொருளாதார நிலையால் சேமிப்பும் உயர்வடையும். வீடு, மனை, நிலம் போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது.  சிலருக்கு தங்கம், வெள்ளி, வைர நகைகள், ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.  திடீர் தொழில், ஆன்மிக பயணங்கள் இருக்கும். சுபசெலவுகள் இருக்கும். தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழிலில் ஓய்வின்றி உழைப்பதும்,  அதிகப்படியான அலைச்சலும் இருக்கும். 65 விழுக்காடு நற்பலனை காணும் வகையில் குருபகவான் அருள் செய்வார்.

மாணவர்கள்:
உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிசியோதெரபி,  பயோ டெக்னாலஜி துறை மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

பெண்கள்: குடும்பத்தின் மகிழ்ச்சியை தக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் அவசியம். கணவருக்கு  அவ்வப்போது ஆலோசனை சொல்வீர்கள். முக்கியமான முடிவுகளை செவ்வாய் கிழமையில் எடுப்பது நல்லது. ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால்  கவனமாக இருக்கவும்.

ஆரோக்யம்: நீண்டநாள் தொந்தரவுகள் முடிவுக்கு வரும். அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவது உடல்நலத்தை பாதிக்கும். உடல்நலத்துக்காக சித்த, ஆயுர்வேத  மருந்துகளை நாடலாம்.

தொழில், உத்யோகம்: அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள்  நன்மை காண்பார்கள். கட்டிட கலை, சமையல் கலை சார்ந்தோருக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உணவுப்பண்ட வியாபாரம் செழிக்கும்.

பரிகாரம்: பிரதி மாதம் கிருத்திகையில் விரதம் இருந்து ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வருவது நல்லது. நேரம்  கிடைக்கும் போது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி முத்துக்குமார சுவாமியை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்வதால்  கூடுதல் நன்மை உண்டாகும்.

=================================================================

ரிஷபம்

ரிஷபம்: தற்போதைய குருப்பெயர்ச்சியால் சில சங்கடங்கள் இருக்கும். குரு பகவான் தன ஸ்தானத்திலிருந்து 3ம் இடத்திற்கு பெயர்வதால் பொருளாதார நிலை  சுமாராக இருக்கும். மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சல் இருக்கும். எதிலும் தடங்கலுக்கு பின் வெற்றி  கிடைக்கும். முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். எதிலும் ஒருவித பயம் இருக்கும். உடன்பிறந்தோர் உதவுவார்கள்.  புதிய நண்பர்கள் சேருவார்கள்.

இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி கிடைக்கும். சுயமுயற்சியால் வலிமை கூடும். வாழ்க்கைத் துணையோடு இணைந்து செய்யும்  செயல்களில் நல்ல வெற்றி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைவதற்கான சூழ்நிலை கூடி வரும். இக்கட்டான சூழலில்  அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. பணிச்சுமையால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதையும் எழுதி வைத்து செயல்படுவது நல்லது. இந்த  குருப்பெயர்ச்சி உங்களுக்கு 50 சதவீத நற்பலன்களை தரும்.

மாணவர்கள்: கல்வி நிலை சிறப்பாக அமையும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பார்கள்.  ஏரோநாட்டிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அறிவியல் துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களை காண்பார்கள். ஆசிரியரின் உதவியோடு சாதிப்பார்கள்.

பெண்கள்: அவ்வப்போது மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். அக்கம்பக்கத்தாரிடம் உள்ள சுமுகஉறவு  உதவியாய் அமையும். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

ஆரோக்யம்: உடல் ஆரோக்கியத்தில் உண்டாகும் சிறு பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது.

தொழில், உத்யோகம்:
கூட்டுத்தொழில் லாபகரமாக இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று  நிதானித்து செயல்படவேண்டும். இயந்திரங்கள் சார்ந்த தொழிலில் சிறப்பான தனலாபம் உண்டு. உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டு  செல்வதோ, அடுத்தவர்களின் வேலையை கூடுதலாக சுமப்பதோ கூடாது.

பரிகாரம்: தினமும் தியானம், யோகா பயிற்சிகளை செய்து வருவது மனதுக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில்  அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்க மன நிம்மதி  கூடும்.

=================================================================

மிதுனம்

மிதுனம்: தற்போது தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள குரு பகவானின் செயல்பாட்டால் தடையில்லாத தனவரவு இருக்கும். பொருளாதார நிலை உயரும். உழைப்புக்கு  ஏற்ற ஊதியம் கிடைக்கும். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை  நிறைவேற்ற அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் நன்மை தீமையை ஆராய்ந்து யோசித்து  செயல்படுவதால் நிச்சயம் வெற்றி உண்டாகும். பேச்சாற்றல் கூடும்.

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை, மன நிலையில் அக்கறை அவசியம். தம்பதியருக்குள் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களோடு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முன்பின் தெரியாத புதிய  நபர்களுடன் மிகுந்த கவனத்துடன் பழக வேண்டியது அவசியம். வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை. இந்த குருப்பெயர்ச்சியால் கடன் பிரச்னை  தீரும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவீர்கள். 80 சதவீத நற்பலன்களை தரும் வகையில் இந்த குருப்பெயர்ச்சி அமைந்துள்ளது.

மாணவர்கள்: அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாற்று துறை மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறை சார்ந்தவர்களும் சாதனைகள்  புரிவார்கள். குருவின் அருளால் பொதுஅறிவு வளரும். கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

பெண்கள்: உங்களின் விவேகமான அணுகுமுறை குடும்ப பிரச்னைகளுக்கு எளிய தீர்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவரோடு  அவ்வப்போது வீண் விவாதம் தோன்றலாம்.

ஆரோக்யம்: ஒற்றைத் தலைவலி, நரம்புத்தளர்ச்சி, கைகால் குடைச்சல், இடுப்பு வலி பிரச்னைகளால் உடல்நலம் பாதிக்கப்படலாம். இயற்கை மருத்துவமுறை  நன்மை தரும்.

தொழில், உத்யோகம்: உங்கள் பேச்சு திறமையால் காரியங்களை சாதிப்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் அலைச்சலை சந்திக்க நேரும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங்,  வங்கி, இன்சூரன்ஸ். சாப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகை துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். வெளிநாட்டு பணிக்காக காத்திருப்போருக்கு  அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். சுயதொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப் ஏதுமின்றி தனித்து செயல்பவடுவது நல்லது.

பரிகாரம்:
புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்குவது நல்லது. இயலாதவர்கள் இருந்த இடத்திலிருந்தே பெருமாளை  தியானிப்பதும், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்வதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமாளை வணங்க நன்மை  உண்டாகும்.

=================================================================

கடகம்

கடகம்: கடந்த ஆண்டு அதிக அலைச்சலை தந்த குருபகவான் இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு வர உள்ளார். இதனால் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது  நடக்கும். ஆறாம் இடத்திற்கும் அதிபதி குரு பகவானே என்பதால், அவர் ஜென்ம ராசியில் இடம் பெறும் நேரத்தில் மனசஞ்சலம் அதிகரிக்கும். கோயில்களுக்கு  செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல், சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிக பெரியோர்களுடனான சந்திப்பால் மனசஞ்சலம் நீங்கும்.  எதிலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள்.

ஜென்ம ராசியில் குரு அமர்வதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்களுக்கு புத்ரபாக்யம் ஏற்படும். பிள்ளைகள்  வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்ப சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை விட்டு பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன்  இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காக காத்திருப்போருக்கு நல்ல வரன் அமையும்.

பிரச்னைக்குரியவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. திடீர் தொலைதூர பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு  நேரம் சாதகமாக இருக்கும். முன்னோர்களின் சொத்துகளால் அனுகூலம் உண்டு. கடன் பிரச்னைகள் தீரும். வழக்குகள் முடிவுக்கு வரும். பொறுப்புகள் கூடும்.  இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு 70 சதவீத நற்பலன்களை தரும்.

மாணவர்கள்: மாணவர்களுக்கு ஞாபக மறதி பிரச்னை தீரும். பாடங்களை வேகமாக படித்து முடித்து விடுவீர்கள். ஆசிரியர்களின் துணையோடு மாணவர்கள்  கல்வியில் முதன்மை பெறுவர்.

பெண்கள்: பிறந்த, புகுந்த வீட்டுக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். கணவர் உறுதுணையாக  இருப்பார். நீங்கள் தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையை சொல்வீர்கள். வீட்டில் சுபநிகழ்வுகள் இருக்கும். குடும்ப விசேஷங்களில் தனித்து  செயல்படுவீர்கள்.

ஆரோக்யம்:  காது, கழுத்து, தோள்பட்டை, மார்பு பகுதிகளில் சிறு பிரச்னைகள் தோன்றலாம். ஒரு சிலருக்கு தோலில் பிரச்னைகள் தோன்றலாம்.

தொழில், உத்யோகம்: அலுவலகத்தில் உடன் பணி புரிவோர், ஒத்துழைப்பு அளிப்பார்கள். குளிர்பானங்கள், உணவு பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன்,  வெள்ளி போன்ற ஆபரண தொழில்செய்பவர்கள், ஜவுளி, சென்ட், பேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஏஜென்டுகளுக்கு சிறப்பான  தனலாபம் இருக்கும்.

பரிகாரம்: பவுர்ணமி தோறும் சத்யநாராயண விரதம் மேற்கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒப்பிலியப்பன்  கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

=================================================================

சிம்மம்

சிம்மம்: 11ம் இடத்து குரு தற்போது 12ம் இடத்திற்கு வந்து அமர்கிறார். இதனால் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குழப்பத்தால் தெளிவான  முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. எடுத்த பணியை வெற்றிகரமாக முடிக்க கூடுதல் அலைச்சலை சந்திக்க நேரும்.  ஆனால் அநாவசிய செலவுகள் குறையும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் எனும் பழமொழி குருபகவானுக்கு பொருந்தாது. முக்கியமான பணிகளின்  போது அடுத்தவர்களை நம்பி காத்திருக்க வேண்டி வரும்.

குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். வாகன சேர்க்கை உண்டு. தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் இருக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடு  தோன்றக்கூடும். உடன்பிறந்தோருக்காக சில தியாகங்கள் செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. யாரையும் நம்பி  ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கூடாது.

கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். ஆன்மிகத்துக்காக அதிகம் செலவழிப்பீர்கள்.  மனதில் குழப்பமான சூழல் நிலவும். கனவு தொல்லையால் உறக்கம் பாதிக்கும். பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற நிலையை தந்தாலும்  நீங்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்கள் என்பதால் கவலை இல்லை. உங்களுக்கு 55 சதவீத நற்பலன்களை இந்த குருப்பெயர்ச்சி அருள்கிறது.

மாணவர்கள்: உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். குரு பகவானின் அமர்வு நிலை உங்கள் எழுத்து வேகத்தை உயர்த்தும்.  நிறைய மாதிரி தேர்வுகளை எழுதிபார்ப்பது நல்லது. இன்ஜினியரிங், மொழிப்பாடம், கலைத்துறை, வேளாண்மை, சைகாலஜி துறை மாணவர்கள் நல்ல  முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள்: குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையை பெரிதாக்கும். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகலாம்.  குடும்பப் பிரச்னைகளை அண்டை அயலாரோடு விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்யம்:
வேலை பளுவால் சுகவீனம் தோன்றும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரண கோளாறு பிரச்னைகளால் அவதிப்பட நேரும். ஒரு சிலருக்கு  சிறுநீரக கோளாறுகள், பித்தப்பை கல் பிரச்னைகள் தோன்றலாம்.

தொழில், உத்யோகம்:
வங்கி, இன்சூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் சிரமம்  காண்பார்கள். பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லரை வணிகம் சிறக்கும்.

பரிகாரம்: பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து சந்திர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி போஜனம் செய்யவும். விநாயகர் அகவல்  படித்து வருவது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசனம் செய்ய வளம் பெறுவீர்கள்.

=================================================================

கன்னி

கன்னி: 11ம் இடத்துக்கு குரு பகவான் வரவிருப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான அம்சம். எடுத்த காரியங்களில் வெற்றியை பதிவு செய்வீர்கள்.  நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். ஏழரை சனியால் இருந்த சிரமங்கள் குறையும். மிகவும் விசேஷமான  பல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும் வகையில் தனலாபம் இருக்கும். உண்மையான உழைப்புக்கான பலன் கிட்டும். நினைத்த காரியம் ஜெயமாகும்.  தனலாபத்தோடு ஸ்தான பலமும் உண்டாகும்.

புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும்,  மரியாதையையும் உயர்த்தும். உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்து பிரச்னைகள் சுமுகமாக முடியும்.  குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.

நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்கு திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான  திசை புக்தியை கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். இந்த  குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு 90 சதவீதம் நற்பலன்களை தருகிறது.

மாணவர்கள்: கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஞாபக மறதி தொந்தரவு அகலும். பள்ளி, கல்லூரிகளில் போட்டிகளில் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ்,  எகனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு துறை மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.

பெண்கள்: குடும்ப பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் சேரும். வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதில்  அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களில் உங்களது நிர்வாக திறன் வெளிப்படும். வாழ்க்கைத்துணைவருக்கு தக்க ஆலோசனை  வழங்குவீர்கள். பெரிய பொறுப்புகளை செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.

ஆரோக்யம்: ஒரு சில சிறிய உடல் உபாதைகள் ஏற்படும். தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.  எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது.

தொழில், உத்யோகம்: உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மருத்துவம், சட்டம்  ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள சரியான நேரம் இது.  பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரம்: குருப்பெயர்ச்சி நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் உங்களால் இயன்ற அன்னதானம் செய்யவும். வியாழன் தோறும் சாயிபாபாவை வணங்கி  வாருங்கள். நேரம் கிடைக்கும் போது ஷீரடி சென்று சாயிநாத சுவாமியை தரிசனம் செய்ய சர்வ மங்களமும் உண்டாகும்.

=================================================================

துலாம்

துலாம்: இந்த குருப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு சில சங்கடங்களை தந்தாலும் நற்பெயரையும், நற்பலனையும் தரும். பத்தாம் இடத்து குரு பதவியை  பறிப்பார் என்ற பழமொழி உங்களுக்கு பொருந்தாது. தொழிலில் அதிக அலைச்சலை தருவாரே தவிர பதவியை பறிக்கமாட்டார். சிந்தனைகளால் வாழ்க்கை தரம்  உயர துவங்கும். பொருளாதார நிலை வலுப்பெறும். இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்புகள் உயரும்.  குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி மகிழ்ச்சி குடிபுகும்.

பொறுப்புகள் கூடும். உங்கள் பேச்சுதிறமை நற்பெயரை வாங்கி கொடுக்கும். உடன்பிறந்தோரால் இழப்புகள் ஏற்படும். முக்கிய பணிகளில் இடைத்தரகர்களையும்  அடுத்தவர்களையும் நம்ப வேண்டாம். மாற்று மதத்தினருடன் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு  சாதனங்களால் அவசர நேரத்தில் சங்கடங்கள் தோன்றலாம்.

எதிலும் நிதானம் தேவை. சுகஸ்தானமாகிய நான்காம் வீட்டின் மீது குருபகவானின் நேரடிப்பார்வை விழுவதால் வீடு, வாகனம், மனை வாங்குவீர்கள். வீட்டில்  மாற்றங்கள் செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். தாயார் வழி உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். பொதுவாக இந்த  குருப்பெயர்ச்சியால் உங்கள் உழைக்கும் திறன் உயர்வடையும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 60 சதவீத நற்பலன்களை குரு பகவான் அளிக்கிறார்.

மாணவர்கள்: கல்வியில் முன்னேற்றம் காண்பர். ஏழரை சனியின் தாக்கம் குறையும். செய்முறை தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்கும். எழுத்து  தேர்வுகளில் கூடுதல் கவனம் தேவை. மரைன் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்ஸ் துறை மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள்: குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நேரத்திற்கு சாப்பிடுவது மிக அவசியம். முன்பின் தெரியாத பெண்களின் நட்பு எதிர்பாராத பிரச்னையை தரும்.  பொருளிழப்பு உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. கணவரின் மனநிலையை புரிந்துகொள்வது அவசியம். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.

ஆரோக்யம்: கடுமையான பணிச்சுமையால் முதுகுவலி, தோள்வலி பிரச்னைகளுக்கு ஆளாக நேரும். தோல் சம்பந்தமான நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள்  விரைவில் நிவாரணம் காண்பார்கள். தேக ஆரோக்யம் சீராக இருக்க உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

தொழில், உத்யோகம்: உத்யோகஸ்தர்கள் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிக பெரிய லாபம் இல்லாவிட்டாலும்  உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. வாழ்க்கை தரம் சிறப்பான முன்னேற்றம் அடையும். உணவு பொருட்கள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள்  ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை தொழில்களில் நல்ல லாபம் வரும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் காலையில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஸ்ரீராமநாம ஜபம் செய்ய மனத்தெளிவு கிடைக்கும். நேரம்  கிடைக்கும்போது நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும். ஸ்ரீராமஜெயம் எழுதி வருவது நல்லது.

=================================================================

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த சில மாதங்களாக ஏழரை சனியால் அவதிப்பட்டு வரும் விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த குருபெயர்ச்சியால் நிம்மதி கிடைக்கும். 8ம்  இடமாகிய விரய ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் இடமாகிய பாக்ய ஸ்தானத்திற்கு இடம்  பெயர உள்ளார். தர்ம, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை ஒதுக்கிவிட்டு சரியான பாதையில் பயணிப்பீர்கள். பாக்ய ஸ்தான குருவால் மனதில் தர்ம  சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு எல்லா பிரச்னைகளையும் எதிர்கொள்வீர்கள்.

முழு ஈடுபாட்டோடு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி உறுதியாகும். சஞ்சலங்கள் நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் விலகும். கடன் சுமை குறையும்.  ஏழரை சனியின் தாக்கம் குறைந்து நற்பலன்கள் ஏற்படும். அநாவசியமான பயம் நீங்கும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். சகோதர,  சகோதரிகளுக்கு உதவிகள் செய்வீர்கள்.

அளவாக பேசி நற்பெயர் காண்பீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நெடுநாளைய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்  நடைபெறும். குடியிருக்கும் வீட்டில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். சொந்த வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புது வாகன சேர்க்கை உண்டு.  பொதுவாக இவ்வருடத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். தடைகள் விலகி கவுரவம் உயரும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு 70 சதவீத  நற்பலன்களை தரும்.

மாணவர்கள்: கவன சிதறல் உண்டாகலாம். அதற்காக கவலைபட தேவையில்லை. மனதை ஒருமுகப்படுத்தி படித்தால் சிறப்பான மதிப்பெண்களை பெறுவீர்கள்.  தேர்வு நேரத்தில் உங்கள் திறமை கூடும். மொழிப்பாடங்கள், கணிதம் துணையோடு மதிப்பெண் எண்ணிக்கை உயரும்.

பெண்கள்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபநிகழ்வுகள் இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.  கணவரோடு வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்யம்: தலைவலி, நரம்பு தளர்ச்சி, முதுகுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி தொந்தரவுகளால் அவ்வப்போது அவதிப்பட நேரிடலாம். தொற்று நோய்  தாக்கும் வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் தொய்வு ஏற்படும் காலத்தில் சாதாரண காய்ச்சல்தானே என்று அலட்சிய படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது.

தொழில், உத்யோகம்: தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஓய்வு என்பதை நினைத்து கூட பார்க்க  இயலாது. ஒரு சிலருக்கு தொழில் மாற்றத்துக்கான  வாய்ப்பு இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு தற்காலிக பணி இடமாற்றம், பதவி உயர்வு இருக்கும். ஜவுளி, பாத்திரம், பலசரக்கு, நாட்டுமருந்து வியாபாரம்,  அழகுநிலையம், இரும்பு பட்டறை, சாயப்பட்டறை தொழில் செய்வோர் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: வியாழன் தோறும் நவகிரக குரு பகவான் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருச்செந்தூர் சென்று செந்தில்  ஆண்டவரை வணங்கி அர்ச்சனை செய்துகொள்ள மனத்தெளிவு காண்பீர்கள்.

=================================================================

தனுசு

தனுசு: 8ம் இடத்துக்கு இடம் பெயர உள்ள குருவால் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். டிசம்பர் மாதம் முதல் ஏழரை சனியின் காலம்  துவங்குவதால் சோதனைகள் இருக்கும். ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடைபெற்று வந்தால் பிரச்னை ஏதும் இல்லை. குருபார்வை விலகுவதால் மனதில் லேசான  சோம்பேறித்தனம் குடிகொள்வதோடு சற்று அசட்டையாகவும் செயல்படுவீர்கள். இறங்கிய செயல்களில் முழுமையான வெற்றி கிடைப்பதில் சங்கடங்கள்  இருக்கும். சோம்பலை விட்டொழித்து கடுமையாக உழைத்தால் காரிய வெற்றி கிடைக்கும்.

மனதுக்கு பிடிக்காத சம்பவங்கள் நடைபெறும். மனோதைரியம் குறையும். தேவையற்ற கற்பனைகளால் அநாவசிய பயம் தோன்றும். மருத்துவ செலவுகள்  ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதை  தவிர்ப்பது அவசியம். பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பெரும் போராட்டத்தை தரலாம். அதில் இருந்து விடுபட தேவையற்ற விஷயங்களில்  தலையிடுவதை தவிர்க்கவும். இந்த வருடத்தின் அனுபவ பாடங்கள் பிற்காலத்தில் உங்கள் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும். 40 சதவீத நற்பலன்களை தரும்  வகையில் இந்த குருப்பெயர்ச்சி அமைந்துள்ளது.

மாணவர்கள்: மறதிக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. இதில் இருந்து விடுபட ஒருமுறைக்கு இருமுறை எழுத்து பயிற்சி அவசியம். கல்வியை குறிக்கும் வித்யா  ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவது நன்மை தரும். ஆசிரியர்களின் உதவி கிட்டும்.

பெண்கள்: பணம் சார்ந்த முக்கியமான விவகாரங்களில் தனித்து செயல்படுவது நல்லதல்ல. கணவர் அல்லது நெருங்கிய தோழியருடன் இணைந்து பண  விவகாரங்களை கையாளுங்கள். அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். இடம், பொருள் அறிந்து பேசுவது உத்தமம்.  பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை.

ஆரோக்யம்: அவ்வப்போது உடல்நிலையில் சிறு சிறு பிரச்னைகள் இருக்கும். ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதித்து வருவது அவசியம்.  தீக்காயம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் சமையல் செய்யும்போதும், கெமிக்கல் பொருட்களை கையாளும் போதும் அதிக கவனம் தேவை. ஒரு சிலர்  மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

தொழில், உத்யோகம்: அரசுப்பணியாளர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு இருக்கும். ரெவின்யூ, கருவூலம், பத்திரப்பதிவு, நீதிமன்றம், பள்ளிக்கல்வி  துறை பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சுயதொழில் செய்வோருக்கு சாதகமான நேரம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வோர் மிகுந்த  எச்சரிக்ககையுடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து மாலையில் வடக்குமுகமாக நெய்விளக்கேற்றி வழிபடவும். ஏழ்மை நிலையில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்  ஒருவருக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது கடலூருக்கு அருகில் உள்ள திருவந்திபுரம் திருத்தலத்துக்கு சென்று  ஹயக்ரீவரை தரிசியுங்கள்.

=================================================================

மகரம்

மகரம்: உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மனமகிழ்ச்சியை தரும். ஆறாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவானால் உங்கள் ஆசைகளும்,  விருப்பங்களும் விரைவில் நிறைவேறும். பல்வேறு புதிய விஷயங்களை அறிந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சிறப்பான வளர்ச்சி மற்றும் வெற்றி காண்பீர்கள். குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். பொருளாதார  நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புத்திசாலித்தனமான பேச்சால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். புதிய  வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரம் அமையும். மனதைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். எடுத்த  செயல்களில் வெற்றி கிடைக்க இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நீங்களே களத்தில் இறங்குவது நல்லது.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பாக்கி வசூலாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். நிலுவையில் உள்ள சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள்  சாதகமான முடிவுக்கு வரும். பொதுவாக இன்னும் ஒரு வருட காலம் சிறப்பான நற்பலன்களை காண உள்ளீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். 85  சதவீத நற்பலன்களை குருபகவான் அருள்கிறார்.

மாணவர்கள்: குரு பார்வையால் புத்துணர்வை பெற்றுள்ளீர்கள். நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பது நல்லது. தேர்வு நேரத்திலும்  குருபகவானின் பார்வை தொடர்வதால் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வேதியியல், உயிரியல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள்  முன்னேற்றத்தை காண்பார்கள்.

பெண்கள்: குடும்பத்தினர் தன்னை சரிவர மதிப்பதில்லை என்று அடிக்கடி அங்கலாய்த்து கொள்வீர்கள். கற்பனையான எண்ணங்கள் உங்கள் மதிப்பை குறைக்கும். விரும்பிய பொருட்களை வாங்க கூடுதலாக செலவழிக்க நேரிடும். ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கணவரின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு துணை நிற்கும். குடும்ப விவகாரங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.

ஆரோக்யம்: மருத்துவ செலவுகள் குறையும். சர்க்கரை வியாதிக்காரர்கள், இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  அதிகப்படியான அலைச்சலால் உடல் அசதி உண்டாகும். உடல்நல குறைவு இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. காது, மூக்கு, தொண்டை பகுதி பிரச்னைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிப்பது நல்லது.

தொழில்,  உத்யோகம்:
தொழிலில் எதிரிகள் காணாமல் போவார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். அலுவலகத்தில்  கடுமையான பணிச்சுமை இருக்கும். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜென்சிஸ் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. மருத்துவம்,  ராணுவம், போக்குவரத்து துறைகளிலும் ஏற்றம் இருக்கும். ஓட்டல், நகைக்கடை அதிபர்களுக்கு தனலாபம் இருக்கும்.

பரிகாரம்: பிரதி மாதம் திருவோண நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று மூலவர் சன்னதியில் நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து  கொள்வது நல்லது. திருமலை திருப்பதி சென்று ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் தரிசிக்க நன்மை உண்டாகும்.

=================================================================

கும்பம்

கும்பம்: இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குரு பகவான் வரும் 13.06.2014 முதல் ஆறாம் இடத்துக்கு வர உள்ளார். சகட யோகம் என்று  சொல்லக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது  இழுபறியை தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். இந்த குருப்பெயர்ச்சி சில  சங்கடங்களை தரக்கூடும்.

ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்பு பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் தனவரவு தொடரும். கடன் பிரச்னைகளால் சற்று  அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இனிமையாக பேசுவீர்கள். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானம் தருவதோடு, ஆன்மிக பணிகளிலும்  ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.  உறவினர்களோடு விரோதத்தை தவிர்க்க சற்று விலகியிருப்பதும், அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை அவசியம். வீட்டில் ஆல்ட்ரேஷன் பணிகள் செய்வதை தவிர்க்கவும். ஒரு  வருடத்திற்கு எந்த ஒரு பணியிலும் மிகுந்த நிதானத்தோடும் கவனத்தோடும் ஈடுபட வேண்டும். வீண் கற்பனைகளால் இனம்புரியாத பயம் மனதில் குடி கொள்ளும். தெய்வ நம்பிக்கையின் மூலம் மனத்தெளிவு காண முற்படுங்கள். குருப்பெயர்ச்சியினால் 50 சதவீத நற்பலன்களை அடைவீர்கள்.

மாணவர்கள்:
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். கேள்விக்குரிய சரியான பதிலை தேர்ந்தெடுப் பதில் குழப்பம்  உண்டாகும். இதனை தவிர்க்க தேர்வுக்கு முன்னால் நிறைய மாதிரி தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. ஞாபக மறதி தொந்தரவால் சற்று சிரமப்படுவீர்கள்.  இன்ஜினியரிங் சார்ந்த அனைத்து துறை மாணவர்களும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள்: பேச்சால் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அநாவசியமான பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்ப பெரியவர்களோடு அனுசரணையான  அணுகுமுறையும் உடல் நலனின் அக்கறையும் தேவை.

ஆரோக்யம்: வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை. அளவுக்கதிகமான டென்ஷனாலும், ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவதாலும் உடல்நிலையில் அசதி  ஏற்படும். நீண்ட நாள் வியாதிகள் குணமாகும். அதே நேரத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

தொழில், உத்யோகம்: அலுவலகத்தில் அதிகப்படியான கவனத்துடன் செயல்பட்டு உத்யோகத்தை காத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. காவல்துறை, ராணுவம்,  தொழிற்சாலை பணியாளர்கள், போக்குவரத்துதுறை, மருத்துவம், நீதித்துறை பணியாளர்கள் பணியில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வியாபாரிகள்  புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி நாளில் விரதம் இருந்து மாலையில் பைரவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. சேலம் அருகே ஊற்றுமலையில்  சதுர்ஷஷ்டி பைரவர்களுடன் இணைந்த ஸ்ரீசக்ர பைரவரை தரிசனம் செய்ய சங்கடங்கள் குறைந்து நன்மை ஏற்படும்.

=================================================================

மீனம்

மீனம்: குரு பகவான் நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு இடம் பெயர உள்ளார். மனதில் நற்சிந்தனையை தோற்றுவித்து எடுக்கும் செயல்களில்  உடனுக்குடன் வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். பரோபகார சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். நல்ல நண்பர்கள் சேர்க்கை இருக்கும்.  கஷ்டங்கள் குறையும். மனதில் சந்தோஷம் குடிபுகும். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்வுகளை  சந்திப்பீர்கள். சாதுக்கள், சன்யாசிகள், சான்றோர்களுடனான சந்திப்பால் மன சாந்தியும், நிம்மதியும் உண்டாகும்.

தன்னம்பிக்கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உதவியாக அமையும். மனதுக்கு பிடித்தமானதை  அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். உடன் பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இதுநாள் வரை விலகியிருந்த சொந்தம் ஒன்று உங்களை நாடி வரலாம். பூர்வீக சொத்து பிரச்னைகள் அகலும். திருமணத்தடை அகன்று மணவாழ்க்கையில்  அடியெடுத்து வைப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற துவங்கும். பிள்ளைப்பேறுக்காக காத்திருப்போருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பொதுவாக 80  சதவீத நற்பலன்களை குரு பகவான் உங்களுக்கு அள்ளி தருகிறார்.

மாணவர்கள்: கல்விநிலையில் முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாற்று துறை மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறையினரும் சாதனைகள் புரிவார்கள். அலட்சியத்தால் மதிப்பெண்களை கோட்டை விடும் வாய்ப்பு உண்டு. மொழி பாடங்களில் சிறப்பு கவனம்  தேவை.

பெண்கள்: குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதை தவிர்க்கவும். எதையும் கணவர் மற்றும் குடும்ப பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது  நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும்.

ஆரோக்யம்: சரும நோய்கள் தோன்றலாம். சிலர் கணுக்கால் வலியால் அவதிப்படுவர். உணவு கட்டுப்பாட்டால் பித்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.  இரும்புச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அன்றாட சமையலில் சேர்த்து கொள்வது நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில்  கவனம் தேவை.

தொழில், உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு. அயல்நாடு சம்பந்தப்பட்ட  தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமென்ட், ஸ்டேஷனரி, மளிகை தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள்,  மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிட கலைஞர்களுக்கு சிறப்பான லாபம் இருக்கும். தொழிலில் முழுமுயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும்.

பரிகாரம்: பிரதி வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வரவும். துர்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து  வழிபடுவது நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை ஆலயத்துக்கு சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து  வழிபட உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் விலகுவார்கள்.

=================================================================

நன்றி : DINAKARAN.COM

 

 

One thought on “குரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்!

  1. குரு பெயர்ச்சி பலன்களையும் பரிகாரங்களையும் பற்றி அறிந்து கொண்டோம். நம் ராசிக்கு மோசமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. தெய்வ நம்பிக்கை மூலம் தடைகளை தகர்த்தெறிவோம். ஏழைகளுக்கு நம்மாலான உதவி செய்வோம். நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்.

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *