நண்பர் குட்டி சந்திரனுக்கு ஃபோன் செய்து “மாலை பாரிமுனைக்கு செல்லவேண்டும், தயாராக இருக்கவும்” என்று சொல்லிவிட்டோம். அவர் இருப்பது சிந்தாதிரிப்பேட்டை என்பதால் மாலை டூட்டி முடிந்தவுடன் நம்முடன் வருவதற்கு ஈசியாக இருக்கும்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசியபோது, அவர்கள் சப்ளை செய்த தீபம் ஏற்றும் ஸ்டீல் ஸ்டாண்டுகள் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளதாகவும் அங்கு சென்றால் மாடல் பார்க்கலாம் என்றும் கூறினார்கள். வெவ்வேறு சைஸ்களில் மேற்படி தீப மேடை செய்து கபாலீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் நமக்கு தேவையான மாடலை சைஸை பார்த்துவிட்டு கூறினால் அதன்படியே செய்து தருவதாகவும் கூறினார்கள். மேலும் மயிலையிலேயே அவர்களின் கிளை இருப்பதாகவும் அங்கு கூட ஆர்டருக்கு அட்வான்ஸ் செய்யலாம் என்றும் கூறினார்கள்.
நமக்கும் ஆர்டர் செய்வதற்கு முன்னர் மாடல் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மேலும் மாடல் பிடித்திருந்தால் பாரிமுனை செல்லவேண்டியதில்லை. மயிலையிலேயே அட்வான்ஸ் செய்துவிடலாம் என்று கருதி பாரிமுனை பயணத்தை கான்சல் செய்துவிட்டு நண்பர் குட்டி சந்திரனுடன் மயிலை விரைந்தோம்.
கோவிலுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த நான்கைந்து மாதிரிகளை பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்து, மயிலையில் உள்ள அவர்கள் கிளையிலேயே ஆர்டர் செய்து அட்வான்ஸும் செலுத்திவிட்டோம். நண்பர் சந்திரமௌலியும் அப்போது உடனிருந்தார். (மறைந்த தன் தாயாரின் நினைவாக தீப மேடைக்கான மொத்த செலவையும் மௌலி ஏற்றுக்கொண்டுவிட்டார்!)
(படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு அடுக்கு. நாம் ஆர்டர் செய்திருப்பது இரண்டடுக்கு. மொத்த தீப மேடையும் சுமார் ஐந்தடி உயரம் வரும். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட் 400-500 விளக்குகள் ஏற்றலாம்.)
இதற்கிடையே நண்பர் மௌலி கிளம்பி சென்றுவிட, நானும் குட்டி சந்திரனும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனை கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சன்னதியிலேயே தரிசித்துவிடுவது என்று தீர்மானித்தோம்.
முருகனை இன்று தரிசிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவன் பெயரைச் சொல்லி ஒருவர் பசியையாவது ஆற்றவேண்டும் என்பதே நம் தீர்மானமாக இருந்தது. எனவே முதலில் அன்னதானம் அப்புறம் தான் சுவாமி தரிசனம்.
அன்னதானம் செய்ய விரும்பி, பயனாளிகளை தேடியபோது நம் கண்களில் பட்டவர் கோவில் வாசலில் யாசித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர். சுமார் 55-60 வயதிருக்கும். தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது அருகில் சென்று பார்த்தபோது, அவரது ஒரு கண் முற்றிலும் பாதிக்கப்பட்டு பார்வையின்றி இருந்ததை பார்த்தோம்.
(அன்னதானம் செய்ததை சொல்லாமல் இந்த பதிவையும் நாம் சொல்ல வரும் கருத்தையும் சொல்ல முடியாது. எனவே வாசகர்கள் தவறாக நினைக்கவேண்டாம்!)
“ஐயா ஏதாவது வாங்கிக் கொடுத்தா சாப்பிடுவீங்களா?”
நம்மை பார்த்து இருகரம் கூப்பியும் வணக்கம் தெரிவித்தவர், “சந்தோஷமா ஐயா…” என்றார்.
“என்ன வேணும் சொல்லுங்க…:”
“தோசை வாங்கிக் கொடுத்தீங்கன்னா போதும்.”
“பக்கத்துல இங்கே எந்த ஓட்டல்ல நல்லாயிருக்கும்னு சொல்லுங்க. அங்கேயே போய் வாங்கிட்டு வர்றோம்.”
“அப்படி போய் திரும்புனீங்கன்னா…மாமி மெஸ் இருக்கும். அங்கே வாங்கிட்டு வாங்கய்யா போதும்!”
“ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க வாங்கிட்டு வர்றோம்!” என்று சொல்லி, மாமி மெஸ் நோக்கி விரைந்தோம்.
போகும் வழியில், சாலையின் ஓரத்தில் ஒரு அம்மா, உட்கார்ந்திருந்தார்கள். தயங்கி தயங்கி அவர்கள் யாசித்துக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. வயது எப்படியும் 70-75 இருக்கும்.
பார்த்தால் பிச்சைக்காரர் போல தெரியவில்லை. பிள்ளைகளால் வீட்டை விட்டு விரட்டப்பட்டவர் என்று பார்த்தவுடனேயே புரிந்தது.
“அம்மா… ஏதாவது வாங்கி கொடுத்தா சாப்பிடுவீங்களா?”
நம்மை சற்று ஏற இறங்க பார்த்தவர்… யோசித்தார்.
“சொல்லுங்கம்மா.. டிபன் ஏதாவது வாங்கிக் கொடுத்தா சாப்பிடுறீங்களா?”
தயங்கி தயங்கி… “ஆமா ராசா… பசிக்குது. இட்லியோ தோசையோ ஏதோ வாங்கிக்கொடு போதும்!” என்றார்.
“ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க… இதோ வந்துடுறோம்” என்று கூறி மாமி மெஸ் நோக்கி விரைந்தோம்.
மாமி மெஸ். மயிலையின் அடையாளங்களில் ஒன்று. அற்புதமான் டிபன் மற்றும் பில்டர் காபிக்கு மாமி மெஸ்ஸை விட்டால் வேறு இடம் இல்லை. விலையும் மலிவு தான்.
இருவருக்கும் தோசை பார்சல் ஆர்டர் செய்துவிட்டு, காத்திருந்தோம்.
காத்திருந்த நொடிகளில் மேலே பார்த்தால்… அட நம்ம மகா பெரியவாவின் அற்புதமான புகைப்படம் நம்மை சுண்டியிழுத்தது. நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதேனும் ஒருவகையில் மகா பெரியவா இருப்பது வழக்கம்.
பார்சல் வாங்கி வந்து இருவரிடமும் கொடுத்தோம். (இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தார்கள்!)
இதை ஏன் அன்றைக்கு அவர்களுக்கு வாங்கித் தருகிறோம் என்று அவர்களுக்கு தெரியவேண்டும் அல்லவா? எனவே அவர்களிடம் “இன்னைக்கு வைகாசி விசாகம். முருகப் பெருமானுக்கு உகந்த நாள்!” என்றோம்.
நெகிழ்ச்சியில் கண்களில் நீர் முட்ட “நீங்கள் நல்லாயிருக்கனும்!” என்று வாழ்த்தினார்கள் இருவரும்.
தொழுநோயால் பீடிக்கப்பட்டு ஒரு கண்ணை இழந்து வாடும் அவரது பெயரை கேட்டோம்.
“வி.பலராமன்!” என்றார்.
அவரது உச்சரிப்பு ரொம்ப ஸ்பஷ்டமாக, அட்சர சுத்தமாக இருந்தது. வாழ்ந்து கெட்டவர் என்பது புரிந்தது. சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
அன்பும் அரவணைப்பும் அக்கறையும் கலந்து நாம் பேசியது அவருக்கு ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருந்திருக்கவேண்டும்.
“தம்பி யாரு? உங்க தம்பியா?” நம் அருகே நின்றுகொண்டிருந்த குட்டி சந்திரனை பார்த்து கேட்டார்.
“என் நண்பர். பேர் சந்திரன். என்னோட தம்பி மாதிரி தான்!”
“ரொம்ப நல்ல விஷயம்… நல்லாயிருங்க தம்பி!” (தனக்கு அண்ணன் தம்பிகள் இருந்தும் அவர்களால் விரட்டி விடப்பட்ட கதையை கூறினார்.)
விடைபெறும்போது “மனைவி குழந்தைகளோடு நோய்நொடியின்றி நீங்கள் வாழ்வாங்கு வாழ கயிலை கபாலி கற்பகாம்பாளை வேண்டிக்கொள்கிறேன்!”
ஒரு நிமிடம் நாம் சங்கடத்தில் நெளிந்தோம். “ஐயா… அதெல்லாம் இனிமே தான் சாத்தியப்படனும்! எனக்கு இன்னும் திருமணம் ஆகலை!” என்றோம் சற்று தயங்கி தயங்கி.
“என்னது உங்களக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?” அதிர்ச்சியுடன் கேட்டார்.
“ஆமாம் ஐயா… ஒழுக்கத்திலும் பக்தி நெறியிலும் ஊறிய ஒரு பெண் விரைவில் மனைவியாக வர ஆசீர்வதிக்கவேண்டும்!” என்று அவரது கால்களில் வீழ்ந்தோம்.
போவோர் வருவோர் எல்லாம் நடப்பதை விசித்திரமாக பார்த்துக்கொண்டே சென்றனர்.
எந்த ஜென்மாவிலோ நாம் செய்த பாவத்தை இப்படி அடியவர்களின் கால்களில் வீழ்ந்து நாம் போக்கிகொண்டிருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
“நீங்கள் நினைப்பது போலவே ஒரு நல்ல பெண் உங்களுக்கு மனைவியாக வருவார். கல்யாணத்துக்கு அப்புறம் கபாலியை தரிசித்துவிட்டு பின் என்னை வந்து மறக்காமல் பாருங்க!” என்றார்.
“நிச்சயமா… அதுமட்டுமில்லே இந்த பக்கம் வரும்போதெல்லாம் உங்களை வந்து பார்ப்பேன் ஐயா!”
நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் புளியோதரை பிரசாதம் அடங்கிய தொன்னையை அவரிடம் தர, அதை அள்ளி சாப்பிட முடியாது அப்படியே வாயை அதில் வைத்து சாப்பிட்டார் பலராமன். சிவ சிவ… பார்க்கவே மனது வலித்தது. (தொழுநோய் பிடித்தவர்களுக்கு விரல்கள் மடங்கி இருக்கும். விரகளால் செய்யக்கூடிய எதையும் அவர்களால் செய்ய முடியாது!)
“வர்றோம் ஐயா!” விடைபெற்று கிளம்பிவிட்டோம்.
அதன் பின்னர் உள்ளே சன்னதி சென்று சுப்ரமணிய சுவாமியை தரிசித்தோம். தகப்பன் சுவாமி சந்தன அலங்காரத்தில் ஜொலித்தார். சாதரணமாகவே முருகன் அழகு. சந்தனக்காப்பில் கேட்கவேண்டுமா? அழகோ அழகு. வைகாசி விசாகத்தன்று முருகனை கபாலீஸ்வரர் கோவிலில் தரிசித்தது நாம் பெற்ற பேறு. தொடர்ந்து கபாலீஸ்வரர் தரிசனம்.
முன்னதாக சன்னதிக்கு நுழையும் முன்னர் முருகப் பெருமான் குறித்து வள்ளலார் இயற்றிய பாடல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. அம்மையையும் அப்பனையும் தரிசித்துவிட்டு வெளியே வந்தோம்.
வைகாசி விசாகத்தை மிக சிறப்பாக கொண்டாடியது போல மனம் நிறைந்து காணப்பட்டது. என்னமோ பலராமன் நம் மனதில் ஆழப்பதிந்துவிட்டார்.
என்ன இவர் கோவிலுக்கு போய் அங்கே இருக்குற பிச்சைக்காரர் கால்ல விழுந்துட்டு வந்திருக்கிறார் என்று உங்களில் சிலர் கருதக்கூடும்.
மேலே படியுங்கள்.
அடுத்த நாள் (அதாவது நேற்று ஜூன் 12) மகா அனுஷம். மகா பெரியவரின் ஜெயந்தி. காஞ்சியில் உள்ள மகா பெரியவாவின் அதிஷ்டானத்துக்கே செல்ல நாம் விரும்பினாலும் நமது சூழ்நிலையும் வேலையும் இடம்கொடுக்கவில்லை.
மாலை நண்பர் பி.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு பாரதிய வித்யா பவனில் ஏற்பாடாகியிருந்தது.
குருவின் ஜெயந்தி அன்று அவரது மகிமையை கேட்பதைவிட சிறந்த செயல் வேறு இருக்க முடியுமா என்ன? மாலை 5.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக அழைப்பிதழ் கூறியிருந்தது.
“நாளை காலை சீக்கிரம் வருகிறேன்” என்று கூறி மாலை 5.00 மணிக்கு ;அலுவலகத்தில் பர்மிஷன் பெற்று கிளம்பினோம்.
நாம் அரங்கத்துக்கு சென்ற நேரம் அரங்கம் கிட்டத்தட்ட ஃபுல்லாகியிருந்தது. சுவாமிநாதன் அவர்களை சந்தித்து நமது வருகையை தெரியப்படுத்திவிட்டு, ஒரு ஓரத்தில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தோம்.
அவ்வப்போது புகைப்படங்களும் எடுத்தவண்ணமிருந்தோம்.
பூஜை, கீர்த்தனை, சதுர் வேத பாரயணம் என்று தூள் கிளப்பிவிட்டார்கள். நிகழ்ச்சி நிறைவுபெற்றவுடன், அரங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுவாமிநாதன் அவர்களின் புதிய நூலான ‘பெரியவா பெரியவாதான்’ நூலை திரு.சுவாமிநாதன் அவர்கள் கைகளால் வாங்கி ஆசிபெற்றுக்கொண்டோம்.
மகா பெரியவாவின் ஜெயந்தி அன்று அவர் மகிமையை கேட்டது நான் செய்த பாக்கியம். சுவாமிநாதன் அவர்கள் வழக்கம்போல, நெஞ்சை உருக வைத்துவிட்டார். ஒவ்வொரு முறையும் அவர் சொற்பொழிவை கேட்கும்போதும் மகா பெரியவா அவர்களின் புதிய பரிமாணத்தை அறிந்துகொள்வோம். இன்றும் அப்படியே.
நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதமும் மகா பெரியவாவின் நூல் ஒன்றும் தந்தார்கள்.
சுவாமிநாதன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தோம்.
மகா பெரியவா அவர்களின் அவதாரத் திருநாளில் அன்னதானம் செய்யாவிட்டால் எப்படி? அன்று மதியமே அன்னதானம் செய்ய நினைத்திருந்தோம். ஆனால் முடியவில்லை. சரி… மாலை எப்படியும் சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவுக்கு பாரதீய வித்யா பவன் செல்லவேண்டும். நேற்று செய்தது போல யாருக்காவது ஏதாவது வாங்கித் தரலாம். சரியான பயனாளி ஒருவர் கிடைத்தால் கூட போதுமே! என்று தோன்றியது.
சரி… இன்னைக்கு நம்ம பலராமன் அங்கே இருக்காரா என்று பார்ப்போம்… இருந்தா அவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவோம் என்று கோவில் வாசலுக்கு சென்று பார்த்தோம். சரியாக ராஜகோபுரத்தின் கீழே பக்கவாட்டில் பலராமன் உட்கார்ந்திருந்தார்.
“என்ன பலராமன் சௌக்கியமா?”
நம்மை பார்த்ததும் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து நின்று நமக்கு வணக்கம் கூற தலைப்பட்டார். அந்த முயற்சியில் அவர் மடியில் இருந்த – அவர் யாசகம் பெற்ற – ரூபாய் நோட்டுக்கள் (பெரும்பாலும் 10 ரூபாய் நோட்டுக்களே) கீழே விழுந்தன. அவற்றை எடுக்க முற்படும் போது அவரால் எடுக்க முடியவில்லை. காரணம், தொழு நோய் பாதிப்பால், விரல்கள் அழுகி பாதி விரல்கள் தான் இருந்தன. விரல்களை மடக்கினால் தானே அவற்றை எடுக்க முடியும். அவர் சிரமப்படுவதை பார்த்து, “இப்போ எதுக்கு எழுந்திருக்கணும்? அப்படியே உட்காருங்க. இந்த பக்கம் வந்தேன். உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்! வேற ஒண்ணுமில்லே!”
நாம் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமல், ரூபாய் நோட்டுக்களை தடவி தடவி எடுத்து பையில் போட்டார். நாம் உதவி செய்ய கீழே குனிய… அதற்குள் நோட்டுக்களை எடுத்துவிட்டார்.
இரு கைகளையும் கூப்பி, “ஐயா… வந்துடீங்களாய்யா… வணக்கம்!”
“பலராமன்… இன்னைக்கு மகா பெரியவரோட பிறந்த நாள். பக்கத்துல ஒரு சொற்பொழிவு ஏற்பாடாகியிருந்தது. அதை கேட்டுட்டு கிளம்புற வழியில உங்களை பார்க்கலாம்னு வந்தேன்!”
“ரொம்ப சந்தோஷம் ஐயா!”
“ஏதாவது சாப்பிடுறீங்களா? நேத்து மாதிரி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
“ஒன்னும் வேண்டாம்யா…”
“பரவாயில்லே சொல்லுங்க….”
சற்று தயக்கத்திற்கு பிறகு, “ஒரே ஒரு தோசை வாங்கிட்டு வாங்க போதும்!” என்றார்.
“சரி… ஒரு அஞ்சு நிமிஷம்… வாங்கிட்டு வந்துடுறேன்” கூறி பக்கத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தோம்.
கண் பார்வையற்ற வயதான தம்பதிகள் இருவர் நின்று யாசித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அருகில் சென்று, “அம்மா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்த சாப்பிடுவீங்களா?”
தம்பதிகள் இருவரும் நம்மை நோக்கி திரும்பினர். “வாங்கிட்டு வாங்கய்யா… வாங்கிட்டு வாங்கய்யா…” அவர்கள் சொன்ன வேகத்தை வைத்து பார்த்தபோது பசியோடிருப்பது புரிந்தது.
“என்ன வேணும்? சொல்லுங்க..!”
“சட்னி கொஞ்சம் கூட வெச்சு இட்லி வாங்கிட்டு வாங்கய்யா…”
“ஐயா உங்களுக்கு??”
“எனக்கு தோசை போதும் தம்பி!”
“அஞ்சே நிமிஷம்… வாங்கிட்டு வந்துடுறேன்…”
அருகில், ஒற்றைக் காலை இழந்த ஒருவர் இருந்தார். அவரையும் கேட்போம் என்று “ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று கேட்டால், “எனக்கு அதெல்லாம் வேண்டாம் ரூபா கொடுங்கள்!” என்றார்.
“பணமா… பணம் நான் யாருக்கும் கொடுக்குறதில்லே. சாப்பிட ஏதாவது கேளுங்க. நீங்க ரூ.500/- க்கு கேட்டா கூட வாங்கித் தர்றேன்… ஆனா பைசா மட்டும் கேட்காதீங்க” என்றோம் ஸ்ட்ரிக்ட்டாக.
நாம் உறுதியாக இருந்ததில், “சரி தோசை வாங்கிட்டு வாங்க” என்றார் கடைசீயில்.
இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்புறம் பார்த்தேன். குப்பைத் தொட்டியின் அருகே ஒருவர் அமர்ந்துகொண்டு, பக்தர்கள் பிரசாதம் சாப்பிட்டு வீசிய தொன்னைகளை எடுத்து, அதில் எஞ்சியிருந்ததை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்க்கவே மனம் வலித்தது. “சிவ… சிவ… இதென்ன கொடுமை… தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிதிடுவோம்னு பாரதி சொன்னாரே… இங்கே இவர் சாப்பிட்டே பலநாள் இருக்கும் போலுள்ளதே…”
ஓடோடிச் சென்று “ஐயா சாப்பிட ஏதாவது வாங்கித் தந்தா சாப்பிடுறீங்களா?”
அவருக்கு நாம் பேசியது புரியவில்லை. தமிழ் அவருக்கு தெரியாது போல. ஹிந்தியும் தெலுங்கும் கலந்த ஒரு மொழி பேசினார். அவர் பேசியது நமக்கு புரியவில்லை.
சரி வாங்கிகொண்டு வந்து கொடுத்துவிடுவோம் என்று மாமி மெஸ் நோக்கி விரைந்தோம்.
கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. பத்து நிமிடம் காத்திருந்து அனைவருக்கும் பார்சல் வாங்கிக்கொண்டு மீண்டும் கோபுர அடிவாரம் வந்தோம்.
மொழி தெரியாதவரை தேடினால் அவரை காணவில்லை. நாம் டிபன் வாங்கி வருவதாக சொன்னது அவருக்கு புரியவில்லை போல.
வயதான பார்வையற்ற தம்பதிகளிடம் பார்சலை ஒப்படைத்தோம்.
“ரொம்ப நன்றி தம்பி! ஒரு குறையும் இல்லாம நல்லாயிருக்கனும்!” என்றனர் இருவரும்.
“உங்க பேர் என்னம்மா?” ஒரு ஆவலில் கேட்டோம்.
பெயரைச் சொல்வதற்கு தயங்கினர். அவர்கள் தயக்கத்திற்கான காரணம் நமக்கு புரியாமல் நாம் சற்று விழித்தோம்.
“இல்லே தம்பி… நாங்க CHRISTIANS. அதான்…”
“அதனால என்னம்மா? கடவுள் முன்னால எல்லாரும் சமம். அதுவும் நீங்கே எங்கே நின்னுகிட்டு இருக்கீங்க… கபாலீஸ்வரர் முன்னால. ஜாதி மதம் பேதம் பார்க்கிறதெல்லாம் மனுஷங்க தான். அவனுக்கு எல்லாரும் ஒன்னு தான். நமக்கு அப்படித்தான்.”
“என் பேரு அந்தோனி. அவங்க பேர் மேரி!” என்றார் பெரியவர்.
“ரொம்ப சந்தோஷம். தாராளமா சாப்பிடுங்க… இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?”
“……………………..”
“மகா பெரியவர் என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யாளாக விளங்கிய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளோட அவதாரத் திருநாள்!”
“அப்படிங்களா தம்பி. ரொம்ப சந்தோஷம்!” என்றனர்.
அவர்களிடம் தொடர்ந்து சிறிது நேரம் பரிவுடன் பேசி அவர்கள் சங்கடத்தை போக்கிவிட்டு நம் பலராமனை நோக்கி சென்றோம்.
“பலராமன் இந்தாங்க தோசை! இன்னைக்கு என்ன விசேஷம்னு கேக்கலியே…”
“என்ன விசேஷம் சார்…. ?” ஆவலுடன் கேட்டார்.
மகா பெரியவரின் ஜெயந்தி பற்றி கூறினோம்.
பலராமனை பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
“உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..”
“சார் ஒரு காலத்துல பலராமன்னு என் பேரைச் சொன்னா மயிலாப்பூருக்கே தெரியும்… இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கேன்…”
கண்களில் கண்ணீர் வழிந்தது.
“வேணாம் சார்… என் கதை வேணாம்… அதை மட்டும் கேட்காதீங்க….” என்றார்.
நம்மை பற்றி விசாரித்தார். சுருக்கமாக எடுத்துக் கூறினோம்.
“நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் எல்லாரும் நல்லாயிருக்க கயிலை கபாலி கற்பகாம்பாளை வேண்டிக்கிறேன்” என்றார். (அதை அவர் சொல்லும் விதமே தனி!).
அப்போது தான் நமக்கு அந்த யோசனை தோன்றியது…. இந்த வார பிரார்த்தனைக்கு இவரை தலைமை தாங்கச் சொன்னால் என்ன?
இன்று இவரது நிலை இப்படி இருக்கலாம். ஆனால், நம் அனைவரையும் விட இவர் பாக்கியசாலி. கபாலீஸ்வரர் பக்கத்திலேயே இருக்கிறார். தினமும் ராஜ கோபுரத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார். தினமும் எண்ணற்ற சிவபக்தர்களை சந்திக்கிறார்.
அவன் ஆலயத்தில் ஊறும் ஒரு சிறு எறும்பே புண்ணியம் செய்திருக்கவேண்டும் எனும்போது, அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் தினமும் பாதத்தை பதிக்கும் இவர் எத்தனை பாக்கியசாலி…
நாம் அனைவரும் ஒரு நாள் இந்த உலகத்தில் இருந்து விடைபெறப் போகிறவர்கள் தான். முதுமை, விபத்து, நோய், ஏதோ ஒரு காரணத்தால் இந்த உலகை விட்டு பிரியப்போகிறவர்கள் தான். ஆனால் இவற்றால் மடிவதை விட, சிவாலயத்தில் தஞ்சம் அடைந்து அவன் பக்தர்களை தினசரி பார்த்துக்கொண்டு, அவர்களிடம் யாசகம் பெற்று மடிவது பன்மடங்கு சிறந்தது.
நமது பிரார்த்தனை கிளப் பற்றி விரிவாக எடுத்துக்கூறி, “ஐயா இந்த வார பிரார்த்தனைக்கு நீங்கள் தான் தலைமை ஏற்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.
முதலில் மறுத்தவர், “ஐயா நீங்கே எங்கேயும் போகவேண்டாம்… இங்கே, இதே இடத்துல இருந்தே எங்களுக்காக கபாலீஸ்வரர் கிட்டே பிரார்த்தனை பண்ணா போதும்! உங்க பிரார்த்தனையை நிச்சயம் அவன் கேட்பான்!”
“பண்றேன்… ஆனா நீங்களும் அந்நேரம் இங்கே வரணும். என் கூட இருக்கணும்!” என்றார்.
சற்று யோசித்தோம். ஞாயிறு மதியம் பேரம்பாக்கம் உழவாரப்பணி முடித்து வந்துவிடுவோம். எனவே இங்கே வருவதற்கு ஒன்றும் கஷ்டமிருக்காது. என்ன கேட்கிறார் நாமளும் கூட இருக்கணும் என்று தானே… இருந்துட்டா போகுது…
“சரி வர்றேன் ஐயா. நான் ஞாயிற்றுக் கிழமை 5.30 மணிக்கு இங்கே இருப்பேன்! ஒ.கே.?”
“சரிங்க ஐயா…!”
பலராமன் நெற்றியை பார்த்தபோது, இந்த நெற்றியில் திருநீறு இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
“பலராமன்… எனக்காக ஒன்னே ஒன்னு செய்வீங்களா?”
“சொல்லுங்கய்யா…”
“இனிமே நீங்க நெற்றியில தினமும் திருநீறு பூசிக்கனும்!” என்றோம்.
“நிச்சயமா ஐயா”
“இதோ இப்போவே கோவிலுக்கு போய் திருநீறு எடுத்துட்டு வர்றேன்.. என் எதிரிலேயே பூசிக்கொள்ளவேண்டும். சரியா ?”
“தாராளமா ஐயா… இதோ விநாயகர் சன்னதியிலேயே விபூதி இருக்கும் பாருங்க” என்றார்.
நேரே ஆனைமுகன் சன்னதிக்கு சென்று, அங்கு தூணில் கிண்ணத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த விபூதியை கைகளில் கொஞ்சம் அள்ளிக்கொண்டு நேரே பலராமனிடம் வந்தோம்.
“இந்தாங்க… ..பூசிக்கோங்க…..”
அதை ஆனந்தமாக வாங்கி அவர் பூசிக்கொண்டார் பாருங்கள்… அந்த தருணம்… சிவ… சிவ…. நம்மால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணம்.
விபூதியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ‘செல்வம்!’ ஆம்… விபூதி என்ற சொல்லுக்கு அர்த்தமே செல்வம் என்பது தான்.
நெற்றியில் திருநீறு பூசிக்கொண்ட பலராமனிடம் ஒரு தனி தேஜஸ் தோன்றியது போலிருந்தது.
“ஐயா என் குருவின் ஜெயந்தியான இன்று என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று கூறி அவர் கால்களில் வீழ்ந்தோம்.
உணர்ச்சிவசப்பட்ட பலராமன், “ஐயா எனக்கு விபூதி பத்தி தெரியாது. ஆனா குங்குமம் பத்தி தெரியும். எல்லா வித பாக்கியங்களும் கபாலி கற்பகாம்பாள் அருளால் உங்களுக்கு கிடைக்கட்டும்!” என்று கூறி நெகிழ்ந்தவர், தொடர்ந்து….
நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
வாழும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்,
காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை
என்ற அந்த அருமையான பாடலை தட்டுத் தடுமாறி பாடினார் பாருங்கள்… விக்கித்து நின்று போய்விட்டோம்.
அன்னையை பற்றி எத்தனை அருமையான பாடல் இது… இந்த பாடலை முழுமையாக ஒருமுறை படித்துப் பாருங்கள். கண்களில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும். ஊனையும் உள்ளத்தையும் ஒருங்கே உருக்கும் பாடல் இது.
இவ்வளவு நடந்த பிறகும் மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல் இருந்தது. அதாவது பலராமன் போன்றவர்களை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க தேர்வு செய்தது குறித்து நமக்கு மகிழ்ச்சியே என்றா லும் மற்றவர்கள் இதை எவ்வாறு எடுத்து கொள்வார்கள் என்கிற ஒரு குழப்பம் இருந்தது. அந்த குழப்பம் யதார்த்தமானதே. ஏனெனில், இதுவரை நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றவர்கள் PROFILE வேறு மாதிரியானது. இவர் PROFILE வேறு மாதிரியானது.
“இறைவா… நான் செய்தது சரியென்றே நினைக்கிறேன்…” – குழப்பமும் குழப்பமின்மையும் கலந்த இரு ரெண்டுங்கெட்டான் நிலையில் மனம் இருந்தது.
விபூதி அணிந்து பலராமன் ஜொலித்துக்கொண்டிருக்க, அவரை அப்படியே கோபுரம் முன்பு நுழைவாயிலில் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க விரும்பி, “ஐயா… கொஞ்சம் கோபுரம் பக்கமா வந்து நின்னீங்கன்னா ஒரு ஃபோட்டோ எடுத்துக்குவேன்” என்றேன்.
நமது வேண்டுகோளை ஏற்க மறுத்து அவர் தன் இடத்தைவிட்டு அசைய மறுப்பார் என்றே நினைத்தேன்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக…. “போட்டோ எடுக்கப்போறீங்களா? இதோ செருப்பை கழட்டி வெச்சிட்டு வர்றேன்” என்று கூறி, தனது காலனியை கழற்றி வைத்துவிட்டு கோபுரம் கீழே சரியாக நுழைவாயில் அருகே நின்றார் பலராமன்.
நாம் காமிராவை ஆன் செய்து பலராமன் அவர்களை FOCUS செய்த தருணம், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேள தாள மங்கள வாத்தியம் சத்தம் கேட்டது. கபாலீஸ்வரர் கற்பகாம்பாளுடன் வீதி புறப்பாடுக்கு தயாராகி வெளியே வந்துகொண்டிருந்தார். பலராமன் நமக்கு முன்னே நின்று போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
நாம் பலராமனை புகைப்படம் எடுக்கவும், கபாலீஸ்வரர் அன்னை கற்பகாம்பாளுடன் பின்னணியில் வரவும் சரியாக இருந்தது.
அந்த கபாலீஸ்வரர் மீது ஆணையிட்டு சொல்கிறோம். இதை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தலைவரை தலைவியுடன் உற்சவமூர்த்தியாக கண்ட பரவசத்தில் உற்சாகத்தில் நமக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பட் பட்டென்று ஃபோட்டோக்களை கிளிக்கித் தள்ளினோம். அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நடந்துமுடிந்துவிட்டது. ஒரு நிமிடம் முன்னே பின்னே ஆகியிருந்தால் கூட இது நடந்திருக்காது.
நமது மனதில் ஏற்பட்ட சந்தேகத்துக்கு அந்த கபாலீஸ்வரரே “பலராமன் என் அடியவனே… அன்புக்குரியவனே!” என்று பதில் சொல்லிவிட்டார்.
வேதத்தின் தலைவனான அந்த வேதநாயகமே “YOU PROCEED MY CHILD” என்ற சொன்ன பிறகு அதைவிட பெரிய AUTHENTICATION வேறு என்ன வேண்டும்?
[END]
வணக்கம் சுந்தர் சார்
சரியாக சொல்ல தெரியவில்லை பிரமாதம் சார்
நன்றி
அருமை அருமை அருமை! பிரார்த்தனைக்கு தலைமை தாங்க நம் பலராமன் அவர்களைவிட பொருத்தமானவர் யாரும் இருக்க மாட்டார்கள். சுந்தரின் பதிவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. அந்த உண்மைதான் இறைவன்.
மேற்படி எழுத வார்த்தைகள் இல்லை சுந்தர்.
Dear Shri.Sundar,
You need not have an Iota of doubt even about your choice of Shri.Balaraman for heading the Prathana this week…People like him are the ones who would really pray for others welfare selflessly…In fact i remember reading a post earlier where I have read most of us going insite the temple for praying are bigger beggars than
those sitting outside as we beg for more comforts to the lord than those seated outside.
Hats off to you, your thoughts and your service.
பலராமன் ஒரு காலத்தில் எப்படி வாழ்ந்தாரோ தெரியவில்லை
அனால் பல நல்ல செயல் செய்திருக்கிறார்
தலைமை கு profile முக்கியம் இல்லை கடவுளே நேரில் வந்து சொன்து போல் உள்ளது
மிக நீண்ட பதிவு. வைகாசி விசாகத்தன்று மிக பெரிய புண்ணியமான அன்னதானம் செய்து இறை அருளுக்கு பாத்திரமாகி விட்டீர்கள். நாம் தொழுநோயாளிகளின் அருகே செல்லவே பயபடுவோம், ஆனால் நீங்கள் அவரிடம் அன்பாக பேசி, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவருக்கு வேண்டிய தோசையை அவர் விரும்பிய மாமி மெஸ் ல் வாங்கி கொடுத்து அவரை மகிழ்வித்து அவர் பசியாற்றி தானும் மகிழ்நதிருக்கிரீர்கள். அத்துடன் 70-75 வயது மதிக்க தக்க பாட்டிக்கும் உணவு வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள். திரு பலராமன் வாழ்த்தியது போல் உங்கள் மன வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். மாமிஸ் மெஸ்ஸில் மகா பெரியவர் போட்டோ பார்த்து ஆச்சரிய பட்டோம். தாங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்கள் கூடவே வருகிறார்.
மகா பெரியவரின் ஜெயந்தி அன்றும் திரு சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இருக்கிறீர்கள். இது மகா பெரியவரின் அனுக்ரகம் தங்களுக்கு . அன்றும் அன்ன தானம் செய்திருக்கிறீர்கள்
தாங்கள் பிரார்தனை க்ளபிற்கு தலைமை தாங்க தேர்ந்தெடுத்து இருக்கும் பலராமன் மிக பொறுத்தமானவர். அதன் இறைவனும் இறைவியும் ஆசிர்வதித்து விட்டார்களே
நீண்ட பதிவிற்கு நன்றி
நன்றி
உமா .
sundarji ,
I could not find exact words to comment this long superb article. In general Sundarji is great. Salutation to maha periyava who gave you for us through rightmantra. Let God continues his service through you to many like this.
Congrats and bye.
வாழ்த்துக்கள் சுந்தர் சார்.
எனக்கு எழுத வார்த்தைகள் வரவில்லை
பலராமன் அவர்களை நம் அன்னையும் அப்பாவும் “என் அருள் பெற்றவன், என் அன்புக்கு உரியவன்” என்று மேள தாளம் முழங்க உத்தரவு கொடுத்த பிறகு நம் வாசகர்கள் மட்டுமல்ல எல்லோரும் அவர் நம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்க தகுதி உள்ளவர் தான் என்று ஏற்று கொள்வார்கள்.
உங்களுக்கு ஏற்படும் பலவித அனுபவங்களால் எங்களுக்கு தான் ஜாக்பாட் அடிக்கறது.
உண்மையிலேயே படிக்க படிக்க மனம் நெகிழ்ந்து போனோம்.
எல்லா இடத்திலும் உங்களுக்கு துணையாக நீக்கமற நிறைந்து இருப்பவர் மகா பெரியவா அவர்கள்.
மேலும் மேலும் உங்களுக்கு வாழ்வும் வளமும் பெருக பிரார்த்திப்போம். நன்றி.
வழக்கம் போல், இந்த பதிவும் பல விசயங்களை (நம் அக அழுக்குகளை ) கண் முன் நிறுத்தி நம்மை எச்சரிக்கிறது .
துணை நின்று காப்பாய் இறைவா !
சுந்தர்,
ஒரு வாசகனாக இந்த பதிவு என்னுள் எனக்காக ஏற்படுத்தும் படிப்பினை தாக்கம் மட்டுமே நான் மேற்கூறியது!
உங்கள் பதிவுகள் எப்போதுமே படிப்பினையை சுமந்து வருவது என்பதில் மாற்று கருத்து இல்லை.
நன்றி!
சுந்தர்ஜி,
நான் நேற்று விடுமுறை. இன்றைக்குத்தான் படிக்க முடிந்தது. படிக்க முடிந்தது என்று சொல்வதை விட படிக்க முடியாமல் கண்கள் பனித்தது என்றே சொல்ல வேண்டும். சொல்ல வார்த்தைகளே இல்லை . தீபம் மேடைக்கு சுந்தர் அவர்கள் ஒப்பு கொண்டு விட்டாரே . அந்த தம்பிக்கு பகவான்தான் உதவி புரிய வேண்டும் என்று நான் மனதார பிரார்திதிக்கு கொண்டேன். என்
பிரார்த்தனை வீண் போக வில்லை
மறைந்த தன் தாயாரின் நினைவாக தீப மேடைக்கான மொத்த செலவையும் மௌலி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று படித்தவுடன் மேலே படிக்க முடியாமல் கண்களில் நீர் முட்டியது. அந்த கற்பகாம்பாள் தங்களுக்கு நல்லதொரு துணைவியை தேடி குடுப்பார் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
அடுத்து பலராமன் அவர்கள் உண்மையிலேயே ஒரு சித்தரை போன்று இருக்கின்றார். அவர் இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பது அந்த மயிலை கற்பகாம்பாளின் சித்தமே.
வாழ்க வளமுடன்.
உண்மையும் யதார்த்தமும் சுந்தரின் பதிவுகள் அனைத்திலும் பளிச்சிடும்….இதுவும் அதற்க்கு மாறல்ல ,, வாழ்த்துக்களுடன்
மலர் & இராஜேந்திரன்
கபாலீஸ்வரர் கோவில் வாசலில் யாசகம் பெறும் சிவனடியார் திரு.பலராமன் அய்யா அவர்களை வணங்கி அவரிடம் நம் அப்பன் பைரவர் சொருபமாய் விளங்கும் கபாலீஸ்வரர்கற்பகம்அம்பாள் கண்டு துதிகின்டேன்….
“சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே”[அப்பர்]…..
சுந்தர் சார் உங்களுக்கு மேற்கண்ட நம் திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பதிகம் அப்படியே பொருந்துகிறது …தொடரட்டும் உங்கள் சிவ பணி….அன்பே சிவம் ….
விஜய் சார்… இதை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அப்பர் பெருமான் இப்படி ஒரு பாடலை பாடியிருப்பதை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
உலகம் அப்படியே பின்னோக்கி சென்று அப்பரும் திருஞான சம்பந்தரும் வாழ்ந்த காலத்திற்கு அப்படியே செல்ல மாட்டோமா என்று தோன்றுகிறது.
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்
இவ்வையகத்தே தொழுவார்க்கிரங்கி இருந்தருள்செய்
பாதிரிப் புலியூர் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்
வைத்த தீவண்ணனே.
– சுந்தர்
Iya arumaiyana pathivu enakku inruthan padikkum vaippu kidaithathu.Neengal seyyum pani sirappaka thodara vazhthukkal.
கண்ணீர் வந்தது அய்யா எதை படித்த உடன் , மஹா மஹா பெரியவா , குரு நாத , குரு பரா சரணம் சரணம்