இவரது ‘சிறகை விறி, பற’ என்னும் தொடர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தினகரன் – ஆன்மீக மலரில் வெளியானபோது, ‘ஆன்மீகச் சிந்தனையின் உச்சமே, பகிர்ந்துண்ணல் தானே’ என்ற தலைப்பில் அன்ன தானத்தின் சிறப்பை விளக்கும் ஒரு அத்தியாயத்தை எழுதியிருந்தார். அதை படித்தவுடன் அவரை பாராட்டியே ஆகவேண்டும் என்று விரும்பி எப்படியோ அவரது எண்ணை கண்டுபிடித்து, அவரை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தோம். (இந்த தொடர் விகடன் பிரசுரத்தில் தனி நூலாக வெளிவந்துள்ளது).
அதற்கு பிறகு அவருடன் ஒரு மூன்று நான்கு முறை
பேசியிருக்கிறோம். அதற்கு பிறகு பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நம் ரைட்மந்த்ரா தளம் பிறந்தபோது, அவரை தொடர்பு கொண்டு, “இப்படி ஒரு தளத்தை துவக்கியிருக்கிறேன்… நீங்கள் ஏதாவது ஒரு தொடர் எங்கள் தளத்திற்கு எழுதி தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.
ஓரிருமுறை பேசிய அறிமுகத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் அவ்வாறு கேட்டதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியாது. நேரமின்மை காரணமாக இப்போதைக்கு சாத்தியமில்லை என்றார். எனவே நம் முயற்சி வெற்றி பெறவில்லை! என்றாவது ஒரு நாள் அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.
இதனிடையே, யதேச்சையாக தினகரன் ஆன்மீக மலரில் வெளியான அவரது ‘சிறகை விரி, பற’ தொடரில் ‘குடும்ப பலமே, தேசிய பலம்’ என்கிற அத்தியாயத்தை படிக்க நேர்ந்தது.
கட்டுரையின் வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகள். இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குறிப்பாக திருமண உறவுக்குள் அடியெடுத்து வைக்கும், வைக்கப்போகின்ற அனைவரும் படிக்கவேண்டிய, படித்துவிட்டு பகிரவேண்டிய அற்புதமான கட்டுரை.
========================================================
குடும்ப பலமே, தேசிய பலம்!
– பாரதி பாஸ்கர்
அண்மையில் என் அப்பாவை ஒரு செக்-அப்பிற்காக மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன். ஏழு மணிக்குப் போய் சர்க்கரை நோய் தொடர்பான எல்லா டெஸ்டும் செய்து முடித்து டாக்டரையும் டயட்டீஷியனையும் சந்தித்து, வெளியே வருகையில் மணி இரண்டு. மருத்துவமனையில் நல்ல கவனிப்பும் வசதிகளும் இருந்ததால் ஒன்றும் பிரச்னையில்லை. காத்திருந்த நேரத்தில் சுற்றிலும் பார்த்தேன். மருத்துவமனைச் சூழல் எப்போதும் ஒரு சிறுகதைக்கோ, கட்டுரைக்கோ, கவிதைக்கோ களம் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. இந்தச் சூழல் கடந்த பத்து வருடங்களில்தான் எப்படி தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது!
முன்பெல்லாம் வயதானவர்கள் மருத்துவமனைக்கு வந்தால் மகன்களோ, இளவயது உறவுக்காரர்களோ, கூட வருவார்கள். இப்போது பெரும்பாலும் வயதான ஆண்களுக்குத் துணையாக வருவது அவர்களது மனைவியர் மட்டுமே. நோயாளியை சமாளித்து, பெரிய பெரிய ஃபைல்களில் ரிபோர்ட்டுகளைத் தொகுத்து, பராமரித்து, பணம் கட்டி, நடுநடுவே போய் காஃபி வாங்கி வந்து கொடுத்து, கடைசியில் வெளியே வந்து ஆட்டோ பிடிப்பது வரை மனைவியின் பொறுப்பு – அவர்களுக்கே வயது 65-70 ஆனாலும்! மனைவி நோயாளி என்றால் கணவர் கூட வருகிறார். வயதான பெற்றோரை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு வரக்கூட பல வீடுகளில் பிள்ளைகளுக்கு நேரம் இல்லை அல்லது பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
கணவனும் மனைவியுமாய் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு, முதுமையைக் கடக்க முயற்சி செய்யும் வாழ்வில், இளமையில் பரிமாறிக்கொள்ளாத அன்பு ஆட்சி செய்கிறது. ‘‘எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாற்பது வருஷம் முடிந்து விட்டது மேடம்’’ என்றார், பக்கத்து நாற்காலியில் இருந்த பெரியவர். இரண்டு பிள்ளைகளாம். இருவரும் வெளிநாட்டில். ‘‘இப்போ இவளுக்கு நானும் எனக்கு இவளும்தான் குழந்தை. எங்கள் இளமையில் வேலை, சம்பாத்தியம், வீடு, பிள்ளைகள்னு ஓடிக்கிட்டே இருந்தோம்.
அப்போ எனக்கு நிறைய கோபம் வரும். சாப்பிடறபோது தட்டை எடுத்து வீசி எறியாத நாளே கிடையாது. இவளோ பதிலே பேச மாட்டா. ஆனால் இப்போ, ஒருநாள் இவ பத்து நிமிஷம் வெளியே போனாக்கூட ரொம்ப பயமா இருக்கு. விட்டுப் பிரியவே முடியலே’’ என்றார். அவர் மனைவி அழகாகச் சிரித்தார். பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ கவிதை என் நினைவுக்கு வந்தது. ஒரு தாத்தா, தன் மனைவியை வர்ணிக்கிறார்:
புது மலர் அல்லள் – காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு
சதிராடும் நடையாள் அல்லள் – தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவளுக்கு – வரள் நிலம், குழிகள் கண்கள்
எது எனக்கு இன்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்பதொன்றோ?
இந்த வயதான தம்பதிகளின் காதலும் நேசமும் பார்க்கப் பார்க்க இனிமையாக இருந்தது.
அடுத்த நாள், என் உறவினர் ஒருவரின் பெண் திருமணமாகி ஆறே மாதத்தில் விவாகரத்து கேட்டு அடம் பிடிக்கிறாள் என்று, ஒரு பிரபல வழக்கறிஞரிடம் அவர்களை அழைத்துச் சென்றேன். மஞ்சள் கயிற்றின் நிறம் இன்னும் வெளுக்கவில்லை… ‘‘உங்க பொண்ணு கல்யாண ரிசப்ஷன் சாப்பாட்டுல பாசந்தி பிரமாதம்’’ என்று இப்போதும் யதேச்சையாகப் பார்க்கும் உறவுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் விவாகரத்து! என்ன பிரச்னையாம்?
“என்னன்னே தெரியலை. அவனைப் பிடிக்கவேயில்லைன்னு சொல்றா” என்கிறார், உறவினர். விஷயத்தை வக்கீலிடம் சொன்னோம்.
“பொண்ணு, பிள்ளை ரெண்டுபேரும் சாப்ட்வேரா?” என்று கேட்டார்.
“கல்யாணம் ஆகி ஒரு வருஷம்கூட முடிஞ்சிருக்காதே” என்றும் சொன்னார்.
“ம்யூசுவல் கன்சென்டா?”
“இப்ப சேர்ந்தா இருக்காங்க?”
“நகை, பணம் எல்லாம் யார் கஸ்டடியிலே இருக்கு?”
“அக்கவுண்ட் எல்லாம் தனித்தனியா? ஜாயிண்டா?”
வக்கீல் சர்வ அலட்சியமாக விஷயங்களை அடுக்கினார். எவ்வளவு சகஜமாகக் கேட்கிறார் அவர்!
இந்தியாவில் விவாகரத்து கேஸ் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்தால் வக்கீல்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சி எப்படி வரும்? குடும்ப நல கோர்ட்டுகள், ஞாயிறுகூட இயங்க வேண்டும் என்று உத்தரவு போடும் அளவுக்கு விவாகரத்து வழக்குகள் பெருகிவிட்டன அல்லவா?
இதற்குக் காரணம் மாறிவரும் பெண்களும் மாறாத ஆண்களும் என்று எனக்குத் தோன்றியது. கோபம் கொண்டு, சாப்பிடும் தட்டை சுவரில் எற்றும் கணவனையும் கடிந்து பேசாத நேற்றைய மனைவிகள், மாறிப் போனார்கள்; “என் பணம், என் அக்கவுண்ட், என் இஷ்டம்” என்கிறார்கள்.
“காதலி மாடர்ன் பெண்ணாக ஜீன்ஸில் தன்னோடு சுற்ற வேண்டும். அவளே மனைவியான பின், விடியுமுன்பே எழுந்து, புடவை கட்டி, பூ வைத்து மல்லிகை இட்லிகளையும் மணக்கும் சாம்பாரையும் இலையில் அன்பாகப் பரிமாற வேண்டும்’’ என்று நினைக்கும் ஆண்கள் மாறாமல் இருக்கிறார்கள். விவாகரத்து வழக்குகள் பெருகாமல் என்ன செய்யும்?
ஒரு திருமணம் முடிந்ததாக எப்போது அடையாளம் காணப்படுகிறது? இந்துத் திருமணங்களைப் பொறுத்தவரை ஸப்தபதி என்னும் ஏழு அடிகள் எடுத்து வைத்தபிறகுதான். தாலி கட்டுதல் அல்ல, ஸப்தபதியே ஒரு திருமணத்தின் நிரூபணம். மணப்பெண்ணின் வலது கையை தன் வலது கையால் பற்றிக்கொண்டு நன்றாக குனிந்து அவளின் வலது காலைத் தன் இடது கையால் பிடித்துக்கொண்டு, சற்றுத் தூக்கி ஒவ்வொரு அடியாக ஏழு அடிகள் முன்னோக்கி நகர்த்தும் சடங்கு இது. அப்போது மணமகன் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்ன? ஏழு அடிகள் எதற்காக எடுத்து வைக்கிறார்கள்?
1. தெய்வங்கள் எங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. திடமான உடலும் கீர்த்தியும் எங்களுக்கு அமைய வேண்டும்.
3. எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு அளித்த பணியை நாங்கள் செவ்வனே செய்ய வேண்டும்.
4. எங்களுக்கு நீண்ட ஆயுள் அருளப்பட வேண்டும்.
5. வீடு, வாகனம், கால்நடைகள் போன்ற செல்வங்கள் கிடைக்க வேண்டும்.
6. சரியான பருவ காலத்தில் நல்ல மழையும் நல்ல விளைச்சலும் அமைந்து சுற்றுப்புறம் செழிக்க வேண்டும்.
7. தெய்வத்திற்கும் மூத்தோருக்கும் உறவினருக்குமான பணிகளைச் செய்ய இறைவன் அருள வேண்டும்.
இது முடிந்த பிறகு மணமகன் மணமகளைப் பார்த்துச் சொல்லும் ஒப்பந்த மந்திரம் உள்ளது: “ஏழு அடிகளைத் தாண்டிய நீ, எனக்குத் தோழி. இனி நாம் நண்பர்கள். இந்த நட்பு விலகாது. நானும் விலக மாட்டேன். நீயும் விலகாதே. இருவரும் ஒன்றாகச் செய்ய வேண்டிய கடமைகளை ஒரே விதமாய் நிறைவேற்றுவோம். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட கருத்துள்ளவர்களாய் இருப்போம்.’’ கல்யாண இரைச்சலில் காணாமல் போகும் ஒப்பந்த உறுதிகள்! ‘‘இனி நாம் நண்பர்கள்” என்று நெருப்பை வைத்து செய்த சத்தியங்கள் எங்கே பறந்து போகின்றன?
குடி, அடி, உதை, துரோகம், வரதட்சணைக் கொடுமை இவற்றால் நிகழும் விவாகரத்துகள் மிகக் குறைவாம், வக்கீல் சொல்கிறார். எந்த எந்தக் காரணங்களாலோ விரிசல் காணும் உறவுகளை இணைக்க வேண்டிய இரு தரப்புப் பெற்றோரும் ஊதி ஊதிப் பெரிதாக்கும் வெறுப்பு என்னும் நெருப்பு! பாதிக்கப்படும் பெண்களுக்காக இருக்கும் சட்டங்களையும் மகளிர் காவல் நிலையங்களையும் தனக்குப் பிடிக்காத மாமனார், மாமியார், நாத்தனாரை தண்டிக்க உபயோகிக்கும் பெண்கள், இன்னும் பெண்ணைத் தன் அடிமையாக நினைக்கும் ஆண்கள்… இப்படி எத்தனை காரணங்கள்?
இந்த உறவை எப்படியும் நிலைக்க வைக்க வேண்டும் என்னும் உறுதி, வாயிலிருந்து வார்த்தைகள் விழுந்து விட்டால் திரும்ப அள்ள முடியாது என்னும் விவேகம், எந்தப் பிரச்னை வந்தாலும் ‘‘மம்மீ…’’ என்று தன் அம்மாவிடம் ஓடாது தானே சமாளிக்கும் வைராக்கியம், கொஞ்சம் விட்டுக் கொடுப்பது கேவலமல்ல என்னும் எளிமை… இவை இருந்தால் போதும். ‘‘உங்கள் நாடு எப்படி இன்னும் ஒன்றுபட்டு இருக்கிறது?’’ என்று வெளிநாட்டார் சிலர் நம்மைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கிறார்கள். ‘மதச் சண்டைகள், தீவிரவாதம், அரசியல் சுரண்டல், ஊழல், லஞ்சம், வறுமை, வன்முறை… அப்பப்பா…’’ என்பவர்களுக்கு நம் பதில்: ‘‘எங்கள் சமூகம் இன்னும் எத்தனையோ மாறவேண்டும். ஆனால், எம் குடும்பங்களின் பலத்தில்தான் எங்கள் தேசம் நிற்கிறது’’ என்கிறோம் நாம். அந்தப் பெருமை குலையாமல் பாதுகாக்க இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மை… ப்ளீஸ்…
(நன்றி : பாரதி பாஸ்கர் | தினகரன்)
[END]
இந்த உறவை எப்படியும் நிலைக்க வைக்க வேண்டும் என்னும் உறுதி, வாயிலிருந்து வார்த்தைகள் விழுந்து விட்டால் திரும்ப அள்ள முடியாது என்னும் விவேகம், எந்தப் பிரச்னை வந்தாலும் ‘‘மம்மீ…’’ என்று தன் அம்மாவிடம் ஓடாது தானே சமாளிக்கும் வைராக்கியம், கொஞ்சம் விட்டுக் கொடுப்பது கேவலமல்ல என்னும் எளிமை. This is the great sentence of this article.. We should follow this to same with our lovable relations.
Thanks,
Nagaraj T.
பாரதி பாஸ்கர் அவர்களின் அறிமுகம் அருமை.
பட்டிமன்ற பேச்சாளர்களில் எனக்கும் மிகவும் பிடித்தவர். எப்போதும் அவர் பேச்சை விரும்பி கேட்பேன்.
அவர் சொன்ன அத்தனை கருத்துகளும் உண்மை.
அவர் சொல்லும் ஏழு அடிகளுக்கான விளக்கம் நன்றாக உள்ளது.
அவை சொல்லி இருக்கிற மருத்துவமனை சூழல் மற்றும் வயதான நோயாளிகள் பிரச்னை, துணை, வயதான தம்பதிகள் ஒற்றுமை இதை படிக்கும் போது நாளை நமக்கும் இந்த நிலைமை தான் என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.
இன்றைய இளைய தலைமுறைகளிடம் விட்டு கொடுக்கும் தன்மை வேண்டும்
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பதாகவும் இருக்கும் தாங்கள் ஆசைப்பட்டதுபோல் தொடர் ஏதாவது நமது தளத்திற்கு கிடைத்தால் சந்தோசமே ..மேலும் இவரைப்பற்றி அதிகம் நான் சொல்லத்தேவயில்லை ..அனைத்து தமிழருக்கும் மிக நன்றாகவே தெரியும்.