வடலூரில் இருக்கும்போது சிற்சில நேரம் அவர், சீடர்கள் அறியாத வண்ணம் மறைந்துவிடுவார். அவர் எப்படி எங்கே மாயமாய் மறைகிறார் என்றறியாமல் சீடர்கள் திகைப்பார்கள். எங்கு தேடினும் அவர் தென்படமாட்டார்.
பிறகு தீடீரென்று மறுபடியும் சீடர்கள் மத்தியில் தாமே தோன்றுவார். பின்னர் எதுவும் நடவாததுபோல் சில சீடர்களுக்குத் தாம் செய்துகொண்டிருந்த உபதேசத்தை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து சொல்லத் தொடங்குவார்.
அவரது திருத்தல யாத்திரைக் காலத்தில் பல விந்தையான சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த அற்புதங்களைப் பற்றி புராணம் பேசுகிறது. அத்தகைய அற்புதங்களைப் பற்றி வள்ளலாரின் வரலாறும் பேசுகிறது.
ஒரு குஷ்ட நோயாளி வள்ளலாரைப் பணிந்து தன் நோயை குணப்படுத்தலாகாதா என்று கண்ணீர் விட்டுக் கரைந்தான். கருணையே வடிவான வள்ளலார் அவனது தீராத பெருநோயைத் தன் கையால் திருநீறு கொடுத்துத் தீர்த்து வைத்தார். வள்ளலார் கைத் திருநீறு குஷ்ட ரோகத்தை நீக்கும் மருந்தாகச் செயல்பட்ட விந்தையைப் பார்த்து மக்கள் ஆச்சரியப் பட்டார்கள்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றபோது உள்ளம் உருகி ஓர் அரிய பதிகம் பாடினார். திருவாரூர், திருச்செங்காட்டங் குடி, திருப்புகலூர் போன்ற பல ஊர்களுக் குச் சென்று அங்கெல்லாம் குடிகொண்டிருக் கும் தெய்வ வடிவங்களை மனமுருகி வழிபட்டார்.
பல தலங்களுக்கு அவர் சென்றாலும் அவர்தம் வாழ்வின் இருப்பிடமாகக் கொண்டது கருங்குழி என்ற கிராமம்தான். தமது இருபத்தெட்டாம் வயதில் அங்கு சென்று தங்கினார் அவர். அவருடைய அருட்பணிக் களமாக அந்த கிராமமே அமைந்து பெருமை பெற்றது. அந்த கிராமத்து மக்கள் அவர்மேல் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார்கள். அவரைத் தங்கள் ஊரின் பொக்கிஷம்போல் அவர்கள் போற்றினார்கள்.
அவர் ஒரு ரெட்டியார் இல்லத்தில் தங்கியிருந்த காலம். ஒரு நாள் இரவு நேரம். ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அவர் தங்கியிருந்த கருங்குழி ரெட்டியார் வீட்டினரெல்லாம் ஏதோ உறவினர் வீட்டு விசேஷத்தின் பொருட்டு வேறு ஊர் சென்றிருந்தார்கள். அந்தத் தனிமையில் வள்ளலாரின் மனம் பக்திப் பரவசத்தில் தோய்ந்தது. தம்மை மறந்து அந்த விளக்கின் வெளிச்சத்தில் அருட்பாக்கள் எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் இதயத்திலிருந்து விறுவிறுவென்று பாடல்கள் பிரவாகமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. நெஞ்சின் உணர்ச்சி அலைகளை கையானது வேகவேகமாக எழுத்தாய்ப் பதித்துக் கொண்டிருந்தது.
விளக்கில் எண்ணெய் தீரத் தொடங்கி இருந்தது. இறையருள் சிந்தனையில் தோய்ந்த வள்ளலார் எண்ணெய் தீர்ந்துகொண்டிருப் பதை உணர்ந்தாரே அன்றி அருகில் இருப்பது என்னவென்று உணரவில்லை.
அருகே இருந்த பானை நீரை பக்திப் பெருக்கில் விளக்கில் விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்து எழுதலானார்.
என்ன ஆச்சரியம். அந்தப் பானை நீர் வள்ளலார் கைபட்டதும் எண்ணெயாய் மாறியிருக்க வேண்டும். விளக்கு தொடர்ந்து எரியத் தொடங்கியது. இரவெல்லாம் எரிந்துகொண்டே இருந்தது. விளக்கில் எண்ணெய்க்கு பதிலாக பக்திப் பெருக்கோடு அடுத்தடுத்து வார்க்கப்பட்டது என்னவோ பானைத் தண்ணீர்தான்.
அதிகாலையில் திரும்பிவந்த வீட்டினர் இந்த அற்புதத்தைப் பார்த்து மலைத்தார்கள். சித்த புருஷர் வள்ளலார் என்பதை உணர்ந்து அவர்மீது அவர்கள் முன்னைவிட அதிக மான மரியாதை கொண்டு நடக்கலானார்கள். (ஷீர்டி சாயிபாபா சரிதத்திலும் இதேபோல் தண்ணீரால் விளக்கெரித்த சம்பவம் ஒன்று உண்டு!)
பிறரால் பாராட்டப்படவேண்டும் என்றோ மரியாதை தரப்படவேண்டும் என்றோ வள்ளலார் கருதியதே இல்லை. சித்தம் போக்கு சிவன் போக்கு. அதுபோல் வள்ளலார் போக்கு என்றே அவர் வாழ்ந்து வந்தார். மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அவர் பொருட்படுத்தியதே இல்லை. அவர் தொடர்ந்து அருட்பாக்களை எழுதினார்.
அவரது தூய ஞான உள்ளத்திலிலிருந்து தெள்ளுதமிழ்ப் பாக்கள் பொங்கிப் பெருகின. தமிழ் வள்ளலாரின் பாடல்களால் வளம் பெற்றது. வான்கலந்த மாணிக்க வாசகரின் பாடல்களை வியந்த வள்ளலார், மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு இணையான பாடல்களை எழுதிக் குவிக்கலானார். தமிழின் பக்தி இலக்கியம் வள்ளலாரின் பாடல்களால் பெரும் பெருமை பெற்றது. “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!’ என்று சென்னை கந்தகோட்டத்தில் வாழும் முருகப் பெருமானைப் பற்றி அவர் எழுதிய பாடல் முதல், அவரது எத்தனையோ பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலிக்கலாயின.
=================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : வடலூரில் வாழும் வள்ளலாராய் ஆதரவற்ற பல ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் சிவப்பிரகாச சுவாமிகள்.
65 அகவைகள் கடந்த சிவப்பிரகாச சுவாமிகள் தேவாரம், திருவாசகம், திருவருட்பா ஆகியவற்றில் மிகுந்த புலமை பெற்றவர். எந்த தலைப்பை கொடுத்தாலும் அது பற்றி சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் சுவாரஸ்யமாக பேசக்கூடிய திறமை பெற்றவர். உதாரணத்துக்கு ‘வாழை’ என்ற தலைப்பை கொடுத்தால், வாழையை பற்றி நீங்கள் வியக்கும் வண்ணம் பல புதிய தகவல்களுடன் பேசுவார்.
சுவாமிகள், 1989 முதல் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் ஆதரவற்றோர் இல்லம் நடத்திவருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கழுத்துக்கு கீழே செயலிழந்துவிட்டது. படுத்த படுக்கையான நிலையிலும் சுவாமிகள் தனது தொண்டை நிறுத்தவில்லை. தன்னை நம்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பசிபோக்கி வருகிறார். இவர் நடத்தி வரும் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 60 பேரும், ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 25 பேரும் தங்கி புனர்வாழ்வு பெற்றுவருகின்றனர்.
இந்த இல்லத்துக்கு அவர்களுக்கு தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு இறையருளால் நண்பர்களுடன் ஞாயிறு நாம் செல்லவிருக்கிறோம். இதற்காக நாளை இரவு வேன் மூலம் சென்னையிலிருந்து வடலூர் புறப்படவிருக்கிறோம். நாம் வாசகர்களும் வாசகிகளும் குடும்பத்தோடு வரவிருக்கிறார்கள்.
அங்கு வடலூரில் நமது குழு இருக்கும் நேரம் சிறப்பு பிரார்த்தனை ஒன்று நடைபெறும். தவிர மாலை 5.30 – 5.45 வழக்கமான பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நடைபெறும். சுவாமிகளையும் குழந்தைகளையும் அந்நேரம் நமக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
=================================================================
பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புகிறவர்கள் கவனத்திற்கு!
பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை அனுப்புகிறவர்கள் தயவு செய்து சற்று விரிவாக அனுப்பவும். அவர்கள் பெயர், பாலிணம், ஊர் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடவேண்டும். பிரார்த்தனை சற்று விரிவாக இருப்பது நல்லது. அப்போது தான் பிரார்த்தனை செய்யும் வாசகர்களுக்கு அவர்களது பெயர்களையும் பிரச்சனைகளையும் மனதில் இருத்தி பிரார்த்தனை செய்ய முடியும். மிகவும் தனிப்பட்ட, வெளியே சொல்ல இயலாத பிரச்சனைகளுக்கு மட்டுமே பெயர்கள் வெளியிடப்படாது.
இந்த வார பிரார்த்தனைக்கு முதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் சக்தி, தற்போது தான் கல்லூரி படிப்பை முடித்திருக்கும் மாணவி என்று கருதுகிறோம். அவரது வார்த்தைகளில் இருந்து அவர் எந்தளவு கஷ்டத்தில் இருக்கிறார் என்பது புரிகிறது.
அடுத்து திரு.பாலமுருகன். ரயில்வே வேலை கிடைப்பது எத்தனை அரிது. அப்படி கிடைத்துள்ள வேளையிலும் சேரமுடியாமல் தடங்கல் ஏற்படுகிறது என்று வருத்தப்படுகிறார். வரும் குரு பெயர்ச்சி அனைவருக்கும் சாதகமாய் இருக்கவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
=================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
வேலை கிடைக்க வேண்டும்; வறுமை அகல வேண்டும்!
என் பெயர் சக்தி. நான் படித்து முடித்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் சரியான வேலை கிடைக்க வில்லை இதனால் நான் மன நிம்மதியை இழந்து விட்டேன். நிறைய இடங்களில் வேலை தேடியும் கிடைக்க வில்லை என் மனம் மிகவும் பாதித்து விட்டது. என் குடும்பம் படும் பண கஷ்டத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க பிரார்த்திக்கவும்.
– சக்தி
(ஊர் பெயரையோ வயதையோ இவர் குறிப்படவில்லை)
=================================================================
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை மாறவேண்டும் !
என் பெயர் பாலமுருகன். சென்னை கெருகம்பாக்கத்தில் வசிக்கிறேன்.
நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே வேலைக்கு தேர்வாகி, இன்னமும் பணியமர்த்தப்படாமல் உள்ளேன். அந்த தடங்களை நீக்கி, நான் உடனடியாக பணியமர்த்தப்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு திருமணம் வேறு ஆகிவிட்ட நிலையில், வேலை இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
– பாலமுருகன்,
கெருகம்பாக்கம்,
சென்னை – 600122.
=================================================================
இன்றைய பொது பிரார்த்தனை
மாணவர்கள் விரும்பிய மேற்படிப்பு படிக்கவேண்டும்
இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய வண்ணம் மேற்படிப்பை தொடர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தரவேண்டும்.
வசதியில்லை என்ற ஒரே காரணத்தை கொண்டு, மேற்கொண்டு படிக்க அனுமதிக்கப்படாமல் 10 ஆம் வகுப்போடு பள்ளிக்கல்வி நிறுத்தப்படுகிறவர்கள் மட்டும் லட்சக்கணக்கில் நம் மாநிலத்தில் உண்டு. கிராமப்புறங்களில் இது அதிகம். இந்நிலை மாறி, திறமையும் வேட்கையும் கொண்ட அனைத்து மாணவர்களும் அவர்கள் விரும்பிய படி மேற்கொண்டு தங்கள் படிப்பை தொடர வேண்டும். திருவருள் அதற்கு துணை புரியவேண்டும்.
இயலாமை என்கிற அரக்கன் எந்த ஒரு மாணவ மாணவியரின் கனவையும் சிதைக்கக்கூடாது. இதுவே நம் பொது பிரார்த்தனை.
================================================================
வேலையின்றி தவிக்கும் சக்தி அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், ரயில்வேயில் வேலை கிடைத்தும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் திரு.பாலமுருகன் அவர்கள் உடனடியாக பணியில் சேரவும், பத்தாம் வகுப்பு தேர்வை பாஸ் செய்துள்ள மாணவ மாணவியர் அவர்கள் விரும்பிய வண்ணம் மேற்படிப்பை தொடரவும், வறுமை யாருடைய கல்விக் கனவையும் பொசுக்கி விடக்கூடாது என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : மே 25, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : அண்ணாமலையார் உழவாரப்பணி’ மன்றத்தின் திரு.ஜெயராமன்.
[END]
வள்ளலார் செய்த அற்புதங்கள் பற்றியும், தண்ணீரில் விளக்கெரிதல் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் சிவப்ரகாச சுவாமிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்
இந்தவார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசக வாசகிகளுக்காகவும் மற்றும் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். மகா பெரியவர் நம் பிரார்த்தனையின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.
மேலும் தங்கள் ரைட் மந்தத்ரா குழுவினருடன் பயணம் செய்யும் வடலூர் பயணம் நல்லபடியாக சிறக்க எமது வாழ்த்துக்கள்.
லோகா சமஸ்த சுகினோ பவந்து
ராம் ராம் ராம்
நன்றி
உமா
சக்தி அவர்களே நம் ஈசன் ,”அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்து’என்பதை உணருங்கள் ..
கும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருகோயில் . பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள். இங்கு ஒரு தேய்பிறை அஷ்டமி நாளில் சென்று,அபிசேகம் செய்வித்து , தீபம் ஏற்றி வழிபட்டு வரவும் ..அச்சிறுபாக்கம்[ 044 2752 3019,மேல்மருவத்தூர் அருகில் ]இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை உடனுறை ஆட்சீஸ்வரர்,உமைஆட்சீஸ்வரர் திருக்கோயில் சென்று,அமாவாசை நாளில் சென்று அங்கு உள்ள அச்சுமுறி விநாயகரை வணங்கி ,சிதறுகாய் போட்டு ,பின்பு அங்கு இரு கருவறைகளிலும் உள்ள ஆட்சீஸ்வரர்,உமைஆட்சீஸ்வரர் மற்றும் இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை பால் அபிசேகம் செய்வித்து ,அணைத்து கருவறைகளிலும் [ஆட்சீஸ்வரர்,உமைஆட்சீஸ்வரர் ,இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை]தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபடவும் …தொடர்ந்து அருகில் உள்ள திருகோயில் ஒன்றில் தேய்பிறை ,வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு 8 மாதங்கள் செய்யவும் ..அசைவம் விலக்கவும்… கண்டிப்பாக நல்ல வேலை கிடைத்து வறுமை அடியோடு அகலும் …பதிகம்களை 48 நாட்கள் எப்போதும் படித்து வரவும் …காலை ,மாலை வீட்டில் தினமும் தீபம் ஏற்றி படித்து வரவும் …
திருச்சிற்றம்பலம்
அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
காரானை ஈருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
முற்றாத பால்மதியஞ் சூடினானை
மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
திருச்சிற்றம்பலம்[அப்பர் ]
……………………………………………………………………………………………………………….
திருச்சிற்றம்பலம்
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.
துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.
பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.
முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.
மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.
மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.
தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.
கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
திருச்சிற்றம்பலம்[சம்பந்தர்]
பாலமுருகன் அவர்கள் ஒருமுறை திருகாளஹஸ்தி சென்று அர்ச்சனை செய்து வழிபடவும் . சென்னை வானகரம்-மேட்டுக்குப்பம், அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன்[மச்சகார முருகன்] திருக்கோயில் சென்று முருகர் , ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்,சனிஸ்வரர் ,வானதீஸ்வரர் வழிபட்டு தீபம் தானம் செய்யுங்கள்.. இங்கு பைரவியுடன் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். அஷ்டமி திதியன்று உச்சிக்காலத்தில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள் ..பெரிச்சிகோயில்[சிவகங்கை அருகில் ] அருள்மிகு சமீபவல்லி உடனுறை சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்- இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இவர் நவபாஷாண சிலை வடிவில் காட்சி தருவது விசேஷம். அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.இங்கு ஒரு அஷ்டமி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள் …தொடர்ந்து அருகில் உள்ள சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகரை அர்ச்சித்து ,அங்கு உள்ள பைரவர் சன்னதியில் தேய்பிறை ,வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு 8 மாதங்கள் செய்யவும் ..அசைவம் ,மது ,புகை விலக்கவும்… நல்லதே நடக்கும் …பதிகம்களை 48 நாட்கள் எப்போதும் படித்து வரவும்
.. ..”அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே”என்று நீங்கள் மனம் உருகி ஈசனிடம் கேட்டால் ,
. “எமக்கென்று மின்பம் வைத்தார்” ஈசன் என்று நீங்கள் சொல்லும் நாள் விரைவில் வரும் …
திருச்சிற்றம்பலம்
கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
பொடிதனைப் பூச வைத்தார்
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் காலில் வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
உடைதரு கீளும் வைத்தார்
உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னாரே.
வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே.
சங்கணி குழையும் வைத்தார்
சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்
ஐயனை யாற னாரே.
பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே.
ஏறுகந் தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை யாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயனை யாற னாரே.
பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயனை யாற னாரே.
இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே.
திருச்சிற்றம்பலம்[அப்பர்]
……………………………………………………………………………………………………………….
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
கல்வாய்அகி லுங்கதிர் மாமணியும்
கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையும்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
கறிமாமிள கும்மிகு வன்மரமும்
மிகவுந் திவருந்நிவ வின்கரைமேல்
நெறிவார்குழ லாரவர் காணநடஞ்செய்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வறிதேநிலை யாதஇம் மண்ணுலகில்
நரனாக வகுத்தனை நானிலையேன்
பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப்
பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.
புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய்
புனிதாபொரு வெள்விடையூர் தியினாய்
எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்
வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே
அற்றார் பிறவிக்கடல் நீந்திஏறி
அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
கோடுயர் கோங்கலர் வேங்கையலர்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீடுயர் சோலைநெல் வாயில்அரத்
துறைநின்மல னேநினை வார்மனத்தாய்
ஓடு புனற்கரை யாம்இளமை
உறங்கிவிழித் தாலொக்கும் இப்பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
தடியேனுய்யப் போவதோர் சூழல்சொல்லே.
உலவும்முகி லிற்றலை கற்பொழிய
உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல்
நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்
நெல்வா யிலரத்துறை நின்மலனே
புலன்ஐந்தும் மயங்கி அகங்குழையப்
பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
ஏலம்மில வங்கம் எழிற்கனகம்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னம்மலி
நெல்வாயில் அரத்துறையாய் ஒருநெல்
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை
மகிழாதழ காஅலந் தேன்இனியான்
ஆலந்நிழ லில்அமர்ந் தாய்அமரா
அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
சிகரம்முகத் தில்திர ளார்அகிலும்
மிகஉந்தி வருந்நிவ வின்கரைமேல்
நிகரில்மயி லாரவர் தாம்பயிலுந்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மகரக்குழை யாய்மணக் கோலமதே
பிணக்கோலம தாம்பிற விஇதுதான்
அகரம்முத லின்எழுத் தாகிநின்றாய்
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
திண்டேர்நெடு வீதிஇ லங்கையர்கோன்
திரள்தோள்இருபஃதும் நெரித்தருளி
ஞெண்டாடு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதி நின்நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாவம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
மாணாஉரு வாகியொர் மண்ணளந்தான்
மலர்மேலவன் நேடியும் காண்பரியாய்
நீணீள்முடி வானவர் வந்திறைஞ்சும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வாணார்நுத லார்வலைப் பட்டடியேன்
பலவின்கனி வீந்தது போல்வதன்முன்
ஆணோடுபெண் ணாம்உரு வாகிநின்றாய்
அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.
நீரூரும் நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்
தேரூர்நெடு வீதிநன் மாடமலி
தென்னாவலர் கோன்அடித்தொண்டன் அணி
ஆரூரன்உரைத்தன நற்றமிழின்
மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார்
காரூர்களி வண்டறை யானைமன்ன
ரவராகியொர் விண்முழு தாள்பவரே.
திருச்சிற்றம்பலம் [சுந்தரர் ]
…………………………………………………………………..கூடவே “விநாயகர் அகவல் “படித்து வரவும் ..உடன் பலன் கிடைக்க விநாயகர் அருள்வார் ..
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நமது தளம் சார்பாகாக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகள் ஜனனி மொத்தம் 489/500 மார்க் எடுத்திருக்கிறாள்.
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள அனைவருக்காகவும், பிரார்த்திப்போம்.
– மனோகர்
congrats to ஜனனி. I wish her that she will score good marks in 12த் also
All the பெஸ்ட் . Her desires will be fulfilled with the grace of God
நன்றி
உமா
நல்வாழ்த்துக்கள்
Dear Manohar Sir,
Congrats to your daughter Jananai. I wish him all agood success in his future.
S. Narayanan.